ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Raoul Peck’s The Young Karl Marx

ராவுல் பெக்கின் இளம் கார்ல் மார்க்ஸ்

By Peter Schwarz
15 March 2017

இயற்கை மற்றும் சமூகத்தின் அறிவானது ஒரு குறுகிய காலத்தில் பெரும் பாய்ச்சலை எடுக்கும்பொழுதான காலகட்டங்கள் இருக்கின்றன. இயற்கை விஞ்ஞானத்தில் கலிலீயோ, டார்வின் மற்றும் ஐன்ஸ்டீன் பெயர்கள் அத்கைய புரட்சிகளுடன் தொடர்புகொண்டிருந்தன; சமூக விஞ்ஞானத்தில் என்றால், அது மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் பெயர்களாக இருக்கிறது.

சில ஆண்டுகள் கால அளவிற்குள்ளேயே, இரு மனிதர்களும் முன்னர் என்றும் எதிர்பார்த்திருந்திராத புரட்சிகர கருத்துக்களை நிறைவேற்றினர். அவர்கள் ஜேர்மன் கருத்துவாதத்துடன் முறித்துக்கொண்டு சமூகத்தை புரிந்துகொள்வதை ஒரு சடவாத அடிப்படையில் வைத்தனர். அவர்கள் வர்க்கப் போராட்டத்தை வரலாற்றின் இயக்கு சக்தியாகக் கண்டு பிடித்தனர் மற்றும் சோசலிசத்தை கற்பனாவாதத்திலிருந்து விஞ்ஞானமாக வளர்த்தெடுத்தனர்.


The film poster in German

இந்த மாபெரும் சாதனையின் முழு முக்கியத்துவமும் காலப்போக்கில் மட்டுமே தெளிவானது. தொழிலாள வர்க்கத்தின் முதல் வெகுஜனக் கட்சியான, ஓகுஸ்ட் பெபெல் தலைமையிலான ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்கான மற்றும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவில் நடந்த வெற்றிகரமான பாட்டாளி வர்க்கப் புரட்சியான, அக்டோபர் புரட்சிக்கான தத்துவார்த்த அடித்தளத்தை மார்க்சிசம் அமைத்துக் கொடுத்தது.

ஸ்ராலினிசம் சோவியத் ஒன்றியத்தை அழித்த அதேவேளை, முன்னர் என்றுமிருந்திராத வகையில் இப்போதுதான் மார்க்சிசம் மிகவும் பொருத்தமுடையதாக இருக்கிறது. உலக நிதிய நெருக்கடி, சமூக சமத்துவமின்மையின் படுபயங்கர மட்டங்கள், வளர்ந்துவரும் இராணுவவாதம் மற்றும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் போன்ற தீவிர வலதுசாரி நபர்கள் முக்கியத்துவத்திற்கு உயரல், இவை அனைத்தும் முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து வழியைக் காண்பதற்கு பலரை மார்க்ஸ் பக்கம் திரும்பச்செய்துள்ளது. மார்க்ஸ் இன் எதிர்ப்பாளர்களும் கூட அவரது தீர்க்கதரிசனத்தை மீண்டும் ஒருமுறை கவனத்தில் எடுக்கும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

ஹைத்தியில் பிறந்த இயக்குநர் ராவுல் பெக் ஒரு திரைப்படத்தில் மார்க்சிசத்தின் ஆரம்ப வருடங்களை முன்வைக்கும் பணியை தனக்குத்தானே வகுத்துக் கொண்டுள்ளார். அவரது கருத்தின் காலகட்டத்தைப் பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். “நிதிய நெருக்கடியின் காரணமாக உலகமே நெருக்கடி நிலையில் இருந்தவேளையில், எதிர்பார்த்திருந்திராத ஆர்வத்தை கார்ல் மார்க்ஸ் அனுபவத்தில் அறிந்தார்” என திரைப்படத்துக்கான அவரது பங்களிப்பில் பெக் எழுதினார். பேர்லின் சுவர் வீழந்து 25 ஆண்டுகளுக்கும் மேல், “குற்றவுணர்ச்சி ஏதுமின்றி விஞ்ஞானத்திற்கு கார்ல் மார்க்ஸ் அளித்த பங்களிப்பிற்குத் திரும்புவது” இப்போது சாத்தியமாகியுள்ளது. படத்தின் பணி, “இந்த விஞ்ஞான ரீதியான அரசியல் சிந்தனையாளரின் உண்மையான பங்களிப்பைக் கண்டறிவதாகும்” என அவர் விளக்கினார்.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் இடையிலான ஒத்துழைப்பு

இளம் கார்ல் மார்க்ஸ் கறாராக ஒரு குறிப்பிட்ட காலவரையை மட்டும் குவியப்படுத்துகிறது. அது மார்க்ஸ் தலைமையேற்று நடத்திய Rheinische Zeitung மார்ச் 1843ல் தடைசெய்யப்பட்டதுடன், 1847ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதுவதுடன் முடிவடைகிறது. மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளிடம் முறித்துக் கொண்டு, நவீன சோசலிசத் தொழிலாளர் இயக்கத்திற்கான தத்துவார்த்த அடித்தளங்களை நாட்டியது இந்த வருடங்களின் பொழுதுதான்.


