ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

May Day 2018

மே தினம் 2018

Joseph Kishore and David North
1 May 2018

சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான தினமான மே தினத்தன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் உலகெங்கிலும் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றன.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாங்கள், ஆளும் வர்க்கத்தின் அநீதிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும், குறிப்பாக இந்தியாவில் கொடூரமாக பலியாக்கப்பட்டிருக்கும் மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு, மனிதர்களுக்குரிய அடிப்படை உரிமைகளைக் கூட மறுக்கிற குரோதமான ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களால் மிருகத்தனமான துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் மத்தியகிழக்கைச் சேர்ந்த நிர்க்கதியாக்கப்பட்ட அகதிகளுக்கு, காசாவில் இஸ்ரேலிய ஆட்சியின் மனிதப் படுகொலை வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, மற்றும் அமெரிக்காவில் கெஸ்டாபோவை ஒத்த தேடுதல்வேட்டைகளால் நாட்டை விட்டு திருப்பியனுப்பப்படுகின்ற புலம்பெயர்ந்த மக்களுக்கு, எங்களது சகோதரத்துவ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஏகாதிபத்திய குற்றவியல்தனத்தை அம்பலப்படுத்துவதற்கான தனது தீரமிக்க போராட்டத்தைத் தொடர்கின்ற ஜூலியான் அசாஞ்சிற்கு அனைத்துலகக் குழு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், அவர் விடுதலையை சாதிப்பதற்கான தனது முயற்சியை இரட்டிப்பாக்குவதற்கும் உறுதியெடுக்கிறது.

ஜனநாயகத்திற்கு எதிராக அதிகரித்துச் செல்லும் தாக்குதல்கள், வலது-சாரி மற்றும் அரசு-ஆதரவிலான எதேச்சாதிகாரத்தின் பெருகும் அச்சுறுத்தல் மற்றும் பேரழிவுகரமான போர்களின் பெருகும் அபாயம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலகெங்கிலும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதற்கான  எந்தவொரு  முயற்சியையும் விட்டுவைக்காது என்ற உறுதியையும் 2018 மே தினத்தன்று அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் அறிவிக்கின்றன.

இந்த ஆண்டின் மே தினம் அசாதாரணமான வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டதாகும். 1818, மே 5 அன்று பிறந்த நவீன உலகத்தின் மாபெரும் சடவாத மெய்யியலாளரும் புரட்சிகர சிந்தனையாளருமான காரல் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த தினம் நெருங்குகையில் இந்த மே தினம் கொண்டாடப்படுகின்றது. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸும் அவரது பல தசாப்த கால தோழரும் நண்பருமான பிரெடரிக் ஏங்கெல்சும் ஒலித்த முழக்கம், வர்க்கப் போராட்டம் மீண்டும் பகிரங்கமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று மீண்டும் சக்தியுடன் எதிரொலிக்கிறது.

உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில், தொழிலாள வர்க்கம், பெருநிறுவன தொழிற்சங்கங்களால் பல தசாப்தங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு வந்ததற்குப் பின்னர், இப்போது தனது பலத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது. வீழ்ச்சி காணும் ஊதியங்கள், அதிகரித்துச் செல்லும் ஆரோக்கிய பராமரிப்புச் செலவுகள், மற்றும் ஜனநாயகக் கட்சியாலும் குடியரசுக் கட்சியாலும் மேற்பார்வை செய்யப்பட்ட பல தசாப்த கால நிதிநிலை வெட்டுக்களின் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் விளைவுகள் ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதிலும் பத்தாயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால் பிரான்சில் தொழிலாளர்கள் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சிக்கன நடவடிக்கைகளையும் சர்வாதிகார உத்தரவாணைகளையும் எதிர்த்துப் போராடி வருகின்றனர், ஐக்கிய இராஜ்ஜியத்தில் விரிவுரையாளர்களும் ஜேர்மனியில் நூறாயிரக்கணக்கான தொழிற்சாலைத் தொழிலாளர்களும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பெரும் வேலைநிறுத்தங்களைத் தொடக்கினர். கிரீசில், பிற்போக்குத்தனமான அரசியல் மோசடியாளர் அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான முதலாளித்துவ சிரிசா அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜனவரியில், தொழிலாளர்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்தை மூடினர்.

