ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Riots erupt in Nantes in western France after police murder

போலிஸ் படுகொலைக்குப் பின்னர் மேற்கு பிரான்சின் நாந்தேரில் கிளர்ச்சி வெடிக்கிறது

By Alex Lantier
5 July 2018

துணை இராணுவ போலிஸ் 22 வயதான ஒருவரைச் சுட்டுக் கொன்றதும், ஞாயிறன்று இரவில் இருந்து திங்கட்கிழமை வரையில் பாரீசில் இருந்து 385 கிலோமீட்டர் மேற்கில் உள்ள நாந்தேரின் பல்வேறு புறநகர் பகுதிகளில் கிளர்ச்சிகள் வெடித்தன. பத்திரிகையாளர்கள் உட்பட அந்த படுகொலையை நேரில் பார்ந்த பலரும், பலியானவர் போலிஸ் க்கு எந்த அச்சுறுத்தலும் முன்வைக்காத போதும், கண்கூடாக நேருக்குநேர் காருக்கு மிக அருகில் அவரை அவர்கள் கொடூரமாக சுட்டுக் கொன்றதை உறுதிப்படுத்தினர்.

ஆனால் அந்த போலிஸ் படுகொலையை நேரில் பார்த்தவர்கள் இணையத்தில் பதிப்பிக்க முயன்ற காணொளிகளைப் பேஸ்புக் தணிக்கை செய்து வருகிறது, பிரெஞ்சு அரசாங்கமோ வெட்கமில்லாமல் சம்பவங்களை முற்றிலும் வேறு விதத்தில் சித்தரித்து வருகிறது.

அந்த இளைஞரின் அடையாளம் "தெளிவாக தெரியாததால், போலிஸ் அந்த ஓட்டுனரை" தலைமை போலிஸ் அலுவலகத்திற்குப் "பிடித்து வரும் உத்தரவைப் பெற்றிருந்தது, அவர் தனது காரை பின்னுக்கு நகர்த்தி, ஒரு போலிஸ்காரரை உரசியவாறு சென்றதும் அவரை போலிஸ் சுட்டுக் கொன்றதாக மக்கள் பாதுகாப்பு இயக்குநரக துறை கூறுகிறது. பலியானவர் பாரீஸ் பகுதியில், Val d’Oise இல் வசிப்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கிடைத்த விபரங்களின்படி, அவர், பிரான்சின் ஆறாவது மிகப்பெரிய நகரமான நாந்தேரில் உள்ள அவர் குடும்பத்தைச் சந்தித்து விட்டு வந்து கொண்டிருந்தார்.

நேரில் பார்த்த பலரும் போலிஸ் கூறும் விபரங்களை நேரடியாகவே மறுத்தனர். அந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள லு பிரெய் இல் வசிக்கும், நேரில் பார்த்தவர்களில் ஒருவரான கமெல் அளித்த தகவல்படி, கொல்லப்பட்ட அந்த இளைஞன் "போலிஸ் சோதனையிலிருந்து தப்பிக்க மட்டுமே விரும்பினான், போலிஸ் எந்தவொரு காரணமுமின்றி துப்பாக்கியால் சுட்டது. அங்கே எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை. அவர் காரை பின்னுக்கு எடுத்தார் அவ்வளவு தான், ஆனால் காருக்குப் பின்னால் எந்த போலிஸூம் இருக்கவில்லை. நான் அங்கே இருந்தேன், அதைப் பார்த்தேன். சிலர் அந்த ஒட்டுமொத்த காட்சியையும் படம் பிடித்து, அதை பேஸ்புக்கில் பதிவிட்டார்கள், ஆனால் பின்னர் அவர்கள் அந்த காணொளியை நீக்கிவிட்டார்கள்.”

Europe1 ரேடியோ செய்தியாளர்கள் அந்த படுகொலையைப் படம் பிடித்த அஹ்மத்தை சந்தித்ததுடன், அவரது காணொளியையும் பார்வையிட்டார். அது நேரில் பார்த்தவர்களின் விவரிப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதிகாரபூர்வ விவரிப்பை பொய்யாக்குவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. போலிஸ்காரர்கள் "அந்த இளைஞரைக் கைது செய்து, அவரை அவர்களுடன் கொண்டு செல்ல விரும்பினர். அவர் காரைப் பின்னுக்கு நகர்த்தினார், அவ்வளவு தான்! அந்த நேரத்தில் அவர்கள் அவரைத் தொண்டையில் சுட்டு கொன்றார்கள்,” என்று அஹ்மத் தெரிவித்தார்.

போலிஸ்காரர்கள் காலம்தாழ்த்தாது ஆம்புலன்ஸ் க்கு அழைப்பு கொடுத்திருந்தால் அந்த இளைஞரைக் காப்பாற்றி இருக்கலாமென தெரிவித்த அஹ்மத், “அவர்கள் தொழில்முறை நிபுணர்கள், அவர்கள் அந்த இளைஞர் மீது ஒரு டாசரை (செயலிழக்க வைக்கும் துப்பாக்கி) பயன்படுத்தி இருக்கலாம். அவர்கள் டாசரைப் பயன்படுத்தி இருக்கலாம், அல்லது கார் டயர்களைச் சுட்டிருக்கலாம், அவரைக் கொல்வதைத் தவிர்க்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை அவர்கள் செய்திருக்கலாம்! இது போலிஸ் காட்டுமிராண்டித்தனம், இதற்கு அவர்களே பொறுப்பாளிகள்! அவர்கள் எங்களைக் காப்பாற்றுவதற்காக இருப்பதாக கூறிக் கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் எங்களின் குழந்தைகளைக் கொல்கிறார்கள்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

நாந்தேரில், நிறுவனம்-சாராத பத்திரிகையாளர் மரியோன் லோப்பேஸ், இந்த விபரங்களை உறுதிப்படுத்துகின்ற மற்றும் விசாரணையின்றி படுகொலை செய்யும் பாணியில் நடத்தப்பட்ட போலிஸ் படுகொலை குறித்த உறைய வைக்கும் விபரங்களை வழங்கிய, நேரில் பார்த்த ஒருவரை பேட்டி எடுத்து, ட்வீட்டரில் ஒரு காணொளி பதிவிட்டார்: “அவர் வெறுமனே காரைப் பின்னுக்கு எடுக்க முயன்றார். அதுவும் பின்னால் ஒரு சுவர் இருந்ததால் அவரால் நகர முடியவில்லை. … [அந்த இளைஞர்] ஏற்கனவே நகர முடியாதவாறு இருந்தார், அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. அந்த போலிஸ்காரர் அவர் அருகில் சென்று, நேருக்கு நேராக மிக அருகிலிருந்து அவரைச் சுட்டார்.”

பலியானவர் எந்தவொரு போலிஸ் அதிகாரியையும் தாக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய நேரில் பார்த்தவர், போலிஸ் மருத்துவ உதவிக்கு அழைப்பு கொடுக்க மறுத்ததைச் சுட்டிக்காட்டினார்: “போலிஸ் அவருக்கு உதவவோ அல்லது அவருக்கு முதலுதவி வழங்கவோ கூட முயற்சிக்கவில்லை. ஒரு போலிஸ் பெண்மணி அவருக்கு உதவ அவர் மீது கை வைத்தார், அதுமட்டும் தான். 'அவருக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸை அழையுங்கள்,' என்று போலிஸ் எங்களிடம் கூறினர், ஆனால் அதை செய்வது எங்களின் பொறுப்பில்லையே. இறுதியாக 10-15 நிமிடங்கள் கழித்து தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர் இறக்கவில்லை என்று போலிஸ் எங்களிடம் கூறினார்கள், ஆனால் நான் அவரைப் பார்த்தேன், அவருக்கு உயிர் கொடுக்க முயன்றேன். எனக்கு தெரிந்ததை நான் முயற்சித்தேன் ஆனால் என் கண் முன்னாலேயே அவர் உயிர் பிரிந்தது.”

சுடப்பட்டவர் இறந்துபோன உடனேயே, நாந்தேரைச் சுற்றிய பல பகுதிகளில் —Le Breil, Malakoff மற்றும் Les Dervallières இல்— பாதுகாப்பு படைகளுடன் கலகங்களும் மோதல்களும் வெடித்தன. அடைக்கப்பட்டு இருந்த பெரும்பாலான பகுதிகளில் நூற்றுக் கணக்கான போலிஸ்காரர்கள் நிலைநிறுத்தப்பட்டதுடன், போராட்டக்காரர்கள் மீது கையெறிகுண்டுகளும் கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன.

Les Dervallières புதன்கிழமையும் போலிஸ் கட்டுப்பாட்டில் அடைக்கப்பட்டிருந்தது. ஓர் உள்ளாட்சி நீதிமன்றம் மற்றும் நீதித்துறை மையம் நெருப்புக்கு இரையானதாக அங்கே வசிப்பவர்கள் தெரிவித்தனர், மேலும் அந்த கட்டிட வளாகத்தில் உள்ளாட்சி அலுவலகங்கள், ஒரு மருத்துவமனை, நூலகம் இருப்பதாகவும், பல கடைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

நாந்தேர் நகரசபை தலைவர் ஜோஹானா ரோலாண்ட் அதிகாலை 2 மணிக்கு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்ட பின்னர், உள்துறை அமைச்சர் ஜெரார்ட் கொலொம் பாதுகாப்பு படைகளை நியாயப்படுத்தியதுடன், கலகக்காரர்களை "மிகவும் உறுதியாக" கண்டித்தார். காலவரையின்றி அந்நகரம் தொடர்ந்து போலிஸ் கட்டுப்பாட்டில் மூடப்படும் என்றும் அவர் எச்சரித்தார்: “அவசியமான அனைத்து கருவிகளும் தற்போது தயாராக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன, நிலைமையை தணிக்கவும் எந்தவொரு புதிய சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும், தேவைப்படும் வரையில், வைக்கப்பட்டிருக்கும்.”

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இந்த போலிஸ் நடவடிக்கையை ஆதரிக்கிறார் என்பதற்கு குழப்பத்திற்கிடமின்றி உறுதியான சமிக்ஞை உள்ளது. இந்த படுகொலை மீதான உத்தியோகபூர்வ விசாரணை, அந்த துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்தவர்களது விபரங்களைக் கலைத்து, மதிப்பிழக்க செய்வதன் மூலமாக கண்துடைப்பு செய்ய முயலும்.

பலரின் கண் முன்னாலேயே ஒரு மனிதரை போலிஸ் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்திருப்பதானது, பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் ஒரு போலிஸ்-அரசு எழுந்திருப்பதில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. பேர்லினும் பாரீசும் எல்லைகளை மூடவும் மற்றும் அகதிகளின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது கொடூரமாக தாக்குதல்களை நடத்தவும் இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவின் அதிவலது அரசாங்களது கோரிக்கைகளுடன் தங்களைத் துரிதமாக அணி சேர்த்து வருகின்றன. அதேநேரத்தில், கொலொம் மற்றும் மக்ரோனும் தொழிலாள வர்க்கம் மற்றும் அண்டைபகுதியில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களைக் கொல்ல போலிஸிற்கு அனுமதி வழங்கி வருகின்றனர்.

தொழிலாள வர்க்கத்தில் சமூக செலவினக் குறைப்புக்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வருவதற்கு மத்தியில், மக்களை இலக்கு வைத்து தீவிரப்படுத்தப்பட்ட ஒரு பரந்த அரசு பயங்கரம் நடந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியமோ லிபியாவிலும் மற்றும் கிரீஸ் அல்லது இத்தாலியிலும் உள்ள சித்திரவதை முகாம்களின் ஒரு பரந்த வலையமைப்பில் ஆயிரக் கணக்கானவர்களை அடைத்து வைக்க அச்சுறுத்தி வருகிறது, இவை அல்பானியா மற்றும் துனிசியா உள்ளடங்கலாக விரிவுபடுத்தப்படலாம்.

இந்த போலிஸ் படுகொலையை அம்பலப்படுத்தும் காணொளிகளை பேஸ்புக் முடக்கி வருவதாக பத்திரிகையாளர்களும் மற்றும் நாந்தேரில் வசிப்பவர்களும் கூறும் சாட்சியங்கள் இன்னும் அதிமுக்கியமான அரசியல் கேள்விகளை எழுப்புகின்றன.

உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டுள்ளதைப் போல, சமூக ஊடகங்களை இலக்கு வைத்த இணைய தணிக்கைக்கான நோக்கம், சமூக அதிருப்தி மற்றும் போராட்டங்களை திக்குமுக்காட செய்வதாகும். அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி ஆடம் ஸ்க்ஹிப் கருத்துப்படி, எதிரிகளாக கருதப்படுபவர்கள் "உண்மையான அமெரிக்கர்களை இணைய மனுக்களில் கையெழுத்திடுமாறு செய்வதற்கும், பேரணிகள் மற்றும் போராட்டங்களில் இணைவதற்கு அணிதிரட்டுவதற்கும்" இணையத்தைப் பயன்படுத்த முயல்கிறார்கள் என்பதால், கூகுள் மற்றும் பேஸ்புக் அவற்றின் தணிக்கையை அதிகரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸின் பல அரசியல்வாதிகளும் கடந்த ஆண்டு கோரியிருந்தனர். “நமது சமூகத்தில் விரிவடைந்து வரும் பிளவுகளைக்" குறித்து ஸ்க்ஹிப் எச்சரிக்கும் அளவுக்குச் சென்றார்.

இது பின்வரும் கேள்வியை எழுப்புகிறது: தகவல்கள் சுதந்திரமாக பரவுவதையும் அவ்விதத்தில் அந்த போலிஸ் படுகொலை மீதான ஒரு புறநிலையான விசாரணையையும் தடுத்து, அதன் மூலமாக நிலைமையை தணிக்க முயற்சிப்பதற்காக, நாந்தேர் துப்பாக்கிச் சூடு காணொளிகளைப் பேஸ்புக்கில் இருந்து நீக்குமாறு உயர்மட்ட அரசு அதிகாரிகளால் கோரப்பட்டதா?

அனைத்திற்கும் மேலாக இந்த படுகொலையானது, நீண்டகாலமாக பிரெஞ்சு அரசின் உயர்மட்டத்தில் நீதிவிசாரணையற்ற படுகொலை கொள்கைக்கு திட்டமிட்டு துணிச்சலூட்டப்பட்டு ஊக்குவிக்கப்பட்டதன் விளைவாகும். 2016 இல், அப்போதைய ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் பயங்கரவாத தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்து வருபவர்களாக இருக்கலாமென உளவுத்துறை அல்லது போலிஸ் முகமைகள் அளிக்கும் குற்றஞ்சாட்டுக்களின் அடிப்படையில் பிரெஞ்சு மக்களைப் படுகொலை செய்வதற்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததாக பெருமைப்பீற்றி இருந்தார்.

பிரெஞ்சு அரசியலமைப்பில் பொதிந்துள்ள மரண தண்டனையை சட்டத்திற்குப் புறம்பாக மீறினாலும் கூட இதுபோன்ற "Opérations Homo” என்றழைக்கப்படும் "ஆட்கொலைகள்" வெளிப்படையாகவே, ஊடகங்களில் பொதுவாக இவற்றின் மீது மெத்தனமான கவனிப்பே வழங்கப்படுகின்றன.

போலிஸ் அவர்களின் ஆயுதங்களை மிகப் பரந்தளவிலும் மற்றும் எளிதாகவும் பயன்படுத்த அனுமதிக்கும் விதிமுறைகள், பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்கும் பெயரில் அவசரகால நிலையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட இவை, போலிஸ் வன்முறைகள் வேகமாக அதிகரிப்பதற்கு ஊக்குவித்துள்ளது. போலிஸ் தங்களின் உயிருக்கு ஆபத்து என்றோ அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்றோ கருதினால், வாகன ஓட்டுனர்களைச் சுடுவதற்கு அனுமதிக்கும் விதிமுறைகள் பெப்ரவரி 2017 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர், பிரெஞ்சு போலிஸ் கடந்த ஆண்டு 394 முறை அவர்களின் சுடும் ஆயுதங்களைப் பயன்படுத்தி உள்ளனர். தேசிய போலிஸ் மீதான பொது ஆய்வு (IGPN) காட்டும் ஓர் அறிக்கையின்படி, இது அதற்கு முந்தைய ஆண்டை விட 54 சதவீதம் அதிகமாகும்.

நாந்தேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த போலிஸ் படுகொலைக்கு குற்றகரமான அரசியல் பொறுப்பு யாருடையது என்பதை, ஒரு சுயாதீனமான பாரபட்சமற்ற விசாரணை மூலம் மட்டுமே சட்டபூர்வமாக தீர்மானிக்க முடியும்.