ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan President Sirisena sacks prime minister

இலங்கை ஜனாதிபதி சிறிசேன பிரதமரை பதவி நீக்கம் செய்கிறார்

By K. Ratnayake
28 October 2018

வெள்ளிக்கிழமை மாலை, ஒரு அரசியல் சதிக்கு சமமான நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ததோடு அந்த பதவியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அமர்த்தினார்.

அவ்வாறு செய்ததன் மூலம், சிறிசேன, 2015ல் இருந்து நாட்டை ஆட்சி செய்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) அவரது கன்னைக்கும் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (ஐ.தே.க.) இடையேயான "ஐக்கிய அரசாங்கத்துக்கு” முடிவு கட்டினார்.

2015 ஏப்ரலில் சட்டமாக்கப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 19 வது திருத்தமானது, பிரதமரை நீக்குவதற்கு ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க ஜனாதிபதிக்கு உள்ள உரிமை உட்பட, நிறைவேற்று ஜனாதிபதியின் கணிசமான அதிகாரங்களை குறைக்கிறது.

சிறிசேனவும் இராஜபக்ஷவும் அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை மிக நெருக்கமான ஆதரவாளர்கள் தவிர ஏனையவர்களுக்கு கடும் இரகசியமாக வைத்திருந்தனர். ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்கள் மற்றும் தொழிலாளர்களதும் ஏழைகளதும் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சிக்கு மத்தியில் இலங்கை ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் பெரும் அரசியல் நெருக்கடியின் வெளிப்பாடே இந்த சதியாகும்.

புதிய ஆட்சி, அதிகாரத்தில் தனது பிடியை இறுக்கி வருகிறது. அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவானவர்கள் என நம்பப்பட்ட ஊழியர்களை இராஜபக்ஷ-சார்பு குண்டர்கள் வெளியேற்றினர். சிறிசேன உடனடியாக இந்த தொலைக்காட்சி சேவைகள், அரசாங்கத்திற்கு சொந்தமான செய்தித்தாள் மையமான லேக் ஹவுஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார். பொலிஸை கட்டுப்படுத்தும் சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சையும் அவர் எடுத்துக் கொண்டார்.

சிறிசேனவின் நடவடிக்கையை "அரசியலமைப்பிற்கு முரணானது" என வகைப்படுத்திய விக்கிரமசிங்க, தான் இன்னும் பிரதமரே என்று பிரகடனம் செய்ததுடன், "பெரும்பான்மையை நிரூபிக்க" பாராளுமன்றத்தை கூட்டுமாறு அழைப்பு விடுத்தார்.

சிறிசேன இரண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் இதற்கு பதிலளித்தார். முதலாவதாக விக்ரமசிங்கவை அகற்றுவதற்கான தனது முடிவை அவர் உறுதிப்படுத்தினார். இரண்டாவதாக பாராளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்தார். அவர் நாளை இராஜபக்ஷவின் புதிய அமைச்சரவைக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைக்கத் திட்டமிட்டுள்ளார்.

225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஐ.தே.க. தலைமையிலான கூட்டணி 106 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அதேவேளை, சிறிசேன மற்றும் இராஜபக்ஷவும் கூட்டாக 95 உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். 16 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை விக்கிரமசிங்க கணக்கிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) எந்தவொரு குழுவையும் ஆதரிக்காது என அறிவித்துள்ளது.

நேற்று ஸ்ரீ.ல.சு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவிற்கு முன் உரையாற்றிய சிறிசேன, தன்னால் விக்கிரமசிங்கவுடன் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை, ஏனெனில் அரசாங்கம் நிதி மோசடியில் சிக்கியுள்ளது, என்று அறிவித்தார். தன்னைக் “கொலை செய்ய ஒரு சதித்திட்டம்" உள்ளது என்றும் அவர் ஆதாரமற்ற கூற்றுக்களை மேற்கோளிட்டார்.

ஒரு முன்னாள் சிப்பாயும் பொலிசுக்கு தகவல் வழங்குபவருமான நாமல் குமார, செப்டெம்பரில், சிறிசேனவையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோடாபய இராஜபக்ஷவையும் உப பொலிஸ் மா அதிபர் நலக டி சில்வா கொலை செய்யத் திட்டமிட்டிருந்தமை பற்றி, தான் அறிந்திருந்ததாக தெரிவித்தார்.

சிறிசேனவின் குற்றச்சாட்டுகள் அவரது ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் உளுத்துப்போன சாக்குப் போக்காகும். சிறிசேன, இராஜபக்ஷ அல்லது விக்கிரமசிங்கவின் தலைமையிலான, இலங்கை அரசியல் ஸ்தாபனத்தின் எந்தவொரு பிரிவிடமும் எடுப்பதற்கு ஒன்றும் கிடையாது. அவை அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளை அலட்சியம் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை.

இராஜபக்ஷவை பதவியிலிருந்து அகற்றிய 2015 ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே தேசிய ஐக்கிய அரசாங்கம் நிறுவப்பட்டது. 2014 நவம்பரில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரால் வாஷிங்டன் மற்றும் புது டில்லியினதும் உடந்தையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு சதித்திட்டத்தில், இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒரு சிரேஷ்ட அமைச்சராக இருந்த சிறிசேன வெளியேறினார்.

ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தின் அட்டூழியங்கள் சம்பந்தமாகவும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் இருந்த பரந்த எதிர்ப்பை சிறிசேன சுரண்டிக்கொண்டார்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றி அமெரிக்கா கவலைப்படவில்லை. மாறாக அந்த நிர்வாகம் சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவையே எதிர்த்தது. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் உடனடியாக அதன் வெளியுறவு கொள்கையை வாஷிங்டனின் பக்கம் மாற்றிக் கொண்டு, அமெரிக்க மற்றும் இந்திய இராணுவத்துடன் தனது உறவுகளை ஆழமாக்கியது.

ஆனால், இப்பொழுது, விரைவாக மோசமடைந்து வரும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்த நிலையில், நிதி உதவி மற்றும் ஒத்துழைப்புக்காக சீனாவை நோக்கி திரும்ப நிர்பந்திக்கப்பட்டமை, வாஷிங்டனில் இருந்து கடுமையான விமர்சனத்தை தூண்டிவிட்டுள்ளது. அதே நேரம், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்புக் கடனைப் பெறவும், சமூக செலவினங்களையும் விலை மானியங்களையும் வெட்டிக் குறைப்பது உட்பட சிக்கனக் கோரிக்கைகளை செயல்படுத்தவும் அது நிர்ப்பந்திக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே எதிர்ப்பை அதிகரிக்கச் செய்தன. சமீபத்திய மாதங்களில் இரயில், பொது போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் நீர் வாரிய தொழிலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருமாக வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இவை போலி இடது அமைப்புகளின் ஆதரவுடன் தொழிற்சங்கங்களால் தற்காலிகமாக ஒடுக்கப்பட்டன.

கடந்த சில வாரங்களாக, ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் 100 சதவிகித சம்பள உயர்வை கோரி போராட்டங்களை தொடங்கியுள்ளனர். கடந்த புதன்கிழமை, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஒரு பெரிய பேரணியை நடத்துவதற்காக 5,000 இளம் தொழிலாளர்கள் இன வேறுபாடுகள் கடந்து ஐக்கியப்பட்டனர்.

இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் சீரழிந்து வரும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக வடக்கில் தமிழ் உழைக்கும் மக்களிடையே அமைதியின்மை தொடர்ந்த ஆழமடைகிறது.

கடந்த பிப்ரவரியில் நடந்த ஊள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பின் அளவு வெளிக்காட்டப்பட்டது. இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க. பிரிவானது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டதோடு, பெரும்பான்மை சபைகளின் கட்டுப்பாட்டை வென்றது. ஐ.தே.க.விற்கு பின்னால் சிறிசேன பிரிவினர் மூன்றாவது இடத்திற்கு வந்தமையே "ஐக்கிய" அரசாங்கத்தின் நெருக்கடியை தீவிரப்படுத்தியது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஐ.தே.க.யின் நிதி மோசடி எனப்படுவதன் மீதான குற்றச்சாட்டுகளை தூக்கிப் பிடிப்பதன் மூலம், சிறிசேன அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளிலிருந்து தன்னைத் தூர விலக்கிக்கொள்ள பாசாங்குத்தனமாக முயன்றார்.

சிறிசேன சிங்கள-பௌத்த பேரினவாத பகுதியினரையும் இராணுவத்தையும் தன்வசப்படுத்த முற்பட்டார். போர்க்குற்றங்களுக்காக இராணுவ அதிகாரிகளை "வேட்டையாடுவதை" எதிர்த்த அவர், அத்தகைய சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களுக்கு தகவல் வழங்க வேண்டாம் என பொலிசுக்கு உத்தரவிட்டார்.

சமீபத்தில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுடன் ஒரு கூட்டு முயற்சியாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டதையும் ஜனாதிபதி எதிர்த்தார். இது சிங்கள பேரினவாத குழுக்களால் ஊக்குவிக்கப்பட்ட இந்திய-விரோத இனவெறியின் வழியிலானதாக இருந்தது.

இலங்கை ஆளும் உயரடுக்கு வேலைநிறுத்த மற்றும் ஆர்ப்பாட்ட அலை அதிகரித்து வருவதையிட்டு மேலும் மேலும் எச்சரிக்கையுடன் உள்ளது. இராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கும் ஊழல் பற்றிய அக்கறைக்கும் எந்த தொடர்பும் இல்லை, மாறாக அது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதையும் நசுக்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

தமிழர்கள் மீதான ஈவிரக்கமற்ற போரை நடத்தியதிலும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்படுத்துவதிலும் இராஜபக்ஷ பேர் போனவராவார். பதிவிப் பிரமாணம் செய்த பின்னர் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பேசிய அவர், "மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை காரணமாக சொல்லணா துன்பங்களை அனுபவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக ஒரு புதிய சவாலை பொறுப்பேற்றுள்ளதாக” அவர் கூறிக்கொண்டார். “அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்து வருகிறது, வாழ்க்கைச் செலவினம் விரைவாகவும், எல்லையின்றியும் அதிகரித்து வருகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

இது ஓர்வெல்லியன் இரட்டை பேச்சாகும். கடந்த மாதம் இந்து உடன் பேசிய இராஜபக்ஷ, "நிலையான அரசாங்கம்" இல்லாமை, முதலீட்டாளர்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறது என அறிவித்தார். "அரசாங்கம் வலுவாக இருக்க வேண்டும், ஒரே குரலில் பேச வேண்டும்" என்று அவர் கூறினார்.

நேற்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் பேசிய அவரது மகன் நாமல் இராஜபக்ஷ, அப்பட்டமாக அறிவித்ததாவது: "ஆனால் இப்போது புதிய அரசாங்கம் ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. மக்கள் எங்களை எதிர்க்கலாம், ஆனால் முடிவில், நாம் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு ஒரு தீர்வு காண்போம்."

சிறிசேனவின் ஆட்சிக் கவிழ்ப்பு, கொழும்பில் அரசியல் சூழ்ச்சிகளுடன் சேர்த்து, பூகோள அரசியல் பகைமைகளை மட்டுமே ஊக்குவிக்கும். அமெரிக்க வெளியுறவு செயலகம், இலங்கையில் நிகழ்வுகளை நெருக்கமாக அவதானித்துக்கொண்டிருப்பதாக கூறியதோடு, அனைத்து கட்சிகளுக்கும் "அரசியலமைப்பிற்கு இணங்கவும், வன்முறையிலிருந்து விலகி விதிமுறைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய இலங்கை அரசாங்கம் சீனாவை நோக்கி இழுபடுவதை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளப்போவதில்லை. துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இந்த மாத தொடக்கத்தில், சீனாவின் "கடன் பொறி இராஜதந்திரத்தை" விமர்சித்து இலங்கையை ஒரு உதாரணமாக மேற்கோள் காட்டினார். ஹம்பந்தொட்ட துறைமுகத்தை பெய்ஜிங்கிற்கு குத்தகைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம், அது விரைவில் சீனாவின் வளர்ந்து வரும் ஆழ் கடற்படை முன்னரங்கு இராணுவத் தளமாக மாறும்”, என்று அவர் கூறினார்.

இந்திய அரசாங்கம் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்றாலும், இந்தியாவின் போட்டியாளரான சீனா, பயன்பெறும் என்று இந்தியாவின் ஊடகங்கள் எச்சரிக்கின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையாளர் இந்திராணி பாக்ஜி எழுதியதாவது: "இலங்கையில் இந்தியா வலுவான பாதுகாப்பு நலன்களைக் கொண்டுள்ளதுடன், குறிப்பாக மாலை தீவு மற்றும் அதன் சொந்த வெளியேறும் சீனா-சார்பு ஜனாதிபதியினாலும் ஏற்படுத்தப்பட்டவாறான கஷ்டங்கள் போன்று, இந்த தீவு நாட்டில் ஒரு பெரிய சீன பிரசன்னத்தை காண மோடி அரசாங்கம் விரும்பாது.”

இராஜதந்திர அணிதிரள்வு நேற்று தெளிவாக இருந்தது. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் இந்தியாவினதும் தூதர்களை கொழும்பில் விக்கிரமசிங்க சந்தித்தார். அதேவேளை கொழும்பிலுள்ள சீனத் தூதர் செங் செயுவான், இராஜபக்ஷவை சந்தித்து ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளின் மீது தாக்குதல் நடத்துவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள ஆளும் உயரடுக்கின் இரு பிரிவில் எதன் மீதும் தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவிதமான நம்பிக்கையும் வைக்க முடியாது. இறுதியாக அடுத்த அரசாங்கத்தை யார் உருவாக்கினாலும், பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது திணிக்க முயற்சிப்பதோடு, எதிர்ப்பை அடக்குவதற்கு பொலிஸ் அரச வழிமுறைகளைப் பயன்படுத்தும்.