2018 இன் முதல் நான்கு மாதங்கள், ஜனவரியில் ஈரானில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள்; நைஜீரியா, கென்யா மற்றும் சிம்பாப்வேயில் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தங்கள்; துனிசியாவில் ஆசிரியர்களின் தேசிய அளவிலான ஒரு வேலைநிறுத்தம்; மெக்சிகோ, பிரேசில் மற்றும் ஃபூட்டோரிகோவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம்; சீனாவில் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் மூன்று வார கால வேலைநிறுத்தம்; கனடாவின் விண்ட்ஸாரில் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் இன்னும் பல உள்ளிட உலகெங்கிலும் வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கண்டிருக்கிறது.

இந்த அபிவிருத்திகள் எல்லாமே வர்க்கப் போராட்டம் விரிவடையும் காணுகிறதும் வெடிப்பு கொள்கிறதுமான ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கின் ஆரம்ப கட்டத்தை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கின்றன. தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சமூக சக்தி இல்லை என்று கூறியதோடு நவீன சமூகத்தின் போராட்டங்கள் இனம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை ஆகியவற்றையே மையம்கொண்டதாக இருக்குமென்று கூறிய குட்டி-முதலாளித்துவ போலி-இடதுகளின் பிற்போக்குத்தனமான ஏமாற்று தீர்வுகளை இவை மறுதலிக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரித்த அவர்கள், பிற்போக்குத்தனமான தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனான தமது கூட்டணியையும் அவற்றுக்கான தமது விசுவாசத்தையும் நியாயப்படுத்துவதற்காக அவ்வாறு செய்தனர். தொழிற்சங்கங்களின் வலது-சாரி பாத்திரத்தையும் தொழிலாள-வர்க்கத்திற்கு-குரோதமான தன்மையையும் அம்பலப்படுத்தியதை அல்லாமல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேறெந்த நிலைப்பாடும் போலி-இடதுகளால் இத்தனை கடுமையாகத் தாக்கப்பட்டதில்லை. ஆயினும் 2018 இல் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான மோதல்தான் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியின் ஒரு வரையறுக்கின்ற அம்சமாக இருக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான தொழிலாளர் கழகம் 1993 இல் பின்வருமாறு எழுதியது, ”ஒவ்வொரு நாட்டிலும் இந்த அதிகாரத்துவ அமைப்புகளின் பாத்திரமானது, தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்கவதற்கு முதலாளிகளுக்கும் அரசுக்கும் நெருக்குதலளிப்பதில் தொடங்கி மூலதனத்தை ஈர்ப்பதற்கு வசதியாக முதலாளிகளுக்கு விட்டுக்கொடுப்புகளை வழங்க தொழிலாளர்களை நெருக்குவதற்கு உருமாறியிருக்கிறது.” வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியானது, தொழிலாளர்களை இந்த அமைப்புகளுடன் முன்னெப்போதையும் விட மிக நேரடியான மோதலுக்குள் கொண்டுவரும் என்பதை அது வலியுறுத்தியது.

மில்லியன் கணக்கானோரின் அனுபவத்தில் இந்த பகுப்பாய்வு ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது. கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாய், வரலாற்றில் முன்கண்டிராத அளவுக்கு செல்வந்தர்களுக்கு செல்வம் மறுபங்கீடு செய்யப்படுவதற்கு எழுகின்ற எதிர்ப்பு அனைத்தையும் ஒடுக்குவதற்கு தொழிற்சங்கங்கள் செயற்பட்டு வந்திருக்கின்றன. செல்வத்தின் இந்த பரந்த பரிமாற்றமானது, உலகின் பாதிக்கும் மேலான செல்வத்தை உலக மக்கள்தொகையின் பணக்கார 1 சதவீதம் பேர் கட்டுப்படுத்துகின்றதான ஒரு புள்ளியை எட்டி விட்டிருக்கிறது. 2030க்குள்ளாக இந்த ஒரு சதவீதம் மூன்றில் இரண்டு பங்கு செல்வத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

சமத்துவமின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பு பெருகுகின்ற நிலையில், பெருநிறுவன உயரடுக்கின் கட்டளைகளுக்கான எந்த வெளிப்பட்ட எதிர்ப்பையும் தனிமைப்படுத்துவதற்கும் மூடுவதற்குமான தமது முயற்சிகளை தொழிற்சங்கங்கள் இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில், தீவிரமான சமூகக் கோபத்தையும் முதலாளித்துவத்திற்கான எதிர்ப்பையும் ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் எடுத்துக்காட்டுகின்ற நிலையிலும், சென்ற ஆண்டில் நடந்த முக்கியமான பணி நிறுத்தப் போராட்டங்களில், 1947 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலத்தின் இரண்டாவது மிகக்குறைந்த எண்ணிக்கையாக, வெறும் 25,000 தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபட்டனர். ஐக்கிய இராஜ்ஜியத்தில், வேலைநிறுத்தங்களில் தொலைந்த வேலைநாட்களின் எண்ணிக்கையானது, சுரங்கத் தொழிலாளர்களது வேலைநிறுத்தம் நடைபெற்ற 1984 ஆம் ஆண்டில் 27 மில்லியனாக இருந்ததுடன் ஒப்பிட்டால், 2016 இல் இந்த எண்ணிக்கை 322,000 ஆகவும் 2015 இல் 170,000 ஆகவும் இருந்தது.   

தொழிற்சங்கங்களுக்கு வெளியிலும் அவற்றுக்கு எதிராகவும் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைப்பதற்கு தொழிலாளர்கள் -குறிப்பாக, அமெரிக்காவில் ஆசிரியர்கள்- செய்கின்ற முயற்சிகள் ஆளும் உயரடுக்கின் மனதில் திகிலைக் கிளப்பியிருக்கிறது. தொழிலாளர்கள் தகவல் பரிமாறிக் கொள்வதற்கும் எதிர்ப்பை ஒருங்கிணைப்பதற்கும் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான பதிலிறுப்பில், சென்ற ஆண்டில் கூகுள் அதன் தேடல் செயல்முறைகளில்  திரித்தல் வேலை செய்ததுடன் தொடங்கி இணையத் தணிக்கைக்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதன் மூலமாக அது பதிலிறுத்துக் கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒழுங்கமைப்புக்காகவும் அணிதிரட்டலுக்காகவும் சளைக்காமல் போராடுகின்ற உலக சோசலிச வலைத் தளம் அதன் மையமானதொரு இலக்காக இருந்து வருகிறது.

வர்க்கப் போராட்டத்தை தடுப்பதற்கு முதலாளித்துவக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் மற்றும் அவற்றின் உயர்-நடுத்தர-வர்க்க ஒட்டுவால்களும் செய்கின்ற முயற்சிகள் தோல்விகாணும், சொல்லப் போனால் அவை ஏற்கனவே தோல்வி கண்டு கொண்டிருக்கின்றன. “பரந்துபட்ட மக்களின் நோக்குநிலையானது”, நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “முதலாகவும் முதன்மையாகவும் சிதைந்து செல்லும் முதலாளித்துவத்தின் நிலைமைகளாலும், இரண்டாவதாய், பழைய தொழிலாளர்’ அமைப்புகளது துரோக அரசியலாலும் தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் காரணிகளில், முதலாவதுதான், சந்தேகமில்லாமல், மிகத் தீர்க்கமான ஒன்றாய் இருக்கிறது: வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவ எந்திரத்தை விடவும் வலிமையானவை.”

வரலாற்றின் விதிகளும் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளும் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் என்ற ஒரு சமூக சக்தியை உருவாக்கியிருக்கின்றன. இது போராட்டத்தில் நுழைகின்ற வேளையில், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினரின் அத்தனை கணக்குகளையும் முறியடிக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது, பழைய தொழிலாளர் அமைப்புகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் தேசியவாத சீர்திருத்தவாத முன்னோக்குகளைப் பலவீனப்படுத்திய அதேவேளையில், சீனா, இந்தியா மற்றும் பிற ஒடுக்கப்பட்ட நாடுகளில் நூறு மில்லியன் கணக்கிலான தொழிலாளர்களின் சேர்க்கையுடன் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் வலுவை மிகப்பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இணையவழியிலான தகவல்தொடர்பு வடிவங்களிலான மாற்றங்கள் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் உடனடியாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கின்றன. சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சியானது சமூகக் கோபத்தின் ஒரு பெரும் அணைத்தேக்கத்தை உருவாக்கியிருப்பதோடு, அதேநேரத்தில் ஆளும் வர்க்கத்தின் அத்தனை ஸ்தாபகங்களது நம்பகத்தன்மை மற்றும் அதிகாரத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது.

இதன் விளைவுகள் புரட்சிகரமானவை. வர்க்கப் போராட்டங்கள் அவற்றின் ஆரம்ப வடிவத்தில் ஊதியங்கள், மருத்துவப் பராமரிப்பின் மீதான தாக்குதல், தொழிலாளர்களது வெவ்வேறு பிரிவுகளது வேலை நிலைமைகள் ஆகியவற்றைச் சுற்றியவையாக இருக்கின்றன. ஆயினும், ஒரு கண்ணியமான வாழ்க்கைக்குரிய ஊதியத்துக்கு, சுகாதாரப் பராமரிப்புக்கு, பொதுக் கல்விக்கு, ஒரு பாதுகாப்பான ஓய்வுக்காலத்திற்கு கொண்டிருக்கின்ற உரிமையைப் பாதுகாப்பதற்காக போராடுகையில், இவையெல்லாம் ஒரு பகுதியான பிரச்சினைகளல்ல, மாறாக வர்க்கப் பிரச்சினைகளாகும். அதாவது, அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒரு பொதுவான இயக்கத்தில் ஐக்கியப்படுவதற்கான அவசியத்தை, இவை, ஒவ்வொரு புள்ளியிலும் முன்நிறுத்துகின்றன. மார்க்சும் ஏங்கெல்சும் வலியுறுத்தியதைப் போல, ஒவ்வொரு வர்க்கப் போராட்டமுமே ஒரு அரசியல் போராட்டமாகும்-அது அதிகாரத்திற்கான ஒரு போராட்டமாகும். அரசையும் அதன் அத்தனை துணை உறுப்புகளையும் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிற முதலாளித்துவ வெகுசிலவராட்சியின் செல்வத்தின் மீதும் சிறப்புரிமைகள் மீதும் ஒரு முன்முனைத் தாக்குதல் நடத்தப்படாமல் நெருக்கும் சமூகத் தேவையின் ஒன்றேயொன்றும் கூட பூர்த்தி செய்யப்பட முடியாது.

மேலும், தொழிலாளர்கள் சுரண்டல் மற்றும் சமத்துவமின்மையின் பின்விளைவுகளுக்கு மட்டுமல்லாமல், அதனுடன் பிரிக்கவியலாது தொடர்புகொண்டதாக, உலகப் போர் மற்றும் எதேச்சாதிகாரவாதத்தின் அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆளும் வர்க்கங்கள், ஒவ்வொரு தடவையும் சமாளிக்க முடியாத நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்ற நிலையிலும், ஆக்ரோஷமான உள்முக மோதல்கள் மற்றும் சமூகப் பதட்டங்களால் சூழப்படுகின்ற நிலையிலும், இருபதாம் நூற்றாண்டின் மிகமோசமான பயங்கரங்களை நினைவுக்குக் கொண்டுவரக் கூடிய இராணுவவாத வன்முறை மற்றும் உள்நாட்டு ஒடுக்குமுறையின் ஒரு மட்டத்திற்கு அவை தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.

தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஆரம்பகட்ட வெளிப்பாடுகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்ற போதிலும், அவை மட்டும் சர்வதேச தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற வரலாற்றுக் கடமைகளைத் தீர்த்து விட முடியாது. தொழிலாள வர்க்கத்தின் வேலைத்திட்டம் முதலாளித்துவத்தை சீர்திருத்துவதல்ல, மாறாக அதனைத் தூக்கிவீசுவதாகும். மார்க்ஸ் 1865 இல் எழுதியவாறாக:

இந்த அன்றாடப் போராட்டங்களது இறுதியான விளைவு குறித்து தொழிலாள வர்க்கம் தம்மை தாமே மிகைமதிப்பீடு செய்துகொள்ளக் கூடாது. அவர்கள் விளைவுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றனரே அன்றி அந்த விளைவுகளுக்குக் காரணமானவற்றை எதிர்த்து அல்ல என்பதையும்; அவர்கள் கீழ்நோக்கிய நகர்வின் வேகத்தைக் குறைக்கின்றனரே அன்றி, அதன் திசையை மாற்றவில்லை என்பதையும்; அவர்கள் வலிநிவாரணிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனரே அன்றி, நோயைக் குணப்படுத்தவில்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஆகவே மூலதனத்தின் இந்த ஓயாத ஆக்கிரமிப்புகளில் இருந்தோ அல்லது சந்தை மாற்றங்களில் இருந்தோ இடைவிடாது ஊற்றெடுக்கின்ற இந்த தவிர்க்கவியலாத கெரில்லா போராட்டங்களினால் அவர்கள் முற்றாக விழுங்கப்பட்டுவிடக் கூடாது. இப்போதைய அமைப்புமுறையானது, அவர்கள் மீது அது திணிக்கின்ற அத்தனை துயரங்களுடன் சேர்த்து, அதேசமயத்தில், சமூகத்தின் ஒரு பொருளாதார மறுகட்டுமானத்திற்கு அவசியமாக இருக்கின்ற சடப்பொருள் நிலைமைகள் மற்றும் சமூக வடிவங்கள் சூழ இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். “ஒரு நியாயமான நாள் வேலைக்கு ஒரு நியாயமான நாள் கூலி!” என்ற பழமைவாத இலட்சியமுழக்கத்திற்குப் பதிலாக அவர்கள் “கூலி முறையை ஒழிப்பது” என்ற புரட்சிகர சுலோகத்தை தமது பதாகைகளில் பொறிக்க வேண்டும். [மதிப்பு, விலை மற்றும் இலாபம்]

கூலி முறையை, அதாவது முதலாளித்துவத்தை, ஒழிப்பதே பற்றியெரியும் அரசியல் பிரச்சினையாகும். போர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கான பரந்த மக்களின் எதிர்ப்பும், உலகெங்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது வளர்ந்து செல்லும் போராட்டங்களும் அதிகாரத்தைக் கைப்பற்றி பொருளாதார வாழ்க்கையை பகுத்தறிவான கட்டுப்பாடு, சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் சமூக சமத்துவத்தின் அடிப்படையில் மீள்கட்டுமானம் செய்கின்ற ஒரு நனவான அரசியல் இயக்கமாக உருமாற்றப்பட்டாக வேண்டும்.  

இந்தக் கடமையை நிறைவேற்றுவதிலான அத்தியாவசிய சாதனமான புரட்சிகரத் தலைமையாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் இருக்கிறது. மே தினத்தையும், காரல் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த தினத்தையும் கொண்டாடுகின்ற வேளையில், உலகெங்கிலும் சோசலிச சமத்துவக் கட்சிகளையும், அதன் இளைஞர் அமைப்பான, சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பையும் கொண்ட ICFI இல் இணைந்து அதனைக் கட்டியெழுப்புகின்ற முடிவை மேற்கொள்ள எமது வாசகர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்.

இந்த சனிக்கிழமை, மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாள் வருகின்ற மே 5 அன்று மாலை 5.30 மணி EDTக்கு ICFI அதன் வருடாந்திர சர்வதேச இணையவழி மேதினப் பேரணியை நடத்துகிறது, இது உலகெங்கிலும் wsws.org/mayday இணைப்பில் நேரலையாக ஒளிபரப்பப்படவிருக்கிறது. 2018 மே தினப் பேரணிக்கு பதிவு செய்வதற்கும் அதில் கலந்து கொள்வதற்கும் உலகெங்கும் உள்ள எமது வாசகர்கள் மற்றும் அனைத்துத் தொழிலாளர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.