ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trade war and the political independence of the working class

வர்த்தகப் போரும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனமும்

Nick Beams
7 July 2018

34 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனத் தயாரிப்புப் பொருட்களின் மீது சுங்கவரி விதிப்பை நடைமுறைப்படுத்த அமெரிக்கா எடுத்த முடிவும், அத்துடன் கூடுதலாக 500 பில்லியன் டாலர் அளவுக்கு சுங்கவரிகளை விதிக்கப் போவதாக ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் இருந்து வந்திருக்கின்ற மிரட்டல்களும் சேர்ந்து இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஒழுங்கின் முறிவில் ஒரு முன்னேறிய கட்டத்தைக் குறிக்கின்றன.

சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் —இவற்றுடன் முன்னதாக கனடா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, ஜப்பான் மற்றும் மெக்சிகோவைப் பாதித்த உருக்கு மற்றும் அலுமினியம் மீதான சுங்கவரி விதிப்புகள் அத்துடன் வாகன இறக்குமதிப் பொருட்களின் மீது சுங்கவரிகள் விதிப்பதற்கான அச்சுறுத்தல் ஆகியவையும்— அனைத்தும் “தேசிய பாதுகாப்பு” முகாந்திரங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஆழமான முக்கியத்துவம் கொண்டதாகும்.

வர்த்தகப் போர் நடவடிக்கைகள் ஒரு அத்தியாவசியமான இராணுவப் பரிணாமத்தைக் கொண்டிருக்கின்றன என்பதற்கும், மற்றும் அமெரிக்கா, வாஷிங்டனின் உலகளாவிய மேலாதிக்கத்தை பராமரிப்பதற்கு அவசியமாகக் கருதுகின்ற பட்சத்தில் அதன் எதிரிகளுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு —அதாவது, ஒரு உலகப் போர்— செய்கின்ற தயாரிப்புகளின் ஒரு முக்கிய பாகமாக அவை இருக்கின்றன என்பதற்குமான சந்தேகத்திற்கிடமற்ற அறிகுறியாகும் இது.

2009 ஏப்ரலில், பெருமந்தநிலைக்குப் பிந்தைய காலத்தில் உலகளாவிய முதலாளித்துவத்தின் மிக முக்கிய நெருக்கடியாக இருந்த உலகளாவிய நிதிப் பொறிவுக்குப் பிந்திய சமயத்தில், பிரதான தொழிற்துறைமயப்பட்ட நாடுகளின் தலைவர்கள் தமது நெஞ்சில் கைவைத்து, அவர்கள் ஒருபோதும் வர்த்தகப் போர் மற்றும் பாதுகாப்புவாத நடவடிக்கைகளில் இறங்க மாட்டார்கள் என்று சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 1930களது அழிவுகரமான தசாப்தத்தினது படிப்பினைகளும் உலகப் போருக்கான நிலைமைகளை உருவாக்குவதில் இத்தகைய நடவடிக்கைகள் வகிக்கக்கூடிய பாத்திரமும் கற்றுக்கொள்ளப்பட்டு விட்டிருந்ததாக, உலகமுழுவதுமாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய நிலைமை என்ன? சீனாவின் வர்த்தக அமைச்சகம் சரியாக விவரித்திருப்பதைப் போல “பொருளாதார வரலாற்றில் மிகப் பெரும் வர்த்தகப் போரை” அல்லது மற்றவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல, 1930 இன் இழிபுகழ்பெற்ற ஸ்மூட்-ஹாவ்லி சுங்கவரிக்குப் (Smoot-Hawley tariff) பின்னரான மிக துடைத்தழிக்கின்ற நடவடிக்கைகளை அமெரிக்கா தொடுத்திருக்கிறது.

1938 இல், இரண்டாம் உலகப் போரின் வெடிப்பை ஒட்டி, லியோன் ட்ரொட்ஸ்கி, முதலாளித்துவம் “கண்களை மூடிக் கொண்டு ஒரு பொருளாதார மற்றும் இராணுவப் பேரழிவை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது” என்று எழுதினார். எண்பது வருடங்களாகி விட்டன, அவருடைய வார்த்தைகள் ஒரு ஆழமான அதிர்வைக் கொண்டிருக்கின்றன.

உலகத்தை முழு-மூச்சிலான பொருளாதார மோதலுக்கும் மற்றும் இறுதியில் இராணுவ மோதலுக்கும் இட்டுச் செல்லக் கூடியவாறாக பதிலடியான சுங்கவரிகளைத் திணிப்பதைத் தவிர ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு மற்ற பிரதான சக்திகளிடம் எந்தப் பதிலுமில்லை.

ஒவ்வொரு நாட்டிலுமே, ட்ரம்ப் நிர்வாகம் செய்வதைப் போன்ற அதே பொருளாதார தேசியவாத மற்றும் இராணுவவாத திட்டநிரலையே ஆளும் உயரடுக்குகள் முன்தள்ளிக் கொண்டிருக்கின்றன. போருக்குப் பிந்திய ஒழுங்கு முறிந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஆயுதபாணியாக வேண்டும் மோதலுக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவே ஐரோப்பியத் தலைநகரங்கள் மற்றும் ஆசியாவில் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலகம் 1930களின் பொருளாதார மோதல்களை, அதனினும் விரிந்த ஒரு அளவில், மீண்டும் காணுகின்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதைப் போலவே, அந்த அழிவுகரமான தசாப்தத்தில் திணிக்கப்பட்ட படுபயங்கர நடவடிக்கைகளும் மீண்டும் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றன. அத்தனை அரசியல் வண்ணங்களையும் சேர்ந்த அரசாங்கங்கள் வலது நோக்கி மேலதிகமாக நகர்ந்து செல்கின்ற நிலையில் நூறாயிரக்கணக்கிலான புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளை சிறைப்படுத்துவதற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தடுப்புக்காவல் முகாம்கள் ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உலகளாவிய நிதி நெருக்கடி வெடித்ததற்குப் பிந்தைய தசாப்தத்தில், சந்தை பொறிவை உருவாக்கிய இலாபநோக்கு அமைப்புமுறையின் அத்தனை முரண்பாடுகளும் தீவிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன, இது மற்ற எல்லாவற்றையும் விட சமூக சமத்துவமின்மையால் குறிக்கப்படுவதாக இருக்கிறது — மக்களின் பரந்த எண்ணிக்கையிலானோருக்கு வாழ்க்கைத் தரங்கள் சரிந்து செல்வதற்கும் வறுமை மோசமடைவதற்கும் மத்தியில் சிறு எண்ணிக்கையிலான உலகளாவிய பில்லியனர்கள் மற்றும் நிதிப்பிரபுக்களால் மலைபோன்ற செல்வம் குவிக்கப்பட்டிருக்கிறது.

ஆளும் வர்க்கங்கள் இப்போது, அவர்களது போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறையின் கொள்கைகளால் உருவாகியிருக்கும் கோபத்தையும் குரோதத்தையும் பொருளாதார தேசியவாதத்தின் திசையில் திருப்பி விடுவதன் மூலமாக சுரண்டிக் கொள்வதற்கு முனைந்து கொண்டிருக்கின்றனர். இதில் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் சமூக ஜனநாயக மற்றும் தொழிற்கட்சிகள், அத்துடன் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, மிகக் குறிப்பாக அதன் “இடது” (பேர்னி சாண்டர்ஸ்) பிரிவு ஆகியவை அதிமுக்கிய பாத்திரம் வகிக்கின்றன.

முதலாளித்துவ ஒழுங்கின் சிதைவால் உருவாக்கப்பட்ட பெருகும் பொருளாதார மற்றும் சமூக நாசத்திற்கு முகம்கொடுக்கும் நிலையில், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பொருளாதார தேசியவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கும் எதிரான அரசியல் போராட்டத்திற்கும் அத்தகைய கொள்கைகள் தொழிலாளர்களது வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை பாதுகாக்க முடியும் என்பதான பொய்யை நிராகரிப்பதற்கும் முதலிடமளிக்கப்பட வேண்டும்.

பொருளாதார தேசியவாதத்துடன் எப்போதும் அத்துடன் அவசியமாகவும், தனியொரு முதலாளித்துவ தேசிய-அரசின் “சர்வதேச போட்டித்திறனை” ஊக்குவிக்கும் பொருட்டு, பரந்த பொருளாதார வளங்கள் இராணுவ செலவினத்திற்கு திருப்பி விடப்படுவது உடன்வர, தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையைக் குறிவைத்தான சிக்கன நடவடிக்கைகள் உடன்வருகின்றன. ட்ரம்ப்பின் விடயத்தில் போல, அப்பட்டமான பாசிச சித்தாந்தத்தின் வடிவத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் சரி, அல்லது “இடது” வேடத்தில் ஒளிந்து வந்தாலும் சரி, பொருளாதார தேசியவாதமானது ஒரு முன்னோக்கிய வழியைக் குறிப்பதல்ல. மாறாக, அது சிதைந்து கொண்டிருக்கின்ற மற்றும் நெருக்கடி நிரம்பிய ஒரு சமூக அமைப்புமுறையின் மரணநேர மூச்சிழுப்பு சத்தமே ஆகும்.

”பகுத்தறிவு”க்கு விண்ணப்பம் செய்வதன் மூலமும் —ஏதோ இப்போதைய நெருக்கடியானது டொனால்ட் ட்ரம்ப்பின் மனப்போக்கின் ஒரு விளைபொருள் தான் என்பதைப் போன்று— அமெரிக்கா பெருமளவுக்கு அது உருவாக்கியதாகவும் அதற்கு மிகவும் ஆதாயகரமாக நிரூபணமாயிருக்கின்றதுமான அந்த அமைப்பையே அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதன் மூலமும் பெருகும் பொருளாதார கிறுக்குத்தனம் குணப்படுத்தப்பட முடியும் என்பதான கூற்றை அடிப்படையாகக் கொண்டு போருக்குப் பிந்தைய ஒழுங்கை பாதுகாப்பவர்கள் மூலமாக முன்னெடுக்கப்படுகின்ற முன்னோக்கும் அதற்கு நிகராய் திவாலடைந்ததே ஆகும்.

போருக்குப் பிந்தைய ஒழுங்கின் முறிவின் வேர் சரியில்லாத கொள்கைகளின் விளைவில் இருக்கவில்லை, மாறாக முதலாளித்துவ உற்பத்திமுறையின் அடிப்படை முரண்பாடுகளின் —எல்லாவற்றுக்கும் மேல் உற்பத்தியின் உலகளாவிய தன்மைக்கும் உலகம் போட்டி முதலாளித்துவ தேசிய-அரசுகளாக பிளவுபட்டுக் கிடப்பதற்கும் இடையிலான மோதலின்— வெளிப்பாடாக அது இருக்கிறது.

இந்த முரண்பாடு முதன்முதலில் முதலாம் உலகப் போரின் வடிவத்தில் மேற்பரப்புக்கு வந்தது. “போர்கள் அத்தனையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர்” என்று சொல்லப்பட்டது 1945 இல் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் சமயத்தில் தான் முடிவுக்கு வந்த பெரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான 30-ஆண்டு கால மோதலாக ஆகவிருந்ததின் முதல் கட்டமாக மட்டுமே இருந்தது.

அமெரிக்கா பொருளாதார மேலாதிக்க நிலையை அனுபவித்த வரை பெரும் சக்திகள் இடையிலான மோதல்கள் கட்டுப்படுத்தப்படவும் மட்டுப்படுத்தப்படவும் முடிந்ததாய் இருந்தது. ஆயினும், போருக்குப் பிந்தைய தாராளவாத ஒழுங்கு ஊக்குவித்த அதே பொருளாதார வளர்ச்சியானது பழைய எதிரிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை பலவீனப்படுத்தவும் புதிய எதிரிகள், எல்லாவற்றுக்கும் மேல் சீனா, எழுச்சி பெறுவதற்கும் வழிவகுத்தது. இந்த சரிவை வன்மையான பொருளாதார வழிமுறைகள் மூலமாகவும், அவசியமாயின், இராணுவ வழிமுறைகள் மூலமாகவும் தலைகீழாக்கி விடும் துடிப்பினால் அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.  

உலகளாவிய பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடு —இது கடந்த மூன்று தசாப்த காலங்களில் உற்பத்தியின் உலகமயமாக்கலினால் மிகப் பிரம்மாண்டமான அளவுக்கு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது— இனியும் பழைய சுற்றுஎல்லைக்குள்ளாக மட்டுப்படுத்தப்பட முடியாது, அது மீண்டும் மேற்பரப்புக்கு வெடித்துக் கிளம்பி வந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அது இப்போது, ஆழமடைந்து செல்லும் போர் முனைப்பு, தேசியவாதத்தின் விசிறல், சிக்கன நடவடிக்கைகளின் திணிப்பு மற்றும் 1930களை நினைவுக்குக் கொண்டுவருகின்ற எதேச்சாதிகார மற்றும் பாசிச ஆட்சி வடிவங்களின் எழுச்சி ஆகியவற்றின் வடிவத்தில் அரசியல் வாழ்வில் மேலாதிக்கம் செலுத்துகிறது.

இந்த புறநிலை சமூக-பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள் மீதான ஒரு புரிதலை அடிப்படையாகக் கொண்டே தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும், தேசிய எல்லைகளைக் கடந்து முதலாளித்துவ அமைப்புமுறை என்ற பொது எதிரிக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அதன் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதே அவசர அவசியமாகும் என்ற உணர்தலில் அது வேரூன்றியிருக்க வேண்டும்.

உலகளாவிய உற்பத்தியின் மூலமாக, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட உழைப்பின் விளைபொருளாக இருக்கும் பிரம்மாண்டமான பொருளாதார சக்தியானது, இப்போதைய ஆளும் வர்க்கங்களின் கரங்களில் விடப்படும் போது, அது முன்கண்டிராத ஒரு மட்டத்திலான மரணம் மற்றும் அழிவுக்கான அடிப்படையாக ஆகிவிடும்.

இந்த சக்தி தேசிய-அரசு மற்றும் தனியார் இலாப அமைப்புமுறையின் கூண்டில் இருந்து விடுவிக்கப்பட்டாக வேண்டும், ஒரு திட்டமிட்ட சர்வதேச சோசலிசப் பொருளாதாரத்தின் ஊடாக மனிதகுலத்தின் ஒரு புதிய முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அது ஆக்கப்பட வேண்டும். வர்த்தகப் போரின் வெடிப்பு மற்றும் அது கட்டியம் கூறுகின்ற அத்தனைக்குமான பதிலிறுப்பாக தொழிலாள வர்க்கம் முன்நிறுத்தப் போராட வேண்டிய முன்னோக்கு இதுவேயாகும்.

அதனை செயலாக்குவதற்கு, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் அதன் அத்தனை கட்சிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் அரசியல் மேலாதிக்கத்தில் இருந்து தன்னை பிரித்து விடுவித்துக் கொண்டாக வேண்டும். உலகளாவிய ஒரு மட்டத்தில் தொழிலாளர்களது’ அதிகாரம் மற்றும் சோசலிசத்துக்கான போராட்டத்தில் அது நனவுடன் களம் கண்டாக வேண்டும்.