ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Lessons of the May–June 1968 general strike in France

பிரான்சின் 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்தின் படிப்பினைகள்

By Alex Lantier
12 May 2018

பின்வரும் உரை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய 2018 மே தின சர்வதேச இணையவழிப் பேரணியில், 2016 நவம்பரில் ஸ்தாபிக்கப்பட்ட ICFI இன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’égalité socialiste) தலைவரான அலெக்ஸ் லான்ரியே வழங்கியதாகும்.

கார்ல் மார்க்சின் இந்த இருநூறாவது பிறந்ததினத்தில், பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) சகோதரத்துவ வாழ்த்துக்களை நான் தெரிவிக்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் 1848 புரட்சியின் மீதான குட்டி-முதலாளித்துவ ஜனநாயகவாதிகளது’ காட்டிக்கொடுப்புக்கு எதிரான மார்க்சின் தர்க்கவிவாதம், மற்றும் 1871 பாரிஸ் கம்யூன் படுகொலையை அவர் கண்டனம் செய்தமை ஆகியவை அவருக்கு பிரான்சின் தொழிலாள வர்க்கத்திடம் இருந்தான நிலைத்த புகழை பெற்றிருந்தது. அவர் பிறந்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிந்தைய காலத்தில், வர்க்கப் போராட்டத்தின் இப்போதைய மேலெழுச்சியானது, உலகெங்கிலுமான தொழிலாளர்கள் அவர் மீது கொள்கின்ற மரியாதையின் காரணத்தால் மேலும் வலுப்படவே இருக்கிறது என்று ஒருவர் உறுதியாக கணித்துச் சொல்ல முடியும்.

பிரான்சில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சமூக வெட்டுக்களுக்கு எதிராகவும், ட்ரம்ப்புடன் சேர்ந்து கொண்டு சிரியா மீது அவர் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதற்கு எதிராகவும் கோபம் பெருகிச் செல்வதன் மத்தியில், தொழிலாளர்கள் இரயில்வே துறையின் தனியார்மயமாக்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். பிரான்ஸ் எங்கிலும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமித்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர். “1968-2018” எனும் சுவரோவியங்கள் பாரிஸ் எங்கிலும் பரவியிருக்கிறது. ஒவ்வொருவருமே 50 ஆண்டுகள் பின்னால் சென்று 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தம் என்ற பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் கடைசியான மாபெரும் புரட்சிகர அனுபவத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்து சென்ற இந்த 50 ஆண்டுகள், அது வரவிருக்கும் போராட்டங்களில் தீர்மானகரமானதாக ஆகவிருக்கும் 'பிரான்சில் யார் மார்க்சிஸ்டுகள்?’ என்ற கேள்விக்கும் விடையளிப்பதாக இருக்கின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரெஞ்சு பிரிவான PESம் மட்டுமே. ICFI மட்டுமே அரசு அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்திற்கான அவசியத்தை வலியுறுத்தி வருகிறது, அது மட்டுமே ஸ்ராலினிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட அத்தனை குட்டி-முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராய் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காய் போராடுகிறது.

அவர்களது இன்றைய எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், அவர்கள் தமது சொந்த வரலாறு குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் அனைவருமே 1968 பொது வேலைநிறுத்த காலப்பகுதி ஒரு புரட்சிகர சூழ்நிலை அல்ல என்று கூறுகிறார்கள். எத்தனை பெரிய பொய்! 1968 இல், தொழிலாள வர்க்கம் பிரெஞ்சு முதலாளித்துவத்தை அதன் அடித்தளம் வரையில் ஆட்டியது. மாணவர் போராட்டங்கள் மீது இரத்தக்களரியான போலிஸ் ஒடுக்குமுறை நடந்த ஒரு வாரத்தின் பின்னர் 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்குபெற்ற ஒரு பொதுவேலைநிறுத்தம் வெடித்தது. பிரான்ஸ் எங்கிலும் தொழிற்சாலைகளின் மீது செங்கொடிகள் பறந்தன. 1917 இல் ரஷ்யத் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரை நூற்றாண்டு காலத்தின் பின்னர், இப்போது 1968 இல் பிரான்சில் தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுமா? என்ற கேள்வியை பொது வேலைநிறுத்தம் முன்வைத்தது.

முதலாளித்துவம் தூக்கிவீசப்படுவதை இரண்டு முக்கியமான காரணிகள் தடுத்துக் கொண்டிருந்தன. முதலாவது, அப்போது தொழிலாளர்கள் மத்தியில் தலைமைக் கட்சியாக இருந்த ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இன் எதிர்ப்புரட்சிகர பாத்திரம். ஊதிய அதிகரிப்புகளுக்கான பிரதிபலனாக வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்தித்த PCF, புரட்சிகர சூழ்நிலையைக் காட்டிக்கொடுத்ததன் மூலமாக தொழிலாளர்களை விரக்தியடையச் செய்தது. இரண்டாவது காரணி, இந்த வேலைநிறுத்தம் போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியின் சமயத்தில் வெடித்தது என்பதாகும். விட்டுக்கொடுப்புகளைச் செய்து கால அவகாசம் பெற்றுக் கொண்டு எதிர்த்தாக்குதலை தயாரித்துக் கொள்கின்ற அளவுக்கு முதலாளித்துவத்திடம் ஆதாரவளங்கள் இருந்தன.

வெகுமுக்கியமாக அது நடுத்தர வர்க்க, ட்ரொட்ஸ்கிச-விரோத மாணவர் குழுக்கள் —மாவோயிஸ்டுகள் மற்றும் 1953 இல் ICFI உடன் முறித்துக் கொண்டிருந்த போக்கான பப்லோவாதத்துக்கு வென்றெடுக்கப்பட்டிருந்த மாணவர்கள்— மீது தங்கியிருந்தது. முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தட்டுக்களின் மகன்கள், மகள்களை பொறுத்தவரை, ஆர்ப்பாட்டம் செய்வது ஒரு விடயமாக இருந்தது; ஆனால் அவர்கள் கண்முன் விரிந்து கொண்டிருந்த சோசலிசப் புரட்சியின் அபாயத்தைக் கண்டு திகிலில் அவர்கள் மீண்டும் சுருண்டு கொண்டனர். தசாப்தகாலப் போக்கில், அவர்கள் மக்ரோன் மற்றும் போரை பெரிதும் ஆதரிக்கின்ற முதலாளித்துவத்தின் வசதியான ஆதரவாளர்களாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 1968 இலான தமது எதிர்ப்புரட்சிகரப் பாத்திரம் குறித்து நிறையவே பெருமையடிக்கின்றனர்.

1968 பொது வேலைநிறுத்தத்தின் போது, போலிஸ் சிதறிக் கிடக்க நூறாயிரக்கணக்கானோர் பாரிசில் பேரணி நடத்திய சமயத்தில், மாணவர் தலைவர்கள் அதிகமான அளவில் உள்துறை அமைச்சகத்துடன் விவாதங்களைத் திறந்தனர். “யாருக்கும் ஒரு அமைச்சகத்தைக் கைப்பற்றுவதான அல்லது எலிஸே ஜனாதிபதி மாளிகைக்கு பேரணி செல்வதான எந்த யோசனையும் இருக்கவில்லை. எங்களிடம் குறைந்தபட்சம் அரசியல் முன்னோக்கும் இருக்கவில்லை” என்று 2017 இல் மக்ரோனை ஆதரித்த மாவோயிசவாதி ஜோன்-பியர் லு டான்ரெக் (Jean-Pierre Le Dantec) கூறினார்.

1968 மார்ச் 24 அன்றான பேரணியின் போது, தொழிலாளர்கள் ஆயுதங்களைக் கையிலெடுக்க முயற்சிப்பதைத் தடுப்பதற்காக, பப்லோவாத மாணவர்கள், போலிஸ் ஆயுதக்கிடங்குகளை சுற்றிலும் பாதுகாவலர்களை நியமித்தனர். 2009 இல் Nouvel Obs பத்திரிகையிடம் பேசிய அவர்களது தலைவரான அலன் கிறிவின் பின்வருமாறு விளக்கினார்: “எவ்வளவு தூரம் வரை நாங்கள் செல்லக் கூடாது என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது.” 1968 இல் பாரிஸ் போலிஸ் தலைவராக இருந்த மொறிஸ் கிறிமோ (Maurice Grimaud) ஐ அவர் பாராட்டினார்: “ஒருபக்கம் அவர் காவற்படையின் தலைவராக இருந்தார்... மறுபக்கத்தில் ஒரு ஜனநாயகப்பட்ட உயரதிகாரியாக, ஒரு இடது-சாரி மனிதராக அவர் இருந்தார்”. கிறிமோ “ஒரு நல்ல மனிதர்” என்று அவர் நிறைவுசெய்தார்.

1968 இல் மாணவர் தலைவர் சின்னமாக இருந்த டானியல் கோன்-பென்டிட், அதிலிருந்து முன்னேறி பசுமைக் கட்சியின் ஒரு நாடாளுமன்றவாதியாக ஆனார், சென்ற ஆண்டில் அவர் மக்ரோனால் “வெல்லப்பட்ட”தாக அறிவித்தார். வழக்கொழிந்த கம்யூனிசம் (Obsolete Communism) என்ற 1968 ஆம் ஆண்டு புத்தகத்தில் முன்வைக்கப்பட்ட அவரது மார்க்சிச-விரோதம் பிற்போக்குத்தனமானதாகும். மார்க்சிசத்தின் ஜனநாயகரீதியான விமர்சகராக சொல்லப்படுபவர், லிபியாவிலான 2011 நேட்டோ போர் உள்ளிட்ட “மனிதாபிமான” ஏகாதிபத்தியப் போர், மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்த மக்ரோனின் அவசரகாலநிலை ஆகியவற்றின் சிரத்தையான ஆதரவாளராக மாறினார்.

இவர்கள் அனைவருமே 1971 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு முதலாளித்துவக் கட்சியும் 1968க்குப் பிந்தைய முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்த்தாக்குதலில் மையமான பாத்திரத்தை வகித்ததுமான சோசலிஸ்ட் கட்சியை (Parti socialiste - PS) நோக்கி நோக்குநிலை அமைத்துக் கொண்டிருந்தனர். தசாப்தங்களது போக்கில், PS தொடர்ந்து சிக்கன நடவடிக்கைகளை திணித்தது, தொழிற்துறை வெட்டுகளை செய்தது, வேலைவாய்ப்பின்மையை அதிகரித்தது, அத்துடன் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நவ-காலனித்துவப் போர்களை நடத்தியது.

OCI (The Organisation communiste internationaliste) ஒரு தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் 1971 இல் ICFI உடன் முறித்துக் கொண்டது. சோசலிஸ்ட் கட்சிக்குள் தன்னைக் கலைத்துக் கொண்ட அது, 1981 இல் அதிகாரத்திற்கு வந்த PS-PCF கூட்டணியை ஆதரித்தது, அதன் அங்கத்தவர்கள் ஒரேசமயத்தில் OCI மற்றும் PS இரண்டிலும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர், லியோனல் ஜோஸ்பன், PS இன் பிரதமரானார்; இன்னொருவர், ஜோன் லூக் மெலோன்சோன், PS இன் ஒரு அமைச்சராக ஆனார், இப்போது அவர் அடிபணியா பிரான்ஸ் (La France Insoumise) அமைப்பின் தலைவராக இருக்கிறார், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாய இராணுவ சேவையை எவ்வாறு மீண்டும் கொண்டுவருவது என்பதைத் திட்டமிடுவதில் மக்ரோனுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும், ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவங்களை விடவும் வலிமையானவை. 1968க்கு ஐம்பது ஆண்டுகளுக்கும், சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்புக்கு 27 ஆண்டுகளுக்கும் பின்னர், PS, ஐரோப்பாவெங்கிலும் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான மக்கள்-விரோத சமூக-ஜனநாயகக் கட்சிகளைப் போன்றே, பொறிந்து போய் விட்டிருக்கிறது. PS இன் முன்னாள் பொருளாதார அமைச்சரான மக்ரோன் அதிலிருந்து சென்ற ஆண்டில் இராஜினாமா செய்தார்.

மக்ரோனின் ஆட்சி எந்த சமூக விட்டுக்கொடுப்புகளையும் செய்யப் போவதில்லை, அல்லது 1968 இல் போல வர்க்கப் போராட்டத்தில் இருந்து ஒரு சீர்திருத்தவாத முடிவு பிறக்கவும் அது அனுமதிக்கப் போவதில்லை. வங்கிகளுக்குள்ளும் போர் எந்திரத்திற்குள்ளும் நூறு பில்லியன்கணக்கான யூரோக்களை அள்ளிக் கொட்ட அவர் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆயினும், அடிப்படை சமூக உரிமைகளை வெட்டுவதற்கும் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போர் மிரட்டல்களில் இணைந்து கொள்வதற்குமான அவரது திட்டங்கள் வலிமையின் ஒரு அறிகுறியாக இல்லை, மாறாக உலக முதலாளித்துவத்தின் மரண நெருக்கடியின் அறிகுறியாகவே இருக்கின்றன. பிரான்சிலும் சர்வதேச அளவிலும் அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகின்ற ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைத் தவிர்த்த வேறெந்த வழியும் தொழிலாள வர்க்கத்திற்கு இருக்கப் போவது கிடையாது.

வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு ஒரு புரட்சிகர, ட்ரொட்ஸ்கிச தலைமையை வழங்குவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 2016 இல் சோசலிச சமத்துவக் கட்சியை (PES) ஐ பிரான்சில் ஸ்தாபித்தது. 1968க்குப் பிந்தைய தோல்விகளுக்கான பொறுப்பு தொழிலாள வர்க்கத்தின் மீதோ அல்லது மார்க்சிசத்தின் மீதோ இல்லை என PES பிரகடனப்படுத்துகிறது. ட்ரொட்ஸ்கியும் ICFI உம் வலியுறுத்தியதைப் போல, மார்க்சின் தொடர்ச்சியாளர்கள் தாமே என போலியாக முன்நிறுத்திக் கொண்ட அமைப்புகளின் ஏமாற்றுத்தனமே அதற்குப் பொறுப்பாகும். செவ்வியல் மார்க்சிசத்தின் பாரம்பரியங்களுக்கும், தொழிலாள வர்க்கத்திற்கும், அதன் புரட்சிகர முன்னணிப் படையின் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கும் மீண்டும் திரும்புவதே முன்நோக்கிய ஒரே வழியாகும்.

1848 புரட்சியை காட்டிக் கொடுத்த குட்டி-முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் மீது பழம்பெரும் பிரெஞ்சு புரட்சியாளரான ஓகுஸ்ட் புளோங்கி (Auguste Blanqui) கூறிய உலுக்கும் தீர்ப்பையே ஒட்டுமொத்த குட்டி-முதலாளித்துவ, 1968க்குப் பிந்தைய ஸ்தாபகத்திற்கும் எதிராக PES எதிரொலிக்கிறது. 1851 இல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சாலும் மேற்கோளிடப்பட்ட அவரது வார்த்தைகள், இன்றைய நாளின் குட்டி-முதலாளித்துவ மார்க்சிச-விரோதிகளுக்கு சாலப் பொருந்துவதாய் இருக்கின்றன:

“அவர்களில் மிகவும் குற்றப்பொறுப்புடையவர்கள் யாரென்றால்” புளோங்கி கூறினார், “மக்கள் யாரது பண்பட்ட சொல்லாடல்களால் ஏமாற்றப்பட்டு அவர்களில் தமது வாளையும் கவசத்தையும் கண்டார்களோ; யாரை தமது எதிர்காலத்தின் முடிவுகூறுபவர்களாக உற்சாகத்துடன் பிரகடனம் செய்தார்களோ அவர்கள் தான்.... தொழிலாளர்கள் இந்த சாபக்கேடான பெயர்களது பட்டியலை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளட்டும், இவர்களில் ஒருவரும், ஆம், ஒரேயொருவரும் கூட மறுபடியும் ஒரு புரட்சிகர அரசாங்கத்தில் தென்படுவார்களேயானால், அப்போது அவர்கள் ஒரேகுரலில் ’துரோகம்!’ என்று கூறி கூச்சலிட்டாக வேண்டும்.”

1851 இல் பிரெஞ்சு மக்களுக்கு புளோங்கி அப்போது முன்வைத்த அதே மாற்றுக்கே இப்போதும் பிரான்சிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலுமே தொழிலாளர்கள் முகம் கொடுத்திருக்கின்றனர். தொழிலாளர்கள் ஒரு உண்மையான சக்திவாய்ந்த புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவார்களேயானால், புளோங்கி எழுதினார், “அத்தனை தடைகளும், அத்தனை எதிர்ப்புகளும், அத்தனை சாத்தியமின்மைகளும் காணாமல் போகும். மாறாக பாட்டாளி வர்க்கத்தினர் வீதிகளில் அபத்தமான விதத்தில் நடைபோடுவதிலோ, ‘சுதந்திர மரங்களை’ நடுவதிலோ, வழக்கறிஞர்களின் ரீங்காரமிடும் சொல்லாடல்களிலோ மதிமயங்க தங்களை அனுமதிப்பார்களேயானால், புனித நீருடன் தொடங்கி, அதன்பின் அவமதிப்புகளும், இறுதியில் தோட்டாக்களும், எப்போதும் துயரமும் பின்தொடர்வதையே அவர்கள் எதிர்பார்த்தாக வேண்டும். இப்போது மக்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!”