ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The death of Ed Sadlowski and the demise of trade union reformism

எட் சட்லோவ்ஸ்கியின் மரணமும், தொழிற்சங்க சீர்திருத்தவாதத்தின் முடிவும்

Shannon Jones
19 June 2018

1970 களில் ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர் சங்கத் தலைமையை அகற்றுவதற்காக, ஓர் இயக்கத்தை வழிநடத்திய எட் சட்லோவ்ஸ்கி (Ed Sadlowski) ஜூன் 10 அன்று காலமானார். இந்த தலைமுறை தொழிலாளர்களுக்கு பெரிதும் அறியப்படாதவர் என்றாலும், சட்லோவ்ஸ்கி அமெரிக்க தொழிற்சங்கங்களில் ஒரு சிறிய காலத்திற்கு ஆனால் முக்கிய பாத்திரம் வகித்திருந்தார். பெப்ரவரி 1977 இல் தொழிற்சங்க தலைவருக்கான தேர்தலில், ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர் சங்க அதிகாரத்துவத்தால் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் லாய்ட் மெக்பிரைட் (Lloyd McBride) பதவிக்கு வருவதை தடுப்பதற்கான அவரது முயற்சி, சாமானிய தொழிலாளர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்ததுடன், ஊடகங்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்திருந்தது.

“எஃகுத்துறை தொழிலாளர்களின் திருப்பித்தாக்கும்" இயக்கத்திற்கு (Steelworkers Fightback) தலைமை கொடுத்த சட்லோவ்ஸ்கி, நிர்வாகத்திற்கு ஆதரவான USW இன் தலைமையை எதிர்ப்பதில் ஒரு தீவிர போர்குணம் மிக்க ஒருவராக தன்னை முன்னிறுத்தினார். சட்லோவ்ஸ்கி மற்றும் மெக்பிரைட் க்கு இடையிலான காரசார விவாதங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன, "Meet the Press” செய்தி நிகழ்ச்சியின் ஒரு அமர்வில் தேசியளவில் ஒளிபரப்பப்பட்டதும் இதில் உள்ளடங்கும்.

தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான அதிகரித்த தாக்குதல்கள், தொழிலாளர் போர்குணத்தின் அதிகரித்த ஒரு பேரலை, அத்துடன் சேர்ந்து வாகனத்துறை, சுரங்கத்துறை, துறைமுகங்கள் மற்றும் அடிப்படை தொழில்துறை எங்கிலும் பாரிய வேலைநிறுத்தங்கள் நடந்து வந்த சூழலில்தான் சட்லோவ்ஸ்கி-மெக்பிரைட் மோதல் நடந்தது. அக்காலக்கட்டத்தில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஊழல் மற்றும் துரோகத்தனமான தொழிற்சங்க தலைமை மீது கோபம் கொண்டிருந்தாலும் கூட, அதற்கிடையே அவற்றின் மீது விசுவாசமும் கொண்டிருந்தனர், மேலும் இந்த அமைப்புகளைத் தங்களின் நலன்களை முன்னெடுக்கக்கூடிய கருவிகளாக அவர்கள் கண்டனர். அப்போது, கனடாவைச் சேர்ந்த கிளைகளுடன், 1.5 மில்லியன் உறுப்பினர்களுடன், USW தான் மிகப்பெரிய அமெரிக்க தொழிற்சங்கமாக இருந்தது.

பல தொழில்துறைகளில் நிறுவனத்திற்கு ஆதரவான, ஜனநாயக விரோத தொழிற்சங்க தலைமைகளுக்கு எதிரான இயக்கங்கள் மேலெழுந்தன, நிலக்கரி சுரங்க தொழிலாளர்களிடையே அர்னோல்ட் மில்லர் தலைமையில் ஜனநாயகத்திற்கான சுரங்க தொழிலாளர்கள் (Miners for Democracy) அமைப்பு மற்றும் கனரக வண்டி ஓட்டுனர்கள் மத்தியில் Pete Camarata தலைமையில் Teamsters for a Democratic Union அமைப்பு உருவாக்கப்பட்டமை ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.

