ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Singapore summit and the growing war threat

சிங்கப்பூர் உச்சிமாநாடும் பெருகும் போர் அச்சுறுத்தலும்

Bill Van Auken
13 June 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வட கொரியா தலைவர் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையிலான சந்திப்பு சமீபத்திய வரலாற்றில் மிகவும் ஊடகவெளிச்சம் பெற்ற நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது, உலகெங்கிலும் இதனை நேரலை செய்தியில் ஒளிபரப்பும் பொருட்டு சிங்கப்பூரின் நகருக்கு ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்களை இது ஈர்த்திருந்தது.

வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஒரு வட கொரியத் தலைவருக்கும் இடையிலான முதன்முதல் நேருக்கு நேரான சந்திப்பாக அமைந்த இந்த உச்சிமாநாடு “வரலாற்றுசிறப்புமிக்கது” என்று தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

மூன்று மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காவுகொண்டதோடு வட கொரியாவை சின்னாபின்னமான ஒரு நிலையில் விட்ட ஒரு மோதலில் அமெரிக்க, வட கொரிய மற்றும் சீன இராணுவங்கள் ஒரு சண்டை நிறுத்தத்திற்கு உடன்பட்ட 65 ஆண்டுகளின் பின்னர், உத்தியோகபூர்வமாக இன்னும் போரின் ஒரு நிலையிலேயே இருந்து வருகின்ற இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான இந்த சுருக்கமான சந்திப்பின் இறுதி விளைவு என்னவாக இருக்கப் போகிறது என்பது இன்னும் தெளிவாகி விட்டிருக்கவில்லை.

ட்ரம்ப்பும் கிம்மும் கையெழுத்திட்டிருந்த ஒரு சுருக்கமான 400 வார்த்தைகளிலான கூட்டு அறிக்கையானது இரண்டு நாடுகளுக்கும் இடையில் “புதிய உறவுகளை” எதிர்நோக்குவதற்கும் “கொரிய தீபகற்பத்தில் ஒரு நீடித்த மற்றும் செயலூக்கமான அமைதி ஆட்சியை” கட்டியெழுப்புவதற்குமான ஒரு பரஸ்பர உடன்பாட்டை அறிவிக்கிறது. ட்ரம்ப் “கொரிய ஜனநாயக மக்கள் குடியரசுக்கு [DPRK] பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கு உறுதிப்பாடை” வெளிப்படுத்திய அதேநேரத்தில் கிம், “கொரிய தீபகற்பத்தை முழுமையாக அணுமயமற்றதாக்குவதற்கு அவரது உறுதியான மற்றும் சஞ்சலமற்ற உறுதிப்பாட்டை மறுஉறுதி செய்தார்.”

இதைத் தாண்டி, இந்த அறிவிக்கப்பட்ட இலட்சியங்களும் உறுதிப்பாடுகளும் எவ்வாறு பூர்த்தி செய்யப்படவிருக்கின்றன என்பது தொடர்பாக எந்த ஸ்தூலமான ஒன்றையும் இந்த சிங்கப்பூர் பிரகடனம் வழங்கவில்லை.

கிம் ஒரு “மிகத் திறமையான” மற்றும் “மிக சாமர்த்தியமான” மனிதர் என்றும் அவர் “தனது நாட்டை மிகவும் நேசிக்கிறார்” என்றும் ட்ரம்ப் புகழ, இந்த சந்திப்பின் தொனியானது, சென்ற ஆண்டில் ட்ரம்ப் இதே வட கொரியத் தலைவரை “சின்ன ராக்கெட் மனிதர்” என்று கேலி செய்ததோடு அவரது வறுமைப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட தேசத்தை “உலகம் இதற்கு முன் ஒருபோதும் கண்டிராத விதமாக.. நெருப்பு மற்றும் ஆவேசத்துடன்” ”முழுமையாக அழித்து விடுவதற்கு” அச்சுறுத்தியதில் இருந்து ஒரு மலைப்பூட்டும் மாற்றத்தைக் குறித்ததாக இருந்தது.

