ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European Union intensifies campaign of terror against refugees

ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளுக்கு எதிராக திகிலூட்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறது

Johannes Stern
2 July 2018

கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஐரோப்பிய வரலாற்றில் ஓர் அபாயகரமான திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது. புரூசெல்ஸில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகளை இலக்கு வைக்கும் நடவடிக்கைகளானது, ஐரோப்பிய ஒன்றியம் எதற்காக இருக்கிறது என்பதை, அதாவது, அது ஆளும் வர்க்கங்களின் ஒரு பிற்போக்குத்தனமான கருவி என்பதை எடுத்துக்காட்டியது. ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவற்றை எல்லாம் கடந்து, அவற்றினது இராணுவவாதம், ஒடுக்குமுறை மற்றும் தொழிலாள வர்க்கம் மீதான சமூக தாக்குதல் கொள்கைகளைத் தீவிரப்படுத்துவற்கு ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேசியவாத மற்றும் வலதுசாரி சக்திகள் வெறித்தனமான திட்டநிரலை அமைத்து வருகின்ற நிலையில், புரூசெல்ஸ் உச்சிமாநாட்டை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் வெகுவாக வலதுக்கு மாறியுள்ளது.

புலம்பெயர்ந்தவர்களை அரக்கத்தனமாக துன்புறுத்துவது என்பது ஒரு சர்வதேச நடைமுறையாக உள்ளது. அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளைப் பிரித்து, அவர்களைக் கூண்டுகளில் அடைத்து வருகின்ற அதேவேளையில், 120,000 பேரை அடைத்து வைக்கும் இராணுவ முகாம்களின் ஒரு வலையமைப்புக்கும் அது திட்டமிட்டு வருகிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகவும் பலவீனமானதும் வறியதுமான இந்த பிரிவுகள் மீதான இத்தாக்குதலின் உலகளாவிய தன்மை, இது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண நெருக்கடியினது விளைவு என்பதை எடுத்துக்காட்டுகிறது.

வியன்னாவில் அதிவலது சுதந்திரக் கட்சியுடன் (FPÖ) கூட்டணி ஆட்சி நடத்துகின்ற ஆஸ்திரிய சான்சிலர் செபஸ்டியான் கூர்ஸ், நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பதவி ஏற்றார். ஐரோப்பா எங்கிலுமான தீவிர வலது மற்றும் பாசிசவாத சக்திகள் தங்களின் அகதிகள்-விரோத திட்டநிரலை ஏற்றுக் கொண்டதற்காக, கூர்ஸ் மற்றும் FPÖ ஐ புகழ்ந்து தள்ளுகின்றன. வாரயிறுதி வாக்கில் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சி மாநாட்டில், கட்சியின் கூட்டாட்சிக்கான செய்தி தொடர்பாளர் ஜோர்க் மொய்தன், "ஐரோப்பிய புறக்கோட்டை" பிரச்சினையில் கூர்ஸை சக போராளி என்று வர்ணித்தார். AfD தலைவர் தெரிவித்தார், “ஹான்ஸ்-கிறிஸ்தியான் ஸ்ட்ராக, செபஸ்தியான் கூர்ஸ், மத்தேயோ சல்வீனி மற்றும் விக்டொர் ஓர்பான் ஆகியோருடன் நாங்கள் ஒத்துழைக்க விரும்புகிறோம், அவர்களுடன் நாங்கள் ஒத்துழைத்தே ஆக வேண்டும்.”

ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள் கொள்கையானது அடிப்படையில் அதிவலதின் உடையதே என்பதை வியன்னாவில் கூர்ஸ் அடிக்கோடிட்டுக் காட்டினார். "தெளிவாக ஐரோப்பிய-சார்பு கூட்டாட்சி அரசாங்கத்திற்கு" தலைமை வகிப்பதாகவும், அகதிகள் பிரச்சினையில் ஐரோப்பா-தழுவிய ஒரு தீர்வுக்கு போராடி வருவதாகவும் அவர் செய்தி தொடர்பாளர் மூலமாக தெரியப்படுத்தினார். இதில், “சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தலைமையிலான ஜேர்மன் அரசாங்கமும் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவரும்" அவருடைய "ஜேர்மன் கூட்டாளிகள்" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். ஆஸ்திரிய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூர்ஸ் குறிப்பிடுகையில், “என்ன முடிவெடுக்கப்பட்டதோ துல்லியமாக அதை நடைமுறைப்படுத்த வேண்டியது முக்கியமானது. அது நடப்பதை உறுதிப்படுத்த நாம் தொடர்ந்து அழுத்தமளிப்போம்,” என்றார்.

முன்மொழியப்பட்ட இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களை நினைவூட்டுகின்றன. ஏனையவற்றோடு சேர்ந்து, “ஐரோப்பிய புறக்கோட்டை" எல்லைகளை முழுமையாக மூடி முத்திரையிடுவதும், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் போர் பிரதேசங்களுக்கு மக்களை நாடு கடத்துவதும் இதில் உள்ளடங்குகின்றன. வெள்ளியன்று அனைத்து உறுப்பு நாடுகளும் உடன்பட்ட அந்த உத்தியோகபூர்வ மாநாடு குறிப்பிட்டது: “ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நிதியுதவி மற்றும் பொருளுதவிகளோடு, உறுப்பு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிஎல்லைகளை நடைமுறையளவில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஐரோப்பிய கவுன்சில் வலியுறுத்துகிறது. சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பல் கணிசமானளவுக்கு அதிகரிக்க வேண்டுமென்றும் அது குறிப்பிடுகிறது.”

அகதிகளை பீதியூட்ட, ஐரோப்பிய ஒன்றிய எல்லை முகமையான ஃப்ரொன்டெக்ஸ் இல் 2020 க்குள் குறைந்தபட்சம் 10,000 புதிய சிப்பாய்கள் நியமிக்கப்பட்டு, அது நடைமுறையளவில் ஓர் இராணுவ போலிஸ் படையாக விரிவாக்கப்பட உள்ளது. அகதிகளை அடைத்து வைக்க, வட ஆபிரிக்காவிலும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளுக்கு உள்ளேயும் சித்திரவதை முகாம்களை ஸ்தாபிக்கவும் அந்த உச்சிமாநாடு ஒப்புக் கொண்டது. அந்த உச்சிமாநாட்டு அறிக்கையில், இந்த தடுப்புக்காவல் முகாம்கள் நாசூக்காக அகதிகளுக்கான "தடுப்பு தளங்கள்" என்றும், “மறுகுடியேற்றம் மற்றும் புதிய குடியேற்றத்திற்கான" “கட்டுப்பாட்டு மையங்கள்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. யூதர்கள், நாடோடிகள் (gypsies) மற்றும் பிற "அன்னியர்களை" நோக்கி நாஜிக்கள் அவர்களின் படுகொலை கொள்கைகளை வர்ணிக்கப் பயன்படுத்திய வார்த்தைகளையே, இந்த நாசூக்கான வார்த்தைப் பிரயோகங்கள் நினைவூட்டுகின்றன.

வட ஆபிரிக்காவில் திட்டமிடப்பட்டுள்ள முகாம்கள், நாஜிக்களின் சித்தரவதை முகாம்களை ஒத்த, பயங்கர சித்திரவதை மையங்களாக இருக்கும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முழுமையாக நன்கு தெரியும். நைஜருக்கான ஜேர்மன் தூதர் 2017 இல் சான்சிலர் மற்றும் பல்வேறு அமைச்சகங்களுக்கு எழுதிய தூதரக விவகார உள்அலுவலக இராஜாங்க அறிக்கையில் குறிப்பிட்டடவாறு, “மிக கடுமையான திட்டமிட்ட மனித உரிமை துஷ்பிரயோகங்கள் லிபியாவில் [நடத்தப்பட்டு வருகின்றன].” Welt am Sonntag இல் வெளியான ஒரு கட்டுரையின்படி, “அதிகாரபூர்வ மொபைல் போன் புகைப்படங்களும் காணொளிகளும், தனிநபர் சிறைக்கூடங்கள் என்றழைக்கப்படுவதில் சித்திரவதை முகாம்களைப் போன்ற நிலைமைகள் இருப்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றன என்று அந்த ஆவணம் குறிப்பிட்டது.

அந்த தூதரக கடிதத்தின்படி, லிபிய முகாம்களில், “கடன் செலுத்தவியலாத அகதிகள் கொல்லப்படுவதும், சித்திரவதை, கற்பழிப்பு, மிரட்டல் மற்றும் பாலைவனங்களில் கொண்டு சென்று விடப்படுவதும் அன்றாட நடப்புகளாக உள்ளன.” “சிறைச்சாலையில் வாரத்திற்கு துல்லியமாக ஐந்து பேராவது கொல்லப்படுவதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர், புதிதாக வருபவர்களுக்கு இடமளிக்கும் வகையில், அதாவது மனித வெளியேற்றத்தை அதிகரிக்கவும், அவ்விதத்தில் அதை நடத்துபவர்களின் இலாபங்களுக்காகவும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இது அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.”

இந்த மையங்கள் ஏற்கனவே கிரீஸில் உள்ளன, இவை நாஜி சித்திரவதை முகாம்களுக்கு ஒத்த அதேபோன்ற தடுப்புக்காவல் முகாம்களுக்கான வடிவமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் அமைக்கும். ஞாயிறன்று Frankfurter Allgemeine Sonntagszeitung இல் “நரகத்திற்கான விஜயம்" என்றவொரு கட்டுரை, கிரேக்க சிரிசா அரசாங்கத்தால் லெஸ்பொஸ் தீவில் அமைக்கப்பட்ட மொரியா "எல்லைப்புற அகதிகள் முகாம்களை" குறித்து அறிவித்தது. முன்னர் இராணுவ முகாம்களுக்காக இருந்த ஒரு ஹெக்டர் அளவிலான பலத்த காவல் பகுதியில், 7,500 பேர் படுமோசமான நிலைமைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

“சுருள்சுருளான முள்கம்பி வடம், வேலிகளாக அமைக்கப்பட்டுள்ளது,” என்று அக்கட்டுரை குறிப்பிடுகிறது. “முகாமுக்குள் வருபவர்கள் கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய காவலாளிகளால் கண்காணிக்கப்படுகிறார்கள்… உள்ளே நுழைய விரும்புபவர்கள் யாராயினும் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். குறிப்பாக ஊடகங்கள் கதவுகளைத் தாண்டி எளிதாக அணுக அனுமதிக்கப்படுவதில்லை.”

பிரதான முதலாளித்துவ நாடுகளில் இதுபோன்ற அமைப்புகள் ஸ்தாபிக்கப்படுவது தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு தீவிர எச்சரிக்கையாகும். பாசிச ஆட்சிகளில் இருந்ததைப் போல, இந்த சித்திரவதை முகாம்கள் அரசியல் எதிராளிகளுக்கு எதிராகவும், இறுதியில் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் கூட பயன்படுத்தப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவவாத மற்றும் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்தளவில் கிளர்ந்தெழுந்து வரும் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதலுக்காக ஐரோப்பிய ஒன்றியம் தயாரிப்பு செய்து வருகிறது. நாளொன்றுக்கு 12 மணி நேர வேலையை அறிமுகப்படுத்துவது, வாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேலை நேர எண்ணிக்கையை 60 ஆக அதிகரிப்பது ஆகியவற்றிற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிராக சனிக்கிழமை வியன்னாவில் சுமார் 100,000 தொழிலாளர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

தற்போது ஆஸ்திரியா ஏற்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவி, “பாதுகாக்கும் ஓர் ஐரோப்பா" என்ற கோஷத்தின் கீழ், ஐரோப்பிய போலிஸ் அரசை கட்டமைக்க தீவிரமாக நோக்கம் கொண்டுள்ளது. இதற்காக, செப்டம்பர் 20 இல் சால்ஸ்பேர்க்கில் அது முதல் ஐரோப்பிய ஒன்றிய மாநாடு ஒன்றை நடத்த உள்ளது.

உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் போலிஸ் சோதனைகளுக்கு எதிராக போராட்டங்களை மற்றும் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்க, தொழிலாளர்களின் வேலையிடங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வசிப்பிடப் பகுதிகளில் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்குமாறு வலியுறுத்துகிறது. பின்வரும் கோரிக்கைகள் உயர்த்தப்பட்டு, சாத்தியமான அளவுக்குப் பரவலாக இவை விவாதிக்கப்பட வேண்டும்:

இதுபோன்ற குழுக்களின் அபிவிருத்தியானது, முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழிப்பதற்கு, சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும். போலி-இடது சிரிசாவில் இருந்து ஸ்பெயினில் சமூக ஜனநாயக PSOE வரையில், இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அதிவலது கட்சிகள் வரையில், ஐரோப்பாவில் அனைத்து ஆளும் கட்சிகளும் அகதிகளுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் தீவிரப்படுத்த மிக நெருக்கமாக கூடி இணைந்து செயல்பட்டு வருகின்றன என்ற உண்மையானது, தொழிலாளர்கள் புரட்சிகரப் பணிகளை எதிர்கொண்டுள்ளனர் என்ற உண்மையை அடிக்கோடிடுகிறது. ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் பணிய வைக்க முடியாது. அதை தூக்கியெறிந்து, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கொண்டு அது பிரதியீடு செய்யப்பட வேண்டும்.

இரண்டாம் உலக போரின் ஆரம்ப கட்டத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் அறிக்கையில், “ஏகாதிபத்திய அமைப்புமுறையின் ஒரு பிரிவுக்கு எதிராக மற்றொன்றை ஆதரிப்பதல்ல, மாறாக ஒட்டுமொத்தமாக இந்த அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதே, வரலாறு முன்வைத்திருக்கும் பணி,” என்று குறிப்பிட்டார்.

இப்பணி இன்று புதிய அவரசத்துடன் முன்நிற்கிறது. மீண்டும் காட்டுமிராண்டித்தனம் மற்றும் போருக்குள் வீழ்வதைத் தடுக்க, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துக் கன்னைகளையும் எதிர்த்து, நனவுபூர்வமாக ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.