ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Italy strands rescue ship Lifeline as EU refugee summit collapses

ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் மாநாடு முறிவுற்ற நிலையில், லைஃப்லைன் மீட்பு கப்பலை இத்தாலி தத்தளிக்க விட்டிருக்கிறது

By Alex Lantier 
25 June 2018

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் (EU) அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், சனியன்று, 239 அகதிகளுடன் அதன் கடற்கரைக்கு வந்து சேர்ந்த ஜேர்மன் ஆதரவு மீட்பு கப்பலான Mission Lifeline ஐ இத்தாலிய அரசாங்கம் தத்தளிக்க விட்டுள்ளது. மால்டாவின் மேற்கு கடற் பகுதியில் நேற்றுவரை அந்த மீட்பு கப்பல் முடிவெடுக்க முடியாத நிலையில் கவனிப்பாரற்று விடப்பட்டிருந்தது, அவசரத் தேவைக்கு உணவும் குடி தண்ணீரும் அனுப்பி வைத்தது என்றாலும், அதன் பிராந்தியத்திற்குள் அகதிகளை தரையிறங்க அனுமதிக்கவில்லை.

உணவு மற்றும் குடி தண்ணீர் பற்றாக்குறையோடு 629 அகதிகளுடன் தத்தளித்து கொண்டிருந்த பிரெஞ்சு மீட்பு கப்பல் Aquarius ஐ ரோம் திருப்பி அனுப்பி இரண்டு வாரங்களுக்கு பின்னர், இப்போது, 14 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட Lifeline கப்பலிலுள்ள அனைத்து அகதிகளும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளின் கட்டளையின்படி மனிதத்தன்மையற்ற நிலைமைகளின் கீழ் மீண்டும் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நடைபெறும் போர்களிலிருந்து தப்பித்து லிபியா ஊடாக ஐரோப்பாவிற்குள் நம்பிக்கையுடன் தஞ்சம்புகும் பெரும் எண்ணிக்கையிலான அகதிகளின் வருகையை தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு புகலிட உரிமையை மறுக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் முனைகின்ற நிலையில், இத்தாலி மற்றும் லிபியாவிற்கு இடையில் உள்ள மத்தியதரைக் கடல் பகுதியில் நிகழும் பயங்கரங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த வியாழனன்று, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர், மூன்று நாட்களில் 220 அகதிகள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர் என அறிவித்தார்.

நேற்று, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவிலான லிபிய கடற்கரை பாதுகாப்பு கப்பல்கள், 110 பெண்கள் மற்றும் 70 குழந்தைகள் உட்பட 460 புலம்பெயர்ந்தோரை சுமந்து வந்த இரண்டு கப்பல்களை இடைமறித்து, திரிபோலி அருகேயுள்ள ஒரு கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் கோம்ஸ் நகரிலுள்ள ஒரு அகதிகள் முகாமிற்கு அவர்களை கொண்டு சேர்த்தன. லிபிய அரசாங்கத்தை அழித்து, இஸ்லாமிய போராளிகளுக்கு இடையிலான உள்நாட்டுப் போருக்குள் நாட்டை மூழ்கடித்த 2011 நேட்டோ போரிலிருந்து இந்த முகாம் இயங்கி வந்துள்ளது. நேட்டோ ஆதரவு பெற்ற லிபிய அதிகாரிகள், அங்கு தஞ்சம் புகுந்தவர்களுக்கு “கடுமையாக சவுக்கடி கொடுத்தும், அடித்தும் மற்றும் மின் அதிர்ச்சி கொடுத்தும்” சித்திரவதை செய்து வந்தது கண்டறியப்பட்டது என்று 2014 மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் (Human Rights Watch-HRW) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடு மத்தியதரைக்கடல் நீர் பகுதியில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்த நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தின் காட்டுமிராண்டித்தனம் மீதான விடையிறுக்க முடியாத ஒரு குற்றச்சாட்டாகும், மேலும் அதன் அங்கத்துவ நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதி முழுவதிலும் புலம்பெயர்வோர் மீதான ஒரு பரந்த விரிவாக்கத்திலான தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருகின்றன. மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தவர்களை இத்தாலியில் இருந்து நாடுகடத்த உறுதிபூண்டு பதவிக்கு வந்த இத்தாலியின் அதிவலது உள்துறை மந்திரி மத்தேயு சல்வீனி, இத்தாலியில் வாழும் ரோம இனத்தவர் குறித்த ஒரு மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடங்கி வைத்துள்ளார். இது, அந்நாட்டிலிருந்து ரோம இனத்தவரின் பாரிய வெளியேற்றத்திற்கான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

நேற்று, புரூசெல்ஸில், புலம்பெயர்வு குறித்த ஐரோப்பிய ஒன்றிய சிறு மாநாடு, ஜூன் 28-29 ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் கூட்டத்திற்கான தயாரிப்பை தகர்த்தது. ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகளும் அரசுத் தலைவர்களும் அகதிகள் நெருக்கடி குறித்து தம்மிடையே பகிரங்கமாகவே அவமதித்துக்கொள்கின்ற நிலையில், வருகை புரிந்த நாடுகளால் ஒரு பொதுவான அறிக்கையை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

கூட்டத்திற்கு முன்னரே ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல், இந்த உச்சி மாநாடுகளின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் குறித்து குறைத்து மதிப்பிட்டுகாட்ட முனைந்ததோடு, புலம்பெயர்ந்தோர் மீதான அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடு எதுவும் எட்டப்படமாட்டாது என்றும் எச்சரிக்கிறார். மேர்க்கெல், இந்த சிறு உச்சி மாநாடு பற்றி அது “ஒரு செயல்பாட்டு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தை விட மேலானதாகவோ குறைந்ததாகவோ இல்லை” என்று குறிப்பிட்டதோடு, “புலம்பெயர்வு குறித்த ஒட்டுமொத்த பிரச்சினைக்கு 28 உறுப்பு நாடுகளின் மட்டத்தில் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் எந்தவொரு தீர்வும் எட்டப்பட மாட்டாது….” என்றும் எச்சரித்தார். மேலும், பல்வேறுபட்ட ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் இடையே “இருதரப்பு, முத்தரப்பு, மற்றும் பலதரப்பு” உடன்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

உண்மையில், இந்த சிறு உச்சி மாநாடு கிட்டத்தட்ட நடக்காததுபோல் இருந்ததுடன், தொடர்ந்து செயலாற்ற முடியாத நிலையில் இறுதியில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியில் தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றிய சக்திகளின் ஆதரவில் இறுதியாக முன்மொழியப்பட்ட அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்த நிலையில், ஜி7 பேச்சுவார்த்தைகள் முறிவுற்று இரண்டு வாரங்களுக்கு பின்னர், முக்கிய ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் மீதான விரோதத்துக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியமே கூட உடைவின் விளிம்பில் நிற்கிறது.

முடிவில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்கத்துவநாடுகளில் 16 நாடுகள் மட்டுமே சிறு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டன. அகதிகளை அவரவர் நாடுகளுக்கு திருப்பியனுப்ப இந்த மாநாட்டின் போது ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுக்கும் சாத்தியத்தை எதிர்ப்பதற்காக Visegrad குழு நாடுகள் (ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு) கூட்டத்தை புறக்கணித்தன. உச்சி மாநாட்டில் பரிசீலிக்கப்படவுள்ள ஐரோப்பிய ஒன்றிய வரைவு அறிக்கை ஒன்று புதனன்று வழங்கப்பட்ட பின்னர், இத்தாலிய பிரதம மந்திரி ஜியுசெப்ப கொன்ட அதில்கலந்துகொள்ள மாட்டேன் என அச்சுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ஜோன்-குளோட் ஜுங்கரின் ஆதரவு பெற்ற அறிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஃபுரென்டெக்ஸ் எல்லை பொலிஸ் படையினரின் ஒரு பாரிய விரிவாக்கத்திற்கு அழைப்பு விடுத்தது. இது மேர்க்கெலின் அதிகாரத்தை மீறப்போவதாகவும் மற்றும் ஏற்கனவே ஐரோப்பாவிற்குள் நுழைந்திருக்கும் அகதிகளை ஜேர்மனுக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்த ஜேர்மன் எல்லைப்புறக் கட்டுப்பாடுகளை ஒருதலைப்பட்சமாக மறு ஸ்தாபகம் செய்யப் போவதாகவும் அச்சுறுத்திய ஜேர்மன் உள்துறை மந்திரி ஹோர்ஸ்ட் சீஹோவரிடமிருந்து தனது அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலை அவர் எதிர்கொள்ளும் நிலையில், இது, புலம்பெயர்வோரை அடக்குவதற்கும், ஐரோப்பாவிற்குள் அவர்களது வருகையை தடுப்பதற்கும் மேர்க்கெல் முன்வைத்த ஒரு மூலோபாயமாகும்.

கொன்ட, “முற்றிலும் புதிய முன்மொழிவு” என்று அவர் அழைத்ததை, “புலம்பெயர்வு குறித்த ஐரோப்பிய பலநிலைமட்ட மூலோபாயம்” என்று பெயரிட்டு முன்வைத்தார். இந்த முன்மொழிவு, தஞ்சம் கோரும் வழக்குகளை எப்படி நடத்துவது என்பது குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அகதிகளை அவர்கள் முதலில் தஞ்சம் புகுந்த ஐரோப்பிய நாடு தான் கையாள வேண்டுமென ஆணையிடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளினின் உடன்படிக்கையை “முற்றிலும் முந்தக்” கூடுமென கொன்ட கூறினார். பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவர்களது பிராந்தியத்திற்குள் புலம்பெயர்வோர் நுழைவதற்கான அனுமதியை மறுத்துள்ள நிலையில், ஆப்பிரிக்காவில் இருந்து பெருமளவில் புலம்பெயர்பவர்களுக்கு இத்தாலியை இது பொறுப்பாக்குகிறது.