Jenny Marx (Vicky Krieps), Karl Marx (August Diehl) and Friedrich Engels (Stefan Konarske). © Frédéric Batier, Neue Visionen Filmverleih

இப்படம் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸிற்கு இடையிலான ஒத்துழைப்பின்மேல் குவிமையப்படுத்தி, இவ்வருடங்களின் நிகழ்வுகளை, கறாராக காலவரிசை ஒழுங்கில் படம் பிடித்துக் காட்டுகிறது. அது மார்க்ஸின் மனைவியான ஜென்னி ஃபொன் வெஸ்ட்பாலன் (Jenny von Westphalen), மற்றும் எங்கெல்சின் மனைவியும், ஐரிஷ் தொழிலாளியுமான மேரி பேர்ன்ஸ் இவர்களின் பங்களிப்புக்களுக்கும் கவனம் கொடுக்கிறது. மார்க்சிலும் ஏங்கெல்சிலும் கவனம் செலுத்துவது படத்திற்கு வலிமை சேர்க்கிறது. எப்படி இருவர் ஒருவருக்கொருவர் எழுச்சியூட்டக் கூடியவராய் மற்றும் ஒரு நெருக்கமான தனிநபர் நட்பை வள்ர்த்தெடுத்தார்கள் என்று பெக் தெளிவாகக் காட்டுகிறார்.

1970களில் மேற்கு பேர்லினில் ஒரு மாணவராக மார்க்சிசத்துடன் அறிமுகமான பெக், அந்தக் காலத்தில் “மேற்கத்திய மார்க்சிச வட்டாரங்களின் மத்தியில் வழக்கமானதாக இருந்த, “புனைவியல்சார்ந்த” மற்றும் “இரகசிய கருத்துவாதி” மார்க்சுக்கும் சடவாத எங்கெல்சிற்கும் இடையிலான ஒரு வேறுபாட்டைக் கட்டமைக்கும் எந்த முயற்சியையும் தவிர்த்தார். திரைப்படமானது திரும்பத் திரும்ப மார்க்சை ஒரு “மகத்தான சடவாதியாக” அடையாளம் காண்பதுடன் மார்க்ஸ் மற்றும் எங்கெல்சிற்கு இடையிலான புரட்சிகர அடிப்படையை: நிலவும் சுரண்டல் நிலைமைகளுடனும் அரைமனதான குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளிடமும் சமரசம் செய்யாத அவர்களது உறுதிப்பாட்டை விவரமாக எடுத்துக் கூறுகிறது.

முதல் காட்சியே காட்டில் காய்ந்துபோன விறகுகளைப் பொறுக்கும் ஏழை மக்களை மிருகத்தனமாக படுகொலை செய்வதைச் சித்தரிக்கிறது, அந்தக் காலத்துச் சட்டப்படி அது ஒரு தண்டனைக்குரிய குற்றம். Rheinische Zeitung இலிருந்து மார்க்சால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை அதை மேற்கோள் காட்டுகிறது: “மக்கள் தண்டனையைப் பார்க்கிறார்கள், ஆனால் அது குற்றத்தைப் பார்க்கவில்லை. தண்டனை உள்ள இடத்தில், அது குற்றத்தைப் பார்க்காததன் காரணமாக, நீங்கள் அதற்குப் பயப்பட வேண்டும், ஏனென்றால் அது பழிவாங்கும்.”

பிரஷ்ய தணிக்கைக்கு தொடர்ந்து விட்டுக் கொடுப்பதற்குக் கடமைப்பட்டிருந்த, Rheinische Zeitung தடையானது, மார்க்சுக்கும் இளம் ஹெகலியவாதிகளுக்கும் இடையில் கடும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. அவர்கள் மார்க்சின் உறுதியான அரசியல்பாணியே தடைக்குக் காரணம் என்று அவர்மேல் குற்றம் சாட்டினர்.

மார்க்ஸ் பதிலளிக்கிறார்: “வார்த்தைகளில் மயிர் பிடுங்குவதைத்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள். நீங்கள் வெற்று இலக்கிய மதிப்புரைகளைச் செய்கிறீர்கள் வெற்று அரசியல் கருத்துக்களின் வெற்றுத் தொகுப்புக்களை எழுதுகிறீர்கள். நீங்களே உங்களை அழைத்துக்கொள்ளும் இளம் ஹெகலியர்கள் மற்றும் சுதந்திர சிந்தனையாளர்கள் என்ற அங்கீகாரத்திற்காகப் பார்க்கிறீர்கள், தொடர்ந்து நீங்களே அனுபவித்துக்கொள்கிறீர்கள்! நச்சரிப்புக்களுடன் போராடி நான் களைத்துவிட்டேன். இரட்டை வேடத்துடன் களைத்துவிட்டேன். நாங்கள் தடைசெய்யப்பட்டிருக்கிறோம். அப்படியே இருக்கட்டும்!”

