ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

One million Indian bank employees and thousands of Sri Lankan railway workers strike

ஒரு மில்லியன் இந்திய வங்கி ஊழியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இலங்கை இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

By our correspondents 
1 June 2018

இந்த வாரம், இந்தியாவில் ஒரு மில்லியன் (பத்து லட்சம்) பொதுத்துறை வங்கி ஊழியர்களும் மற்றும் இலங்கையில் ஆயிரக்கணக்கான இரயில்வே தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் வேலைநிறுத்தம் செய்தனர்.

சமீபத்திய மாதங்களில் அரசாங்க சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக துணைக்கண்டம் மற்றும் சர்வதேச அளவில் எழுந்த தொழில்துறை நடவடிக்கை அலையை தொடர்ந்து இந்த வேலைநிறுத்தங்கள் நடைபெறுகின்றன.

இந்தியாவில், தமிழ்நாடு பேருந்து தொழிலாளர்கள், ஹரியானா துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் திருச்சியில் உள்ள கிராமப்புற தபால் ஊழியர்கள் என பல துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதேபோல, இலங்கையிலும், தபால்துறை ஊழியர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் நீர் வாரிய ஊழியர்கள் என பல்வேறு துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரியும், தனியார்மயமாக்கல்கள் மற்றும் நிதி வெட்டுக்களை எதிர்த்தும் தொழில்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


சென்னையில் வேலைநிறுத்தம் செய்யும் இந்திய யூனியன் வங்கி ஊழியர்கள்

இந்தியாவின் 21 பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள் அல்லது தேசியளவில் 75 சதவிகித அளவிலான வங்கி தொழில்துறை தொழிலாளர்கள், கடந்த புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் 15 சதவிகித ஊதிய உயர்வினைக் கோரி தேசியளவில் வேலைநிறுத்தம் செய்தனர். இதில் ஒரு மில்லியன் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், வங்கிகளிலிருந்து பணம் எடுத்தல் மற்றும் வைப்பு நிதி உருவாக்குதல், தனியார் வங்கி காசோலைகளை பணமாக மாற்றுதல் மற்றும் பண பரிமாற்றம் செய்தல் என அனைத்து வங்கி நடவடிக்கைகளையும் கிட்டத்தட்ட இது முடக்கியது.

தங்களது கோரிக்கைகளை வழங்க மறுத்த இந்திய வங்கிகளின் அமைப்பின் மீது ஊழியர்களின் அதிகரித்து வரும் கோபத்திற்கு பதிலிறுப்பாக வேலைநிறுத்தம் செய்ய அழைப்புவிடுக்கும்படி வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய பேரவை (United Forum of Bank Unions-UFBU) நிர்ப்பந்திக்கப்பட்டது.

UFBU என்பது ஒன்பது தொழிற்சங்கங்கள் இணைந்த ஒரு கூட்டமைப்பாகும். இது, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (All India Bank Officers Confederation-AIBOC), வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (National Confederation of Bank Employees-NCBE), அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (All India Bank Officers Association-AIBOA), அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (All India Bank Employees Association-AIBEA), இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (Bank Employees Federation of India-BEFI) போன்ற அமைப்புகளை கொண்டதாகும்.

2012 இல் வங்கி ஊழியர்கள் 15 சதவிகித ஊதிய உயர்வை பெற்ற போதிலும், வேலைவழங்குநர் அமைப்பு மிகச்சிறிய அளவாக 2 சதவிகித ஊதிய உயர்வை மட்டுமே மே 5 அன்று வழங்கியது, பொதுத்துறை வங்கிகள் “வறிய” நிதி நிலைமையில் இருப்பதாக அறிவித்தது. ஏப்ரலில் 4.6 சதவிகிதமாக உயர்வு கண்ட ஆண்டு பணவீக்க வீதத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள இது தவறி விட்டது என்பதை சுட்டிக்காட்டி, இந்த “வழங்கலை” ஊழியர்கள் கண்டனம் செய்தனர்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்திய பொதுத்துறை வங்கிகள் (Public Sector Banks-PSBs) பெரும் இழப்புக்களை எதிர்கொண்டன. கடந்த ஆண்டு, 13 தேசிய வங்கிகள் 8.6 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான இழப்பை சந்தித்தன, அதனைத் தொடர்ந்து 2018 முதல் காலாண்டில், 6.5 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தது. பணிச்சுமையை அதிகரிப்பது, இழப்புக்களை குறைக்க பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் வங்கி சொத்துக்களை அதிகரிப்பது போன்றவற்றிற்கு கோரிக்கைவிடுத்து, இந்த நெருக்கடியின் சுமையை தொழிலாளர் மீது சுமத்த நிர்வாகங்கள் உறுதியாக உள்ளன.