இந்த உச்சிமாநாட்டிற்குப் பிந்தைய ஒரு செய்தியாளர் சந்திப்பில், ட்ரம்ப், வட கொரியாவை நோக்கிய அவரது இராணுவவாதக் கொள்கையின் தாக்கங்களை ஒரு அலட்டிக்கொள்ளாத வக்கிரபுத்தியாளரின் சகஜதன்மையுடன் குறிப்பிட்டார். “உண்மையாகவே இதைச் செய்வது எனக்குக் கவுரவமளிக்கும் விடயம், ஏனென்றால், நீங்கள் 30,40,50 மில்லியன் மக்களை இழந்திருக்கக் கூடும்” என்றார் அவர்.

சிங்கப்பூர் உச்சிமாநாடு, வடகொரியாவுக்கு எதிரான அமெரிக்க போர் மிரட்டல்களின் ஒரு புதுப்பிப்பு மற்றும் தீவிரப்படலுக்கான முகவுரையாக நிரூபணமாகாது என்பதற்கு அங்கே எந்த உத்தரவாதங்களும் இல்லை என்பது தெளிவு. ட்ரம்ப் கிம்முடன் சேர்ந்து கையெழுத்திட்டிருந்த ஒரு மேலெழுந்தவாரியான உடன்பாட்டை ஸ்தூலமாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை தனது வெளியுறவுச் செயலரான மைக் பொம்பியோவிடமும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்டனிடமும் விட்டுவிட இருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும். பொம்பியோ, சிஐஏ இயக்குநராக இருந்தபோது, வடகொரியாவை அணுஆயுதங்களை கீழே போடச் செய்வதற்கான பாதை கிம் ஜோங்-உன்னை படுகொலை செய்வதன் வழியாகவே செல்லக் கூடியதாகும் என்று சூசகம் செய்தவராவர்; போல்டன், மிக சமீபத்தில் சென்ற பிப்ரவரியில், இந்த நாட்டிற்கு எதிராக ஆத்திரமூட்டலற்ற ஒரு குண்டுவீச்சுப் பிரச்சாரத்தை நடத்துவதற்கு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வாதிட்டிருந்தார்.

மிக சமீபத்தில் போல்டன், வட கொரியாவுடனான அமெரிக்க பேச்சுவார்த்தைகள் “லிபிய மாதிரி”யை -மும்மார் கடாபி அவரது பேரழிவு ஆயுதங்களை அகற்றுவதற்கு உடன்பட்டதுடன் தொடங்கி அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்லாமியப் போராளிகளின் கரங்களால் கடாபி அடித்துக் கொலைசெய்யப்படுவதுடன் இது முடிவடைந்தது- பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

அமெரிக்க இராணுவ மூர்க்கத்தனத்தின் மிரட்டலின் கீழும் பொருளாதாரத் தடைகளுக்கு முகம் கொடுக்கும் நிலையிலும் ஆயுதஒழிப்புத் திட்டங்களை முன்னெடுத்திருக்கின்ற நாடுகளிடம் நடந்து கொள்ளும் விதத்திலான வாஷிங்டனின் வரலாறு அதிகம் உறுதிசொல்ல முடியாததாகவே இருந்து வந்திருக்கிறது. “லிபிய மாதிரி” விதியாக இருக்கிறதே அன்றி, விதிவிலக்கானதாக இல்லை.

ஈராக்கும் லிபியாவும் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்கப் போர்களுக்கு இலக்காக்கப்பட்டு, அவற்றின் தலைவர்கள் கொல்லப்படுவதுடன் முடிவடைந்தன. பெரும் சக்திகளுடன் ஈரான் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் ஒருதரப்பாக கைவிட்டதற்குப் பின்னர் தண்டிப்பான தடைகள் புதுப்பிக்கப்படுகின்ற நிலைக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஈரான், செவ்வாய்கிழமையன்று, ட்ரம்ப் இந்த சிங்கப்பூர் உடன்படிக்கையை “வீடு திரும்பும் முன்னரே இரத்து செய்து விடக் கூடும்” என்று வடகொரியாவை எச்சரித்தது.