மார்க்ஸ் தாமே 16 ஆண்டுகள் கழித்து அந்தக் காலத்தில் அவரது அபிவிருத்தி பற்றி எழுதினார்: “1842-43 ஆண்டில், Rheinische Zeitung ஆசிரியர் என்ற வகையில், சட நலன்கள் என்று அறியப்படுவன பற்றியதை விவாதிக்க சங்கடமான நிலையில் இருப்பதாக முதலில் என்னை நான் கண்டுகொண்டேன். காட்டில் திருட்டுக்கள் மற்றும் நிலமாகிய சொத்து பற்றிய Rhenish Landtag இன் முதிர்ந்த ஆய்வுகள் முதல் நிகழ்விலேயே என்னை பொருளாதாரப் பிரச்சினைகளில் எனது கவனத்தைத் திரும்புமாறு செய்தது.”

“பிரெஞ்சு சோசலிசம் மற்றும் கம்யூனிச எதிரொலிப்பு, மெல்லியதாக மெய்யியலால் நிறமாற்றப்பட்டிருப்பது” என்பதை மார்க்ஸ் ஆட்சேபிப்பது, “கவின்கலை ஆர்வம்” என்று அழைக்கப்படுவது Rheinische Zeitung இல் கவனிக்கத்தக்கதாக இருந்தது. எவ்வாறாயினும், அவரது முந்தைய ஆய்வுகள், “பிரெஞ்சு தத்துவங்களின் உள்ளடக்கத்தின் மீது எந்தக் கருத்தையும் வெளிப்படுத்த” அவரை அனுமதிக்கவில்லை. அதனால்தான், “Rheinische Zeitung வெளியீட்டாளர்கள் அந்தப் பத்திரிகையின் சார்பிலான நிறைய புகார் அளிப்புக்கள் அதன்மீதாக நிறைவேற்றப்படும் மரணதண்டனையை ஒழிப்பதை உத்தரவாதப்படுத்துவது சாத்தியம் என்ற பிரமையைக் கருத்தில்கொண்டபொழுது, பொது மேடையிலிருந்து பின்வாங்கி எனது ஆய்வுக்குச்செல்ல நான் ஆர்வத்துடன் அச்சந்தர்ப்பத்தைப் பற்றிக்கொண்டேன்” என்றார் மார்க்ஸ்.

இத்திரைப்படத்தின் பிரதான குவிமையப்புள்ளிகளுள் ஒன்று எங்கெல்ஸ் மான்செஸ்டரில் அவரது தந்தையின் துணிஆலைத் தொழிலில் ஒரு எழுத்தராகப் பணியாற்றி, தொழிலாள வர்க்கத்தின் மிகப் பயங்கரமான வசிப்பிடக் குடியிருப்புக்களில் — இங்கிலாந்தில் அவர் பெற்ற அனுபவம் ஆகும். எங்கெல்ஸ் அவரது நண்பி மேரி பேர்ன்ஸ் உதவியால் தொழிலாளர் குடியிருப்புக்களை அடைய முடிந்தது, ஆனால் இந்த முறையில் மூக்குடைபட்டு இரத்தம் வழியாமல் அடைய முடியவில்லை. இங்கே அவர் அவரது புத்தகமான இங்கிலாந்தில் தொழிலாளர் வாழ்க்கை நிலைமை என்பதற்கான விஷயதானங்களைத் திரட்டினார், அது 1845ல் வெளிவந்தது.

இந்தப் படைப்பானது “முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிரான பயங்கரமான குற்றச்சாட்டு” மட்டுமல்ல என்று பின்னர் லெனின் இதைப்பற்றிக் குறிப்பிட்டார். “பாட்டாளி வர்க்கம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வர்க்கம் மட்டும் அல்ல; அது உண்மையில், பாட்டாளி வர்க்கத்தின் இழிவுகரமான பொருளாதார நிலைமை அதனைத் தடைசெய்யமுடியாதவாறு முன்னோக்கி உந்தும் மற்றும் அதன் இறுதி விடுதலைக்காகப் போராட அதனை நிர்பந்திக்கும் என்று முதன் முதலில் கூறியவர் எங்கெல்ஸ் ஆவார். போராடும் பாட்டாளி வர்க்கம் தனக்குத்தானே உதவிக் கொள்ளும்

பாரம்பரிய ஆங்கிலப் பொருளியலாளர்களின் எழுத்துக்களின் முக்கியத்துவத்தைப் பற்றி மார்க்சுக்குச் சுட்டிக்காட்டியது எங்கெல்ஸ்தான் என்று திரைப்படம் மிகச் சரியாகக் காட்டுகிறது. அவரது கட்டுரை “தேசியப் பொருளாதாரத்தின் விமர்சனம் பற்றிய மேலெழுந்தவாரியான குறிப்பு” ஜேர்மன்பிரெஞ்சு ஆண்டு நூல்கள் இல் அவர்களது ஒத்துழைப்பின் ஆரம்பக் கட்டத்தில் எங்கெல்சால் வெளியிடப்பட்டது, எதிர்பார்க்கப்பட்ட பெரும்பாலான கருத்துக்களை பின்னர் மூலதனத்தில் மார்க்ஸ் மிக நன்றாக அபிவிருத்தி செய்தார்.

