ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass murder in Gaza

காஸாவில் பாரிய படுகொலை

Bill Van Auken
15 May 2018

திங்களன்று காஸாவில் இஸ்ரேலின் இராணுவம் டஜன்கணக்கான நிராயுதபாணியான பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்ததோடு மேலும் ஆயிரக்கணக்கானோரை காயப்படுத்தியது. இந்த அட்டூழியம் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், 50 மைல்களுக்கு மேற்படாத தூரத்தில், பிரிக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் ஒன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்படுவதன் ஒரு அவலட்சணமான கொண்டாட்டம் கட்டவிழ்ந்து கொண்டிருந்தது.

இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தின் 70வது ஆண்டுதினத்தில் நடைபெற்ற இந்த இரண்டு நிகழ்வுகளும் ஊடகங்களால் அடுத்தடுத்ததாய் பிரசுரிக்கப்பட்டன, தொலைக்காட்சி ஊடகங்கள் ஒரே சமயத்தில் பிரிக்கப்பட்ட திரையில் இதனை ஒளிபரப்பின. அமெரிக்க தூதரகத்தின் திறப்பு முழுமையாக, இஸ்ரேலை வறுமைப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியத்தில் இருந்து பிரிக்கின்ற பாதுகாப்பு வேலியில் நடைபெறும் இந்தப் படுகொலையின் அடியொற்றியதாக, இன்னும் சொன்னால், அதற்கு அரசியல் ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு அறிக்கையாக இருந்தது என்ற உண்மை மறைக்கப்பட இயலாததாக இருந்தது.

காஸாவின் கிழக்கு எல்லையில் இஸ்ரேலின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த (IDF) தூரத்தில் இருந்து சுடும் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட நிராயுதபாணியான பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை செவ்வாய்கிழமையன்று குறைந்தபட்சம் 60 ஆக உயர்ந்தது, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,700க்கும் மிகுதியாக இருந்தது, பலரும் உண்மைத் தோட்டாக்களால் உண்டான படுகாயங்களால் பாதிக்கப்பட்டிருப்பதால் இது சாவு எண்ணிக்கையை நிச்சயமாக உயர்த்தும். இஸ்ரேலின் தூரத்தில் இருந்து சுடும் படையினர் சுட்டதில் காயமடைந்தவர்களில் உயிர்பிழைக்கக் கூடிய பலரும் ஒன்று அல்லது அதற்குக் கூடுதலான உடல் உறுப்புகளை இழப்பார்கள். உயிரிழந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் உடல்களில் சில அரண் போன்ற பாதுகாப்புடைய வேலியை எட்டி விட்ட காரணத்தால் பாலஸ்தீன முதலுதவி குழுக்கள் அங்கு சென்று அவற்றைக் கொண்டுவர முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இறந்தவர்களில் குறைந்தது எட்டு பேர் 16 வயதுக்கும் குறைவான சிறார்களாய் இருந்தனர், 12 வயதுடைய ஒரு சிறுவனும் மற்றும் ஒரு இளம்வயது சிறுமியும் இதில் அடங்குவர். காயமடைந்தவர்களில் 78 பெண்களும் 203 குழந்தைகளும் இருந்ததாக, காஸாவில் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

70 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்ரேல் அரசு ஸ்தாபிக்கப்பட்ட போது அங்கிருந்து தங்கள் குடும்பங்கள் வன்முறையாக விரட்டப்பட்டிருந்த தமது வீடுகள் மற்றும் கிராமங்களுக்குத் திரும்புகின்ற உரிமையைக் கோருகின்ற அகதிகளை இவ்வாறு திட்டமிட்டு கூட்டமாகக் கொல்வது ஒரு அரக்கத்தனமான குற்றவியல் நடவடிக்கையாகும்.

இஸ்ரேல் இராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட மரணகரமான வன்முறையில் வான் தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல் மற்றும் பாலஸ்தீன குடும்பங்கள் சேர்ந்து வசிக்கின்ற குடிசை குழுவசிப்பிடங்கள் மீது எரியும் பொருட்களை வீசுவது ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்த கடிவாளமற்ற அரசு வன்முறையானது பத்தாயிரக்கணக்கான நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்தான எந்த மரணகரமான மிரட்டலாலும் உத்வேகமுற்றதல்ல. “மாபெரும் திரும்பல் பேரணி” காஸாவில் மார்ச் 30 அன்று தொடங்கியது முதலாக IDF 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்றிருக்கும் அதேசமயத்தில், அதன் தரப்பில் ஒரேயொரு சேதமும் கூட கிடையாது.