1973 இல் USW சங்கம் பிரதான எஃகுத்துறை நிறுவனங்களுடன் பரிசோதனைரீதியிலான பேரம்பேசும் உடன்படிக்கையை (Experimental Negotiating Agreement – ENA) ஏற்றுக் கொண்டதன் மீது சட்லோவ்ஸ்கி 1977 பிரச்சாரத்தில் ஒரு பிரச்சினையைக் கொண்டு வந்தார், அந்த உடன்படிக்கை வேலைநிறுத்த உரிமையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்வதற்கு கட்டிப் போடுவதற்கு அனுகூலமாக விட்டுக் கொடுத்திருந்தது. அவர் கூட்டு பேரம்பேசல் உடன்படிக்கைகளுக்கும் மற்றும் எந்தவொரு சந்தா உயர்வுக்கும் சாமானிய தொழிலாளர்களிடம் இருந்து ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சட்லோவ்ஸ்கி அதற்கு கணிசமான ஆதரவைத் திரட்டியதுடன், பெரிய எஃகு ஆலைகளில் அதை நடைமுறைப்படுத்தி இருந்தபோதும், 249,000 க்கு 328,000 என்ற வித்தியாசத்தில் தேர்தலில் தோல்வியடைந்தார், அதைத் தொடர்ந்து அவரது "எஃகுத்துறை தொழிலாளர்களின் திருப்பித்தாக்கும்" இயக்கம் உருக்குலைந்தது. பின்னர் USW அதிகாரத்துவத்தில் கீழ் மட்ட பதவி நியமனம் ஒன்றை ஏற்றுக் கொண்ட சட்லோவ்ஸ்கி, அதன் பின்னர் ஒருபோதும் தொழிற்சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பதவிக்குப் போட்டியிடவில்லை.

சட்லோவ்ஸ்கி, 1982 இல், சிகாகோவின் அமெரிக்க எஃகுத்துறை தெற்கு பணி ஆலையில் வேலையிட விதிமுறை விட்டுக்கொடுப்புகளைத் திணிக்கும் ஓர் உடன்படிக்கையை ஆதரித்தார். பின்னர் அவர், 100 ஆண்டு காலமாக அவ்விடத்தில் எஃகு உற்பத்தி செய்து வந்த அந்த தெற்கு வேலையிடத்தை மூடுவதற்குத் தலைமை வகித்தார். 1993 ஓய்வு பெற்ற அவர், இலினோய் தொழிலாளர் தொடர்பு ஆணையத்தில் ஒரு பதவியில் நியமிக்கப்பட்டார்.

“எஃகுத்துறை தொழிலாளர்களின் திருப்பித்தாக்கும்" இயக்கத்தின் பொறிவானது, மற்ற சீர்திருத்த இயக்கங்களின் தலைவிதியையும் சமாந்தரமாக கொண்டிருந்தது. இவற்றில் எதுவுமே எந்தவொரு தீவிர சீர்திருத்தங்களையும் எட்ட முடியவில்லை. அவை முதலாளித்துவ அமைப்புமுறையைச் சவால் செய்யவில்லை அல்லது தொழிற்சங்கங்கள் ஜனநாயக கட்சிக்கு அடிபணிவதை எதிர்க்கவில்லை. 1980 களில் ஓர் ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடியின் முன்னால், தொழிற்சங்கங்கள் பெருநிறுவன வேலைத்திட்டமான தொழிற்சங்க-நிர்வாக "பங்காண்மை" என்பதை ஏற்றுக் கொண்டு, எந்தவொரு மிச்சசொச்ச வர்க்க போராட்டத்தை நிராகரித்ததுடன், கடந்த தலைமுறைகளில் தொழிலாளர்கள் வென்றெடுத்த ஆதாயங்களைத் துடைத்தழிப்பதில் பங்கெடுத்தன.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சிக்கு (SEP) முன்னோடி அமைப்பான வேர்க்கஸ் லீக் (Workers League) 1977 USW தேர்தலில் சட்லோவ்ஸ்கிக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தது. அதேநேரத்தில், வேர்க்கஸ் லீக் அவரது வேலைதிட்டம் போதுமானளவுக்கு முழுமையாக இல்லை என்பதை வலியுறுத்தியதுடன், ஜனநாயகக் கட்சிக்கான அவரது ஆதரவை நிராகரிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுத்தது, “ஜனநாயகக் கட்சியினருடன் முறித்துக் கொள்ள மறுப்பதென்பது தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை ஒப்படைப்பதையும், தொழிலாள வர்க்கத்தின் மீது போலிஸ் வேலைபார்க்கும் அமைப்புகளாக தொழிற்சங்கங்கள் மாற்றப்படுவதையும் அர்த்தப்படுத்தும்" என்று கூர்மையாக எச்சரித்தது.

அதேநேரத்தில் வேர்க்கஸ் லீக் தொழிலாள வர்க்கத்தின் போர்குணமிக்க இயக்கத்தை ஊக்குவிக்க முனைந்ததுடன், தொழிற்சங்க அதிகாரத்தைத் தூக்கியெறியவும் மற்றும் தொழிற்சங்கங்களில் ஒரு புதிய புரட்சிகர மார்க்சிச தலைமையைக் கட்டமைக்கவும் அழைப்பு விடுத்து, நனவுபூர்வமான அரசியல் மற்றும் புரட்சிகர முன்னோக்கை தொழிலாள வர்க்கத்திற்கு புகட்டியது. இது, ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொள்வதற்கான கோரிக்கையுடனும், தொழிற்சங்கங்களை அடிப்படையாக கொண்ட, சோசலிச கொள்கைகளுக்குப் பொறுப்பேற்ற, ஒரு தொழிற் கட்சியை உருவாக்குவதற்கான கோரிக்கையுடனும் இணைந்திருந்தது. ஆனால் தொழிற்சங்கங்கள் பெருநிறுவனங்களின் மற்றும் அரசின் நேரடி ஆயுதங்களாக பரிணமித்து அவை வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும், வேலைகள் மற்றும் கூலிகளில் வெட்டுக்களைத் திணிக்கவும், வேலையிட நிலைமைகளை அழிக்கவும் நோக்கம் கொண்டதும், இந்த தந்திரோபாயம் அதன் நிலைக்கும் தன்மையை இழந்தது.

பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியின் வளர்ச்சி மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தினது வீழ்ச்சி மற்றும் நெருக்கடிக்கு, தொழிற்சங்கங்கள், மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளுக்கான போராட்டத்தையும் கூட கைவிட்டதன் மூலமாக, அவற்றின் தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் எதிர்வினையாற்றின. தேசியவாத அடிப்படையிலான தொழிற்சங்கங்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான பேரினவாத தாக்குதல்களை ஊக்குவித்தமை உள்ளடங்கலாக, தேசிய தொழில்துறை அதன் வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு எதிராக வளர்வதற்காக அமெரிக்க பெருவணிகங்களுடன் முன்பினும் அதிக நேரடியாக அணிசேர்ந்தன.

