ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron’s education cuts deny admission to thousands of French university students

மக்ரோனின் கல்வித்துறை வெட்டுக்கள் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி மறுக்கின்றன

By Kumaran Ira
27 August 2018

இந்த வசந்தத்தின் போது பாரிய மாணவர் ஆர்ப்பாட்டங்களுக்கு முகம்கொடுத்த நிலையிலும் திணிக்கப்பட்ட ORE (Orientation et réussite des étudiants - மாணவர்களுக்கான திசைவழியும் வெற்றியும்) சட்டத்தினால் உருவாக்கப்பட்ட பார்க்கூர்சூப் வழிமுறை (Parcoursup algorithm) ஆல், செப்டம்பர் 3 அன்று வகுப்புகள் தொடங்குவதற்கு இன்னும் இருவாரங்கள் கூட இல்லாத நிலையில், பத்தாயிரக்கணக்கான பிரெஞ்சு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு இன்னும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே இருக்கின்றனர். ஆகஸ்டு 9 வெளியான புள்ளிவிவரங்களின் படி, Parcoursup இல் பதிவு செய்திருக்கும் 812,000 பல்கலைக்கழக-வயது மாணவர்களில் 66,400 பேர் இன்னும் எங்கும் இடம்கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.

பத்தாயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வி மறுக்கப்படலாம் என்ற உண்மையானது ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கல்வித்துறை வெட்டுக்களது பிற்போக்குத்தனமான குணாம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நடவடிக்கை பல்கலைக்கழகங்களை போட்டித்திறன் மிக்கதாக ஆக்குவதற்கும் அவற்றின் தனியார்மயமாக்கத்திற்கும் நோக்கம் கொண்டதாகும். பிரான்சின் பொதுப் பல்கலைக்கழகங்கள் தமக்கான மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், நிராகரிப்பதற்கும் அவற்றுக்கு இது அதிகாரமளிக்கிறது.

முன்பு, உயர்நிலைப் பள்ளியின் முடிவில் இளங்கலைக் கல்விக்கான தேர்வில் (baccalauréat exam) தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்புகின்ற ஏறக்குறைய அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் விரும்பிய துறையில் ஒரு பொது பல்கலைக்கழகத்தில் இடம் ஒதுக்கப்படும் முறை இருந்து வந்திருந்தது. ஆனால், இந்த புதிய சட்டமானது, பல்கலைக்கழக இடம் ஒதுக்கல்கள் இளங்கலைக் கல்விக்கான தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், மாணவர் படித்த உயர்நிலைப் பள்ளியின் தரம், மற்றும் மாணவரின் கல்வி வரலாறு மற்றும் பயிற்சிக்காலங்கள் (internships) ஆகியவற்றை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோருகிறது. மேம்பட்ட தரம் கொண்ட பள்ளிகளுக்கு அணுகல் கொண்டிருக்கின்ற, பயணம் செய்து படிக்க இயலுகின்ற, பயிற்சிக்காலங்கள் மற்றும் கலாச்சார அனுபவங்கள் பெற இயலுகின்ற மக்களின் கூடுதல் வசதியான அடுக்குகளுக்கு —இவை தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கு மறுக்கப்படுகிற வாய்ப்புகளாகும்— சாதகமானதாக இது அமைந்திருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில், பல்கலைக்கழகத்திற்குள் வரும் மாணவர்கள் எண்ணிக்கை வருடத்திற்கு 30,000 ஆக இருந்ததில் இருந்து 40,000 ஆக வளர்ந்திருக்கிறது, 2020 வரையில் இதே போக்கே தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே அதிகமான மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கணிசமான அரசு முதலீடு பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு அவசியமாகின்ற நிலை உள்ளது. மக்ரோனின் கல்வித்துறை வெட்டுக்கள் இதற்கு மாறாய், மாணவர் சேர்க்கையை கணிசமாகக் குறைத்து, மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும் இல்லையேல் தமது படிப்பையே ஒட்டுமொத்தமாய் கைவிட வேண்டும் என்பதான நிலைக்கு மாணவர்களைத் தள்ளியிருக்கின்றன.

ORE சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், இச்சட்டத்தினை எதிர்த்தும் அதனை திரும்பப் பெறக் கோரியும், இந்த வசந்தத்தில் பிரான்ஸ் எங்கிலும் மாணவர்கள் டசன்கணக்கான பல்கலைக்கழகங்களில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மக்ரோன் கடுமையான ஒடுக்குமுறையைக் கொண்டு அதற்கு பதிலிறுத்தார், முற்றுகைப் போராட்டங்களை உடைக்க போலிசை அனுப்பினார்.