பின்னொரு காட்சியில், இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற மிகவும் வேடிக்கையான காட்சிகளுள் ஒன்று- எங்கெல்ஸ், மார்க்ஸ் மற்றும் மேரி பேர்ன்ஸ் இலண்டன் கிளப் ஒன்றில் மூத்த எங்கெல்சின் முதலாளி நண்பர் ஒருவரை எதிர்கொள்ளும் காட்சி. தனது தொழிற்சாலையில் குழந்தைகளைப் பணியில் அமர்த்தியுள்ள முதலாளி, இரவுப் பணி அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்காது என்று திமிராகக் கூறினார். “அவர்கள் உங்களது நலத்தைப் பாதிப்படையச் செய்யவில்லை என்கிறீர்களா” என மேரி பேர்ன்ஸ் திகைத்துப்போன முதலாளியிடம் பதிலுரைத்தார்.

ராவுல் பெக், பிராங்கோ–ஜேர்மன்-பெல்ஜிய கூட்டுத் தயாரிப்பான இத்திரைப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களுக்காக ஜேர்மன் நடிகர்களைத் தேர்வு செய்துள்ளார். August Diehl பொறுப்புடனான கூர்த்த மதி மற்றும் நகைச்சுவை இணைந்ததாக மார்க்சை திருப்திப்படுத்துகிறார். Stefan Konarske கவர்ந்தீர்க்கும் எங்கெல்ஸ் பாத்திரத்தைச் செய்கிறார், ஒருவேளை உகந்தவராய் அவரும் கூட தொடுகிறார்.

புலம்பெயர்ந்த ஒருவரின் விதியுடன் பங்குகொண்டு ஒரு புரட்சியாளரின் மனைவியாக ஆவதற்கு அவர் தனது பிரபுத்துவ மேற்தட்டை விட்டுவிட்ட — ஒரு கணம்கூட அதற்காக வருத்தப்படாத ஜென்னி மார்க்சுக்கு Vicky Krieps சரியான பொருத்தம். திரைப்படம் குறிப்பதுபோல, மூத்த எங்கெல்சினது தொழிற்சாலையில் கிளர்ச்சிக் குழுத் தலைவராக எங்கெல்சுடன் பழக்கமானவராக மேரி பேர்ன்ஸ் ஆனார் என்பது அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லையாயினும், Hannah Steele ஒரு கிளர்ச்சிக்கார மற்றும் சுதந்திரமான அயர்லாந்துப் பெண்ணாக நடிக்கிறார்.

துணைப் பாத்திரங்களும் நன்றாகச் செய்யப்பட்டிருக்கின்றன. Olivier Gourmet ஏதோ நுட்ப திட்பத்தில் கண்டிப்பாயுள்ள புரூதோனாக மற்றும் Alexander Scheer ஒரு தேர்ச்சியற்ற Weitling ஆக, பூப்போன்ற சொற்றொடர்களில் உரையாற்றுகின்றனர்.

அரசியல் மோதல்

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் தங்களது வரலாற்று சடவாதப் பார்வையை, முதலாளித்துவ மற்றும் நடுத்தரத் தட்டினரின் நலன்களைத் தெளிவாகப் பேசிய போக்குகளின் பிரதிநிதிகளுடனும் அதேபோல பழமைவாத கைவினைஞர்களுடனும் அச்சமூட்டும் விவாதத்தினூடாக, 1848ல் ஐரோப்பா முழுவதும் அடித்துச்சென்ற முதலாளித்துவ புரட்சியின் தறுவாயில் வளர்த்தெடுத்தனர்.

இத்திரைப்படம் இந்த சர்ச்சைகளுக்கே நிறைய இடம் தந்துள்ளது. திரைப்படத்தின் போக்கில் நாம் மற்ற பலர் மத்தியில், இளம் ஹெகலியவாதிகளான Max Stirner மற்றும் Bruno Bauer, German-French Yearbooks இன் ஆசிரியரான Arnold Ruge, பிரெஞ்சு சோசலிஸ்ட் Pierre Proudhon, உண்மை சோசலிஸ்டுகள் Moses Hess மற்றும் Karl Grün, மற்றும் கற்பனாவாதி Wilhelm Weitling ஆகியோருடன் அறிமுகம் செய்யப்படுகிறோம்.

