ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

උතුරේ ජනයා යුද්ධයෙන් මරනයට පත්වූවන් සිහිපත් කරයි

இலங்கை: வடக்கில் போரினால் கொல்லப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்

By our correspondent
28 May 2018

இலங்கையின் வடக்கில் கடந்த மே 18 அன்று, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் முடிவின் போது கொல்லப்பட்ட மக்களின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 2009 மே 18 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில், முன்நாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் புலிகள் இராணுவ ரீதியில் அழிக்கப்பட்டதுடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. யுத்தத்தின் இறுதி நாட்களில் ஒரு சிறிய வலையத்துக்குள் சிக்குண்டிருந்த நூறாயிரக்கணக்கான மக்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 40,000க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை கூறுகின்றது.

முள்ளிவாய்க்காலில் நடந்த நினைவு நாள் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், முன்னாள் புலி போராளிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுமாக கிட்டத்தட்ட 2,000 பேர் பங்குபற்றி தமது கவலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். நினைவு நாளுக்காக வடக்கில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்றது. பிரதான சந்திகளிலும் சிறிய நகரங்களிலும் அஞ்சலி பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு செல்லும் வழிகளில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

முள்ளிவாய்க்கால் நிகழ்வை வட மாகாண சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சிவில் அமைப்புகளும் ஏற்பாடு செய்திருந்தன. கிழக்கு மாகாணத்திலும் பல இடங்களில் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தம் கோரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இறுதித் தாக்குதலில் எஞ்சிய கிட்டத்தட்ட 300,000 பேர் கூண்டோடு கைது செய்யப்பட்டு, முட்கம்பி வேலிகளால் சுற்றி அடைக்கப்பட்ட சிறைக்கு ஒப்பான இராணுவத்தால் நடத்தப்பட்ட முகாம்களில் எதுவிதமான அடிப்படை வசதிகளுமற்று தடுத்துவைக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான புலி போராளிகளும், புலி போராளிள் என சந்தேகிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளும் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டனர். சிலர் சரணடைந்தனர். கைது செய்யப்பட்ட மற்றும் சரண்டைந்தவர்களில் நூற்றுக்கணக்கானோர் பற்றிய தகவல்கள் இன்னமும் கிடைக்காததால் அவர்கள் “காணாமல் போனவர்களாக” கருதப்படுகின்றனர்.

தமது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது இடைவிடாத தாக்குதல் தொடுக்கும் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு எதிர்க் கட்சி ஆசனத்தில் இருந்து ஆதவளிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் மீது வளர்ச்சியடைந்து வரும் வெகுஜன எதிர்ப்பின் அடையாளமாக, இந்த நிகழ்வில் தமிழ் அரசியல்வாதிகள் பங்குபற்றுவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் எதிர்ப்பை காட்டியது. ஆயினும் அந்த முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே தமிழ் தேசியவாத அரசியலைப் பின்பற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இறுதியில் ஏற்பாட்டாளர்களுக்கு அடிபணிந்து நிகழ்வில் பங்குபற்றியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இராஜபக்ஷவின் ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராக “நல்லாட்சி” அமைப்பதாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதாகவும் வாக்குறுதியளித்தே 2015ல் ஆட்சிக்கு வந்தது. இந்த வாக்குறுதிகளை தமிழ் மக்களை நம்ப வைப்பதன் மூலம் வாஷங்டன் திட்டமிட்ட ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் கூட்டமைப்பு முழுமையாக ஒத்துழைத்தது.

அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. போர் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகளாகியும் இன்னமும் தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளதுடன், பொது மக்களிடம் கையளிக்கப்பட்ட பகுதிகளிலும் இராணுவம் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இராணுவத்துக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையும், பௌத்த விகாரைகள் மற்றும் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வடக்கை சிங்களமயமாக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் சில வருடங்களின் பின்னர் வீடுகளும், உட்கட்டமைப்பும் வாழ்வாதரமும் தரைமட்டமாக்கப்பட்ட பகுதியில் மீள் குடியேற்றம் என்ற பெயரில் மீண்டும் அவர்களது சொந்த ஊர்களில் கொண்டு வந்து கொட்டப்பட்டனர். இன்னமும் பல குடும்பங்கள் அடிப்படை வசதிகளற்ற பாதி வீடுகளிலும் கொட்டகைகளிலும் வாழ்ந்து வருகின்றன.

ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்குமாறும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருமாறும் கோரி பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலை வாய்ப்பின்மை காரணமாக “புனர்வாழ்வளிக்கப்பட்ட” முன்னாள் புலி போராளிகள் இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையில் இணைந்து அங்குள்ள பண்ணைகளில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளில் யுவதிகளும் இளைஞர்களும் மோசமாக சுரண்டப்படுகின்றனர். இலங்கையில் வறுமையில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைதீவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் தமிழ் கூட்டமைப்பின் ஒரு தலைவரும் வட மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் மட்டுமே உரையாற்றினார்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியான விக்னேஸ்வரன் தமிழ் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையினதும் ஆலோசகராவார். தமிழ் கூட்டமைப்பு கொழும்பு அரசாங்கத்துடன் விளைபயனற்ற உறவு வைத்துள்ளதாக கருதும் சக்திகள், விக்னேஸ்வரனை ஒரு மாற்றுத் தலைமையாக கருதுகின்றன.

மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்தும் படுகொலை யுத்தங்களையும் சீனா, வடகொரியா மற்றும் ரஷ்யாவுக்கும் எதிராக ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் யுத்த ஆத்திரமூட்டல்களையும் மௌனமாக ஆதரிக்கும் தமிழ் கட்சிகள், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் வாஷிங்டனுடன் கொண்டிருக்கும் மூலோபாய உறவுகளுக்கும் உடந்தையாக இருக்கின்றன.

விக்னேஸ்வரன், “சர்வதேச சமூகம்” இந்த இனப்படுகொலைகளுக்கு “நீதி” வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மண்ணில் பொறுமை காத்து நிற்கின்றனர், என்றார். “சர்வதேச சமூகம்” என விக்னேஸ்வரன் கூறுவது ஏகாதிபத்திய சக்திகளையே ஆகும்.

“மனித உரிமைகளைப் பாதுகாத்தல்” என்ற சாக்குப் போக்கின் கீழ், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கில் பாய்ந்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மூலோபாய தேவைகளுக்காக மேற்கொள்ளும் கொடூரமான நடவடிக்கைகள் உலகத்தின் கண் முன்னால் மேலும் மேலும் அம்பலப்பட்டு வரும் நிலையிலும் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறுவது, இந்த அரசியல் பொறிக்குள் வடக்கு தமிழ் மக்களையும் சிக்க வைப்பதற்கே ஆகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்கள் பேரவையும் முயற்சிப்பது, ஏகாதிபத்திய சக்திகளின் ஒத்துழைப்புடன் கொழும்பு அரசாங்கத்துடனான ஒரு அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கை மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களின் நலன்களை பாதுகாக்கும் ஏதாவதொரு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கே ஆகும். இதற்காகவே தமிழ் மக்களின் எதிர்ப்புகளும் துன்பங்களும் சுரண்டிக்கொள்ளப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் வளரும் எதிர்ப்பானது, இப்போது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் அமுல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகள் மீது நாடு பூராவும் அதிகரித்துவரும் எதிர்ப்புடன் பிணைந்துள்ளது. கடந்த பல மாதங்களாக மின்சாரம், பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள், தபால், தொலைத் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளிலும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி முன்னெடுத்து வரும் போராட்டங்களில் வடக்கு கிழக்கு தொழிலாளர்களும் பங்கெடுத்து வருகின்றனர்.

இன வேறுபாடுகளுக்கு அப்பாலான இந்த ஐக்கியப்பட்ட போராட்டங்கள் தம்மால் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட அமெரிக்கச்-சார்பு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு ஆபத்தாக அமைந்து விடக்கூடும் என எண்ணும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் பேரவையும், தமிழ் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களை தேசியவாத வழியில் தனிமைப்படுத்தி அந்த வர்க்க ஐக்கியத்தை தகர்த்துவிடுவதற்கே முயற்சிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் பங்குபற்றிய தமிழ் கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகள் எவையும் தமிழ் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக முன்நின்றவை அல்ல. யுத்தம் முடியும் வரை, இலங்கை இராணுவத்தின் துணைக் குழுவாக செயற்பட்டு, ஆள் கடத்தல்கள், காணாமல் ஆக்குதல்கள் மற்றும் படுகொலைகளிலும் ஈடுபட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) உறுப்பினர்கள் உட்பட பல முன்னால் தமிழ் ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் இங்கு பங்குபற்றியிருந்தனர். இந்த ஆயுதக் குழுக்கள் “இந்திய அமைதிகாக்கும் படை” வடக்கு கிழக்கில் அரங்கேற்றிய படுகொலைகளுடன் உடந்தையாக செயற்பட்டவை.

இந்தக் கட்சிகள் அனைத்தும் தமிழ் முதலாளித்துவ நலன்களைத் தக்கவைத்துக்கொள்ள கொழும்பு ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவுடனும் கூட்டுச் சேர தயாராக இருப்பவை ஆகும்.

எவ்வாறெனினும், நினைவு நிகழ்வில் பங்குபற்றிய சிலர் தமிழ் முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியங்களிடம் கோரும் “நீதி” சம்பந்தமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து வந்திருந்த ஒருவர் பின்வருமாறு கூறினார்: “அரசியல்வாதிகளின் கலப்பு இல்லாத நிகழ்வு என்றுதானே கூறினார்கள்? விக்னேஸ்வரன் அரசியல்வாதிதானே? அவர் இங்கே முன்நிற்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவே தெரிகிறது. அவர்கள் சர்வதேச சமூகத்துக்கே திரும்ப திரும்ப வேண்டுகோள் விடுக்கின்றனர். ஆனால் யுத்தத்துக்கு முழுமையாக ஒத்துழைத்தது சர்வதேச சமூகம் தானே?”