ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

May Day 2018: Millions march on International Workers Day  

மே தினம் 2018: சர்வதேச தொழிலாளர் தினத்தில் மில்லியன் கணக்கானோர் பேரணி செல்கின்றனர்

By our reporters
2 May 2018

சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் வரலாறு, போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டாடுகின்ற விடுமுறைநாளைக் குறிக்கும்விதமாக நேற்று உலகெங்கும் மில்லியன் கணக்கானோர் ஆர்ப்பாட்ட பேரணிகளிலும் வேலைநிறுத்தங்களிலும் பங்குபெற்றனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் தொனியும் மனோநிலையும், சமூக சமத்துவமின்மை மற்றும் ஏகாதிபத்தியப் போர் தொடர்பான பரந்த வெகுஜன கோபத்தின் மத்தியில், சர்வதேசரீதியாக பரந்தமக்களின் தீவிரப்படல் பெருகிச்செல்வதைப் பிரதிபலித்தது.

ஒவ்வொரு கண்டத்திலுமே, அத்தனை வண்ணமான முதலாளித்துவ அரசாங்கங்களும் தமது இராணுவவாத மற்றும் எதேச்சாதிகார திட்டநிரலைத் தீவிரப்படுத்துகின்ற நிலையில், நேற்று பேரணி வகுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலிஸ் ஒடுக்குமுறையின் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்தனர். அதேபோல மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடுத்த பெருநிறுவனத் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்கள் உள்ளிட்ட அவற்றின் கூட்டாளிகளது அரசியல் செல்வாக்கு என்ற சர்வதேசரீதியாக தொழிலாளர்கள் முகம்கொடுக்கிற இன்னுமொரு முக்கியமான சவாலுக்கும் இந்த ஆர்ப்பாட்டங்கள் தப்பமுடியவில்லை. பல நாடுகளில் —தொழிலாளர்கள் நாளின் நிகழ்வுகளைப் புறக்கணிப்பதை முன்வைத்த சில இடங்கள் உள்ளிட— இந்த ஆர்ப்பாட்டங்கள், தொழிலாள வர்க்கத்திற்கான தமது குரோதத்தை மறுப்பதற்கு சாத்தியமற்ற அதே சக்திகளால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.


பாரிஸில் ஒரு பலகை 1968 மே-ஜூன் எழுச்சிகளை நினைவுகூருகிறது

சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பாவெங்கிலும், பிரான்சில், ஸ்பெயினில், கிரீசில் மற்றும் ரஷ்யாவில் நடைபெற்றன. பிரான்சில், 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்தின் 50வது ஆண்டு அனுசரிப்புக்கு சில வாரங்களே இருக்க, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சமூக வெட்டுகளுக்கு எதிராகவும் சிரியா மீதான அவரது அரசாங்கத்தின் குண்டுவீச்சுக்கு எதிராகவும் போராட்டங்கள் பெருகுவதன் மத்தியில், நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்களில் நூறாயிரக்கணக்கானோர் பேரணி வகுத்தனர். பாரிஸ் மற்றும் மார்சையில் பத்தாயிரக்கணக்கான மக்கள் பேரணி சென்றனர், Toulouse, Rennes, Lyon, Bordeaux, Nantes, Lille, Strasbourg, மற்றும் Nancy இல் ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர்.

பாரிஸில், பாரிய எண்ணிக்கையிலான போலிசுக்கும் முகமூடியணிந்திருந்த அடையாளம்தெரியாத ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் —இவர்கள் மோலோடோவ் காக்டெயில்களை வீசினர், மெக்டொனால்ட் உணவகம் ஒன்றையும் ரெனால்ட் கார் ஒன்றையும் எரித்தனர்— இடையில் மோதல்கள் வெடித்தன. சுமார் 200 பேர் கைது செய்யப்படனர், அரசியல் ஸ்தாபகமெங்குமிருந்தான சக்திகள் இந்த ஆர்ப்பாட்டத்தைக் கண்டனம் செய்தன, பிரான்ஸ் எங்கிலும் கூடுதலான போலிஸ் நடவடிக்கைக்கு அழைப்புவிடுத்தன.

