ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Former Pakistan PM Sharif arrested in run-up to election

முன்னாள் பாகிஸ்தான் பிரதம மந்திரி ஷெரீப் தேர்தலுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்

By Sampath Perera 
17 July 2018

சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப் கடந்த வெள்ளியன்று, தனது நாட்டிற்கு திரும்பிய போது கைது செய்யப்பட்டு, அரசியல் ரீதியாக தூண்டப்பட்டதும் மோசடி செய்யப்பட்டதுமான ஊழல் வழக்கு குறித்து இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 10 ஆண்டுகால சிறை தண்டனை தொடர்பாக நிலுவையிலுள்ள சட்டரீதியான முறையீடுகளின் பேரில் தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஷெரீப் பாகிஸ்தானுக்கு செல்ல விமானத்தில் ஏறியபோதே அவரை கைது செய்வது என்பது முன்னரே எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது. ஆனால், ஒரு இராணுவ திட்டமிடலுடன் கூடிய “நீதித்துறையின் சதி வேட்டை,” என்று அவர் குறிப்பிட்டத்தை எதிர்கொண்ட நிலையில், அவரது வருகைக்கு பொதுமக்களின் அனுதாபமும் மற்றும் ஜூலை 25 அன்று தேசிய மற்றும் மாகாண சபை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில்  அவரது சீர்குலைந்து போயுள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) அல்லது PML-N இற்கு ஆதரவும் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.

இத்தகைய முடிவை முறியடிக்க தீர்மானித்து, பாகிஸ்தான் அரசு அதிகாரிகள், ஷெரீபின் வருகைக்கு முன்னதாகவே அவரது சொந்த ஊரான லாகூரில் அனைத்து பொதுமக்கள் கூடுதல்களுக்கும் தடை விதித்து, கைதொலைபேசி சேவைகளையும் தற்காலிகமாக முடக்கி வைத்திருந்தனர் என்பதுடன், ஆயிரக்கணக்கான பொலிஸ் மற்றும் பாகிஸ்தான் துணை இராணுவ ரேஞ்சர்களையும் அங்கு நிலைநிறுத்தி இருந்தனர். இருப்பினும், பல்லாயிரக்கணக்கானவர்கள் என சிலர் மதிப்பிட்ட பெரும் திரளான மக்கள், ஷெரீபுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க தெருக்களில் ஒன்று திரண்டனர்.

பத்திரிகை செய்திகளின் படி, ஷெரீபுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் அரசு பிரச்சாரங்களின் ஒரு பாகமாக சமீபத்திய நாட்களில் குறைந்தது 600 PML-N ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவரது PML-N தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம் குறைந்தபட்சமாக 2013 மே மாதம் முதல் கடந்த ஜூன் மாத தொடக்கம் வரையிலும் பெயரளவில் செயல்பட்டு வந்தது. இது பின்னர், ஜூலை 25 ஆம் தேதிய தேர்தல் முடிவுகள் வரையிலான எஞ்சிய காலத்திற்கு பதவியிலிருக்கும் ஒரு “காபந்து அரசாங்கத்தால்” பிரதியீடு செய்யப்பட்டது.

லண்டனின் ஹைட் பார்க் (London’s Hyde Park) அருகே ஷெரீப் குடும்பத்தினருக்கு சொந்தமாக நான்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பது Panama Papers’ 2016 இல் அம்பலப்படுத்தப்பட்டதில் இருந்து தேசிய புள்ளிவிபர கழகம் (National Accountability Bureau – NAB) ஷெரீப் மீது தாக்கல் செய்த குற்றவியல் குற்றச்சாட்டுக்களை ஜூலை 6 அன்று ஒரு ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் கண்டறிந்தது. மேலும், கடந்த வெள்ளியன்று அவர்களது பாகிஸ்தான் வருகையின்போது, ஷெரீபின் வாரிசாக கருதப்பட்டுவரும் அவரது மகள் மரியமும் கூட ஊழல் வழக்கில் சிக்கி அவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷெரீப், தனது குடும்ப வளத்தை சட்டவிரோதமாக பெருக்குவதற்கு அவரது முப்பது வருட கால அரசியல் வாழ்க்கையை பயன்படுத்தியுள்ளார் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது. ஆனால் பாகிஸ்தானிய உயரடுக்கிற்குள், குறிப்பாக இராணுவம், நீதித்துறை மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்குள் ஊழல் என்பது எப்பொழுதும் முடிவின்றி பரவியிருக்கும் ஒரு நோயாக உள்ளது. ஷெரீப் மீது NAB முனைப்புடன் எடுத்த குற்றச்சாட்டு என்பது ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப்பின் சர்வாதிகாரத்தின் கீழ் உருவாக்கப்பட்டது, மேலும் இராணுவத்தின் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை புனைவதில் இது இழிபுகழ் பெற்றதாகும்.

பாகிஸ்தானுக்கு அவர் புறப்படுவதற்கு சற்று முன்னர் ராய்ட்டர்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவரது PML-N க்கு எதிரான அப்பட்டமான அரசு பிரச்சாரத்தை ஷெரீப் கண்டனம் செய்தார், மேலும், “பல்வேறு அரசு நிறுவனங்கள் மீது, அதிலும் குறிப்பாக நீதித்துறை மற்றும் ஆயுதப்படைகளை இலக்கு வைக்கும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தைக் கொண்ட அரசியல் தலைமை” வழங்கும் உரைகளை ஒளிபரப்புவதை தொலைக்காட்சி சானல்கள் நிறுத்த வேண்டும் என்ற ஒரு உத்தரவையும் இது உள்ளடக்கியதாகும்.

“எமது மக்களுக்கு எதிராக கடுமையானதொரு நடவடிக்கையை அதுவும் நாடு முழுவதிலும் இவ்வாறான அடக்குமுறையை அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கும் போது … இந்த தேர்தல்கள் மீதான நம்பகத்தன்மை என்னவாக இருக்கும்?” என்று ஷெரீப் புகார் செய்தார்.

“நான் சிறையில் அடைக்கப்படுவேன் என்ற உண்மையை நான் அறிவேன்,” “என்றாலும் இது பாகிஸ்தானில் வாக்களிக்கும் புனிதத்தை காப்பாற்றும் பெரும் பணிக்காக கொடுக்கப்படும் ஒரு மிகச் சிறிய விலையாகும்” என்று ஷெரீப் தொடர்ந்து கூறினார்.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு தியாகியாக தன்னை சித்தரித்து காட்டும் ஷெரீபின் முயற்சிகள் நகைப்புக்குரியவையாக உள்ளன. அவர், “இஸ்லாமியமயமாக்கும்” சர்வாதிகார ஜெனரல் ஜியா-உல் ஹக் இன் ஒரு அரசியல் ஆதரவாளராக இருந்ததுடன், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு (Pakistan People’s Party-PPP) எதிரான இராணுவ உளவுத்துறை எந்திரத்தின் அரசியல் சூழ்ச்சிகளின் விளைவாக 1990 களில் இரண்டு முறை அதிகாரத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிந்து சர்ச்சைக்குரிய காஷ்மீரின் ஒரு தொலைதூரப் பகுதியில் நடந்த இந்தியாவிற்கு எதிரான கார்கில் போரை முடிவுக்கு கொண்டுவர ஆணை பிறப்பித்த போது 1998 இல் இராணுவத்துடன் ஷெரீப் இற்கு முரண்பாடு ஏற்பட்டது. அடுத்த ஆண்டிலேயே, முஷாரஃப் அவரை ஆட்சிக் கவிழ்ப்பு செய்து வெளியேற்றினார்.

ஒரு இராணுவ நீதிமன்றம் பின்னர் ஷெரீபுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறைலடைத்தது, ஆனால் ரியாத் மற்றும் வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ் சவுதி அரேபியாவில் நாடுகடந்து வாழ அவர் அனுமதிக்கப்பட்டார். புஷ் நிர்வாக ஆதரவிலான முஷாரஃபின் ஆட்சி, 2007 இல் சரிந்து போன நிலையில் ஷெரீப் நாட்டிற்கு திரும்பினார். இந்நிலையில், பிப்ரவரி 2008 தேர்தல்களைத் தொடர்ந்து, முஷாரஃபை அவரது ஜனாதிபதி பதவியை துறக்க செய்வதற்கும், மேலும் பிரதம மந்திரி தலைமையிலான அரசாங்க முறைக்கு திரும்புவதற்கு நிர்ப்பந்திக்க PPP உடன் அவரது PML-N இணைந்து கொண்டது.

PPP தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய (IMF) உத்திரவின் பேரில் எடுத்த சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் நடந்த அமெரிக்க ஆளில்லா விமான போர்களில் (US drone war) அது உடந்தையாக இருந்தது போன்றவற்றின் மீதான மக்கள் எதிர்ப்பை சுரண்டுவதன் மூலமாக, 2013 தேர்தல்களில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஷெரீப் அவரது PML-N உடன் அதிகாரத்திற்கு வந்தார். அவருடைய அரசாங்கமும் உடனடியாக சிக்கன நடவடிக்கையை தீவிரப்படுத்தியதுடன், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களின் விற்பனையையும் துரிதப்படுத்தியது.

பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதன் பேரில், கராச்சி உட்பட, பாகிஸ்தானின் அனைத்து பகுதிகளிலும் அதி விரைவில் இராணுவ நடவடிக்கைகளை அது விரிவாக்கியது; பொதுமக்களை இரகசியமாக விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய ஒரு இராணுவ நீதிமன்ற அமைப்பிற்கும் புத்துயிரூட்டியது; மேலும் மரண தண்டனை மீதான நிறுத்திவைப்பை நீக்கியதன் மூலம் நூற்றுக்கணக்கான தூக்கு கயிறுகளுக்கு எண்ணெய் தடவியது.

இருப்பினும், இராணுவத்தை சமாதானப்படுத்த எடுக்கப்பட்ட இத்தகைய முயற்சிகள் மிகச் சிறியனவாகவும், மிகவும் தாமதமானவையாகவும் இருந்தன என்பது நிரூபனமாகின. ஆட்சிக்கு வந்த முதல் மாதத்தில், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை மீதான பொதுமக்கள் அரசாங்க கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த ஷெரீப் முயற்சிகள் மேற்கொண்ட போது அவரது பதவி மீண்டும் தீவிரமாக அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டது. இந்தியாவுடனான நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்ட “சமாதான முன்னெடுப்புகளையும்,” மற்றும் முஷாரஃபின் தேசவிரோத குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான அவரது அரசாங்கத்தின் வெற்றியையும் புதுப்பிக்க முனையும் அவரது முயற்சிகளையும் கூட இராணுவம் எதிர்த்தது.

50 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (Chinese Pakistan Economic Corridor – CPEC) மீதான மேற்பார்வையிடல் குறித்து அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கு இடையில் கூர்மையான வேறுபாடுகளும் எழுந்துள்ளன, இவை பொறுப்பில் உள்ளவர்களுக்கான ஒரு அதிர்ஷ்டத்தை மட்டும் உறுதிப்படுத்தவில்லை, மாறாக மிகப் பெரிய அளவிலான இராணுவ-மூலோபாய தாக்கங்களையும் கொண்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) வாஷிங்டனுக்கும் வளைந்து கொடுக்கும் ஒரு கருவியாக சேவையாற்றுவதற்காக 2014 தேர்தல்களில் கடும் வீழ்ச்சியுற்ற பின்னர் விளிம்பில் இருந்து வந்த PPP, ஷெரீபின் விவகாரத்தில் ஒரு நிச்சியமற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்துள்ளது. ஷெரீபின் ஆதரவாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடந்த வார ஆர்ப்பாட்டத்திற்கு பதிலிறுப்பாக, லாகூர் “முற்றுகை” குறித்து கேள்வி எழுப்பியும், மற்றும் “அமைதியான எதிர்ப்பு” என்ற உரிமையை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் PPP இன் தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி ஒரு ட்வீட் செய்தார்.

இருப்பினும், தங்களது பிரச்சாரத்தை மட்டுப்படுத்தவும் சீர்குலைக்கவும் முனையும் அதிகாரிகளின் இடைவிடாத ஊடுருவும் முயற்சிகளுக்கு எதிராக PPP யும் மற்றும் ஏனைய எதிர் கட்சிகளும் சமீபத்திய நாட்களில் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியிருந்தது. மேலும், ஒரு மோசடியான பெரும் வாக்கெடுப்பு நடவடிக்கைக்கு தயாரிப்பு செய்யப்பட்டு வருவதாக PPP பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது என்பதுடன், கடந்த வெள்ளியன்று பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறியதற்காக சுமார் அறுபது PML-N தலைவர்களும் ஆர்வலர்களும் நாட்டின் கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றனர் என்ற அறிக்கையை பிலாவலின் தந்தையும், முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதியுமான ஆசிப் அலி ஜர்தாரி திங்களன்று கண்டனம் செய்துள்ளார்.

இந்நிலையில், அதிகாரிகளின் சதிகள் மற்றும் ஒடுக்குமுறையினால் விளையும் நலன்களை நோக்கமாகக் கொண்ட பயனாளிகளாக, கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கானும் அவரது வலதுசாரி பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியும் இருந்து வருவதை ஒவ்வொன்றும் குறிக்கிறது. ஷெரீபுக்கும் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பதாகையின் கீழ் ஷெரீபுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள பிரச்சாரத்திற்கும் எதிரான நீதித்துறை நடவடிக்கைகளின் விதிமுறைகளுக்கு தனது முழு ஆதரவை கான் வழங்கியுள்ளார்.

கான், பாகிஸ்தானின் ஆழ்ந்த “மதவாத எதிர்ப்பு சட்டங்கள் மற்றும் அஹ்மத்திய சிறுபான்மையினருக்கு எதிரான அரசு பாகுபாடு ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் இஸ்லாமிய வலதுசாரியை அவர் ஆதரித்ததுடன் இராணுவத்துடன் இணைந்து செயல்படும் தகுதிபடைத்த ஒரு பொதுமக்கள் தலைவராக தன்னை காட்டிக்கொள்கிறார். மே மாதம் New York Times பத்திரிகைக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில், ஒருவேளை, “ஒரு ஜனநாயக அரசாங்கம்” “தார்மீக அதிகாரத்தை கொண்டிருக்காத பட்சத்தில், சரீர ரீதியிலான அதிகாரத்தை கொண்டவர்கள் தங்களது ஆளுமையை நிலைநாட்டுகின்றனர்.” என்று கூறி, ஷெரீப் அரசாங்கம் மீதான இராணுவத்தின் பயமுறுத்தல்களை கான் நியாயப்படுத்தினார். மேலும் கான் “என்னுடன் இராணுவத்தை எடுத்துச் செல்ல முடியும்” என்று நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார். “என் கருத்துப்படி, இது பாகிஸ்தான் இராணுவமே அன்றி ஒரு எதிரி இராணுவம் அல்ல” என்றும் தெரிவித்தார்.

ஒரு நீண்டகால புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் ஒரு மோசமான நிதி நிலை சரிவு இவற்றிற்கு மத்தியில் தான் பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி நிகழ்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, அமெரிக்க டாலர் மீதான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 15 சதவிகித சரிவைக் கண்டுள்ளது, அதேசமயம் கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதாசாரம் (debt-to-GDP ratio) 70 சதவிகிதத்திற்கு அதிகமாகியுள்ளது, அது ஒரு “வளர்ந்துவரும் நாட்டிற்கான” ஏற்றுக்கொள்ளத்தக்க மட்டங்களாக கருதப்படுவதை கடந்து விட்டது. கடந்த ஆண்டில் 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கடனாக பெற்றுள்ள நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போகும் நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிபெற இஸ்லாமாபாத் முயல வேண்டியதற்கான நிலைமை தான் இருக்கிறது என்றும் அது தவிர்க்க முடியாமல் கூட இருக்கலாம் என்றும் பைனான்சியல் பிரெஸ் பத்திரிகை கருதுகிறது.

ஆப்கானியப் போர் குறித்த அதிக சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் கோரிக்கை விடுக்கின்ற நிலையில், வாஷிங்டன் உடனான பாகிஸ்தானின் உறவுகள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதாக உள்ளன மற்றும் இஸ்லாமாபாத் பதட்டத்துடன் கவனித்து வருவது என்னவென்றால் வாஷிங்டன் மற்றும் அதன் பரம எதிரி புது தில்லிக்கும் இடையில் எப்போதும் ஆழமடைந்து வரும் மூலோபாய அரவணைப்பு.

வாஷிங்டன் உடனான அதன் வரலாற்றுரீதியான நெருக்கமான உறவுகள் மதிப்பிழந்து வருவதை ஈடுகட்டுவதற்காக பாகிஸ்தான் சீனாவுடன்  இராணுவ மூலோபாய கூட்டணியை வலுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் அமெரிக்கா உடனான அதன் உறவுகளை இன்னும் சேதப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்குள் நடத்தப்பட்ட இந்தியாவின் செப்டம்பர் 2016 “நுட்பமான தாக்குதல்களுக்கு” வாஷிங்டன் ஆதரவளித்தது என்பதுடன், இஸ்லாமாபாத்தை அதிர்ச்சியுறச் செய்யும் வகையில், ஆப்கானிஸ்தான் விடயத்தில் இன்னும் பெரும் பங்கு வகிக்க புது தில்லியை அது ஊக்கப்படுத்தியுள்ளது.

இந்தியா உடனான பதட்டங்கள் சமீபத்திய வாரங்களில் குறைந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளின் பெரும் பகுதியில் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி (Line of Control) ஊடாக தெற்காசியாவின் அணுவாயுதமேந்திய நாடுகளின் இராணுவத்தினர் பெரும்பாலும் தினமும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நிகழ்த்தி வருவதும், இரத்தத்தை உறையவைக்கும் முழு அளவிலான போருக்கான அச்சுறுத்தல்கள் விடுப்பதும் தொடர்ந்தன.

பாகிஸ்தானிய உயரடுக்கிற்குள் உள்ள மூர்க்கமான கன்னைப் போராட்டங்கள் மீதான ஊடகங்களின் கவனகுவிப்பு இருக்கின்ற நிலையில், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்குள் சமூக அதிருப்தி வளர்ச்சியடைந்து வருகின்றது, இந்நிலையில், நல்ல வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வேலைகளுக்காக போராடும் தொழிலாளர்கள் மற்றும் நில உரிமைகளுக்காக எதிர்த்து போராடும் கிராமப்புற மக்கள் ஆகியோருக்கு எதிராக அடுத்தடுத்த அரசாங்கங்களால் தக்கவைக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் மீண்டும் மீண்டும் ஏவப்படுகின்றன.

என்ன நிகழும் என்பது பற்றிய ஒரு எச்சரிக்கை அறிகுறியாக, பாஸ்துன் சிறுபான்மையினர் மீதான அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் ஒரு இயக்கத்தை இராணுவம் மிருகத்தனமாக ஒடுக்கியுள்ளது, அந்த சிறுபான்மையினர் பாகிஸ்தானின் “பயங்கரவாத எதிர்ப்பு” பிரச்சாரத்தின் ஒரு பாகமாக துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர், வலுக்கட்டாயமாக காணாமல் போக செய்யப்பட்டனர் மற்றும் காலனித்துவ பாணியிலான கூட்டு தண்டனை போன்றவற்றிற்கு ஆளாகியுள்ளனர்.