ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

කිලිනොච්චි ඇඟලුම් කම්කරුවෝ දුෂ්කර වැඩ කොන්දේසි ගැන කතා කරති

இலங்கை: கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் கடினமான வேலை நிலைமைகள் பற்றி பேசுகின்றனர்

R. Sudarshan and Vimal Rasenthiran
7 May 2018

இலங்கையில் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கில் கிளிநொச்சியில் இருந்து ஏழு கிலோ மீட்டர்கள் தொலைவில், அறிவியல் நகரில் அமைந்துள்ள எம்.ஏ.எஸ். அக்டிவ் வானவில், எம்.ஏ.எஸ். இன்டிமேட்ஸ் விடியல் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள், சமீபத்தில் தங்கள் கடினமான தொழில் நிலைமைகளை பற்றி உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களிடம் விளக்கினர்.


வானவில் ஆடை தொழிலாளர்கள்

தொழிற்சாலைகள் இலங்கையை தளமாகக் கொண்டுள்ள ஒரு பல்தேசிய நிறுவனமாக MAS ஹோல்டிங்சுக்கு சொந்தமானவை. இது 17 நாடுகளில் 95,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. செய்திகளின் படி எம்.ஏ.எஸ். இலங்கையில் 40 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதுடன் சுமார் 70,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இந்த தொழிற்சாலைகள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் கொடூரமான போர் முடிந்து மூன்று ஆண்டுகளின் பின்னர், 2012ல் தொடங்கப்பட்டது. எம்.ஏ.எஸ். தவிர ஏனைய பல்வேறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடக்கில் வவுனியா, புதுக்குடியிருப்பு, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கிலும் ஆடைத் தொழிற்சாலைகளை திறந்துள்ளனர்.

அவர்கள் யுத்த விதவைகள் உட்பட இளைஞர்கள் மத்தியில் மலிவு உழைப்பு சுரண்டலை எதிர்பார்த்து போரால் பாதிக்கப்பட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். யுத்தத்தால் அழிக்கப்பட்டதால் அநேக இளைஞர்கள் வேலையற்றும் தீவிர வறுமையிலும் வாழ்கின்றனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று வடக்கு மாவட்டங்களிலிருந்து 18 முதல் 30 வயது வரை உள்ள 4000 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் வானவில் மற்றும் விடயலில் பணியாற்றி வருகின்றனர்.

தொழிற்சாலைகளுக்கு அருகில் தங்குமிட வசதி இல்லாததால் தொழிலாளர்கள் அவர்களது கிராமங்களில் இருந்து பஸ்கள் மூலம் கொண்டுசெல்லப்படுகிறார்கள். அவர்கள் காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்ய அதிகாலை 5.30 மணிக்கே புறப்படுவார்கள்.

உற்பத்திப் பொருட்களின் பெரும்பகுதி பெண் தொழிலாளர்களைக் கொண்டு செய்யப்படுகிறது, சிலர் வேலை நேரம் முழுவதும் முழு நாளும் இயந்திரங்களுக்கு அருகே நிற்கவேண்டும். முன்னதாக, ஒரு நாளுக்கு 60 சட்டை கைகளை தைப்பது ஒரு பகுதியின் இலக்காக இருந்தது, இப்போது அங்கு அது 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, மேலதிகமாக காலர்களையும் தைத்து முடிக்க வேண்டும்.

நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப மேலதிக நேர வேலை கட்டாயமாகும். இரவு 11 மணிக்கு பின்னரே அவர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். தொழிலாளர்கள் பொதுவாக மனச்சோர்வு, குதிகால் வீக்கம், முதுகு மற்றும் மூட்டு வலி மற்றும் வெரிகோஸ் போன்ற வியாதிகளால் பாதிக்கப்படுகின்றனர். சில பெண் தொழிலாளர்கள் தமது சக ஊழியர்கள் கருச்சிதைவை எதிர்கொள்வதாக முறைப்பாடு செய்தனர். அவர்கள் அதிகமான வெப்பம் மற்றும் நீண்ட நேரமாக நின்றுகொண்டே வேலை செய்யும் நிலைமை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுவதாக சந்தேகிக்கின்றனர்.

நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளியே செல்ல அனுமதி இல்லை. கம்பெனி அதன் வளாகத்திலேயே ஒரு மருந்தகத்தை இயக்குவதோடு வலி நிவாரனியான பரசெடமோல் மற்றும் அமொக்சிலின் மட்டுமே அங்கு கிடைக்கும். ஏதாவது கடுமையான நோய் ஏற்பட்டால், பொது மக்கள் விழிப்படைவதை தவிர்ப்பதற்காக தொழிற்சாலைக்குள் நோயாளிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

பெண் தொழிலாளர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது குழந்தைக்கு மூன்று மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது, மூன்றாவது குழந்தைக்கு 45 நாட்களுக்கு மட்டுமே விடுப்பு கொடுக்கப்படுகிறது. மலிவான விலையில் தொழிற்சாலைகளில் வழங்கப்படும் உணவு நல்ல நிலையில் இல்லை என்று தொழிலாளர்கள் புகார் செய்தனர்.

2012ல் இந்த ஆலைகள் தொடங்கப்பட்டபோது, ​​மாதத்திற்கு சம்பளமாக 9, 500 ரூபாய் (75 அமெரிக்க டாலர்) மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. பல அதிகரிப்புகளுக்குப் பின்னர் அவர்கள் இப்போது எல்லாமாக 21,000 ($ 132) ரூபாய்களைப் பெறுகின்றனர். இருப்பினும், தொழிலாளர்கள் அனைவருக்கும் அந்த தொகையை அடைய முடியாது, அத்துடன் அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால், அந்த தொகை அவர்களின் மாதாந்த செலவினங்களை நிர்வகிக்க போதுமானதாக இல்லை.

வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை விவரிக்கும் 22 வயது பெண் தொழிலாளி கூறியதாவது: "நான் ஒரு வருடத்திற்கு மேலாக தொழிற்சாலையில் வேலை செய்கிறேன். நான் ஒரு காலில் நின்றுகொண்டு மற்ற காலில் இயந்திரத்தை இயக்கி வேலை செய்கிறேன். எனக்கு கால் பாதம் வீக்கம் ஏற்படுகிறது, நெஞ்சு மற்றும் முதுகுவலியால் பாதிக்கப்படுகிறேன். நாளில் பெரும் பகுதி தொழிற்சாலைக்குள் முடிவடைகிறது. என் மாதாந்த வருமானம் மேலதிக நேர வேலை உட்பட 18,000 ரூபாய் மட்டுமே. உங்களுக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும் கூட விடுமுறை இல்லை. நாங்கள் விடுமுறை எடுத்தால், 2,000 ரூபாய் வருடாந்திர வருகைக் கொடுப்பனவு சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும். இயந்திரங்களின் அசாதாரண வெப்பம் காரணமாக அச்சிடும் பிரிவில் வேலை செய்யும் பெண்கள் கருச்சிதைவுகளுக்கு ஆளாகிறார்கள்.

"எங்கள் தொழிற்சாலை உற்பத்தி அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எங்களால் இலக்கை முடிக்க முடியாவிட்டால், எங்களை இழிந்த வார்த்தைகளில் திட்டுகிறார்கள். நிர்வாகத்தின் இந்த நடத்தை காரணமாக சிலர் வேலையை விட்டுவிட்டார்கள். எங்கள் பிரிவில் பதினாறு தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர், ஆனால் நாங்கள் ஒரு நாளைக்கு 1500-1800 ஆடைகளை தைத்து முடிக்க வேண்டும்.

அவரது பிரிவில், இரண்டு வாயுக் கட்டுப்பாட்டு இயந்திரங்களில் (ஏ.சி.) ஒன்று மட்டுமே வேலை செய்கின்றது. அவர்கள் வாரம் ஒரு முறை தரம் குறைந்த முகக் கவசங்களை கொடுப்பார்கள். தொழிலாளர்கள் சுவாசப் பிரச்சனைகள் மற்றும் இடைவிடாத தும்மலையும் எதிர்கொள்கின்றனர். அவர் அளவையாளர் திணைக்களத்தில் வேலை கிடைத்தபோதும், அலுவலகம் கொழும்பிற்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அந்த வேலைக்கு செல்லவில்லை.

வானவில் தொழிற்சாலைக்கு அருகே வசிக்கும் கிராமவாசி, சுற்றுச்சூழல் மாசுபாட்டை விளக்கினார். "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நிறுவனம் மனித கழிவு மற்றும் வடிகால் வெளியேற்றத்தை நிறுவியது. இப்போது அது கைவிடப்பட்டுள்ளது. கழிவு நீர் ஒரு பெரிய துளைக்குள் நிறைந்து, சூழல் பெரிதும் மாசுபட்டிருக்கிறது. நாங்கள் பொது சுகாதார அதிகாரி மற்றும் கிராம அலுவலரிடம் பல தடவை புகார் செய்தோம், ஆனால் வீண்".

மற்றொரு பெண் தொழிலாளி (25) தூசி மற்றும் சிகிச்சையின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது ஏழு உறுப்பினர்கள் கொண்ட குடும்பம் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட இரண்டு அறை வீட்டிலேயே வாழ்கின்றது.

"இயந்திரத்தை விட வேகமாக இந்த கம்பனியில் வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாம் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த ஒடுக்குமுறைகளுடன் நாங்கள் வங்கிகளுக்கும் குத்தகை நிறுவனங்களுக்கும் எங்கள் கடனைத் தீர்க்க கொஞ்சம் பணத்தை நாங்கள் சம்பாதிக்கிறோம்", என அவர் மேலும் கூறினார்:

நீண்ட நேரம் நின்று பணி செய்ய வேண்டியிருப்பதால் அவருடைய சகோதரி அதே தொழிற்சாலையில் காலில் வீக்கத்தால் துன்பப்படுகிறார்.

"என் கணவர் ஒரு மகளுடன் கைவிட்டுவிட்டார். எனக்கு அரசாங்கத்திலிருந்து எந்த உதவியையும் கிடைக்கவில்லை. நாங்கள் 9 கிலோமீட்டர் தூரம் நகரத்துக்கும், 6 கி.மீ மருத்துவமனைக்கும் பயணம் செய்ய வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வெடுக்க நேரமில்லை. சில நேரங்களில், நாங்கள் மூன்று நாட்களுக்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறோம் என்றால், அது நம்மை பெரிதும் பாதிக்கும். ஒரு வருடம் 14 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை கிடைக்கும். ஒரு குடும்ப உறுப்பினரின் மரணச் சடங்குக்கு மட்டுமே நாங்கள் விடுமுறை எடுக்க முடியும்." அனுமதியில்லாமல் விடுமுறை எடுத்தால் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் மற்றும் முந்தைய சம்பளத்தையும் இழப்பர்.

ஒரு 23 வயதான பெண் தொழிலாளி முள்ளந்தண்டு வலி பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இருபது வயதில் வேலைக்கு சேர்ந்து ஏழே மாதங்களில் வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவரை வேலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இன்னமும் அவர் சிகிச்சையிலேயே இருக்கின்றார்.

ஒரு தொழிலாளி தான் உறுப்பினாரக இருக்கும் இலங்கை வர்த்தகர் சங்கத்தில் (CMUJ) தமது சிரமங்களைப் பற்றி புகார் தெரிவித்ததாக கூறினார். அவர்கள் பெயர்களுடன் எழுத்துபூர்வமாக புகார் தரும்படி கேட்டுக் கொண்டதால், தகவல் நிர்வாகத்திற்கு சென்றுவிடும் என அஞ்சி தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர். அப் பெண்மணி கூறினார்: நாங்கள் தொழிற்சங்கத்தை விட்டு வெளியேறினோம். குறைந்தபட்சம் எங்கள் துன்பம் உங்கள் மூலமாகவாவது வெளியே வர வேண்டும். "

சி.எம்.யு., தொழிலாளர்கள் போராட்டங்களை நசுக்குவதிலும் நிறுவனத்தின் நிர்வாகங்களுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதிலும் பேர் போனதாகும்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து தொழிலாளர்கள் போக்குவரத்துக்கு 23 பஸ்கள் மட்டுமே இருப்பதாக ஒரு பஸ் சாரதி எங்களிடம் தெரிவித்தார். போதுமான பஸ் இல்லாததால் 100-110 தொழிலாளர்கள் ஒரு பஸ்ஸில் பயணிக்கத் தள்ளப்பட்டுள்ளனர்.

வானவில் தொழிற்சாலை அமைக்கப்பட்ட பொன்னாலை கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: "நிறுவனத்தின் பல தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை விட்டு வெளியேறும்போது, பலர் வேலை தேடி வரிசையில் உள்ளனர். ஒரு குறுகிய காலத்தில் அதிக உற்பத்தி செய்ய பெரும் அழுத்தம் தினிக்கப்படுகிறது.

"இங்கு ஒரு தொழிற்சாலை இருந்தால் வாழ்க்கை உயரும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இப்போது மக்கள் நோயாளியாக இருக்கிறார்கள். போரின் பேரழிவிற்குப் பின்னர், இது இலாபத்திற்கான ஒரு உந்துதல் ஆகும். யுத்தத்தின் போது எல்லாவற்றையும் அவர்கள் அழித்துவிட்டார்கள், இப்போது ஏழைகள் வியாதியையும் வறுமையையும் எதிர்கொள்கின்றனர்.”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கமும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிர்வாகமும் வரி மற்றும் ஏனைய சலுகைகளை வழங்கி சர்வதேச மற்றும் உள்ளூர் முதலீட்டிற்கு அழைப்பு விடுப்பதிலேயே அக்கறை காட்டுகின்றன. நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ வர்க்கம், அந்நியச் செலாவணியை சம்பாதிப்பதைப் பற்றி மட்டுமே கவலை கொண்டுள்ளதுடன் மற்றும் ஆடை உற்பத்தி அதன் முக்கிய ஏற்றுமதி வருமானம் ஆகும். இது மொத்த ஏற்றுமதி வருவாயில் 42 சதவிகிதம் ஆகும் மற்றும் அதை மேலும் அதிகரிக்கும் வகையில் போட்டியிடுகிறது.