ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Ecuadorian president arrives in Britain as Julian Assange’s fate hangs in the balance

ஜூலியான் அசான்ஜின் தலைவிதி நிச்சயமற்று இருக்கையில், ஈக்வடோரிய ஜனாதிபதி பிரிட்டன் வருகிறார்

By James Cogan
21 July 2018

விக்கிலீக்ஸ் ஆசிரியர் மற்றும் ஆஸ்திரேலிய குடிமகன் ஜூலியான் அசான்ஜ் 2012 இல் இலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரிய போது அவருக்கு தஞ்சம் வழங்கப்பட்டிருந்தாலும், ஈக்வடோரிய ஜனாதிபதி லெனின் மொரேனோ நிர்வாகம் அவரை அங்கிருந்து வெளியேற நிர்பந்திக்க முயன்று வரும் நிலையில், மொரேனோ இன்று இலண்டன் வருகிறார்.

அசான்ஜ் தூதரகத்தை விட்டு வெளியே வந்தால், அவர் பிணையை மீறியதற்காக பிரிட்டனால் கைது செய்யப்பட்டு, உளவுவேலைகளில் ஈடுபட்டதாக இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கில் இழுக்க ஏறத்தாழ நிச்சயமாக அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் ஒரு கோரிக்கையை முகங்கொடுப்பார்.

மொரேனோ அரசாங்கத்தினது உத்தரவுகளின் கீழ், இலண்டனில் உள்ள ஈக்வடோரிய தூதரகம் மார்ச் 28 இல் இருந்து அசான்ஜின் அனைத்து வெளியுலக தொடர்பையும் வெட்டியுள்ளதுடன், அவரது வழக்கறிஞர்களைக் தவிர அவர் பார்வையாளர்களைச் சந்திக்கவும் தடை விதித்துள்ளது.


ஜூலியான் அசான்ஜ்

அந்த சிறிய கட்டிடத்திற்கு வெளியே அவர் காலடி எடுத்து வைத்தால் உடனடியாக கைது செய்யப்படும் பிரிட்டிஷ் அச்சுறுத்தலின் காரணமாக ஆறு ஆண்டுகள் அடைந்து கிடந்த பின்னர், அசான்ஜின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ், 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் "குறுக்கிடுவதற்கான" வஞ்சகமான ரஷ்ய சூழ்ச்சியின் பாகமாக இருந்ததாக அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஆரவாரத்துடன் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்ற நிலையில், தகவல்தொடர்பு பறிக்கப்பட்டிருப்பதானது அந்த தூதரகத்தை விட்டு அவரை வெளியேற்றுவதற்காகவும், அத்துடன் அவரை மவுனமாக்குவதற்காகவும் ஆழ்ந்த உளவியல் அழுத்தத்தைக் கூட்டுவதற்கான ஒரு பழி வாங்கும் முயற்சியாகும்.

இலண்டனுக்கு மொரேனோ விஜயம் செய்யவிருக்கின்ற நிலையில், அரசியல் நிர்வாகத்திற்கான அவரது தேசிய செயலர் பௌல் கிரான்டா ஜூலை 19 இல், “அசான்ஜுடன் எந்த பிரத்தியேக சந்திப்பும் திட்டமிடப்படவில்லை,” என்று அறிவித்தார். அதே தினத்தில், தற்காலிக ஈக்வடோரிய வெளியுறவுத்துறை அமைச்சர் அன்ட்ரஸ் தெரன் கூறுகையில், மொரேனோவின் அரசாங்கம் விக்கிலீக்ஸ் ஆசிரியர் குறித்து "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில்" இல்லை என்றார்.

இந்த கருத்துக்களில் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. எல்லா ஆதாரங்களும் இதற்கு எதிர்முடிவையே சுட்டிக்காட்டுகின்றன: அதாவது, அமெரிக்காவில் ஒரு கண்துடைப்பு விசாரணைக்கு முன்னதாக அசான்ஜை இழுத்துச் செல்வதற்கான ஒரு சூழ்ச்சி நன்கு முன்னேறிய கட்டத்தில் உள்ளது, இதில் அமெரிக்கா, பிரிட்டிஷ், ஈக்வடோர் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.

அமெரிக்க உளவுத்துறை முகமைகள் அசான்ஜை ஒரு "உளவாளியாக" வழக்கில் இழுக்க தீர்மானகரமாக உள்ளன. உலகின் ஒவ்வொரு பாகத்திலும் தொலைபேசிகள், கணினிகள், சர்வர்கள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மற்றும் வாகன கணினி அமைப்புகளை ஊடுருவ சிஐஏ எவ்வாறு இரகசிய மென்நிரல்களை அபிவிருத்தி செய்திருந்தது என்பதை அம்பலப்படுத்த விக்கிலீக்ஸ் "Vault 7” கசிவுகளைப் பிரசுரிக்க தொடங்கியதும், ஏப்ரல் 2017 இல் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு "முன்னுரிமை" தீவிரமாக்கப்பட்டது.

மொரேனோ அரசாங்கம் வாஷிங்டன் உடனான அதன் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மீட்டமைக்க, ஈக்வடோரிய வணிக உயரடுக்கின் சார்பாக, அதன் கைக்கூலி முயற்சிகளின் பாகமாக அது அசான்ஜைக் காட்டிக் கொடுத்துள்ளது. இலண்டன் தூதரகம் இராணுவ கூட்டுறவை மீள்ஸ்தாபிதம் செய்வதன் மீது அமெரிக்க தெற்கு கட்டளையக பிரதிநிதிகளுடன் ஈக்வடோரில் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்திய வெறும் ஒரு நாளுக்குப் பின்னர்தான் அது அசான்ஜின் தகவல் தொடர்புகளை துண்டித்தது.

அசான்ஜை இன்னலுக்கு உட்படுத்துவதில் மொரேனோ உடந்தையாய் இருப்பதை அடிக்கோடிடும் வகையில், அவரின் உதவியாளர்கள் அறிவிக்கையில், மொரேனோ இலண்டனில் இருக்கையில், அவர் அரசாங்கம் பெயரளவுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியுள்ள மற்றும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பத்திரிகையாளரின் உடல்நலன் குறித்து விசாரிக்கக் கூட, அத்தூதரகத்திற்கு செல்ல அவருக்கு எந்த உத்தேசமும் இல்லை என்று அறிவித்துள்ளனர்.

நேற்று Russia Today இன் பதிப்பாசிரியர் மார்கரீட்டா சைமோனியன் இவ்வாறு ட்வீட் செய்தார்: “வரவிருக்கும் வாரங்களில் அல்லது நாட்களிலேயே கூட அசான்ஜ் ஐக்கிய இராஜ்ஜிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எனது ஆதாரநபர்கள் தெரிவிக்கின்றனர்…"

சைமோனியனின் ஆதாரநபர்கள் நம்பத்தகுந்தவர்களா என்பது தெரியவில்லை. ஆனால் வரவிருக்கும் நாட்கள் குறித்து மொரேனோ, பிரதம மந்திரி தெரேசா மேயின் பழமைவாத அரசாங்கத்தினது முன்னணி பிரமுகர்களுடன் பேசுவார் என்ற உண்மை நம்பமுடியாத ஒன்றல்ல.

ரஷ்ய "தலையீடு" மற்றும் "குறுக்கீடு" என்று கூறப்படுவதன் மீது இந்த வாரம் ஹெல்சின்கியில் விளாடிமீர் புட்டின் உடனான ட்ரம்ப் சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் ஒட்டுமொத்த விஷமப் பிரச்சாரத்திற்கு மத்தியில், இங்கிலாந்து-ஈக்வடோரிய பேச்சுவார்த்தைகள் நடக்க இருக்கின்றன.

ஜனநாயகக் கட்சியின் தேசிய கமிட்டி (DNC) அனுப்பிய மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் ஜூலை 2016 இல் வெளியிட்டமை தான் குற்றச்சாட்டுக்களின் மையத்தில் உள்ளது, இவை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான பேர்ணி சாண்டர்ஸ் இன் பிரச்சாரத்தைப் பலவீனப்படுத்துவதற்காக நடுநிலை கட்சி நிர்வாகிகளாக வெளிவேடத்திற்கு இருந்தவர்கள் செய்த சூழ்ச்சிகளை வெளிக் கொண்டு வந்திருந்தன.

அந்த விபரங்கள், சாண்டர்ஸின் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களிடையே, குறிப்பாக ஒரு "ஜனநாயக சோசலிசவாதி" என்றும், “பில்லியனர்களை" எதிர்ப்பதாகவும் அவர் கூறியதன் காரணமாக அந்த வேர்மாண்ட் செனட்டருக்கு வாக்களித்திருந்த இளைஞர்களிடையே, கோபத்தைத் தூண்டின. ஜனநாயக கட்சியின் தேசிய கமிட்டியினது உயர்மட்ட அதிகாரிகள், கிளிண்டனின் ஆதாயத்திற்காக தேர்தல் வேட்பாளர்களை ஏமாற்றி சதி செய்ய முயன்றதற்காக அவமானகரமாக இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார்கள்.

ஆனால் ஜனநாயக கட்சி, அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அமெரிக்க உளவுத்துறை முகமைகளால் அப்போதிருந்து வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சியினது தேசிய குழுவைக் குறித்த கசிவுகள், 2016 ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக சூழ்ச்சி செய்ய ரஷ்யா-முடுக்கிவிட்ட ஒரு முயற்சிக்கு "ஆதாரங்களாக" இருந்ததாக காட்டி வேறுவிதமாக மாற்றப்பட்டன. விக்கிலீக்ஸூம் அசான்ஜூம் புட்டின் ஆட்சிக்கு உடந்தையாய் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஜனவரி 6, 2017 இல் அமெரிக்க தேசிய உளவுத்துறை அலுவலகம் பின்வருமாறு குற்றஞ்சாட்டியது: “பிரதான ரஷ்ய இராணுவ உளவுத்துறை இயக்குனரகம் (GRU) ஜனநாயக கட்சியின் தேசிய கமிட்டி மற்றும் மூத்த ஜனநாயக கட்சி நிர்வாகிகளிடம் இருந்து அபகரித்த ஆவணங்களை விக்கிலீக்ஸிற்கு வழங்கியது குறித்த உயர்மட்ட இரகசிய செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது. விக்கிலீக்ஸின் நம்பகத்தன்மை மீதான சுய-பிரஸ்தாப நற்பெயரின் காரணமாக, மாஸ்கோ பெரும்பாலும் விக்கிலீக்ஸைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.”

ரஷ்ய “போலி செய்திகள்” மற்றும் “தலையீடு” குறித்த வாதங்கள், விக்கிலீக்ஸ் மற்றும் உலக சோசலிச வலைத் தளம் உட்பட இணையத்தில் பிரசுரிக்கப்படும் எதிர்ப்புகளைத் தணிக்கை செய்வதற்கான அதிகரித்த மற்றும் தொடர்ந்து நடந்து வரும் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில், ரஷ்ய “குறுக்கீடு” குறித்த வலியுறுத்தல்கள், ரஷ்யாவுடன் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் இராணுவ மோதலுக்கான அமெரிக்க ஸ்தாபகத்தின் வெறித்தனமான கோரிக்கைகளைத் தொடுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது, இத்தகைய மோதல் அந்த அணுஆயுத நாடுகளுக்கு இடையே போரை தூண்டிவிட அச்சுறுத்துகின்றது.

அசான்ஜ் ஒரு "ரஷ்ய உளவாளி" என்ற குற்றச்சாட்டு, பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் மற்றும் போருக்கு தயாரிப்புகள் செய்வதற்கும் இரண்டுக்கும் அவசியப்படுகிறது.

