ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Defend the Student Council! Stop the right-wing conspiracy at Berlin’s Humboldt University

மாணவர் மன்றத்தை பாதுகாப்போம்! பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் வலதுசாரி சூழ்ச்சியை நிறுத்து

By the International Youth and Students for Social Equality and Sozialistische Gleichheitspartei
9 August 2018

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) மற்றும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei—SGP) ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர் மன்றத்தின் மீது பல்கலைக்கழக தலைவர் சபீன குன்ஸ்ட் (சமூக ஜனநாயக கட்சி—SPD) இன் தாக்குதலையும் மற்றும் அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) க்கு அது உடந்தையாய் இருப்பதையும் கடுமையாக கண்டிக்கிறது. அரசியல்ரீதியில் செயல்பட்டு வரும் மாணவர்களின் தனிநபர் விபரங்களைப் பிரசுரிக்கக்கூடாது என்ற மாணவர் மன்றத்தின் முடிவை நாங்கள் ஆதரிப்பதுடன், ஹம்போல்ட் பல்கலைக்கழக தலைவர் பதவியிலிருந்து குன்ஸ்ட் உடனடியாக பதவி விலக கோருகிறோம், அத்துடன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் வலதுசாரி தீவிரவாத வட்டத்திற்கும் இடையிலான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி விட்டு, அவற்றைக் குறித்த விபரங்களை வெளியிடுமாறும் நாங்கள் கோருகிறோம்.

ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் அரசியல்வாதி Martin Trefzer கோரியதைத் தொடர்ந்து பேர்லினின் மற்ற இரண்டு பல்கலைக்கழக தலைவர்களும் அரசியல்ரீதியில் செயல்பட்டு வரும் மாணவர்களின் தனிநபர் விபரங்களைப் பிரசுரிக்க மறுத்துவிட்ட நிலையில், குன்ஸ்ட் கடந்த ஜூலையில் அவரது பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார். Trefzer கோரியவாறு மாணவர் மன்றத்தின் அங்கத்தவர்கள் அனைவரினதும் மற்றும் அவர்களது நிர்வாகிகளினதும் பெயர்களை முழுமையாக பிரசுரிக்க மாணவர் மன்றத்தை அப்பெண்மணி சட்டப்பூர்வமாக நிர்பந்திக்க விரும்புகிறார். இந்த அதிவலது சூழ்ச்சியை முன்னெடுப்பதற்காக, குன்ஸ்ட், மாணவர் மன்றத்தின் சுயஅதிகாரத்தைத் திரும்ப பெறவும் மற்றும் ஆரம்பத்தில் மாணவர்களாலேயே நிறைவேற்றப்பட்ட அதற்கான சட்டதிட்டங்களை மாற்றவும் அவர் உத்தேசித்துள்ளார்.


ஹம்போல்ட் பல்கலைக்கழக தலைவர் சபீன குன்ஸ்ட், புகைப்படம்: அசெல் ஹின்ட்மித், CC-by-sa-3.0 de

குன்ஸ்ட் அவரின் சர்வாதிகார நடவடிக்கைகளில் வெற்றி பெற்றால், அபாயகரமான பாதிப்புகள் ஏற்படும். அவராலும் ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியாலும் கோரப்பட்டு வருகின்ற பட்டியல்கள், எதிர்ப்பு கண்ணோட்டங்களைக் கொண்ட மாணவர்களை வலதுசாரி தீவிரவாத குழுக்கள் மிரட்டுவதற்கும் தாக்குவதற்கும் பயன்படுத்தப்படும். “ஹம்போல்ட் நிர்வாகமும், மாணவர்களுக்கு எதிராக AfD உம்” என்று தலைப்பிட்டு மாணவர் மன்றம் அதன் பத்திரிகை வெளியீட்டில் இவ்வாறு எச்சரித்தது, “இதனால் பாதிக்கப்பட்டவர்களின் பெயரால் நாங்கள் நன்கு அறியப்பட்டிருக்கிறோம் — அவர்கள் ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர்கள் தான். ஆனால் எங்களை அவமானப்படுத்த விரும்பும் எங்களின் அரசியல் எதிரிகளுக்கு எங்கள் விபரங்கள் தெரியக் கூடாதென நாங்கள் விரும்புகிறோம்.”

அந்த வழக்கு வெறுமனே சட்ட மேற்பார்வைக்காக அல்லது தனிப்பட்ட மாணவர் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்காக என்ற தலைவரின் வாதம் ஒரு பொய்யாகும். “பல்கலைக்கழக நிர்வாகம் மன்ற அங்கத்தவர்களின் பெயர்களைப் 'பல்கலைக்கழகத்திற்குள்' பிரசுரிப்பது குறித்து பேசுகின்றபோது, அதன் அர்த்தம் அவை தானாகவே AfD க்குப் போய் சேரும்,” என்று மாணவர் மன்றம் எழுதியது. “இது ஏனென்றால் பல்கலைக்கழகம் AfD அங்கத்தவர்கள் மற்றும் புதிய வலது என்றழைப்படுவதன் அங்கத்தவர்களையும் ஆசிரியர்களாக பணியமர்த்தி உள்ளது, மார்க்குஸ் எக் மற்றும் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி ஆகியோர் அவர்களில் உள்ளடங்குவர், மேலும் கடந்த அரை கல்வியாண்டு (semester) வரையில் Gottfried Curio உம் இருந்தார், இவர் இப்போது கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் AfD க்காக அமர்ந்துள்ளார்.

எந்த சூழலிலும் மாணவர் மன்ற அங்கத்தவர்களின் பெயர்கள் பிரசுக்கப்பட்டு AfD இன் வசம் ஒப்படைக்கப்படக் கூடாது, அது வன்முறையில் ஈடுபடக்கூடிய அதிவலது பயங்கரவாதிகள் மற்றும் நவ-நாஜிக்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. இந்த தகவலைப் பெறுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் கூட உரிமை இல்லை. 2015 இல் மாணவர்கள் Münkler-Watch வலைப்பதிவில் பேராசிரியர் ஹெர்பிரட் முன்ங்லெரின் இராணுவவாத நிலைப்பாடுகள் குறித்து அனாமதேயராக விமர்சித்தபோது, பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களுக்கு எதிராக ஓர் ஒடுக்குமுறையைத் தொடங்குவதற்காக அவர்களின் பெயர்களைக் கோரியது.

ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக குன்ஸ்ட் மற்றும் வலதுசாரிகளின் தாக்குதலை நிறுத்த இதுவே சரியான தருணம்! வலதுசாரி தீவிரவாத வலையமைப்புகளும் சர்வாதிகார நடவடிக்கைகளும் இந்த பல்கலைக்கழகத்திலும் சரி, எந்த இடத்திலும் மேலோங்க ஒருபோதும் மீண்டும் அனுமதிக்கப்படக் கூடாது!

பார்பெரோவ்ஸ்கியின் வலதுசாரி தீவிரவாத வலையமைப்பு

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் கிழக்கு ஐரோப்பிய வரலாற்று பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி அதிவலது சூழ்ச்சியின் மையத்தில் உள்ளார். பார்பெரோவ்ஸ்கி நாஜி அனுதாபியாக மற்றும் அதிவலதின் சித்தாந்த முன்னோடியாக சர்வதேச அளவில் அறியப்படுபவர். அவரது எழுத்துக்கள் நாஜிக்கள் மற்றும் மூன்றாம் ரைஹ்ஹின் குற்றங்களைக் குறைத்துக்காட்டுவதற்காக குறிப்பிடப்படுகின்றன. “ஹிட்லர் ஒரு மனநோயாளி இல்லை, அவர் வக்கிரமானவராக இருக்கவில்லை. அவரது மேசையில் யூதர்களை நிர்மூலமாக்குவதைக் குறித்து அவர் பேச விரும்பவில்லை,” என்றவர் 2014 இல் Der Spiegel க்குத் தெரிவித்தார்.

அமெரிக்க நாஜி வலைத்தளம் The Daily Stormer பார்பெரோவ்ஸ்கியைப் புகழ்கிறது

பார்பெரோவ்ஸ்கியின் வரலாற்று திரித்தல்வாதம் அரசியல்ரீதியில் அவர் பின்பற்றி வரும் வலதுசாரி திட்டநிரலுடன் கை கோர்த்து செல்கிறது. அவர் ஒரு வலதுசாரி தீவிரவாத விவாதக் குழுவின் ஒழுங்கமைப்பாளர் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது, இக்குழுவில் சமூக ஜனநாயகவாதியும் இனவாதியுமான Thilo Sarrazin; AfD தலைவர் அலெக்சாண்டர் கவுலாண்டின் பிரத்யேக ஆலோசகர் Michael Klonowsky ஆகியோரும்; Dieter Stein (Junge Freiheit), Karlheinz Weißmann (Cato), மற்றும் Frank Böckelmann (Tomult) போன்ற வலதுசாரி பதிப்பாசிரியர்களும் உள்ளடங்குவர். இந்தாண்டின் தொடக்கத்தில், “2018 அறிக்கை" என்றழைக்கப்பட்டது இந்த பாசிசவாத வலையமைப்பில் இருந்து தான் வெளியானது. அது "சட்டவிரோத மக்கள் புலம்பெயர்வு" என்று கூறப்படுவதற்கு எதிராக சீறியிருந்ததுடன், வெளிநாட்டவர் விரோத ஆர்ப்பாட்டங்களுடன் அதன் இணக்கத்தைப் பிரகடனப்படுத்தியது.

செய்தியிதழ் Die Zeit வழமையாக பார்பெரோவ்ஸ்கியின் "வலதுசாரி கோஷங்கள்" குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளது. அது, AfD உடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட ஓர் ஒட்டுமொத்த "சிந்தனை குழாம்களின் புதிய வலது வலையமைப்பின்" பாகமாக அவரைப் பட்டியலிட்டது. “ஒரு சில ஆண்டுகளாக, வலதுசாரி புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாசிரியர்கள், பேர்லினில் வரலாற்றாளர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியின் முனைவில் ஒரு நீண்ட இரகசிய விவாத மன்றத்தில் சந்தித்துள்ளனர் … அவரது தனிப்பட்ட வட்டாரத்தில், பார்பெரோவ்ஸ்கி அவர் விருந்தினருடனும் —மற்றும் வலதுசாரி தீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட பழமைவாதிகளுடனும்—ஐரோப்பாவில் இஸ்லாம் வரலாறு மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்து விவாதித்தார்,” என்று Die Zeit எழுதியது.

பார்பெரோவ்ஸ்கி துறையின் பேஸ்புக் பதிவு

பார்பெரோவ்ஸ்கி அவரது வலதுசாரி தீவிரவாத திட்டநிரலை முன்னெடுக்க அரசியல், ஊடகங்கள் மற்றும் இராணுவத்தில் உள்ள அவர் தொடர்புகளை மட்டுமல்ல, மாறாக பல்கலைக்கழக உள்கட்டமைப்பையும் சுரண்டிக் கொண்டுள்ளார். அவரது ஹம்போல்ட் பல்கலைக்கழக வலைத் தளத்தில் அவரது அகதிகள்-விரோத பேட்டிகள், செய்திதாள் கட்டுரைகள் மற்றும் வானொலி பங்களிப்புகளை நீண்டகாலத்திற்கு முன்னரே அவர் பட்டிலிட்டுள்ள நிலையில், சமீபத்தில் அவர் வலதுசாரி பிரச்சாரத்தைப் பரப்புவதற்கு வரலாற்று பயிலகத்திற்குள் அவரது கிழக்கு ஐரோப்பிய வரலாற்று துறையின் பேஸ்புக் பக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

ஜூலை 24 பதிவு, அதற்கு பின்னர் இது அழிக்கப்பட்டது, “தார்மீக பாதுகாவலர்களின் சர்வாதிகாரம் மற்றும் பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மைக்கு" எதிராக AfD அல்லது பெஹிடா சீறும் விதத்தில் சீறியிருந்தது, “இந்நாடு முடிவில் நிற்கிறது. இது வெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட புத்திஜீவித உள்நாட்டு போரில் இருந்து மீண்டும் ஒருபோதும் மீண்டு வராது. குடியரசின் மாண்புகளுக்கும் புரிந்துணர்வு வழக்கறிஞர்களுக்கும் இடையிலான உடன்பாடு இறுதியில் முறிந்து போயுள்ளது. ஒருவேளை இந்த யதார்த்தம் உணரப்பட்டால், எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்படும். அங்கே இனியும் அது குறித்து எந்த அர்த்தமும் இல்லை,” என்றது புலம்பியது.

அவரின் வலதுசாரி வெறிப்பேச்சுக்களை விமர்சிக்கும் மாணவர்களைப் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கி, சர்வாதிகார வழிவகைகளைக் கொண்டு ஒடுக்க வேண்டுமென பார்பெரோவ்ஸ்கி நீண்டகாலமாக கோரி வருகிறார். பிரேமன் மாணவர் மன்றம் அவரது வலதுசாரி நிலைப்பாட்டை விமர்சித்ததற்காக, 2017 இல் அவர் அதை வழக்கில் இழுத்தார். மே 2016 இல் இருந்து ஹம்போல்ட் தலைவராக உள்ள குன்ஸ்ட் ஆரம்பத்தில் இருந்தே பார்பெரோவ்ஸ்கியின் போக்கை ஆதரித்தார். நீதிமன்றங்களில் பார்பெரோவ்ஸ்கி தோல்வியடைந்ததும், அப்பெண்மணி பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் ஓர் உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டு, "நிகரில்லா அறிஞர்" மீதான எந்தவொரு விமர்சனத்தையும் பல்கலைக்கழகம் பொறுத்துக் கொள்ளாது என்று அறிவித்ததுடன், அவரது விமர்சகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அச்சுறுத்தினார்.

இது ஒட்டுமொத்த மாணவர் அமைப்புக்கும் ஓர் அச்சுறுத்தலாகும், மாணவர் அமைப்பின் பெரும் பெரும்பான்மையினர் AfD இன் அதிவலது அரசியலையும் மற்றும் ஹம்போல்ட் பல்கலைக்கழகம் ஒரு வலதுசாரி சிந்தனைக் குழாமாக மாற்றப்படுவதையும் எதிர்க்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், பல மாணவர் அமைப்புகள் பார்பெரோவ்ஸ்கி, முன்ங்லெர் மற்றும் ஏனைய வலதுசாரி மற்றும் இராணுவவாத-ஆதரவு பேராசிரியர்களுக்கு எதிராக குரல் எழுப்பும் தீர்மானங்களையும் அறிக்கைகளையும் ஏற்றுள்ளன. ஏப்ரல் 2017 இல், மாணவர் நாடாளுமன்றம் ஒரு பெரும் பெரும்பான்மையோடு ஒரு தீர்மானம் நிறைவேற்றியது, அது "பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி உடனான அவரது நல்லிணக்க பிரகடனங்களைப் பகிரங்கமாக திரும்பப் பெற" குன்ஸ்ட் க்கு அழைப்புவிடுத்ததுடன், “அவரது வலதுசாரி, அகதிகள்-விரோத நிலைப்பாடுகளைச் சமரசத்திற்கு இடமின்றி கண்டிப்பதாக" குறிப்பிட்டது.

குன்ஸ்ட் விமர்சனரீதியான மாணவர்களை கண்டனம் செய்கிறார்

குன்ஸ்ட் அவரது அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்தி எதிர்வினையாற்றினார். Süddeutsche Zeitung உடனான அவரது ஒரு பேட்டியில், அவர் அவரின் சொந்த பல்கலைக்கழக மாணவர்களையே குறை கூறியதோடு, பார்பெரோவ்ஸ்கி மற்றும் முன்ங்லெரை ஓர் அவதூறு பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்க முனைந்தார். பல ஆண்டுகளாக ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் அபாயகரமான அபிவிருத்திகளைக் குறித்து எச்சரித்து வந்துள்ள IYSSE இன் செய்தி தொடர்பாளர் ஸ்வென் வுர்ம், குன்ஸ்ட் க்கு எழுதிய ஒரு பகிரங்க கடிதத்தில் பின்வருமாறு எழுதினார்: “யதார்த்தத்தில், நீங்கள் தான் பேச்சு சுதந்திரத்தை அவமானப்படுத்தி, ஒடுக்கி வருகிறீர்கள். 'கல்வித்துறை விவாதத்தை" பாதுகாப்பதற்காக என்று நீங்கள் எதை தவறாக சித்தரிக்கிறீர்களோ உண்மையில் அது அரசுக்கு ஒத்திசைவதன் ஒரு நவீன வடிவமாகும். மாணவர்களின் கருத்துக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது உங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.” “உள்ளடக்கத்தின் அர்த்தத்தில், பார்பெரோவ்ஸ்கி உடனான பிரச்சினையில் பணயத்தில் வைக்கப்பட்டுள்ள விடயங்கள் மிகப்பெரிய சமூக முக்கியத்துவம் கொண்டவை. எந்தவித எதிர்ப்பும் எழும்பாதவாறு முதலாம் மற்றும் இரண்டாம் உலக போரில் ஹிட்லரின் பாத்திரம் மற்றும் ஜேர்மனியின் குற்றங்களை மறுமதிப்பீடு செய்யும் முயற்சியே பணயத்தில் உள்ளது," என்றவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

ஏற்கனவே பெப்ரவரி 2014 இல், IYSSE குன்ஸ்ட் க்கு முன்பிருந்த Jan-Endrik Olbertz க்கு (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்) எழுதிய ஒரு பகிரங்க கடிதத்தில், “வரலாற்றுரீதியில் பொய்யான சொல்லாடலை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் ஜேர்மன் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையுடன் பொருந்தி உள்ளது. அவை, ஜேர்மனியின் இராணுவக் கட்டுப்பாடுகளின் தசாப்தங்களை நிறைவு செய்வதற்குரிய தருணம் இது என்று ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரான்ங்-வால்டர் ஸ்ரைன்மையரின் பிரகடனங்களுடன் நெருக்கமாக பிணைந்துள்ளன. ஜேர்மன் இராணுவவாதத்தைப் புதுப்பிப்பதற்கு, நாஜி கால குற்றங்களைக் குறைத்துக்காட்டும் ஒரு புதிய வரலாற்றுப் பொருள்விளக்கம் அவசியப்படுகிறது,” என்று குறிப்பிட்டது.

மாணவர் மன்றத்தின் மீதான அவரின் ஒடுக்குமுறையோடு சேர்ந்து, குன்ஸ்ட் இந்த திட்டநிரலின் ஓர் ஆதரவாளர் என்பதும் முழுமையாக அம்பலமாகி உள்ளது. ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் தலைவராக சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதியின் நியமனம் ஒரு திட்டமிட்ட அரசியல் முடிவு என்பது இப்போது தெளிவாகிறது. பார்பெரோவ்ஸ்கியின் அதிவலது வலையமைப்பைப் பாதுகாப்பதும், ஜேர்மன் இராணுவவாதத்தைப் புதுப்பிப்பதற்காக வேகப்படுத்தப்பட்ட முனைவும், மற்றும் மாணவர்களிடையே இதற்கு எழும் அனைத்து எதிர்ப்புகளையும் ஒடுக்குவதும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டுள்ளன.

போட்ஸ்டாம் பல்கலைக்கழக தலைவராகவும் மற்றும் பிராண்டன்பேர்க் SPD - இடது கட்சி அரசாங்கத்தில் விஞ்ஞானத்துறை அமைச்சராகவும் ஏற்கனவே பதவிகளை வகித்துள்ள குன்ஸ்ட், பல்கலைக்கழகங்களில் வலதுசாரி மற்றும் இராணுவவாத போக்குகளின் செல்வாக்கைப் பலப்படுத்தியவராவார். 2015 இல், ஜேர்மன் இராணுவ ஆய்வு திட்டமான "போர் மற்றும் மோதல் ஆய்வுகள்" என்பதன் பேராசிரியராக அவர் Sönke Neitzel ஐ நியமித்தார். முன்ங்லெர் மற்றும் பார்பெரோவ்ஸ்கியைப் போலவே, Neitzel உம் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களைப் பூசிமொழுகி புதியவற்றிற்குத் தயாரிப்பு செய்வதற்காக முதலாம் மற்றும் இரண்டாம் உலக போரின் வரலாற்றை திரும்ப எழுதுவதற்காக திட்டமிட்டு பணியாற்றுகிறார். “நாஜி ஜேர்மன் இராணுவத்திடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்?” என்ற தலைப்பில் Zeit Geschichte சஞ்சிகையின் ஒரு சமீபத்திய பேட்டியில் அவர் இரண்டாம் உலக போர் காலத்திற்குப் பிந்தைய ஜேர்மன் படையின் இராணுவத் தலையீடுகள் குறித்து குறிப்பிடுகையில் நாஜி ஜேர்மன் சிப்பாய்களின் பாரம்பரிய பாத்திரத்தை முன்வைத்து புகழ்ந்துரைத்தார்.

மகா கூட்டணியின் வலதுசாரி செயல்திட்டம்

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் குன்ஸ்டின் நடவடிக்கைகள், மகா கூட்டணியின் வலதுசாரி திட்டநிரல் மற்றும் அதனுடனான SPD இன் பாத்திரத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த மகா கூட்டணியைத் தொடர்வதற்கு முடிவெடுத்ததன் மூலமாக, அது அதிவலதின் செல்வாக்கைப் பலப்படுத்துவதற்காகவும் மற்றும் நடைமுறையில் அதன் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும், கடந்த ஆண்டின் கூட்டாட்சி தேர்தலில் வெறும் 12.6 சதவீதம் மட்டுமே ஜெயித்திருந்த AfD ஐ உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக ஆக்க நனவுபூர்வமாக தேர்வு செய்தது. பாதுகாப்பு செலவினங்களின் இருமடங்கு அதிகரிப்பு, ஐரோப்பா எங்கிலும் கடுமையான சமூக செலவின வெட்டுக்கள், மற்றும் அகதிகள் மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றுடன், போலிஸின் ஒடுக்குமுறை அதிகாரத்தைப் பலப்படுத்துவது மற்றும் எந்தவொரு உள்நாட்டு இடதுசாரி அல்லது சோசலிஸ்ட் எதிர்ப்பையும் ஒடுக்குவது ஆகியவையும் இந்த மகா கூட்டணி வேலைத்திட்டத்தின் மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.

உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவரின் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம்) முன்னுரையுடன் ஒரு சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஜேர்மனியின் உள்நாட்டு இரகசிய சேவையினது (Verfassungsschutz) தற்போதைய அறிக்கை, AfD இன் கட்சி தலைமையகத்திலிருந்து வந்த ஓர் ஆவணம் போல் உள்ளது. “இடதுசாரி தீவிரவாதிகள்" என்று கூறப்படுபவர்களால் AfD “பாதிக்கப்பட்டிருப்பதாக" சித்தரிக்கப்படுவதுடன், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) "கண்காணிப்பின் கீழ் இருப்பவைகளில்" இரகசிய சேவையால் உத்தியோகபூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் "குற்றம்" “இடதுசாரி தீவிரவாத” வன்முறை அல்ல, மாறாக "தேசியவாதம் என்று கூறப்படுவதற்கு எதிராகவும், ஐரோப்பிய ஒன்றியம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராகவும், 'முதலாளித்துவத்தை' ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவதூறு செய்து, நடப்பிலுள்ள அரசு மற்றும் சமூக ஒழுங்கிற்கு" எதிராக அதன் சோசலிச வேலைத்திட்டத்தை மக்களிடையே அறிவுறுத்துவதே அதன் குற்றமாக உள்ளது.

1920 கள் மற்றும் 1930 களுக்கு இணையான சமாந்தரங்கள் மலைப்பூட்டுகின்றன. முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி, அதீத சமூக சமத்துவமின்மை மட்டங்கள், பிரதான சக்திகளுக்கு இடையே அதிகரித்து வந்த மோதல்களுக்கு அப்போதும் ஆளும் உயரடுக்கு ஜனநாயக-விரோத சர்வாதிகார ஆட்சி வடிவங்களைக் கொண்டே விடையிறுத்தது. அது, மக்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்புக்கு எதிராக அவர்களின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை அமலாக்க அதிவலது சக்திகளின் வளர்ச்சியைத் திட்டமிட்டு தூண்டிவிட்டு வருகிறது.

ஹிட்லர் 1933 இல் மக்கள் ஆதரவு அலையின் மீதேறி அதிகாரத்திற்கு வரவில்லை, மாறாக அரசியல், வணிகம் மற்றும் இராணுவத்தின் செல்வாக்குமிக்க நபர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சூழ்ச்சி வழிவகைகள் மூலமாக அதிகாரத்திற்கு வந்தார். 1932 நாடாளுமன்ற தேர்தல்களில் நாஜிக்கள் மிகப்பெரியளவில் தோல்வி அடைந்து நெருக்கடியில் சிக்கியதும், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் மத்திய கட்சியின் (Centre Party) ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜனாதிபதி பௌல் வொன் ஹின்டென்பேர்க் தான் 30 ஜனவரி, 1933 இல் ஹிட்லரை சான்சிலராக நியமித்தார். அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், முதலாளித்துவக் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் வழிவகை சட்டத்திற்கு (Enabling Act) வாக்களித்தன, அதுவே நாஜிக்களின் பயங்கரவாத ஆட்சிக்கான அடித்தளத்தை அமைத்தளித்தது.

இன்றோ, ஆளும் உயரடுக்கின் அரசியலில் அதிவலதின் செல்வாக்கு பரந்த பெரும்பான்மை மக்களின் கண்ணோட்டங்கள் மற்றும் கருத்தோட்டங்களுடன் முன்பினும் அதிகமாக முரண்பட்டு நிற்கிறது. AfD க்கு பெருந்திரளான மக்கள் அடித்தளம் கிடையாது, மாறாக அது ஆழ்ந்த விரோதத்துடன் பார்க்கப்படுகிறது. மே மாதம், பேர்லினில் பத்தாயிரக் கணக்கானவர்கள் AfD இன் ஒரு பேரணிக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர், AfD ஆல் அதன் பேரணியில் நாடெங்கிலும் இருந்து வெறும் 2,000 ஆதரவாளர்களை மட்டுமே அணித்திரட்ட முடிந்திருந்தது. வேலையிடங்களிலும் பல்கலைக்கழகத்திலும், AfD மற்றும் ஆளும் உயரடுக்கின் வலதுசாரி கொள்கைகள் வெறுக்கப்படுகின்றன. ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, மக்களில் 67 சதவீதத்தினர் ஜேர்மன் அரசியலின் வலதுசாரி மாற்றம் குறித்து கவலை கொண்டுள்ளனர்.

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் தீவிர வலதுசாரி சதியை நிறுத்து!

குன்ஸ்டின் அச்சுறுத்தல்களுக்கு மாணவர்கள் அடிபணியக் கூடாது, மாறாக ஒரு பலமான எதிர்-தாக்குதலை ஒழுங்கமைக்க வேண்டுமென IYSSE அனைத்து மாணவர்களையும் வலியுறுத்துகிறது. முதலாம் மற்றும் இண்டாம் உலக போர்களுக்கு முன்னர் இருந்ததைப் போல, ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தை, வலதுசாரி தீவிரவாத மற்றும் இராணுவவாத பிரச்சாரத்தின் ஒரு மையமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது. அரசியல்ரீதியில் செயலூக்கமான மாணவர்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டு, ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் வலதுசாரி தீவிரவாத வலையமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்து மாணவர்-தலைமையிலான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட வேண்டும்:

• ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் வலதுசாரி நடவடிக்கைகள் எந்தளவுக்கு மற்றும் யாரால் நிதியியல்ரீதியில் ஆதரிக்கப்படுகிறது?

• பார்பெரோவ்ஸ்கியின் "வலதுசாரி வரவேற்பறை?” க்கு பல்கலைக்கழக அறைகள் வழங்கப்படுகிறதா அல்லது வழங்கப்பட்டதா?

• பார்பெரோவ்ஸ்கி உடன் அக்கூட்டங்களில் வேறு எந்தெந்த ஆசிரிய பணியாளர்கள் பங்கெடுத்தனர்?

• விமர்சனத்திலிருந்து பார்பெரோவ்ஸ்கியைப் பாதுகாப்பது குறித்து மகா கூட்டணிக்கும், அல்லது பேர்லின் அரசில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சி-இடது கட்சி-பசுமை கட்சி கூட்டணிக்கும் மற்றும் குன்ஸ்ட் க்கும் இடையே என்ன விவாதங்கள் நடந்தன?

• இடதுசாரி மற்றும் விமர்சனபூர்வ மாணவர்கள் மீதான ஒடுக்குமுறையானது, முதலாளித்துவம் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் “இடதுசாரி தீவிரவாதம்?” ஆக அதன் அறிக்கையில் விவரிக்கும் உள்நாட்டு இரகசிய சேவையுடன் (Verfassungsschutz) ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறதா?

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் வலதுசாரி சூழ்ச்சியை முறியடிக்க, ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவை எதிர்ப்பின்றி முன்நகர அனுமதிப்பதற்கு தயாராக இல்லாத பல்கலைக்கழக மன்றங்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும், குன்ஸ்ட் மற்றும் பார்பெரோவ்ஸ்கியின் இராஜினாமாவை கோர ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திலும் மற்றும் ஏனைய பல்கலைக்கழகத்திலும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்குமாறு IYSSE முறையிடுகிறது!

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் அபாயகரமான அபிவிருத்திகள் குறித்து தொழிலாளர்களுக்குத் தெரியப்படுத்தவும், போர், முதலாளித்துவம் மற்றும் பாசிசவாதத்திற்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு அவர்களை வென்றெடுக்கவும் தொழிலாள வர்க்கத்திடையே ஆதரவை அணிதிரட்டுவதே பிரதான பணியாகும். IYSSE மற்றும் SGP ஐ தொடர்பு கொள்ளுங்கள், இப்போராட்டத்தை ஒழுங்கமைக்க உதவுங்கள்!

போரும் பாசிசமும், மீண்டும் ஒருபோதும் வேண்டாம்!

கல்வி உதவித்தொகையே வேண்டும், போர் பிரச்சாரம் வேண்டாம்!

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் குன்ஸ்ட், பார்பெரோவ்ஸ்கி மற்றும் வலதுசாரி தீவிரவாத சூழ்ச்சியை நிறுத்து!