ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

 

 

 

3

1968 பிரான்சின் பொது வேலைநிறுத்தமும் மாணவர் எழுச்சியும்

 

அலன் கிறிவினின் JCR எவ்வாறு ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகளை மூடிமறைத்தது (1)

பிரான்சின் 1968 மே-ஜூன் சம்பவங்களைக் குறித்த தொடர்ச்சியான கட்டுரைகளில் இது மூன்றாம் பாகமாகும். மே 28 இல் பிரசுரிக்கப்பட்ட 1, மாணவர் எழுச்சி மற்றும் பொது வேலைநிறுத்தம் அபிவிருத்தி அடைந்ததிலிருந்து மே மாத இறுதியில் அது அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது வரையில் விவரிக்கிறது. மே 29 இல் பிரசுரிக்கப்பட்ட 2, கம்யூனிஸ்ட் கட்சியும் (PCF) தொழிற்சங்கமும் எவ்வாறு அதன் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன என்பது குறித்தும் மற்றும், ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோல் மீண்டும் அதிகாரத்திற்கு வர அவை எவ்வாறு உதவின என்பதையும் ஆராய்கிறது. பப்லோவாதிகள் வகித்த பாத்திரம் குறித்து பாகங்கள் 3 மற்றும் 4 ஆராய்கின்றன; இறுதிப் பாகம் பியர் லம்பேர் இன் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பைக் (OCI) குறித்து ஆராயும்.

ஜனாதிபதி டு கோலும் அவரது ஐந்தாம் குடியரசும், மே 1968 இல் அரசியல்ரீதியில் உயிர்பிழைத்தமைக்காக, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (PCF) மற்றும் அதன் தொழிற்சங்க கிளையான தொழிலாளர் பொது கூட்டமைப்புக்கும் (CGT) கடன்பட்டிருந்தனர். எவ்வாறிருந்த போதினும், 1945 மற்றும் 1968க்கு இடையே, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மிக வெளிப்படையாக வீழ்ச்சி அடைந்திருந்தது. பொது வேலைநிறுத்தத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு ஸ்ராலினிஸ்டுகள், அவர்களைவிட மிகவும் தீவிர நிலைப்பாட்டினை எடுத்திருந்த ஏனைய அரசியல் சக்திகளின் ஒத்துழைப்பை சார்ந்திருந்தனர் என்றாலும், பரந்த இயக்கத்தின் மீது அதன் ஆதிக்கத்தை கொண்டிருப்பதை PCF உறுதிப்படுத்தி கொண்டது.

இவ்விடயத்தில் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான பப்லோவாத ஐக்கிய செயலகம் மற்றும் அதன் பிரெஞ்சு ஆதரவாளர்கள், அலன் கிறிவின் தலைமையிலான புரட்சிகர கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பு (Jeunesse Communiste Révolutionnaire―JCR) மற்றும் பியர் பிராங் தலைமையிலான சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி (Parti Communiste Internationaliste―PCI) ஆகியவை ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. அவர்கள் இளைஞர்களது தீவிரமயமாக்கல் ஒரு தீவிர புரட்சிகர மாற்றீடாக அபிவிருத்தி அடைவதை தடுத்ததுடன், பொது வேலைநிறுத்தத்தை அவ்விதத்தில் ஸ்ரானிஸ்டுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உதவினர்.

நாஜி ஜேர்மனியின் மீது சோவியத் செம்படையின் வெற்றியும், பாசிச-விரோத எதிர்ப்பியக்கத்தில் (anti-fascist Résistance) பிரெஞ்சு கட்சி வகித்த சொந்த பாத்திரம் ஆகியவற்றின் காரணமாக, இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான அரசியல் ஆளுமையை கொண்டிருந்தது. விச்சி ஆட்சியின் வடிவில் இருந்த பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம், நாஜிக்களுடனான அதன் ஒத்துழைப்பின் மூலமாக தன்னைத்தானே மதிப்பிழக்க செய்திருந்தது. மேலும் அங்கே தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர் மத்தியிலும் ஒரு சோசலிச சமூகத்திற்கான பலமான எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. ஆனால் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய தலைவர் மொறிஸ் தொரேஸ் (Maurice Thorez), முதலாளித்துவ ஆட்சியை மீள்-ஸ்தாபிதம் செய்வதற்கு அவரது மொத்த அரசியல் அதிகாரத்தையும் பிரயோகித்தார். தொரேஸ் அவரே தனிப்பட்டரீதியில், டு கோல் நிறுவிய போருக்குப் பிந்தைய முதல் அரசாங்கத்தில் பங்கெடுத்ததுடன், எதிர்ப்பியக்கத்தை நிராயுதபாணியாக்குவதை உறுதிப்படுத்துவதற்கு காரணமாக இருந்தார்.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் முதலாளித்துவ சமூக மறுஸ்திரப்படுத்தலில் அது வகித்த பாத்திரத்திற்காக, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கான ஆதரவு சிறுக சிறுக குறைந்து வந்தது. அக்கட்சி வியட்நாம் மற்றும் அல்ஜீரியாவிற்கு எதிரான காலனித்துவ போர்களுக்கு அதன் ஆதரவை வழங்கியிருந்ததுடன், 1956 இல் நிகிடா குருஷ்சேவ் அளித்த உரையில் ஸ்ராலினிச குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அது மேற்கொண்டும் மதிப்பிழந்தது. இதனை தொடர்ந்து ஹங்கேரி மற்றும் போலாந்தில் ஸ்ராலினிச துருப்புக்களால் பெருந்திரளான மக்கள் மேலெழுச்சிகள் இரத்தக்களரியுடன் ஒடுக்கப்பட்டமை நடந்தது. 1968 இல் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அப்போதும் தொழிலாள வர்க்க அங்கத்துவ எண்ணிக்கையில் மிகப்பெரிய கட்சியாக இருந்தபோதினும், அது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதன் செல்வாக்கைப் பெரிதும் இழந்திருந்தது.

குறிப்பாக கம்யூனிஸ்ட் மாணவர் கூட்டமைப்பு (Union des Étudiants Communistes―UEC) ஆழ்ந்த நெருக்கடியில் இருந்தது. 1963 இல் இருந்து UEC க்குள் ―"இத்தாலிய" கன்னை (கிராம்ஷி மற்றும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள்), "மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்" (மாவோ சே துங் ஆதரவாளர்கள்) மற்றும் "ட்ரொட்ஸ்கிச" கன்னை என― பல்வேறு கன்னைகள் உருவாயின, அவை பின்னர் வெளியேற்றப்பட்டு அவற்றின் சொந்த அமைப்புகளை நிறுவின. இந்த காலகட்டம் "அதிதீவிர இடது" என்றழைக்கப்பட்டதன் தோற்றத்தைக் குறித்தது. அரசியல் அரங்கில் அவற்றின் உதயம், "போர்க்குணமிக்க இளைஞர்களின் ஓர் ஆக்கபூர்வமான பகுதி பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து உடைத்துக் கொண்டு எழுச்சி பெற்றதைக்" குறிப்பதாக வரலாற்றாளர் மிஷேல் ஸன்கரிணி-ஃபூர்னெல் (Michelle Zancarini-Fournel) 1968 இயக்கம் குறித்த அவரது நூலில் குறிப்பிட்டார். [1]

CGT இன் ஆளுமை 1968 இல் அதிகரித்த அழுத்தத்தின் கீழ் இருந்தது. போட்டி தொழிற்சங்கங்களான Force Ouvrière மற்றும் CFDT (Confédération Française Démocratique du Travail) போன்றவை அப்போது இடது-சீர்திருத்தவாத PSU (Parti Socialiste Unifié) இன் செல்வாக்கின் கீழ் இருந்தன. அவை போர்குணமிக்க நிலைப்பாட்டை ஏற்றதுடன் CGT க்கு சவாலாக நின்றன. குறிப்பாக CFDT ஆல் சேவைத்துறை மற்றும் பொதுத்துறை சேவைகளில் ஆதரவைத் திரட்ட முடிந்தது.

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், ஐக்கிய செயலகத்தில் அணிதிரண்டிருந்த பப்லோவாதிகள், ஸ்ராலினிஸ்டுகளின் அதிகாரத்தை பாதுகாப்பதிலும் சாத்தியமான அளவில் பொது வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுப்பதிலும் ஒரு மிக முக்கிய பாத்திரம் வகித்தனர்.

பப்லோவாதத்தின் தோற்றுவாய்கள்

நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்திற்கு எதிரான ஓர் அரசியல் தாக்குதலின் விளைவாக, 1950களின் தொடக்கத்தில் பப்லோவாத ஐக்கிய செயலகம் உருவானது. நான்காம் அகிலத்தின் செயலாளர் மிஷேல் பப்லோ, 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்திற்கான அடித்தளமாக உருவாக்கியிருந்த, ஸ்ராலினிசம் குறித்த ஒட்டுமொத்த பகுப்பாய்வையும் நிராகரித்தார்.

1933 இல் ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தின் தோல்வியை தொடர்ந்து, கம்யூனிச அகிலத்தினுள் ஸ்ராலினிச சீரழிவின் அளவானது, அகிலத்தை சீர்திருத்துவதை அடிப்படையாக கொண்ட எந்தவொரு கொள்கையையுமே ஏற்கவியலாதவாறு செய்திருந்ததாக ட்ரொட்ஸ்கி தீர்மானித்தார். ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதை சாத்தியமாக்கியிருந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் காட்டிக்கொடுப்பிலிருந்து தொடங்கி, அதையடுத்து ஜேர்மன் தோல்வியிலிருந்து எந்தவொரு படிப்பினைகளையும் பெற கம்யூனிச அகிலம் மறுத்ததைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் தீர்மானகரமாக முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சென்றுவிட்டதாக ட்ரொட்ஸ்கி முடிவுக்கு வந்தார். எதிர்கால புரட்சிகரப் போராட்டம் என்பது, ஒரு புதிய பாட்டாளி வர்க்க தலைமையை கட்டியெழுப்பவதிலேயே தங்கியிருப்பதாக அவர் வலியுறுத்தினார். அவர் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் பின்வறுமாறு எழுதினார்: “மனிதகுலத்தின் கலாச்சார நெருக்கடியாகியுள்ள பாட்டாளி வர்க்க தலைமையின் நெருக்கடியை நான்காம் அகிலத்தால் மட்டுமே தீர்க்க முடியும்".

இந்த கண்ணோட்டத்தை பப்லோ நிராகரித்தார். அவர், கிழக்கு ஐரோப்பாவின் புதிய ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள் உதயமானதைக் கொண்டு, எதிர்காலத்தில் ஸ்ராலினிசம் வரலாற்றுரீதியில் ஒரு முற்போக்கான பாத்திரம் வகிக்க முடியுமென்ற முடிவுக்கு வந்தார். அதுபோன்றவொரு முன்னோக்கு நான்காம் அகிலத்தேயே கலைப்பதற்குரியதாக இருந்தது. ஸ்ராலினிச பாரிய அமைப்புகளிலிருந்து சுயாதீனமான வகையில் நான்காம் அகிலத்தின் பிரிவுகளைக் கட்டமைப்பதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை என்பதே பப்லோவின் கருத்தாகும். அதற்கு மாறாக நடப்பிலுள்ள ஸ்ராலினிச கட்சிகளுக்குள் நுழைந்து, அவர்களின் தலைவர்களில் இடதுசாரிப் பிரிவினர் என ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதே என்றளவிற்கு ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பணி சுருக்கப்பட்டது.

அரசியல்ரீதியிலும் தத்துவார்த்தரீதியிலும் நனவுபூர்வமான முன்னணிப்-படை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்துகின்ற, ஒரு பாட்டாளி வர்க்க கட்சியின் ஒட்டுமொத்த மார்க்சிச கருத்துருவையும் பப்லோ நிராகரிப்பதில் போய் நின்றார். பப்லோவை பொறுத்த வரையில் தலைமைப் பாத்திரம் என்பது, தொழிற்சங்கவாதிகள், இடது சீர்திருத்தவாதிகள், குட்டி முதலாளித்துவ தேசியவாதிகள், காலனித்துவ மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் இருந்த தேசிய விடுதலை இயக்கங்கள் போன்ற மார்க்சிஸ்ட்-அல்லாத மற்றும் பாட்டாளி வர்க்கம்-அல்லாத சக்திகளிடம் ஒப்படைக்கலாம், அவை புறநிலை சக்திகளின் அழுத்தத்தின் கீழ் இடது நோக்கி இட்டு செல்லப்படும் என்பதாக இருந்தது. பப்லோ தனிப்பட்டரீதியில் தன்னைத்தானே அல்ஜீரிய தேசிய சுதந்திர முன்னணிக்கு (Front de Libération Nationale - FLN) சேவைசெய்ய இருத்திக்கொண்டதுடன், அதன் வெற்றிக்குப் பின்னர் ஒரு மூன்றாண்டு காலத்திற்கு அல்ஜீரிய அரசாங்கத்துடனேயே கூட இணைந்திருந்தார்.

