ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Heritage we defend

Chapter: 29 The Historic Betrayal in Ceylon

நாம் காக்கும் மரபியம்

இலங்கையில் வரலாற்றுக் காட்டிக் கொடுப்பு

David North
5 January 1988

ஜூன் 1963ல் பப்லோவாதிகள் மறு ஐக்கிய மாநாடு நடந்த ஐந்து மாதங்களுக்குள், சோசலிச தொழிலாளர் கட்சி  (SWP), ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக் கொடுத்ததின் பின்னணியில் இருந்த குட்டி முதலாளித்துவ பிற்போக்கு முன்னோக்கை அம்பலப்படுத்தும் ஒரு நிகழ்வு ஏற்பட்டது. நவம்பர் 22 அன்று ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி டலாசில் கார்களின் அணிவரிசையில் சென்று கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். சோசலிச தொழிலாளர் கட்சி இதை எதிர்கொண்டவிதம் புரட்சிகர மார்க்சிசத்தின் வரலாற்றிலேயே முன்னோடி இல்லாத வகையில் இருந்தது. கட்சியின் தேசிய செயலாளாரான ஃபரால் டொப்ஸ் (Farrell Dobbs) கென்னடியின் விதவை மனைவிக்கு ஓர் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தார், அது 1963 டிசம்பர் 2, மிலிட்டன் பதிப்பில் வெளியிடப்பட்டது: "ஜனாதிபதி கென்னடி மிருகத்தனமாக படுகொலை செய்யப்பட்டதை, ஒரு மனிதத் தன்மையற்ற, சமூக விரோத, குற்றச்செயல் என்று சோசலிச தொழிலாளர் கட்சி கண்டனத்திற்கு உட்படுத்துகிறது. திருமதி கென்னடிக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் துயரமான இந்நேரத்தில் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். …."

"எமது சமூகத்திற்குள் இருக்கும் அரசியல் வேறுபாடுகள் ஒரு ஒழுங்கான முறையில், அனைத்துக் கருத்துக்களும் சுதந்திரமான, பகிரங்கமான விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ஒரு பெரும்பான்மையான முடிவின் கீழ் தீர்வுகாணப்பட வேண்டும்."

காஸ்ட்ரோயிசம் மீதான கருத்துவேறுபாடுகளின்பொழுது, SWP சீரழிந்துவிட்டது என்ற சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) கூற்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகத்திற்குமுன்னே கியூப புரட்சியை அது பாதுகாத்ததன் மூலம் நிருபணம் இல்லாமற் போயிற்று என்று ஹான்சன் வாதிட்டிருந்தார். ஆனால் கென்னடியின் படுகொலையை எதிர்கொண்ட அளவில், ஒரு கோழைத்தனமான பீதி SWP தலைமையை பற்றிக் கொண்டது. கம்யூனிச-விரோத சூனியத்தன வேட்டையாடல் வந்துவிடுமோ என்ற பெரும் பீதியில், SWP தலைவர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் வெட்கமின்றி, கூனிக்குறுகி நின்றனர்.

படுகொலைக்கு பின்னர் வெளிவந்த முதல் மிலிட்டன், டிசம்பர் 2, 1963 பதிப்பு மறைந்த ஜனாதிபதியின் இறுதிச் சடங்குகளின்போது கென்னடி பற்றிய புகழாரங்களை பாராட்டத்தக்கவகையில் மேற்கோளிட்டது. தலைமை நீதிபதி ஏர்ல் வோரனுடைய உரை "சீரிய சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கருத்துக்கள் எப்படி ஆழ்ந்த, அறிவுறுத்தும் தன்மையைக் கொண்டிருக்கும்" என்பதற்கு ஓர் உதாரணமாக மேற்கோளிடப்பட்டது. மிலிட்டனின் கட்டுரையில், வோரனுடைய உரையில் இருந்து "நாம் உண்மையிலேயே இந்நாட்டை நேசிக்கிறோம் என்றால், வெறுப்பை களைந்துவிட வேண்டும்" என்ற சொற்றொடர் தலைப்பாக போடப்பட்டது.

பண்டாவின் "27 காரணங்கள்" SWP பற்றி கடுமையான கண்டனங்களை உள்ளடக்கியிருந்த உண்மை ஒருபுறம் இருக்க, உண்மையிலேயே வெட்ககரமான இந்த நிகழ்வை பற்றி அவர் வினோதமான முறையில் மௌனம் சாதித்துள்ளார். இது ஒன்றும் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியாக இருந்து நான்காம் அகிலத்தின் கொள்கைகளை காக்கும் வரையிலான SWP செயற்பாடுகளை மட்டும்தான் அவர் சாடுகிறார். ஆனால் SWP, ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து உடைத்துக்கொண்ட பின்னர், பண்டா அதன் உண்மையான குற்றங்கள் பற்றி ஏதும் குறிப்பிட விரும்பாமல் இருந்துவிட்டார். இவ்விதத்தில் அவர் 1941ல் மின்னியாபொலிசில் தேசவிரோத விசாரணை நடந்தபோது கனனின் நடத்தை பற்றி, "அரசியல் கோழைத்தனம்; அமெரிக்க தொழிலாளர்களின் பின்தங்கிய பகுதிகளுக்கு நிபந்தனையற்ற சரணடைவு…." என்று கண்டிக்கிறார். ஆனால் SWP அனைத்துலகக் குழுவுடன் பிளவுற்று சில மாதங்களுக்கு பின்னர் அமெரிக்க ஆளும் வர்க்கத்துடன் ஐக்கியம் கொள்வது பற்றிய அதன் பகிரங்க அறிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை.

சோசலிச தொழிலாளர் கழகம் SWP இன் தந்தியின் வர்க்க முக்கியத்துவத்தை உணர்ந்து அதை பகிரங்கமாகக் கண்டித்தது. "மார்க்சிசவாதிகளும் கென்னடி படுகொலையும்" என்ற தலைப்பில் ஜெர்ரி ஹீலி எழுதினார்:

ஜனாதிபதி கென்னடியின் படுகொலை வழக்கத்தைவிட கூடுதலான வகையில் மத்தியதர வர்க்கத்தின் இலக்கிய, அரசியல் பிரதிநிதிகளால் பெரும்பீதி, கண்ணீர் விடுதல் மற்றும் புகழாரம் சூட்டுதல் போன்ற செயற்பாடுகளை அதிகரித்துள்ளது.

இவருடைய வாழ்க்கையை பற்றி சோசலிச மற்றும் தாராளவாத செய்தி ஏடுகள் எனக்கூறப்படுவனவற்றில் சில கட்டுரைகளை படிக்கையில், கென்னடி நீக்ரோக்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார் மற்றும் பெயரில் கூறிக்கொள்ளவில்லையே ஒழிய ஒரு சோசலிஸ்ட்டாக இருந்தார் என்ற கருத்து ஒருவருக்கு ஏற்படுமேயாயின் அது மன்னிக்கத்தக்கதே.

இவ்வாறுதான் உலகின் மிகப் பிற்போக்குத்தனமான ஏகாதிபத்திய சக்தியை அதன் நெருக்கடி காலத்தில் சர்வதேச முதலாளித்துவத்தின் கைக்கூலிகள் மூடிமறைக்க முயல்கின்றனர்.

தன்னுடைய வர்க்கத்தின் மிகச் சக்திவாய்ந்த பிரதிநிதியாக கென்னடி இருந்தார் என்பதில் ஐயமுமில்லை. அவர் புரிந்த செயல்கள் அனைத்தும் ஒரே நோக்கத்தைத்தான், அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்துதல், என்பதைத்தான் கொண்டிருந்தது.

நீக்ரோ உரிமைகளைப் பற்றி அவர் பேசியபொழுது, தன்னுடைய வர்க்கத்தின் சார்பாக நீக்ரோ மக்களை தொடர்ந்து சிறந்த அடிமைகளாக வைக்கக் கூடிய வகையில், உயர் மதிநுட்பமுள்ள தாராளவாத சொற்றொடர்களைத்தான் அவர் பயன்படுத்தினார்.

மார்க்சிஸ்ட்டுகள் கென்னடியின் மரணத்தைப் பற்றி எவ்வகையாயினும் பரிவுணர்வை வெளிப்படுத்தவில்லை. மற்றொரு ஏகாதிபத்தியக் கொடுங்கோலராகத்தான் அவர் இருந்தார்.

அவருடைய மரணத்திற்கு காரணமாக இருந்த தனிநபர் பயங்கரவாதச் செயலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது நடந்த விதம் பற்றி வெறுப்பதாலும், மனிதாபிமானத்தினாலும் அல்ல, மாறாக தனிநபர் பயங்கரவாதம் என்பது புரட்சிகரக் கட்சியை கட்டியமைப்பதற்கு ஒரு மாற்றீடு ஆகாது என்பதால்தான்.

தொழிலாள வர்க்கத்தை கட்டுக்குலைய செய்து, தலைமை இன்றிச் செய்யும் ஒரு கருவிதான் பயங்கரவாதம். முக்கியமான முதலாளித்துவ அரசியல்வாதிகள், பெரும் அரசியல் வல்லுனர்களை அகற்றிவிட்டால், தொழிலாள வர்க்கத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற தோற்றப்பாட்டை அது உருவாக்குகிறது.

ஆனால் ஒவ்வொரு கொல்லப்பட்ட கொடுங்கோலனுக்கும் பதிலாக இன்னொருவர் அவருடைய இடத்திற்கு வரத் தயாராக உள்ளார். அமெரிக்காவில் முதலாளித்துவ அமைப்பு தூக்கி எறியப்பட்டு அதற்குப் பதிலாக தொழிலாள வர்க்கம் அதிகாரத்தையும் சோசலிசத்தையும் மாற்றீடாகக் கொள்வது ஒன்றுதான் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின், அது வெள்ளையராயினும், கறுப்பராயினும் சரி, பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணும். 1

பின்னர் ஹீலி, SWP படுகொலையை எதிர்கொண்டவிதம் பற்றி ஆய்வுசெய்தார்: "லீ ஓஸ்வால்ட் மரணம் விளைவித்த குண்டை சுட்டபோது, ஒரு ஜனாதிபதியை படுகொலை செய்தல் என்பதைவிடக் கூடுதலான ஒரு செயலை அவன் செய்தான்.

"அமெரிக்காவில் உள்ள சோசலிச தொழிலாளர் கட்சி ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சி, நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் அது ஸ்தாபிக்கப்பட்ட மரபுகளை இன்னும் தொடர்கிறது என்ற முற்றிலும், அப்பட்டமான பொய்யையும் அவன் அழித்தான்." 2

சோசலிச தொழிலாளர் கட்சியின் அறிக்கையை "ஒரு குமட்ட வைக்கும் அறிக்கை... அமெரிக்க மத்தியதர வர்க்கத்தின் திசையில் மட்டும் முற்றிலும் கண்களைப் பதித்துள்ள கோழைத்தனமான தாராளவாதிகளால் எழுதப்பட்டது" என்று கண்டித்த ஜெர்ரி ஹீலி, "அரசியல் வேறுபாடுகள் ஒழுங்கான முறையில்" தீர்வு காணப்பட வேண்டும் என்று தந்தியில் கொடுத்திருந்த அழைப்பையும் கடுமையாக சாடினார்.

உண்மையிலேயா! அதை பேர்மிங்ஹாம், அலபாமா ஆகிய இடங்களில் உள்ள நீக்கரோக்களிடமும் கென்டக்கியில் இருக்கும் சுரங்கத் தொழிலாளர்களிடமும் கூறுங்கள். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் இருக்கும் காலனிகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களிடம் கூறுங்கள்.

வர்க்கப் பிரச்சினைகளின் தீர்வு ஓர் ஒழுங்கான முறையில் ஏற்படாது. ஒரு வன்முறை வழியாகத்தான் ஏற்படும், ஏனெனில் ஆளும் வர்க்கம் தன்னுடைய அதிகாரத்தை ஒருபோதும் அமைதியான முறையில் விட்டுக் கொடுக்கப்போவதில்லை. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு, ஃபரால் டொப்ஸ் தன்னுடைய ஏகாதிபத்திய அரசாங்கத்தின் மிருகத்தனத்தை மூடி மறைக்கும் வகையில் "ஒழுங்கு" என்ற மொழியைப் பேசும் மற்றொரு அமெரிக்க தாராளவாதிதான்.. 3

கென்னடியின் படுகொலைக்கு சோசலிச தொழிலாளர் கட்சி கொடுத்த விடையிறுப்பின் அரசியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதில் ஹீலி சரியாகத்தான் எழுதினார். அமெரிக்க சமுதாயத்தின் மேற்பரப்பிற்கு சற்றே கீழிருக்கும் மகத்தான வர்க்க அழுத்தங்களை பிரதிபலித்த அரசியல் நெருக்கடியை திடீரென எதிர்கொண்டதில், சோசலிச தொழிலாளர் கட்சி தன்னுடைய வர்க்க விசுவாசம் எங்கு உள்ளது என்பதை தெளிவாகக் காட்டியுள்ளது. டொப்ஸ் இன் செய்தியை, ஒரு மார்க்சிசவாதி இல்லாவிடினும் மால்கம் X கூறிய எளிமையான, சுருக்கமான கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், அவர் இன்னும் தெளிவான முறையில் சோசலிசத் தொழிலாளர் கட்சியை விட உணர்ந்திருந்தார்; அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கென்னடியின் படுகொலையினால் ஏற்பட்ட உட்குறிப்புக்களை சோசலிச தொழிலாளர் கட்சியை விட தெளிவாக அறிந்திருந்தார்: "கோழிக்குஞ்சுகள் உறங்குவதற்கு கூட்டிற்குள் வருகின்றன" என அவர் கூறினார்.

கென்னடி படுகொலைக்கு சோசலிச தொழிலாளர் கட்சியின் பிரதிபலிப்பானது, பப்லோவாதிகளுடனான சோசலிச தொழிலாளர் கட்சியின் மறு ஐக்கியம் என்பது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர முன்னோக்கை கைவிடுதலுடன் பிணைந்திருந்தது என்பதற்கு மறுக்கமுடியாத நிரூபணத்தை கொடுத்துள்ளது. ஆயினும் கூட இது ஒரு நிகழ்வு மட்டுமே. உண்மையில் SWP மற்றும் பப்லோவாதிகளின் மறு ஐக்கியத்தின் உலக வரலாற்றுத் தாக்கங்கள், ஜூன் 1964ல் பப்லோவாத "அகிலத்தின்" இலங்கை பகுதியான லங்கா சம சமாஜக் கட்சி (LSSP), திருமதி பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் நுழைந்தபோது வெளிவந்தன. இதுதான் பப்லோவாதத்தின் உண்மையான ஆகஸ்ட் 4 ஆகும். வரலாற்றிலேயே முதல் தடவையாக, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு கட்சி, முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்து கொண்டது. இந்தக் காட்டிக்கொடுப்பு, பல ஆண்டுக்கணக்கான தயாரிப்புக்கு பின்னர் நடந்தேறியது, அத்தோடு இந்த அரசியல் குற்றத்திற்கு பப்லோவாதிகளே முழுப் பொறுப்பாளிகள் ஆவர். ஜூன் 1964க்கு பின்னர் பப்லோவாதத்தின் எதிர்ப்புரட்சிகர பங்கைப் பற்றி இனி எவ்வித ஐயமும் இருக்க முடியாது.

1953 இல் இருந்து, LSSP க்குள் ஆழமடைந்து கொண்டிருந்த அரசியல் நெருக்கடியும், ஒரு புரட்சிகர கட்சியில் இருந்து சீர்திருத்தவாதக் கட்சியாக அதன் மாற்றம் ஆகியவை பப்லோவின் கலைப்பு நிலைப்பாட்டிற்கான அதன் ஆதரவில் பிரதிபலித்தன. "பகிரங்கக் கடிதத்தை" வெளியிடுவதற்கு LSSP எதிர்த்திருந்தது, சர்வதேச செயலகத்துடன் (International Secretariat) அமைப்பு ரீதியான அதன் தொடர்பை பாதுகாத்தது, மற்றும் SWP ஐரோப்பிய பப்லோவாதிகளுடன் மறு ஐக்கியத்தை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கை ஆற்றியது. பப்லோவாதிகளுக்கான LSSP இன் ஆதரவு, இன்னும் வெளிப்படையாக இலங்கையின் தேசிய முதலாளித்துவ வர்க்கத்துடன் நேரடி அரசியல் கூட்டுக்களைகளை வைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அதன் தலைமைக்குள் வளர்ந்திருந்த சக்திவாய்ந்த சந்தர்ப்பவாதப் போக்குகளுடன் பிணைந்திருந்தது. இதற்கு பதிலாக, இறுதியில் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் LSSP இன் நுழைவுக்கு இட்டுச்சென்ற இவ்வுறவுகளின் வளர்ச்சிக்கு பப்லோவாதிகளால் ஒப்புதலளிக்கப்பட்டது.

இலங்கை தொழிலாள வர்க்கத்தின் காட்டிக் கொடுப்பிற்கு, பப்லோவாதிகளின் குற்றம் சார்ந்த பொறுப்பு பற்றி பண்டாவை விட அதிகம் தெரிந்தவர்கள் எவருமே இல்லை. LSSP இன் அரசியலை பொறுத்தவரை, 1950 களில் இருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அணுகுமுறை, பப்லோவாதிகளில் இருந்து முற்றிலும் எதிராக இருந்தது என்பதை அவர் அறிவார். 1953ம் ஆண்டு பிளவிற்குப் பின்னர், ஹீலியும் கனனும் LSSP தலைமையின் சந்தர்ப்பவாதத் தன்மையைப் பற்றி அறிந்திருந்தனர். 1957ம் ஆண்டு, ஹீலி கனனுக்கு எழுதிய கடிதங்களில், LSSP இன் வலதுசாரி நோக்குநிலை பற்றி வலியுறுத்தியதன் மூலம் லெஸ்லி குணவர்தனவின் ஐக்கியத்திற்கான முன்மொழிவிற்கு குரோதமாக எதிர்வினை ஆற்றினார். ICFI க்கும் பப்லோவாதிகளுக்கும் இடையே இருந்த தெளிவான அரசியல் பிளவுகள், அதாவது மார்க்சிசத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் இடையே இருந்த அரசியல் பிளவுகள், அவர்கள் LSSP யிடம் கொண்டிருந்த உறவில் நேரடியான வெளிப்பாட்டைக் கண்டது. இக்காரணத்தினால்தான் இந்தச் சான்றை மறைத்து தன்னுடைய தற்போதைய கன்னையின் தேவைகளுக்கேற்ப பண்டா வெட்கமின்றி வரலாற்றை வேறுவிதமாக எழுத முயல்கிறார்; அவர் அறிவிப்பதாவது:

இன்னும் தெளிவாகச் சுட்டிக்காட்ட வேண்டியது, அனைத்துலகக் குழு LSSP விவகாரத்தில் எவ்வித பயனுள்ள தலையீட்டையும் காட்டாதது ஆகும்; LSSP 1958ல் இருந்தே அதிகமான வகையில் இது வலதுபுறம் நகர்ந்துகொண்டிருந்ததுடன், SLFP க்கு இணங்கி நடக்க வேண்டும் என்று கருதியிருந்தது. 1960ல் இருந்து 1964 வரை LSSP இல் உள்ள மத்தியவாத பிரிவினர் தம்மிடம் வந்துவிடக் கூடும் என்ற நம்பிக்கையில் அனைத்துலகக் குழு ஏதும் பேசாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில் பப்லோ, மண்டேலிடம் இருந்து பிளவுபட்டு, என்.எம். பெரேரா-கொல்வின் டி சில்வா குழுவை, அனைத்துலகக் குழு அவ்வாறு எதிர்க்கும் முன்னரே, தான் எதிர்த்ததன் மூலம் கூட்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னையுடன் தன்னுடைய நம்பகத்தன்மையை பெருக்கிக் கொண்டார்.

எத்தகைய அயோக்கியத்தனமான பொய்யர்! 1958ம் ஆண்டை LSSP இன் வலது போக்கு வெளிப்பட்ட ஆண்டு என சிடுமூஞ்சித்தனமான வகையில் தேர்ந்தெடுத்தமை பண்டாவின் தகாத வழியை புலப்படுகிறது. 1956ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே LSSP இன் போக்கு பற்றி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தெரிவித்த விமர்சனங்களை குறிப்பில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கவே அவர் 1958ம் ஆண்டை தேர்ந்தெடுக்கிறார். முந்தைய அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளது போல SWP ஜனவரி 1956 லேயே LSSP இன் வழியை "தேசிய சந்தர்ப்பவாதம்" என்று வரையறுத்திருந்தது; மேலும் சீன ஸ்ராலிசத்துடனான சந்தர்ப்பவாதத்தையும் மார்ச் 1957ல் மிலிட்டன் தலையங்கம் ஒன்றில் பகிரங்கமாக கண்டித்திருந்தது. ஏப்ரல் 1957ல் ஹீலி, ரொம் கெரிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் LSSP யின் சீரழிவு பற்றி விவரமாகவே எழுதியிருந்தார்:

நம்மை பெரிதும் வாட்டும் விஷயங்களில் ஒன்று இலங்கையில் நிலைமை சீர்கெட்டுச் செல்வதாகும். கொல்வின் டி சில்வாவும் பெரேராவும் சில நாட்களுக்கு முன்பு இங்கே வந்திருந்தனர்; எங்களைப் பார்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்கள் சூ என்-லாய் பற்றிய தங்கள் கொள்கையைப் பாதுகாக்க முற்பட்டனர் என்றும் எங்களை குறுங்குழுவாதிகள் என தாக்கினர் என்றும் நாங்கள் கேள்விப்பட்டோம். அங்கு உறுதியாக ஒதுங்கிச் செல்லும் ஒரு உந்துதல் காணப்படுகிறது; இது வருங்காலத்திற்கு மிக முக்கியமனதாக இருக்கும். 1954ல் அவர்கள் எங்களுடன் அரசியல்ரீதியாக உறுதிப்பாட்டுடன் நேர்மையாக இருந்தனர், ஆனால் இப்பொழுது அவர்கள் பப்லோவாதிகளை நோக்கி சமரசப்படுத்திக் கொண்டுவிட்டனர். ஒரு ஆங்கில பப்பலோவாதியிடம் பேசிய எமது தோழர்களுள் ஒருவர் எமது நிர்வாகக் குழுவிற்கு சமர்ப்பித்த அறிக்கையில் இருந்து சுருக்கிய பகுதி இங்கே உள்ளது.

