ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French rail workers protest privatization plans

தனியார்மயமாக்கத் திட்டங்களுக்கு எதிராக பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

By V. Gnana and Senthooran Ravee 
31 May 2018

பிரெஞ்சு தேசிய இரயில்வே (SNCF) இன் தனியார்மயமாக்கம் தொடர்பாக பிரதமர் எட்வார்ட் பிலிப்புக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு மத்தியிலும் SNCF சீர்திருத்தத்திற்கான அரசாங்கத்தின் மசோதாவை செனட் ஆராயத் தொடங்கிய நிலையிலும், செவ்வாய்கிழமையன்று, இரயில்வே தொழிலாளர்கள் பாரிஸில் வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் தொழிற்சங்கப் பதாகைகளின் கீழாக நடைபெற்ற போதிலும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் நிலைப்பாடுகளுக்கும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களது அபிலாசைகளுக்கும் இடையில் ஒரு அரசியல் பெரும்பிளவு நிலவுகிறது. பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள், அவை வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கக் கூடும் என்பதை ஏற்கனவே சூசகம் செய்திருக்கின்றன. இரயில்வே தொழிலாளர்களது ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது ஆலோசனை வைக்கப்படும் தாக்குதல், SNCF இன் தனியார்மயமாக்கம் மற்றும் இரயில்வேயை தனியார் போட்டிக்காய் திறந்துவிடுவது ஆகியவை பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டவை என பிலிப் வலியுறுத்தி வந்திருக்கிற நிலையிலும், அவருடனான பேச்சுவார்த்தைகளை அத்தனை தொழிற்சங்கங்களுமே ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

SNCF இன் “சீர்திருத்த”த்திற்கு எதிராக நிறுவனத்தின் ஒரு கருத்துவாக்கெடுப்பில் பெருவாரியாக 95 சதவீத எதிர்ப்பு வாக்குகளை அளித்திருக்கும் இரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்கின்ற அதேநேரத்தில், ஏர் பிரான்ஸ், மருத்துவமனைகள் மற்றும் பொதுத் துறையிலும் தொழிற்சங்கங்கள் வெவ்வேறு காலஇடைவெளியில் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்கின்றன. இந்த வெவ்வேறு வேலைநிறுத்தப் போராட்டங்களை ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை பதவியிறக்குகின்ற ஒரு அரசியல் போராட்டத்திற்குள் ஐக்கியப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான வகையில் ஒழுங்கமைக்கப்படுகின்ற நடவடிக்கைக் கமிட்டிகளை உருவாக்க வேண்டும் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பை இது சரியென நிரூபணம் செய்கிறது. ஆர்ப்பாட்டம் செய்த இரயில்வே தொழிலாளர்களில் உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசியவர்கள் இந்த முன்னோக்கிற்கு அவர்களது அனுதாபத்தை வெளிப்படுத்தினர்.


பாரிஸ் ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர்கள் தமது சொந்த முழக்க அட்டைகளைக் கொண்டுவந்திருந்தனர்

பாரிஸ் ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றிருந்த WSWS செய்தியாளர்கள், Villeneuve-St-Georges நிலையத்தில் வேலை செய்கின்ற François என்ற ஒரு இரயில்வே தொழிலாளியிடம் பேசினர். ”முதலாவதாய், SNCF பொது-சந்தை (publicly-traded) நிறுவனமாக ஆகக் கூடாது” என்று இரயில்வே தொழிலாளர்கள் கோருகின்றனர் என்றார் அவர். அவர் தொடர்ந்தார்: “இரண்டாவதாக, நாங்கள் இரயில்வே தொழிலாளர்களது சிறப்புசட்டப்பிரிவை பாதுகாக்க விரும்புகிறோம். அதேபோல SNCF இன் கடன்கள் இரயில்வே தொழிலாளர்களது முதுகின் மேல் சுமத்தப்படக் கூடாது.... சரக்கு சேவைகள் மீண்டும் தேசியமயமாக்கப்படுவது, சிறு கிராமப்புற பாதைகள் தனியார் போட்டிக்குத் திறந்து விடப்படாமல் இருப்பது ஆகியவை இருக்கின்றன. ஆகவே இன்று இது ஒரு சமூக இயக்கமாகும், ஏனென்றால் சீர்திருத்த மசோதா செனட்டுக்குப் போகிறது, ஆகவே எங்களது நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு கூடுதலான சமூக-நோக்குநிலை கொண்ட கொள்கைக்காக நாங்கள் நிற்கிறோம் என்பதைக் காட்டுவதற்கே நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.”