மாறாக, துப்பாக்கிமுனை நோக்கி பேரணி செல்லும் இளைஞர்களால் கோரப்படுகின்ற அடிப்படை உரிமையானது, பாலஸ்தீன மக்களது உடைமைகளைப் பறித்து விரட்டுவதன் மூலமாக இன, மத பிரத்தியேகத்தின் அடிப்படையிலமைந்த ஒரு யூத அரசை உருவாக்குகின்ற ஒட்டுமொத்த சியோனிசத் திட்டத்திற்குமான ஒரு உயிர்வாழ்க்கை அச்சுறுத்தலை முன்நிறுத்துகிறது.

பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு மற்றும் அவரது மந்திரிசபை, வாஷிங்டனில் இருக்கும் அவர்களது வழிஏற்பாட்டாளர்கள் தொடங்கி, தோட்டாக்களை சுட்டுத் தள்ளும் குறிபார்த்துச் சுடும் துருப்புகள் வரையில் இந்த பாரிய படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவருமே கூட்டாகவும் தனிப்பட்ட முறையிலும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களாவர். நாஜி போர்க் குற்றவாளிகள் மீதான நூரெம்பேர்க் விசாரணைகள் நிறுவியதைப் போல, அப்பாவி மக்களை வேண்டுமென்றே கொல்லச் சொல்கின்ற ஒரு சட்டவிரோத உத்தரவினை படையினர்கள் மறுக்க முடியும், மறுக்க அவர்கள் கடமை கொண்டிருக்கின்றனர். இனவெறி மற்றும் பாசிச சித்தாந்தத்தால் நிரம்பி வழிகின்ற ஒரு இராணுவம் மட்டுமே இத்தகைய குற்றங்களைச் செய்வதற்கு நம்பப்பட முடியும்.

காஸா எல்லையில் நடந்த படுகொலையானது, பார்வையாளர்கள் வரிசையில் வலது-சாரி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள், இராணுவத் தளபதிகள் மற்றும் தலைமை யூதமதகுருக்கள் அமர்ந்திருக்க அரங்கேறிய அமெரிக்க தூதரக நிகழ்ச்சியிலான குற்றவியல்தனம் மற்றும் பிற்போக்குத்தனத்தின் சூழலுடன் மட்டுமே இணைகூறத்தக்கதாக இருந்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலான சியோனிச குடியேற்றங்களுக்கும் அத்துடன் டொனால்ட் ட்ரம்ப்பின் ஜனாதிபதி பிரச்சாரத்திற்கும் மில்லியன் கணக்கில் நிதியாதாரம் அளித்திருக்கும் லாஸ் வேகாஸின் கேளிக்கை கூட அதிபதி ஷெல்டன் அடெல்சன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ்வில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்ற அழைக்கும் 1995 அமெரிக்க சட்டவரைவை -இரண்டு கட்சிகளாலும் பெருவாரியாக ஆதரிக்கப்பட்டது- உருவாக்கிய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் செனட்டரும் துணை-ஜனாதிபதி வேட்பாளருமான, ஜோசப் லீபர்மனும் பங்கேற்றிருந்தார்.

இஸ்ரேலின் குற்றவியல் கொள்கைக்கு இருகட்சி ஆதரவும் இருப்பதை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்ற விதமாக, செனட்டின் சிறுபான்மைத் தலைவரான நியூயோர்க்கின் சக் சூயூமர் ஜெருசலேம் தூதரகத் திறப்பை “நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ஒன்று” என்று கூறிப் பாராட்டியதோடு, “இதைச் செய்தற்காக ஜனாதிபதி ட்ரம்ப்பை நான் பாராட்டுகிறேன்” என்றும் சேர்த்துக் கொண்டார்.

“யூதர்கள் அனைவரும் நரகத்திற்குச் செல்வார்கள்” என்றும் இஸ்லாம் “நரகத்தின் குழியில் இருந்துவந்த தவறான ஒன்று” என்றும் அறிவித்தவரான டலாஸின் ஞானஸ்நான போதகர் ரோபர்ட் ஜெஃப்ரஸ் ஆரம்ப பிரார்த்தனை ஒன்றை வழங்கினார். கறுப்பினத்தவரை “குரங்குகள்” என்று விவரித்த இஸ்ரேலின் யூதமதகுரு ஒருவருடன் சேர்ந்து அவர் பேசினார். யூதர்களை இஸ்ரேலுக்கு விரட்டியதன் மூலமாக விவிலிய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்காக கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு “வேட்டைக்காரர்” ஆக ஹிட்லர் இருந்தார் என்று அறிவித்த பிரபலமான “கிறிஸ்தவ சியோனிஸ்ட்” ஜோன் ஹேகியும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார். இத்தகையவர்கள் தான் இஸ்ரேல் அரசின் நண்பர்களாய் இருக்கின்றனர்.

ட்ரம்ப் காணொளி வழியாகக் காட்சியளித்த அதேநேரத்தில், பிரதான உரை அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆல் வழங்கப்பட்டது, அவர் பார்வையாளர்களிடம் கூறினார், “நாம் இஸ்ரேலின் பக்கம் ஏன் நிற்கிறோம் என்றால் இரண்டு நாடுகளுமே மனித உரிமைகள், ஜனநாயகம் ஆகியவை பாதுகாக்கப்படத்தக்கவை என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளன, அத்துடன் அதுவே செய்யத்தகுந்த சரியான விடயம் என்பதை நாம் அறிவோம் என்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளன”. அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை இஸ்ரேல் இராணுவம் பெருந்திரளாய் கொன்றுகுவிப்பதற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதைக் காட்டிலும் அமெரிக்காவால் ஊக்குவிக்கப்படுகின்ற “மனித உரிமைகள்” மற்றும் “ஜனநாயகம்” ஆகியவற்றின் ஒரு காட்சிரீதியான அம்பலப்படுத்தலை வேறொன்று வழங்க முடியாது.

பாலஸ்தீனியர்களின் மரணங்களுக்கு அவர்கள் மீதே பழிபோட குஷ்னர் சென்றார், “வன்முறையைத் தூண்டுபவர்கள் பிரச்சினையின் பகுதியே தவிர தீர்வின் பகுதி அல்ல” என்று ஆர்ப்பரிப்பின் நடுவே அவர் அறிவித்தார். இஸ்ரேல் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வாஷிங்டன் அதற்கு அழைப்பு விடுத்திருக்கிறதா என்று தொடச்சியாகக்  கேட்பதற்காக கண்டித்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஒருவரால் திங்களன்று மாலை இந்த நிலைப்பாடு மேலும் வலுக் கொடுக்கப்பட்டது. பிராந்தியத்தை நிர்வகிக்கும் முதலாளித்துவ இஸ்லாமியக் கட்சியான ஹமாஸின் “சிடுமூஞ்சித்தனமான நடவடிக்கைகள்” தான் இந்தப் படுகொலைகளுக்கான முழுமையான பொறுப்பு என்பதாக அவர் வலியுறுத்தினார்.

காஸாவில் நடத்தப்பட்டு வருகின்ற குற்றத்தின் வீச்சை மறைப்பதற்கு பெருநிறுவன ஊடகங்கள் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்கின்றன. அமெரிக்காவின் தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த இரத்தப்பாய்வுக்கு மிகக் குறைந்த நேரமே ஒதுக்கின, அத்துடன் இஸ்ரேலின் மிருகத்தனமான ஒடுக்குமுறை மீது அவை எந்த விமர்சனமும் செய்யவில்லை. இதுபோன்ற கொலைகளை ரஷ்யா, ஈரான், வெனிசூலா அல்லது கபடவேடமான “மனித உரிமைகள்” ஏகாதிபத்தியங்களால் குறிவைக்கப்படும் வேறெந்த நாடும் செய்திருந்தால் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என்பதை ஒருவர் எளிதாக கற்பனை செய்து பார்க்கலாம்.

ஐரோப்பிய சக்திகள் கையைப்பிசைந்தபடி காஸா இரத்தப்பாய்வு தொடர்பாக விடுத்த அறிக்கைகள் அவற்றின் உடந்தையான தன்மையையே சுட்டிக்காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவரான ஃபெடரிகா மொகேரினி, இஸ்ரேல் “படைப் பிரயோகத்தில் விகிதாச்சாரத்தின் கோட்பாட்டை” மதித்து நடக்க வேண்டும் -அது நிச்சயமாக செய்யப் போவதில்லை என்பதான ஒரு விடயம்- என்று அழைப்பு விடுத்த அதேநேரத்தில், ஆர்ப்பாட்டங்கள் “கண்டிப்பாக வன்முறையற்றவையாகவே இருந்தாக வேண்டும்” என்பதை ஹமாஸ் உறுதிசெய்ய வேண்டும் என்றும் கோரியது.

ஒருசமயத்தில் பாலஸ்தீன மக்களின் பாதுகாவலர்களாக மோசடியாகக் காட்டிக் கொண்ட அரபு முதலாளித்துவ ஆட்சிகள், தமது பங்காக, காஸாவிலான படுகொலைக்கு தமது முகத்தைத் திருப்பிக் கொண்டன. ஈரானுடனான பிராந்திய அளவிலான ஒரு போருக்கான தயாரிப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பின்னால் தன்னை உறுதியாக நிறுத்திக் கொண்டிருக்கும் சவுதி முடியாட்சி, இந்த ஒடுக்குமுறையை வரவேற்கிறது.

