ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Yulia Skripal “improving rapidly”: The unravelling of the Russian Novichok narrative

யூலியா ஸ்கிரிபால் “துரிதமாக முன்னேறி வருகிறார்” : அவிழும் ரஷ்ய நோவிசோக் கதையாடல்

By Chris Marsden
31 March 2018

பிரிட்டனின் கன்சர்வேடிவ் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய ரஷ்ய-விரோத பிரச்சாரத்தின் பொருட்சூழலில் வைத்துப் பார்த்தால், கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிர்பெற்று எழுந்ததற்குப் பிந்தைய மிகப்பெரும் ஈஸ்டர் அதிசயம் வியாழனன்று நடந்திருப்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

பல வாரங்களாக, இரட்டை முகவர் சேர்ஜி ஸ்கிரிபாலும் அவரது மகள் யூலியாவும் மார்ச் 4 அன்று நோவிசோக் என்று அழைக்கப்படக் கூடிய ஒரு “ஆயுத தர” நரம்பு வாயுவால் நஞ்சூட்டப்பட்டிருந்தனர் என்ற அரசாங்கத்தின் கூற்றுக்களையே உலகின் ஊடகங்கள் விமர்சனமற்று ஒப்பித்து வந்திருக்கின்றன.

சுயநினைவிழந்த ஸ்கிரிபால் குடும்பத்தினர் இனி மீண்டெழ முடியாத அளவுக்கு, ஒருவேளை மீண்டெழுந்தாலும் மூளை சேதத்துடனும் உடல் உறுப்பு சேதத்துடனும் தான் மீண்டு வர முடியுமளவுக்கு அந்த நரம்பு வாயு மிக மரணகரமானது என்று சொல்லப்பட்டது. அவர்களின் பிராணவாயு துணை அணைக்கப்பட நேரலாம் என்று கூட புதனன்று சில ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் இருந்தன.

ஆனால் வியாழனன்று, 33-வயது யூலியா இனியும் ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும், அவர் “உணர்வுடன் இருக்கிறார், பேசுகிறார்” என்றும் சாலிஸ்பரி NHS அறக்கட்டளையில் இருந்தான செய்திகள் வெளிவந்தன.

யூலியாவின் தோற்றப்பாடான முன்னேற்றமானது உத்தியோகபூர்வ சித்தரிப்பை என்றென்றைக்குமாய் மூழ்கடிக்கும் அளவுக்கு அதில் மிகப் பெரிய ஓட்டையைக் காட்டியுள்ளது. அதற்குப் பதிலாக, தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் நடந்திருப்பதைப் போல, விவரிப்பு வேண்டியதற்கேற்ப மாற்றிக் கொள்ளப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. மேலதிக பொருளாதாரத் தடைகளுக்கும் தூதர்களை வெளியேற்றுவதற்கும் தொடர்ந்து நெருக்குவது முதலாக ரஷ்யாவின் எல்லைகளிலும் மத்திய கிழக்கிலும் இராணுவத் தீவிரப்படலுக்காய் முன்கூட்டியே போடப்பட்டிருக்கக் கூடிய திட்டங்களை நியாயப்படுத்துகிற வரை ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்காவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு, மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்துவிட எதுவும் அனுமதிக்கப்படாது.

ரஷ்யாவுக்கு எதிரான இட்டுக்கட்டலில், ஏராளமான பொருத்தமின்மைகள், முரண்பாடுகள் மற்றும் அப்பட்டமான பொய்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், ரஷ்யா ஸ்கிரிபால்களை ஏன் குறிவைக்க வேண்டும் என்பதற்கு எந்த நம்பத்தக்க அரசியல் விளக்கமும் அங்கே இருக்கவில்லை.

