ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A record $31.5 trillion hoarded by corporate oligarchs

பெருநிறுவன செல்வந்த தன்னலக்குழுக்கள் சாதனையளவுக்கு 31.5 ட்ரில்லியன் டாலரைப் பதுக்கிக் கொண்டன

Eric London
8 September 2018

உலகின் மிக அதீத செல்வவளம் குறித்த 2018 Wealth-X அறிக்கை தகவல்களின்படி, குறைந்தபட்சம் 30 மில்லியன் டாலர் செல்வவளத்துடன் “மிக அதீத நிகர சொத்துமதிப்பு" (UHNW) பிரிவில் உள்ள 255,810 பேர் இப்போது ஒட்டுமொத்தமாக 31.5 ட்ரில்லியன் டாலரை வைத்திருக்கின்றனர். இது 2016 மற்றும் 2017 க்கு இடையே 16.3 சதவீத அதிகரிப்பாகும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிளேனோ, டெக்சாஸ் அல்லது நோட்டிங்காம், இங்கிலாந்து மக்கள்தொகை எண்ணிக்கைக்கு சமமான ஒரு செல்வந்த குழு உலகின் மிக வறிய 80 சதவீத மக்களை விட — அதாவது, சுமார் 5.6 பில்லியன் மக்கள் வைத்திருப்பதை விட அதிகமான செல்வவளத்தைக் கொண்டிருக்கிறது.

செல்வவள திரட்சியின் இந்த புள்ளிவிபரங்களின் ஆழங்காண்பதே கடினமானது:

* வட அமெரிக்காவில், UHNW நபர்களின் மொத்த எண்ணிக்கை 9.5 சதவீதம் உயர்ந்து 90,440 ஆக அதிகரித்தது, அவர்களின் செல்வவளம் 13.1 சதவீதம் உயர்ந்து 11 ட்ரில்லியன் டாலரை எட்டியது.

* ஐரோப்பாவில், UHNW நபர்களின் எண்ணிக்கை 12.8 சதவீதம் அதிகரித்து 72,570 ஆக உயர்ந்தது. அவர்களின் மொத்த செல்வவளம் 13.5 சதவீத அதிகரிப்புடன் 8.8 ட்ரில்லியன் டாலரை எட்டியது.

* ஆசியாவில், 2017 இல் 68,970 UHNW நபர்கள் இருந்தனர், இது 2016 ஐ விட 18.5 சதவீதம் அதிகமாகும். இவர்களின் செல்வவளம் இந்த காலக்கட்டத்தில் 26.7 சதவீதம் உயர்ந்து, 8.4 ட்ரில்லியன் டாலரை எட்டியது.

* 2022 க்குள், UHNW நபர்களின் எண்ணிக்கை 360,390 ஆக உயருமென்றும், இவர்களின் ஒட்டுமொத்த செல்வவளம் "44.3 ட்ரில்லியன் டாலராக உயருமென்றும், இத்துடன் அடுத்த ஐந்தாண்டுகளில் புதிதாக உருவாக்கப்படும் செல்வவளத்தில் கூடுதலாக 12.8 ட்ரில்லியன் டாலரும் இதில் உள்ளடங்கி இருக்குமென்றும் எதிர்நோக்கப்படுகிறது.”

* 1 மில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு கொண்ட 22.3 மில்லியன் மக்களிடையே, மொத்தம் 91.7 ட்ரில்லியன் டாலர் இருக்கும், இது உலக மக்கள்தொகையில் மிக வறிய 90 சதவீதத்தினரின் ஒருங்கிணைந்த செல்வவளத்தை விட ஏறத்தாழ மூன்று மடங்காகும்.

செல்வவள திரட்சியின் அதிகரிப்பானது உலகெங்கிலும் அனைத்து அரசாங்கங்களாலும் நடத்தப்பட்ட திட்டமிட்ட கொள்கைகளின் விளைவு என்பதை Wealth X அறிக்கை தெளிவுபடுத்துகிறது. சீனாவில் சந்தை தாராளமயமாக்கல், இந்தியாவில் வரி சீர்திருத்தம் மற்றும் பெருநிறுவனங்கள் மீதான நெறிமுறைகள் தளர்த்தப்பட்டமை, அமெரிக்காவில் செல்வந்தர்களுக்கான பாரிய வரி வெட்டுக்கள் என இலகுவான நிதிக் கட்டுப்பாட்டு கொள்கைக்கு இந்த அறிக்கை நன்மதிப்புகளை வழங்குகிறது, இந்த அறிக்கையின் குறிப்புகள் "பெருநிறுவனங்கள் மற்றும் மிக அதீத செல்வந்தர்களுக்கு வெளிப்படையாகவே தாராளமான விதிவிலக்குகளை வழங்கும் நோக்கில்" உள்ளன.

விஞ்ஞானபூர்வ சோசலிசத்தின் ஸ்தாபகரான கார்ல் மார்க்ஸ், அவரின் மூலதனம் நூலின் முதல் தொகுதியில், பின்வருமாறு எழுதினார்: “ஒரு துருவத்தில் செல்வவளத்தின் திரட்சியானது, அவ்விதத்தில், அதேநேரத்தில் எதிர் துருவத்தில், வறுமை, மரண வேதனையான உழைப்பை உறிஞ்சும் அடிமைத்தனம், அறியாமை, காட்டுமிராண்டித்தனம், உளவியல்ரீதியான சீரழிவின் திரட்சியாக இருக்கும்.”

முதலாளித்துவத்தின் கீழ், பெரும் செல்வந்தர்களின் செல்வவளம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதிலிருந்து வருகிறது.

* உலகின் பாதி நபர்களுக்கு மருத்துவ வசதி இல்லை, 100 மில்லியன் நபர்களாவது மருத்துவச் செலவுகளின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அதீத வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள். (உலக சுகாதார அமைப்பு, 2017)

* 1.2 பில்லியன் நபர்களுக்கு மின்சார வசதி இல்லை (ரோக்பெல்லர் அமைப்பு, 2017).

* 2 பில்லியன் மக்கள் மாசு கலந்த குடிநீர் ஆதாரத்தைப் பயன்படுத்துகின்றனர் (உலக சுகாதார அமைப்பு, 2018).

* போதிய மருத்துவ வசதி இல்லாமல் அல்லது மோசமான மருத்துவ வசதியால் ஒவ்வொரு ஆண்டும் 8.6 மில்லியன் மக்கள் மரணிக்கிறார்கள். (The Lancet ஆய்வறிக்கை, 2018).

* வயதுவந்த 750 மில்லியன் நபர்களுக்கு எழுதப் படிக்க தெரியாது (யுனெஸ்கோ, 2017).

* 2020 க்குள், 1.6 பில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான, போதிய வீட்டுவசதி இருக்காது (உலக ஆதாரவள ஆய்வு பயிலகம், 2017).

* 5 வயதுக்கு கீழ் இருக்கும் 50.5 மில்லியன் குழந்தைகள், ஊட்டச்சத்து காரணமாக "வீணாக்கப்படுகின்றனர்" (உலக வங்கி, 2018).

* 850 மில்லியன் மக்கள் "நீடித்த ஊட்டச்சத்து குறைபாட்டில்" பாதிக்கப்பட்டுள்ளனர் (ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, 2016).

* 4 பில்லியன் மக்களுக்கு இணைய வசதி இல்லை (யுனெஸ்கோ, 2017).

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் மிகவும் முன்னேறிய நாடுகளிலும் கூட, ஆயுள்காலம் குறைந்து வருவது, அதிகளவிலான தற்கொலை சம்பவங்கள் மற்றும் போதைமருந்து/மது பிரயோகங்கள், அதிகரித்து வரும் மாணவர் கடன்சுமை, வீழ்ச்சி அடைந்து வரும் கூலிகள் மற்றும் சமூக திட்டங்களில் வெட்டுக்களால், தொழிலாள வர்க்கம் அதிகரித்தளவில் படுமோசமான நிலைமைகளை முகங்கொடுக்கின்றது. உலகின் மிக அதீத செல்வந்தர்களில் மூன்றில் ஒரு பங்கினரின் தாயகமாக விளங்கும் அமெரிக்காவில், சுமார் 69 சதவீத மக்கள் மொத்த சேமிப்புகளில் 1,000 டாலருக்கும் குறைவாகவே வைத்துள்ளனர்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவொரு அரசிலோ அல்லது எந்தவொரு முதலாளித்துவ அரசியல் கட்சியிலோ பிரதிநிதித்துவம் இல்லை என்பதோடு, அரசியல் ஸ்தாபகம் பெரும் செல்வந்தர்களின் மேலாதிக்கத்தில் உள்ளது. பில்லியனர்கள் மற்றும் பல கோடி மில்லியனர்களின் "மிக அதீத நிகர சொத்து மதிப்பு" நபர்கள் (UHNW), முற்றிலும் மக்களின் முதுகுக்குப் பின்னால் இருந்து அரசு கொள்கை மற்றும் ஆதாரவளங்களின் பகிர்வு மீது திட்டமிட்ட முடிவுகளை எடுக்கின்றனர்.

கல்வித்துறை, பெருநிறுவன ஊடகங்கள், தொழிற்சங்கங்கள் உட்பட அரசின் உத்தியோகப்பூர்வ மற்றும் அரை-உத்தியோகப்பூர்வ அமைப்புகள் அனைத்தும், நவீன செல்வந்த தட்டுக்களின் நலன்களுக்கு அடிபணிந்து, சமூக சமத்துவத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த இயக்கம் அபிவிருத்தி அடைவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் சேவையாற்றுகின்றன. சமத்துவமின்மை அதிகரிக்கையில், ஆளும் உயரடுக்கு, அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்குவது, இணையத்தைத் தணிக்கை செய்வது, நிரந்தர அவசரகால நெருக்கடி நிலையை ஸ்தாபிப்பது, இனவாதம், வெளிநாட்டவர் விரோத மனோபாவம் மற்றும் தேசியவாதத்தைக் கொண்டு சூழலை நஞ்சூட்டுவதற்காக தீவிர-வலதுசாரி மற்றும் நவ-பாசிசவாத கட்சிகளை மேலுயர்த்துவது ஆகியவற்றின் மூலமாக, சமூக புரட்சி அச்சுறுத்தலுக்கு தயாரிப்பு செய்து வருகின்றது.

எவ்வாறிருப்பினும் தொழிலாள வர்க்கம் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கம் மட்டுமல்ல, அதுவொரு பலமான புரட்சிகர சமூக சக்தியும் ஆகும்.

தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கை அளவைக் குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்குவதற்கு இட்டுச் சென்றுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில், இந்தியா, சீனா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, பிரேசில், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளும் மற்றும் இன்னும் பல நாடுகளும் ஒப்பீட்டளவில் சிறியளவிலான தொழிலாள வர்க்க மக்களைக் கொண்ட நாடுகள் என்பதிலிருந்து பத்து மில்லியன் அல்லது பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பாரிய தொழில்துறை உற்பத்தி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், பூகோளமயமாக்கம் உலகின் ஒவ்வொரு மூலையில் உள்ள தொழிலாளர்களையும் உற்பத்தி நிகழ்வுபோக்கில் ஒன்றாக இணைத்துள்ளது. தொழிலாளர்கள் அவர்களின் வேலையிடங்களிலும் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்தும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதை மற்றும் மூலோபாயங்களை வகுப்பதை இணையம் சாத்தியமாக்கி உள்ளது. இணையத்தின் ஜனநாயக மற்றும் புரட்சிகர சாத்தியக்கூறு காரணமாக, அது உலகெங்கிலுமான ஆளும் வர்க்கத்தால் தணிக்கைக்காக இலக்கில் வைக்கப்படுகிறது. இந்த முயற்சிகளில், உலக சோசலிச வலைத் தளம் போன்ற இடதுசாரி வலைத் தளங்களைத் தேடல் பக்கங்களில் பின்னுக்குத் தள்ளி மறைக்க, அமெரிக்காவை மையமாக கொண்ட பெருநிறுவனங்கள் கூகுள், பேஸ்புக் மற்றும் ட்வீட்டர் ஆகியவை முன்னணியில் உள்ளன.

இந்த Wealth X அறிக்கை தற்போதைய சூழலின் ஆழ்ந்த புரட்சிகர சாத்தியக்கூறைச் சுட்டிக்காட்டுகிறது. பிரெடெரிக் ஏங்கெல்ஸ் டூரிங்கிற்கு மறுப்பு நூலில் எழுதியவாறு:

“இப்போதிருக்கும் சமூக அமைப்புகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை, நேர்மையற்றவை, அந்த பகுத்தறிவு பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக ஆகிவிட்டது, நல்ல விடயங்கள் நோயுற்றவையாகிவிட்டன என்ற அதிகரித்து வரும் கருத்தோட்டமானது, முந்தைய பொருளாதார நிலைமைகளுக்கு உகந்ததாக இருந்த இந்த சமூக அமைப்புமுறையில் உற்பத்தி முறைகளும் பரிவர்த்தனை முறைகளும் சத்தமில்லாமல் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், இவை இனியும் பொருத்தமாக இருக்காது. ஆகவே வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த மோசமான நிலைமைகளில் இருந்து வெளியேறுவதற்கான வழிவகைகளும், மாறியுள்ள இந்த உற்பத்தி முறைகளுக்கு உள்ளேயே, குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ அபிவிருத்தி அடைந்த நிலையில் இருக்கத் தானே வேண்டும்.”

புவியைச் சமத்துவவாத அடித்தளத்தில் மாற்றுவதற்கான ஆதாரவளங்கள் ஏற்கனவே இங்கே இருக்கின்றன என்பதை Wealth X அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

பெரும் செல்வந்தர்களால் அபகரித்து வைக்கப்பட்டுள்ள ட்ரில்லியன்களைப் பெருந்திரளான மக்களுக்காக பறிமுதல் செய்து, உலக மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒதுக்க வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. பாரிய பெருநிறுவனங்களது சுரண்டல் நடவடிக்கைகள் ஒவ்வொரு நாட்டையும் எட்டியுள்ள நிலையில், இவை பறிமுதல் செய்யப்பட்டு, தொழிலாளர்களாலேயே ஜனநாயகரீதியில் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்.

ஒருபோதும் எந்த பிரபுத்துவமும் சர்வசாதாரணமாக அதன் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காது ஏனென்றால் அவற்றின் இருப்பு உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளது. உலக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியப்படும் பத்து ட்ரில்லியன் கணக்கான டாலர்களை விடுவிப்பதற்கு ஒரு சோசலிச புரட்சி அவசியமாகும்.