ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Despite government ban, Sri Lankan SEP and IYSSE hold successful May Day meeting

அரசாங்க தடையை மீறி இலங்கை சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. வெற்றிகரமான மே தின கூட்டத்தை நடத்தின

By our correspondents
3 May 2018

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் மே 1 அன்று கொழும்பில் ஒரு சக்திவாய்ந்த மே தின பொதுக் கூட்டமொன்றை நடத்தின. இந்நிகழ்வு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் மே தினக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மீது வித்திருந்த தடையை மீறி புதிய நகர மண்டபத்துக்கு வெளியே நடைபெற்றது.

அரசாங்கத்தின் கட்டளையின் படி, கொழும்பு மாநகர சபையானது புதிய நகர மண்டபத்தில் கூட்டம் நடத்துவதற்காக சோ.ச.க. செய்திருந்த முன்பதிவை இரத்துச் செய்தது. மே தின நிகழ்வுகளுக்கான இடங்களை ஒதுக்கிக்கொண்டிருந்த ஏனைய அனைத்து கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இதேபோன்ற தடைகளை எதிர்கொண்டன.

தொழிலாளர்கள், இளைஞர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் குடும்ப பெண்கள் அதேபோல் சோ.ச.க. உறுப்பினர்களும் ஆதரவாளர்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் மே 1 நடந்த கூட்டத்தில் பங்குபற்றினர். போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண குடாநாடு மற்றும் மத்திய மலையக தோட்டப் புறத்தில் இருந்தும் தமிழ் பேசும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் வந்திருந்தனர். இலங்கை முழுவதும் அதே நாளில் ஏனைய மே தின பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர்.


கொழும்பில் நடைபெற்ற மே தினக் கூட்டம்

சோ.ச.க. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய உலக சோசலிச வலைத் தள (WSWS) தேசிய ஆசிரியர் கே. ரத்னாயக்க வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அனைத்து பிரிவுகளுக்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும், குறிப்பாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மீது பெருகி வரும் வெகுஜன எதிர்ப்பானது சர்வதேச ரீதியில் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியின் பாகமாகும் என ரட்னாயக்க விளக்கினார். அரசாங்கம் இந்த வளர்ச்சி கண்டு அச்சமடைந்துள்ளது, அதனாலேயே "நேரடியாக தொழிலாள வர்க்கத்தை இலக்கு வைத்து தனது சொந்த அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை மீறி மே தின நிகழ்வுகளை தடை செய்தது," என்று அவர் கூறினார்.


கபில பெர்னாண்டோ

ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பாளர் கபில பெர்னாண்டோ, மே தின தடையின் ஜனநாயக விரோத குணாம்சத்தை போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) குறைத்து மதிப்பிடுவதாகக் கூறினார். "இந்த வகையில், சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள உண்மையான ஆபத்துக்களை மூடி மறைக்க மு.சோ.க. வேலை செய்கிறது," என்று அவர் கூறினார்.

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ், 1968ல், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் புரட்சிகர போராட்டத்தின் வெடிப்புடன் இன்று சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள அரசியல் நிலைமையை ஒப்பிட்டார். ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் தொழிலாள வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்திக்கொண்டு அந்த சர்வதேச இயக்கத்தை காட்டிக்கொடுத்த ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இன்று பொறிந்து போய்விட்டன, என அவர் தெரிவித்தார்.


விலானி பீரிஸ்

"சோ.ச.க.வின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) 1968ல் வர்க்கப் போராட்டம் சர்வதேச ரீதியில் வெடித்த நிலைமைகளின் கீழேயே ஸ்தாபிக்கப்பட்டது. இது ட்ரொட்ஸ்கிசத்தின் பதாகை மற்றும் தெற்காசியாவில் அதன் புரட்சிகர முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை உயர்த்திப் பிடித்தது." சோ.ச.க. அந்த மரபுரிமையை அடிப்படையாகக் கொண்டதுடன் தொடர்ந்தும் பின்பற்றியது என பீரிஸ் கூறினார். “அதனாலேயே, சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் மே தினத் தடைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக கட்சி முன்முயற்சி எடுத்துள்ளது."

சோ.ச.க. பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினருமான விஜே டயஸ், பிரதான உரையை ஆற்றினார். ஆயிரக்கணக்கான இலங்கை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களும் அரசாங்கத்தின் தடையை மீறி மே தின ஊர்வலங்களில் கலந்து கொண்டுள்ளனர், என அவர் கூறினார்.