இந்த இருவரின் மீதான கொலைமுயற்சிக்கு எவரையும் —குறைந்தபட்சம் ரஷ்ய அரசு மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அரசாங்கத்தை— தொடர்புபடுத்துகின்றதான எதுவொன்றும் அங்கே இல்லை. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, நோவிசோக் நரம்பு இரசாயனம் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட “ஒருவகை”யை சேர்ந்தது, அது மிகவும் நுட்பமானது அத்துடன் அதனை செலுத்துவதும் மிக சிக்கலானது, ஆகவே ஒரு “அரசு செயற்பாடு” கண்டிப்பாக சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்ற பிரிட்டனின் போர்ட்டன் டவுன் இரசாயன ஆயுத மையத்தின் வெளியில் கூறப்படாத “கண்டுபிடிப்புகளை” அடிப்படையாகக் கொண்ட ஒற்றை திட்டவட்டத்தின் மீதுதான் அத்தனையும் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பொய்யைக் காப்பாற்ற சின்னச் சின்ன பொய்களை நிறையச் சொல்ல வேண்டியிருந்தது, ஊடகங்கள் எந்தக் கேள்வியுமில்லாமல் அவற்றை ஏற்றுக் கொள்வதை இதற்கு சார்ந்திருக்க வேண்டியதாயிருந்தது. யூலியா தொடர்பான செய்திக்கு முன்பேயும் கூட, இந்த ஏமாற்று வலை அவிழ்ந்து சிதறும் நிலையில் தான் இருந்தது.

மார்ச் 4 அன்று இரண்டு ஸ்கிரிபால்களும் கண்டெடுக்கப்பட்டதற்கு பிந்தைய உடனடியான செய்திகள், அவர்களின் உடல்பாதிப்பிற்கு “opioid fentanyl” என அடையாளம் காணப்பட்ட ஒரு “வெள்ளைப் பொடி” காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தன. மார்ச் 6 வரையிலும் ரஷ்யா சம்பந்தப்பட்டிருந்ததான எந்த உத்தியோகபூர்வ சந்தேகமும் எழுப்பப்படவில்லை, மார்ச் 7 இல் தான் மெட்ரோபோலிட்டன் போலிஸ் ஒரு நரம்பு வாயு பயன்படுத்தப்பட்டிருப்பதாக முதன்முதலில் தெரிவித்தது.

சம்பவத்தில் முதலில் செயல்பட்ட ஒரு போலிஸ் அதிகாரி, பின்னர் இவர் பெயர் சார்ஜெண்ட் நிக் பெய்லி என்று கூறப்பட்டது, தீவிர உடல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மார்ச் 8 அன்று அறிவிக்கப்பட்டது. 21 பேர் (குறிப்பிடப்படாத) சிகிச்சை பெற்றதாக போலிஸ் சேர்த்துக் கொண்டது.

நான்கு நாட்களின் பின்னர், மார்ச் 12 அன்று, நூற்றுக்கணக்கான போலிசாரும் இராணுவத்தினரும் உயிரிஆபத்து-தடுப்பு உடைகள் தரித்து சாலிஸ்பரியை சுற்றிவர, ஸ்கிரிபால்கள் கண்டெடுக்கப்பட்ட பெஞ்சைச் சுற்றிய பகுதி சீல் வைக்கப்பட, அவர்கள் அதற்கு முன் சாப்பிட்ட Zizzi உணவகம் சுற்றிவளைக்கப்பட, பிரதமர் தெரசா மே, நரம்பு வாயு ரஷ்ய மூலத்தைக் கொண்டதாய் போர்ட்டன் டவுன் அடையாளம் கண்டிருந்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்ட நோவிசோக்குகளை வைத்திருக்கவில்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது. உக்ரேன் உள்ளிட ரஷ்யாவுக்குக் குரோதமான மற்ற அரசுகள் இதனைக் கொண்டிருக்கலாம் என்பதையும் அதன் சம்பந்தப்பட்ட சூத்திரமும் விஞ்ஞானிகளும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இப்போது அணுகக் கூடியவர்களாய் இருக்கின்றனர் என்பதையும் அது சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஆயினும், சமீபத்திய சம்பவங்களால் எழுப்பப்பட்டிருக்கக் கூடிய கேள்வி, இந்தப் படுகொலை முயற்சியில் ஒரு இராணுவ-வகை நரம்பு வாயு பயன்படுத்தப்பட்டதற்கான எந்தமாதிரியான ஒரு ஆதாரமும் இருக்கிறதா என்பதல்ல. இது தொடர்பான மூன்று கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன -நோவிசோக் என்பது என்ன, அது எப்படி செலுத்தப்படுகிறது, அது என்ன செய்யும்.

நோவிசோக் அடையாளம் காணப்பட்டதாய் சொல்லப்பட்ட பின்னர், அது VX மற்றும் சரின் ஐக் காட்டிலும் “5 முதல் 10 மடங்கு வரை மரணஅபாயமிக்கது”, அவற்றைப் போலவே திரவமாகவோ அல்லது வாயுவாகவோ இருக்க முடியும் என்று விவரிக்கப்பட்டது.

