ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump escalates trade war against China

ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக வர்த்தக போரைத் தீவிரப்படுத்துகிறார்

By Nick Beams
12 July 2018

அமெரிக்க வர்த்தகத்துறை பிரதிநிதி ரோபர்ட் லைஹ்த்சர் ஆகஸ்ட் இறுதி வாக்கில் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பண்டங்கள் மீது 10 சதவீத இறக்குமதி வரி விதிக்க விசாரணை மேற்கொள்வார் என்ற அறிவிப்புடன், ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு எதிரான அதன் வர்த்தகப் போரை அதிகரித்துள்ளது.

இந்த சமீபத்திய முடிவு, கடந்த வெள்ளிக்கிழமை 34 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன ஏற்றுமதிகள் மீது 25 சதவீத வரிவிதிப்புகளுக்குக் கூடுதலாக வருகிறது, இத்துடன் இன்னும் கூடுதலாக 16 பில்லியன் டாலர் மதிப்பிலான பண்டங்கள் மீதும் ஒரு சில வாரங்களுக்குள் இதேயளவிலான வரி விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பல வாரங்களுக்கு முன்னரே முன்னறிவிக்கப்பட்ட இந்த கூடுதல் வரிவிதிப்புகள், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க ஏற்றுமதிகள் மீது சீனா இதேயளவிலான வரிவிதிப்புகளை விதித்து பதில் நடவடிக்கை மேற்கொள்ள எடுத்த முடிவுக்கு விடையிறுப்பாக எடுக்கப்பட்டன.

லைஹ்த்சரின் கருத்துக்கள், கேள்விக்கிடமின்றி மதிக்கப்பட வேண்டிய, ஏதேனும் எதிர்ப்பு இருந்தால் அவை தீவிரமாக ஒடுக்கப்பட வேண்டிய, தன்னுடைய வார்த்தையைச் சட்டமாக கொண்ட, ஓர் ஏகாதிபத்திய நிலக்கிழாரின் கருத்துக்களைப் போலிருந்தன. செவ்வாய்க்கிழமை அறிவிப்பில் இலக்கு வைக்கப்பட்ட பண்டங்களுக்குக் கூடுதலாக, இன்னும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பண்டங்களுக்கு வரி விதிக்க அது தயாராக இருப்பதாக அமெரிக்கா ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளது, அத்துடன் கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர்—அதாவது அமெரிக்காவுக்கான சீன ஏற்றுமதிகளின் மதிப்பு மொத்தமும்—பாதிக்கப்படுமென ட்ரம்ப் கூறி உள்ளார்.

விடயத்தைத் தலைகீழாக மாற்றி, லைஹ்த்சர் கூறுகையில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா விதித்த வரி விதிப்புகளுக்கு எதிராக சீனாவின் பதில் நடவடிக்கைக்கு "எந்த சர்வதேச சட்ட அடித்தளமோ அல்லது நியாயப்பாடோ இல்லை" என்றார். உண்மையில், 1974 வர்த்தகச் சட்டத்தின் 301 வது பிரிவின் கீழ் நடத்தப்பட்ட அமெரிக்க நடவடிக்கைகள் தான் சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறுகின்றன.

லைஹ்த்சர் கூறினார், “ஓர் ஆண்டுக்கும் மேலாக,” “ட்ரம்ப் நிர்வாகம் சீனாவை அதன் நியாயமற்ற நடைமுறைகளை நிறுத்துமாறும், அதன் சந்தைகளைத் திறந்து விடுமாறும், உண்மையான சந்தை போட்டியில் இறங்குமாறும் பொறுமையாக வலியுறுத்தி வந்துள்ளது. சீனா செய்ய வேண்டிய குறிப்பிட்ட மாற்றங்கள் சம்பந்தமாக நாங்கள் மிகத் தெளிவாக விவரித்துள்ளோம்.

“துரதிருஷ்டவசமாக, சீனா அதன் நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை—இந்த நடத்தை அமெரிக்க பொருளாதாரத்தின் எதிர்காலத்தை அபாயத்திற்கு உட்படுத்துகிறது. எங்களின் நியாயமான கவலைகளைக் கருத்தில் கொள்ளாமல், சீனா அமெரிக்க பண்டங்களுக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது,” என்றார்.

அமெரிக்க நடவடிக்கைகளால் அது "அதிர்ந்து போயிருப்பதாகவும்", அந்நடவடிக்கைகள் "சீனாவைப் பாதிக்கிறது, ஒட்டுமொத்த உலகையே பாதிக்கிறது, அமெரிக்காவையே கூட பாதிக்கிறது,” என்று சீன வர்த்தகத் துறை அமைச்சகம் அறிவித்தது. சீனாவுக்கு "அவசியமான பதில் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர, வேறு விருப்பத்தெரிவு இருக்கவில்லை," என்று குறிப்பிட்ட அமைச்சகம், பதில் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதைக் குறிப்பிடவில்லை.

வாஷிங்டனுடன் டாலருக்கு டாலர் சரிசமமாக சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதில்லை என்பதால், அமெரிக்காவின் சமீபத்திய வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் சீனாவுக்கு இருக்கவில்லை. அது "அமெரிக்க தரப்பின் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளுக்கு" எதிராக உலக வர்த்தக அமைப்பு (WTO) மூலமாக ஒரு முறையீட்டைத் தொடங்குமென கூறியுள்ளது.

ஆனால் ட்ரம்ப் நிர்வாகமும் அதன் "அமெரிக்கா முதலில்" திட்டத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களும், உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் விதிமுறைகள் அடிப்படையிலான சர்வதேச வர்த்தக ஒழுங்குமுறை எனப்படுவதும் அமெரிக்காவின் நலன்களுக்கு பங்கம் விளைவிப்பதாக கருதுகின்ற நிலையில், சீனாவின் அதுபோன்ற நடவடிக்கைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை.

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்ட பேரம்பேசல்களின் போக்கு, முக்கிய பிரச்சினையானது சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. சீனாவுக்கான அமெரிக்க ஏற்றுமதிகளை, குறிப்பாக வேளாண் மற்றும் எரிசக்தி பொருட்களை, சுமார் 100 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்து கொள்ள பெய்ஜிங் வாய்ப்பு வழங்கியது, ஆனால் ட்ரம்பும் அவர் அதிகாரிகளும் இது மத்திய பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்பதாக புறக்கணித்து விட்டனர்.

“முந்தைய பேச்சுவார்த்தை சுற்றுகளைக் குறித்து அறிந்தவர்களை" மேற்கோளிட்டு, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிடுகையில், சீனாவின் வாய்ப்பளிப்பு இதுவரையில், "அமெரிக்க பண்டங்களை அதிகரித்தளவில் கொள்முதல் செய்வதாக இருந்தாலும் சரி அல்லது நிதியியல் சேவை துறைகளைப் படிப்படியாக திறந்து விடுவதாக இருந்தாலும் சரி" “ஆழ்ந்த கட்டமைப்புரீதியிலான மாற்றங்களுக்கான வாஷிங்டனின் கோரிக்கைகளைத் தீர்க்க தவறி" இருப்பதாக குறிப்பிட்டது.

மே 4 ஆம் திகதி அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் பிரதான கோரிக்கை என்னவென்றால், சீனா அதன் "சீனாவில் உற்பத்தி 2025” திட்டத்தின் கீழ் அதன் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை அடித்தளத்தை அபிவிருத்தி செய்யும் முயற்சியைக் கைவிடவிடும் என்பதாகும். வட கொரியா மற்றும் அதன் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக இருந்த அதே மாதிரியான மொழியில், அது, அமெரிக்க வர்த்தக இரகசியங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை இலக்கு வைத்து சீன அரசு நடத்தும், உதவும் அல்லது சகித்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளைக் கைவிடுவதை உறுதிப்படுத்த சீனா "உடனடியாக, நம்பகமான நடவடிக்கைகளை" எடுக்க வேண்டும் என்று கோருகிறது.

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா திணித்த வரி விதிப்புகளுக்கு எதிராக, சீனா பதில் நடவடிக்கை வழிமுறைகளோ அல்லது உலக வர்த்தக அமைப்பு மூலமாக நடவடிக்கையோ, எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியது.

சமீபத்திய இந்த வர்த்தக போர் நடவடிக்கைகளுக்கு, அமெரிக்காவில் அரசியல் மற்றும் வணிக வட்டாரங்கள் இரண்டினது விடையிறுப்பும், சீனாவுக்கு எதிராக வர்த்தக போரை முற்றிலுமாக எதிர்ப்பதாக இல்லை. முக்கியமாக தொழில்நுட்ப அபிவிருத்தி பிரச்சினையானது அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கம் மற்றும் இறுதியில் இராணுவ மேலாதிக்கம் இரண்டினது ஓர் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

ஆனால் அவர் தந்திரோபாயங்கள் சரியான திசையில் இல்லை என்றே ட்ரம்ப் விமர்சிக்கப்படுகிறார். கூட்டாளிகளாக ஆகக்கூடியவர்களையும் இலக்கு வைப்பதன் மூலமாக, அனைத்திற்கும் மேலாக ஐரோப்பா மீதான எஃகு மற்றும் அலுமினிய வரிவிதிப்புகள் மற்றும் வாகன தயாரிப்புகள் மீதான வரிவிதிப்பு குறித்த அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மூலம், அவர் சீனாவுக்கு எதிரான கூட்டணியைச் சாத்தியமற்றதாக ஆக்கி வருகிறார்.

முன்மொழியப்பட்ட புதிய நடவடிக்கைகளை தாம் எதிர்ப்பதாக செனட் சபை நிதிக் குழுவின் குடியரசு கட்சி உறுப்பினர் Orrin Hatch தெரிவித்தார். “சீனாவின் தொழில்நுட்ப பரிவர்த்தனை முறையை எதிர்ப்பதை இலக்கு வைத்த இந்நிர்வாகத்தின் முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன் என்றாலும், இன்றிரவு அறிவிப்பு பொறுப்பற்றதாக தெரிகிறது, இது இலக்கு வைக்கப்பட்ட ஓர் அணுகுமுறை அல்ல,” என்றார்.

உண்மையில், அவர் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை விரும்புவதை Hatch சுட்டிக் காட்டினார்.

“நாம் சீனாவின் வணிக வர்த்தக நடைமுறைகள் மீது கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது, மாறாக இந்நடவடிக்கைகள், சீனாவுடன் பேரம்பேசுவதில் நிர்வாகத்திற்கு பக்கபலமாக இருக்கக்கூடிய ஒருவித மூலோபாயமாக அமைகிறது, அதேவேளையில் அமெரிக்க பொருளாதாரத்தின் நீண்ட கால ஆரோக்கியம் மற்றும் செழிப்பைப் பேணுகிறது” என்றார்.

இதுவே ஜனநாயக கட்சியின் பரந்த பிரிவுகளது கண்ணோட்டமாகவும் உள்ளது, அக்கட்சி சீனாவுக்கு எதிராக அதிக நடவடிக்கையை விரும்புகிறது என்றாலும் ட்ரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்க கூட்டாளிகளை அன்னியப்படுத்துவது குறித்து அது எச்சரிக்கிறது.

வர்த்தகப் போர் நடவடிக்கைகள் அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதிக்குமென வணிகப் பிரிவுகள் எச்சரித்துள்ளன. தேசிய சில்லறை விற்பனை கூட்டமைப்பின் ஒரு மூத்த அதிகாரியான டேவிட் பிரெஞ்சு பைனான்சியல் டைம்ஸிற்குக் கூறுகையில், அவை "பூமராங் போல திருப்பித் தாக்கி", தொழிலாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதிக்கும். பொருட்களின் அன்றாட விலைகள் அதிகரிக்கக்கூடும் என்பதுடன், “பின்தொடர்ந்து வரும் பதில் நடவடிக்கைகள் ஆயிரக் கணக்கான அமெரிக்க வேலைகளை அழித்து, விவசாயிகள், உள்ளூர் வணிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும்,” என்றார்.

சில தொழில்கள் முதலீடுகளை நிறுத்தி வைத்திருக்கின்றன அல்லது வர்த்தக மோதலின் எதிர்விளைவுகளுக்கு அஞ்சி அவற்றைக் குறைத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் கிடைத்திருக்கின்றன என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் ஜூன் மாத கூட்டத்தில் குறிப்பிட்டு, அதுவும் கவலை வெளியிட்டுள்ளது.

ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் அதுபோன்ற கவலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு, சீனாவுக்கு எதிராக மட்டுமல்ல மாறாக சீனா அளவுக்கு மோசமானதாக ட்ரம்ப் அறிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகவும் அழுத்தமளித்து வருகிறார், ஆனால் இது சிறிது குறைவாக இருக்கிறது. எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிவிதிப்புகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விதிவிலக்கு அளிக்க மறுத்துள்ளதுடன், “தேசிய பாதுகாப்பு" அடித்தளங்களில் அதிக வரிவிதிப்புகளைத் திணிப்பதைக் குறித்து தீர்மானிக்க, வாகன இறக்குமதிகள் மீதான ஓர் ஆய்வையும் அமெரிக்கா தொடங்கியுள்ளது.

சீனாவுக்கு எதிரான இந்த சமீபத்திய நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முகத்திற்கு நேரான ஓர் எச்சரிக்கை அடியாகும், மேலும் அமெரிக்கா எந்த எதிர்ப்பையும் ஏற்றுக் கொள்ளாது என்பதற்கும் ஒரு சமிக்ஞையாகும். சமீபத்திய சீன-விரோத அறிவிப்புக்கு முன்னதாக, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் சீன பிரதமர் லி கெக்கியாங் பேர்லினில் சந்தித்தனர், அதில் அவர்கள் விதிமுறைகள் அடிப்படையிலான ஒழுங்கமைப்பைத் தாங்கிப்பிடிக்க சூளுரைத்தனர். அச்சந்திப்பு மேர்க்கெல் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வுடன் முடிவுற்றது, அதில் ஜேர்மன் இரசாயன நிறுவனம் BASF சீனாவில் இரண்டாவது வளாகம் அமைக்க 10 பில்லியன் டாலர் செலவிடுவதற்கான ஒரு பூர்வாங்க உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

ட்ரம்பை மறுத்துரைப்பதற்கு நிகரான ஒரு கருத்தாக, மேர்க்கெல் கூறினார்: “சீனா இத்துறைகளில் சந்தையைத் திறந்துவிடும் என்பது வெறும் பேச்சல்ல, மாறாக நடவடிக்கை என்பதை இது காட்டுகிறது.”

லி கூறுகையில், வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு திறந்து விடுவதற்கான சீன நகர்வுகளுடன் சேர்ந்து, இந்த உடன்படிக்கையானது பன்முகத்தன்மை (multilateralism) உலக பொருளாதாரத்தில் "ஒரு பலமான, வலிமையான பாத்திரம்" வகிக்கிறது என்பதற்கு ஒரு சமிக்ஞையாகும் என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகளுக்கு எதிராக அமெரிக்க வரிவிதிப்புகளை விரிவாக்குவது குறித்து அவர் கவலை கொண்டிருப்பதாக மேர்க்கெல் தெரிவித்தார். “நாம் ஓர் உடன்பாட்டை எட்ட வேண்டும், இல்லையென்றால் நாங்கள் நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்படுவோம்,” என்று தெரிவித்த அவர், சீனாவும் ஜேர்மனியும் "பாதுகாப்புவாதத்தின் ஓர் உலகளாவிய சுழற்சியில் சிக்காது" என்று நம்பிக்கை வெளியிட்டார்.

ட்ரம்ப் "ஐரோப்பிய கூட்டாளிகளுடனான நமது உறவை மதிக்கிறார்" என்பதுடன், “அநியாயமான சீன வர்த்தக நடைமுறைகள் மீது ஐரோப்பாவுடன் சேர்ந்து செயல்படுவது முக்கியம் என்பதை தெளிவுபடுத்தி" இருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டது.

சீனாவுக்கு எதிரான இந்த புதிய வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள், "வர்த்தக சண்டைகளில் இருந்து அமெரிக்கா பின்வாங்காது என்பதை இட்டு ஐரோப்பாவுக்கான ஒரு சமிக்ஞையாக பார்க்கப்பட்டதாகவும்", மேலும் மேர்க்கெலுக்கு "குறிப்பாக ஓர் எச்சரிக்கையாக இருக்கலாம்" என்றும் அமெரிக்க தொழில்துறை அதிகாரிகள் குறிப்பிட்டதாக அக்கட்டுரை குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா அடுத்த வாரம் பெய்ஜிங்கில் ஒரு பொருளாதார உச்சி மாநாடு கூட்டம் நடத்த இருக்கின்றன, ட்ரம்பின் வர்த்தக கொள்கைகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பலமான அறிக்கை வெளியிட வேண்டுமென சீனா அழுத்தமளித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.