தளபதி அப்துல்-பதே அல்-சிசியின் எகிப்திய ஆட்சி, “முறையான மற்றும் நியாயமான உரிமைகளைக் கோரும் அமைதியான பேரணிகளுக்கு எதிராகப் படைவலிமையைப் பயன்படுத்துவதை” அது நிராகரிப்பதாக அறிவிக்கும் ஒரு கபடவேடமான அறிக்கையை விடுத்தது. 2013 ஆட்சிக்கவிழ்ப்பில், முஸ்லீம் சகோதரத்துவத்தின் ஆதரவுபெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான முகமது மூர்ஸியின் 1,600 ஆதரவாளர்களை படுகொலை செய்ததன் மூலமாக தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்ட ஒரு அரசாங்கத்திடம் இருந்து இந்த அறிக்கை வந்திருந்தது. வெகுஜன எதிர்ப்பின் தொற்று எல்லையைத் தாண்டி பரவிவிடும் என்பதான அச்சத்தில், காஸா ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று எகிப்திய ஆட்சி கோரியிருக்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்குப் பிரதிபலனாய், இஸ்ரேலால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் உணவு, எரிபொருள், மருந்து மற்றும் பிற இன்றியமையாத விநியோகங்களை காஸாவுக்குள் அனுமதிக்கும் வகையில் அதனுடனான நாட்டின் எல்லையைத் திறந்து விட கெய்ரோ முன்வந்திருக்கிறது. டெல் அவிவ், ஆர்ப்பாட்டங்களுக்கான பதிலடியாக அதன் ஒரு திறந்த எல்லையை மூடியிருக்கிறது, அதன்மூலம் பிராந்தியத்தின் நொருங்குதன்மையுடைய உள்கட்டமைப்பை ஒரு முழுமையான நிலைகுலைவு நிலைக்குள் தள்ளுவதற்கு அச்சுறுத்தியிருக்கிறது.

காஸாவில் இஸ்ரேலின் அரசாங்கம் செய்து வருவதற்கும், 1919 இல் பிரிட்டிஷ் காலனியாட்சி அம்ரித்சரில் இந்தியர்களைப் படுகொலை செய்ததில் தொடங்கி, தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சி 1960 இல் ஷார்ப்வில்லியில் படுகொலை செய்தது, மற்றும் நாஜி ஆட்சியின் குற்றங்கள் வரையிலும் வரலாற்றின் மிகப் பிற்போக்கான ஆட்சிகளால் செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை.

யூதப்படுகொலையைக் குறிப்பிட்டு பாலஸ்தீனியர்கள் மீதான தனது படுகொலையை நியாயப்படுத்துவதற்கு இஸ்ரேல் செய்கின்ற முயற்சிகள் தார்மீக அவலட்சணமானவை, இந்தக் குற்றங்களைக் கண்டனம் செய்பவர்களுக்கு யூத-விரோதிகள் என்று முத்திரை குத்துவதற்கான முயற்சிகளும் அதுபோன்றவையே. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரான கிலாட் எர்டான் திங்களன்று கூறியதில் இது அவலட்சணமான விதத்தில் விளங்கப்பட்டது, காஸாவிலான உயிரிழப்புகளின் எண்ணிக்கையளவு “எதையொன்றையும் சுட்டிக்காட்டவில்லை- எப்படி உலகப் போரில் இறந்த நாஜிக்களின் எண்ணிக்கையானது நாஜிசத்தை நீங்கள் விளக்கக் கூடிய அல்லது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றாக ஆக்கிவிடாதோ அதைப் போல” இதுவும் என்று அவர் கூறினார்.

60 சதவீத வேலைவாய்ப்பின்மை, பாரிய வறுமை மற்றும் உடைமையின்மை ஆகியவற்றுக்கு முகம்கொடுத்து நிற்கின்ற ஒரு பிராந்தியத்திற்குள்ளாக இஸ்ரேலின் இராணுவத்தால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் காஸாவின் நிர்க்கதியான இளைஞர்களை இவ்விதமாக நாஜிக்களுடன் ஒப்பிடுவது ஒரு ஆழமான நோய்வாய்ப்பட்ட மற்றும் அறநெறியற்ற ஒரு சமூகத்தால் மட்டுமே இயலும். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பும் ஒடுக்குமுறையும், வெளியேற முனையும் எவரொருவரையும் கொல்லத் தயாரான நிலையில் குறிபார்த்து சுடும் துருப்புகள் நிரம்பி வழிய, வார்சோ கெட்டோவை மிகவும் ஒத்த நிலைமைகளை உருவாக்கியிருக்கின்றன என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

ஒரு சமூகமாகவும் நாடாகவும் இஸ்ரேல் பாதாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. வாஷிங்டன் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து அதற்கு ஆதரவு கிடைத்தாலும் கூட, உலகெங்கிலுமான மில்லியன் கணக்கானோரது கண்களில் அது, தார்மீக மற்றும் அரசியல் நியாயம் அத்தனையையும் தொலைத்த, ஒரு குற்றவியல் அரசாகவே பார்க்கப்படுகிறது. ஜனநாயக அரசாங்கமாக கூறிக் கொண்ட எந்தவொரு அரசாங்கமும் இத்தகைய அட்டூழியங்களில் இதுவரை ஈடுபட்டது கிடையாது. காஸாவிலான குற்றங்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்ரேல் அரசு ஸ்தாபிக்கப்பட்ட வழிமுறைகளில் இருந்தும் அதன்பின்னான அத்தனை பின்விளைவுகளில் இருந்தும் விளைந்த இறுதி விளைபொருட்களே ஆகும்.

இஸ்ரேல் யூத மக்களுக்கான ஒரு “பாதுகாப்பான புகலிடத்தை” குறிப்பதாகக் கூறும் சியோனிசக் கட்டுக்கதைகளைத் தாண்டி, காஸாவுக்கு எதிரான தாக்குதலும் மத்திய கிழக்கில் ஒரு விரிந்த போருக்கு டெல் அவிவ் காட்டுகின்ற முனைப்பும், அச்சம், அரபு-விரோத பேரினவாதம் மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலமாக சமூக மற்றும் வர்க்கப் பதட்டங்களை வெளிநோக்கித் திருப்புகின்ற நாட்டின் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் பிரயாசையாலேயே, பெருமளவில் உந்தப்படுவதாக இருக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (OECD) நாடுகளில் மிகவும் சமூக சமத்துவமின்மை மிக்க நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டாமிடத்தில் இஸ்ரேல் இருக்கிறது, இங்கு வறுமை விகிதம் 22 சதவீதமாக இருப்பதோடு பில்லியனர்களில் உலகின் மிக உயர்ந்த தனிமனித செல்வக் குவிப்பை கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் இது இருக்கிறது.

காஸாவின் குருதிகொட்டும் சம்பவங்கள், ஏகாதிபத்தியத்திற்கும், சியோனிசத்திற்கும் மற்றும் அரபு முதலாளித்துவத்திற்கும் எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில், தேசிய, மத மற்றும் வகுப்புவாதப் பிளவுகளைத் தாண்டி, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அரபு மற்றும் யூதத் தொழிலாள வர்க்கத்தை ஒரேபோன்று ஐக்கியப்படுத்துவதன் அவசியத்தை மிக அவசரத்துடன் முன்நிறுத்துகின்றன.

நெருக்கடிநிரம்பிய சியோனிசத் திட்டம் தொடர்வதிலோ அல்லது ஒரு ஊழலடைந்த சொந்த முதலாளித்துவத்தின் ஆட்சியின் கீழ் ஒரு பந்துஸ்தான்-பாணி பாலஸ்தீன அரசு உருவாக்கப்படுவதன் அடிப்படையிலான ஒரு “இரட்டை-அரசு தீர்வு” இன் விநோதக் கற்பனையிலோ, இப்போதைய இரத்தக்களரியான முட்டுக்கட்டை நிலையில் இருந்து வெளிவருவதற்கு எந்த தேசியரீதியான வழியும் இல்லை.

அதேநேரத்தில், காஸா படுகொலையானது எங்கெங்குமுள்ள தொழிலாளர்களுக்கு ஒரு அவசரமான எச்சரிக்கையையும் கொண்டிருக்கிறது. மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு இஸ்ரேல் அரசு திரும்பியிருப்பது உலகெங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் வலது நோக்கித் திரும்புவதன் பகுதியாகும். நிராயுதபாணியான பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுவீழ்த்தப்படுவதற்கு ஊடகங்களும் முதலாளித்துவ அரசாங்கங்களும் காட்டுகின்ற அலட்சியமானது, வெகுஜன எதிர்ப்புக்கு முகம்கொடுக்கக் கூடிய எந்தவொரு நாட்டிலும் இதனினும் பெரிய குற்றங்களை நடத்துவதற்கும் அவற்றை நியாயப்படுத்துவதற்கும் அவை ஆயத்தமாக இருப்பதன் ஒரு அறிகுறியாகும்.