ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Amid Trump’s war on immigrants and social programs
Democrats back massive Pentagon budget for war and repression

புலம்பெயர்ந்தோர் மற்றும் சமூக வேலைத்திட்டங்களின் மீது ட்ரம்ப் போர் தொடுத்திருப்பதன் மத்தியில்

ஜனநாயகக் கட்சியினர் போர் மற்றும் ஒடுக்குமுறைக்கான பாரிய பென்டகன் நிதி ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றனர்

Andre Damon
23 June 2018

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் கோரப்பட்டவாறாய் அமெரிக்க இராணுவத்தின் ஒரு பாரிய விரிவாக்கத்திற்கு ஒப்புதலளிப்பதில் இந்த வாரத்தில் செனட்டின் ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினருடன் இணைந்தனர். கிட்டத்தட்ட முன்கண்டிராத அளவுக்கான பென்டகன் நிதிநிலை ஒதுக்கீட்டின் மீதான நாடாளுமன்றத்தின் நடவடிக்கையானது, ஒரு மவுனத் திரையின் பின்னால் நடந்து கொண்டிருக்கிறது, எந்த பொது விவாதமும் இல்லை, கிட்டத்தட்ட எந்த ஊடக வெளிச்சமும் இல்லை.

சமூக செலவினங்களை வெட்டும் திட்டங்களுடன் ட்ரம்ப் நிர்வாகம் அதிரடியாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையிலும் -உணவுக் கூப்பன் செலவினத்தில் இருந்து 23 பில்லியன் டாலர்கள் வெட்டுவதற்கு வியாழனன்று அவை- வாக்கெடுப்பை வென்றிருக்கிறது, அத்துடன் “செலவுகளைக் குறைக்கின்ற” பேரில் தொழிலாளர் மற்றும் கல்வித் துறைகளது சீர்திருத்தத்திற்கான ஒரு திட்டத்தையும் முன்னெடுக்கிறது- ஈராக் போர் சமயத்திலான உச்சக்கட்ட புள்ளிக்குப் பிந்தைய காலத்தின் மிகத் துரிதமான வேகத்தில் இராணுவச் செலவினத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒப்புதல் வழங்கியிருக்கின்றன.

”2019 நிதி ஆண்டுக்கான ஜோன் எஸ்.மெக்கெயின் தேசிய பாதுகாப்பு அதிகாரச் சட்டம்” என்று சொல்லப்படுகின்ற இது - மே மாதத்தில் பிரதிநிதிகள் அவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டதன் பின்னர் திங்களன்று செனட்டில் 85-10 என்ற வாக்கு விகிதத்தில் நிறைவேற்றப்பட்டது- பாதுகாப்புத் துறைக்கு 716 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது, இது 82 பில்லியன் டாலர் அதிகரிப்பாகும்.

இந்த அதிகரிப்பு மட்டுமே கல்வித் துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடான, சுமார் 70 பில்லியன் டாலர்களை விடவும் அதிகமாகும். அத்துடன் இது ரஷ்யாவின் வருடாந்திர இராணுவ நிதி ஒதுக்கீட்டை (61 பில்லியன் டாலர்) விடவும் அதிகமானதாகும். பென்டகனின் செலவினத்தில் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான அதிகரிப்பு சீனாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறை நிதி ஒதுக்கீட்டைக் காட்டிலும் அதிகமானதாகும்.

அமெரிக்க உளவு முகமைகள், உள்நாட்டு பாதுகாப்பு துறை, உள்ளூர் போலிசுக்கான கூட்டாட்சி உதவி மற்றும் பல்வேறு “கறுப்பு” நடவடிக்கைகளுக்கான நிதிச் செலவுகளையும் கணக்கிலெடுத்தோமென்றால், அமெரிக்காவின் “மொத்த இராணுவ”த்திற்கான நிதி ஒதுக்கீடானது ஒரு டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாய் செல்லக் கூடியதாகும், இது 261 மில்லியன் மக்கள் கொண்ட ஒரு நாடான இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் மிகப்பெரிய ஒரு தொகை ஆகும்.

பென்டகனுக்கான வருடாந்திர நிதி ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கிற்கு, அல்லது 265 பில்லியன் டாலருக்கு, மேல் சற்று செலவழித்தாலே, உலகில் பட்டினியை முடிவுக்குக் கொண்டுவந்து விட முடியும் என்று ஸ்டாக்ஹோம் அமைதி ஸ்தாபனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. இன்னுமொரு மூன்றிலொரு பங்கு, அல்லது 239 பில்லியன் டாலர், ஒட்டுமொத்த உலக மக்கள்தொகைக்கும் ஆரம்பக் கல்வி மற்றும் தொடக்க இடைநிலைக் கல்வியை வழங்கி விட முடியும்.

மாறாக, இந்த மிகப் பெரும் தொகைகள் பாரிய படுகொலைகளுக்கான கருவிகளைக் கட்டியெழுப்புவதற்கும் நிலைநிறுத்துவதற்குமாய் கொட்டப்படுகின்றன.

