ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Police charge pro-Dalit activists under anti-terrorism laws

இந்தியா: பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் தலித்-ஆதரவு நடவடிக்கையாளர்களை பொலிஸ் குற்றம்சாட்டுகிறது

By Kranti Kumara 
6 September 2018

இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கத்திற்கும் மற்றும் அதன் நச்சுத்தன்மை வாய்ந்த இந்துத்துவா (இந்து மேலாதிக்கவாத) சித்தாந்தத்திற்கும் எதிரான எதிர்ப்பை ஒடுக்க நோக்கம் கொண்டு, மகாராஷ்டிர மாநில பொலிசார், ஆகஸ்ட் 28 அன்று, நாடு முழுவதிலுமாக ஆறு வேறுபட்ட நகரங்களிலுள்ள ஏழு இடதுசாரி நடவடிக்கையாளர்களின் வீடுகளில் புகுந்து திடீர் மற்றும் சட்டவிரோதமான சோதனைகளை நடத்தினர். இந்த ஏழு பேரும், தலித்துக்கள் (முன்னாள் “தீண்டத்தகாதவர்கள்”) மற்றும் ஆதிவாசிகள் (இந்திய பழங்குடியினர்) போன்றவர்களின் உரிமைக்காக வாதிடும் பிரபல வழக்கறிஞர்கள் ஆவர்.

ஏப்ரல் / மே 2019 ல் நடைபெறவுள்ள தேசியத் தேர்தல்களில் பிஜேபி ஒரு பெரும் பின்னடைவை சந்தித்து பாதிப்படையக்கூடும் என்ற நிலையில், சமூக சமத்துவமின்மை, மலிவு-கூலி வேலைகள், சுற்றுச்சூழல் பேரழிவு, மற்றும் அரசாங்க வட்டாரங்களில் வளர்ந்துவரும் அச்சம் ஆகியவற்றிற்கு எதிராக அதிகரித்துவரும் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தத் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இழிபுகழ்பெற்ற, “பயங்கரவாத-எதிர்ப்பு” சட்டமான, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 2012 இன் கீழ், இலக்கு வைக்கப்பட்ட 7 பேரில் 5 பேரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், இச்சட்டம், குற்றம்சாட்டப்பட்டவர்களின் நடவடிக்கை சுதந்திரத்திற்கு பல வழிகளில் இடையூறாக உள்ளது. இந்தியாவின் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், அவர்களது கைதுகளின் சட்டபூர்வ தன்மை பற்றிய விசாரணை நிலுவையிலுள்ளதால் ஐந்து பேரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த திடீர் சோதனைகளும் கைதுகளும் ஒரு தேசியளவிலான கண்டனத்தைத் தூண்டியுள்ளன, மேலும், காங்கிரஸ் கட்சி, மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் ஏனைய முக்கிய கட்சிகள் உட்பட, முதலாளித்துவ எதிர்ப்பும் இதனுடன் இணைந்துள்ளது. இந்த கைதுகளை, “பேச்சு சுதந்திரம் மீதான ஒரு தாக்குதல்” என்றும், “அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படையை கீழறுக்கும் ஒரு செயல்” என்றும் இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா குணாம்சப்படுத்தியுள்ளார்.

இடதுசாரி எதிர்ப்பாளர்களைக் குற்றம்சாட்டவும், அவர்களது வன்முறை மிகுந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்தவும் அதிகாரிகள் வழமையாக பிரயோகிக்கும் ஒரு வாசகமாக, அந்த ஐந்து பேரையும் “நகர்ப்புற மாவோயிஸ்டுகள்” என்று பொலிசார் முத்திரை குத்தியுள்ளனர். (பல தசாப்தங்களாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மற்றும் அதன் முன்னோடி அமைப்புகளும் இந்தியாவின் அணுகமுடியாத வனப் பகுதிகளில் கிளர்ச்சியை அதிகரித்து வந்துள்ளன.)

