ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“I Want to Be Rich and I’m Not Sorry”
New York Times columnist promotes “women who aggressively seek money and power”

"பணக்காரியாக இருக்க விரும்புகிறேன், அதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை

நியூ யோர்க் டைம்ஸ் பத்தியாளர் “பணம் மற்றும் அதிகாரத்திற்கு மும்முரமாய் முனைகின்ற பெண்களை” ஊக்குவிக்கிறார்

By David Walsh
30 April 2018

“பணக்காரியாக இருக்க ஆசைப்படுகிறேன், அதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை” (“I Want to Be Rich and I’m Not Sorry”) என்ற தலைப்பில் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஜெசிக்கா நோல் என்ற ஒரு புதின எழுத்தாளர் ஏப்ரல் 28 அன்று நியூ யோர்க் டைம்ஸில் எழுதிய ஒரு பத்தி வெளியாகியிருந்தது. உயிர்வாழும் அதிர்ஷ்டக்கார பெண் (Luckiest Girl Alive) (2015) மற்றும் இனிமேல் வெளியாகவிருக்கும் விருப்பமான சகோதரி (The Favorite Sister) ஆகிய புதினங்களை நோல் எழுதியிருக்கிறார்.

நோல், தனது பத்தியில், தனது வகுப்புத்தோழர்களால் 15 வயதில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக எழுதுகிறார். அவர் தொடர்ந்து சொல்கிறார், “ஒரு அதிகாரமிக்க ஒரு பெண்ணாக, எவராலும் புண்படுத்தமுடியாத ஒருவளாக ஆகாவிட்டால் வெற்றிகரமானவளாக என்னை நான் கருத முடியாது என்று நான் முடிவுசெய்தேன்.

வெற்றியானது எனது கட்டுப்பாட்டை நான் மீண்டும் கைப்பற்றுவதற்கான, எனது மதிப்பை உயர்த்துவதற்கான ஒரு வழிவகையாக ஆனது. அதற்கு ஒரேயொரு பண்புப்பெயர் உண்டு: பணம்”

புதின எழுத்தாளர் தனது பேராவலைக் கூறுகிறார், “என்னைப் பொறுத்தவரை, வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதற்கு ஒத்ததாகும். நான் புத்தகங்கள் எழுத விரும்புகிறேன், ஆனால் புத்தகங்களை விற்கவே உண்மையாக நான் விரும்புகிறேன். என் கணவரை வாயடைக்கச் செய்யும் முன்பணங்கள் மற்றும் வருடத்திற்கு இருமுறையான பதிப்புரிமைக்கான காசோலைகளை நான் விரும்புகிறேன். திரைப்பட ஸ்டுடியோக்கள் என்னை பயன்படுத்தும் உரிமைகளுக்காக எனக்கு பணமளிக்க வேண்டும், திரைக்கதை நிறுவனம் பணமளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போது தயாரிப்பது, இயக்குவது அல்லது எனது நிகழ்ச்சியை நானே நடத்துவது ஆகியவற்றை நோக்கி நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். தொலைக்காட்சியில் தான் அத்தனை பணமும் இருக்கிறது, அப்பட்டமாகவே சொல்கிறேன், நான் பணக்காரியாக வேண்டும்.”

“உலகின் பில்லியனர்களில் 12 சதவீதத்துக்கும் குறைவானோர் தான் பெண்களாக இருக்கின்றனர், இந்த பரிதாபகரமான விகிதாசாரத்தின் கிட்டத்தட்ட மூன்றில் பங்கினர் தங்களது செல்வத்தை வாரிசு அடிப்படையில் பெற்றவர்களாய் இருக்கின்றனர்” என்று குறிப்பிடும் நோல், “செல்வ இடைவெளியைக் குறைக்க வேண்டுமென்றால், அதனை ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் நாம் அணுகியாக வேண்டும்” என்று வாதிடுகிறார்.