அடிப்படையில் வசனங்கள் பெரும்பாலும் மூல ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சர்ச்சைகள் எதனைப் பற்றி என்று புரிவது அடிக்கடி கடினமாக இருக்கிறது. அதற்கு ஒரு காரணம் நடிப்பின் நாடகம் எனலாம். திரைப்படமானது அதன் நாயகர்களின் வாழ்க்கையை —இருவரும் இன்னும் 30 கூட ஆகவில்லை— அவர்களின் எல்லா அம்சங்களிலும்: அன்பு, பிறப்பு, கடமை தவறல், சடரீதியான துன்பம், பெற்றோருடன் மோதல் போன்றவற்றில் முதலியவற்றில் அவர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்ட முயற்சிக்கின்றது. மார்க்சை “தாடி வளர்த்த ஒரு முதியவராக” காட்டுவது ஒருபுறமிருக்க, “ஒரு வெடிக்கும் நிலைமையில் இருந்த ஐரோப்பாவில் தணிக்கையின் கட்டைவிரலின் கீழ் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் வருகையின் போது, உன்னதமான இம்மூவரைப் பயன்படுத்திக் கொள்வதை” புதுப்பிப்பது அவரது நோக்கமாக இருந்தது என்று பெக் கூறினார்.

அதன் விளைவாக, சர்ச்சைகளின் அரசியல் உள்ளடக்கம் பெரும்பாலும் தொடர்ந்து தெளிவற்றதாக இருந்தது. பார்வையாளர் ஒரு தலைப்பைப் புரிந்து கொள்ளுமுன்னர், திரைப்படம் அடுத்த காட்சிக்கு நகர்கிறது. இந்த இடத்தில், ஏதோ ஒருவகை மெதுவான நகர்வு விரும்பத்தக்கதாக இருந்திருக்கும். படத்தை இருமுறை பார்ப்பது மதிப்புடையதாக இருக்கும்.

நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சிப்போக்கை தனி ஒரு நிகழ்ச்சியாகக் குறைப்பதென்பது சிக்கலையும் தோற்றுவித்துவிடுகிறது. நாடகபாணியில் இதை நியாயப்படுத்தலாம், ஆனால் அது படத்தைப் புரிய முடியாமற் செய்கிறது.

யதார்த்த வாழ்க்கையில், மார்க்சும் எங்கெல்சும் ஒருவரையொருவர் நீண்டகாலமாகவே அறிந்து வைத்திருந்தனர். மார்க்ஸ் Rheinische Zeitung இன் பொறுப்பாளராக இன்னும் இருக்கையிலேயே எங்கெல்ஸ் மார்க்சை Cologne இல் ஏற்கனவே சந்தித்திருந்தார், மற்றும் எங்கெல்ஸ் பத்திரிகைக்கு எழுதியும் வந்தார். Cologne இல் அவர்களது முதற்சந்திப்பு இறுக்கமானதாக இருந்தது, ஏனெனில் மார்க்ஸ் ஏற்கனவே இளம் ஹெகலியவாதிகளிடமிருந்து முறித்துக் கொண்டிருந்தார், அதேவேளை எங்கெல்ஸ் இன்னும் அவர்களை ஆதரித்துக் கொண்டிருந்தார். ஆயினும், பாரிசில் அவர்களது நீண்டகால நட்பு ஆரம்பமாவதற்கு முன்னரே, அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து வைத்திருந்தனர் மற்றும் ஒருவர் மற்றவரது எழுத்துக்களையும் மதித்து வைத்திருந்தனர்.

ஆயினும் இந்தத் திரைப்படத்தில், (பேர்லினில் எதிர்பாரா சந்திப்புக்கு அப்பால்) மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் Arnold Ruge இன் பாரிஸ் அடுக்ககத்தில் ஒருவரை யொருவர் சந்திக்கின்றனர், வார்த்தையால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதிலிருந்து ஆரம்பித்து, பின்னர் பரஸ்பர பரிசுகளுடன் தங்களை மேம்படுத்திக் கொள்வதை நாடுகின்றனர், இறுதியில் செஸ் விளையாட்டு மற்றும் அதிகம் மதுவுடனும் தங்களின் நட்பை ஏற்படுத்திக்கொண்டு விடுகின்றனர் — அனைத்தும் ஒரு நாளில். இது செயற்கையானதாகவும் நம்பமுடியாததாகவும் தோன்றுகிறது.

 


Marx and Engels become friends over a game of chess. © Kris Dewitte, Neue Visionen Filmverleih

அடுத்துவரும் காட்சியானது இன்னும் அற்பத்தனமானதாக இருக்கிறது. மதுவருந்திய இருவரும் பாரிஸ் வீதிகளில் தள்ளாடிச் செல்கின்றனர், மார்க்ஸ் சமூகத்தின் அடிமட்டத்திற்குத் தள்ளப்படுகிறார், பின்னர் நாக்குழறிப் பேசுகிறார்: “உனக்குத் தெரியுமா, நான் சிலவற்றைப் புரிந்திருக்கிறேன் என நினைக்கிறேன், மெய்யியலாளர்கள் உலகை, பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டுமே செய்கின்றனர். ஆயினும், முக்கியமானது, அதை மாற்றுவதுதான்.” இதுதான் முழுப் படத்திலும் மிகவும் சங்கடமான காட்சியாக இருந்தது.

