ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian government backs mob lynchings targeting Muslims and minorities

முஸ்லீம்களையும் சிறுபான்மையினரையும் இலக்கு வைத்து கும்பலாக தாக்கி கொலை செய்வதை இந்திய அரசாங்கம் ஆதரிக்கிறது

By Pradeep Ramayake 
26 July 2018

இந்திய ஊடகங்களில் தற்போது, தாக்குதல் குழுக்களால் நிகழ்த்தப்படும் கொடூரமான கொலைகள் பற்றிய செய்திகளே பெரும்பாலும் ஒளிபரப்பப்படுகின்றன. பொலிஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் அறிக்கையின் படி, ஒரு வார காலத்திற்குள்ளாக, இந்தியா எங்கிலும் தாக்குதல் குழுக்களினால் குறைந்தபட்சம் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேலும், மே 10 ம் தேதிக்கு பின்னர் 16 தாக்குதல் கொலைகள் நிகழ்த்தப்பட்டதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பதிவாகியுள்ளதாக India Today பத்திரிகை தெரிவிக்கிறது.  

குழந்தைகள் கடத்தல், திருட்டு, பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை, அல்லது மாடு கடத்துதல் அல்லது படுகொலை போன்ற வகைகளில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. சமூக ஊடகங்கள், அதிலும் குறிப்பாக வாட்ஸ் ஆப் மூலமாக பரவும் வதந்திகள் தான் இத்தகைய தாக்குதல்களை தூண்டியிருக்கின்றன என்று செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான விவகாரங்களில், பாதிக்கப்பட்டவர்கள் அடித்து தாக்கப்பட்டுள்ளனர் அல்லது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர், மேலும் சில நேரங்களில் தாக்குதல் கும்பல்களால் அவர்களது உடல்கள் கட்டி தொங்கவிடப்பட்டன. அந்த மாதிரியான நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர், ஆனால் அவர்கள் கவனிப்பின்றி விடப்பட்டுள்ளனர்.  

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்களாகவோ அல்லது சிறுபான்மை இனத்தவர்களாகவோ உள்ளனர். பசு தொடர்பான தாக்குதல் கொலைகளில் கொல்லப்பட்டவர்களில் 86 சதவிகிதத்தினர் முஸ்லீம்களாகவும், மேலும் 8 சதவிகிதத்தினர் தாழ்த்தப்பட்ட ஜாதியினரான தலித் மக்களாகவும் இருந்தனர் என்று India Spend புலனாய்வு கட்டுரை தெரிவிக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்ற “அந்நியர்களை” இலக்கு வைத்து நடத்தப்படும் குழந்தைகள் கடத்தல்கள் தொடர்பான வதந்திகளின் பேரில் தான் சமீபத்தில் எதிர்பாராமல் நிகழ்ந்த கும்பல் கொலைகள் இருந்தன.   

இத்தகைய தாக்குதல்கள் குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பயத்தையும், அச்சுறுத்தலையும் உருவாக்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டுவதற்காக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை தாக்குதல்காரர்கள் மூலமாகவே பதிவு செய்யப்படுகின்றன.

பெரும்பகுதி மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை எதிர்கொள்கின்ற நிலையில், பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதா கட்சியும் (BJP) கிட்டத்தட்ட ஆழ்ந்த மௌனம் சாதிக்கின்றனர், இது கடந்த காலத்தில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) மற்றும் பிஜேபி இன் ஏனைய இந்து மேலாதிக்கவாத கூட்டணி கட்சிகளும் இணைந்து பசுவதை தடுப்பு என்ற பெயரில் வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட்டபோது அவர்கள் என்ன செய்தார்களோ அதேபோல நடந்து கொள்கின்றனர்.

நிகழ்ந்த கொடூரமான கொலைகள் “தனிமைப்படுத்தப்பட்ட அல்லது தன்னிச்சையான” சம்பவங்கள் என்று கூறி மோடி எப்பொழுதாவது சுருக்கமாக அறிக்கை விடுக்கின்ற போதிலும், அவரது மூத்த மந்திரிகளும் பாராளுமன்ற பிரதிநிதிகளும் பெரும்பாலும் தாக்குதல்காரர்களை பகிரங்கமாக பாதுகாத்துள்ளனர் என்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் தான் தாக்குதல்களை தூண்டுகின்றனர் என்பதாக வேறு குற்றம் சாட்டுகின்றனர்.

இத்தகைய பயங்கரமான தாக்குதல்கள் “தன்னிச்சையானவை” என்பதை விட, பிஜேபி அரசாங்கத்தின் பின்னணி ஆதரவுடன், இந்து தீவிரவாத குழுக்களின் தூண்டுதல்களின் விளைவாகவே அவை நிகழ்கின்றன. 2014 இல், இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து இந்து பேரினவாதத்தையும் வலதுசாரி குழுக்களையும் ஊக்குவித்து வருகிறது. “இந்து மதிப்புக்களை பாதுகாக்கும்” சாக்குப்போக்கில் முஸ்லீம்களையும் பிற சிறுபான்மையினரையும் தீவிரமாக அடக்கி ஒடுக்குவதாகவே அவர்களது செயல்பாடுகள் உள்ளன. 

ஒரு இந்து புனித சின்னமாக திகழும் பசுக்களைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட “பசு பாதுகாப்பு குழு -Gau Raksha Dal” போன்ற அமைப்புகள், கடந்த வருடம், முஸ்லீம் மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் கால்நடை வர்த்தகர்களை தாக்குவதற்கு குழுக்களைத் தூண்டிவிட்டன. 20 பேர் கொல்லப்பட்ட பின்னரே ஒரு அறிக்கை விடுப்பதற்கு மோடி நிர்பந்திக்கப்பட்ட நிலையில், “பசு பக்தி (cow worship) என்ற பெயரில் மக்களை கொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மட்டும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, 2010 முதல் 2017 வரை நடந்த பசு தொடர்பான வன்முறைகளில் 97 சதவிகிதம் மோடியின் அரசாங்கம் பதவியேற்ற பின்னர் பதிவானவை என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவிகிதத்தினர் முஸ்லீம்கள் என்று Hindustan Times பத்திரிகை தெரிவித்தது.

இந்த தாக்குதல்கள் தனிமைப்படுத்தப்பட்டவை அல்ல, மாறாக அரசாங்க ஆதரவிலான வகுப்புவாத குழுக்களின் திட்டமிடப்பட்ட தூண்டுதல்களின் விளைவாகவே அவை நிகழ்ந்திருந்தன, மேலும் இக்குழுக்கள், வகுப்புவாத மனநோயை பரப்புவதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றன.

குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லீம்களாக இருக்கும் நிலையில், குற்றவாளிகளை கௌரவிப்பதன் மூலம் இத்தகைய கொலைகளுக்கு அரசாங்கம் ஆதரவளித்துள்ளது. கடந்த ஆண்டு, ஒரு முஸ்லீம் மாட்டிறைச்சி வியாபாரியான அலிமுத்தின் அன்சாரி தாக்கி கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேருக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

கடந்த வாரம், நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மந்திரி கிரிராஜ் சிங், சிறையிலிடப்பட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தல் போன்ற இந்து தீவிரவாத அமைப்புக்களின் தலைவர்களை சந்தித்தார், கடந்த ஆண்டில் வகுப்புவாத வன்முறை தொடர்பாக இவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள். இது குறித்து மந்திரி கூறுகையில்; “இந்த தலைவர்களும் அதிகாரிகளும் தவறான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் துரதிருஷ்டவசமான சூழ்நிலை” என்றார்.

பொலிஸ் ஒருசில கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் கூட, பிஜேபி அரசாங்கம் தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில், தாக்குதல் கும்பல் அவர்களது தாக்குதல்களை கட்டவிழ்க்க போதுமான நேரத்தை பொதுவாக பொலிஸ் வழங்குகின்றது.

மே 9 அன்று நடந்த அதேபாணியிலான ஒரு சம்பவத்தில், தமிழ்நாட்டில் அதிமூர் கிராமத்தில் 200 பேர் கொண்ட தாக்குதல் கும்பலால் 65 வயது ருக்மணி என்ற பெண்மணி கொலை செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் இருந்து வெறும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த சம்பவ இடத்திற்கு செல்ல பொலிஸ் படையினர் 30 நிமிடங்களை எடுத்துக் கொண்டனர்.

மற்றொரு சம்பவத்தின்போது, அருணாச்சலப் பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த ஒரு சிறிய பழங்குடி சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களான சஞ்சய் சோபர் என்பவரையும் மற்றும் அவரது சக ஊழியரையும் பொலிஸ் கைது செய்தது. அவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி பரவியவுடன், ஒரு கும்பல் காவல் நிலையத்தை முரட்டுத்தனமாக தாக்கியதுடன், கைதிகளை பிரதான சாலைக்கு இழுத்து வந்து பொலிசின் முன்னிலையில் அவர்களை தாக்கி கொலை செய்தது. அவர்களில் எவரும் பொலிசாரால் கைது செய்யப்படவில்லை என்ற நிலையில், பின்னர் அக்கும்பல் காணாமற் போய்விட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், கொலை செய்யப்பட்டவர்களை மாடு திருடுபவர்கள் அல்லது மாடு கடத்தல்காரர்கள், குழந்தைகள் கடத்துபவர்கள் அல்லது பிற குற்றவாளிகள் என்று வழக்கம் போல முத்திரை குத்தி அரசாங்கத்திற்கு ஏற்ற பிரதிநிதிகளாக பொலிசார் நடந்து கொண்டனர்.

இந்த வன்முறைக்கு எதிராக பெரும் நகரங்களில் பல ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. “புனித தாக்குதல் கொலை கும்பலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்!” மற்றும் “இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலானது அல்ல, மாறாக இந்திய சிறுபான்மையினருக்கும் அவர்களுக்கு எதிரான பிராமணர்களுக்கும் (இந்து உயர் வகுப்பினர்) இடையிலானது!” என்ற சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையிலேந்தி இருந்தனர்.

குற்றவாளிகளை தண்டிக்க ஒரு புதிய தண்டனை விதியை பாராளுமன்றம் வகுக்க வேண்டுமென தில்லி உச்ச நீதிமன்ற நீதிபதி கடந்த வாரம் பரிந்துரைத்தார், என்றாலும், “ஏற்கனவே ஒரு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், இது போன்றதொரு தனிப்பட்ட சட்டம் வகுப்பதற்கான அவசியம் இல்லை” என்று பிஜேபி யின் ஒரு மூத்த உறுப்பினர் தெரிவித்ததாக செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

முந்தைய அரசாங்கத்தை அமைத்திருந்த காங்கிரஸ் கட்சியின் பக்கமாக இந்த தாக்குதல் கொலைகள் குறித்த பொதுமக்கள் எதிர்ப்பை திசை திருப்ப அரசாங்கமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வழி தேடுகின்றனர். உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் பேசுகையில், “கடந்த காலத்தில் இத்தகைய தாக்குதல் கொலைகள் நடந்ததில்லையா” என்று கேள்வி எழுப்பினார். மேலும், காங்கிரஸ் பிரதம மந்திரி இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலரினால் படுகொலை செய்யப்பட்டதற்கு பின்னர் 1984 இல் கொலைகார கும்பல்களினால் சீக்கியர்கள் கொல்லப்பட்டதை பற்றி அவர் நினைவு கூர்ந்தார்.

சிறுபான்மையினர் மீதான இத்தகைய கொடூரமான தாக்குதல்களை நியாயப்படுத்தும் அதேவேளையில், மோடியின் பிஜேபி அரசாங்கம், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒடுக்குமுறை அரசு எந்திரத்தை பலப்படுத்தி வருகிறது. வகுப்பு வாதம் உயர்த்தப்பட்டு வருகிறது என்பதுடன், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுதான் இந்த தாக்குதல் நடத்தும் கும்பல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.