ஓர் ஊடக நிறுவனம் ஆவணக் கசிவுகளைப் பிரசுரித்ததற்காக அதை வழக்கில் இழுக்க முடியாது. ஆகவே தான் நவம்பர் 2010 இல் துணை ஜனாதிபதி ஜோ பைடன் அசான்ஜை ஒரு "நவீன-தொழில்நுட்ப பயங்கரவாதி" என்று முத்திரை குத்தினார். ஏப்ரல் 2017 இல், சிஐஏ இயக்குனர், இப்போதைய வெளியுறவுத்துறை செயலர், மைக் பொம்பியோ, விக்கிலீக்ஸை "அரசு-சாரா எதிர் உளவுத்துறை முகமை" என்று முத்திரை குத்தினார்.

அசான்ஜை ஒரு ரஷ்ய உளவாளியாக குற்றஞ்சாட்டினால், அது நீண்டகாலத்திற்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கும். பேச்சு சுதந்திரம் மீதிருக்கும் அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் சட்ட பாதுகாப்புகளுக்கு எந்தவொரு பொறுப்பும் ஏற்காமல், தகவல் கசிவுகளைப் பிரசுரிக்கும் சர்வதேச ஊடக அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்களை வழக்கில் இழுக்கலாம்.

அசான்ஜ் ஒரு ரஷ்ய கருவி என்ற அவதூறு தீர்க்கமான சித்தாந்த நோக்கங்களுக்கும் சேவையாற்றுகிறது. இதை சர்வதேச அளவில் ஊடக மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் முன்னாள்-தாராளவாத மற்றும் போலி-இடது அடுக்குகள், விக்கிலீக்ஸை மற்றும் ஜனநாயக உரிமைகளை அவை பாதுகாக்க மறுப்பதை நியாயப்படுத்தவும், அமெரிக்க ஏகாதிபத்தியம், ஜனநாயக கட்சி மற்றும் அமெரிக்க உளவுத்துறை முகமைகளுடன் அணி சேர்வதற்கும் சாதகமாக்கிக் கொண்டுள்ளன.

யாரிடமிருந்து ஆதாரம் கிடைத்திருந்தாலும், விக்கிலீக்ஸ் பதிப்பித்த தகவல்கள் மதிப்புடையவை என்பதோடு, ஜனநாயக கட்சியின் மற்றும் அதன் வேட்பாளர் கிளிண்டனின் ஊழல்மிக்க, இராணுவவாத மற்றும் பெருவணிக தன்மையை மக்களுக்குக் கூடுதலாக அவை தெளிவுபடுத்தின என்பதே உண்மை. இதுபோன்ற ஆவணக் கசிவுகளைப் பெறும் எந்தவொரு நியாயமான ஊடக அமைப்பும் அவற்றை பதிப்பித்திருக்கும்.

மொரேனோ பிரிட்டனில் இருந்த அதேநேரத்தில் அங்கிருந்த ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் மற்றும் பிரிட்டனின் வெளியுறவு விவகாரங்களுக்கான செயலர் ஜெர்மி ஹன்ட் பங்கெடுத்த நேற்றைய ஒரு ஊடக கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்கள், அசான்ஜ் முகங்கொடுக்கும் அளப்பரிய அபாயத்தை அடிக்கோடிடுகிறது.

ஹன்ட் குரூர திருப்தியுடன் கூறினார்: “அவருக்கு [அசான்ஜிற்கு] எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன என்பதோடு, அந்த குற்றச்சாட்டுக்கள் மீதான நீதியை அவர் முகங்கொடுக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் ஆனால் எங்களின் நாடு விசாரணை நடைமுறைகளைக் கொண்ட ஓர் நாடாகும். எந்தவொரு நேரத்திலும் அவர் விரும்பினால், அவர் நைட்ஸ்பிரிட்ஜ் வீதிகளில் இறங்கி சுதந்திரமாக நடக்கலாம், பிரிட்டிஷ் போலிஸ் அவரை மனதார வரவேற்கும்,” என்றார்.