மேற்கு வங்கத்தில் வங்கி ஊழியர்கள் போராட்டம்

UFBU கூட்டணி, அரசாங்கம் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் தனது ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதன் மூலம் இதற்கு பதிலிறுத்தது. கடந்த வாரம், AIBEA பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாச்சலம், அவரது உறுப்பினர்களின், “ஏற்கத்தக்க மற்றும் நியாயமான ஊதிய உயர்வு குறித்த சட்டபூர்வ கோரிக்கையை” ஒப்புக்கொள்ளுமாறு வங்கி நிர்வாகத்திற்கு ஒரு பரிதாபகரமான அறைகூவல் விடுத்தார். இந்திய அரசாங்கம் இது பற்றி “தீவிர கவனம் செலுத்தவில்லை” என்று புகார் செய்தார். மேலும், இந்த விவகாரத்தில் “தலையிடுமாறு” நிதி அமைச்சரிடம் முறையீடு செய்தார்.

வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு மாறாக, பிரதம மந்திரி மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கம், வங்கிகளை தனியார்மயமாக்க முனைவதோடு, வேலைகள், ஊதியங்கள் மற்றும் பிற வேலை நிலைமைகள் மீது இன்னும் கூடுதலான தாக்குதல்களை நடத்துகிறது. இது சர்வதேச நாணய நிதியக் கோரிக்கைகளுக்கு ஒத்தூதுவதாக உள்ளது. அத்துடன், இந்தியா மீதான சர்வதேச நாணய நிதியத்தின் டிசம்பர் 2017 ஸ்திரத்தன்மை அறிக்கை, “PSB களில் முதலீடு செய்வதில் தனியார் துறைகளின் பெரும் பங்களிப்புக்கும், முழு தனியார்மயமாக்கலுக்கும்” அழைப்பு விடுத்தது.  


மேற்கு வங்கத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள்

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு விரோதமாக இருக்கின்ற அதேவேளையில், மட்டுப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்த எதிர்ப்பை சிதைப்பதற்கு தொழிற்சங்கங்கள் முயன்று வருகின்றன. 2014 இல் பிஜேபி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த வாரம் நடைபெற்ற இரண்டு நாள் தேசியளவிலான வேலைநிறுத்தம், தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்த இதுபோன்ற நடவடிக்கைகளில் நான்காவதாகும்.

தொழிற்சங்கங்களின் பங்கு என்பது அவற்றுடன் இணைந்த அரசியல் கட்சிகளின் முதலீட்டாளர்-சார்பு அரசியலுடன் நேரடியாக தொடர்புடையதாகும். AIBEA மற்றும் AIBOA இரண்டும் இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் (Stalinist Communist Party of India-CPI) இணைந்துள்ளன. BEFI, மற்றொரு முக்கிய ஸ்ராலினிசக் கட்சியான மார்க்சிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லது சிபிஎம் உடன் (Communist Party of India (Marxist) or CPM) இணைந்த இந்திய தொழில் சங்கங்களின் மையத்துடன் (Centre of India Trade Unions-CITU) சகோதரத்துவ உறவுகளைக் கொண்டுள்ளது. மேலும், INBEF, இந்திய தேசிய முதலாளித்துவத்தின் பாராம்பரிய ஆளும் கட்சியான காங்கிரசுடன் இணைந்துள்ளது.

1991 இல், அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தின் மூலம் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான நவ-தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இந்த கட்சிகள் அனைத்தும் தம்மை அர்ப்பணித்துள்ளன.


ரமேஷ் குமார்

இந்த வாரம், மேற்கு வங்க மாநிலத் தலைநகரம் கொல்கத்தாவிலும் மற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைநகரம் சென்னையிலும் வேலைநிறுத்தக்காரர்களுடன் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பேசினர். 

சென்னையில், 47 வயதான இந்திய யூனியன் வங்கி ஊழியர் ரமேஷ் குமாரிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்: “மோடி ஆட்சிக்கு வந்த போது இந்தியா வளர்ச்சியடைந்து விடும் என்று ஊடகங்கள் தெரிவித்தன, ஆனால் அவரோ சமூக நலன்கள் மீது தாக்குதல்களையே தொடுத்து வருகிறார்.” 

மேலும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிச கட்சிகளின் பங்கு பற்றி குறிப்பிட்டு, குமார் இதையும் தெரிவித்தார்: “கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையிலான தொழிற்சங்கங்கள் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற முதலாளித்துவக் கட்சிகளுடன் தொடர்புடையவையாக உள்ளன. அனைத்து தொழிற்சங்கங்களும் ஊழல் நிறைந்தவையே. அவர்கள் நிர்வாகத்திற்காகவே வேலை செய்கின்றனர்.”

கிருஷ்ண மூர்த்தி, 56 வயதான இவர், நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பெரும் ஊதிய இடைவெளியை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்தார்: “எனது மாத ஊதியம் 50,000 ரூபாய் (742 டாலர்) ஆகும், ஆனால் ஒரு ஒப்பந்த தொழிலாளி மாதத்திற்கு வெறும் 9,000 ரூபாயை மட்டுமே பெறுகிறார். அதைக் கொண்டு அவர்களே வாழ முடியாது என்ற நிலையில், ஒரு குடும்ப வாழ்க்கையை நடத்துவது என்பது மிகவும் கடினமானதாகும்.”


கிருஷ்ண மூர்த்தி

கொல்கத்தாவில், Punjab & Sind Bank வேலைநிறுத்தக்காரர் ஒருவர் பின்வருமாறு தெரிவித்தார்: “அரசியல் கட்சிகள் எங்களுக்கு எதையும் செய்யவில்லை. அவர்கள் போலியான வாக்குறுதிகளை அளிப்பதுடன், எங்கள் கோரிக்கைகளையும் கண்டுகொள்வதில்லை. இந்த விவகாரங்கள் குறித்து எந்தவித ஆக்கபூர்வமான முன்னோக்கையும் அவர்கள் எங்களுக்கு வழங்குவதில்லை.”

“நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இத்தகைய அரசியல் கட்சிகளுடன் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்களும் அனைத்து துறை ஊழியர்களையும் ஐக்கியப்படுத்த முயற்சி செய்வதில்லை. மாறாக, தொழிலாளர்களை பிளவுபடுத்துகின்றனர். ஏனைய அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களும் ஒரு பொதுவான போராட்டத்திற்காக ஐக்கியப்படுத்தப்படவும் அணிதிரட்டப்படவும் வேண்டும்.”

இலங்கையில், 12.1 சதவிகித ஊதிய உயர்வு, 40 மணி நேர வேலை வாரம் மற்றும் இரயில்வே வேலைகள் மற்றும் சேவைகளை தனியார்மயமாக்கக்கூடாது என்பவை உள்ளிட்ட ஒரு மொத்த கோரிக்கை சாசனத்தை முன்வைத்து, சுமார் 12,000 தொழில்நுட்ப சேவை சார்ந்த இரயில்வே தொழிலாளர்கள் கடந்த செவ்வாயன்று ஒரு தேசியளவிலான வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

இரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு (Railway Employees Trade Union Alliance-RETUA), வாழ்க்கை செலவின உயர்வு மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை குறித்து அதிகரித்து வரும் தொழிலாள-வர்க்க அமைதியின்மைக்கு மத்தியில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தது. இருப்பினும், RETUA, எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் ஒழுங்கமைக்க மறுத்ததோடு, திட்டமிட்ட இரண்டு-நாள் வேலைநிறுத்தத்தின் போது தொழிலாளர்களை மருத்துவ விடுப்பில் செல்லவும், வீ`ட்டிலேயே தங்கியிருக்கவும் அறிவுரை வழங்கியது. 

அரசாங்க மற்றும் இரயில்வே அதிகாரிகள், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் வன்முறையில் ஈடுபட்டதாக போலியான குற்றச்சாட்டுகளை வேலைநிறுத்தக்காரர்கள் மீது சுமத்தி அவர்களை பணிநீக்கம் செய்யப் போவதாகவும்  அச்சுறுத்தி வேலைநிறுத்தத்தை முறியடிக்க முயன்றனர். இரயில்வே தலைவர் விஜய சமரசிங்க, வேலைநிறுத்தக்காரர்களால் “சொத்து சேதம்” விளைவிக்கப்பட்டதாக பொலிஸ் குற்றவியல் விசாரணை துறையிடம் ஒரு உத்தியோகபூர்வ புகாரை அவர் பதிவு செய்துள்ளதாக ஊடகத்திற்கு தெரிவித்தார்.

இந்த போலியான குற்றச்சாட்டுக்களை தொழிலாளர்கள் கோபமாக நிராகரித்ததோடு, மேலும் இரண்டு நாட்களுக்கு தேசியளவில் வேலைநிறுத்தத்தை நீட்டிக்க தொழிற்சங்கத்தை வலியுறுத்தினர். ஆனால், தொழிற்சங்கத் தலைவர்கள் நேற்று சந்தித்து, வேலைநிறுத்த நீட்டிப்பை இரத்து செய்ததோடு, அந்த நாளின் பிற்பகுதியில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். 


ருதானை ELS இரயில் நிலையத்தில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைப்படி, இலங்கை அரசாங்கம், இரயில்வே துறையையும் மற்றும், மின்சார வாரியம், பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் போன்ற பிற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் தனியார்மயமாக்க முனைந்து வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், இரயில்வே நிதி மற்றும் மனிதர்களை பயன்படுத்தும் மட்டங்கள் கடுமையாக வெட்டப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இரயில்வே துறை ஆராய்ச்சி அறிக்கையின் படி, 20,000 க்கு அதிகமாக மனிதர்களை பயன்படுத்தும் மட்டங்கள் இருக்கவேண்டும், ஆனால், வெறும் 14,865 ஊழியர்கள் மட்டுமே இத்துறையில் பணிபுரிந்தனர். 2015 இல் ஆண்டு அரசாங்க நிதியளிப்பு 44,485 மில்லியன் ரூபாயாக (281 மில்லியன் டாலர்) இருந்தது, 2016 இல் 29,090 மில்லியன் ரூபாயாக குறைக்கப்பட்டது, மேலும் மூலதன முதலீடும் 48.44 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

இரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்து போராடுவதற்கு தயாராக இருப்பதை சுட்டிக்காட்டிய போதிலும், தொழிற்சங்கங்கள் மீது எந்தவித நம்பிக்கையையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசிய பலரும் தங்களது அதிருப்தியையே வெளிப்படுத்தினர்.

கொழும்பின் இரத்மலானை இரயில்வே பயிற்சி நிலையத்தின் தொழிலாளி ஒருவர் இவ்வாறு கூறினார்: “வேலைநிறுத்தம் சரியாக எந்த தேதியில் நடைபெறவுள்ளது என்பதையோ அல்லது அதன் நோக்கம் என்ன என்பதையோ கூட நாங்கள் அறிந்திருக்கவில்லை. முன்னர், தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களை கூட்டங்களுக்கு அழைத்து பேசுவர். இப்போது அவர்கள் அதைச் செய்யவில்லை.”

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் பற்றி ஒரு எழுத்தர் குறிப்பிட்டார். மேலும், “எனது அடிப்படை மாத ஊதியம் 25,000 ரூபாய் (158 டாலர்) ஆகும், பிற கொடுப்பனவுகளுடன் சேர்த்து 36,000 ரூபாயை நான் பெறுகிறேன், ஆனால் உணவு செலவினத்திற்கு மட்டுமே எனக்கு 18,000 ரூபாய் தேவைப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

“அனைத்திற்கும் மேலாக, எங்களது இரு குழந்தைகளின் கல்வி செலவினங்கள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களையும் நாங்கள் செலுத்த வேண்டியுள்ளது. எனது மனைவி கூட வேலை செய்தாலும், எங்களது வாழ்க்கை மிகவும் கடினமானதாகவே உள்ளது. தற்போது நாங்கள் வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறோம், இந்நிலையில் நாங்கள் சொந்த வீடு கட்டுவது பற்றி நினைத்து கூட பார்க்க முடியாது.”

சிலாபத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி பின்வருமாறு தெரிவித்தார்: “எனது மொத்த மாத ஊதியம் 60,000 ரூபாய், ஆனால் வாழ்க்கை செலவினம் அதிகரித்து வரும் நிலையில், எங்களது குடும்பச் செலவினங்களை சமாளிப்பதற்கு இது போதுமானதாக இல்லை.” தொழிற்சங்கங்கள் மீதான அவரது அதிருப்தியை தெரிவித்து, மேலும் கூறினார்: “நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டாலும் கூட, நாங்கள் எதையும் பெற முடியாது, ஏனென்றால், தொழிற்சங்கத் தலைவர்கள் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு (ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி) தான் சார்பாக உள்ளனர்.”

இந்த வாரம், நூற்றுக்கணக்கான, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரிய ஊழியர்களும் கூட புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் பகல் வேலைமாற்று நேரத்தின் போது இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, ஒரு முழு-நாள் வேலைநிறுத்தம் செய்வதற்கும் இன்று திட்டமிட்டனர். வாக்குறுதியளிக்கப்பட்ட 25 சதவிகித ஊதிய உயர்வை குறைக்கும் திட்டங்களை எதிர்ப்பதை முன்னிட்டு இந்த தொழில்துறை நடவடிக்கை இருந்தது. குறிப்பாக, திங்களன்று ஒரு பெரும் எதிர்ப்பை தொழிலாளர்கள் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.