ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

New York Times restates Washington’s anti-China agenda in Sri Lanka

இலங்கையில் வாஷிங்டனின் சீனா-எதிர்ப்பு செயற்பட்டியலை நியூ யோர்க் டைம்ஸ் மீளநிலைநாட்டுகிறது

By Wasantha Rupasinghe
29 June 2018

நியூயோர்க் டைம்ஸ் ஜூன் 25 ம் தேதி, "சீனா எவ்வாறு ஒரு துறைமுகத்தை இலங்கை தயக்கத்துடன் தாரைவார்க்க செய்தது” என்ற தலைப்பில் ஒரு நீண்ட முன்பக்க கட்டுரையை வெளியிட்டது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பது குறித்து வாஷிங்டனின் வெளியுறவு கொள்கை பிரச்சாரத்திற்காக டைம்ஸ் மற்றும் இதர ஊடகங்கள் உருவாக்கும் வழக்கமான குற்றச்சாட்டுகளை 3,800-க்கும் மேற்பட்ட சொற்களை கொண்ட அந்தக் கட்டுரை மீண்டும் கூறுகிறது.

அந்த கட்டுரையின் தொனியும் நேரமும் கொழும்பிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளன: 'அமெரிக்க ஏகாதிபத்தியம் உங்களை நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது, சீனாவிற்கு எதிரான யுத்தத்திற்கான எங்கள் இராணுவ மூலோபாய தயாரிப்புக்களில் இருந்து திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம்.'

அமெரிக்காவும் அதன் சர்வதேச நட்பு நாடுகளும் நீண்டகாலமாக இலங்கை மீது அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. அது ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் இடையிலுள்ள மிகப்பெரும் இந்திய பெருங்கடல் கடல் வழிகளுக்கு அருகே மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இதன் விளைவாக அந்த தீவு-நாடு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான பூகோள-அரசியல் பதட்டங்கள் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் பெய்ஜிங்கின் செல்வாக்கை பலவீனப்படுத்த வாஷிங்டன் மேற்கொள்ளும் குவிமையப்படுத்தப்பட்ட பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான வலிந்த தாக்குதலை கொண்ட பெருங்கடல் நீர்ச்சுழிக்குள் இழுக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் கூறுவதன்படி சீனா "உலகெங்கிலும் செல்வாக்கைப் பெறுவதற்காக" கடன்களையும் உதவிகளையும் பயன்படுத்துகிறது, மேலும் அதை "திரும்ப பெறுவதற்காக கடினமான பந்தாட்டத்திற்கும்” தயாராக உள்ளது. இந்த கூற்றை நிரூபிக்க, அந்த செய்தித்தாள், இலங்கையின் தெற்கு பகுதியிலுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பெரும்பான்மை பங்கை சீனா வாங்கியதை குறிப்பிட்டது. இந்த வளாகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆட்சியின் போது கட்டப்பட்டது.

கடந்த டிசம்பரில், இரண்டு வருடகால பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தற்போதைய அரசாங்கம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் (CMPH).க்கு ஒப்படைத்தது.

இந்த உடன்படிக்கையின் கீழ், இலங்கை துறைமுகத்தில் 70 சதவீத பங்கை 99 வருட குத்தகை மூலம் CMPH க்கு விற்றுள்ளது. அதே நேரத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகாரசபை 30 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றது.

இலங்கையின் பெருகி வரும் வெளிநாட்டுக் கடன்களையும், அப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து அமெரிக்க ஏகாதிபத்திய அச்சங்களையும் குறிப்பாக சீனாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் ஒரு தொடரான துறைமுகங்கள், ரயில்வே வழிகள் மற்றும் சாலைகள் ஆகியவற்றின் கட்டுமானத்தை திட்டமிடும் ’மண்டலம் மற்றும் சாலை’ (Belt and Road) முன்முயற்சி பற்றி தி டைம்ஸ் குறிப்பிடுகிறது.

அந்தக் கட்டுரை கூறுகிறது: "இந்த (துறைமுக) பரிமாற்றம், அதன் பகையாளியான இந்தியாவின் கடற்கரையிலிருந்து ஒரு சில நூறு மைல்கள் தொலைவிலுள்ள பகுதியின் மேல் சீனாவுக்கு கட்டுப்பாட்டை வழங்கியுள்ளது மற்றும் ஒரு முக்கியமான வர்த்தக மற்றும் இராணுவ நீர்வழிப்பாதையில் ஒரு மூலோபாயரீதியாக அதன் காலையும் பதிக்க வழிவகுத்துள்ளது.

"இந்த கடன் ஒப்பந்தம், ஜனாதிபதி ஜி ஜின்பிங் கையொப்பம் பெற்ற பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி குறித்து சில கடுமையான குற்றச்சாட்டுகளையும் கூட அதிகப்படுத்தியது; அதாவது உலகெங்கிலும் உள்ள பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு இந்த பூகோள முதலீட்டு மற்றும் கடன் வழங்கும் திட்டம் ஒரு கடன் பொறி போன்று போராட்டத்திலுள்ள ஜனநாயக நாடுகளில் ஊழல் மற்றும் எதேச்சதிகார நடத்தைக்கு எரியூட்டுகிறது. ”

ஜனநாயகம் மற்றும் ஸ்ரீலங்காவின் கடன்கள் பற்றிய டைம்ஸ் இன் கவலை ஏமாற்றுத்தனமானது. அந்த செய்தித்தாள் வாஷிங்டனின் குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு ஒரு தொடர்ச்சியான புனையப்பட்ட செய்திகளையும் அப்பட்டமான பொய்களையும் பராமரித்து வரும் அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் நேரடி ஊதுகுழலாக செயல்படுகிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரில் இருந்து சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான மறைமுக போர் வரையில், டைம்ஸ் அமெரிக்க போர் இயந்திரம் மற்றும் அமெரிக்க உளவுத்துறை நடவடிக்கைகளில் ஒரு முக்கிய சக்கரப்பல்லாக உள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் தொடர்ச்சியாக விளக்கியது போல், இராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றி, 2015 ஜனாதிபதித் தேர்தலின் மூலம் அமெரிக்க ஆதரவு சிரிசேனா நிர்வாகத்தை பதவிக்கு கொண்டுவரும் ஆட்சி மாற்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது.

ஜனவரி 9, 2015 ல் WSWS குறிப்பிட்டது போல்: "சிரிசேனாவிற்கு பின்னால் சக்திகளின் அணிதிரளலும் மற்றும் தேர்தல் முடிவும் கூட, ஒபாமா நிர்வாகத்தின் ஒரு திரைமறைவு தலையீட்டின் விளைவுதான். வாஷிங்டனில் முடிவுகள் எடுக்கப்பட்டது, அதாவது (முன்னாள் ஜனாதிபதி) மஹிந்த இராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், ஏனென்றால் அவரது அரசாங்கம் அபிவிருத்தி செய்த, சீனாவுடனான நெருக்கமான உறவுகளிலிருந்து - அதில் இராணுவ உறவுகளை விரிவுபடுத்துவதும் உட்படும் - ஸ்ரீலங்காவின் வெளியுறவுக் கொள்கை மாற்றப்பட வேண்டும். இந்த தலையீடு அமெரிக்காவின் ஆக்கிரோஷமான ’ஆசியாவை நோக்கிய திருப்பம்’ என்பதிலிருந்து நேரடியாக பாய்ந்தது."

டைம்ஸ் தானாகவே 2015 ஜனாதிபதித் தேர்தலில் பெரும் கவனம் செலுத்தியது. கொழும்பில் ஆட்சி மாற்ற நடவடிக்கையைப் பற்றி மூத்த அமெரிக்க வெளிவிவகாரத்துறை மற்றும் உளவுத்துறை ஆதாரங்களிலிருந்து பின்னணித் தகவல்கள் கிடைக்கப் பெற்ற நிலையில் அந்த பரப்புரையின் போது அனைத்து முக்கிய அரசியல் அபிவிருத்திகள் குறித்தும் அது அறிக்கை வெளியிட்டது.

டைம்ஸ் பத்திரிகை நவம்பர் 21, 2014 அன்று இரண்டு கட்டுரைகளை வெளியிட்டது. அந்த நாளில் சிரிசேனா இராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிப் பக்கம் தாவினார் மேலும் அவர் ஒரு "பொது ஜனாதிபதி வேட்பாளராக" நிற்கப்போவதாக அறிவித்தார்.

"திடீரென்று ஸ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தல் ஒரு உண்மையான போட்டியாக மாறியுள்ளது" மற்றும் "இலங்கை ஜனாதிபதி, உதவியாளர்களால் கைவிடப்பட்ட நிலையில் மங்கலான மறு தேர்தல் நம்பிக்கை" என்ற தலைப்பில் கட்டுரைகள் இடம்பெற்றன.

இரண்டாவது கட்டுரை, சிறிசேனவை ஆர்வத்துடன் ஆதரித்தது அதேவேளை ​​ இராஜபக்ஷவை அவமதித்து கேலி செய்தது. இராஜபக்ஷவின் முன்னாள் கூட்டாளிகள் தற்போதைய அரசாங்கத்தை ஜனாதிபதி மற்றும் அவரது உறவினர்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு "மென்மையான சர்வாதிகாரம்" என்று விவரிக்கையில் எதிர்க்கட்சி பேரணியில் இருந்த மக்கள் கூட்டம் அதனை "கவர்ச்சியுடன்” கேட்டார்கள் என்று கூறியது.

இராஜபக்ஷ "அவரது நாட்டை சீனாவிற்கு நெருக்கமாக நகர்த்திச் சென்றார், அது புதிய துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் கட்டுவதற்கு பில்லியன் கணக்கான டாலர்களை கடனாக வழங்கியது." என்று அந்தக் கட்டுரை கூறியது.

டைம்ஸ் பத்திரிகை தேர்தல் நாளன்று ஆட்சி மாற்ற நடவடிக்கை குறித்த அதன் திருப்தியை வெளிப்படுத்தியது, அந்தக் கட்டுரை பின்வரும் தலைப்பில் வந்தது, “தொடக்க குழப்பநிலைக்கு பின்னர், இலங்கை ஜனாதிபதி தோல்வியை ஒப்புக் கொண்டார்.” அந்த செய்தித் தாள் இராஜபக்ஷவின் "சீனாவுடனான நெருங்கிய உறவுகள்" மற்றும் அவரது சர்வாதிகார ஆட்சி முறை பற்றிய கூற்றுக்களை மீண்டும் மீண்டும் கூறியது

ஆனால் சீனாவுடனான அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் சுட்டிக்காட்டுவது போல், அரசியல் ரீதியாக பிளவுற்றிருக்கும் இலங்கையிலுள்ள ஆளும் உயரடுக்கு, வாஷிங்டனின் வெளியுறவுக் கொள்கை வரிகளை முழுமையாக பின்பற்றவில்லை.

சீன நிதியுதவி அளிக்கப்பட்ட கொழும்பு துறைமுகத் திட்டம் மற்றும் வேறு சில தொடக்க திட்டங்களை சிறிசேன ரத்து செய்த போதிலும், அவரது அரசாங்கம் எதிர்கொண்டுள்ள ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அவர் பெய்ஜிங் உடன் முற்றிலுமாக முறித்துக் கொள்வது கடினமாகியது. சீனாவில் இருந்து பெற்றுக் கொள்ளும் மிகப்பெரும் கடன்கள் இல்லாமல் கொழும்பினால் அதன் வெளிநாட்டு நாணயத்தையும் சரி, தேசிய நாணயத்தையும் சரி பராமரிக்க முடியாது.

சிறிசேன அரசாங்கம் "இந்தியா, ஜப்பான் மற்றும் மேற்கு நாடுகள் பக்கமாக ஸ்ரீலங்காவை மீண்டும் திருப்புவதில் மிக ஆர்வமாக உள்ளது” என்று டைம்ஸ் சமீபத்திய கட்டுரையில் கூறுகிறது. ஆனால், வேறு எந்த நாடும் "இலங்கையில் சீனா வகித்த நிதி அல்லது பொருளாதார இடத்தை பூர்த்தி செய்ய முடியாது."

டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டது, இராஜபக்ஷவின் நிர்வாகத்தின்போது கொழும்பில் ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல் வருகை பற்றி அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கவலை அடைந்த போதிலும், "சீனர்களுக்கு அம்பாந்தோட்டையை கையளித்தது என்பது அதன் இராணுவ பயன்பாட்டுக்கான சாத்தியம் பற்றிய கவலைகளை நீட்டித்து வைத்தது – குறிப்பாக தென் சீன கடல் பகுதியை சுற்றிய பகுதிகளிலுள்ள அதன் தீவுத் திடல்களை அது தொடர்ச்சியாக இராணுவமயப் படுத்தி வந்தது ஆனால் முன்னர் இவ்வாறாக செய்யப்போவதில்லை என்று என்று உறுதியளித்தது.

இராஜபக்ஷ அரசியலுக்கு மீண்டும் வருவதற்கான சாத்தியம் பற்றி இந்த கட்டுரை எச்சரிக்கிறது, அவரை "இலங்கையில் சீனாவின் விருப்பமான பங்காளி" என்று விவரிக்கிறது. பிப்ரவரி உள்ளூர் அரசாங்க தேர்தல்களில் இராஜபக்ஷவின் புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கை போடானுன பெரமுனவின் சமீபத்திய வெற்றி பற்றி அது குறிப்பிடுகிறது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அரசாங்க மந்திரி ஹர்ஷ டி சில்வா கூறியதை, "அரசாங்கங்கள் மாறலாம்" என்பதை நடுக்கத்துடன் மேற்கோள் காட்டுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், அந்தக் கட்டுரை பின்வருவதை கவனித்து முடிக்கிறது: "அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்கள் வருகின்றன, 2020 ல் பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன." இது இராஜபக்ஷ மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்பது தெளிவான எச்சரிக்கையாகும்.

உண்மையில், நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை முற்றிலுமாக பெய்ஜிங்-சார்ந்த அரசாங்கம் திரும்ப வருவதற்கான சாத்தியம் குறித்த ஒரு எச்சரிக்கை மணி ஆகும். சீனாவிற்கு எதிரான போருக்கான அமெரிக்க பொருளாதார மற்றும் இராணுவ தயாரிப்புகளுக்கு கொழும்பு முழுமையாக அர்ப்பணிக்கவில்லை எனில் வாஷிங்டனின் ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் மீண்டும் செயல்படுத்தும் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது.