ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Persecution of refugees mounts after passage of French asylum law

பிரெஞ்சு புகலிட சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அகதிகளை துன்புறுத்துதல் அதிகரிக்கிறது

By Athiyan Silva
21 May 2018

கடந்த மாதம் பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கடுமையான தஞ்சம் மற்றும் குடியேற்றம் மசோதா நிறைவேற்றப்பட்டதிலிருந்து, பிரான்சில் அகதிகள் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் மத்தியில் கோபமும் அச்சமும் அதிகரித்து வருகிறது. இந்த சட்டம், பொலிஸ், அகதிகளை தடுப்புக் காவலில் வைக்கும் காலத்தை அதிகரிக்கும் அதே வேளையில், நாடுகடத்தல் ஆணைக்கு எதிராக அகதிகள் மேல்முறையீடு செய்யும் காலத்தை கடுமையாக குறைப்பதன் மூலம், அடைக்கலம் கோரும் உரிமையை மோசமாக கீழறுக்கிறது.

தற்போது, ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, லிபியா, சிரியா மற்றும் மாலி போன்ற நாடுகள் மீது பிரான்ஸ் உள்பட நேட்டோ நாடுகள் தொடுத்த ஏகாதிபத்திய போர்களினால் அங்கிருந்து தப்பியோடி வருகின்ற அகதிகளுக்கு, பிரெஞ்சு பொலிஸ் மீது கொண்டிருக்கும் கோபமும் அச்சமும் அதிகரித்து வருகிறது. இந்நிலைமைகளின் கீழ், உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பாரிசில் உள்ள தற்காலிக முகாம்களை பார்வையிட்டனர். மனிதன் வாழமுடியாத சூழ்நிலைகளில், அங்கு கிட்டத்தட்ட 3,000 ம் அகதிகள் அடைபட்டிருப்பதுடன், இளைஞர்களாக இருக்கும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 1991 இல் ஈராக்கிற்கு எதிரான வளைகுடா போருக்குப் பின்னர் பிறந்தவர்களாவர்.


நேட்டோ நாடுகளின் நவ-காலனித்துவ போரில் தப்பித்த அகதிகள் பாரிஸ் 19 செயின் டெனிஸ் கால்வாயின் ஓரத்தில் வாழும் நிலை

முதலாவது பெரிய அகதிகள் முகாமில், இருவர் மட்டுமே இருக்கக் கூடிய நூற்றுக்கணக்கான சிறிய கூடாரங்கள் வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவை, பாரிசின் சுற்று வீதியின் (périphérique) பக்கவாட்டில் வரிசையாகவும் மற்றும் பாரிசின் 19வது வட்டாரத்தில் உள்ள லா வில்லெத் பூங்காவிற்கு அருகேயுள்ள சாலை பாலங்களின் கீழும் சிறிய கூடுகள் போல தோன்றும் கூடாரங்களாக அமைந்துள்ளன. இந்த சூழல் மிகவும் அசுத்தமாகவுள்ளது. படுக்கைகள் அழுக்காக இருப்பதுடன், மூட்டைப்பூச்சித் தொந்திரவும் உள்ளது. அங்கு தங்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்களின் உபயோகத்திற்கு இரண்டு கழிப்பறைகளும், இரண்டு சிறிய தண்ணீர் குழாய்களும் மட்டும் தான் உள்ளன. மேலும் தன்னார்வத் தொண்டர்கள் மூலம் உணவு, உடை மற்றும் ஏனைய தேவையான பொருட்கள் விநியோகிக்கப்படும் வரை அகதிகள் காக்கவைக்கப்படுகின்றனர். பலரும் பல் துலக்கவும் அவர்களது ஆடைகளை துவைக்கவும் அருகேயுள்ள சென்-டெனிஸ் கால்வாயிலுள்ள குளிர்ந்த நீரையே பயன்படுத்துகின்றனர்.

பெரும்பாலும் சோமாலியா, சூடன் மற்றும் எரிரியா போன்ற நாடுகளில் இருந்து வந்த முகாமில் உள்ள அகதிகள் பேசுவதற்கே மிகவும் தயங்குவதுடன் பொலிஸ் ஒடுக்குமுறைக்கு அஞ்சுகின்றனர். ஒரு அகதி உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) இவ்வாறு தெரிவித்தார், “அரசாங்கம் எங்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யவில்லை. இங்கே பாருங்கள்! இது தான் உண்மையான பாரிஸ். பயங்கரமான நிலைமைகளில் நாங்கள் தெருக்களில் தூங்குகிறோம்!”

பெரும்பாலான அகதிகள், தாங்கள் நிரந்தர வதிவிட அனுமதியைப் பெற முடியுமா என்பது குறித்தும், பிரான்சில் ஒரு சிறந்த வாழ்வை பெற முயற்சிக்க முடியுமா என்பது குறித்தும் நம்பிக்கையை இழந்துவிட்டதோடு, பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் மீது கோபம் கொண்டுள்ளனர். சோமாலியாவைச் சேர்ந்த ஒருவர், “நாங்கள் தெருவில் நிற்கிறோம், எங்களுக்கு எந்த உதவியும் இங்கு இல்லை, கடவுள் ஒருவர் தான் எங்களை காப்பாற்ற முடியும்” என்று மட்டும் தெரிவித்தார்.