உண்மையில் மார்க்சின் ஃபயர்பாஹ் பற்றிய ஆய்வுரை, இங்கு காட்டப்படும் அதன் எண் 11, வரலாற்று சடவாதக் கண்ணோட்டத்தை விரிவுபடுத்துவதில் மகத்தான முன்னேற்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஹெகல் மற்றும் இளம் ஹெகலியர்களின் கருத்துவாதத்தை எதிர்கொள்வதில், மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் லுத்விக் ஃபயர்பாஹ் இன் சடவாதத்திற்குத் திரும்பினர். ஆயினும், அவரது சடவாதம், செயலிழந்த தன்மை உடையது மற்றும் அமைதியாய் இருப்பது ஏனெனில், மார்க்ஸ் அதை வைப்பது போல், அவர் “ ‘நடைமுறை-விமர்சன’, நடவடிக்கையின் ‘புரட்சிகர’ முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை.”

மார்க்சைப் பொறுத்தவரை இவ்விஷயமானது, இந்தக் காட்சி கூறுகிறவாறு உலகைப்பற்றிய விளக்கங்களுக்கு உலகை மாற்றுவதை எதிராக முன்வைப்பது மற்றும் ஒருவகை குருட்டு செயல்முறைவாதத்தை முன்னிலைப்படுத்துவது அல்ல. இன்னும் சொல்லப்போனால், மனித நடைமுறையை ஒன்று சேர்ப்பதன் மூலமே உலகமானது சரியாகப் புரிந்துகொள்ளப்பட முடியும் என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். அதுவே பின்னர், அதனை நனவானமுறையில் மாற்றுவதற்கான அடிப்படையை வழங்கும்.

நீதிக் கழகம்

திரைப்படத்தின் கடைசி மூன்றாவது பாகம் நீதிக் கழகத்தில் மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் செயல்பாடுகளை அலசுகிறது. அந்த நேரத்திலும் கூட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச கட்சியை நிறுவுதற்கு உத்வேகத்துடன் அவர்கள் வேலைசெய்தனர் என்று அது காட்டுகிறது. பிரஸ்ஸெல்ஸில் அவர்கள் கம்யூனிஸ்ட் தொடர்பாளர்கள் குழு ஒன்றை நிறுவினர், அதனால் பலநாடுகளில் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. 1847-ன் தொடக்கத்தில் அவர்கள் நீதிக் கழகத்தில் சேர்ந்தனர், அது புலம்பெயர்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்ட ஜேர்மன் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களினால் 1836ல் நிறுவப்பட்டது. கழகமானது அரசியல் மற்றும் சமூகப் புரட்சிகளைப் பிரச்சாரம் செய்தது, பல நாடுகளில் கிளைகளை ஏற்படுத்தியது.


Marx and Engels become friends over a game of chess. © Kris Dewitte, Neue Visionen Filmverleih

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் கழகத்தின் நடைமுறை அடிப்படையாய் கொண்டிருப்பதன் மீது, சரியான முறையில் சிந்தித்த, விஞ்ஞானபூர்வ வேலைத்திட்டத்தின் மீது வேலைசெய்தனர். இதற்கு கழகத்தின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்திக் கொண்டிருந்த பல்வேறு குட்டி முதலாளித்துவ போக்குகளுக்கு எதிரான ஒரு தீவிரப் போராட்டம் அவசியப்பட்டது. இத்திரைப்படம் கழகத்தில் பெரும் உக்கிரத்துடன் கொந்தளித்த அரசியல் போராட்டத்தை மீளக்கட்டமைக்கிறது. இங்கும் கூட, அனல் பறக்கும் வாதங்கள் சிலசமயங்களில் சர்ச்சைக்குரிய விடயங்களின் உள்ளடக்கத்திலிருந்து விலகியதுண்டு.

புரூதோனுடன் மார்க்சினது மோதல் எண்ணிறைந்த காட்சிகளில் அலசப்படுகிறது. படத்தின் ஆரம்பக் கட்டத்தில் கார்ல் மற்றும் ஜென்னி மார்க்ஸ் பாரிசில் பங்கேற்ற விருந்தொன்றில், புகழ்பெற்ற நடுத்தர வர்க்க சோசலிசவாதியும் அராஜகவாதத்தின் முன்னோடியுமான புரூதோன் பேசுகிறார். அவரது புகழ்பெற்ற சொற்றொடரான “சொத்து திருடப்பட்டு இருக்கிறது” என்பதை மார்க்ஸ் விமர்சிக்கிறார், ஜென்னி பரிகாசமாக கருத்துரைத்ததுபோல் அது “வட்டங்களில் பயணிக்கிறது.” சொத்து திருடப்பட்டது என்றால், அப்போது திருட்டு என்பது என்ன, சொத்தைத் தவறாகக் கையகப்படுத்துவதா?