ஸ்பெயினில், மாட்ரிட்டிலும் பார்சிலோனாவிலும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பத்தாயிரக்கணக்கான மக்கள் பேரணி சென்றனர், சென்ற அக்டோபரில் கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துவாக்கெடுப்பு தொடர்பான நெருக்கடிக்குப் பின்னர் மாட்ரிட்டின் மைய அரசாங்கத்தினால் கட்டலோனியாவில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசாங்கம் திணிக்கப்பட்டிருப்பதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மொத்தமாய், தொழிற்சங்கங்கள் 70 ஸ்பானிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடுத்திருந்தனர்.

கிரீசில், சிரிசா (”தீவிர இடதுகளின் கூட்டணி”) அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கோபம் பெருகிச் செல்வதன் மத்தியில்,  தொழிலாளர்களது வேலைநிறுத்தத்தினாலும் Athens மற்றும் Thessaloniki இல் நடந்த பல பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து கொண்டதாலும் சரக்கு மற்றும் பொதுப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சிரிசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்த கிரீசின் தொழிற்சங்க கூட்டமைப்புகளுடன் சிரிசா நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறிருந்தும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த பின்னர் தொடர்ந்தும் அவற்றைத் திணித்து வந்திருக்கின்ற சிரிசாவின் துரோகம் ஆகியவற்றுக்கான தமது எதிர்ப்பைக் காட்டுகின்ற விதமாக பரந்த எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐரோப்பாவெங்கிலும் மற்ற நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன, ஆஸ்திரிய அரசாங்கத்தின் சமூக வெட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 12,000 பேர் வியன்னாவில் பேரணி சென்றனர், ஜேர்மனி எங்கிலும் 340,000 பேர் பேரணியில் பங்குபெற்றதாக, ஜேர்மன் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்தது.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ மிரட்டல்களுக்கு பெருகுகின்ற வெகுஜன கோபமானது, தொழிற்சங்கங்களாலும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அரசியல் ஆதரவை வழங்குகின்ற அரசியல் கட்சிகளாலும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த 735 நகரங்கள் எங்கிலுமான பேரணிகளில் வெளிப்பாடு கண்டது. மாஸ்கோவில் நடந்த பிரதான பேரணியில் குறைந்தது 130,000 பேர் பேரணி சென்றனர்,  Krasnodar இல் 60,000 பேரும், செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் 50,000 பேரும், விளாடிவோஸ்டோக்கில் 20,000 பேரும் பேரணியில் பங்குபெற்றனர். சங்கேதக் குறியீட்டு செய்திச் செயலியான Telegram ஐ மாஸ்கோ தடுப்பதற்கு எதிரான, அதேபோல அமெரிக்க-ஆதரவு எதிர்க்கட்சி அரசியல்வாதியான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவான சிறு ஆர்ப்பாட்டங்களில், சில ஆயிரம் பேர் பங்கெடுத்தனர்.

கனடா மற்றும் அமெரிக்கா எங்கிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், வேலைநிறுத்தங்களும், முற்றுகைப் போராட்டங்களும், உள்ளிருப்புப் போராட்டங்களும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன — ஹாமில்டன், ஓண்டாரியோவில் ஒரு வாடகையாளர் வேலைநிறுத்தம் மற்றும் அரிசோனாவில் தொடரும் ஆசிரியர் வேலைநிறுத்தங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். நியூயோர்க்கில், நியூ ஸ்கூல் பள்ளி மாணவர்கள் ஒரு புதிய ஒப்பந்தத்திற்காக போராடுகின்ற தொழிலாளர்களுடன் ஐக்கியத்தை வெளிப்படுத்துகின்ற விதமாக அங்கு குளம்பியகத்தை ஆக்கிரமித்திருந்தனர், வெஸ்ட் கோஸ்ட் துறைமுகங்கள் எங்கிலும் ILWU ஆல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ஒரு வேலைநிறுத்தத்தில் துறைமுகத் தொழிலாளர்கள் பங்குபெற்றனர். பூர்டோ ரிகோவில், போலிஸ் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதியது.

