ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Protest marks six years since frame-up of Maruti Suzuki workers began

மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கு தொடரப்பட்டதில் இருந்து ஆறு ஆண்டுகள் முடிவடைந்துள்ளதை ஆர்ப்பாட்டம் குறிக்கிறது   

By our correspondent 
23 July 2018

பதின்மூன்று மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட ஜோடிப்பு கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய, ஜூலை 18, புதனன்று குர்கானில், ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஹரியானா மாநில அரசாங்க அலுவலகம் நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.

மாருதி சுசூகியின் மானேசர், ஹரியானா வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் ஜூலை 18, 2012 அன்று நிறுவன தூண்டுதலினால் நிகழ்த்தப்பட்ட கைகலப்பு மற்றும் தீ விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதை இந்த ஆர்ப்பாட்டம் குறித்தது. இச்சம்பவத்தை, மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக சட்டரீதியான பழிவாங்குதலை தொடுப்பதற்காக வாகன உற்பத்தியாளர், பொலிஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில அரசாங்கம் ஆகியோர் இணைந்து பயன்படுத்திக் கொண்டனர்.

தற்போது நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கம், 13 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களை தூக்கிலிட உத்திரவிடுமாறு நீதிமன்றத்திற்கு மனு செய்துள்ளது. அத்துடன், ஏனைய 117 தொழிலாளர்களை நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்தும் மேல்முறையீடு செய்துள்ளது, அவர்கள் நிறுவனத்துடனான பொலிசாரின் கூட்டு நடவடிக்கை மற்றும் அப்பட்டமாக புனையப்பட்ட சாட்சியங்கள் உள்ளிட்ட பொலிசின் துன்புறுத்தல் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் நிரூபித்தார். நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரைக்கூட வாதிதரப்பு சாட்சியங்களினால் அடையாளம் காட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஜோடிக்கப்பட்ட கொலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட 13 மாருதி சுஜூகி தொழிலாளர்களின் விடுதலை கோரி, ஜூலை 18 அணிவகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கு பெற்றனர்.

விவரிக்கமுடியாத ஜூலை 18, 2012 சம்பவங்களுக்கு பின்னர், மாருதி சுசூகி நிறுவனம் அதன் மானேசர் ஆலையில் பணிபுரிந்த ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்து 2,400 புதிய தொழிலாளர்களை பணியமர்த்தியது.

மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு முன்மாதிரியான தண்டனையை வழங்க வேண்டுமென இந்திய உயரடுக்கு தீர்மானமாக உள்ளது, ஏனென்றால், 2011-12 இல், குர்கான் மானேசர் தொழில்துறை பகுதி எங்கிலும் மிகக் குறைந்த ஊதியம், மோசமான வேலை நிலைமைகள், மற்றும் நிலையில்லாத ஒப்பந்த தொழிலாளர் முறை ஆகியவற்றை எதிர்த்து போர்குணமிக்க ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் ஒரு குவிமையப் புள்ளியாக மானேசர் ஆலை எழுச்சியுற்றது என்பதுதான் அதற்கான காரணமாகும்.

எஞ்சிய வாழ்நாளை வாழும் நரகமான இந்திய சிறைச்சாலைகளில் கழித்திடும் வகையில் தண்டனை விதிக்கப்பட்ட 13 தொழிலாளர்களில் பனிரெண்டு பேர் மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் (Maruti Suzuki Workers Union-MSWU) தலைவர்கள் ஆவார். இச்சங்கத்தை, தொழிலாளர்கள் ஒரு அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவன ஆதரவிலான கைக்கூலி தொழிற்சங்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு நிறுவினார்கள்.

குர்கான்-மானேசர் பகுதியிலுள்ள நான்கு மாருதி சுசூகி ஆலைகளில் இருந்து அனைத்து தொழிலாளர்களும் கடந்த புதனன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர், அதேபோல ஹோண்டா நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் மற்றும் ரிகோ மற்றும் பெல்சோனிகா போன்ற வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என ஏனைய இரண்டு டசினுக்கும் அதிகமான நிறுவனங்களின் தொழிலாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

MSWU தொழிற்சங்கத் தலைவர்களின் விடுதலை நிலுவையில் இருந்த நிலையில், சங்கத்தின் தலைமையை ஏற்றுக்கொண்ட இடைக்காலக் குழுவின் பிரதிநிதி ஒருவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பேசுகையில், ஒரு “நிர்வாகத்தின் திட்டமிட்ட சதியின்” விளைவாகவே ஜூலை 18, 2012 சம்பவங்கள் நிகழ்ந்தது என விளக்கமளித்தார்.

மேலும் இப்போராட்டத்தில், ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- மார்க்சிஸ்ட் (Stalinist Communist Party of India Marxist) அல்லது CPM உடன் இணைந்த இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Centre of Indian Trade Unions-CITU) மற்றும் CPM இன் துணைக் கட்சியான ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Stalinist Communist Party of India-CPI) உடன் இணைந்த அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (All India Trade Union Congress-AITUC) உட்பட, பிற உள்ளூர் சங்கங்களின் பேச்சாளர்களும் கலந்து கொண்டனர்.

ஸ்ராலினிச தலைவர்கள் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்தனர் மற்றும் ஜூலை 18 சம்பவங்கள் குறித்தும் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான சட்ட ரீதியான துன்புறுத்தல்கள் குறித்தும் ஒரு “உயர்மட்ட” நீதித்துறை விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு பிஜேபி அரசாங்கத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளனர், இந்த அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு முன்கண்டிராத தாக்குதலை நிகழ்த்துவது குறித்து தொடர்ந்து அவர்கள் வழமையாக கண்டனம் செய்து வருகின்றனர்.

உண்மை என்னவென்றால் மாருதி சுசூகி தொழிலாளர்களை ஸ்ராலினிச தலைவர்கள் முறையாக தனிமைப்படுத்தி வந்தனர், அரசின் ஜோடிப்பு வழக்கை எதிர்த்து அவர்கள் தனியாக போராடும்படி விடப்பட்டனர். இதில் அவர்களது வழக்கு தொடர்பாக ஒரு உண்மையான இருட்டடிப்பு செய்யப்பட்டதும் உள்ளடங்கும். பல வாரங்களாக, CPM இன் ஆங்கில மொழி வார இதழ், மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான மார்ச் 2017 ஜோடிப்பு குற்றச்சாட்டுக்கள் பற்றி குறிப்பிட வேண்டியது நிறைய இருந்தும் எதையும் வெளியிட தவறியது. அதேபோல, முதலாளிகள் “மாருதி சுசூகி போன்ற ஒன்றை” தாம் செய்வார்கள் என்று அடிக்கடி தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்ததும் நன்கு தெரிந்திருந்தது, அதாவது பொலிஸ் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய மற்றும் ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்க போவதாக அச்சுறுத்தல்கள் இருந்த நிலையிலும் கூட, ஏப்ரலில் CPM கட்சி தனது தேசிய மாநாட்டை நடத்தியபோது மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிக்க போராட வேண்டியது பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

சில நேரங்களில் உள்ளூர் ஸ்ராலினிச தொழிற்சங்கத் தலைவர்கள் ஜூலை 18 ஆண்டு நிறைவு அல்லது தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கின் பேரில் அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் குறித்த எதிர்ப்பு அணிவகுப்பில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர், இது ஏனென்றால், குர்கான்-மானேசர் மற்றும் இந்தியா எங்கிலுமாக பாதிக்கப்பட்ட மற்றும் சிறையிலிடப்பட்ட தொழிலாளர்கள் மீது அளவுகடந்த அனுதாபம் நிலவுவதை அவர்கள் அறிவார்கள்.

மாருதி சுசூகி தொழிலாளர்களின் போர்குணமிக்க உதாரணத்தைக் கண்டு ஸ்ராலினிஸ்டுகள் அஞ்சுகின்றனர். அனைத்திற்கும் மேலாக, அவர்களை பாதுகாக்க தொழிலாளர்களை அணிதிரட்டும் எந்தவொரு பிரச்சாரமும், 2019 தேசிய தேர்தல்களுக்காக பெரு வணிக காங்கிரஸ் கட்சியுடனான அரசியல் கூட்டணியை அவர்கள் ஏற்படுத்திக்கொள்வது மற்றும் இந்து மேலாதிக்கவாத பிஜேபி க்கு எதிராக “ஜனநாயக அரண்களாக” நீதிமன்றங்களையும் பிற அரசு நிறுவனங்களையும் ஊக்குவிப்பது தொடர்பான அவர்களது முயற்சிகளை முறித்து விடும் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.  

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (International Committee of the Fourth International-ICFI), உலக சோசலிச வலைத் தளமும் (World Socialist Web Site-WSWS) இணைந்து மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்கவும், அவர்களது உடனடி விடுதலைக்காக போராடவும் உலகளவில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து விரைவில் அணிதிரள வேண்டும் என வலியுறுத்தின.

ஜப்பானிய வாகன உற்பத்தியாளரின் மிருகத்தனமான வேலை நிர்வாகமுறை மற்றும் குறைவூதிய நிலைமைகளை சவால் செய்வதன் மூலம் மாருதி சுசூகி தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சார்பாக ஒரு அடியை கொடுக்கின்றனர். அவர்களை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் பிரச்சாரம், தொழிலாள வர்க்கத்தின் உலக ஒற்றுமையை உருவாக்குவதில் ஒரு முக்கிய அடியெடுப்பாக இருக்க முடியும் என்பதுடன் இருக்கவும் வேண்டும், அது நாடுகடந்த நிறுவனங்களை எதிர்த்து போராடுவதற்கும் மற்றும் ஊதியங்களையும் வேலை நிலைமைகளையும் அடிமட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான என்றும் முடிவில்லாத ஒரு போட்டியில் தொழிலாளர்களின் ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினருக்கு எதிராக நிறுத்தும் அவர்களது முயற்சிகளை தோற்கடிப்பதற்கும் அவசியமானதாகும்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

நீதியின் மீதான பரிகாசம் நிலைத்துநிற்க கூடாது!

ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தண்டித்து இதுவரை ஒரு வருடமாகிறது

[17 March 2018]

ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்! [PDF]

[20 March 2017]