ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trotskyism is the Marxism of the 21st Century

ட்ரொட்ஸ்கிசம் இருபத்தோராம் நூற்றாண்டின் மார்க்சிசம்

Joseph Kishore
7 May 2018

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் ஐந்தாவது வருடாந்திர இணையவழி மேதினப் பேரணியை மே 5 அன்று நடத்தியது. நவீன சோசலிச இயக்கத்தின் ஸ்தாபகரது இருநூறாவது பிறந்ததினத்தன்று நடந்த இந்த பேரணியானது, காரல் மார்க்சின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகளுக்கும் இன்று சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக அனைத்துலகக் குழுவின் தலைமையில் நான்காம் அகிலம் கட்டியெழுப்பப்படுவதற்கும் இடையிலமைந்த தொடர்ச்சியை வலியுறுத்திக் காட்டியது.

150 ஆண்டுகளுக்கும் முன்பாக “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்று மார்க்சும் ஏங்கெல்சும் விடுத்த அறைகூவலின் உருவடிவமாக இந்தப் பேரணி திகழ்ந்தது. 50க்கும் அதிகமான நாடுகளில் இருந்து உலகளாவிய பார்வையாளர்களை இது ஈர்த்தது. ஏழு வெவ்வேறு நாடுகள் மற்றும் நான்கு வெவ்வேறு கண்டங்களில் இருந்து வந்திருந்த பதினைந்து சிறப்புரையாளர்கள் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற முக்கியமான அரசியல் பிரச்சினைகள் அனைத்திலும் ஒரு புரட்சிகர மார்க்சிச முன்னோக்கினை வழங்கினர்.

பேரணியைத் தொடக்கி வைத்து, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவரான டேவிட் நோர்த், காரல் மார்க்சின் வாழ்க்கை மற்றும் அரசியல் சிந்தனைகளது அத்தியாவசியமான கூறுகளைத் திறனாய்வு செய்தவொரு அறிக்கையை வழங்கினார். அவர் மூன்று புள்ளிகளை வலியுறுத்தினார்:

1) மார்க்சிசத்தின் மெய்யியல் சடவாதமாகும். இதனை பயன்படுத்தி மனிதனின் சமூகப்பொருளாதார மற்றும் அரசியல் பரிணாமத்தை மார்க்ஸ் ஆய்வுசெய்தார். “தமது தனிமனித உணர்ச்சிகர விருப்பங்கள், இலட்சியங்கள் மற்றும் முரண்பாடான அபிலாசைகளால் உந்தப்படுவதாகவும், தமது சிறந்த நலன்களுக்கானதாகவும் நம்பிப் பின்பற்றுகின்ற எண்ணிலடங்கா மில்லியன் கணக்கான மனிதர்களது ஒருங்கிணைப்பற்ற நடவடிக்கைகளாகத் தென்படுவதன் மத்தியில், சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பின் அடித்தளத்திலிருந்து அதனைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்ற, தனிமனித அகநிலை நனவில் இருந்து விலகியும் இன்னும் சுயாதீனமாகவும் கூட செயல்படுகின்ற, அந்த புறநிலை சக்திகளை மார்க்ஸ் அடையாளம் கண்டார்.”

2) முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஒழுங்கமைப்பதற்கான மார்க்சின் மற்றும் மார்க்சிச இயக்கத்தின் போராட்டத்தில் இருந்து சமூக மற்றும் பொருளாதாரத் தத்துவத்தின் தளத்தில் மார்க்சின் சாதனைகள் பிரிக்கவியலாதது என்பதே மார்க்சின் வெற்றியாகும். “மார்க்சின் ‘பொருத்தம்’ குறித்த விவாதத்தின் பெருமளவு, முதலாளித்துவத்தின் மீதான மார்க்சின் பொருளாதார விமர்சனம் குறித்த பரிசீலனையை, முதலாளித்துவ அமைப்புமுறையை புரட்சிகரமாகத் தூக்கிவீசுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேறிய பிரிவுகளது வரலாற்று மற்றும் சமகால சர்வதேச அரசியல் இயக்கமாக மார்க்சிசத்தின் நீடித்த முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதில் இருந்து, இவ்வாறு கண்டிப்பாகப் பிரிப்பதன் மூலமாக, மேலாதிக்கம் செய்யப்படுவதாகவும் திரிக்கப்படுவதாகவும் இருக்கிறது” என்று நோர்த் கூறினார்.