“செல்வ இடைவெளி” என்ற வார்த்தைப்பிரயோகம் பணக்காரர்களுக்கும் மற்ற அனைவருக்கும் இடையிலான, சமூக வர்க்கங்களுக்கு இடையிலான இடைவெளியை விவரிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டதுடன் தொடர்ந்தும் பிரதானமாக அதற்குத்தான் பயன்படுகிறது என்று நோலுக்குப் படவேயில்லை. ஏதோ இந்த ”இடைவெளி” அவருக்கும் அவரை விட (தற்காலிகமாக) நிதிரீதியாக வெற்றிகரமாக இருப்பவர்களுக்கும் இடையிலான ஒன்றாகக் கருதுமளவிற்கு இந்த எழுத்தாளர் பண மோகியாகவும் சுய மோகியாகவும் இருக்கிறார்.

எப்படியிருப்பினும், செல்வத்தை பின்தொடர்ந்து செல்வது குறித்த எந்த சங்கடத்தையும் வெல்வதில் பெண்களுக்கு, தனது எழுத்தின் மூலமாக உதவுவதுதான் நோலின் குறிப்பான பங்களிப்பாக அவர் காண்பதாகத் தெரிகிறது. “கற்பனையில் மட்டும்தான் பணத்தையும் அதிகாரத்தையும் துரத்துகின்ற ஆண்களைப் போன்று பணத்தையும் அதிகாரத்தையும் மும்முரமாய் துரத்தும் பெண்களை என்னால் உருவாக்க முடிந்திருக்கிறது. பங்குபிரிப்பில் தமது பங்கினைப் பாதுகாப்பதற்காக கொலையும் செய்யக் கூடிய பெண்களை”.

அவர் இவ்வாறு முடிக்கிறார், “ஒரு செவ்வாய்கிழமையில் மெக்சிகோவுக்கு ஜெட் விமானத்தில் செல்ல, அழுக்கு அரசியல்வாதிகளுக்கு கணிசமாக கையில் கொடுக்க, மறுபடியும் ஒரு ஆண் என் மீது கையை வைத்தால் ஒரு ஆள்முழுங்கி வழக்கறிஞருக்கு செலவு செய்ய என்னை அனுமதிக்கும் அளவுக்கு பணம் சம்பாதிக்க விரும்புகிறேன். இதனை அருவெறுப்பூட்டுவது என்று யாரும் சொன்னால், ஆண்கள் செய்வதையே நானும் செய்வதற்கும், பின் தோளைக் குலுக்கிக் கொண்டு சென்று விடுவதற்கும் விரும்புகிறேன்.”

இப்படியான ஒரு பரிதாபமான பத்தியை வெளியிடுவதற்கு நியூ யோர்க் டைம்ஸுக்கு அதன் சொந்த நோக்கமொன்று இருக்கிறது. இது #MeToo இயக்கத்திற்கும் உயர் நடுத்தர வர்க்கப் பெண்கள் முன்னேறுவதற்காக எடுக்கின்ற ஒவ்வொரு மற்ற சுயநல செயல்பாட்டிற்கும் அவர்கள் வழங்குகின்ற ஆதரவுக்கு இணக்கமானதாய் இருக்கிறது. “பெண்கள் அதிகாரம்பெறல்” (female empowerment) என்ற அவர்களது கருத்தாக்கத்திற்கு நோலின் பத்தி பொருந்துகிறது.

பெண் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களுக்கு ஆதரவான பிரச்சாரம் ஒன்றை டைம்ஸ் இப்போது தொடர்ந்து நடத்தி வருகின்ற ஒரு முயற்சியாக இருக்கிறது. மார்ச் 10 அன்று, “பணம் தான் அதிகாரம். பெண்களுக்கு இரண்டுமே தேவை” (“Money Is Power. And Women Need More of Both”) என்ற தலைப்புடன், ஒரு மூத்த பத்திரிகையாளரும் பாலின விடயங்களில் டைம்ஸ் ஆசிரியருமான சூசன் சிரா எழுதிய ஒரு பத்தி, இப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்தது. பெண் பில்லியனர்களின் எண்ணிக்கை, வெறும் 227 என்ற அளவில்,  மிகச் சிறிய எண்ணிக்கையாக இருப்பதையும் சிரா அதில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த சமயத்தில் நாம் குறிப்பிட்டது போல, பெண்கள் பேராசையையும் அதிகார-வேட்கையையும் ஒரேநோக்கமாகக் கொண்டிருப்பதற்கு இத்தகையதொரு பகிரங்க விண்ணப்பத்தை டைம்ஸ் வைப்பதும், இந்த செயல்திட்டத்தை சமகால பெண்ணியத்துடனும் #MeToo இயக்கத்துடனும் அடையாளம் காண்பதும் மிக வெளிப்பட்டதாக இருந்தது. பாலியல்ரீதியான தவறான நடத்தை பிரச்சாரத்தை ஏதோ முற்போக்கான ஒன்றாக சித்தரிப்பதற்கு போலி-இடது அமைப்புகள் மற்றும் பல்வேறு வருணனையாளர்கள் செய்த எண்ணிலடங்கா முயற்சிகளுக்கு புத்துணர்வூட்டுவதாக அது இருந்தது.

பாலியல் தாக்குதலுக்கான பொருத்தமான பதிலிறுப்பு பணம் படைத்தவராயும், அதிகாரமிக்கவராயும், சுயநலமிக்கவராயும் ஆவது தான் என்று வாதிட்டு, நோல் இதனை மேலும் ஒரு அடி முன்னால் எடுத்துச் செல்கிறார்.

புதின எழுத்தாளர் இந்த அருவருப்பான கண்ணோட்டத்தை தனது வாசகர்களுக்கு கடத்துகிறார், ஆனால் அவர் அதனை ஏதோ அந்தரத்தில் இருந்தபடி நிகழ்த்தி விடவில்லை. இது, அமெரிக்காவில் பல தசாப்த கால புத்திஜீவித மதிப்பிறக்கத்தினதும், பணத்திற்கும் புகழுக்கும் தலைவணங்கும் ஒரு கலாச்சார-விரோத உருவாக்கத்தினதும் விளைபொருளாகும். உண்மையில், பணம் எல்லாப் பிரச்சினைகளுக்குமான மாற்றுமருந்தாகப் பார்க்கப்படுகிறது, “உண்மையான படைப்பு சக்தி” என 1844 இல் மார்க்ஸ் பணத்தை குறிப்பிட்டதுபோல, “அனைத்து விடயங்களின் பொதுவான மலைப்பூட்டல் மற்றும் குழப்பல் உலகத்தினை தலைகீழாக நிறுத்திய அனைத்து இயற்கை மற்றும் மனிதக் குணங்களின் மலைப்பூட்டல் மற்றும் குழப்பமாய் இருக்கின்றது.”

இந்த விடயத்தில், “சக்திவாய்ந்த ஒருவராக, எவரும் புண்படுத்தத் துணியாத ஒருவராக” ஆவதன் மூலமாக பழிவாங்கலின், அல்லது குறைந்தபட்சம் தற்காப்பின் ஒரு நடவடிக்கையை பெற்றுவிடுவதாக நோல் கற்பனை செய்கிறார். உண்மையில், எந்த அமைப்புமுறையின் கொடூரமும் சமூக அந்நியப்படலும் அவர் மீதான தாக்குதலுக்கு முதன்மையாக இட்டுச்சென்றதோ அதே அமைப்புமுறையின் விழுமியங்களையே உண்மையில் அவர் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நோல் அவர் மீதான பாலியல் தாக்குதல் குறித்து உண்மை கூறுகிறாரேயானால், அவரது இப்போதைய கருத்துக்களை அது இன்னமும் மேலும் வெறுப்புக்குரியதாகவே ஆக்குகிறது. மற்றவர்களின் துன்பங்களுக்கு கொடூரமாய் அலட்சியம் காட்டும் தன்மைக்குப் பலியான ஒருவரை, பிறரின் துன்பங்களுக்கு மேலதிக கொடூரமான அலட்சியம் காட்டுவதை பதிலாக அளிக்க ஊக்குவிப்பதற்கு ஒரு குறித்த வகையான தீயநோக்கு சமூக சூழல் அவசியமாக உள்ளது.

ஒரு கலைஞராகப் போகிறவருக்கு, இத்தகையதொரு கண்ணோட்டம் அபாயகரமானதாகும். Death Wish அல்லது ஒரு Clint Eastwood படத்தின் கண்காணிப்பு-பழிவாங்கல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிடத்தக்க, தாக்குப்பிடிக்கின்ற ஒரு படைப்பை எவரொருவரும் இதுவரை உருவாக்கியதில்லை. மனித நடத்தை மற்றும் உளவியலின் மீது ஒரு தீவிர பார்வைக்கு அவசியமானதொரு விடாமுயற்சியை வழங்கமுடியாத அளவுக்கு இது மிகவும் குறுகியதாய், மிக சுயநலமானதாய், மிக சுய-சேவை செய்வதாய் இருக்கிறது.

நோலுக்கு அவரது வலி மட்டுமே தெரிகிறது, மற்ற எவரின் வலியும் தெரியவில்லை என்பதாகவே படுகிறது என்பது ஒரு சோகமான உண்மையாகும்.

கடந்தகாலத்தின் மாபெரும் கலைஞர்கள், அவர்கள் ஆணாயிருந்தாலும் சரி பெண்ணாயிருந்தாலும் சரி, இவ்விதத்தில் முன்னேறியது கிடையாது. வறுமையில் இருந்தும், அவமதிப்க்புகளில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் வந்தபோதினும், சார்லஸ் டிக்கன்ஸ், சார்லட் பிராண்ட் மற்றும் வின்சண்ட் வான் கொக் போன்ற ஆளுமைகள், தமது சக உயிர்களின் மீது மிகப் பெரும் பாசம் கொண்டிருந்தனர், அவர்களை அந்த வெளிச்சத்திலேயே காட்டினர். அவர்களின் கஷ்டங்கள் வளர்ந்த அளவுக்கு அவர்களின் இந்த பாசமும் வளர்ந்தது. ரஷ்ய நாவலாசிரியரான ஃபொயோடோர் டோஸ்ரோயேவேஸ்கி (Fyodor Dostoyevsky) வலியுறுத்தியதைப் போல, துன்பம் மட்டுமே ”நனவின் ஒரே மூலமாக” இல்லாமலிருக்கலாம், ஆனால் நிச்சயமாக அது அவற்றில் ஒன்றாக இருக்கிறது.

முதலாம் உலகப்  போரில் தனது ஒரு மகனை இழந்த, ஜேர்மன் ஓவியரும் கல் ஓவியருமான கேத்தே கொல்விட்ஸ் (1867-1945) தனது நாட்குறிப்பில் இவ்வாறு எழுதினார்: “மனித குலத்தின் துயரங்களுக்கு, மலைபோல் குவிந்து விட்ட முடிவில்லாத துயரங்களுக்கு, குரலாக ஒலிப்பது எனது கடமையாக இருக்கிறது. இதுவே என் பணி, ஆனால் அதை நிறைவேற்றுவது எளிதானதில்லை.”

ஆங்கில நாவலாசிரியரான ஜோர்ஜ் எலியட் (1819-1880) ஒரு கடிதத்தில் இவ்வாறு கருத்திட்டார், “தனிமனித துயரத்துடனும் தனிமனித சந்தோசத்துடனும் எந்த மட்டத்திற்கு நாம் அனுதாபம் கொள்கிறோம் என்பதைக் கொண்டு, நமது தார்மீக முன்னேற்றம் அளவிடப்பட முடியும் என்ற எனது நம்பிக்கையையே, எனது சொந்த அனுபவவத்தையும் அபிவிருத்தியையும் ஒவ்வொருநாளும் ஆழமடையச் செய்கின்றன.”

இப்போது, நியூ யோர்க் டைம்ஸ் செல்வம், சுயநலம் மற்றும் சமூக அலட்சியம் ஆகிய குணங்களைப் போற்றுகிறது. நோலும் டைம்ஸ் ஆசிரியர்களும் தோள்களைக் குலுக்கிக் கொண்டு சென்றாலும் செல்லாவிட்டாலும், நாம் இதனை துர்நாற்றமுடையது என்றே அழைக்கிறோம்.