ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The implications of US-China trade war

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரின் தாக்கங்கள்

Nick Beams
18 September 2018

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக உலக நிதி நெருக்கடிக்குப் பின்னரான சமயத்தில், உலகின் பெரும் நாடுகளது தலைவர்கள், 1930களில் பெருநாசத்துடனான பின்விளைவுகளை -பெரு மந்தநிலையை ஆழப்படுத்தியதோடு 1939 இல் உலகப் போரின் வெடிப்பிலும் பங்களித்திருந்த- கொண்டிருந்த பாதுகாப்புவாதத்தின் பாதையில் மறுபடியும் ஒருபோதும் செல்ல மாட்டோம் என்று உறுதியெடுத்துக் கொண்டனர்.

நேற்று, “ஒரு அமெரிக்க ஜனாதிபதியால் இதுவரை விதிக்கப்பட்டதிலேயே மிகவும் கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளில் ஒன்று” என வாஷிங்டன் போஸ்டால் விவரிக்கப்பட்ட ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 200 பில்லியன் டாலர் மதிப்புக்கான சீனப் பொருட்களின் மீது சுங்கவரிகளை அறிவித்தார்.

10 சதவீத வசூலிப்பு செப்டம்பர் 24 முதலாக விதிக்கப்பட இருக்கிறது, ஒரு திருப்திகரமான உடன்பாடாக அமெரிக்கா கருதக்கூடிய ஒன்று கிட்டாதபட்சத்தில் இது 2019 இல் 25 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட இருக்கிறது. 1000க்கும் அதிகமான பொருட்களை தனக்குக் கீழ் கொண்டுவரக் கூடிய இந்த புதிய வரிகள், ஏற்கனவே 50 பில்லியன் டாலர் மதிப்புக்கான தொழிற்துறை தயாரிப்புகள் மீது விதிக்கப்பட்டிருக்கின்ற 25 சதவீத சுங்கவரிக்கு கூடுதலாக வரும்.

அமெரிக்காவுக்கு எதிரான பதில் வரிவிதிப்புகள் மற்றும் பிற நடவடிக்கைகள் -என்ன நடவடிக்கைகள் என்பது இன்னும் குறிப்பாக கூறப்படவில்லை- உள்ளிட்ட பதிலடி நடவடிக்கைக்கு சீனா அச்சுறுத்தல் விடுத்திருக்கிறது, இதன் அர்த்தம் உலகின் முதலாம் இடத்திலுள்ள பொருளாதாரமும் இரண்டாமிடத்தில் இருக்கும் பொருளாதாரமும் உலகளாவிய பின்விளைவுகளை கொண்ட ஒரு துரிதமாக அதிகரித்துச் செல்லக் கூடிய வர்த்தகப் போரில் முட்டிக் கொண்டு நிற்கின்றன என்பதாகும்.

முடிவை அறிவித்த ட்ரம்ப், “நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள்” என்று அவர் குறிப்பிட்ட ஒன்றை முடிவுக்குக் கொண்டுவருகின்ற “துரித நடவடிக்கை”யில் இறங்க சீனாவுக்கு அழைப்பு விடுத்ததுடன், வர்த்தக மோதலுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

ஆனால் அப்படியானதொரு முடிவு கிட்டுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது, ஏனென்றால் சீனாவுடனான வர்த்தக உபரி குறைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கோரினாலும் கூட, மோதல் வெறுமனே அந்தப் பிரச்சினையில் மட்டும் மையம் கொண்டதாக இல்லை. சீனா அமெரிக்காவில் இருந்தான இறக்குமதிகளை அதிகரிப்பதற்கு முன்வருகின்றபோது, அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. சீன அரசாங்கம், அதன் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டு, உயர்-நுட்ப பொருளாதாரத் துறைகளில் அமெரிக்காவுக்கு கீழ்ப்படிந்ததாகவே தொடர வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

வாஷிங்டன் மே மாதத்தில் விடுத்த நிலைப்பாட்டு அறிக்கை கூறுகின்றவாறாக: “சீனத் தயாரிப்பு 2025 (Made in China 2025) தொழிற்துறை திட்டத்தால் இலக்கு வைக்கப்பட்ட தொழிற்துறைகளில் மிதமிஞ்சிய செயற்திறனை உருவாக்குவதில் அல்லது பராமரிப்பதில் பங்களிக்கக் கூடிய சந்தை-சீர்குலைப்பு மானியங்களை மற்றும் பிற வகையான அரசாங்க ஆதரவை வழங்குவதை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும்.”

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்திற்கு -அவசியமானால் இராணுவ வழிமுறைகளின் மூலமாகவும் கூட அமெரிக்கா பராமரிக்க நோக்கம் கொண்டிருக்கின்ற ஒரு மேலாதிக்கமாகும் இது-  எந்த அச்சுறுத்தலையும் முன்நிறுத்தாத வண்ணம் சீனா அதன் பொருளாதாரத்தின் அத்தனை அடித்தளமான கட்டமைப்புகளையும் முற்றிலுமாக அகற்றி விட வேண்டும். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வாஷிங்டன் சீனாவை ஒரு “மூலோபாய போட்டியாளராக”, அதாவது இராணுவ எதிரியாகத்தக்கவராக, வகைப்படுத்திய போது இது தெளிவாக்கப்பட்டிருந்தது.

உலகளாவிய முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வரலாற்று அபிவிருத்தியின் கட்டமைப்புடன் சேர்த்து பார்க்கும்போது தான் அவற்றின் முழு முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்பட முடியும்.

1930களின் அழிவுகரமான தசாப்தத்திற்குப் பின்னரும், அத்துடன் உலகம் போருக்குள் மூழ்கிய நிலையிலும், உலகம் போட்டியான வர்த்தக மற்றும் பொருளாதார முகாம்களாக பிளவுபட்டிருந்தமை -சுங்கவரி விதிப்புகளும் பிற வர்த்தக கட்டுப்பாடுகளும் இதனை உருவாக்குவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருந்தன- இந்த சூழ்நிலைக்கு காரணமாயிருந்தது கொஞ்சநஞ்சமல்ல என்பதை ரூஸ்வெல்ட் நிர்வாகத்திற்குள் இருந்த முன்னிலை ஆளுமைகள் உணர்ந்திருந்தனர்.

போருக்குப் பிந்தைய திட்டமிடலானது, உலகப் பொருளாதாரத்திற்கும் போட்டியான பெரும் சக்திகளாகவும் முகாம்களாகவும் அது பிளவுபட்டுக் கிடப்பதற்கும் இடையிலான முரண்பாட்டை உலக வர்த்தகம் விரிவாக்கப்படுவதை உறுதிசெய்கின்ற ஒரு பொறிமுறையை அபிவிருத்தி செய்வதன் மூலமாக வெற்றிகாணும் முயற்சியை மையமாகக் கொண்டிருந்தது. போருக்குப் பிந்தைய உடனடி காலத்தில் நிலைநிறுத்தப்பட்ட வரிசையான நடவடிக்கைகளுக்கான -முக்கியமான நாணயமதிப்புகளை டாலருடன் நிர்ணயமான பரிவர்த்தனை விகிதத்தில் பிணைத்திருந்த பிரெட்டன் வூட்ஸ் பண அமைப்புமுறை, வர்த்தகரீதி முட்டுக்கட்டைகளை அகற்றுவதற்கு விழைந்த வரிவிதிப்புகள் மற்றும் வர்த்தகம் மீதான பொது உடன்பாடு (GATT) மற்றும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை உறுதிசெய்வதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை உருவாக்கப்பட்டமை- அடிப்படையாக இது இருந்தது.

ஆயினும் இந்த நடவடிக்கைகள், முதலாளித்துவத்தின் உட்பொதிந்த முரண்பாடுகளை, எல்லாவற்றையும் விட உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடுகளை வென்று விடவில்லை. மாறாக அவை, அமெரிக்காவின் மிதமிஞ்சிய பொருளாதார மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்புமுறைக்குள்ளாக அவற்றை மட்டுப்படுத்தி வைப்பதற்கும் தணித்து வைப்பதற்கும் முனைந்தன.

ஆனால் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் மற்ற பெரிய சக்திகளின் வலிமைப்படலும் அமெரிக்காவின் முற்றுமுதலான மேலாதிக்கம் என்ற இதன் அடித்தளங்களுக்கு குழிபறித்தன. ஒரு தலைமுறை இடைவெளிக்குள்ளாகவே, அமெரிக்க நிலையின் பலவீனப்படல் 1971 ஆகஸ்டில் வெளிப்பட்டது, டாலர் இனியும் தங்கத்திற்காய் மாற்றிக் கொள்ளத்தக்கல்ல என்று அறிவிக்கப்பட்டு பிரெட்டன் வூட்ஸ் பண அமைப்புமுறை அகற்றப்பட்டது.

அதற்குப் பின்வந்த காலகட்டமானது இப்போது நடந்து வருகின்ற அமெரிக்க நிலையிலான பலவீனப்படலை கண்டிருக்கிறது, மிதமிஞ்சிய ஊகவணிகம் மற்றும் முற்றுமுதலான குற்றவியல் நடவடிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சீட்டுக்கட்டுக் கோட்டையாக அமெரிக்க நிதி அமைப்பை காட்டி நின்ற, பத்தாண்டுகளுக்கு முன்பாய் வெடித்த நிதிப் பொறிவில் இது வரைபடரீதியாக வெளிப்பட்டது. இந்த சூழ்நிலை அடுத்து வந்த தசாப்தத்திலும் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதுடன், இன்னுமொரு, இன்னும் கூடுதல் அழிவுகரமான, நிதி நெருக்கடிக்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இப்போது அதன் ஐரோப்பிய எதிரிகளின் பொருளாதார சக்தியை மட்டும் எதிர்த்து நிற்கவில்லை, மாறாக சீனாவின் வடிவத்தில் ஒரு பெரிய புதிய சக்தியையும் எதிர்த்து நிற்கிறது. இந்த சூழ்நிலையை தலைகீழாக்க அது பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. லியோன் ட்ரொட்ஸ்கி சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பாக விளக்கியதைப் போல, அமெரிக்காவின் வல்லாதிக்கமானது எழுச்சி நிலைமைகளை விடவும் ஒரு நெருக்கடியில் அது இருக்கும் சமயத்தில் தான் மிக ஆற்றலுடன் தன்னை நிலைநாட்ட விழையும், தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள அத்தனை எதிரிகளுக்கு எதிராகவும் அத்தனை -பொருளாதார மற்றும் இராணுவ- வழிவகைகளையும் அது பிரயோகிக்கும்.

சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகள் இந்த நிகழ்ச்போக்கின் ஒரேயொரு வெளிப்பாடு மட்டுமேயாகும். உருக்கு மற்று அலுமினியம் மீதான வரிவிதிப்புகள் மூலமாக ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கு எதிராய் அமெரிக்கா ஏற்கனவே பாதுகாப்புவாத நடவடிக்கைகளை நடத்தி விட்டிருக்கிறது, அத்துடன் சீனாவுக்கு எதிரான அதன் முனைப்பில் அவை கைகோர்க்காவிட்டால், கார்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் மீதும் வரிவிதிக்க மிரட்டவும் செய்திருக்கிறது.

சீனா மீது வரிவிதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரிகள் சந்தித்து, ஈரானுடனான அணு ஒப்பந்தம் ஒருதரப்பாக இரத்து செய்யப்பட்டதற்குப் பின்னர் ஈரானுடனான பொருளாதார உறவுகளை அவை தொடர்ந்து பராமரிக்குமாயின் ஐரோப்பிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதிக்கக் கூடிய நிதித் தடைகளை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கின்றனர்.

ஈரான் ஒப்பந்தத்தை மீறியதால் அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை -அது முழுமையாக பின்பற்றி வந்திருந்தது என்பதை சர்வதேச முகமைகள் கண்டன. மாறாக, மத்தியகிழக்கில் ஈரானின் செல்வாக்கை எதிரிடுவதன் மூலமாக அங்கு அமெரிக்காவின் மூலோபாய நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், அத்துடன் ஈரானில் திறக்கும் புதிய பொருளாதார வாய்ப்புகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களே ஆதாயமடையும் நிலை -அவற்றின் அமெரிக்க போட்டியாளர்களை விலைகொடுக்கச் செய்து- இருந்த காரணத்தாலுமே அமெரிக்கா ஒருதரப்பாக இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்து விட்டது.

அமெரிக்க தடைகளை மீறி நடக்கின்ற ஐரோப்பிய நிறுவனங்கள் “இரயில் தண்டவாளங்களின் மீது” நிற்கும் என்றும் “எதிரி”யுடன் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் அமெரிக்க நிதி அமைப்புமுறைக்கு அணுகல் பெறுவதில் இருந்ந்து தடை செய்யப்படும் என்றும் வெளியுறவுத் துறை இப்போது எச்சரித்திருக்கிறது.

1930களில் எழுதுகையில், லியோன் ட்ரொட்ஸ்கி, உலகப் பொருளாதாரத்தில் ஒவ்வொரு நாடும் பரஸ்பர சார்பைக் கொண்டிருப்பதன் அர்த்தமாக இருப்பது என்னவென்றால், பொருளாதார தேசியவாத வேலைத்திட்டமானது -இப்போது ட்ரம்ப் நிர்வாகத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருவதைப் போன்றது- தனியார் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்டு முரணற்ற தேசியப் பொருளாதார அபிவிருத்தியை தனக்கான கடமையாக அது வரித்துக் கொள்கின்ற மட்டத்திற்கு, அது ஒரு பிற்போக்கான “கற்பனாவாதமாக”வே இருக்கும் என்று விளக்கினார்.

“ஆனால் தேசத்தின் அத்தனை பொருளாதார சக்திகளையும் ஒரு புதிய போருக்கான தயாரிப்பில் குவிப்பதான கேள்வியாக அது இருக்கின்ற மட்டத்திற்கு அது ஒரு ஆபத்தான யதார்த்தமாய் உள்ளது” என்று இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவர் எழுதினார்.

சீனாவுக்கு எதிரான, அத்துடன் ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகள் அனைத்துமே “தேசிய பாதுகாப்பு” முகாந்திரங்களின் கீழ் இழுக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மையில், இந்த “ஆபத்தான யதார்த்தம்” மறுபடியும் இப்போது வெளிப்பாடு காண்கிறது. அமெரிக்கா போருக்கு தயாரிப்பு செய்வதைப் போலவே, அத்தனை மற்ற பெரும் நாடுகளும் தயாரிப்பு  செய்து கொண்டிருக்கின்றன. இந்த முனைப்பு முதலாளித்துவ அரசியல்வாதிகளின் தலைகளில் இருந்து உதயமாவதில்லை, அவர்கள் தலைமை வகிக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையின் புறநிலை தர்க்கமும் மற்றும் தீர்க்கமுடியாத முரண்பாடுகளும் அரசியலாக மொழியாக்கப்பட்டதே அவர்களது நடவடிக்கைகள் ஆகும்.  

ஆயினும் அங்கே இன்னுமொரு சக்திவாய்ந்த தர்க்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த உலகளாவிய உற்பத்தியின் அபிவிருத்தி, காலாவதியாகி போன தேசிய-அரசு அமைப்புமுறை அதன் போட்டி பெரும் சக்திகளுடன் கொண்டிருக்கும் முரண்பாட்டை தீவிரத்தின் ஒரு புதிய உச்சிக்குக் கொண்டுவந்திருக்கிறதோ, அதுவே ஒரு திட்டமிட்ட உலக சோசலிசப் பொருளாதாரத்திற்கான அடித்தளங்களையும் அமைத்திருக்கிறது. அது, முன்கண்டிராதவொரு மட்டத்தில் ஐக்கியப்பட்டு நிற்கின்ற சர்வதேச தொழிலாள வர்க்கத்தில், அதனை நடத்தி முடிக்கின்ற சமூக சக்தியை உருவாக்கியிருக்கிறது.

நாகரிகம் முன்னேறிச் செல்ல வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திற்குள்ளாக மூழ்குவது தடுக்கப்பட வேண்டும் என்றால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போராடி வரும் உலக சோசலிச புரட்சிக்கான வேலைத்திட்டத்தைக் கொண்டு தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாகவும் தத்துவார்த்தரீதியாகவும் ஆயுதபாணியாவது எத்தனை அவசர அவசியமாக இருக்கிறது என்பதை ட்ரம்ப்பின் சமீபத்திய வர்த்தகப் போர் நடவடிக்கைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.