3) 1938 இல் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் நடைமுறையில் உருக்கொண்டதும், ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் சந்தர்ப்பவாதம், மத்தியவாதம் மற்றும் போலி-இடது அரசியலின் அத்தனை வடிவங்களுக்கும் எதிரான நான்காம் அகிலத்தின் போராட்டத்தில் தொடர்ச்சி கண்டதுமான ட்ரொட்ஸ்கிசமே இருபத்தியோராம் நூற்றாண்டின் மார்க்சிசம். நோர்த் கூறியவாறாக, “மார்க்சிசம் அருவமாக, அல்லது ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்கு முன்பாக வகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு முடிவுகளாக இருக்கவில்லை. மாறாக, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக, உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டம், முன்னோக்கு மற்றும் நடைமுறையை அபிவிருத்தி செய்வதற்கான நனவான போராட்டத்தின் தொடர்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற உண்மையான இயக்கமாக அது உயிர்வாழ்கிறது.”

ஒரு அரசியல் நிகழ்வாக, முதலாளித்துவ சுரண்டல், ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் போர், எதேச்சாதிகாரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும், ஒரு உலகளாவிய சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதற்குமான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைக்கின்ற போராட்டத்தின் நிலைப்பாட்டில் இருந்து உலக அரசியல் நிலைமைகள் குறித்த ஒரு திறம்பட்ட ஆய்வை வழங்கிய ஒரேயொரு மே தின மற்றும் மார்க்சின் இருநூறாவது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வாக இந்தப் பேரணி அமைந்திருந்தது.

மத்திய கிழக்கு, ஆசியாவிலும் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராகவுமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் உள்ளிட உலகப் போரின் அபாயத்தை முன்நிறுத்துகின்ற புவியரசியல் மோதல்கள் தீவிரப்பட்டுச் செல்வதை உரையாற்றியவர்கள் திறனாய்வு செய்தனர். அதி-வலது தேசியவாத இயக்கங்கள் மற்றும் பாரம்பரியமான முதலாளித்துவக் கட்சிகளின் எதேச்சாதிகாரக் கொள்கைகள் வளர்ச்சி காண்பது உள்ளிட உலகெங்கிலும் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் முறிவு காண்பதைக் குறித்து அவர்கள் பேசினர்.

வரலாற்றளவில் பெருமளவில் செல்வம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கிற்கு மாற்றப்படுவதை தொடர்ந்த 2008 நிதிப் பொறிவின் பத்து ஆண்டுகளின் பின்னர் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நிலையை இந்தப் பேரணி ஆய்வுசெய்தது. உலகெங்கிலும் ஊதியங்கள், வேலைகள் மற்றும் சமூக வேலைத்திட்டங்களின் மீது அதிகரித்துச் செல்லும் தாக்குதலிலும், புலம்பெயர்வோர் மற்றும் அகதிகளின் மீதான கொடூரமான துன்புறுத்தலிலும் வெளிப்படுகின்றவாறாய், ஆளும் கட்சிகளால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வர்க்கப் போர் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதை உரையாற்றியவர்கள் அம்பலப்படுத்தினர்.

எல்லாவற்றையும் விட, அமெரிக்காவில் விரிவடைந்துசெல்லும் ஆசிரியர் வேலைநிறுத்தங்களது அலை —இது பெருநிறுவன மற்றும் தொழிலாள-வர்க்க-விரோத தொழிற்சங்கங்களுக்கு எதிராய் அபிவிருத்தி கண்டிருக்கிறது— தொடங்கி இந்த ஆண்டில் இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் நடந்திருக்கும் வரிசையான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் வரையில் உலகெங்கிலும் வர்க்கப் போராட்டம் மறுஎழுச்சி கண்டிருப்பதன் முக்கியத்துவத்தை அத்தனை உரைகளும் வலியுறுத்தின. வர்க்கப் போராட்டமானது இனம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை தொடர்பான மோதல்களால் விஞ்சப்பட்டு விட்டதாகக் கூறும் பிற்போக்குத்தனமான மற்றும் மார்க்சிச-விரோதக் கூற்றுக்களை வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது மறுதலித்திருக்கிறது.