பிலிப்புக்கும் SNCF இன் கடன்களின் ஒரு பகுதியை அரசு எடுத்துக் கொள்வது குறித்து மட்டுமே பேசுகிற தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை என்பதை François வெளிப்படுத்தினார்: “பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தச் செல்கின்ற தொழிற்சங்கங்களின் கொள்கைகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறது, ஏனென்றால் குறைந்தபட்சம் எட்டு கோரிக்கைகளை நாங்கள் கொண்டிருக்கும் சமயத்தில் அவை அவற்றில் ஒன்றே ஒன்றை மட்டுமே விவாதித்து வருகின்றன.”

மக்ரோனின் ஒட்டுமொத்த திட்டநிரலின் மீதுமான தனது வெறுப்பை அவர் வலியுறுத்தினார். “மக்ரோனின் கொள்கை மூர்க்கத்தனமாக இருக்கிறது” என்றார் அவர். “எல்லா இடங்களிலும் பணம் சிக்கனப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார், எல்லாமே இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் பொதுச் சேவைகள் பணம் சம்பாதிப்பதற்கானவை அல்ல, மாறாக ஒரு சேவை வழங்குவதற்கானவை. அது வரிகொடுப்பவர்களின் பணத்தில் நடத்தப்படுவது, ஆகவே அது அத்தனை இலாபகரமாக இருப்பதற்கு அவசியமில்லை. ஆனால் நாளை இது தனியார்மயமாக்கப்பட்டால், தனியார் முதலீட்டாளர்கள் சேவை செய்வதற்காக வருவார்கள் என்றெல்லாம் எந்தப் பிரமைகளுக்கும் இடமேயில்லை, அவர்கள் இலாபம் சம்பாதிப்பதற்குத் தான் வருவார்கள். ஆகவே நிறைய விடயங்களில் நாம் இழப்பை சந்திப்போம்.”

சென்ற ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் மக்ரோனுக்கு பதிவு செய்த வாக்காளர்களது சிறு சதவீதத்திலான வாக்குகளே கிடைத்தது என்ற அடிப்படையில், ஜனநாயக அங்கீகரிப்பு அவருக்கு இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்: “வெறும் 16 சதவீத வாக்குகளே பெற்றதன் பின்னர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை நினைவில் கொள்வது நல்லது.”

நடவடிக்கைக் குழுக்கள் அமைப்பதற்கான SEP இன் அழைப்புக்கு அனுதாபம் கொண்டிருப்பதாக François கூறினார். “நடவடிக்கைக் குழுக்கள் கொண்டு, எல்லாரையும் ஒரே போராட்டத்தில் கொண்டுவர நீங்கள் விரும்புகிறீர்களா? அது நல்ல விடயம். அதனை நீங்கள் சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டும்... மக்ரோனுக்கு எதிராக அனைவரையும் ஒன்றுதிரட்டுவதில் நான் உடன்படுகிறேன். தொழிற்சங்கங்கள் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கவில்லை.”

அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “நாம் முன்னே செல்ல வேண்டும். மற்ற பிரிவுத் தொழிலாளர்களது இயக்கங்களும் நடைபெறுகின்றன, பொதுத் துறையில், அத்துடன் Carrefour இல் போன்று, தனியார் நிறுவனங்களிலுல் பரிதாபகரமான வேலை நிலைமைகளுக்கு எதிராகவும் நடைபெறுகின்றன. பல நிறுவனங்கள் கதவடைத்துச் சென்றிருக்கின்றன... ஆகவே தான் நாம் அணிதிரண்டாக வேண்டும், ஒவ்வொருநாள் மாலையும் நாம் வீதியில் திரண்டாக வேண்டும்.”

பாரிஸ் பகுதியில் வேலைசெய்கின்ற ஒரு இரயில்வே தொழிலாளியான Sandrine இடமும் WSWS பேசியது. மக்ரோனின் தனியார்மயமாக்கக் கொள்கைக்கு வெறுப்பையும் “இடதின்” இப்போதைய பிரதான கட்சிகள் மீதான ஏமாற்றத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அவர் விளக்கினார்: “தனியார்மயமாகி விட்டால், இப்போதைய வேலை நிலைமைகள் அதன்பின் இருக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எங்களது பொதுச் சேவைகள் குறித்து உண்மையாகவே நாங்கள் கேள்விகேட்டுக் கொண்டிருக்கிறோம்: எப்படி நாம் அதைக் கொண்டுசெலுத்தப்போகிறோம், நெறிமுறைகள் தொடர்ந்து கீழ்ப்படிவதற்குரியதாக இருப்பதை எப்படி நாம் உறுதிசெய்யப் போகிறோம், அவர்கள் சந்தையில் முன்நிறுத்தவிருக்கும் தனியார் போட்டியாளர்கள் அனைவரையும் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று. எங்களது வேலை நிலைமைகள் எளிதானவையல்ல. வார இறுதிகள் மற்றும் விடுமுறை நாட்களில் பிரிக்கப்பட்ட ஷிப்டுகளில் நாங்கள் வேலைசெய்கிறோம், எனக்குக் குழந்தைகள் இருக்கின்றன... நான் கொடுத்துவைத்த பெண்ணாக எல்லாம் கருதிக் கொள்வது கிடையாது, எனக்கு என் வேலையில் பிரச்சினைகள் இருக்கின்றன.”


பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் கைகளால் எழுதப்பட்ட பதாகைகள்

மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இருவரது கொள்கைகளுக்குமான தனது எதிர்ப்பை Sandrine வலியுறுத்தினார்: “மக்ரோன் ஒரு நியாயமான வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். [நவ-பாசிச ஜனாதிபதி வேட்பாளர்] மரின் லு பென்னுக்கு குறைந்த தீமை என்ற அடிப்படையில் மட்டுமே அவருக்கு நான் வாக்களித்தேன்... ஆனால் இப்போது, அவர் எடுக்கும் முடிவுகளில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அவர் நான் தேர்ந்தெடுத்த ஜனாதிபதியாக இல்லை. ஒரு இனவெறி கொண்ட பெண்மணி நாட்டை ஆளக் கூடாது என்ற காரணத்தால் நான் அவரைத் தேர்ந்தெடுத்தேனே தவிர, யாரோ ஒருவர் தனது நண்பர்களும், வங்கியாளர்களும் பணம் சம்பாதிப்பதற்காக பொதுச் சேவைகளை அவர்களிடம் விற்றுவிடுவதற்காக அல்ல.”

அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “அவர்கள் கட்டியெழுப்புகின்ற ஐரோப்பா, பணம் மற்றும் இலாபங்களுக்கான ஐரோப்பா ஆகும். அத்தனை ஐரோப்பியத் தொழிலாளர்களது நலன்களையும் அவர்கள் மனதில் கொள்ளவில்லை....நீங்கள் பார்த்தால் தெரியும், அவர்கள் உண்மையில் நம்மைப் பிளவுபடுத்துவதற்கே வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள்.”

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மக்ரோனின் கொள்கை “சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கையில் வெட்டுக்கள், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கான மானியங்களில் வெட்டுக்கள், மற்றும் இன்னபிற என நம் அனைவருக்கும் தேவையானதாகவும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கின்ற பொதுச் சேவைகளை வெட்டுகின்ற ஒரு கொள்கையாக இருக்கிறது, என்பதால் நான் அதனை உறுதியுடன் எதிர்க்கிறேன். பொதுச் சேவைகள் ஒவ்வொருவரது சொத்து ஆகும் என்பதால் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்... அனைவருக்குமே அவற்றுக்கு அணுகல் இருக்க வேண்டும் என்பது தான் விடயமாகும். இது பராமரிக்கப்பட்டாக வேண்டிய சமத்துவக் கோட்பாடு ஆகும்.”

ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் அமல்படுத்தப்படுகின்ற பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கும் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய சமூக ஜனநாயகத்துடன் பிணைந்த அரசியல் கட்சிகளது திவால்நிலைக்கும் இடையிலான தொடர்பை Sandrine வலியுறுத்திக் காட்டினார்.

பிரான்சில் உத்தியோகபூர்வ இடது கட்சிகள் “போதுமான அளவுக்கு இடது-சாரியாக இல்லை” என்றார் Sandrine. அவர் தொடர்ந்து கூறினார்: “இடது என்ற வார்த்தையின் விரிந்த அர்த்தத்தில், உண்மையாகவே உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு உண்மையான இடதே நமக்கு வேண்டும். Uber க்காக சின்னச் சின்ன வேலைகள் செய்கின்ற சுய-தொழில் செய்வோர் உள்ளிட கிட்டத்தட்ட அனைவருமே தொழிலாளர்கள் தான்... பெரிய நிறுவனங்களில் வேலைபார்க்கின்ற வழக்கமாய் உழைப்பாளிகள் என்று நாம் கூறுபவர்கள் மட்டுமல்ல. பிரான்ஸ், சம்பளத்தைக் கொண்டு மாத இறுதி வரை சமாளிக்கப் போராடுகிற தொழிலாளர்களை பெருவாரியான எண்ணிக்கையில் கொண்ட ஒரு நாடாகும்.”