டிசம்பர், 2017ம் மாதத்தில் கடைசி நாளன்று, மகாராஷ்டிராவின் இரண்டாவது பெரிய நகரமான புனேயில் நடத்தப்பட்ட எல்கார் பரிஷத் (Elgaar Parishad) (எழுத்துவழக்கில் “போர்-முழக்க மாநாடு”) என்ற தலைப்பிலான ஒரு தலித்-சார்பு மாநாட்டை இந்த ஐந்து பேரும் ஒழுங்கமைத்தனர் என்பதே அந்த அதிகாரிகளின் தவறான கூற்றுக்களாகும். அதாவது, வன்முறையைத் தூண்டுவதற்காக இந்த மாநாட்டை அவர்கள் பயன்படுத்தினர் என்றும், புனேயில் இருந்து வட-கிழக்காக சுமார் 30 கிமீ தொலைவிலுள்ள ஒரு சிறிய கிராமமான பீமா கோரேகானில் அடுத்த நாளில் நிகழ்த்தப்பட்ட ஒரு கலவரத்தின் முக்கிய தூண்டுதல்காரர்களாக அவர்கள் இருந்தனர் என்றும் இந்த ஐந்து நடவடிக்கையாளர்கள் மீது அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உண்மையில், இந்து வகுப்புவாதிகளால் தான் இந்தக் கலவரம் தூண்டிவிடப்பட்டிருந்தது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு சதிதிட்டம் தீட்டப்பட்ட கடிதம் ஒன்று கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரது மடிக்கணினியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது எனவும் பொலிசார் கூறினர். இந்தக் கூற்று, புனையப்பட்ட ஆதாரங்களுக்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக, 13 மாருதி சுசூகி தொழிலாளர்களை ஜோடிப்பு கொலைக் குற்றச்சாட்டுக்களில் சிக்கவைத்து, பின்னர் முடிவில் அது நிரூபணமானது உட்பட, போலியான ஆதாரங்களைப் புனைவதில் இந்திய பொலிசார் இழிபுகழ் பெற்றவர்கள் என்பது தெரிந்ததே.

அமெரிக்காவில் பிறந்த சுதா பரத்வாஜ், ஒரு வழக்கறிஞரும் தொழிற்சங்கவாதியும் ஆவார்; கௌதம் நவ்லகா, இவர் Economic and Political Weekly வார இதழுக்காக பல தசாப்தங்களாக பங்காற்றிய, ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் (People’s Union for Democratic Rights) தலைவர் ஆவார்; ஒரு தொழிலாளர் ஆர்வலரான வெர்னோன் கோன்சல்வேஸ்; எழுத்தர் அருண் பெர்ரெய்ரா; மற்றும் 78 வயதான கவிஞர் வரவரா ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். இதில் கடைசியாக குறிப்பிடப்பட்டவர் தான், மவோயிச “மக்கள் யுத்தம்” மீதான தனது அனுதாபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியவர் என்றாலும், கிளர்ச்சியுடன் எந்தவிதத்திலும் அவரை தொடர்புபடுத்தக்கூடிய நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவுமில்லை.

அவர்கள் அனைவரும் தங்களது நடவடிக்கைகளுக்காக பொலிஸ் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தலுக்கு நீண்டகாலமாக உட்படுத்தப்பட்டுள்ளனர். அதிலும் அவர்களை நீண்டகால சிறைவாசத்திற்கு இட்டுச்செல்லும் அளவிற்கு ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில், முன்னதாகவே அவர்களில் பலரும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் மற்றும் / அல்லது  குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து பேருக்கு எதிரான பொலிசாரின் கதை முன்வைக்கப்பட்டு கிட்டத்தட்ட உடனடியாக அதன் குட்டு வெளிப்படத் தொடங்கியது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி P.B. சாவந்த் மற்றும் ஓய்வுபெற்ற மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி B.G. கோல்சே-படில் ஆகிய இரண்டு முக்கிய இந்திய நீதிபதிகளும், ஐந்து பேர் கைது செய்யப்பட்டு அடுத்த நாளில் அவர்கள் நடத்திய ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “பேச்சு சுதந்திரம் மீதான ஒரு தாக்குதல்” என்று இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், எல்கார் பரிஷத் நிகழ்ச்சியின் முக்கிய ஒழுங்கமைப்பாளர்களாக அவர்கள் இருந்ததையும் அடையாளம் காட்டினர்.

நீதிபதி கோல்சே-படில் பின்வருமாறு வலியுறுத்தினார்: “வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவது குறித்த செய்தியை பரப்புவதற்கான எளிமையான நோக்கத்துடன் தான் எல்கார் பரிஷத் ஐ நாங்கள் ஏற்பாடு செய்தோம் என்பதை ஆரம்பத்தில் இருந்து நாங்கள் வெளிப்படையாக கூறி வருகிறோம்.”

இந்தியாவின் தினசரி செய்தித்தாளான Hindu வுக்கு அளித்த பேட்டியில் நீதிபதி சாவந்த் பினவருமாறு தெரிவித்தார்: “கைது செய்யப்பட்டுள்ள மற்றும் டிசம்பர் 31, 2017 அன்று நடத்தப்பட்ட எல்கார் பரிஷத் மாநாட்டுடன் தொடர்புடைய அனைவரும் அதன்மூலம் எதையும் செய்துவிடவில்லை. ஒருபோதும் எல்காரின் ஒரு பகுதியாக அவர்கள் இருந்ததும் இல்லை. அவர்கள் பரிஷத் ஐ ஏற்பாடு செய்தவர்களும் இல்லை. நீதிபதி கோல்சே-படிலும் நானும் தான் அந்த மாநாட்டை ஒழுங்கமைப்பதில் பிரதானமாக இருந்தவர்கள். கைது செய்யப்பட்ட எந்தவொரு நபருடனும் நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ எந்தவித தொடர்பையும் நாங்கள் கொண்டிருந்ததில்லை.

கோல்சே படில் குறிப்பிட்டது போல, இந்த மாநாட்டின் கருப்பொருள் என்பது இந்து வலதையும் – அதாவது, பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான இந்து இனவாத அமைப்புகளின் இணைவையும் – மற்றும் இந்தியாவை ஒரு “இந்து தேசமாக” மாற்றம் செய்வதற்கான அவர்களது உந்துதலையும் எதிர்க்கத் தேவையாக இருந்தது. மோடியும் அவரது அரசாங்கமும், இந்தியாவின் கல்வி மற்றும் கலை நிறுவனங்களில் இந்துத்துவ சிந்தனையாளர்களை திட்டமிட்டு நியமித்து வருவதுடன், அத்தகைய அமைப்பு ஒன்றின் தலைவரான மகந்த் யோகி ஆதித்யநாத்தை நாட்டின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தின் முதலமைச்சராக நியமித்தது உட்பட, இந்து வகுப்புவாத கண்காணிப்பு அமைப்புகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தியுள்ளனர். மேலும், பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில், இந்து வகுப்புவாதிகள், முஸ்லீம்கள் மற்றும் தலித்துக்களை இலக்கு வைத்து விசாரணையின்றி கும்பலாக கொலை செய்வது எளிதில் புலனாகா வண்ணம் மோடி குருடராக மாறியுள்ளார்.

எல்கார் பரிஷத் இன் இந்துத்துவ-எதிர்ப்பு கருத்தாக்கத்தால் எரிச்சலடைந்து, சுமார் 1,500 பேர் கொண்ட கும்பலை அணிதிரட்டி, ஜனவரி 1, 2018 அன்று பீமா கோரேகானில் நடந்த ஒரு தலித் கூட்டத்தை வன்முறைரீதியில் கலைப்பதற்கு அவர்களை ஊக்கப்படுத்தியதாக மனோகர் ‘சாம்பாஜி’ பிதே மற்றும் மிலிந்த் எக்போதே என்ற இரண்டு இந்து தீவிரவாதத் தலைவர்களை பொலிஸ் அடையாளம் கண்டுகொண்டது.

பிடே, பிஜேபி உடன் மட்டுமல்லாமல், மோடி உடனும் நேரடித் தொடர்புகளைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2014 தேர்தல் பேரணி ஒன்றில், பிடே பற்றி குறிப்பிடுகையில் அவரை மதிப்பிற்குரிய “குருஜி” (ஆசான்) என்ற வார்த்தையை மோடி பயன்படுத்தியதுடன், அவர் தனக்கு உத்வேகமளிப்பவராக இருந்தார் எனவும் தெரிவித்தார்.

தாக்கப்பட்டபோது, பீமா கோரேகானில் தலித்துக்கள் ஒன்றுகூடி மீண்டும் போராடத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்த கைகலப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த ஐந்து இடதுசாரி நடவடிக்கையாளர்களையும், மற்றும் பிடே மற்றும் எக்போதே என்ற இந்து தீவிரவாதத் தலைவர்களையும் பொலிஸ் நடத்திய விதத்தில் ஒரு தெளிவான வேறுபாடு இருந்தது. இதில் முதலில் குறிப்பிடப்பட்டவர்கள் ஜோடிக்கப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுக்களையும், அது தொடர்பான விரைவு விசாரணைகள் மற்றும் நீண்டகால சிறைதண்டனை விதிப்பு குறித்த அச்சுறுத்தலையும் எதிர்கொண்டனர். ஆனால் அதே நேரத்தில், மார்ச் மாதத்தில் எக்போதே சிறிதுநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதுடன், மிகக் குறைந்த கடுமைத்தனம் கொண்ட குற்றவியல் குற்றச்சாட்டுக்களையே அவர் எதிர்கொண்டார். பிடே ஐ பொறுத்தவரை ஒருபோதும் அவர் கைது செய்யப்படவும் இல்லை.

“வகுப்புவாத சச்சரவை உருவாக்கும் வழமையான-குற்றவாளிகள்” என அவர்களை விவரித்தும், மேலும் பீமா கோரேகானில் வன்முறைகளைத் தூண்டுவதில் அவர்கள் முக்கிய பொறுப்பாளிகளாக இருந்தனர் என்ற வகையில் அவர்கள் வன்முறை பிற்போக்குவாதிகள் என்பதை புனே பொலிசார் கூட ஒப்புக்கொண்டனர்.

டிசம்பர் 31 / ஜனவரி 1   ஆகிய தேதிகளில் ஒன்றுகூடலானது, பீமா கோரேகானில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு சேவையாற்றிய பெரும்பாலும் தலித்-மோஹர்களை உள்ளடக்கியதான சுமார் 850 பேர் கொண்ட ஒரு சிறிய படை, பிராமண பேஷ்வா இராஜவம்சத்தின் 28,000 பேர் கொண்ட ஒரு வலிமைமிக்க படையைத் தோற்கடித்த ஒரு போரின் 200வது ஆண்டு தினத்தைக் கொண்டாடின.

உயர்சாதி அரசன் மீதான கொடூரமான பிரித்தானிய காலனித்துவப் படைகள் பெற்ற, தலித்துகளின் தைரியத்திற்கே உரித்தான, இந்த வெற்றியானது, உயர்சாதியினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட அவமானங்களுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒரு வெற்றியாக அம்பேத்கரிய இயக்கத்தோடு தொடர்புடைய நடுத்தர வர்க்க நடவடிக்கையாளர்களால் அரசியல் ரீதியாக விளக்கப்பட்டு வந்திருக்கிறது. பீமா கோரேகானில் நடந்த ஒரு போருக்கான ஆண்டுவிழா என்பது, “தலித்-பெருமையை” கொண்டாடுவதற்கான மற்றும் வர்க்கப் போராட்டத்திற்கும் சோசலிசப் போராட்டத்திற்கும் நேரெதிரான ஒரு சாதியவாத அரசியலை ஊக்குவிப்பதற்குமான ஒரு வழிமுறையாக உருமாற்றப்பட்டு வந்துள்ளது; இவ்வாறாக, இந்தியாவின் மிகவும் வறிய பரந்தளவில் சமமற்ற பிரிவினராகவுள்ள ஏழை முஸ்லீம்களுடன் சேர்ந்து, தலித் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் மனதில் பெரும் அரசியல் குழப்பம் விதைக்கப்படுகிறது.

தலித்-ஆதரவு நடவடிக்கையாளர்களுக்கு எதிராக பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தை பிரயோகித்து கடந்த மூன்று மாதங்களில் பொலிஸ் நடத்திய கைது நடவடிக்கைகளில் இரண்டாவதாக கடந்தவார நடவடிக்கை இருந்தது. ஜூன் 6 அன்று, பொலிசார் திடீர் சோதனை செய்து இன்னும் 5 ஏனைய நடவடிக்கையாளர்களையும் இதேபோன்ற “குற்றங்களை” சுமத்தி முன்னரே கைது செய்துள்ளனர். ஆனால், ஆகஸ்ட் 28 அன்று கைது செய்யப்பட்டவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது போலல்லாமல், ஜூன் மாதம் கைது செய்யப்பட்டவர்களோ இன்னும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து பேரை வீட்டுக் காவலில் வைத்திருப்பதை வரையறுக்கவும், அவர்களது கைதுகளை தடுக்கும் ஒரு நோக்கத்துடன் அடுத்தகட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டு, உச்ச நீதிமன்றம் அதன் ஆகஸ்ட் 29 ஆணையில், ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கிற்கு எதிராக பிஜேபி இன் எதேச்சாதிகார நடவடிக்கைகள் எதிர் தாக்குதல் நிகழ்த்தக்கூடும் என்று கவலையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், “கருத்துமாறுபாடு” என்பது ஜனநாயகத்திற்கான ஒரு பாதுகாப்பு வால்வு ஆகும் என்றும், இந்த பாதுகாப்பு வால்வுகளை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், அது வெடித்துவிடும்” என்றும் நீதிமன்றம் அறிவித்தது. 

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

Journalist who exposed Hindu right assassinated in Bangalore
[9 September 2017]