ஆளும் வர்க்கமானது தொழிலாள வர்க்கத்தில் அதற்கான எதிர்ப்பு வளர்ச்சி கண்டிருப்பதைக் குறித்தும், இந்த எதிர்ப்பு முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு நனவான அரசியல் மற்றும் புரட்சிகர இயக்கமாக அபிவிருத்தி காணும் அபாயம் குறித்தும் திகிலடைந்துள்ளது. இந்தக் காரணத்தால் தான், முதலாளித்துவ அரசுகள், கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற மிகப்பெரும் இணைய மற்றும் சமூக ஊடக நிறுவனங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு செய்து, இணையத்தை தணிக்கை செய்வதற்கும் இணையத்தில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கும் ஆழ்ந்து செல்கின்ற நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.

பேரணியில் வழங்கப்பட்ட அத்தனை உரைகளும், முதலாளித்துவத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை கிட்டத்தட்ட 200 ஆண்டு காலம் நெடிய மார்க்சிச இயக்கத்தின் வரலாற்று அனுபவங்களுடன் தொடர்புபடுத்திக் காட்டின. இறுதி உரையில், உலக சோசலிச வலைத் தளத்தின் இலத்தீன் அமெரிக்க ஆசிரியரான பில் வான் ஓக்கென், இருபதாம் நூற்றாண்டின் சமயத்தில் இலத்தீன் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் வரிசையான பரிதாபகரமான தோல்விகளுக்குப் பொறுப்பான குட்டி-முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தை திறனாய்வு செய்தார். இந்த கசப்பான அனுபவங்கள், “தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலின் அடிப்படையிலான ஒரு புதிய புரட்சிகர மார்க்சிச இயக்கம் கட்டியெழுப்பப்படுவதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது...” என்று வான் ஓக்கென் அறிவித்தார்.

“அத்தகையதொரு இயக்கம், திருத்தல்வாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டத்தின்  நெடிய வரலாற்றினை உட்கிரகித்துக் கொள்வதன் மூலமும், அந்த கோட்பாடான அடித்தளத்தின் மீது, ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் ஸ்தாபிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே கட்டியெழுப்பப்பட முடியும்” என்று கூறி அவர் நிறைவு செய்தார்.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான முதலாளித்துவத்தின் மரண வேதனையும் நான்காம் அகிலத்தின் கடமைகளும் இல் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “இந்த காரியாளர்களுக்கு வெளியே, புரட்சிகர நீரோட்டம் என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒன்றேயொன்று கூட, இங்கே எதுவுமில்லை”.

ட்ரொட்ஸ்கி சொன்னது 80 ஆண்டுகளுக்கு முன்பைக் காட்டிலும் இப்போது இன்னும் அதிகளவிலான உண்மையாக இருக்கிறது. அனைத்துலகக் குழுவின் தலைமையிலான நான்காம் அகிலத்திற்கு வெளியில், மார்க்சிசத்தின் தொடர்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிற எந்த அரசியல் போக்கும் இருக்கவில்லை.”

வர்க்கப் போராட்டத்தின் தீவிரப்படல் மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாய் தீவிரப்படுவதின் ஆரம்ப அறிகுறிகள் ஆகியவற்றின் பின்புலத்தில், மே தினப் பேரணியானது ஒரு அபிவிருத்தி காணுகின்ற புறநிலை இயக்கத்தின் நனவான வெளிப்பாடாக இருந்தது. பேரணியில் எடுத்துரைக்கப்பட்ட அரசியல் முன்னோக்கானது தொழிலாள வர்க்கத்தின் நடைமுறைக்குள் கொண்டுவரப்பட்டாக வேண்டும். ஒரு புரட்சிகரத் தலைமையை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே அத்தியாவசியமான கடமையாகும்.

எதிர்வரவிருக்கும் நாட்களில், உலக சோசலிச வலைத் தளம் மே தினப் பேரணியின் அத்தனை உரைகளது எழுத்துவடிவத்தையும் ஒலிக்கோப்பையும் பதிவிடவிருக்கிறது. அவற்றை ஆய்வு செய்வதற்கும், உலகெங்கிலும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரிவுகளிலும் அதன் இளைஞர் அமைப்பான, சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பிலும் (IYSSE) ஒழுங்கமைந்திருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைந்து அதனைக் கட்டியெழுப்புவதன் மூலம் சோசலிசத்திற்கான போராட்டத்தில் செயலூக்கத்துடன் பங்கெடுப்பதற்கும் எமது வாசகர்களிடம் நாங்கள் வலியுறுத்துகிறோம்.