அதனை உருவாக்கியவர்களில் ஒருவரான வில் மிர்சயனோவ் —இவர் அமெரிக்காவுக்கு ஓடி வந்து விட்டவர்— மார்ச் 16 அன்று கார்டியனால் நேர்காணல் செய்யப்பட்டார், அவர் இதனை “உலகின் மிக சக்திவாய்ந்த மற்றும் தனித்துவமான இரசாயன ஆயுதம்” என்று வருணித்தார்.

அரசு சம்பந்தப்படாத தனிநபர்களுக்கு நோவிசோக் “ஆயுதத்தை பிரயோகிக்கும்” திறன் கிடையாது. “நீங்கள் தற்கொலை செய்யலாம் ... மிக உயரிய தொழில்நுட்ப சாதனம் இல்லாமல் அது சாத்தியமில்லை... ரஷ்யாவைப் போல வேறெந்த நாட்டுக்கும் இந்தத் திறன்கள் கிடையாது, ஏனென்றால் ரஷ்யா தான் நோவிசோக்கை கண்டுபிடித்தது, சோதித்தது, ஆயுதமாக்கியது.”

“அவர்கள் ஒரு இரட்டைப்பொருள் மாதிரியைக் (binary version) கொண்டுவந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார் மிர்சயனோவ். “பெரிய புல்லட் அளவில் இருக்கக் கூடிய இரண்டு சின்னச் சின்ன அடைப்பான்கள் ஒரு ஸ்பிரே அல்லது வேறேதாவதில் ஒன்றாகப் போடப்படும், அதன்பின் ஒரு பொறிமுறை அவை இரண்டையும் கலக்கும், அதன்பின் ஒரு சில விநாடிகளில் நீங்கள் அதை சுடுவீர்கள்... அது எந்த தோலில் பட்டாலும் அடுத்த சில நிமிடங்களில் தன் வேலையைக் காட்டத் தொடங்கும்.”

இது பட்டால் “விளைவுகள் விரைவாகவும் பயங்கரமாகவும் இருக்கும்”. நரம்பு மண்டலம் பாதிக்கப்படும், பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க முடியாது, “இருமல் எடுக்கும், வாயில் நுரை தள்ளும்” ”ஜீரண மண்டல பாதிப்புகள் வாந்தியைத் தூண்டும்”, “தசைகள் இழுக்கும்...பாதிக்கப்பட்டவர்களில் பலரும் முழுக்க உடல் ஈரமாகி விடுவார்கள், அவர்களது வயிறு பேதியாவது அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது.”

இந்த விவரிப்பைக் கொண்டு பார்த்தால், வெள்ளை பொடி என்ற கதை இயல்பாகவே கைவிடப்பட்டாக வேண்டும். அதன்பின், என்ன மாதிரியான விதத்தில் நோவிசோக் செலுத்தப்பட்டதால், இத்தனை சிக்கல்களுடன் ஸ்கிரிபால்கள் வீட்டை விட்டு கிளம்பி ஏழு மணி நேரங்கள் வெளியில் இருக்க முடிந்தது —அந்த சமயத்தில் அவர்கள் உள்ளூர் மது அருந்துமிடத்திற்கு சென்றிருந்தனர், உணவகத்தில் சாப்பிட்டிருந்தனர், அதன்பின் தான் அவர்கள் நிலைகுலைந்திருந்தனர்—  என்பது விளக்கப்பட்டிருக்க வேண்டும்.

முதல் கதை என்னவாக இருந்ததென்றால், தனது சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த அந்த இரசாயனப் பொருளை யூலியா அவருக்கே தெரியாமல் நாட்டிற்குள் கொண்டுவந்து விட்டிருந்தார் என்று சொல்லப்பட்டது. இரண்டாவது கதை, அந்த இரசாயனம் ஸ்கிரிபாலின் ஆடைகளில் வைக்கப்பட்டது, அதுவே தாமதமான பாதிப்புக்குக் காரணம் என்று சொன்னது. மூன்றாவது கதை, ஸ்கிரிபாலின் காரின் ஏர் கண்டிஷனிங் வழியாக வாயுவாக அது செலுத்தப்பட்டிருந்தது என்று சொன்னது.