தொழிற்சங்கங்களும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் அடிபணியா பிரான்ஸ் (La France Insoumise - LFI) போன்ற போலி-இடது கட்சிகளும் மாணவர்களைத் தனிமைப்படுத்துவதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தன. இரயில்வே, விமானத் துறை மற்றும் பிற துறைகளிலான போராட்ட இயக்கத்தை மக்ரோனுடனான தொழிற்சங்கங்களது பேச்சுவார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்த அடையாள நடவடிக்கைகளாக சுருக்கியதன் மூலமாக, மக்ரோனுக்கு எதிராய் தொழிலாளர்களுடன் இணைந்த ஒரு கூட்டான போராட்டத்தை நடத்துவதில் இருந்து அவை மாணவர்களைத் தடுத்து விட்டன. அதன்பின் இரயில்வேயை தனியார்மயமாக்குவது மற்றும் கூடுதல் சமூகத் தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்வது ஆகிய மக்ரோனின் கொள்கைக்கு ஒப்புதலளித்த தொழிற்சங்கங்கள் மாணவர் முற்றுகைகளைத் தனிமைப்படுத்தி போலிஸ் அவற்றை நசுக்க அனுமதித்தன.

மாணவர்கள் மத்தியில் கோபமும் கவலையும் பெருகிச் செல்லும் நிலைக்கு முகம்கொடுக்கும் நிலையில், ஊடகங்களில் வெளியாகியிருக்கின்ற பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களது எண்ணிக்கை குறித்த விபரங்களை மறுப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்திருக்கிறது. உயர்கல்வி அமைச்சரான ஃப்ரெடெரிக் விடால் RTL வானொலியிடம் தெரிவித்தார்: “16,000 இளைஞர்கள் அனுமதிக்காக செயலூக்கத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர், 50,000 பேரை நாங்கள் தொடர்புகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்கள் இதுவரையில் எங்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.”

இந்த 50,000 மற்ற மாணவர்கள், அரசாங்கத்தின் வார்த்தை அகராதிப்படி “செயலூக்கமற்றநிலை”யில் உள்ளவர்கள், ஆகவே அவர்கள் அனுமதிக்கு எதிர்நோக்கி இருப்பவர்களாக கருதப்பட அவசியமற்றவர்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. “நாங்கள் அவர்களை செயலூக்கமற்ற நிலை கொண்டவர்களாய் கருதுகிறோம், ஏனென்றால் நமக்குத் தெரியும் இளைஞர்களுக்கு மற்ற திட்டங்களும் இருக்கலாம், பல்கலைக்கழகத்திற்கு பதிவு செய்திருப்பார்கள் ஆனாலும் செயலூக்கத்துடன் அனுமதி எதிர்நோக்கியிருக்க மாட்டார்கள்” என RTL இடம் விடால் சொல்ல முயற்சித்தார்.

அரசாங்கத்தின் விளக்கம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களது அனுபவங்களுடன் அப்பட்டமாக முரண்படுகிறது. கொம்பியேன் (Compiègne) என்னும் இடத்தில் உள்ள ஒரு பொறியியல் மாணவரான Guillaume Ouattara ஐ L’Express தொடர்பு கொண்டது, “Parcoursup அல்காரிதத்தை ஆய்வுசெய்திருக்கும் அவர், அனுமதிக்கு செயலூக்கத்துடன் எதிர்பார்த்திருப்பவர்கள் செயலூக்கமற்று எதிர்பார்த்திருப்பவர்கள் என்கிறதான பிரிப்பு மோசடியானது என முடிவு கூறினார்.”

L’Express இடம் Ouattara பின்வருமாறு கூறினார்: “செயலூக்கத்துடன் அனுமதி எதிர்பார்த்திருப்பதாக கருதப்படுவதற்கு, ஒருவர் பயிற்சிக்காலத்திற்கான ஒரு விண்ணப்பத்தை சமீபத்தில் செய்திருக்க வேண்டும் அல்லது பல்கலைக்கழக தலைவரின் அலுவலகத்தை (அனுமதித் திட்டங்களை விவாதிப்பதற்கு) தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், பல மாணவர்களுக்கு அவர்கள் பல்கலைக்கழக தலைமை அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் என்பது கூடத் தெரியாது அல்லது அவர்கள் இதுவரை அவர்களுக்குப் பொருத்தமான பயிற்சிப்பணிகளைக் கண்டுபிடித்திருக்கவில்லை. ஆயினும் இப்போதும் அவர்கள் கணினியில் உள்நுளைந்து தங்களது நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா என்று பார்த்தவண்ணமே இருக்கின்றனர்.”

இந்த மாணவர்கள் எல்லாம் இடம் கிடைப்பதற்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையிலும், அனுமதி பெற முயற்சிக்கவில்லை என்று கூறி கல்வி அமைச்சகம் அவர்கள் மீது பழிபோட்டது. “ஒவ்வொரு வருடமும், எங்களுக்கு இதே பிரச்சினை இருக்கிறது. மாணவர்கள் உயர்கல்வி இடத்தினை எதிர்நோக்கியிருக்கிறார்களா என்று எங்களுக்கு தெரிவிக்கும்படி நாங்கள் கேட்டு வந்திருக்கிறோம். அவர்களுக்கு நாங்கள் பல்வேறு செய்திகளையும் அனுப்பியிருக்கிறோம்.”

இதில் தனக்கு சந்தேகமுள்ளதாக L’Express இடம் Ouattara கூறினார்: “நான் பேசுகின்ற மாணவர்கள் எவரும் தொலைபேசியிலோ அல்லது குறுஞ்செய்தியிலோ எந்த தகவலையும் பெறவில்லை.. உண்மையில் 66,000 மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, அமைச்சகம் கூறுவதைப் போல 16,000 பேர் அல்ல.”

இடம் ஒதுக்கப்பட்டிராத உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இறுதியாக ஒரு பல்கலைக்கழகம் ஒதுக்கப்பட்டு விடும் என்ற அனுமானத்தில், அவர்களுக்கான போக்குவரத்து செலவுக்கு அரசாங்கம் வெறும் 7 மில்லியன் யூரோக்களை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. நிதி தினசரியான Les Echos பின்வருமாறு தெரிவித்தது: “அனுமதி கிடைத்த பின்னர் தங்கள் வீட்டில் இருந்து வெகுதூரம் பயணம் செய்ய நேர்கின்ற பட்டதாரிகளது பல்கலைக்கழகக் காலத்தின் தொடக்கத்தில் போக்குவரத்து செலவுகளுக்காக €200-1000 உதவித் தொகுப்புகள் மொத்த தொகைகளாக வழங்கப்படுகின்றன.”

போக்குவரத்து செலவுகளுக்கும் தொடக்க பல்கலைக்கழக படிப்புகளுக்கும் கொஞ்சமும் போதாத இந்த €200-1,000 தொகையானது உதவித்தொகை என்பதை விடவும் அவமதிப்பு தொகை என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு நிதி கொண்டிருக்கவோ இயலாதிருக்கும் நிலை இருக்கின்றதென்றால், பாரிய மக்களின் நலன்களை விலைகொடுத்து ஆடம்பரமான செல்வத்தை குவிப்பதற்கு பெரும்செல்வந்தர்களை அனுமதிக்கிற சமூக சிக்கன நடவடிக்கைகளே அதன்காரணம் ஆகும்.

இன்னும் இடம் கிடைத்திராத மாணவர்களுக்காய் முன்வைக்கப்படுகிற 7 மில்லியன் யூரோ உதவித் தொகுப்பு தொகையானது சில பிரெஞ்சு பில்லியனர்களின் ஒருநாள் வருமானத்திற்கும் குறைவானதாகும். மக்ரோனின் சமூகத்திற்கு-விரோதமான சீர்திருத்தங்களின் காரணத்தால், பிரான்சில் 13 மிகப் பெரும் செல்வந்தர்கள் தமது செல்வத்தை 2018 இன் தொடக்கம் முதலான காலத்தில் 23.67 பில்லியன் யூரோ வரை பெருக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆடம்பரப் பொருட்கள் தயாரிப்பு குழுமமான LVMH இன் உரிமையாளராக, ஐரோப்பாவின் மிகப்பெரும் பணக்காரராகவும் உலகின் நான்காவது பெரும் பணக்காரராகவும் இருக்கின்ற பேர்னார் ஆர்னோ, 2008 முதல் 2018 வரையான காலத்தில் -பாரிய எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களுக்கு ஆழமான பொருளாதார நெருக்கடி மற்றும் சமூகக் கடினநிலையின் ஒரு தசாப்தம்- தனது செல்வத்தை 18 பில்லியன் யூரோக்களில் இருந்து 73.2 பில்லியன் யூரோக்களாக அதிகரித்துக் கொள்ள முடிந்திருந்தது. ஒரு குறைந்தபட்ச ஊதியத் தொழிலாளி ஆர்னோவின் மொத்த சொத்தின் அளவை சம்பாதிக்க வேண்டுமானால் அவருக்கு 4 மில்லியன் ஆண்டுகள் தேவைப்படும்.

ஆர்னோவின் சொத்துமதிப்பு சென்ற ஆண்டில் மட்டும் 19.1 பில்லியன் யூரோக்கள் வரை அதிகரித்தது— அதாவது ஒருநாளைக்கு 52 மில்லியன் யூரோவுக்கும் கூடுதலாய். Parcoursup இல் இருந்து இன்னும் இடம் ஒதுக்கப்பட்டிராத மாணவர்களுக்கு உதவித்தொகையாக மக்ரோன் நிர்வாகத்தால் ஒதுக்கப்படுகின்ற மொத்தத் தொகைக்கு நிகரானதை ஆர்னோ நான்கு மணி நேரத்துக்கும் குறைவான காலத்தில் “சம்பாதித்து” விடுகிறார்.