கிம் ஜோங்-உன் உடனான கையாளல்களில் வாஷிங்டனை உந்தித் தள்ளுவது, அவரிடம் இருக்கும் அற்ப எண்ணிக்கையிலான அணு ஆயுத வல்லமை குறித்த பயமுமல்ல, அல்லது வடகிழக்கு ஆசியாவில் அமைதிக்கான எந்த தாகமுமல்ல. மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்னெடுப்பதற்கும், அப்பிராந்தியத்தில், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய அதன் பிரதான எதிரிகள், அத்துடன் ஜப்பான் போன்ற போட்டியாளராகும் சாத்தியம் கொண்ட நாடுகளது நலன்களைப் பலிகொடுத்து அதன் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்குமே அது முனைந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுடனுமே எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்ற வட கொரியாவை அமெரிக்காவின் எதிரி நாடாக இருப்பதில் இருந்து ஒரு ஏவல் அரசாக மாற்றுவது என்பது பென்டகனும் வெள்ளை மாளிகையும் தொடுஎல்லையில் இருப்பதாக அறிவித்திருக்கக் கூடிய “பெரும் சக்திகளிடையிலான” மோதல்களுக்கான தயாரிப்பில் ஒரு முக்கியமானதொரு அடியெடுப்பைக் குறிப்பதாக இருக்கும்.

வட கொரியாவை “புரட்டிப் போடும்” தனது முயற்சியில் ட்ரம்ப் சாத்தியமான மிகக் கொடூர விதத்தில் இறங்கியிருந்தார். வட கொரியாவின் தலைவருக்கும் அவரது உதவியாளர்களுக்கும் ஹாலிவுட்டின் ஒரு தயாரிப்பு நிறுவனத்தால் ஒரு சண்டைப் படத்தின் ட்ரெய்லரின் பாணியில் உருவாக்கப்பட்டிருந்த நான்கு நிமிட காணொளித் துண்டு ஒன்றை அவர் காட்டினார், அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தின் கீழ் வட கொரியாவுக்கான ஒரு வளமான எதிர்காலத்தைக் காட்டுகின்ற (வண்ணத்திலான) காட்சிகளுடன், நாடு முழுமையாக அணு ஆயுதங்களால் அழிக்கப்படுகின்றதான காட்சிகளை (கருப்பு வெள்ளையில்) பேதப்படுத்தி அது காட்டியது.

உச்சிமாநாட்டிற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க ஜனாதிபதி வட கொரியா குறித்து ஏதோ ஒரு ரியல் எஸ்டேட் கட்டுமான ஒப்பந்தம் குறித்து விவாதித்துக் கொண்டிருப்பதைப் போன்று பேசினார். “உதாரணத்திற்கு, அவர்களிடம் அருமையான கடற்கரைகள் இருக்கின்றன” என்றார் அவர். “அவர்கள் பீரங்கி குண்டுகளை கடலில் வெடிக்கும் சமயத்தில் நீங்கள் அதைப் பார்ப்பீர்கள் தானே. நான் சொன்னேன், ‘பைய்யா, காட்சியைப் பார். பின்னால் வானுயர்ந்த கட்டிடங்களது வரிசை ஒன்றை அது கொண்டிருக்க முடியாதா?’ அப்புறம் விளக்கிச் சொன்னேன், ‘அதைச் செய்வதற்குப் பதிலாக, உலகின் மிகச் சிறந்த ஹோட்டல்களை அங்கே அமைக்கலாம்.’ ஒரு ரியல் எஸ்டேட் கண்ணோட்டத்தில் இருந்து யோசி. தென் கொரியா இருக்கிறது, சீனா இருக்கிறது, அவர்களெல்லாம் தமது நிலத்தை நடுவில் கொண்டிருக்கிறார்கள். அது எத்தனை பரிதாபம், சரியா?”

நியூயோர்க் நகரத்தின் ரியல் எஸ்டேட் ஊக வணிகர் ஒருவரது கொடூரமான மற்றும் பாதி-குற்றவியல் கண்ணோட்டத்தை பிரதிபலித்த அதேநேரத்தில், ட்ரம்ப்பின் வார்த்தைகள் அவர் சொல்லவந்த அடிப்படையான கருத்தை சொல்லி முடித்திருந்தது.

தனது வர்த்தகக் கூட்டாளிகளுக்கு எதிராக சுங்கவரிகளை விதித்துக் கொண்டிருக்கின்ற மற்றும், ரஷ்யா, சீனா இரண்டிற்கு எதிராகவும் இராணுவப் பதட்டங்களை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்ற வாஷிங்டனின் தலைமையிலான வர்த்தகப் போருக்கான முனைப்பினாலும் மிகப்பெரும் சக்திகளுக்கு இடையிலான மோதலினாலும் மேலாதிக்கம் செய்யப்படுவதாக இருக்கின்ற உலகளாவிய சூழ்நிலைமைக்கு வெளியில் சிங்கப்பூர் உடன்பாடானது புரிந்து கொள்ளப்பட முடியாததாகும்.