அமெரிக்கத் துருப்புகளை அமெரிக்காவின் வீதிகளிலும் நிறுத்துவதைக் கொண்ட ட்ரம்ப்பின் முன்கண்டிராத மற்றும் ஜனநாயகமற்ற இராணுவ அணிவகுப்புக்கான ஒதுக்கீடுகளும் இந்த நிதிஅறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் வாஷிங்டன் வீதிகளில் உலா வரக் கூடிய “எந்த வகையான மோட்டார் வாகனம், வான் சாதனம், வெடிபொருட்கள், செயல்பாட்டு இராணுவ அலகு அல்லது செயல்பாட்டு இராணுவக் களம்” ஆகியவற்றுக்கும் இந்த செலவின மசோதா அங்கீகாரமளிக்கிறது.

அதேபோல் ”கைதிகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவருவதற்கான தடைகளை” நீட்டிப்பதன் மூலமாக குவாண்டனோமோ விரிகுடா சிறை வளாகம் தொடர்ந்து இயங்குவதற்கும் இது அங்கீகாரமளிக்கிறது.

ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பதாகக் கூறிக் கொள்கின்ற இத்தனை ஷரத்துகள் இருக்கின்ற போதிலும், ஜனநாயகக் கட்சியின் 47 செனட்டர்களில் வெறும் ஏழு பேர் மட்டுமே “வேண்டாம்” என்று வாக்களித்தனர், இவ்வாறாய் ஒரு பெரும் வித்தியாசத்தில் இது நிறைவேறுவதை அவர்கள் உறுதி செய்திருந்தனர்.

ஜனநாயகக் கட்சியினர் கணிசமாய் எழுப்பியது ஒரேயொரு விமர்சனத்தை மட்டுமே. சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ZTEக்கு எதிரான கூடுதல் மூர்க்கமான வர்த்தகப் போர் நடவடிக்கைகளை அவர்கள் கோரியதோடு, ட்ரம்ப் அகற்றுவதற்கு எதிர்பார்த்த இந்நிறுவனத்திற்கு எதிரான அபராதங்களை தொடர்ந்து பராமரிக்கின்ற ஒரு ஷரத்தை நுழைத்தனர்.

இந்த நிதி ஒதுக்கீடு ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் இராணுவத்திற்கும் அவர்களது கறைபடிந்த விருப்பப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்ற ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் நிதியாதாரத்தை வழங்குகிறது:

* கடற்படை: இந்த நிதிநிலை ஒதுக்கீடு 2019 இல் பத்து புதிய கப்பல்கள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்கிறது, ஒவ்வொன்றும் 2.7 பில்லியன் டாலர் செலவு பிடிக்கத்தக்க இரண்டு Virginia வகை அணுத் தாக்குதல் நீர்மூழ்கிகள், ஒவ்வொன்றும் 1.8 பில்லியன் டாலர் செலவுபிடிக்கத்தக்க மூன்று புதிய Arleigh Burke அழிப்புக் கப்பல்கள், மற்றும் 12 பில்லியன் டாலருக்கும் அதிகமான செலவில் கூடுதலாய் ஒரு Gerald R. Ford வகை விமானந்தாங்கிக் கப்பல் ஆகியவை இதில் அடங்கும்.

* விமானப் படை: இந்த நிதிநிலை ஒதுக்கீட்டில், “அடுத்த தலைமுறை நெடுந்தொலைவு தாக்கும் குண்டுவீச்சு விமானமான” B-21 raider ரக அபிவிருத்திக்காக 2.3 பில்லியன் டாலர், மற்றும் B-52, B-1, மற்றும் B-2 குண்டுவீச்சு விமானங்களது விரிவாக்கத்திற்காக இன்னும் பில்லியன் கணக்கான டாலர்கள் ஒதுக்கீடு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

*அணு ஆயுதப் படை: இந்த நிதிநிலை ஒதுக்கீட்டின் மிகத் தீவிரப்பட்ட அம்சமாக இருப்பது அமெரிக்க அணு ஆயுதக் கிடங்கின் பாரிய விரிவாக்கப் பகுதியாகும். இது “குறைந்த-ஈவு அணு முனைகளை உருவாக்குவது மற்றும் தயாரிப்பு செய்வதன் மீதான 15 ஆண்டு காலத் தடை”யை அகற்றுகிறது, “நீர்மூழ்கியால் தொடுக்கப்படும் வெடிப்பு ஏவுகணையால் சுமந்து செல்லப்படும் குறைந்த ஈவு போர்முனையை உருவாக்குவதற்கு மற்றும் தயாரிப்பதற்கு”ம் அத்துடன் அணுத் திறம் கொண்ட கப்பலில் இருந்து வான்-வழி ஏவப்படுகின்ற ஏவுகணைக்கும் இது நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி ஒதுக்கீடு பென்டகனை “கண்டம் விட்டு கண்டம் பாயும் வெடிப்பு ஏவுகணைகளது எண்ணிக்கையை குறைப்பதில்” இருந்து தடை செய்கிறது, அத்துடன் புதிய அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு ”குழிகள்” உருவாக்கத்தினையும் விரிவாக்கம் செய்கிறது.

பரந்த சமூக ஆதாரவளங்கள் இராணுவத்திற்கு ஒதுக்ககப்படுவது குறித்த எந்த பொது விவாதமோ அல்லது கவனமான அக்கறையோ கிட்டத்தட்ட அங்கே ஏதுமில்லை. உலகெங்கிலும் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்படுவதன் மீது அதனினும் குறைந்த பொதுக் கட்டுப்பாடு அல்லது அதனினும் குறைந்த அறிந்திருத்தலே அங்கே இருக்கிறது. லிபியாவில் மட்டும், முன்னதாக நம்பப்பட்டதை விட இரண்டு மடங்காக, 550க்கும் அதிகமான ஆளில்லா விமானத் தாக்குதல்களை அமெரிக்க இராணுவம் நடத்தியிருப்பதாக இந்த வாரத்தில் Intercept ஆல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தெரிவித்தது.

பென்டகன் தரவுகளில் Truth dig செய்த பகுப்பாய்வு தெரிவிப்பதன்படி, ட்ரம்ப்பின் முதலாமாண்டு பதவிக் காலத்தின் போது ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு குண்டினை அமெரிக்க இராணுவம் வீசியிருந்தது, இது ஒபாமாவின் கீழிருந்த சமயத்தினைக் காட்டிலும் நான்கு மடங்கும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் கீழிருந்த காலத்தை விடவும் ஐந்து மடங்கும் அதிகமான விகிதமாகும்.

கேமராக்களில் இருந்து விலகி, அமெரிக்கா, ஏமனின் செங்கடல் துறைமுக நகரமான Hodeidah வுக்கு எதிரான சவுதியின் தலைமையிலான இரத்தக்களரியான தாக்குதலில் பங்குபெற்றுக் கொண்டிருக்கிறது, ஏமனின் பட்டினியால் வாடுகின்ற மற்றும் காலராவால் பீடிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்து விநியோகமாவதை நேரடியாகக் குறிவைத்து நடத்தப்படுகின்ற தாக்குதல் நடவடிக்கையாகும் இது. இந்த நடவடிக்கை கால் மில்லியன் கூடுதல் மரணங்களுக்கு இட்டுச் செல்லக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த அளவிலான ஏகாதிபத்தியக் குற்றங்கள், சொந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் ஒன்றுபட்டு வாழ முடியாது. அந்த விதத்தில் தான், இராணுவமானது ட்ரம்ப்பின் “பூச்சிய சகிப்பு” குடியேற்றக் கொள்கையில் ஒரு தலைமையான பாத்திரம் வகித்துக் கொண்டிருக்கிறது, பாரிய சுற்றி-வளைப்பு, சிறைப்படுத்தல் மற்றும் குழந்தைகள் -இவர்களில் ஆயிரக்கணக்கானோர் அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டவர்கள்- உள்ளிட்ட அகதிகளை சித்திரவதை செய்வது ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. இராணுவத் தளங்களில் 25,000 பேரை பிடித்து வைப்பதற்கான ஒரு திட்டத்தை வெள்ளிக்கிழமையன்று கடற்படை உருவாக்கியதன் மூலம், சாமானிய மக்கள் இராணுவத்தால் பாரிய அளவில் கைது செய்து வைக்கப்படுவதற்கான ஒரு முன்னுதாரணத்தை அமைத்துத் தருகிறது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாக, அமெரிக்கா 27 ஆண்டுகளாக தொடர்ச்சியாக போரில் ஈடுபட்டு வந்திருக்கிறது. இந்த முடிவில்லாத போரின் காலகட்டமானது நவீன அமெரிக்க வரலாற்றின் மிகத் தொடர்ச்சியான சமூக சமத்துவமின்மை அதிகரிப்புடனும், 2000 ஆவது ஆண்டின் திருடப்பட்ட தேர்தல் முதல் புஷ் நிர்வாகத்தின் சிஐஏ சித்தரவதை வேலைத்திட்டம் மற்றும் உள்நாட்டு வேவுபார்ப்புக்கான புஷ்-ஒபாமா ஆட்சி, மற்றும் இணையத்தை தணிக்கை செய்வதற்கு அரசாங்கத்தினாலும் தொழில்நுட்ப நிறுவனங்களாலும் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முனைப்பு வரையிலும், ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத மற்றும் தீவிரப்பட்டுச் செல்லும் தாக்குதல் இவற்றுடன் கைகோர்த்து வந்திருக்கிறது.

சமீபத்திய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் “பெரும் சக்திகளிடையேயான மோதலின்” ஒரு புதிய சகாப்தம் குறித்த அறிவிப்பைக் கொண்டு பார்த்தால், கடந்த கால்-நூற்றாண்டு காலத்தின் நவ-காலனித்துவப் போர்கள் ஒரு புதிய உலகப் போருக்கான முன்னோட்டமாக உருமாற்றமடைந்து கொண்டிருக்கின்றன, அணு ஆயுதங்களைக் கொண்டு அழித்தொழிக்கும் அச்சுறுத்தலை முன்நிறுத்துகின்றன. இதற்கானதே பென்டகனின் நிதிநிலை ஒதுக்கீடு ஆகும்.