மத்திய கிழக்கில், துருக்கியில் ஜனாதிபதி தயீப் எர்டோகனின் அரசாங்கத்தின் பெருகும் ஒடுக்குமுறையை மீறி நூறாயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். இஸ்தான்புல்லில் பிரதான ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100,000 பேர் பேரணி சென்றனர், தலைநகர் அங்காராவின் அனடோலு சதுக்கத்திலும் மற்றும் துருக்கியெங்குமான நகரங்களிலும் சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எர்டோகன் மிகப் பெருமளவில் போலிசைக் குவித்திருந்தார். இஸ்தான்புல்லில், சரியாக 41 ஆண்டுகள் முன்பாக 1977 இன் இரத்தப்பாய்வான மே தினப் படுகொலையில் துருக்கிய இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்களைப் படுகொலை செய்த இடமான தக்ஸிம் சதுக்கத்தை நெருங்குவதற்கு முயன்ற டசன்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆபிரிக்கா எங்குமான நாடுகளில், மே தினத்தையொட்டி பேரணிகளும் அரசு ஆதரவுடனான ஊர்வலங்களும் நடைபெற்றன. தென் ஆபிரிக்காவில், 2012 இல் மரிக்கானாவில் வேலைநிறுத்தம் செய்த அதன் சொந்த அங்கத்தவர்கள் டசன்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதை ஆதரித்த தொழிற்சங்கத்திற்கு தலைமை கொடுத்தவரான பில்லியனர் ஜனாதிபதி சிரில் ரமபோசா, தென்னாபிரிக்க தொழிற்சங்க காங்கிரசால் ஒழுங்கமைக்கப்பட்ட பேரணியில் ஒரு இனிய வரவேற்பைப் பெற்றார்.

ஆசியாவில் டெல்லி, கல்கத்தா, அம்ரித்சர் மற்றும் பெங்களூரு உள்ளிட இந்தியாவெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, இலங்கையில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் அத்தனை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களையும் தடைசெய்திருந்தது, குறிப்பாக சோசலிச சமத்துவக் கட்சி அதன் வருடாந்திர மே தின நிகழ்வுகளை நடத்துவதில் இருந்து தடுக்கின்ற நோக்கமுடையதாக இது இருந்தது. இதற்கான பதிலிறுப்பில் ஏராளமான கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அரசாங்கத்தின் ஜனநாயக-விரோத மற்றும் தொழிலாள-வர்க்க விரோதத் தாக்குதல்களைக் கண்டனம் செய்து கொழும்பு துறைமுக இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாகிஸ்தானில், மேம்பட்ட வேலை நிலைமைகளைக் கோரி கராச்சியில் தொழிலாளர்களும் தொழிலாளர் செயல்பாட்டாளர்களும் மெழுகுவர்த்திப் பேரணி ஒன்றை நடத்தினர்.

கொரிய தீபகற்பத்தில் ஒரு மிகப்பெரும் இராணுவப் பெருக்கத்தின் மத்தியில், தென் கொரியாவில், தலைநகர் சியோலில், கொரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரியும் அத்தனை தொழிலாளர்களுக்கும் கண்ணியமான ஊதியங்களையும் வேலைப் பாதுகாப்பையும் கோரியும் சுமார் 20,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தோனேசியாவில், கூலி அதிகரிப்பையும் அவுட்சோர்ஸிங்கிற்கு முடிவுகட்டவும் கோரி ஜகார்தாவில் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியில் நடந்த ஒரு பேரணியில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 10,000 தொழிலாளர்கள் பங்குபெற்றனர்.

கம்போடியாவின் Phnom Penh இல் வேலை தொடர்பான பிரச்சினைகளில் கவனம் குவித்து சுமார் 2,000 ஆயத்த ஆடைத் தொழிலாளர்களது ஒரு பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, அது கலகத் தடுப்பு போலிசால் தடுத்து நிறுத்தப்பட்டது.

பிலிப்பைன்ஸில், பல்வேறு தொழிலாளர் குழுக்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஜனாதிபதி Rodrigo Duterte இன் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர், குறுகிய கால வேலையை முடிவுக்குக் கொண்டு வரும் தனது பிரச்சார வாக்குறுதியை Duterte நிறைவேற்ற மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் Duterte இன் கொடும்பாவிகளைக் கொளுத்தினர். அதேபோல, தொழிலாளர்கள் வேலைகளையும், உயர்த்தப்பட்ட ஊதியங்களையும் அரசாங்க ஒடுக்குமுறைக்கு ஒரு முடிவுகட்டவும் கோரினர்.

பாரிஸில், பாஸ்டில் சதுக்கத்தில் நடந்த முக்கிய பேரணியில் பங்குபெற்ற இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் பேசினர். அவர்கள் போருக்கு எதிராகவும் ரயில்வேயைத் தனியார்மயமாக்கும் மக்ரோனின் திட்டங்களைக் குறிவைத்து நடக்கும் பிரெஞ்சு ரயில் தொழிலாளர்களது வேலைநிறுத்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் பேசினர்.

மக்ரோனுக்கு அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் பேரணியில் பங்கேற்றதாக ஸ்காட் என்ற ஒரு இளம் மாணவர் தெரிவித்தார்: “ஒரு கொடுங்கோன்மை வகை ஆட்சியை அமைக்க அவர் விரும்புகிறார் என்று நினைக்கிறேன், ஆகவே தான் அவரை நாம் இப்போது தடுத்துநிறுத்தியாக வேண்டும்”. வாஷிங்டன் மற்றும் இலண்டனுடன் சேர்ந்து பாரிசும் சிரியா மீது இராணுவத் தாக்குதல்கள் நடத்தியதற்கு ஸ்காட் கண்டனம் செய்தார். “பிரான்ஸ் இதில் ஒரு முக்கியமான பாத்திரம் வகிக்கிறது என்றே நினைக்கிறேன், இந்த நாடுகளுக்கு அது ஆயுதங்களை அனுப்புகிறது அதன்பின் அந்த நாடுகள் மீது இது குண்டுவீசுகிறது, இது முறையல்ல என்றே நினைக்கிறேன்... இதை பெரும் அபத்தமானதாக நான் பார்க்கிறேன், நீங்கள் எதிர்பார்க்கக் கூடியதாகவே அது இருந்தது என்றாலும் அதற்காக அது சரியென்று ஆகிவிடாது.”

வேலைநிறுத்தம் செய்யும் இரயில் தொழிலாளர்களுக்கு தனது ஆதரவையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்திய ஸ்காட் அறிவித்தார்: “அவர்களது போராட்டம் பாராட்டுக்குரியது என்று நான் கருதுகிறேன். அவர்களில் நிறையப் பேரை பார்த்திருக்கிறேன், அவர்களது நிகழ்வுகள் பலவற்றிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன், அவர்களுக்கு எதிராக ஒரு உண்மையான ஊடகப் பிரச்சாரம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அவர்களது இயக்கம் வளர வேண்டும். அது நல்ல விடயம் என்று நான் நினைக்கிறேன்.”

வர்க்கப் போராட்டத்தின் மீது தொழிற்சங்கங்கள் கொண்டிருக்கும் கிடுக்கிப்பிடி தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெருகும் அடுக்குகளது சந்தேகங்களையும் ஸ்காட் வெளிப்படுத்தினார். அரசாங்கம் அதன் சீர்திருத்தத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பதை வலியுறுத்துகின்ற நிலையிலும், பிரான்சின் இரயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் நேரடியாகப் பேசி வருவதை தொடர்கின்ற வேளையில், ஒரு தொழிற்சங்க மூலோபாயம் இந்த வெட்டுக்களைத் தடுத்து விடும் என்று தான் கருதவில்லை என்று ஸ்காட் தெரிவித்தார். “நேர்மையாக சொல்வதென்றால், அவ்வாறு நடக்குமென்று நான் நினைக்கவில்லை. அது ஒருபோதும் காட்டப்பட்டிருக்கவில்லை. சமீப ஆண்டுகளில் எந்த தொழிற்சங்கமும் எந்தச் சட்டத்தையும் முழுமையாகத் திரும்பப் பெறச் செய்ய இயன்றது கிடையாது.”

பாரிஸில் கல்வி பயின்று வரும் கபோன் நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவரான கிளென் உடனுடன் WSWS பேசியது, இந்த எண்ணெய் வளம் செறிந்த முன்னாள் பிரெஞ்சு ஆபிரிக்க காலனி நாட்டில் ஏகாதிபத்திய சக்திகளது நவ-காலனித்துவக் கொள்கைகளை அவர் கடுமையாகத் தாக்கினார். “கபோன் பெரும் இயற்கைச் செல்வம் மிகுந்த ஒரு சிறிய நாடாகும். நாங்கள் மேம்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும். ஒரு கபோனிய தொழிலாளி பிரான்சின் குறைந்தபட்ச ஊதியத்திற்கு நெருக்கமாகக் கூட ஊதியம் பெறுவதில்லை; மாதத்திற்கு 100 யூரோக்களுக்கும் குறைவான தொகையே அவருக்கு ஊதியமளிக்கப்படுகிறது... IMF பிணையெடுப்புகள் (ஜனாதிபதி) அலி பொங்கோவுக்கு விருந்துகள் நடத்துவதற்கு பணமளிக்கிறது, அதனால் தொழிலாளர்களுக்கு பயனில்லை.”

கிளென் மேலும் கூறினார்: “இன்று மக்ரோன் செல்வந்தர்களுக்கான ஜனாதிபதியாக இருக்கிறாரே தவிர, பிரெஞ்சு மக்களுக்கான ஜனாதிபதியாக இல்லை. பஷார் அல்-அசாத் அவரது சொந்த மக்களைக் கொல்வதாகக் கூறி சிரியா மீது அவர் தாக்குதல் நடத்தினார். ஆனால், (கபோனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள) பிரெஞ்சு துருப்புகளுக்கு முன்பாக அலி பாங்கோ தனது சொந்த மக்களைக் கொல்வதற்கு மக்ரோன் அனுமதித்தார். அதன்பின் அவர்தான் ஜனநாயகத்தைக் குறித்து எல்லோருக்கும் முதல் ஆளாய் வகுப்பெடுக்கிறார். ஆகவே நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம், கபோனில் தொழிலாளர் உரிமைகள் மதிக்கப்படுகின்றதை உறுதிசெய்யும் விதமாக அதன் இறுதிவரை முன்னேறிச் செல்வோம்.”

புலம்பெயர்ந்தவர்கள் பலியாக்கப்படுவதற்கு எதிராக தொழிலாளர்களிடையே ஐக்கியத்திற்கும் கிளென் விண்ணப்பம் செய்தார்: “ஒடுக்குமுறைக்கு முகம்கொடுக்கின்ற அனைத்து தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள், நாம் எதையும் விட்டுக்கொடுக்கக் கூடாது. நாம் நீதி கோரி நிமிர்ந்து நிற்க வேண்டும், நமது ஊதியங்களைக் கோர வேண்டும். கபோனியர்களாக நாம் அதற்குத் தகுதி கொண்டிருக்கிறோம். எங்களது பிரெஞ்சு சகோதரர்கள் எங்களுக்கு செவிமடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம், ஏனென்றால் நாங்கள் பிரெஞ்சு மக்களின் சகோதரர்கள். நாங்கள் பிரான்சுக்கு பொழுதுபோக்க வரவில்லை, இங்கு படித்து கபோனுக்குத் திரும்பி அங்கு வேலைசெய்ய வேண்டும் என்றே நாங்கள் வருகிறோம். 1,000க்கும் அதிகமான கபோனியர்கள் பிரான்சில் தஞ்சம் காணத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.... ஆனால் நாம் அனைவரும் தத்தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல இயலுவதாய் இருக்க வேண்டும். நாம் இளைஞர்கள்; நாம் தான் எதிர்காலம். அரசியல் ஒழுங்கை வழிநடத்துவோரைத் தூக்கியெறிவதற்கு நாம் எழுந்து நின்றாக வேண்டும்.”