சிங்கப்பூருக்கு செல்லும் வழியில், ட்ரம்ப் கனடாவில் G7 உச்சிமாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார், 1975 இல் இத்தகைய உச்சிமாநாடுகள் தொடங்கியது முதலாக ஒரு இறுதி அறிக்கையில் கையெழுத்திட மறுத்த முதல் அரசுத் தலைவராக அவர் ஆனார்.

அதனைத் தொடர்ந்து, அவரும் அவரது உதவியாளர்களும், வெளிப்படையாக அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ருடோவை, 1930களின் பாசிச வாய்வீச்சை நினைவுக்குக் கொண்டுவருகின்ற வார்த்தைகளில் கண்டனம் செய்தனர்; “முதுகில் குத்திய”தாக அவரைக் குற்றம் சாட்டிய அவர்கள் அவருக்காக “நரகத்தில் ஒரு தனியிடம்” இருப்பதாகவும் அறிவித்தனர்.

சிங்கப்பூர் உடன்பாடானது, ஜேர்மனியின் நாஜி ஆட்சி போலந்து மற்றும் ரஷ்யாவுடன் பரஸ்பர வலிந்து தாக்காமையை வாக்குறுதியளிக்கின்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர், சிறிது காலத்திலேயே முழுவீச்சிலான படையெடுப்பை நடத்திய இதேபோன்ற உடன்படிக்கைகளில் தனது 1930களது முன்மாதிரியைக் கொண்டிருப்பது நிரூபணமாகக் கூடும்.

ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சியிடம் இருந்து வருகின்ற எதிர்ப்பு முழுக்கவும் வலதின் திசையில் இருந்தானதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்ததாகும். செவ்வாய்கிழமையன்று, செனட் சிறுபான்மைத் தலைவரான சக் சூமர், “ஒரு கொடூரமான மற்றும் ஒடுக்குமுறை சர்வாதிகாரத்திற்கு, அது நீண்டகாலமாக ஏங்கி வந்திருக்கின்ற சர்வதேச அங்கீரிப்பை வழங்கியதற்காக” அமெரிக்க ஜனாதிபதியை கண்டனம் செய்தார். தென் கொரியாவில் அமெரிக்க இராணுவ ஒத்திகைகளை நிறுத்தி வைத்ததற்காக ட்ரம்ப்பை கண்டனம் செய்யுமளவுக்கு சென்ற அவர், அவற்றை “ஆத்திரமூட்டுவன”வாக -துல்லியமாய்- விவரித்தார். வட கொரியாவுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்குமாயின், ட்ரம்ப் ஈரான் ஒப்பந்தத்தில் செய்ததைப் போல, ஜனநாயகக் கட்சியினர் அதை கிழித்தெறியப் பார்ப்பார்கள் என்பதற்கு அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன.

சிங்கப்பூருக்கு விஜயம் செய்ய ட்ரம்ப் பெற்ற உந்துதலில், வாஷிங்டனில் பல ஊழல்கள் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராய் ஒரு கடுமையான நிலைப்பாடு எடுக்கத் தவறியமைக்காக அவர் மீது தொடுக்கப்படுகின்ற இடைவிடாத தாக்குதல்கள் ஆகியவற்றில் இருந்து கவனத்தைத் திருப்புவதற்கு அவர் விருப்பம் கொண்டிருக்கும் பங்கும் சிறிதல்ல. வட கொரியா மீதான ஒரு அணு ஆயுதப் போர் மிரட்டலில் இருந்து விலகிக் கொள்வது போன்ற ஒரு நடிப்பும், அத்துடன் கொரிய தீபகற்பத்தில் இருந்து துருப்புகளை “தாயக”த்திற்கு கொண்டுவருவது குறித்த அவரது வெற்று வாய்வீச்சுமே கூட அமெரிக்க மக்களது பரந்த அடுக்குகள் மத்தியில் ஒரு இசைந்த அதிர்வை உருவாக்கி விடும் என்பது அவருக்குத் தெரியும்.

ஆயினும் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தைப் பீடித்திருக்கும் நெருக்கடியின் தர்க்கமானது உலகப் போரை நோக்கித் திரும்புகிறது. இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு ஒரே உருப்படியான அடிப்படை சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு எதிராக அணிதிரட்டுவதிலேயே அமைந்திருக்கிறது.