எவ்வாறாயினும், புரூதோனுடனான உறவுகள் தொடர்ந்தும் நட்புடன் இருக்கின்றன. ஆயினும் புரூதோன் அவரது படைப்பான வறுமையின் தத்துவம் என்பதை 1846ல் வெளியிட்டபொழுது, மார்க்ஸ் தத்துவத்தின் வறுமை என்பதால் பதில் கொடுத்தார். இந்நூல் புரூதோனின் தத்துவங்களை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தது மற்றும் அவற்றுக்கு வரலாற்று சடவாதத்தின் முதலாவது முறையான முன்வைப்பால் விடைகளை வழங்கியது.

இந்தப் படத்தில் அதிக நேரம், நீதிக் கழகத்தை நிறுவுவதில் முன்னணிப் பாத்திரம் ஆற்றிய, ஒரு தையற்காரரான Wilhelm Weitling உடனான வாதங்களுக்கும் கொடுத்தது. Wilhelm Weitling கம்யூனிசக் கருத்துக்களை ஆதரித்தார், அவற்றை அவர் கற்பனாவாத முறைகளில் அடைவதற்கே முயன்றார். மார்க்சும் எங்கெல்சும் தொழிலாள வர்க்கத்திற்குத் தேவை ஒரு விஞ்ஞான ரீதியான தத்துவம், அது  பிரத்தியேகமான ஒழுக்கங்கள் மற்றும் உணர்வுகள் அடிப்படையிலான ஒரு பிரச்சாரத்துடன் தன்னைத்தான் திருப்திப்படுத்திக்கொள்ள முடியாது என்று அவரை நம்பவைக்க முயன்றனர்.

முடிவில், வெளிப்படையான முறிவு ஏற்பட்டது. “முதலாளித்து வர்க்கத்தின் கொடுங்கோன்மைக்கு முடிவுகட்ட” “நாற்பதினாயிரம் குற்றவாளிகளின் உதவியுடன் நூறாயிரக் கணக்கான ஆயுதம் ஏந்திய பாட்டாளிகள்” போதும் என்று Wilhelm Weitling ஒரு கூட்டத்தில் அறிவித்த பின்னர், மார்க்ஸ் சுடச்சுட மறுமொழி பகன்றார்: “தொழிலாளர்களுக்கு ஒரு கோட்பாட்டை வழங்காமல் அவர்களை அணிதிரட்டுவது ஆக்கபூர்வமானது என்பது, எழுச்சியூட்டும் தீர்க்கதரிசி ஒருபுறத்திலும் பேச்சற்ற அலைபாயும் மனதுடைய மக்கள் மறுபுறத்திலுமான ஒரு நேர்மையற்ற மற்றும் திமிரான விளையாட்டாகும்” என்றார்.

கடுமையாய் தாக்கப்பட்ட Weitling ஆயிரக் கணக்கான எழுத்துக்களைச் சுட்டிக்காட்டி, “விளைவை நிகழ்த்துவதற்கான எனது வேலையானது, துன்புறும் மக்களிடமிருந்து அறவே விலகி இருக்கும், ஒப்பனை அறையின் தத்துவங்களை விடவும் பெரும் எடை கூடியது என அவை எனக்கு நிரூபித்துள்ளன” என்றார். அதற்கு மார்க்ஸ் சினத்துடன்  திருப்பிக் கர்ச்சித்தார்: “அறியாமை ஒருபோதும், எவருக்கும் உதவி செய்யாது” என்றார்.

இறுதியில் அறையை விட்டு வெளியேறுகையில் Weitling கூறினார், “நான் கில்லட்டினின் முதலாவது பலிக்கடாவாக இருப்பேன். பின்னர் உங்களது முறை வரும். பின்னர் உங்களது நண்பர்களது. முடிவில் நீங்களே உங்கள் சொந்தக் கழுத்தைத் துண்டித்துக்கொள்வீர்கள். விமர்சனமானது இருக்கின்ற ஒவ்வொன்றையும் விழுங்கும். மற்றும் ஒன்றும் விட்டுவைக்கப்படாது போனால், அது தன்னையே விழுங்கிக்கொள்ளும்.”

இந்தக் காட்சியானது இரட்டைத்தன்மை உடையதாய் இருக்கிறது. அது, வேலைத்திட்டத்திற்கான மற்றும் தத்துவார்த்த தெளிவுக்கான மார்க்சின் போராட்டம் ஒரு விமர்சனமாக அர்த்தப்படுத்த முடியும். பெக், அவரது படத்திலிருந்து தெளிவானவராக, ஸ்ராலினிசத்தின் குற்றங்களுக்கு மார்க்சிம்தான் பொறுப்பு என்பவர்களுடன் பொதுவாய் எதனையும் கொண்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், திரைப்படம் பற்றிய அவரது கருத்தில், “மார்க்சிசம்” (மேற்கோற் குறிகளில்) என்பதன் மூலம் அவர் எதனை விளக்குகிறார் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், “‘மார்க்சிசம்’ உள்பட அனைத்து உறுதிக் கோட்பாடுகள்” மீதான அவரது அவநம்பிக்கையை அவரும் கூட வெளிப்படுத்துகிறார்.