பாரிஸ் 10ல் உள்ள செயின் மார்த்தன் கால்வாய் ஓரத்தில் ஒருபகுதி அகதிகள் படுத்துறங்கும் கூடாரங்கள்

இரண்டாவது பெரிய முகாம், பாரிசின் 10வது வட்டாரத்தில் உள்ள சென்-மார்த்தன் கால்வாய் அருகே அமைக்கப்பட்டுள்ளது, இது லா வில்லத் முகாமில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த முகாமில் தங்கியுள்ள பெரும்பாலான அகதிகள் 18 மற்றும் 35 வயதிற்குட்பட்ட ஆப்கானிய ஆண்கள் ஆவர், அங்கு அவர்கள் பொலிஸ் தொல்லை மற்றும் ஒடுக்குமுறை குறித்த தொடர்ச்சியான அச்சத்துடன் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பகல் அல்லது இரவு எப்பொழுதானாலும், அங்கு அவர்களால் அமைதியாக நடமாடவோ அல்லது தூங்கவோ முடியாது.

கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஜலாலாபாத் மீதான அமெரிக்கத் தாக்குதலில் தனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரை பலி கொடுத்த ஒரு 26 வயது ஆப்கானியர் WSWS இடம் பேசினார். அவர், “நான் எனது குடும்பத்தை இழந்துவிட்டேன். ஒரு இரவில் அமெரிக்கர்கள் வந்து எனது தந்தை, தாய், இரு சகோதரர்கள் மற்றும் சகோதரி ஆகியோரை சுட்டுக் கொன்றுவிட்டனர். அத்துடன் அவர்கள் எங்கள் கிராமத்தில் மேலும் 30 பேரையும் கொன்றனர். இது நடந்த போது, நான் எனது மாமா வீட்டில் இருந்தேன், அதன் பிறகு, நான் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டேன்” என்று கூறினார்.

அகதிகளுக்கு உதவ பிரெஞ்சு அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது பற்றி கேட்டபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்: “நான் எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன், பணம் சம்பாதிப்பதற்கு அல்ல, என்றாலும், அரசாங்கம் எந்த வகையிலும் எங்களுக்கு உதவவில்லை. இந்நிலையில், நல்ல வாழ்க்கைக்கும் இங்கு வழி இல்லை, நல்ல உணவும் கிடைக்கவில்லை. நாங்கள் தெருக்களில் நடந்தால், பொலிஸ் ஆவணங்களைக் கோருகிறது; நாங்கள் அவற்றை வைத்திருக்கவில்லை என்றால், எங்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் என்பதோடு, நாற்றமிக்க கழிப்பறையுடன் கூடிய ஒரு சிறிய அறையில் 5 முதல் 6 மணி நேரங்களுக்கு எங்களை காவலிலும் வைத்து விடுகின்றனர்.”

மேலும், “தினமும் காலையிலும் மாலையிலும் சிலர் எங்களுக்காக உணவையும் பிற பொருட்களையும் கொண்டு வருகின்றனர். அவர்களின் உதவியுடன் தான், எங்களால் இங்கு தொடர்ந்து வாழ முடிகிறது” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.

இருப்பினும், பாரிசில் அகதிகளுக்கு உணவு, தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க வரும் தன்னார்வத் தொண்டர்களை பொலிஸ் அதிகரித்தளவில் துன்புறுத்துவதுடன், அபராதமும் விதிக்கின்றனர். கடந்த மாதம், Solidarité-Migrants இன் தொண்டர் லோரன்ஸ் அரிஸ்ட் ஊடகத்திற்கு இவ்வாறு தெரிவித்தார்: “அவர்கள், நாங்கள் இரண்டு கார்கள் வைத்திருந்தமைக்கு தலா 135 யூரோக்கள் வீதம் இரண்டு கார்களுக்கும் அபராதம் விதித்தனர். அத்துடன், நீங்கள் இங்கு விநியோகிக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர். நாங்கள் ஒரு சிறு நிறுவனம் தான். எங்களிடம் அதிகளவு பணம் கிடையாது. ஒவ்வொரு முறையும் இத்தகைய அபராதங்களை அவர்கள் எங்களுக்கு விதித்தால், இதே மாதிரி எங்களால் தொடர்ந்து செய்ய முடியாது.”

மேலும், கடந்த வருடம், பாரிசில் போர்த் டூ லா சாப்பெல் பகுதி தெருக்களில் இருந்த அகதிகள் முகாம்களில் இருந்து அகதிகளை பொலிசார் வன்முறையாக வெளியேற்றினர். படுக்கை விரிப்புக்கள் மற்றும் போர்வைகள் உட்பட அகதிகளின் உடமைகளையும் திருடினர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பொலிஸ் வீசிய கண்ணீர் புகையினாலும் பாதிக்கப்பட்டனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தான், ஆவணங்கள் இல்லாத இரண்டு இளம் அகதிகள் சென்-மார்த்தன் மற்றும் சென்-டெனிஸ் கால்வாய்களில் மூழ்கி இறந்து போயினர். ஒருவர் சோமாலியாவைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்.

வயது மதிப்பீட்டு மையங்களில், அகதிகளாக வந்துள்ள சிறுவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் என்பதை நிரூபிக்க குறிப்பாக அவர்கள் போராட வேண்டியுள்ளது. வயது மதிப்பீட்டு மையங்களில், ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்க புகைப்பட அடையாளமில்லாத காரணத்தால், இளைஞர்கள் நிராகரிப்பு விகிதம் ஏறத்தாழ 80 சதவிகிதமாக உள்ளது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து சரியான ஆவணங்களைப் பெற முடியாத நிலைமைகளின் கீழ், பல சிறார்கள் தங்களது வயதை நிரூபிக்க பல மாதங்களை செலவிடுகின்றனர், மேலும் அரசாங்க அதிகாரிகள் அவர்களுக்கு வசிப்பிடம் தர மறுக்கும் நிலையில், முடிவில் அவர்கள் தெருவிற்கு வரும் நிலையே உருவாகின்றது.

சோசலிசக் கட்சி (Socialist Party-PS) பாரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோவின் கீழ், முந்தைய PS தேசிய அரசாங்கம் திறந்து வைத்த போர்த் டூ லா சாப்பெல் “குமிழ்” (the bubble) என்று பொதுவாக அறியப்படும் வரவேற்பு பகுதி (CPA) தற்போது மூடப்பட்டு விட்டது. அங்கு தற்காலிகமாக தங்கியிருந்த அகதிகள் தற்போது தெருக்களில் உள்ளனர். இந்த “குமிழை” பாரிசின் 18வது பிரிவு, ரி-ஒரோஞ்சிஸ், செர்ஜி, ஓர்த்-டூ-செய்ன் மற்றும் செய்ன்-ஏ-மார்ன் போன்ற பகுதிகளில், அகதிகள் வருகை மற்றும் சூழ்நிலையை மதிப்பாய்வுக்கான (Centres for Reception and Review of the Situation-CAES) ஐந்து புதிய மையங்களுக்கு இடம் மாற்ற மக்ரோன் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய முகாம்கள் அவர்களுக்காக வைக்கப்பட்ட பொறிகளாக இருக்குமோ என்ற அச்சத்தில் பாரிசில் உள்ள அகதிகள், போரினால் பாதிக்கப்பட்ட அவர்களது நாடுகளுக்கே அவர்கள் நாடுகடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க அங்கு செல்வதை தவிர்க்க முயல்கின்றனர்.

கடந்த ஆண்டு, 100,412 அகதிகள் பிரான்சின் அகதிகள் மற்றும் நாடற்ற மக்களின் பாதுகாப்பிற்கான பிரெஞ்சு அலுவலகத்திற்கு (Office of Protection of Refugees and Stateless Persons-OFPRA) விண்ணப்பித்துள்ளனர், ஆனால் 13,020 பேர் மட்டுமே அகதிகளுக்கான தகுதி பெற்றுள்ளதோடு, 10,985 பேர் மானிய பாதுகாப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 65,302 பேர் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளனர். மக்ரோனின் புதிய கொடூரமான தஞ்சம் மற்றும் குடியேற்ற மசோதா செயல்படுத்தப்படுவதற்கு முன்பு  இருந்து வந்த பரந்தளவிலான நெருக்கடியையே இந்த புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய புதிய சட்டமானது, புகலிடம் கோருவோர் நிலைமைகளை இன்னும் மோசமாக்கியுள்ளது. அதிலும், தேசிய புகலிட நீதிமன்றத்திற்கு (National Asylum Court-CNDA) நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தை மேல்முறையீடு செய்ய 15 நாட்கள் அவகாசத்தை மட்டுமே அவர்கள் கொண்டுள்ளனர். மேல்முறையீட்டு கோப்பை தயாரிப்பதற்கு இந்தக் கால அவகாசம் போதுமானது அல்ல.

இத்தகைய பிற்போக்குத்தனமான தாக்குதல்களின் மூலம், நவ பாசிச தேசிய முன்னணியின் (FN) குடியேற்ற எதிர்ப்பு வாய் வீச்சுக் கொள்கைகளை, மக்ரோன் அரசாங்கம் தனதாக எடுத்துக்கொள்கிறது. நவம்பர் 2017 இல், மதிப்பீட்டின்படி கிட்டத்தட்ட 300,000 சட்டவிரோத குடியேற்றக்காரர்களும் அகதிகளும் பிரான்சில் வாழ்ந்தனர். பிரெஞ்சு மக்கள்தொகையில் இது வெறும் 0.5 சதவிகிதம் மட்டுமே ஆகும். மக்ரோன் அரசாங்கமும், FN போன்ற நவ பாசிச சக்திகளும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், சிக்கன நடவடிக்கை மற்றும் போர் குறித்த செல்வாக்கற்ற கொள்கைகளை ஊக்குவிக்கவும் குடியேற்ற-விரோத எதிர்ப்பை கிளறிவிடுகின்றனர்.