ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass protests against Trump’s UK visit

ட்ரம்பின் பிரிட்டன் விஜயத்திற்கு எதிராக பெருந்திரளான மக்கள் போராட்டங்கள்

Chris Marsden
14 July 2018

பிரிட்டனின் இலண்டன் நகரிலும் ஏனைய இடங்களிலும் நடந்த மிகப்பெரும் போராட்டங்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக பெருகிய கோபம் மற்றும் மனக்குமுறலாக இருந்தன.

Trafalgar சதுக்கத்திலும் அதைச் சுற்றிய வீதிகளிலும் இரண்டரை இலட்சம் பேர் வெள்ளமென திரண்டிருப்பார்களென போராட்டங்களை ஒழுங்கமைத்தவர்கள் மதிப்பிட்டனர். போலிஸ் 1,00,000 பேர் என்று ஒப்புக் கொள்கிறது. மான்செஸ்டர், ஷெல்ஃபீல்ட் மற்றும் கிளாஸ்கோ போன்ற பிரதான நகரங்களிலும் பத்தாயிரக் கணக்கானோர் போராட்டத்தில் இருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி வர்த்தகப் போர் கொண்டு ஐரோப்பிய சக்திகளை அச்சுறுத்தி, அவர்களின் நடத்தப்பட்டு வரும் சொந்த மீள்ஆயுதமயமாக்கலை வேகப்படுத்துமாறு கோரிய ஒரு வாரத்திற்குப் பின்னர், அவர் மீதான தங்களின் சொந்த கண்ணோட்டங்களை வெளிப்படுத்துவதற்கு இது ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பாக இருந்தது.

மேலும், ட்ரம்ப் வேண்டுமென்றே வெளிப்படுத்தும் அவமதிப்புகளால் தங்களின் அந்தஸ்துக்கு களங்கம் ஏற்படுவதாக ஐரோப்பிய ஆட்சியாளர்கள் புலம்பினாலும் கூட, அவருடனான செயல்முறை உறவுகளைப் பேண அவர்கள் முனைந்து வருகின்ற வேளையில், மில்லியன் மில்லியன் கணக்கிலான தொழிலாளர்களோ ட்ரம்பையும் மற்றும் அவர் ஏற்றிருக்கும் ஒவ்வொரு நிலைப்பாட்டையும்—அதாவது பில்லியனர்களைச் செல்வத்தில் கொழிக்க வைப்பது, சமூக நல வகைமுறைகளை நீக்குவது, புலம்பெயர்ந்தோர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத இனவாதம் மற்றும் அப்பட்டமான போர்வெறி பேச்சுக்களை இழிவாக கருதுகின்றனர் என்பதை இந்த இங்கிலாந்து போராட்டங்கள் நிரூபிக்கின்றன.

பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய கலாச்சாரத்தைச் சிதைக்கும் விதத்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும், புலம்பெயர்வுக்கு எதிராகவும் அவர் Sun பத்திரிகையில் அவரது வெளிநாட்டவர் விரோத போக்கை வெளிப்படுத்தியமை உட்பட, ஐரோப்பாவுக்கான ட்ரம்பின் பயணம் நேற்றைய போராட்டங்களில் அதன் பங்கை வகித்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எதிர்ப்பைக் காட்ட ஒரு மனுவில் கையெழுத்திட்டிருந்ததற்கு மத்தியிலும், பிரதம மந்திரி தெரேசா மே விஜயம் செய்யுமாறு ட்ரம்பை அழைத்திருந்தார். “அட்லாண்டிக்கின் இரு பக்கங்களிலும் வியாபார தலைவர்களைச் செயல்குலைக்கும் அதிகாரத்துவ தடைகளைக் கிழித்தெறிவதற்கு ஒரு சந்தர்ப்பம்" என்று Blenheim அரண்மனையில் ஜனாதிபதிக்கு உத்தரவாதமளித்து, அப்பெண்மணி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்குப் பிந்தைய அமெரிக்க வர்த்தகத்திற்காக ட்ரம்பின் ஆதரவைப் பெற முடியுமென நம்பினார்.

அதற்கு பதிலாக, ட்ரம்ப், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலைக் காயப்படுத்தியதைப் போலவே அவரை பகிரங்கமாக காயப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் அவர் தொடர்ந்து உறவுகளைப் பேணுவதற்கு துணிந்திருப்பதற்காக Sun பத்திரிகையின் பக்கங்களில் ஒளிவு மறைவின்றி நையாண்டி செய்தார். இதைத் தொடர்ந்து அவரது பாசிசவாத வேட்டை நாய் ஸ்டீவ் பானன், ஐரோப்பிய ஒன்றிய உடைப்பை ஊக்குவிப்பதற்காக மேஃபயர் ஹோட்டலில் அதிவலது பிரமுகர்களுடன் சந்திப்புக்களை ஒழுங்கமைத்திருந்தார்.

ஆனால் நாடு தழுவிய அந்த போராட்டங்கள் ட்ரம்புக்கு எதிரான எதிர்ப்புக்கு மிகவும் பகுதியான வெளிப்பாட்டை மட்டுமே வழங்கி இருந்தன. இலண்டனில் அவர் "வரவேற்கப்படவில்லை" என்றுணருமாறு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறை கூறினார். ஆனால் அவர் விஜயத்திற்காக யாரேனும் வேலைநிறுத்தங்கள் மற்றும் புறக்கணிப்புகளுக்கு அழைப்புவிடுத்திருந்தால், பின்னர் ட்ரம்ப் பொட்டலமாக கட்டி அனுப்பப்பட்டிருப்பார்.

தொழிற்சங்கங்களும் சரி, தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினும் சரி, யாரும் அதுபோன்றவொரு அழைப்பு விடுக்கவில்லை.

கோர்பின் Trafalgar சதுக்கத்தில் உரையாற்றினார், பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார், புலம்பெயர்ந்தோர் மீதான துஷ்பிரயோகங்களுக்காக மற்றும் மனித உரிமைகள் மீதான தாக்குதலுக்காக ட்ரம்பைக் கடிந்துரைக்கும் ஒரு காணொளி வெளியிட்டார். ஆனால், “நாங்கள் பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பேற்றுள்ளோம், அதுவும் அதன் மீதும் மற்றும் அரசின் மீதும் பலமாக உடன்பாடு இல்லாமல் இருந்தாலும், அவர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட ஒரு வழி காண்போம், அதேவேளையில் எங்களின் மதிப்புகளுக்காகவும் நிமிர்ந்து நிற்போம்,” என்றவர் அறிவிக்க தவறவில்லை.

இதுபோன்றவொரு அறிக்கை என்ன முக்கியத்துவம் பெறுகிறது? அது பதவியிலிருந்தால் தொழிற் கட்சி ட்ரம்ப் உடன் இணைந்து செயலாற்ற முனைந்திருக்கும் ஏனென்றால் அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஓர் அரசு தலைவராக, கோர்பைன், பிரிட்டனின் அணுஆயுத ஏவுகணைகளையும் பேணி இருப்பார், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுடன் நேட்டோவுக்குள் செயலூக்கத்துடன் ஒத்துழைத்திருப்பார்.

அரசியல் ஸ்தாபகத்தினது பெயரளவிலான ட்ரம்ப் எதிர்ப்பு தன்மை கார்டியனின் தலையங்கத்தில் உச்சரிக்கப்பட்டது. அந்த போராட்டங்களை ஆதரித்த அது, “போரால் சீரழிக்கப்பட்ட ஐரோப்பாவில் சமாதானத்தை ஏற்படுத்தவும், சட்டங்கள் மற்றும் உரிமைகள் அடிப்படையிலான ஒரு தாராளவாத சர்வதேச ஒழுங்கமைப்பைக் கட்டமைக்க தலைமை கொடுக்கவும்" முதல் உலக போருக்குப் பின்னர் ஐரோப்பாவுக்கான ஓர் அமெரிக்க ஜனாதிபதியின், வுட்ரோவ் வில்சனின், முதல் விஜயத்துடன் ட்ரம்பின் விஜயம் முரண்படுவதை அது எழுதியது. ஆனால் ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் உயர்ந்ததைக் குறித்து எந்த விவரிப்பும் இல்லாமல் அதை செய்திருந்த அப்பத்திரிகை, தொடர்ந்து குறிப்பிடுகையில் அத்தகைய மதிப்புகளுக்காக ஐரோப்பிய சக்திகள் ஒரு பிரகாசமான கலங்கரை விளக்கமாக விளங்குவதாக வலியுறுத்த சென்றது.

“திரு. ட்ரம்பின் அமெரிக்காவை, நிச்சயமாக, தாராளவாத ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு பொறுப்பேற்றுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு நம்பகமான கூட்டாளியாக இனி கருத முடியாது,” என்றது அறிவித்தது, அதேவேளையில் கட்டுரையாளர் ஜொனாதன் ஃப்ரீலாண்ட் வலியுறுத்துகையில், "தீர்க்கமான உலகளாவிய பிளவாக என்ன மேலெழுந்து வருகிறதோ அதில் நாம் எங்கே நிற்கிறோம் என்பதை" பிரிட்டன்வாசிகள் "முடிவெடுக்க வேண்டியுள்ளது,” என்றார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் அல்லது "புட்டினின் உலகுடன், விக்டொர் ஓர்பன் மற்றும் ட்ரம்ப் உடன்… இதில் நீங்கள் முறுக்கி பிழிவீர்கள் அல்லது முறுக்கி பிழியப்படுவீர்கள்…"

பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்காக இதுபோன்று வக்காலத்து வாங்குபவர்களுக்கும், பெருந்திரளான உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடையே இங்கே ஓர் அரசியல் இடைவெளி உள்ளது. இவர்கள் ஐரோப்பிய அரசுகளால் கடுமையான சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதோடு, ஜனநாயக சுதந்திரங்கள் வெறுமையாக்கப்பட்டு வருவதையும், ட்ரம்ப் போலவே ஐரோப்பிய சக்திகளும் இம்மி பிசகாமல் அதேயளவுக்குக் காட்டுமிராண்டித்தனமாக அகதிகளைக் கையாள்வதில் கூட்டாக தலைமை தாங்கி வருவதையும், அதேவேளையில் அவற்றின் சொந்த மீள்ஆயுதமயமாக்கும் திட்டங்களைப் பெருமைபீற்றி இராணுவவாதத்திற்குத் திரும்புவதையும் கண்கூடாக பார்க்கிறார்கள்.

ட்ரம்ப் மற்றும் அவரது மாஃபியா போன்ற மே மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களின் மும்முரமான மாற்றங்களைச் சுற்றி பரவி இருக்கும் பாசிசவாத துர்நாற்றம், ஒரு தனிநபரின் வினோத குணாம்சம் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. மாறாக, அவரது எக்குத்தப்பான நடவடிக்கைகளும் மற்றும் மூர்க்கத்தனமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த வீழ்ச்சி காலக்கட்டத்தில் அதன் அத்தனை வக்கிரமான குணாம்சங்களுக்கும் உருவடிவமாக உள்ளன.

ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சி தலைமையில் ஆகட்டும் அல்லது ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜனநாயக கட்சி தலைமையில் ஆகட்டும், அமெரிக்கா அதன் உலகளாவிய அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதில் எதற்காகவும் நிற்க போவதில்லை. உண்மையில், ட்ரம்ப் அதிகாரத்திற்கு மேலுயர்ந்திருப்பதே கூட லியோன் ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை ஊர்ஜிதப்படுத்துகிறது, "நெருக்கடி காலக்கட்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் வளர்ச்சிக் காலக்கட்டத்தை விடவும் மிகவும் பரிபூரணமாக, மிகவும் பகிரங்கமாக, மிகவும் ஈவிரக்கமின்றி இருக்கும்,” என்றவர் முன்கணித்தார்.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1918 இல், ஜனாதிபதி வுட்ரோவ் வில்சன் ஐரோப்பாவுக்கு வந்து, அவரும் அமெரிக்காவும் "ஜனநாயகத்தின், பூமி எங்கிலும் சகோதரத்துவம் மற்றும் சமாதானத்தின்" பாதுகாவலர்களாக சித்தரித்து, அவரது "பதினான்கு அம்ச" பிரகடனத்தை உயர்த்திப் பிடித்தார். வில்சனின் வேஷத்தில் வஞ்சகம் மற்றும் பாசாங்குத்தனத்தின் ஒரு சிறிய துகளும் இருக்கவில்லை, ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலுயர்ந்ததும் அது அந்த ஜனாதிபதியின் பிரகடனங்களுக்கு சிறிது நம்பகத்தன்மை வழங்க கடமைப்பட்டிருந்தது. ஒரு முன்னாள் பல்கலைக்கழக தலைவரான வில்சனால், குறிப்பிடத்தக்க நாவன்மையோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அபிலாஷைகளைச் சித்தரிக்க முடிந்திருந்தது.

ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், ஐரோப்பா எங்கிலுமான ட்ரம்ப் கழிசடைகளின் விகார உருவம் "மறுக்க முடியாத முன்மொழிவுகளோடு" ஒருவரை அல்லது அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றது. தோற்றம், கலாச்சாரம், நடத்தை மற்றும் மொழியில் ஏற்பட்டுள்ள இந்த வேறுபாடுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று பாதையின் வெவ்வேறு கட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. வில்சன் அமெரிக்காவின் உயர்வைப் பிரதிநிதித்துவம் செய்தார். ட்ரம்ப் அதன் வீழ்ச்சியை மற்றும் அருவருக்கத்தக்க துர்நாற்றத்தின் ஆளுருவாக உள்ளார்.

அதே நிகழ்வுபோக்குகள் —அதாவது, உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, உலகின் சந்தைகள் மற்றும் ஆதாரவளங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மூர்க்கமான போராட்டம்— அமெரிக்க சவாலுக்கு ஒருவிதத்தில் விடையிறுக்க ஐரோப்பிய சக்திகளையும் உந்துகின்றன. அனைத்திற்கும் மேலாக, ட்ரம்ப், மே, மேர்க்கெல், மக்ரோன் மற்றும் ஏனையவர்களும் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் மீது ஒரே மாதிரியாக விரோதத்தையே பகிர்ந்து கொள்கிறார்கள், தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்களை அழிப்பதன் மூலமாக வர்த்தகம் மற்றும் இராணுவ போருக்கு இவர்கள் தான் விலை கொடுக்கச் செய்யப்படுகிறார்கள்.

டொனால்ட் ஜெ. ட்ரம்ப் பெயருடன் தொடர்பாகி உள்ள சமத்துவமின்மை, தேசியவாதம், வெளிநாட்டவர் மீதான விரோத போக்கு, இராணுவவாதம் மற்றும் போர் ஆகியவற்றை சமூகரீதியில் ஊக்குவிப்பதற்கு எதிரான ஓர் உண்மையான இயக்கமானது, ஏகாதிபத்திய உலக ஒழுங்குக்கு எதிராகவும் மற்றும் அதன் அனைத்து அரசுகளுக்கு எதிராகவும் பிரிட்டிஷ், ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை கோருகிறது. இதன் அர்த்தம், சமத்துவம், சர்வதேசவாதம் மற்றும் சமாதானம் இவற்றின் அடிப்படையில் ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான போராட்டத்தை முன்னெடுக்க ஒரு புதிய தலைமையைக் கட்டமைப்பதாகும்.