1978 இல், ஜனநாயகக் கட்சியின் ஜிம்மி கார்ட்டர் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிராக டாஃப்ட்-ஹார்ட்லி (Taft-Hartley) வேலைநிறுத்த உடைப்பு சட்டத்தைப் பயன்படுத்தி, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு தாக்குதலைத் தொடுத்தார். கார்ட்டர், 1979 இல், அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவராக போல் வோல்க்கரை நியமித்தார். தொழில்துறையில் குறைந்த இலாபமீட்டும் பிரிவுகள் அவற்றின் திவால்நிலைமையை அறிவிப்பதற்கான ஒரு திட்டமிட்ட நகர்வில், வோல்க்கர் வட்டி விகிதங்களை உயர்த்தினார். அதன் விளைவுகளில் ஒன்றாக, உயிர்பிழைக்க வேண்டுமானால் அரசு கடனுக்கு உத்தரவாதமளிக்க வேண்டியிருந்த அமெரிக்கா கார் உற்பத்தி நிறுவனம் கிறைஸ்லர் திவால்நிலைமையை அறிவித்தது. முன்னொருபோதும் இல்லாத ஒரு நகர்வில், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் (UAW) சம்பள குறைப்புகளுக்கு உடன்பட்டதோடு, UAW தலைவர் டக்ளஸ் ஃபிரேசர், நிறுவனத்தின் இயக்குனர் குழுவுக்குள் சென்றார்.

1980 இல் ரோனால்ட் ரீகன் தேர்வானதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. 1981 இல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த விமான போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டாளர்களை ரீகன் வேலையிலிருந்து நீக்கியமை முன்னொருபோதும் இல்லாத வகையில் தொழிற்சங்கங்களுக்கு எதிரான அலையைக் கட்டவிழ்த்துவிட்டது. தொழிற்சங்கங்கள் விடையிறுப்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அமெரிக்க தொழிற்சங்க தலைவர்கள் உத்தரவாதமளித்த பின்னர்தான், ரீகன் விமான போக்குவரத்துறை கட்டுப்பாட்டாளர்களை வேலையிலிருந்தே நீக்கினார்.

1980 களின் போது, தொழிற்சங்கங்கள் Phelps Dodge தாமிர சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் இருந்து, Greyhound பேருந்து ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம் வரையில், Wheeling Pittsburgh எஃகுத்துறை தொழிலாளர்கள், Hormel மாமிச பொட்டலங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வரையில், ஒன்று மாற்றி ஒன்றாக வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தி தோற்கடிக்க செயல்பட்டன. வேர்க்கஸ் லீக் (Workers League) இந்த அனைத்து போராட்டங்களிலும் தலையீடு செய்ததுடன், தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் செய்யப்பட்ட நாசவேலைகளுக்கு எதிரான எதிர்ப்பின் மையமாக மாறியது.

இக்காலக்கட்டம் முழுவதிலும், வாகனத்துறை, எஃகுத்துறை மற்றும் சுரங்கத்துறையில் உள்ள தொழிற்சங்கங்களின் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் மில்லியன் கணக்கான வேலைகள் நீக்கப்பட்டன. சந்தா வருவாய் இழப்பை ஈடுகட்ட, தொழிற்சங்கங்கள், நிர்வாகத்திற்கும் சங்கங்களுக்கும் இடையிலான பல்வேறு கூட்டு கமிட்டிகளை அமைத்தும், தொழிலாளர்களின் கூலிகள் வெட்டப்பட்டு ஆலைகள் மூடப்பட்ட நிலையிலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் வருவாயைப் பெருக்க கையூட்டல்கள் வழங்கப்படுவது ஒரு அமைப்புமுறை வடிவமாக்கப்பட்டு, அவை நிறுவனங்களுடன் ஒரு நேரடி பங்காண்மைக்குள் நுழைந்தன.

இது, USW சங்கத்தில், சங்க அதிகாரத்துவத்தின் விகாரமான வடிவத்தை எடுத்தது, அது எஃகுத்துறை தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் எஃகுத்துறை தொழில்துறையை மறுகட்டமைப்பு செய்ய, இப்போது ட்ரம்பின் வர்த்தகத்துறை செயலராக இருக்கும் வில்பர் ரோஸ் (Wilbur Ross) போன்ற சொத்துக்களை பறித்தெடுப்பவர்களுடன் செயல்பட்டது. அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுடன் UAW பல்வேறு கூட்டு "பயிற்சி மையங்களை" அமைத்தது, இவை மில்லியன் கணக்கான பெருநிறுவன பணம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கரங்களுக்குள் பாய்வதற்கு வாய்காலாக சேவையாற்றின.