"அரசாங்கத்தின் சட்டவிரோத தடைக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரந்த எதிர்ப்பும் உள்ளது, ஆனால் புரட்சியாளர்கள் என்ற வகையில் இந்த மே தினத் தடையின் உண்மையான அர்த்தம் மற்றும் அந்த பரந்த கோபத்தின் அரசியல் சாத்தியத்தையும் விளக்க வேண்டியது எமது பொறுப்பாகும்,” என்று அவர் கூறினார்.

உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மற்றும் இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியின் சீரழிந்த நிலையும் அபிவிருத்தியடைந்து வரும் புரட்சிகர நெருக்கடிகளின் ஒரு பகுதியாக உள்ளன, என டயஸ் தெரிவித்தார். "இலங்கையில் ஆளும் ஆட்சிக்கு அதன் தலை எங்கு திரும்புகிறது மற்றும் அது என்ன செய்யப் போகின்றது என்பது பற்றி ஒரு அபிப்பிராயம் கிடையாது. அதன் இடது கை என்ன செய்கின்றது என்பது அதன் வலது கைக்குத் தெரியாது."


விஜே டயஸ்

இரண்டாம் உலகப் போர் வெடித்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், 1934ல் லியோன் ட்ரொட்ஸ்கி செய்த பகுப்பாய்வை மேற்கோளிட்ட டயஸ், அதே அடிப்படை அரசியல் நிகழ்வுப் போக்கு இப்போது நிலவுகின்றது என எச்சரித்தார்.

ட்ரொட்ஸ்கி "போரும் சர்வதேசமும்" என்ற ஆவணத்தில் எழுதினார்: "உள் முரண்பாடுகளின் அழுத்தம் அடுத்தடுத்து நாடுகளை பாசிசத்தின் பாதையில் தள்ளும்; அதன் விளைவாக, சர்வதேச ரீதியான வெடிப்புகளை திட்டமிடாமல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. அனைத்து அரசாங்கங்களும் யுத்தத்தை பற்றி அஞ்சுகின்றன. ஆனால் எந்த அரசாங்கத்துக்கும் எதையும் தெரிவு செய்துகொள்ளும் சுதந்திரம் கிடையாது. பாட்டாளி வர்க்க புரட்சி நடக்காவிட்டால், ஒரு புதிய உலகப் போரைத் தவிர்க்க முடியாதது."

ஏகாதிபத்திய யுத்தத்துக்கு எதிராகவும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு முடிவு கட்டுவதற்காகவும் உலகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 2014 ஜூலையில் வெளியிட்ட அறிக்கையில் இருந்து டயஸ் மேற்கோளிட்டார்.

"போருக்கு எதிரான போராட்டம் இன்றி சோசலிசத்திற்காக போராட முடியாது, மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் இன்றி போருக்கு எதிராக போராட முடியாது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இளைஞர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தம் பின்னால் அணிதிரட்டிக் கொண்டு தொழிலாள வர்க்கமே ஏகாதிபத்திய போரை எதிர்க்க வேண்டும்: இது அரசியல் அதிகாரத்தையும், வங்கிகளையும் பெரிய நிறுவனங்களையும் கையில் எடுத்துக் கொண்டு ஒரு உலக தொழிலாளர் அரசுகளின் ஒன்றியத்தை அமைப்பதற்கான போராட்டமாகும்."

சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர், மே 5 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணையவழி மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு வருகைதந்த அனைவருக்கும் அழைப்புவிடுத்து உரையை முடித்தார். "இந்த வேலைகள் மூலம் நாம் ஒரு சர்வதேச சோசலிசத்துக்காகப் போராடுவதற்கான ஒரு வெகுஜன புரட்சிக் கட்சியைக் கட்டியெழுப்பவே போராடுகின்றோம். அந்த வேலைக்கு தோள் கொடுக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன்."


மேதினத்தில் கலந்துகொண்டவர்கள் சர்வதேசிய கீதம் இசைக்கின்றனர்

சோசலிச சமத்துவக் கட்சியின் வளர்ச்சி நிதிக்காக 17,000 ரூபாய் இந்த மே தினக் கூட்டத்திலேயே சேகரிக்கப்பட்டதோடு சர்வதேச கீதத்துடன் கூட்டம் முடிவடைந்தது.