திரைப்படம் —Bob Dylan பாட்டின் இசையுடன்— கடந்த 100 ஆண்டுகளின் அழிவுகள், முக்கிய நிகழ்வுகள், அரசியல் நபர்கள் மற்றும் எதிர்ப்புக்களின் உருவங்கள் விரைந்து செல்லும் காட்சியுடன் முடிகிறது. அது சேகுவாரா, பாட்ரிக் லுமூம்பா மற்றும் ஆக்கிரமிப்பு இயக்கம் இவற்றின் உருவங்களை காட்டுகின்றது, ஆனால் லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் அக்டோபர் புரட்சியினதை அல்ல. இந்த வகையில், பெக் துல்லியமாக குட்டிமுதலாளித்துவ அரசியல் வகையை புகழ்ந்துதள்ளுகிறார், படம் தெளிவாகக் காட்டுகின்றவாறு அதைத்தான் மார்க்ஸ் முற்றிலும் நிராகரித்தார்.

ராவுல் பெக் ஹைத்தியில் பிறந்து, சாய்ர் இல் (கொங்கோ), அமெரிக்காவில், மற்றும் பிரான்சில் வளர்ந்து, பேர்லினில் படித்தவர். அரசியல் ரீதியாக அவர் எப்போதும் புரட்சிகர மார்க்சிசத்தை விடவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாத இயக்கங்களுடன் நெருக்கமாக இருந்தார். அவரது நன்கறிந்த இரு படங்கள் சுதந்திர கொங்கோவின் முதலாவது பிரதமர் பாட்ரிக் லுமும்பா பற்றிக் கூறுகிறது. சிஐஏ ஆல் நடத்தப்பட்ட அவரது படுகொலையை பெக் குழந்தையாக இருக்கையில் அனுபவத்தில் அறிந்திருந்தார். பெக் 1996-1997 வரை ஹைத்தியில் கலாச்சார அமைச்சராக இருந்தார்.

பெக்கின் இணை ஆசியர், Pascal Bonitzer க்கு பிரெஞ்சு இடது திரைப்பட வரலாற்றில் நீண்ட வரலாறுண்டு. அவர் திரைப்பட பத்திரிக்கையான Cahiers du Cinema இல், 1970ன் ஆரம்பத்தில் ஒரு மாவோயிச அமைப்பியத்துக்குப்-பிந்திய (post-structuralist) கட்டத்தில் போய்க் கொண்டிருந்தபொழுது, அந்த நேரம் முக்கிய பங்காற்றினார்.

ஆகையால், திரைப்படத்தின் பலவீனங்களின் சிலசிக்கலான தத்துவார்த்த கலந்துரையாடல்களை, இரண்டுமணி நேரத் திரைப்படத்தில் போதுமான அளவில் படம்பிடித்துக் காட்டுவதில் உள்ள கஷ்டத்தின் விளைவு மட்டுமல்ல, திரைப்படம் தயாரித்தோரின் பங்கில் மாக்சிசம் பற்றிய சில தயக்கங்கங்களது விளைவுமாகும் என்று கருதியாக வேண்டும்.

ஆயினும், இது இத்திரைப்படத்தின் முடிவைப் பாதிக்கவில்லை. 1847ல் நீதிக் கழகம் கம்யூனிஸ்ட் கழகமாக மாற்றமடைந்தபொழுது மற்றும் “மனிதகுலத்தினர் அனைவரும் சகோதர்கள்” என்ற மைய வாசகத்திலிருந்து “அனைத்து நாடுகளதும் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்” என்று மாற்றிய பொழுது மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் பெரும் வெற்றியை அனுபவமாகக் கண்டார்கள். கம்யூனிஸ்ட் கழகத்தின் இரண்டாவது பேராயம், அமெரிக்கா உள்பட ஏழு நாடுகளிலிருந்து 30 கிளைகளிலிருந்து வந்த பிரதிநிதிகளால் பங்கேற்கப்பட்டது, அப்போது அவையானது மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸை அதன் வேலைத்திட்டமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதப் பணித்தது.

திரைப்படமானது மார்க்ஸ், எங்கெல்ஸ் மற்றும் ஜென்னி தீவிரமாய் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுவதில் ஈடுபட்டு, இந்த புகழ்மிக்க வரலாற்று ஆவணத்திலிருந்து பந்திகளை உரக்க வாசிப்பதுடன் முடிகிறது.

அதன் பலவீனங்கள் இருப்பினும், இத்திரைப்படம் இளைஞர்களை மார்க்சிசத்தைக் கற்பதற்கு ஊக்குவிக்குமாயின், அது ஒரு முக்கியமான பணியை நிறைவேற்றும்.