இதில் எதுவுமே பொருந்துவதாக இல்லை என்பதுடன் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றதன் பின்னர் விடயங்கள் இன்னும் மோசமானது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளாக பல எண்ணிக்கைகள் கொடுக்கப்பட்டன, ஆனால் அனைவருமே எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமலேயே விடுவிக்கப்பட்டிருந்தனர். DS பெய்லி, மார்ச் 22 அன்று, வில்ட்ஷைர் மருத்துவமனையில் இருந்து திரும்பி விட்டார், யூலியாவுக்கு பல நாட்களுக்கு முன்பே அவருக்கு உடல்நலம் திரும்பி விட்டது.

இந்தப் படுதோல்வியின் மத்தியில், மே, 18 நாடுகள் 100 ரஷ்யத் தூதர்களை வெளியேற்றியுள்ளதாக —இதில் அமெரிக்காவை விட்டு 60 தூதர்கள் வெளியேறக் கூறப்பட்டுள்ளதும் அடங்கும்— பெருமைபொங்க நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று தெரிவித்தார்.

தேசியப் பாதுகாப்பு மற்றும் ரஷ்யா குறித்த ஒரு விவாதத்தின் தொடக்கத்தில் பேசுகையில், தேரெசா மே, சேர்ஜி மற்றும் யூலியா ஸ்கிரிபால் “இன்னும் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே இருக்கின்றனர். சோகத்துக்குரிய விடயம் என்னவென்றால், அவர்களின் நிலைமை உடனடியாக மாற்றம் காணுவது அநேகமாகக் கடினம் என்றும் அவர்கள் ஒருபோதும் முழுமையாக உடல்நலம் தேறாமலேயே போகலாம் என்றும் சென்ற வாரத்தின் பின்பகுதியில் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்” என்றும் அறிவித்தார்.

அடுத்த இரண்டு நாட்களில் யூலியா உடல்நலம் தேறியது கொடுத்த சங்கடம் போதாது என்று, போலிசும் சேர்ஜியின் வீட்டின் முன்கதவில் நோவிசோக்கை தடவியதன் மூலமாக அவர்கள் அதற்கு இலக்காக்கப்பட்டிருந்தனர் என்று அதேநாளைத் தேர்ந்தெடுத்தா அறிவிக்க வேண்டும்!

இந்த நுட்பமற்ற முறை எப்படி பல வாரங்களுக்கு கண்டறியப்படாமல் இருந்தது, அல்லது ஸ்கிரிபால் மற்றும் DS Bailey தவிர்த்து வேறு யாரும் ஏன் பாதிப்படையவில்லை என்பதற்கெல்லாம் எந்த விளக்கமும் இல்லை. அதற்குப் பதிலாக, மெட்ரோபொலிட்டன் போலிஸின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, சேர்ஜியின் மனைவியும் மகனும் புதைக்கப்பட்ட இலண்டன் ரோடு கல்லறை, மால்டிங்க்ஸ் ஷாப்பிங் சென்டர் மற்றும் ஆஷ்லி வுட் வளாகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை வில்ட்ஷயர் போலிசிடம் திரும்ப ஒப்படைக்கிற வேளையில், ஸ்கிரிபால் வீட்டருகே இருக்கின்ற குழந்தைகள் விளையாட்டு இடம் ஒன்றை இப்போது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொண்டிருப்பதாக அறிவித்தது.

ஐக்கிய இராஜ்ஜியத்தின் அரசாங்கம் கூறியவற்றின் மீது உலகெங்கிலும் ஆழ்ந்த ஐயம் நிலவுகிறது. அது முழுக்க முழுக்க நியாயமானதுதான். 2003 இல் ஈராக்குக்கு எதிரான போரை நியாயப்படுத்துவதற்கு பிளேயரின் தொழிற் கட்சி அதன் “ஆபத்தான ஆவணங்கள்” ஐ உருவாக்கியதற்கு பின்வந்த காலத்தில் முகங்கள் மாறியிருக்கலாம், ஆனால் கபடவேடமும், திட்டப்பாணியும், சூழ்ச்சியும் மாறாத அளவுக்கு பிரிட்டிஷ் முதலாளித்துவம் அதனை ஒரு நுண் கலையாகவே வளர்த்துக் கொண்டு விட்டிருக்கிறது.