பிஷப் ஓர் ஆஸ்திரேலிய பிரஜையின் உரிமைகள் மீதும் மற்றும் அமெரிக்காவினால் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற ஒரு பத்திரிகையாளர் மீதும் அடுத்தடுத்து வந்த ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் முழு வெறுப்பைப் படிப்படியாக உச்சரித்தார். அவர் ஹன்ட் இன் அச்சுறுத்தல்களுடன் கருத்து வேறுபடாமல் விடையிறுத்து, நடைமுறையளவில் அசான்ஜின் தலைவிதி மீது அவர் அரசாங்கம் கை கழுவி இருப்பதை எடுத்துக்காட்டினார். அவர் ஊடங்களுக்குத் தெரிவித்தார்: “திரு. அசான்ஜ் பிரிட்டிஷ் சட்ட நடைமுறைகளுக்கு உள்ளாக வேண்டிய விவகாரங்கள் இன்னமும் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம், ஆகவே அது பிரிட்டிஷ் சட்ட அமுலாக்க அதிகாரிகள் மற்றும் முகமைகள் சார்ந்த ஒரு விடயமாக இருக்கும்,” என்றார்.

உண்மையில் பிரிட்டனில் அசான்ஜ் முகங்கொடுக்கும் "குற்றச்சாட்டுக்கள்" அவர் தஞ்சம் கோரிய போது பிணையை மீறினார் என்பதிலிருந்து மட்டுமே எழுகிறது, இது பாலியல் துர்நடத்தை என்ற போலி குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமான "கேள்விகளுக்கு" பதிலளிப்பதற்காக அவரை ஸ்வீடனிடம் ஒப்படைக்கும் ஒரு வஞ்சகமான பிடியாணையைத் தவிர்ப்பதற்காக அவர் பிணை மீற வேண்டியிருந்தது. ஸ்வீடனிடம் இருந்து அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாமென அவர் மிகச் சரியாகவே அஞ்சினார்.

ஸ்வீடிஷ் வழக்கு தொடுனர்களால் இதுவரையில் எந்த குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை, இறுதியில் அவர்கள் டிசம்பர் 2016 இல் அவரை இலண்டனில் வைத்தே விசாரிக்க உடன்பட்டனர். ஸ்வீடன் அந்த மோசடி விசாரணையையும் ஏப்ரல் 2017 இல் கைவிட்டது, ஆனால் பிரிட்டிஷ் அதிகாரிகளும் நீதிமன்றங்களும் பிணையை மீறியதாக இப்போது-மிகைப்படுத்தப்பட்ட அந்த குற்றச்சாட்டுக்களைக் கைவிட மறுத்துவிட்டன.

அமெரிக்காவின் உளவுபார்ப்பு சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் மட்டுமே அனேகமாக அசான்ஜிற்கு எதிரான "தீவிர குற்றச்சாட்டுக்களாக" இருக்கக்கூடும், இதில் ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ கூட விதிக்கப்படலாம்.

ஏகாதிபத்திய போர் குற்றங்கள் மற்றும் சூழ்ச்சிகள், பெருநிறுவன துஷ்பிரயோகங்கள் மற்றும் ஊழல் மீதும், அமெரிக்க-தலைமையிலான போர் தயாரிப்புகள் மீதும் மவுனமாக இருக்குமாறு, இரகசிய ஆவணங்களைப் பகிரங்கப்படுத்துபவர்களையும் சுதந்திர ஊடக அமைப்புகளையும் பீதியூட்டுவதே அசான்ஜைத் தொடர்ந்து இன்னலுக்கு உட்படுத்துவதன் நோக்கமாகும்.

அசான்ஜ் இலண்டன் தூதரகத்தையும் மற்றும் பிரிட்டனையும் விட்டு வெளியே வருவதற்கும் மற்றும் அவர் விரும்பினால் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதற்கும், அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்ற ஓர் உத்திரவாதத்துடன், அவருக்கு நிபந்தனையின்றி உரிமை வழங்க கோருவதற்கான போராட்டத்தை ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளின் அனைத்து பாதுகாவலர்களும் முன்னெடுக்க வேண்டும்.

இக்கட்டுரை ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

The Turnbull government must act to repatriate Australian citizen Julian Assange to Australia
[19 June 2018]

The Campaign to Free Julian Assange