தொழிற்சங்கங்களைச் சீர்திருத்துவதற்கு இனி எந்த வாய்ப்பும் இல்லை என்பதையும், இந்த அமைப்புகள் இனி தொழிலாள வர்க்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்புக்கான அமைப்புகளாக கூட சேவையாற்றாது, மாறாக பகிரங்கமாகவும் வெட்கமின்றியும் பெருநிறுவன நிர்வாகத்தின் கையாட்களாகவே சேவையாற்றும் என்பதையும் 1980 களின் அனுபவம் எடுத்துக்காட்டியது. கடந்த 40 ஆண்டுகளாக, அதுவும் சமூக சமத்துவமின்மை வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாத மட்டங்களை எட்டியிருக்கையில், தொழிற்சங்கங்கள் நடைமுறையளவில் வேலைநிறுத்தங்களை அல்லது பாரிய எதிர்ப்பின் எந்தவொரு வடிவத்தையும் அழித்து விட்டுள்ளன.

அமெரிக்காவில் தொழிற்சங்கங்களின் பரிணாமமானது, அனைத்து தேசியவாத தொழிலாளர் அமைப்புகளினதும் மற்றும் அதிகாரத்துவங்களினதும் மாற்றத்தை உள்ளடக்கிய, ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்கின் பாகமாக இருந்தது, 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் முழுமையாக இது எடுத்துக்காட்டப்பட்டது. இக்காலக்கட்டத்தின் அனுபவங்களைக் குறித்த ஓர் இருப்புநிலைக் கணக்கை வரைந்து, வேர்க்கஸ் லீக்கின் அப்போதைய தேசிய செயலர் டேவிட் நோர்த் ஜனவரி 1992 இல் பின்வருமாறு எழுதினார்:

 

தொழிற்சங்கங்களும், கட்சிகளும் முந்தைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட அரசுகளுமே கூட ஏகாதிபத்தியத்தின் நேரடி கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன என்ற உண்மையை உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ளது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வர்க்க போராட்டத்திற்கு "மத்தியஸ்தம்" செய்து, வர்க்கங்களுக்கு இடையே இடைத்தடையாக பாத்திரம் வகித்த நாட்கள் எல்லாம் முடிந்துவிட்டன. அதிகாரத்துவவாதிகள் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களைப் பொதுவாக காட்டிக்கொடுத்த போதினும், இதுவரையில் அவர்கள், ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அர்த்தத்தில், தொழிலாள வர்க்கத்தின் நாளாந்த நடைமுறை தேவைகளுக்கு சேவையாற்றினர்; மேலும், இந்தளவில்தான், தொழிலாள வர்க்க அமைப்புகளின் தலைவர்களாக அவர்களின் இருப்பு "நியாயப்படுத்தப்பட்டது." அந்த காலகட்டமும் முடிந்துவிட்டது. அதிகாரத்துவம் இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு அதுபோன்ற சுயாதீனமான பாத்திரமும் வகிக்க முடியாது. ("சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் முடிவு”)

 

இத்தகைய மாற்றங்களின் அடிப்படையில், வேர்க்கஸ் லீக்கும் அதன் சர்வதேச சக-சிந்தனையாளர்களும், தொழிற்சங்கங்கள் இனியும் தொழிலாளர்களின் அமைப்புகள் இல்லை, தொழிலாளர்கள் புதிய சுயாதீனமான போராட்ட அமைப்புகளைக் கட்டமைக்க வேண்டியுள்ளது என்று தீர்மானித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி அணிதிரட்டவும், அவர்களின் போராட்டங்களை நாடெங்கிலுமான மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களுடன் இணைக்கவும், தொழிற்சாலைகள் மற்றும் வேலையிடங்களில் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களைக் கட்டமைக்க அழைப்பு விடுக்கிறது.