அதே நேரத்தில், கப்பலில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான நம்பிக்கை இழந்த மக்களை “மனித இறைச்சி” என்று சல்வீனி இழிவாக குறிப்பிட்டுள்ள நிலையில், Lifeline மீட்பு கப்பலிலுள்ள அகதிகளுக்கு எதிராக மோசடியாக ஒரு அருவருப்பான குற்றச்சாட்டை இத்தாலிய அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

Lifeline மீட்பு குழுவினர் ட்விட்டர் செய்தி ஒன்றை மீண்டும் சுட்டிக்காட்டி, “அன்புள்ள மத்தேயு சல்வீனி, நாங்கள் கப்பலில் இறைச்சி எதையும் கொண்டிருக்கவில்லை, மனிதர்களைத் தான் கொண்டிருக்கிறோம்… மக்களை மூழ்கவிடாமல் நாங்கள் காப்பாற்றியுள்ளோம் என்பதை நீங்களே நம்புவதற்காக தான் உங்களை நாங்கள் அழைக்கிறோம். இங்கு வாருங்கள், உங்களை வரவேற்கிறோம்!” என்றும் அறிவித்தனர். கடுமையான புயல்கள் ஏதும் உருவானால் கூடுதல் பாதுகாப்பை வழங்கக்கூடிய பெரும் டேனிஷ் கொள்கல கப்பல் Alexander Maersk ஐ அது சந்திக்கும் என நம்புவதாக சிறிய கப்பல் கூட சமிக்ஞை செய்தது.

பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய அரசுத் தலைவர்களும் அரசாங்கமும், அகதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து போட்டியிடும் பிற்போக்குத்தனமான முன்மொழிவுகளை வெளியிட்டன. இந்நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் ஸ்பானிய பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸூம், ஐரோப்பாவிற்குள் “மூடிய தடுப்புக் காவல் மையங்கள்” அமைப்பதற்கு அழைப்பு விடுத்தனர். பெயரைத் தவிர்த்து எல்லா வகைகளிலும் இவை சித்திரவதை முகாம்களாகவே இருக்கும்.

மக்ரோனின் பாசாங்குத்தனத்தை கண்டித்து, பிரான்ஸ் மேலும் செயலாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்து சல்வீனி பதிலிறுத்தார். இத்தாலியில், “கடந்த நான்கு ஆண்டுகளில் 650,000 அகதிகள் தரையிறக்கப்பட்டு, அகதிகள் அந்தஸ்து கோரும் 430,000 விண்ணப்பங்களும்” பெறப்பட்டுள்ளன என்று அவர் புகார் செய்ததோடு, “அகதிகளாக கருதப்படும் 170,000 பேர் 5 பில்லியன் யூரோக்களுக்கு அதிகமான செலவில் தற்போது ஹோட்டல்கள், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் வசிக்கின்றனர் என்றும் கூறினார். கர்வமிக்க ஜனாதிபதி மக்ரோனுக்கு இது ஒரு பிரச்சினை அல்ல என்றால், அவமதிப்புகளை நிறுத்தவும், பல பிரெஞ்சு துறைமுகங்களை திறப்பதன் மூலமாக பெருந்தன்மையை காட்டவும், மேலும் வென்டிமிகிலியாவில் உள்ள பிரான்சு-இத்தாலிய எல்லையை அடைந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களையும் திருப்பி அனுப்புவதை நிறுத்திக் கொள்ளவும்” நாம் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், தஞ்சம் கோரும் உரிமையை கடுமையாக தாக்கும் சட்டத்தையும், பிரான்சிலிருந்து ரோமாக்களின் தற்போதைய வெளியேற்றங்களையும் உள்ளடக்கிய தனது கொள்கைகளில் எந்தவொரு மாற்றத்தையும் மக்ரோன் மேற்கொள்ள மாட்டார். மாறாக, வெளிப்படையாக Visegrad குழுவை மட்டும் உட்படுத்தாமல், இத்தாலியை சேர்த்து, அகதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீதான பொருளாதாரத் தடைகள் குறித்து அச்சுறுத்துவதன் மூலம் அவர் பதிலடி கொடுத்ததோடு, “எவரிடமிருந்தும் பிரான்ஸ் பாடம் கற்றுக்கொள்ள தேவையில்லை” என்று கூறினார்.

ஆஸ்திரிய சான்சலர் செபஸ்டியான் குரூஸ் அவரது பங்கிற்கு, ஜேர்மனுக்குள் அகதிகள் நுழைவதை தடுக்க ஜேர்மன் எல்லைப்புற கட்டுப்பாடுகளை சீஹோவர் விதிப்பாரானால், ஆஸ்திரியாவில் அவரும் அதே மாதிரி செய்வார் என்று தெரிவித்தார்.

முடிவில், ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்வு உச்சி மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு அரசாங்கங்கள் ஒரு பொதுவான அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தன, மேலும் ஜுங்கரும், ஐரோப்பிய ஒன்றிய ஆணையமும் அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்தை கைவிட்டனர். இச்சூழ்நிலையில், ஏற்பட்ட முடிவினால் “உண்மையில் திருப்தி” அடைந்ததாக தெரிவித்து கொன்ட பதிலிறுத்தார்.