ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After Helsinki, Democrats incite “deep state” action against Trump

ஹெல்சின்கிக்குப் பின்னர், ஜனநாயக கட்சியினர் ட்ரம்புக்கு எதிராக "அரசு அமைப்புகளை" நடவடிக்கை எடுக்கத் தூண்டுகின்றனர்

Bill Van Auken
17 July 2018

திங்கட்கிழமை ஹென்சின்கி கூட்டமானது, டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையிலிருந்து நீக்குவதற்கு நிர்பந்திக்கும் நடவடிக்கை மேற்கொள்வதற்காக இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளுக்கு நேரடியாக அழைப்புவிடுவது போன்ற கட்டுப்பாடற்ற கண்டனங்களின் ஒரு சூறாவளியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சியும், பெருநிறுவன ஊடகங்களும் மற்றும் அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்பில் உள்ள முன்னணி பிரமுகர்களும் ட்ரம்பை கிரெம்ளின் முகவராக செயல்படும் ஒரு தேசத்துரோகி என்று முத்திரை குத்த இணைந்துள்ளனர்.

ட்ரம்பும் அவரது குழாமும் பதிலளிக்க வேண்டிய பல குற்றங்களுக்கு உரியவர்கள் தான். ஆனால், ஊடகங்களிலும் ஜனநாயகக் கட்சி ஏற்றுள்ள தந்திரமான அணுகுமுறைகளிலும் உள்ள ட்ரம்ப்-விரோத விஷமப் பிரச்சாரத்தை உந்துகின்ற நோக்கங்கள் முற்றிலும் பிற்போக்குத்தனமானவை.

ஹெல்சின்கி மாநாட்டுக்கு முன்னதாக, ஜனநாயகக் கட்சியின் தேசிய குழுவினதும் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் குழு தலைவர் ஜோன் பொடெஸ்டாவினதும் கணினிகளை ஊடுருவிய குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு ஆலோசகர் ரோபர்ட் முல்லெர், 12 ரஷ்ய இராணுவ உளவுத்துறை அதிகாரிகளைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கும் ஒரு குற்றப்பத்திரிகையை, பொருத்தமான நேரம் பார்த்து திட்டமிட்டு அறிவித்திருந்தார்.

ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி இருந்த இந்த குற்றப்பத்திரிகை, ட்ரம்ப் புட்டினுடனான அவரது சந்திப்பை இரத்து செய்ய வேண்டுமென கோருவதற்காக உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஊடகப் பிரிவுகளால் கையிலெடுக்கப்பட்டது.

அந்த குடியரசுக் கட்சி ஜனாதிபதி இந்த கோரிக்கைகளை நிராகரித்து, ஹெல்சின்கி க்கு விஜயம் செய்ததும், ஜனநாயகக் கட்சியினரும் அவர்களுடன் சேர்ந்து ஊடக நிறுவனங்களும் பேச்சுவார்த்தைகள் முடிந்த உடனேயே தமது தாக்குதலுக்கு தயாராக இருந்தன. குறிப்பாக இது, அக்கூட்டம் நடந்த அன்று காலை "ட்ரம்ப், துரோகத்தனத்தின் துரோகி" என்று தலைப்பிட்டு நியூ யோர்க் டைம்ஸில் கட்டுரையாளர் சார்லெஸ் ப்ளோவ் எழுதிய ஒரு பிற்போக்குத்தனமான கட்டுரையில் தெளிவாக இருந்தது. ட்ரம்ப் “இந்நாட்டுக்கு எதிராக நம்ப முடியாத மற்றும் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்வதாக …" அக்கட்டுரை குற்றஞ்சாட்டியது.

இந்த விஷமப் பிரச்சார தொனி ஏற்கனவே ட்ரம்ப்-புட்டின் சந்திப்புக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், எதிர்வினை அவர்கள் சந்திப்பு முடிந்தவுடன் வெளிப்பட்டது.

அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் அவர்களின் கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை முடித்த உடனேயே CNN இன் ஹெல்சின்கி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆண்டர்சன் கூப்பர், தொலைக்காட்சி செய்திகளுக்குள் நுழைவதற்கு முன்னர் சிஐஏ இல் பயிற்சி பெற்றவரும் மற்றும் வேண்டர்பேல்ட் குடும்பத்தின் (Vanderbilt) ஒரு வாரிசுமான இவர், தனது பார்வையாளர்களுக்கு அறிவிக்கையில், அவர்கள் ஓர் அமெரிக்க ஜனாதிபதியின் மிகவும் இழிவார்ந்த நடத்தையைப் பார்த்து வருவதாக" அறிவித்ததுடன், “... இவ்வாறான ஒன்றை நான் ஒருபோதும் பார்த்ததில்லை,” என்றார்.

“ஓர் அமெரிக்க ஜனாதிபதியின் மிகவும் இழிவார்ந்த நடத்தை?” என்ற இந்த வாசகம் உண்மையில் எதையோ எடுத்துரைக்கிறது!

ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிர்களைப் பறித்த, பொய்கள் அடிப்படையில் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஈராக்கிற்கு எதிரான ஓர் ஆக்கிரமிப்பு போரைத் தொடங்கியதை விடவா இது மிகவும் இழிவுகரமாக இருக்கிறது? ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவித்த பராக் ஒபாமாவின் ஆளில்லாத டிரோன் விமானத்தாக்குதல் நடவடிக்கையை விடவா இது மிகவும் இழிவுகரமாக இருக்கிறது? வேண்டுமென்றே குழந்தைகளின் சித்திரவதையை ஓர் ஆயுதமாக்கி உள்ள ட்ரம்பினது புலம்பெயர்ந்தவர்கள் மீதான அவரின் சொந்த காட்டுமிராண்டித்தனமான போரை விடவா இது மிகவும் இழிவார்ந்து இருக்கிறது?

இந்த அனைத்து போர் குற்றங்கள் மற்றும் மனிதயினத்திற்கு எதிரான குற்றங்களை எல்லாம் தாண்டி, ஹெல்சின்கியில் ட்ரம்ப் செய்த குற்றம் என்ன? 2016 தேர்தலில் ரஷ்யா "தலையிட்ட" நடவடிக்கை மீது கேள்வி எழுப்பி இருக்க வேண்டுமாம், இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்கின்ற போதும், அமெரிக்க உளவுத்துறை முகமைகளின் வலியுறுத்தல்களை நிரூபிக்கப்பட்ட உண்மைகளாக ஊடகங்கள் கையாள்கின்றன—இதே முகமைகள் தான் "பேரழிவுகரமான ஆயுதங்களை" குறித்து நமக்கு தெரிவித்தன.

ஹென்சிக்கி பத்திரிகையாளர் கூட்டத்தின் சில முக்கியத்துவமற்ற தருணங்களில் ஒன்றில், முன்னாள் KGB முகவரான புட்டின் கருத்துரைக்கையில், ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரியாக அவருக்கு "இத்தகைய ஆவணங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன" என்பதில் மிகவும் பரிச்சயம் இருப்பதாக தெரிவித்தார்.

ஆளும் செல்வந்த தன்னலக் குழுவின் அடுக்குகள், ஊடக பெருநிறுவனங்கள் மற்றும் பரந்த அமெரிக்க உளவுத்துறை எந்திரத்தால் வெறித்தனமாக ஊக்குவிக்கப்படும் இப்பிரச்சாரம், அமெரிக்க உழைக்கும் மக்களால் சிறிதளவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ட்ரம்பின் ஹென்சிக்கி கருத்துக்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெறித்தனமான மொழியில் ஓர் அச்சுறுத்தும் தன்மை இருந்தது.

ஒபாமாவின் கீழ் சிஐஏ இயக்குனராக இருந்தவரும், தொழில்ரீதியில் சிஐஏ அதிகாரியுமான ஜோன் பிரென்னென் அறிவிக்கையில், ஹென்சிக்கியில் புட்டின் உடன் ட்ரம்ப் ஒன்றாக தோன்றியமை 'மிகப்பெரிய குற்றங்கள் மற்றும் பிழைகளின்' வரம்பைத் தாண்டுவதாக" தெரிவித்தார். அது தேசதுரோகத்திற்கு குறைந்ததில்லை,” என்றார்.

தேசிய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் கூறுகையில், ட்ரம்ப் "முக்கியமாக சரணடைந்துவிட்டார், விளாடிமீர் புட்டினால் அவர் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது,” என்று குற்றஞ்சாட்டினார்.

ஈராக் போருக்கான பிரதான ஊடக பிரச்சாரகரான நியூ யோர்க் டைம்ஸின் வெளியுறவு விவகாரங்கள் பிரிவு கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மன் விவரிக்கையில், ட்ரம்பை "ரஷ்ய உளவுத்துறையின் ஒரு கையாளாக" வர்ணித்ததுடன், “எனது சக அமெரிக்கர்களே, நாம் சிக்கலுக்குள்ளாகி உள்ளோம்,” ட்ரம்ப் "தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால்", “இன்று நாம் சில பெரிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இது ஒட்டுமொத்த அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு வரலாற்று தருணம்,” என்பதையும் உரக்க சேர்த்துக் கொண்டார்.

ப்ரீட்மன் தொடர்ந்து கூறினார்: “ஒவ்வொரு குடியரசு கட்சி சட்ட வல்லுனரிடமும் தேர்தல் விசாரணை குறித்து, நீங்கள் ட்ரம்ப் மற்றும் புட்டின் உடன் இருக்கிறீர்களா அல்லது CIA, FBI மற்றும் NSA உடன் இருக்கிறீர்களா? என்று கேட்கப்படும்—கேட்கப்பட வேண்டும்.”

ட்ரம்ப்பிற்கு ஆதரவாக இருங்கள் அல்லது "அரசு அமைப்புகளின்" கணக்கிடப்படமுடியாத படுகொலை செயல்பாட்டாளர்களின் தரப்புக்கு ஆதரவாக இருங்கள் என்பதுதான் அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் அமெரிக்க மக்களுக்கு முன்வைக்கப்படும் விருப்பத்தெரிவாக உள்ளது. ஜனநாயகக் கட்சியின் போக்கை நம்பத்தகுந்த வகையில் சித்தரிக்கும் ப்ரீட்மன் மற்றும் டைம்ஸூம், ஜனநாயகக் கட்சியானது இரண்டாவது விருப்பத்தெரிவைச் சேர்ந்த கட்சி என்பதை தெளிவாக்குகின்றனர்.

ஆட்சிக் கவிழ்ப்பு சதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் படுகொலைகளில் இருந்து சித்திரவதை மற்றும் உள்நாட்டு உளவுபார்ப்பு வரையில் இந்த முகமைகள் நடத்திய மிகப்பெருமளவிலான குற்றங்களைக் குறித்து, ப்ரீட்மனோ அல்லது அத்தகைய கருத்திற்கு ஆதரவாக பேசும் அல்லது எழுதும் பிற டஜன் கணக்கான ஊடக பண்டிதர்களோ யாரும் குறிப்பிடவில்லை.

ரஷ்யா "தலை நுழைப்பதை" வாஷிங்டன் "ஓர் போர் நடவடிக்கையாக" கருதும் என்றும், “நாங்கள் முன்னர் ஒருபோதும் இல்லாத விதத்தில் உங்கள் மீது தடையாணைகளை மட்டும் விதிக்க மாட்டோம், மாறாக எங்கள் கைவசமிருக்கும் ஒவ்வொரு இணையவழி ஆயுதத்தையும் நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்" என்றும் ஓர் அச்சுறுத்தலை ட்ரம்ப் புட்டினுக்கு வழங்கியிருக்க வேண்டும் என்பதே ட்ரம்புக்கான ஒரே தகுதியான சேதி என்றவர் வலியுறுத்தும் அளவுக்கு சென்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அணுஆயுத போர் எச்சரிக்கையாகும்.

இவ்விதமான வார்த்தை பிரயோகங்களில் ஓர் தவறுக்கிடமற்ற தர்க்கம் உள்ளது. பதவி நீக்க குற்றவிசாரணை வழிவகைகள் மூலமாக ட்ரம்பை நீக்க முடியாது என்றாகும் போது, ஓர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குக் கதவு திறக்கிறது.

சிஐஏ மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை இரண்டுக்கும் தலைமை கொடுத்துள்ள நான்கு-நட்சத்திர அந்தஸ்து பெற்ற முன்னாள் விமானப்படை தளபதி மிக்கெல் ஹேடன் இந்த விருப்பத்தெரிவுக்கு உறுதியான வெளிப்பாட்டை வழங்கினார். திங்களன்று தேசிய பொது வானொலியில் பேட்டி காணப்பட்ட அவர், ட்ரம்பின் ஹெல்சின்கி கருத்துக்களைக் கண்டித்ததுடன், “மத்திய பதவியில் உள்ள அதிகாரிகள் என்னிடம் வந்து மக்களுக்கு நான் என்ன கூறுவது என்று கேட்கிறார்கள், உண்மையில் இதுவொரு திட்டவட்டமான கேள்வி தான்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

மறைமுகமாக, செயலூக்கத்துடன் கடமையாற்றி வரும் இராணுவப் பிரிவுகளும், சிஐஏ பிரதிநிகளும் மற்றும் பிரதான அமெரிக்க உளவுத்துறை முகமைகளின் முன்னாள் தலைவர்களும் டொனால்ட் ட்ரம்பை என்ன செய்வது என்பதைக் குறித்து விவாதித்து வருகின்றனர்.

ட்ரம்புக்கு எதிராக இராணுவம் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்துமேயானால், ஜனநாயகக் கட்சியின் தலைமை ஓர் அமெரிக்க இராணுவ ஆட்சிக்குப் பின்னால் அணித்திரளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆளும் வர்க்கத்தில் ட்ரம்ப் விரோதிகளது கவலைகள் மும்மடங்காகி உள்ளன. வர்த்தகப் போர் மற்றும் நேட்டோ போன்ற நீண்டகால கூட்டணிகளை சிக்கலுக்கு உட்படுத்தும் ட்ரம்பின் "அமெரிக்கா முதலில்" வெளியுறவு கொள்கை அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான முனைவைப் பலவீனப்படுத்தி வருவதாக அவர்கள் அஞ்சுகின்றனர்.

இரண்டாவதாக, ட்ரம்பை எதிர்க்கும் ஆளும் வர்க்க எதிர்ப்பாளர்களும் மற்றும் அரசு அமைப்பினுள் இருப்பவர்களும், மாஸ்கோ உடனான ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டுவதற்கான எந்தவொரு முயற்சியையும், அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு அவர்கள் ஒரு மிகப்பெரிய தடையாக கருதும் ஒரு நாட்டுடனான மோதலில் இருந்து ஓர் அபாயகரமான விலகலாக பார்க்கிறார்கள்.

மூன்றாவதாக, அமெரிக்காவுக்கு உள்ளேயே ஒரு வெடிப்பார்ந்த வர்க்க மோதலுக்கான நிலைமைகள் உருவாகி வருவதையும், இதை கட்டுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் திராணியற்றது என்பதை அது நிரூபித்துவிடும் என்றும் அமெரிக்க ஆளும் செல்வந்த குழுக்களுக்குள் அதிகரித்த அச்சம் உள்ளது. எதிர்வரவிருக்கும் சமூக மேலெழுச்சிகளை ஜனநாயக ஆட்சி வடிவங்களின் வரம்புகளுக்குள் நசுக்குவது சாத்தியமில்லை என்பது நிரூபணமாகும் என்பதில் ஆளும் வர்க்கங்களுக்குள் கருத்தொற்றுமை அதிகரித்து வருகிறது.

அனைத்திற்கும் மேலாக இப்போது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர்களிடையே வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பால் உந்தப்பட்டு, ஆழமடைந்து வரும் அரசியல் நெருக்கடி முன்நிறுத்தும் அபாயங்களுக்கு, தொழிலாளர்களின் அதிகாரம், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் மற்றும் சோசலிச வேலைத்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அவ்விரு கட்சிகளுக்கும் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து கன்னைகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே பதிலளிக்க முடியும்.