அனுமானித்தவாறே, சட்லோவ்ஸ்கியின் மரணம், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியை நோக்கி நோக்குநிலை கொண்டுள்ள பல்வேறு போலி-இடது குழுக்களிடம் இருந்து கண்கூடான இரங்கல் செய்திகளைப் பெற்றிருந்தது. இந்த அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இன்னமும் தொழிலாள வர்க்க அமைப்புகளாகத்தான் இருக்கின்றன என்று கூறி, தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக் கொள்ள வேண்டுமென்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) அழைப்பைக் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த போலி-இடது குழுக்கள் வெளியிலிருந்து அதிகாரத்துவத்தை மட்டும் ஆதரிக்கவில்லை, அவை தங்களுக்கு பாரியளவில் கிடைக்கும் நல்ல ஊதியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, பெரும்பாலும் அவற்றின் பதவிகளிலும் நுழைந்துள்ளன.

ஆனால், தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு அனுபவமும் அவசரமாக தொழிற்சாலைகளிலும் வேலையிடங்களிலும் சுயாதீனமான குழுக்களை அமைக்க வேண்டியதை எடுத்துக்காட்டுகின்றன. இந்தாண்டின் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களில், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் விரோதத்தையும் எதிர்கொண்டனர், அவை அவர்களின் போராட்டங்களைத் தனிமைப்படுத்தி, முடிவுக்குக் கொண்டு வரச் செயல்பட்டன. நிறுவனத்திற்கு சார்பான ஒப்பந்தங்களுக்கு அழுத்தமளிப்பதற்கு பிரதிபலனாக இலஞ்சம் வாங்கி, UAW சங்கம், வாகனத்துறை நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது. தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு தொழில்துறையிலும் ஒவ்வொரு நாட்டிலும் அடிப்படையில் இந்த பாத்திரமே வகிக்கின்றன.

அரசு மற்றும் நிர்வாகத்தினது தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வழி தேடி வரும் தொழிலாளர்கள் இத்தகைய அனுபவங்களைப் பரிசீலிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு அவர்களின் நலன்களுக்காக போராடும் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒரு பொதுவான எதிர்-தாக்குதலில் அவர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தும் புதிய அமைப்புகள் அவசியமாகும். ட்ரொட்ஸ்கி "இடைமருவு வேலைத்திட்டத்தில் எழுதியவாறு, ஆலைக் குழுக்களை அமைப்பதானது தொழிற்சாலைகளில் "நடைமுறையளவில் இரட்டை அதிகாரத்தை" தோற்றுவித்து, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ எஜமானர்களுக்கு எதிராக நிலைநிறுத்தும். இத்தகைய குழுக்கள் சாத்தியமானளவுக்கு தொழிலாளர்களையும், இளைஞர்களையும், வேலைவாய்ப்பற்றோரையும் பரந்தளவில் அணித்திரட்ட முனையும்.

இது ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் மீது தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அணித்திரட்டுவதுடன் பிணைந்திருக்க வேண்டும். ஆசிரியர்களின் சமீபத்திய வேலைநிறுத்தங்கள் மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டியுள்ளதைப் போல, தங்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான தொழிலாளர்களின் எந்தவொரு முயற்சியும் அரசிடமிருந்தும், இரண்டு பெருவணிக கட்சிகளிடம் இருந்தும், குடியரசுக் கட்சிக்கு குறைவின்றி ஜனநாயகக் கட்சியிடமிருந்தும் உடனடியாக எதிர்ப்பைக் கொண்டு வருகிறது. இது முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தொழிலாள வர்க்கம் அணிதிரள வேண்டியதன் அவசியத்தை உயர்த்துகிறது.

இந்த முன்னோக்கு குறித்து விவாதிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது.