ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Tuticorin massacre and Modi’s India

தூத்துக்குடி படுகொலையும், மோடியின் இந்தியாவும்

Keith Jones
26 May 2018

சனிக்கிழமை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) மற்ற தலைவர்களும் இந்தியாவின் "வளர்ச்சியைக்" குறித்த புகழுரைகளோடு, அவர்கள் பதவியேற்று நான்காம் ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.

வளர்ச்சி யாருக்கு? சமகாலத்திய இந்தியாவின் சமூக வாழ்க்கை மற்றும் வர்க்க உறவுகளின் காட்டுமிராண்டித்தனம், ஒரு தாமிர உருக்காலையை மூட வேண்டுமென கோரிய உழைக்கும் மக்களை செவ்வாயன்று பொலிஸ் படுகொலை செய்ததில் முழுவதுமாக அம்பலமானது, அந்த ஆலை தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரின் நிலத்தடி நீரை மாசுப்படுத்தியும், நச்சார்ந்த இரசாயனங்களைச் சுற்றுச்சூழலுக்குள் கலந்து விட்டும், நீண்டகாலமாக அந்நகரை மாசுப்படுத்தி வந்துள்ளது.

அந்த படுகொலையில் 12 பேர் கொல்லப்பட்டு, 60 க்கும் அதிகமானவர்கள் காயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது ஓர் அரசு ஆத்திரமூட்டலின் அனைத்து முத்திரைகளையும் தாங்கியுள்ளது. தமிழ்நாடு மாநில அதிகாரிகள் "பொது ஒழுங்குக்கு" அது அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறி, முன்கூட்டியே அந்த போராட்ட நாட்களை குற்றகரமாக்கி இருந்தனர்.

அவர்கள் 1,500 போலிஸ் அதிகாரிகளை அனுப்பினர், அந்த "சட்டவிரோத" ஆர்ப்பாட்டத்தின் மீது அவர்கள் உடனடியாக தாக்குதல் நடத்தினர், பின்னர் அவர்கள் எதிர்பார்க்கப்பட்டதையும் விட 20,000 பேர் கொண்ட மிகப்பெரிய கூட்டம் போராட முன்வந்ததும் கொலைகாரப் படையை நாடினர். அவர்களின் சொந்த வழிமுறைகளையே மீறிய விதத்தில், போலிஸ் எந்தவித எச்சரிக்கை சமிக்ஞையும் வழங்காமல், போராட்டத்தின் முன்னணியில் இருந்தவர்களைக் கொல்ல இலக்கு வைத்தது. காணொளிகளும் நேரில் பார்த்தவர்களின் ஆதாரங்களும் எடுத்துக்காட்டுவதைப் போல, மிகவும் திட்டவட்டமாக, பலியானவர்களின் உடல்களே சான்றளிக்கின்ற நிலையில், குறிபார்த்து சுடும் போலிஸ்காரர்கள் போராட்டக்காரர்களின் கால்களை அல்ல, அவர்களின் தலைகளையும், உடல்களையும் குறி வைத்திருந்தனர்.

தமிழ்நாடு மற்றும் இந்தியா எங்கிலுமான மக்கள் இந்த போலிஸ் நடவடிக்கை மீது சீற்றத்துடன் குரல் கொடுத்த அதேவேளையில், மோடி ஆட்சியும், பிஜேபி இன் நெருங்கிய கூட்டாளியுமான தமிழ்நாட்டின் அஇஅதிமுக மாநில அரசாங்கமும், தூத்துக்குடி கலவரத்தில் படைகள் அவசியமானரீதியிலும் உரிய முறையிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக உடனடியாக அறிவித்ததுடன், அடுத்தடுத்தும் ஒடுக்குமுறை மற்றும் வன்முறைக்குச் சதி செய்தன. இதில் உள்ளடங்குபவை: அம்மாநிலத்தின் மூன்று தென்கீழ் மாவட்டங்களில் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய அணுகுதலை ஐந்து நாட்களுக்கு முழுமையாக துண்டிக்கப்பட்டது, தமிழ்நாட்டில் நிலைநிறுத்த வேண்டியிருக்கலாம் என்று துணை இராணுவ மத்திய ரிசர்வ் போலிஸ் படையைத் தயாராக வைக்கப்பட்டது, தூத்துக்குடி சம்பவங்கள் மீது மக்களின் ஆவேச எதிர்ப்பைப் பயன்படுத்தி "இடதுசாரி தீவிரவாதிகள்" வன்முறையைத் தூண்ட திட்டமிடுவதாக உளவுத்துறை முகமை அச்சுறுத்தும் விதத்தில் எச்சரிக்கைகளை விடுத்தது.

1996 இல் வேதாந்தா ரிசோர்சர்ஸின் அந்த உருக்கு ஆலை திறக்கப்பட்டதிலிருந்தே அதிலிருந்து வெளியேற்றப்பட்ட சல்பர் டைஆக்சைடு, ஈயம், ஆர்சனிக் மற்றும் இதர நச்சு இரசாயனங்களது ஆபத்துக்களுக்கு எதிராக தூத்துக்குடி மக்களும் தென்கிழக்கு தமிழ்நாட்டு மீனவர்களும் போராடி வந்துள்ளனர். இருப்பினும், அவர்களின் புகார்களை அதிகாரிகள் முற்றிலும் அலட்சியப்படுத்தி உள்ளனர்.

வேதாந்தா நிறுவனத்திற்கும் அதன் பல கோடி பில்லியனரும் தொழிலதிபருமான அனில் அகர்வாலுக்கும் இந்த மாசுக்களைக் கலப்பதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது, இது உள்ளூர் ஜனங்களை நோய்வாய்படுத்தி உயிரிழக்க செய்துள்ளதுடன், தென்கிழக்கு தமிழ்நாட்டின் கடற்பகுதி தொழில்களான முத்துக் குளித்தல் மற்றும் மீன்பிடி தொழில்களை நாசப்படுத்தி உள்ளது. தூத்துக்குடி உருக்காலையை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தாமிர உருக்காலையாக ஆக்கும் வகையில் அதன் ஆண்டு உற்பத்தித்திறனை ஆண்டுக்கு 800,000 டன்களாக இரட்டிப்பாக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியதே, அந்த உருக்காலையை மூட வேண்டுமென்ற இந்த மிகச் சமீபத்திய ஆவேசமான எதிர்ப்பிற்குத் தூண்டுதலாக இருந்தது.

செவ்வாய்கிழமை படுகொலை மீதான மக்கள் கோபத்தைத் தணிப்பதற்கான ஒரு முயற்சியில், தமிழ்நாடு அரசும் நீதிமன்றங்களும் அந்த உருக்காலையைக் காலவரையின்றி மூடுமாறு உத்தரவிட்டுள்ளன, அத்துடன் அது செயல்படுத்தப்பட்டுள்ளதாக காட்டுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அந்த உருக்காலையின் மின் வினியோகத்தைத் துண்டித்திருப்பதாக அறிவித்துள்ளது.

ஆனால் இந்திய அரசும் மற்றும் அரசியல் உயரடுக்கும், அகர்வால் மற்றும் இந்தியாவின் பெருநிறுவன உயரடுக்கின் கட்டளைக்கு அவர்கள் அடிபணிந்தவர்கள் என்பதையும், சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் சமூக அவலத்தை அவர்கள் "வளர்ச்சிக்கான விலையாக" பார்க்கிறார்கள் என்பதையும் சந்தர்ப்பத்திற்கேற்ப மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளன. வேதாந்தா ஆகக்குறைந்த சுற்றுச்சூழல் தரமுறைகளைக் கூட கடைபிடிக்கவில்லை என்பதால் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட அவர்கள் நிர்பந்திக்கப்பட்ட முந்தைய சந்தர்ப்பங்களைப் போலவே, தொலைவில் என்பதை விட விரைவிலேயே, அவர்கள் அந்த உருக்காலையை மீண்டும் திறக்க பச்சைக்கொடி காட்டுவார்கள்.

இதுபோன்ற சமூக குற்றங்கள் இந்தியா எங்கிலும் ஏராளமாய் நிறைந்திருக்கின்றன. இந்தியாவை பூகோளரீதியில் ஒரு மலிவு-உழைப்பு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான அதன் உந்துதலில், இந்திய முதலாளித்துவம், தனியார்மயமாக்கல், நெறிமுறைகளைத் தளர்த்துதல் மற்றும் பெருநிறுவன வரி வெட்டுகள் என சமூகரீதியில் நாசகரமான திட்டநிரலை நடைமுறைப்படுத்தி உள்ளது, அதேவேளையில் மருத்துவ நலன், கல்வி மற்றும் விவசாயத்திற்கான உதவிகளில் இருந்து பறித்த ஆதாரவளங்களை, பெருநிறுவன உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் மற்றும் இந்தியாவின் ஆயுதப்படைகளை நவீனப்படுத்துவது மற்றும் அணுஆயுதமயப்படுத்துவது ஆகியவற்றிற்குத் திருப்பி விட்டு வருகிறது.

இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களிடையே அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பானது, அரசு ஒடுக்குமுறை மற்றும் வகுப்புவாத பிற்போக்குத்தனம் மற்றும் கேடுகெட்ட ஜாதி அரசியலைத் தூண்டுவதுடன் எதிர்க்கொள்ளப்படுகிறது.

பூகோளரீதியில் இணைக்கப்பட்ட இந்தியாவின் புதிய தொழில்துறையில் மேலோங்கியுள்ள கொடூர மலிவு-உழைப்பு ஆட்சியைச் சவால் விடுக்க துணிந்ததற்காக, 13 மாருதி-சுசூகி வாகனத்துறை தொழிலாளர்கள் ஜோடிக்கப்பட்ட கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட விடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டில் உற்பத்தியை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் மோடியினது "இந்தியாவில் உற்பத்தி செய்க" பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மறுஉத்தரவாதம் வழங்கவும், அத்தொழிலாளர்கள் மீதான தண்டனையை முன்மாதிரியாக்கும் அடித்தளத்தில் வாதி தரப்பு வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் வழங்கப்பட்ட அந்த கொடுமையான வர்க்க நீதியைப் பகிரங்கமாக நியாயப்படுத்தினர்.

ஒரு கால்-நூற்றாண்டு நவ-தாராளவாத "சீர்திருத்தம்" இந்தியாவை உலகில் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. மொத்த இந்தியர்களில் முக்கால்வாசிப் பேர் நாளொன்றுக்கு 2 அமெரிக்க டாலருக்கும் குறைவான தொகையில் வாழவிடப்பட்டுள்ள அதேவேளையில், உயர்மட்ட 1 சதவீதத்தினர் மொத்த வருவாயில் 23 சதவீதத்தை, நாட்டின் மொத்த செல்வவளத்தில் 60 சதவீதத்தை விழுங்கி உள்ளார்கள்.

இந்த சமூக துருவமுனைப்பாடு இந்திய பில்லியனர்களின் அதிவேக வளர்ச்சியால் எடுத்துக்காட்டப்படுகிறது. 1990 களின் மத்தியில் வெறும் இரண்டு இந்திய பில்லியனர்களே இருந்தனர், இப்போது, ஃபோர்ப்ஸ் தகவல்களின்படி, 131 பேர் இருக்கிறார்கள். இதன் அர்த்தம், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் ரஷ்யாவைக் கடந்து, இந்தியா, அதாவது கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சற்று அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ள இது, உலக பில்லியனர்களின் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் இருப்பவர்களை கொண்டுள்ளது.

மோடி ஆட்சி —முதலாளித்துவ சந்தையின் மீது பெருமதிப்பு மற்றும் வெறித்தனமான வகுப்புவாதத்துடன் தனிநபர் செல்வவளம் என இவ்விரண்டும் ஒன்றிணைந்த ஓர் அரசாங்கமான இது— சமூக சூறையாடல் நிகழ்ச்சிப்போக்கின் உச்சக்கட்டமாகும்.

இந்தியாவின் பெருநிறுவன உயரடுக்கு, வேறு யாருமல்ல அதன் மிகப்பெரிய பில்லியனர் முகேஷ் அம்பானி தலைமையில், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தவும் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் வல்லரசு அபிலாஷைகளை இன்னும் ஆக்ரோஷமாக வலியுறுத்தவும் மே 2014 இல் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. நான்காண்டு கால பிஜேபி அரசாங்கம் முதலீட்டாளர்-சார்பு "சீர்திருத்தத்தை" தீவிரப்படுத்தியதுடன், ஏற்கனவே கேலிக்கூத்தாக இருக்கும் இந்தியாவின் சமூக செலவினங்களை வெட்டியது, மேலும் இந்தியாவை சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய அத்துமீறல்களுடன் ஒருங்கிணைத்தது.

பரந்த பெருந்திரளான இந்திய மக்கள் இந்த நிகழ்ச்சிப்போக்கில் இந்திய முதலாளித்துவ வளர்ச்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அதேவேளையில், இது அதிகரித்தளவில் ஒரு புதிய கிளர்ச்சிகரமான தொழிலாள வர்க்கத்தை மேலுயர்த்தி உள்ளது.

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு, கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவின் மிகவும் வேகமான நகர்மயமாக்கலை அனுபவித்துள்ளதுடன், சமூக எதிர்ப்பின் ஒரு மையமாக எழுச்சி கண்டிருப்பது தற்செயலானதல்ல. தேசிய போலிஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆணைய தகவல்களின்படி, வழங்கப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்களின் கடைசி ஆண்டான 2016 இல், வேறெந்த மாநிலத்தையும் விட தமிழ்நாடு தான் போராட்டங்களில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையைக் கொண்டிருந்தது, அது வேலைநிறுத்தம் ஆகட்டும், ஆர்ப்பாட்டங்கள் ஆகட்டும் அல்லது அரசாங்க-எதிர்ப்பு கூட்டங்கள் ஆகட்டும், நாளொன்றுக்கு சராசரி 47 ஆக இருந்தது.

பாரதிய ஜனதா கட்சியும் இந்தியாவின் பெருநிறுவன உயரடுக்கும் இந்தியாவின் "வளர்ச்சியை" கொண்டாடுகின்ற அதேவேளையில், நாடோ ஒரு சமூக வெடி உலையாக உள்ளது என்பதே யதார்த்தம்—இது உலக முதலாளித்துவத்தின் உடைவால் ஏற்படுத்தப்பட்ட, அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அதிர்ச்சிகளால் எரியூட்டப்பட்டு வருகிறது.

அதாவது இந்த பாரிய பெருந்திரளான சமூக கோபம், ஒட்டுமொத்தமாக மோடி ஆட்சிக்கும் இந்திய முதலாளித்துவத்திற்கும் இதுவரையில் ஒரு நனவுபூர்வமான தொழிலாள வர்க்க அரசியல் சவாலை மேலுயர்த்தவில்லை என்பது பிரதானமாக ஸ்ராலினிச கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் அதன் பழைய, சிறிய கூட்டாளி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் அவற்றின் தொழிற்சங்க இணைப்புகளான CITU மற்றும் AITUC ஆகியவற்றின் அரசியல் துரோகத்தினால் ஆகும்.

பல பத்தாண்டுகளாக, ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவ ஸ்தாபகத்தின் ஓர் உள்ளார்ந்த பாகமாக மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் மிக முக்கிய சமூக முண்டுகோலாக செயல்பட்டு வந்துள்ளனர். பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் நீடித்த வறுமை மீதான மக்கள் கோபத்தைச் சுரண்டியே பிஜேபி அதிகாரத்திற்கு மேலுயர்ந்தது. ஆனால் ஸ்ராலினிஸ்டுகள் அடுத்தடுத்து வந்த, அவற்றில் பெரும்பாலும் காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கங்களை, நவ-தாராளவாத "சீர்திருத்ததைப்" பின்பற்றியதும் மற்றும் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை மேற்கொண்டதுமான இதை ஆதரித்ததன் மூலமாக இதற்கு வழி வகுத்திருந்தனர், மேலும் அவர்கள் அதிகாரத்தில் இருந்த மாநிலங்களிலும், அவர்களே எதை "முதலீட்டாளர்கள்-சார்பு" கொள்கைகள் என்று வரையறுத்தார்களோ அதையே நடைமுறைப்படுத்தினார்கள்.

வர்க்க போராட்டத்தின் தீவிரப்படலுக்கு அவர்கள் மேற்கொண்டும் வலதுக்கு சாய்ந்ததன் மூலமாக விடையிறுத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கிறோம் என்ற பெயரில், அவர்கள் அழுகிப்போன இந்திய அரசின் "ஜனநாயக" அமைப்புகளில் —இதே அமைப்புகள் தான் செவ்வாய்கிழமை படுகொலைக்கும் மற்றும் மாருதி சுசூகி தொழிலாளர்களைப் பலிகொடுப்பதற்கும் பொறுப்பாகின்றன என்ற நிலையில்— இவற்றின் மீது நம்பிக்கை வைக்குமாறும், சமீபத்தில் வரையில் இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான அரசாங்க கட்சியாக இருந்ததும், பல வலதுசாரி பிராந்தியவாத மற்றும் ஜாதிய கட்சிகளின் குடையாக விளங்குவதுமான காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறும் தொழிலாள வர்க்கத்திடம் வலியுறுத்துகின்றனர்.

தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஸ்ராலினிஸ்டுகளின் மனோபாவம், ஜோடிப்பு வழங்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி-சுசூகி தொழிலாளர்களுக்கு அவர்கள் காட்டும் விரோதத்தால் பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டப்படுகிறது. முதலாளிமார்கள் "மாருதி சுசூகி செய்வதை" போல என்று தொழிலாளர்களை வழமையாக அச்சுறுத்துகின்ற போதும், ஸ்ராலினிஸ்டுகள், அவர்களை விடுவிப்பதற்காக போராட தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களின் வழக்கை பிரபல்யப்படுத்த கூட மறுத்து, இந்த வர்க்க-போர் கைதிகளை 19 ஆம் நூற்றாண்டு தென்னிந்தியாவின் அனாதைகளைப் போல கையாண்டு வருகின்றனர். இது ஏனென்றால் மாருதி சுசூகி தொழிலாளர்களின் பாதுகாப்பையும் வறிய கூலிகள் மற்றும் அபாயகரமான வேலைவாய்ப்புக்கு எதிரான போராட்டத்தையும் இணைக்கும் ஒரு பிரச்சாரமானது, காங்கிரஸ் கட்சியுடனான அவர்களின் கூட்டணியையும், பெருவணிகங்கள் உடனான அவர்களது தொழிற்சங்கங்களின் சௌகரியமான, பெருநிறுவன உறவுகளையும் முறித்துவிடும் என்பதால் ஆகும்.

உலகெங்கிலும் போலவே, இந்தியாவிலும் சமூக சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு மிக அவசரமான பணி, தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்ட அதன் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டமாகும். இந்த முன்னோக்கை செயல்படுத்துவதற்கான மத்திய பணி, இந்தியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) ஒரு பிரிவைக் கட்டமைப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் தலைமையைக் கட்டமைப்பதாகும்.