"கொல்வின் அவரை மார்ச் 20 அன்று பார்த்ததாக போர்ன்ஸ்டைன் எமக்கு தெரிவித்தார். கொல்வின் ஆர் டி சில்வா அவரிடம் தான் சமீபத்தில் தோழர் ஜி. ஹீலியிடம் இருந்து "சீனக் குழுவிடம் குறிப்பிட்ட கோரிக்கைகளை வைக்குமாறு கேட்டு" ஒரு கடிதத்தை பெற்றார் என்று கூறினார். அக்கடிதத்தைப் படித்த பின்னர், தான் குபீரென்று சிரித்ததாகவும் "ஹீலி ஒரு பைத்தியம்" என்று நினைத்ததாகவும் கொல்வின் கூறினார். போர்ன்ஸ்டைன் தான் அக்கடிதத்தைப் பார்த்ததாகவும் கொல்வின் கருத்துடன் உடன்படுவதாகவும் கடிதத்தில் இருக்கும் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானது மட்டுமில்லாமல் இந்தக் கட்டத்தில் முடியாததும் ஆகும்; ஏனெனில் போர்ன்ஸ்டைன் கருத்தின்படி ஸ்ராலினிஸ்டுக்கள் சிறந்த முறையில் மாறும் வழிவகைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் ஒருவேளை ஸ்ராலினிச தலைமை தங்களுடைய கடந்தகால கொடூர அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெற்றிருக்கலாம் என்றும் அத்தகைய கோரிக்கைகளை முன்வைப்பது சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகமயமாக்கப்படுவதற்கு முட்டுக்கட்டை இடும் என்றும் கூறினார். 4

1957 மே 10ம் தேதி, ஹீலி மீண்டும் கனனுக்கு எழுதி LSSP க்கு உள்ளான நெருக்கடி பற்றிய பிரச்சினையை மீண்டும் எழுப்பினார்:

எமது இலங்கைத் தலைமையின் சந்தர்ப்பவாதம் பற்றி பப்லோவிற்கு நன்கு தெரியும்; அவருடைய இயல்பிற்கு ஏற்ப அவர்களை அவர் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார். நாம் இவ்விஷயத்தில் மௌனம் சாதிப்பது இனியும் சாத்தியமற்றது. மேலும் 1954ல் இருந்து LSSP தலைவர்கள் இன்னும் கூடுதலான வகையில் மரபுவழி ட்ரொட்ஸ்கிச நிலைப்பாட்டில் இருந்து மேலும் விலகிச் சென்றுள்ளனர்” என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். தன்னுடைய நான்காம் மாநாட்டில் பப்லோ, அவர்கள் சரணடைந்த, அவர்களுடைய திருத்தங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டார். இப்பொழுது அவர்கள் இதுகாறும் முன்பு இல்லாத அளவிற்கு அரசியல் ரீதியாக நம்மிடம் இருந்து மேலும் விலகிச் சென்றுள்ளார்கள். உதாரணமாக, ட்ரொட்ஸ்கிச ஆளுமைக்கு உட்பட்ட இலங்கைத் தொழிலாளர் கூட்டமைப்பு (Ceylon Federation of Labor) கீழ்க்கண்ட மேதின வாழ்த்துக்களை ரஷ்ய தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது:

"இலங்கைத் தொழிலாளர் கூட்டமைப்பு உங்களுக்கும் சோவியத் மக்களுக்கும் சகோதரத்துவ மேதின வாழ்த்துக்களை அனுப்புவதோடு, உங்கள் நாட்டிற்கு எதிரான அனைத்து ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களுக்கும் எதிராக எமது ஆதரவை உறுதியளிக்கிறது." – என்.எம். பெரேரா, தலைவர்.

ஒரு சொல்கூட ஹங்கேரியைப் பற்றியோ சோவியத் ஒன்றியத்தின் புரட்சிகரப் போராளிகளைப் பற்றியோ இல்லை. மாறாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு உதவியையும், ஆறுதலையும் கொடுக்கிறது; அது இதைப் பயன்படுத்தி சோவியத் மக்கள் மீது தன்னுடைய பிடியைத் தக்கவைத்துக் கொள்ளும். 5

பண்டாவிற்கு இக்கடிதங்கள் பற்றி நன்கு தெரியும்; ஒருவேளை அவர் ஹீலியுடன் இக்கடிதத்தை வரைவதில் இணைந்து வேலைசெய்திருக்கக்கூடும். ஆயினும்கூட அவர் இவற்றைப் பற்றி எவ்வித குறிப்பையும் கூறவில்லை; ஏனெனில் அவை பப்லோவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட, LSSP இன் சந்தர்ப்பவாதத்திற்கு அனைத்துலகக் குழுவின் எதிர்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தன்னுடைய தற்போதைய அரசியல் தேவைகளுக்கு குறுக்காக நிற்கக்கூடும் என்ற காரணத்திற்காக இல்லாவிடின், LSSP காட்டிக்கொடுப்பிற்கான தளத்தைத் தயாரித்ததில், மண்டேல் மற்றும் பப்லோவால் வகிக்கப்பட்ட நயவஞ்சகப் பாத்திரத்தைப் பற்றி பண்டா தொகுதிக்கணக்காக எழுதியிருப்பார்.

முதலாளித்துவ சிறீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) 1956ம் ஆண்டு பிலிப் குணவர்த்தன குழுவின் ஆதரவுடன் அதிகாரத்தைக் கைப்பற்றி MEP அரசாங்கத்தை அமைத்தபோது, LSSP அதற்குத் தன்னுடைய விமர்சன ரீதியான ஆதரவைக் கொடுத்தது; அதே நேரத்தில் திருத்தல்வாத சர்வதேச செயலகம் சோசலிசத்தை நோக்கிய "பின்னோக்கிவரமுடியாத இயக்கங்களை" பாராட்டியது. வெகுஜனங்களின் பொது எழுச்சியையும் மேற்கில் உள்ள பொருளாதார செழுமையையும் பயன்படுத்திக் கொள்ள முயன்ற பண்டாரநாயக்கவின் அரசாங்கம், இதன்மூலம் உள்ளூர் முதலாளித்துவ வர்க்கங்களுக்கு சில சலுகைகளைப் பெற்று, தற்காலிகமாகவேனும் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்திடமிருந்து தன்னுடைய சுதந்திரத்தை நிறுவமுடியும் என்ற பிரமையையும் கூடத் தோற்றுவித்தது.

பண்டாரநாயக்க போக்குவரத்து சேவையையும், கொழும்பு துறைமுகத்தையும் தேசியமயமாக்கியதோடு, திருகோணமலையிலும் கட்டுநாயக்காவிலும் இருந்த ஏகாதிபத்திய தளங்களை மூடி, ஏகாதிபத்திய நாடுகளில் இருந்து விலைகுறைந்த பொருட்கள் உள்ளூர் அங்காடிகளில் ஊடுருவாமல் பாதுகாத்து, தேயிலை, இரப்பர் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு உள்ளூர் தொழிற்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்தார். இந்த நடவடிக்கைகள் இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் புத்திக்கூர்மையை வற்றச் செய்தன. அதே நேரத்தில் அது தமிழ் மக்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் எதிரான நச்சுத்தனமான பேரினவாதக் கொள்கையையும் நடைமுறைப்படுத்தியது.

தனியார் மற்றும் பொதுத் துறைகளில் அதிகரித்த நடவடிக்கைகளின் காரணமாக தொழிலாள வர்க்கத்தின் அணிகள் கணிசமாக விரிவடைந்தன. பண்டாரநாயக்கவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்களைக் கவரும் அரசியல் உணர்ச்சிப்பேச்சு, தொழிலாள வர்க்கம் மேலும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கு தேவையான கோரிக்கைகளை கொண்டிருக்க முடியாதபோதும் தொழிலாள வர்க்கம் முக்கியமான சலுகைகளை அரசில் இருந்து பெற்றது. LSSP இந்தப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும்படி நிர்பந்திக்கப்பட்டிருந்தது.

பொதுப் பாதுகாப்பு (சிறப்பு விதிகள்) சட்டம் அறிமுகத்தின் மூலம் பண்டாரநாயக்க தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை குறைக்க முற்பட்டபோது, LSSP ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தை ஒழுங்குசெய்தது; எதிர்பார்த்தபடி அதன் முதுகில்குத்தும் வேலையில் ஸ்ராலினிஸ்டுகள் ஈடுபட்டிருந்தனர். சொந்த முதலாளித்துவ வர்க்கத்தின் ஒருபகுதி தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணத்தை கையாள அவரது இயலாமை தொடர்பாக பண்டாரநாயக்கவுடன் ஒரு மோதலுக்கு வந்ததுடன் அவருடைய படுகொலையையும் 1959ல் ஒழுங்கமைத்தது.

அந்த வேளையில் LSSP யின் சீரழிவும் மிகவும் முன்னேறிய நிலையிலிருந்தது. 1960ம் ஆண்டு பொதுத் தேர்தலில், கட்சி அதன் வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்ற முறை மூலம் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற முன்னோக்கை முன்வைத்தது. கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் அது பங்கு பற்றினாலும் 15 இடங்களில்தான் வெற்றி அடைந்தது. பழைய UNP, ஆட்சிக்கு திரும்ப வேண்டுமென முதலாளித்துவ வர்க்கம் முயற்சித்திருந்ததைத்தான் தேர்தல்கள் காட்டியது; அதுவோ மார்ச் 1960ல் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தது. அதனுடைய அடிப்படைக் கொள்கையை அறிவித்ததை அடுத்து புதிய அரசாங்கம் கவிழ்ந்தவுடன், ஜூலை 1960 தேர்தல்களில் SLFP க்கு ஆதரவு கொடுப்பதற்கு LSSP முடிவு செய்தது.

1960ம் ஆண்டு கட்சி மாநாட்டில், SLFP உடன் கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கான தீர்மானம் ஒன்றை என்.எம். பெரேரா கொண்டுவந்தார். இது மாநாட்டில் ஏற்கப்பட்டாலும், மத்திய குழுவினால் நிராகரிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பப்லோ முன்வைத்திருந்த கருத்துப் படிவங்களுடன் பெரேரா முன்வைத்த வாதங்கள் முற்றிலும் பொருந்தியிருந்தன. பெரேராவின் தீர்மானம் அறிவித்ததாவது:

"ஸ்தூலமாக ... LSSP கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலில் வரவிருக்கும் தேர்தல்களில் போட்டியிடாத் தொகுதிகள் பற்றி உடன்பாடு ஒன்றைக் காண வேண்டும். SLFP அரசாங்கம் அமைப்பதற்கு எமது தயார் நிலையை பிரச்சாரத்திலும் தெரிவிக்க வேண்டும். இதில் சில நிபந்தனைகளை இணைத்துக் கொள்ளக்கூடாது; அப்படிச் செய்தால் ஒரு மாற்றீட்டு அரசாங்கம் அமைப்பதை ஆதரிக்கும் சக்திகளை நாம் வலுவிழக்கச் செய்துவிடுவோம். இரண்டாவதாக, SLFP உடன் வேலைத்திட்ட அடிப்படையில் உடன்பாடு ஒன்றைக் கொண்டு, ஒரு கூட்டு அரசாங்கம் அமைக்கும் பார்வையையும் கொள்ள வேண்டும்....

இத்தகைய நிலைப்பாட்டை வர்க்க ஒத்துழைப்பு என்று இழிவுபடுத்தி உடனடியாக கண்டிப்பது சாத்தியமே. SLFP இன் வர்க்கத் தன்மையை, ஒரு குட்டி முதலாளித்துவக் கட்சி என்று ஏற்காவிட்டால்தான் இத்தகைய வர்க்க ஒத்துழைப்பு என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து நிலைநாட்ட முடியும். எப்படிப்பார்த்தாலும் இத்தகைய நுழைதல் தந்திரோபாயங்கள், சீர்திருந்தவாத சமூக ஜனநாயகக் கட்சிகளை பொறுத்தவரையில் ஒன்றும் புதிதல்ல. நாம் பதவியை ஏற்பதன் மூலம் நுழைவுவாதத்தை இன்னும் ஒரு படி கூடுதலாக எடுத்துச் செல்கிறோம். ஆனால் மக்களுடைய பிரமைகளை அகற்றுவதற்கும் அவர்களை இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு இட்டுச் செல்வதும், எமது உண்மைத்தன்மையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் இது ஒரு சிறந்த வகையில்லையா? எம்மால் ஆதரிக்கப்பட்ட சில முற்போக்கான நடவடிக்கைகள், பல ஆண்டுகள் பிரச்சாரத்தின் மூலம் நாம் செய்வதைவிடக் கூடுதலான படிப்பினைகளை அவர்களால் கற்றுக்கொள்ள வைக்கும். இந்த நடவடிக்கைகள் எமது சோசலிச வேலைத்திட்டங்களுக்குப் பொருந்த இருக்க வேண்டும்; எமது சோசலிசக் கொள்கைகளை முன்னேற்றும் வகையில் இருக்க வேண்டும்.6

செப்டம்பர் 16, 1960 அன்று அனைத்துலகச் செயலகம் LSSP காரியாளர்களுக்கு ஒரு நீண்ட ஆவணத்தை எழுதியது: அதில் LSSP, SLFP க்கு சரணைடைந்த ஒவ்வொரு கூறுபாடும் கூறும் நியாயப்படுத்தப்பட்டது:

பண்டாரநாயக்கவின் படுகொலைக்குப் பின்னர் குறிப்பாக ஓர் ஆபத்தான நிலைமை ஏற்பட்டது. முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் தலைமைதான் இந்த நெருக்கடியைத் திணித்தது. பிரதம மந்திரியின் மரணத்தின் விளைவாகவும், SLFP இன் பாராளுமன்ற அதிகாரம் வலு குன்றியதாலும், பெரும்பான்மையான மத்தியதர வர்க்க ஜனத்தொகையினர் ஏகாதிபத்தியத்தின் கட்சியான UNP இன் பால் ஈர்க்கப்பட்டனர். இதற்கிடையில் இன்னும் பிற்போக்கான பகுதிகள் பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு வெளியே ஒரு வலுவான அரசாங்கம் அமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் நுழைந்திருந்தன.... வேறுவிதமாகக் கூறினால் வெகுஜனங்கள் தங்களுடைய வெற்றிகளைக் காக்கத் தயாராக இருந்த போதிலும், அவர்கள் ஒரு புரட்சிகர அரசியலின் அடிப்படையில் முதலாளித்துவ-எதிர்ப்பு இயக்கம் ஒன்றைத் தொடங்கத் தயாராக இல்லை. 7

இந்த வாதங்கள் அனைத்தும் LSSP இன் சந்தர்ப்பவாதத்தை மூடிமறைக்க பயன்பட்ட காரணகாரிய அடிப்படையிலான விளக்கங்களாகும். LSSP, SLFP க்கு சரணடைந்ததற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்ட சர்வதேச செயலகம் அறிவித்ததாவது:

ஒரு காலனித்துவ அல்லது அரைக் காலனித்துவ நாட்டில், ஒரு புரட்சிகரக் கட்சி தொழிலாள வர்க்கத்தினது அல்லாத ஓர் அரசாங்கத்திற்கு விமர்சனரீதியான ஆதரவை வழங்க முடியும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் (அது மத்தியதர வர்க்கமாயினும், முதலாளித்துவ வர்க்கமாயினும் சரி). ஆனால் இந்த ஆதரவு இரண்டு முக்கியமான நிபந்தனைகளை கொண்டிருக்க வேண்டும். ஒன்று புரட்சிகர இயக்கத்தின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் முற்போக்கு நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் தருதல் ஆகும். மற்றொன்று முதலாளித்துவ அல்லது மத்தியதர வர்க்கத்தின் தலைமையின் கீழ் இருக்கும் மக்களுக்கு அரசியல் அறிவு புகட்டுவது ஆகும். இது தொழிலாள வர்க்கம் அல்லாத அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான, நேரடி மற்றும் நிபந்தனையற்ற ஆதரவு என்ற பொருளைக் குறிக்காது. 8

முதலாளித்துவ வர்க்க ஆட்சிகளுக்கு தொடர்ச்சியில்லாத, மறைமுக மற்றும் நிபந்தனையுடனான ஆதரவாக இருந்தனர் என்ற வகையில்தான் LSSP இடம் இருந்து பப்லோவாதிகள் வேறுபட்டிருந்தனர். LSSP இன் வலதுசாரி நோக்குநிலையை அவர்கள் ஏற்றமை, பெரேரா பகிரங்கமாக கூட்டணிக்கு விடுத்த அழைப்பு பற்றி இதமாக கண்டிப்புக் காட்டியதை பாசாங்குத்தனமாக்கியது. சர்வதேச செயலகம் கொடுத்த மூடுதிரையின் உதவியுடன், LSSP தோட்டத் தொழிலாளர்களுக்கு முழு குடியுரிமையையும் நிராகரிக்கும் ஒரு இனவாதக் கொள்கையை நோக்கி நகர ஆரம்பித்தது.

ஜூன் 1963 ல் பப்லோவாதிகளின் மறுஐக்கிய மாநாட்டில், திருத்தல் வாதிகள் மீண்டும் LSSP யின் படர்ந்த சீரழிவை மூடிமறைத்தனர். "எமது இலங்கை பகுதி 1960ம் ஆண்டு தாராளவாத முதலாளித்துவ வர்க்க SLEP அரசாங்கத்திற்கு ஆதரவு தருவது என ஏற்கப்பட்டிருந்த தவறான நோக்குநிலையை படிப்படியான வகையில் சரி செய்துள்ளனர். மக்கள் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியதால், அவர்கள் தலைமையில் நேற்றைய தேர்தல் நண்பர்களுக்கு எதிராக தங்களை அவர்களின் தலைமையில் இருத்திக்கொள்வதற்கு அவர்கள் தயக்கம் காட்டவில்லை. 9

"ஒரு உண்மையான சோசலிச ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை" கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிலிப் குணவர்த்தனவின் MEP உடன் சேர்ந்து LSSP அமைக்கலாம் என்று பப்லோவாதிகள் முன்மொழிந்தனர். இந்த "ஐக்கிய இடது முன்னணி" நிலைப்பாட்டின் உண்மையான பொருள், MEP ஒரு இனவாத குட்டி முதலாளித்துவக் கட்சி என்பதால், ஒரு மக்கள் முன்னணி அரசாங்கத்தில் LSSP பங்கு பெறுவதற்காக அதனைப் பக்குவப்படுத்தும் நிலைமைகளை பூர்த்தி செய்வதாக இருந்தது. மறுஐக்கிய மாநாடு நடந்த ஒரு மாதத்திற்குப் பின்னர், LSSP பப்லோவாத அகிலத்தில் இருந்து உத்தரவுகளைப் பெற்றது; அதில் இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி நூறாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்புவதற்கான உடன்பாட்டிற்கு அனுமதி கிடைத்தது. ஜூலை 1963ல் எழுதிய கடிதம் ஒன்றில் ஐக்கிய செயலகம், "இவ்விஷயம் தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதில் கொள்கையளவில் எந்தத் தவறும் இல்லை என்று நாங்கள் உணர்கிறோம்"10 என்று கூறப்பட்டது.10

ஐக்கிய செயலகத்தின் மூடிமறைத்தல்கள் ஏமாற்றுத்தனங்கள் இவற்றிற்கு மாறாக சோசலிச தொழிலாளர் கழகம் LSSP இன் சதிகாரக் கொள்கைகளை வெளிப்படையாக கண்டனம் செய்தது. ஜூன் 12, 1963 அன்று SWP இன் தேசிய குழுவிற்கு அது பப்லோவாதிகளுடன் மறு ஐக்கியம் கொண்டதற்கு கண்டனம் தெரிவித்த கடிதம் ஒன்றில் ஹீலி, இலங்கைத் தொழிலாள வர்க்கத்தை காட்டிக் கொடுப்பதற்கான LSSP-யின் தயாரிப்பு மீதாக SWP மௌனமாக இருப்பது பற்றி மிகக் கடுமையான முறையில் சுட்டிக்காட்டினார்:

சமீபத்தில் நாங்கள் மிலிட்டனில் கொழும்பில் 100,000 பேர் மே தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர் என்று படித்தோம். "இவ்வளவு பெரிய அணிவகுப்பிற்கு காரணம் லங்கா சம சமாஜக் கட்சி (ட்ரொட்ஸ்கிச), கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் MEP (பிலிப் குணவர்த்தனவின் தலைமையில் இருக்கும் ஒரு சிறு குழு) ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு ஐக்கிய முன்னணியைக் கொண்டுவருவதில் மக்கள் மத்தியிலே உள்ள ஆர்வம்தான்" என்று மிலிட்டன் கூறுகிறது.

இங்கு நாம் மீண்டும் போகிறோம். நீங்கள் SLL இலிருந்து பிளவுற்ற கணத்திலேயே மற்றும் பெங்கை சீனப் பகுதியின் தலைவர் என்று மறு உறுதி செய்யும் நேரத்திலேயே, உங்கள் உறுப்பினர்களின் கவனத்தை "இலங்கையில் இருக்கும் மகத்தான LSSP'' இன் பால் திருப்புகிறீர்கள். அக்கூட்டத்தின் நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து விவேகமாய் மௌனம் சாதிக்கிறீர்கள். மூன்று இடது கட்சிகள், அதாவது LSSP, CP மற்றும் MEP ஆகியவை கூட்டத்திற்குத் தயார் செய்வதற்கு விவாதித்துக் கொண்டிருக்கையில், பிலிப் குணவர்த்தன அரசியல் கட்சிகள்தாம் அரங்கத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதை உங்களது உறுப்பினர்களுக்கு கூறவில்லை. அவருடைய நோக்கம் எளிமையானதும் மிகவும் பிற்போக்குத்தனமானதும் ஆகும். இந்தியத் தொழிலாள வர்க்கம் அவர்களுடைய தொழிற்சங்கங்கள் மூலம் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதை அவர் விலக்கி ஒதுக்க விரும்பினார்.

நிரந்தமாக வெட்கங்கொள்ளும் வகையில், LSSP இந்த கேலிக் கூத்திற்கு உடன்பட்டது. கடந்த காலத்தில் இலங்கையில் LSSP ஒன்றுதான் நிபந்தனையற்ற முறையில் இந்தியத் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் சமத்துவ நிலைக்கு உறுதியாக இருந்தது என்பது கட்டாயம் நினைவுகூரப்பட வேண்டும்.. MEP யின் பிலிப் குணவர்த்தனவை அது எப்பொழுதும் கடுமையாக எதிர்த்தது; இக்கூட்டத்தில் அவருடைய பங்கு முற்றிலும் பிற்போக்குத்தனமானதாகும்.

பிலிப் குணவர்த்தன என்ன கூறினார் என்பது பற்றி நீங்கள் மௌனமாக உள்ளீர்கள். வாய்தவறி அவர் "நாடு" என்பதற்கு பதிலாக "இனம்" என்று கூறி பின்னர் பிழையைச் சரி செய்துகொண்டார். பார்வையாளர்களில் இருந்த அவருடைய ஆதரவாளர்கள் சத்தமிட்டனர்: "நாடு இல்லை; இனம்தான்!" அதே நேரத்தில் LSSP மேடையில் அமைதியாக உட்கார்ந்திருந்தது. இதுதான் அத்தகைய ஐக்கியத்திற்கு கொடுக்கப்படும் விலையாகும்.

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான சம அந்தஸ்து பற்றிய கேள்வியில் தலைவர்கள் உண்மையான மற்றும் பெரிய சலுகைகள் கொடுக்கத் தயார்செய்து வருகின்றனர் என்று LSSP யில் இப்பொழுது தாராளமாய் ஒப்புக் கொள்ளப்படுகிறது. இதுதான் அவர்களை திருமதி. பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க வழிவகுத்த சரணாகதியின் தர்க்கமாகும். உங்கள் உறுப்பினர்களிடம் என்.எம். பெரேரா, அனில் முனசிங்க மற்றும் LSSP இன் பிற தலைவர்கள் விகாரைகளில் வாடிக்கையாக வழிபடும் பௌத்தர்களாக பயிற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் கூறியிருக்க வேண்டும். 11

பண்டாரநாயக்கவின் கூட்டரசாங்கத்தில் LSSP நுழைவதற்கு முந்தைய முக்கியமான மாதங்களில், தன்னுடைய இலங்கை கூட்டாளிகளின் வலதுசாரிநிலைப்பாடு பற்றி எவ்வித விவாதத்தையும் பப்லோவாத ஐக்கிய செயலகம் எதிர்த்தது. இலங்கை பற்றிய நிலைப்பாட்டில், மண்டேலுடனான பப்லோவின் தந்திரோபாய வேறுபாடுகளைப் பற்றி பண்டா குறிப்பிடும் அதேவேளை –இந்த தற்காலிக சர்ச்சையானது பப்லோவாதம் ஒரு அரசியல் போக்காக பரிணாமமடைந்ததில் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை– LSSP ஐ ஆதரித்ததில் ஐக்கிய செயலகத்தால் வழங்கப்பட்ட பதிலைப் பற்றி அவர் ஏதும் குறிப்பிடவில்லை. அவர்களின் "நேர்மையையும்" "நல்லெண்ணத்தையும்" நிரூபிக்க LSSP க்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அறிவித்து ஐக்கிய செயலகம், LSSP பற்றிய அந்த விமர்சனத்தைப் பராமரித்ததின் அர்த்தம்,

"முதலில் LSSP இருக்கும் சூழ்நிலையில் தீவிரமான கன்னைவாதத்தை உட்செலுத்துவதின் மூலம் வேண்டுமென்றே கொந்தளிப்பை ஏற்படுத்தல்; இரண்டாவதாக விவாதத்தை பொது அரங்கிற்கும் கொண்டு வருதல் மூலம் விஷயங்களை இன்னும் மோசமாகப் போகவைத்தல் என்பதாகும். இத்தகைய பிரிவினை உண்டாக்கும் கொள்கை, ஐக்கிய செயலகத்திற்கும் LSSP தலைமைக்கும் இருக்கும் சகோதரத்துவ உறவுகளை அழிக்காது விட்டாலும், இடருக்குள் ஆழ்த்திவிடும். இதன் இறுதி விளைவு, நான்காம் அகிலத்திற்கும் கட்சியின் ஐக்கியத்தை எவ்வித நோக்கத்தில் இருந்தும் தேவையற்ற உட்பூசல் அல்லது அழுத்தத்தின் மூலம் ஆபத்திற்குட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாத LSSP இன் இடது கன்னை உட்பட LSSP க்கும் பெரும் தீமையை விளைவிக்கும்."12

கொழும்பில் பிளவு மாநாடு ஆரம்பிப்பதற்கு சற்று முன்பு மாநாட்டிற்குள் செல்ல முயன்ற ஹீலி, பியர் பிராங்க் மற்றும் ஐக்கிய செயலகத்தைப் பலியிட்டு ஒரு மலிவான ஆதாயம் அடைவதற்கு முயன்றபோதுதான் அனைத்துலகக் குழுவின் தலையீடு நிகழ்ந்தது" என்று பண்டா கூறும்போது, சான்றுகள் அவர் அப்பட்டமான பொய்யைக் கூறுகின்றார் என நிரூபிக்கின்றன.

இப்படிப்பட்ட சிறுபிள்ளைத்தனமான பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக திருத்தல்வாதத்திற்கு எதிராகப் போராடிய ஒரே சர்வதேசப் போக்கின் பிரதிநிதியாகத்தான் ஹீலி இலங்கைக்கு பயணித்தார்; திருத்தல்வாதப் போக்கு பின்னர் LSSP இன் இறுதிக் காட்டிக்கொடுப்பிற்கு வழிவகுத்தது. ஐக்கிய செயலகத்தின் தலைவரான பப்லோவாத பியர் பிராங்க் அந்தக் காட்டிக்கொடுப்பிற்கு தயாரிப்பதில் உதவினார்.

"என். எம். பெரேராவை நிகழ்விற்கு பின்னர் கண்டிப்பதைவிட இலங்கையில் அனைத்துலகக் குழுவிற்கு எந்த முன்னோக்கும் இருந்ததில்லை, தோழர் டோனி பண்டாதான் துண்டுகளைப் பொறுக்கி எடுத்து ஒரு பிரிவை கட்டியமைக்கும் பணியை மேற்கொண்டார்" என்று பண்டா எழுதுவதும் சிடுமூஞ்சித்தனமான, நேர்மையற்ற கூற்றாகும். டோனி பண்டா இலங்கைக்குப் பயணம் செய்தபொழுது, SLL இனதும் ICFI இனதும் உறுப்பினராகச் செல்லாமல், தான் சொந்தமாக ஒரு கட்சிசார்பற்ற அரசியல்வாதியாக வேலை செய்துகொண்டிருந்தார் என்று நாம் அனுமானித்துக் கொள்ள வேண்டுமா? அனைத்துலகக் குழுவிற்கு முன்னோக்கு இல்லை என்றால் அனைத்துலகக் குழுவின் இலங்கை பிரிவாக ஆன புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அமைக்கப்படுவதற்கு பண்டா ஏன் பொறுப்பேற்கிறார்?

ட்ரொட்ஸ்கிச கட்சி என்று அழைக்கப்பட்ட பிரிவு, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைவதை விளைவித்ததற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னரே, பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நிறுவப்பட்ட அனைத்துலகக் குழு இலங்கையில் வேலைசெய்வதற்கு மிகவும் தெளிவான ஒரு முன்னோக்கைக் கொண்டிருந்தது. நான்காம் அகிலத்தை LSSP காட்டிக்கொடுத்தது என்ற உலக வரலாற்று முக்கியத்துவத்தையும் அது மட்டுமே உணர்ந்திருந்தது. ஜூலை 5, 1964ல், ICFI அறிவித்ததாவது:

பண்டாரநாயக்கவின் கூட்டணிக்குள் லங்கா சம சமாஜக் கட்சி உறுப்பினர்களின் நுழைவு, நான்காம் அகிலத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒரு முழு சகாப்தமும் முடிவிற்கு வந்ததைக் குறிக்கிறது. உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இத் திருத்தல்வாதமானது, தொழிலாள வர்க்கத்தின் தோல்விக்கு அது தயாரிப்பு செய்தவகையில், ஏகாதிபத்தியத்திற்கான அதன் நேரடிச் சேவையில் அதன் வெளிப்பாட்டைக் கண்டது. நான்காம் அகிலத்தை மீளக்கட்டியமைக்கும் பணியானது, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஏகாதிபத்தியத்தின் சந்தர்ப்பவாத சேவகர்களுக்கும், அதிகாரத்துவத்தினருக்கும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் ட்ரொட்ஸ்கிசத்தின் பெயரையும், நான்காம் அகிலத்தின் பெயரையும் அபகரிக்க முற்பட்டுள்ள திருத்தல்வாதிகளுக்கும் எதிரான போராட்டத்தில் புரட்சிகரப் பாட்டாளி வர்க்க கட்சியைக் கட்டியமைக்க வேண்டும் என்ற உறுதியான அடித்தளத்தில் இருக்கவேண்டும். 13

இலங்கையில் பப்லோவாத காட்டிக்கொடுப்பின் மற்றொரு துணைவிளைவை பற்றி பண்டா எந்தக் குறிப்பையும் கொடுக்கவில்லை. SWP க்கும் உத்தியோகபூர்வமான சிறுபான்மையாக இருந்த ரிம் வொல்ஃபோர்த் தலைமையில் இருந்த ICFI ஆதரவாளர்கள், SWP உடன் அரசியல் ரீதியாக நட்புக் கொண்டிருந்த LSSP நிகழ்த்திய வரலாற்று தன்மையுடைய காட்டிக் கொடுப்பு பற்றி கட்சிக்குள் விவாதம் வேண்டும் என்று வலியுறுத்தியதால் வெளியேற்றப்பட்டனர். LSSP ஒரு கூட்டணி அரசாங்கத்தில் நுழைதல் பற்றி ஓர் அறிக்கையை உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை விட முயற்சித்த "குற்றத்திற்காக" —அந்த நுழைதலோ நான்காம் அகிலத்தின் முன்னோடியில்லாத நிகழ்வாகும்— வொல்ஃபோர்த்தும் சிறுபான்மை போக்கின் ஏனைய எட்டு உறுப்பினர்களும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.

1961இல் இருந்து அனைத்துலக் குழுவுடன் இணைந்தவகையில் ஒரு சிறுபான்மை போக்கானது SWP தலைமையின் சீரழிவிற்கு எதிராகப் போராடியுள்ளது. இந்தப் போராட்டத்தை அனைத்துலகக் குழுவுடன் பிளவு ஏற்பட்ட பின்னரும் கூட அது தொடர்ந்தது; SWP ட்ரொட்ஸ்கிச பாதையில் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தது. ஆனால் இலங்கையில் நடந்த நிகழ்வுகளுக்கு, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நெருக்கடி பற்றி விவாதம் நடைபெற கூடுதலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது தேவைப்பட்டது. ஜூன் 30, 1964ல் சிறுபான்மையினரின் அறிக்கை கூறியது:

1961ல் இருந்து 1963 வரையிலான காலம் முழுவதும் நாங்கள் பல முறையும் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்டு உண்மையான மறு ஐக்கியத்திற்கு முன்னர் முழு அரசியல் விவாதம் இல்லாமல் நான்காம் அகிலத்துடன் மறு ஐக்கியம் காண்பது என்பது பேரழிவிற்கும், சர்வதேச இயக்கத்திற்கும், இங்குள்ள கட்சிக்கும் கூடுதலான சீரழிவைத்தான் தரும் என்று வலியுறுத்தி வந்தோம். எங்களுடைய நிலைப்பாடு முற்றிலும் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது.....

இப்பொழுது அரசியல் ஐக்கியம் கொண்டிருக்கும் சர்வதேச அமைப்பிற்கும் எமது கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அரசியல், தத்துவார்த்த, வழிமுறை வகையிலான நெருக்கடிகளை இனியும் எதிர்கொள்ள மறுத்தல் என்பது இயலாது. கட்சியின் உயிர்வாழ்விற்காக இப்பிரச்சனை தொடர்பாக பூரணத்துவமுடைய கலந்துரையாடல் உடனடியாக அனைத்து கிளைகளிலும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

மாநாட்டிற்கு முன்கூட்டக்காலத்தில் அத்தகைய விவாதம் என்பது ஒரு அசாதாரணமான நிகழ்வு என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனாலும் அத்தகைய விவாதத்தை நாங்கள் கோருவதின் காரணம் நாங்கள் ஒரு மிகவும் அசாதாரண தன்மையுடைய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறோம்.

அமைப்பு ரீதியான விஷயங்களை லெனினிஸ்டுகள் எப்பொழுதுமே வழிபட்டுக்கொண்டிருப்பதில்லை. இயக்கத்தின் அரசியல் தேவைகளுக்கு பொருத்தமாக அமைப்புரீதியான மாற்றங்களை செய்வதை அவர்கள் விரும்புவர். கட்சி முக்கியமான வெளிப் பணியை மேற்கொள்ள இருக்கும் காலத்தில் பயனற்ற விவாதத்தை நீண்டகாலமாய் பேணுவது என்பது போல்ஷிவிக் கட்சிக்கு எதிரான ஒரு குற்றம் சார்ந்த செயல் ஆகும். கட்சியையும் சர்வதேச இயக்கத்தையும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடி கிழிக்கப் பார்க்கும் நேரத்தில் கலந்துரையாடலை ஒழுங்கமைக்காவிடில் அதுவும் குறைந்தபட்சம் குற்றத்தன்மை உடைய செயல்தான். அவசியமான மற்றும் அவசரமான கட்சி கட்டும் பணியை, கட்சி உயிர்வாழ்வதற்கே இன்றியமையாத அடிப்படை செயல்முறைகளுக்கு எதிராக முன்வைப்பவர்கள் எவ்விதத்திலும் லெனினிஸ்டுகள் அல்ல. 14

இதற்கு பத்து நாட்களுக்குப் பின்னர், இக்கடிதத்தில் கையெழுத்திட்ட ஒன்பது பேரும் சோசலிச தொழிலாளர் கட்சியில் இருந்து தற்காலிகநீக்கம் செய்யப்பட்டனர். ஆயினும், அவர்கள் நான்காம் அகிலத்தின் அமெரிக்கக் குழுவை அமைக்கப் பாடுபட்டனர்; அது நவம்பர் 1966ல் வேர்க்கர்ஸ் லீக் ஆக மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு எதிரான பப்லோவாதிகளின் திருத்தல்வாதத்தை எதிர்த்த போராட்டம், அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை தக்கவைத்தது.


குறிப்புகள்

1.  Newsletter, 7 December 1963.

2.  Ibid.

3.  Ibid.

4.  National Education Department Socialist Workers Party, Education for Socialists: The Struggle to Reunify the Fourth International (1954-63), vol. 3, May 1977, pp. 31-32.

5.  Ibid., p. 33.

6.  Cliff Slaughter, ed., Trotskyism Versus Revisionism: A Documentary History (London: New Park Publications, 1974), vol. 4, The International Committee Against Liquidationism, p. 58.

7.  From a copy of the original document.

8.  From a copy of the original document.

9.  Seventh World Congress of the Fourth International, “The International Situation and Our Tasks,” Fourth International, no. 17, October-December 1963, p. 45.

10. Slaughter, ed., Trotskyism Versus Revisionism, vol. 4, p. 235.

11. Ibid., p. 162.

12. Ibid., p. 240.

13. Newsletter, 11 July, 1964.

14. From a copy of the original document.