பப்லோவின் கடுந்தாக்குதல் நான்காம் அகிலத்தை உடைத்தது. பிரெஞ்சு பிரிவின் பெரும்பான்மை அவரது திரித்தல்களை நிராகரித்ததால், பியர் பிராங் தலைமையிலான சிறுபான்மையினரால் அதிகாரத்துவரீதியில் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். 1953 இல் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) ஒரு கடுமையான விமர்சனத்துடன் பப்லோவாத திரித்தல்களுக்கு விடையிறுத்ததுடன், அது அனைத்து மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் சர்வதேச ஐக்கியத்திற்கு அழைப்புவிடுத்து ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டது. இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு அடித்தளமாக மாறியது, அதில் பிரெஞ்சு பெரும்பான்மையும் உள்ளடங்கும்.

ஆனால், சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), பப்லோவாதம் மீதான அதன் எதிர்ப்பை, தொடர்ந்து பேணவில்லை. அதற்கடுத்த 10 ஆண்டுகளின் போது, SWP பெருமளவில் பப்லோவாதிகளுடனான அதன் கருத்து வேறுபாடுகளைக் கைவிட்டு, இறுதியில் 1963 இல் (அமெரிக்க) ஐக்கிய செயலகத்தை உருவாக்க அவர்களுடைனேயே இணைந்தது. இதற்கிடையே ஏர்னெஸ்ட் மண்டேல் அமெரிக்க தலைமையை ஏற்றார். பப்லோ அதிகரித்தளவில் இரண்டாம்பட்ச பாத்திரம் வகிக்க தள்ளப்பட்டிருந்தார், பின்னர் விரைவிலேயே ஐக்கிய செயலகத்திலிருந்து வெளியேறினார். பிடல் காஸ்ட்ரோவிற்கும் அவரது குட்டி முதலாளித்துவ தேசியவாத "26வது ஜூலை இயக்கத்திற்கும்" நிபந்தனையற்ற ஆதரவு என்பதன் அடித்தளத்தில் 1963 மறுஐக்கியம் அமைந்திருந்தது. கியூபாவில் காஸ்ட்ரோ அதிகாரத்தைக் கைப்பற்றியமை ஒரு தொழிலாளர் அரசை அமைத்ததாகவும், காஸ்ட்ரோ, ஏர்னெஸ்டோ "சே" குவேரா மற்றும் ஏனைய கியூப தலைவர்கள் "இயல்பிலேயே மார்க்சிஸ்டுகளின்" பாத்திரம் வகித்ததாகவும் ஐக்கிய செயலகத்தால் கூறப்பட்டது.

இந்த முன்னோக்கு கியூபாவின் தொழிலாள வர்க்கத்தை, அதன் சொந்த அங்கங்கள் ஒருபோதும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்ற நிலையில், அவர்களை நிராயுதபாணியாக்க மட்டும் சேவை செய்யவில்லை; அது ஸ்ராலினிச மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளுக்கு விமர்சனமற்ற ஆதரவு வழங்கி, அவர்களின் பிடியை பெருந்திரளான மக்கள் மீது பலப்படுத்தி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தையும் நிராயுதபாணியாக ஆக்கியது. இவ்வாறு செய்கையில், பப்லோவாதம் ஏகாதிபத்தியத்தின் இரண்டாவது முகமையாக உருவெடுத்தது. தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பார்வையில் பழைய அதிகாரத்துவ எந்திரங்கள் அதிகளவில் மதிப்பிழந்து கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், அது வகித்த பாத்திரம் முன்பினும் அதிக முக்கியத்துவம் மிக்கதாக மாறியிருந்தது.

இது, SWP மற்றும் பப்லோவாதிகளின் ஐக்கியத்திற்கு வெறும் ஓராண்டுக்குப் பின்னர் இலங்கையில் உறுதி செய்யப்பட்டது. பாரிய செல்வாக்கு பெற்றிருந்த ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியான லங்கா சம சமாஜ கட்சி (LSSP) 1964 இல் தேசியவாத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஒரு முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. அரசாங்கத்திற்குள் LSSP நுழைந்ததற்கு விலையாக, சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவளிப்பதற்காக அந்நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் கைவிடப்பட்டனர். அந்நாடு இன்னமும் இக்காட்டிக்கொடுப்பின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அந்நடவடிக்கை தமிழ் சிறுபான்மையினரை பாரபட்சம் காட்டி ஒதுக்கி வைப்பதை மேலும் பலப்படுத்தியதோடு, மூன்று தசாப்தங்களாக இலங்கை இரத்தந்தோய்ந்த உள்நாட்டு போரில் மூழ்குவதற்கும் இட்டுச் சென்றது.

1968 இல் பிரான்சில் முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்ற உதவுவதிலும் பப்லோவாதிகள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தனர். அந்த முக்கிய சம்பவங்களின்போது அவர்களது பாத்திரத்தை ஒருவர் ஆராய்வாரேயானால், இரண்டு விடயங்கள் அதிர்ச்சியூட்டும்: ஒன்று ஸ்ராலினிசத்தை நோக்கிய அவர்களது ஒப்புக்கொள்ளும் நிலைப்பாடு, மற்றது மாணவர் சூழலில் மேலோங்கியிருந்த "புதிய இடதின்" மார்க்சிச-விரோத தத்துவங்களை அவர்கள் விமர்சனமற்று ஏற்றுக் கொண்டமை.

அலன் கிறிவினும், புரட்சிகர கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பும் (JCR)

இரண்டாம் உலக போர் முடிந்தபோது பிரான்சில் நான்காம் அகிலம் கணிசமானளவிற்கு செல்வாக்கு கொண்டிருந்தது. 1944 இல் பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிச இயக்கம், போரின்போது பிளவுபட்டிருந்த இது, சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியை (Parti Communiste Internationaliste ― PCI) உருவாக்குவதற்காக மறுஐக்கியமாகி இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் PCI சுமார் 1,000 அங்கத்தவர்களைக் கொண்டிருந்ததுடன், நாடாளுமன்ற தேர்தல்களில் 11 வேட்பாளர்களை நிறுத்தியது. அவர்கள் 2 இல் இருந்து 5 சதவீத வாக்குகளைப் பெற்றனர். அவ்வமைப்பின் நாளிதழ் La Vérité விற்பனை நிலையங்களில் விற்கப்பட்டதோடு, ஒரு பரந்த வாசகர் வட்டத்தையும் கொண்டிருந்தது. அதன் செல்வாக்கு ஏனைய அமைப்புகளிலும் விரிவடைந்தது; மொத்தம் 20,000 அங்கத்தவர் எண்ணிக்கையுடன் சோசலிஸ்ட் இளைஞர் அமைப்பின் ஒட்டுமொத்த தலைமையும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை ஆதரித்தது. PCI இன் அங்கத்தவர்கள் வேலை நிறுத்த இயக்கத்தில் ஒரு பிரதான பாத்திரம் வகித்தனர். அந்நாட்டையே அதிர வைத்த அந்த வேலைநிறுத்தம், 1947 இல் அரசாங்கத்திலிருந்து பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறுவதற்கு அதை நிர்பந்தித்தது.

எவ்வாறிருந்த போதினும், அதற்கடுத்து வந்த ஆண்டுகளில் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியின் (PCI) புரட்சிகர நோக்குநிலை அதன் சொந்த அணிகளுக்குள் இருந்த உட்கூறுகளிடம் இருந்தே தொடர்ச்சியான தாக்குதலின் கீழ் வந்தது. 1947 இல் சமூக-ஜனநாயக SFIO (Section Française de l’Internationale Ouvrière) கூர்மையாக வலதிற்கு நகர்ந்து, அதன் இளைஞர் அமைப்பைக் கலைத்துடன், அதன் ட்ரொட்ஸ்கிச தலைவரையும் வெளியேற்றியது. அப்போது PCI இன் செயலாளரான ஈவான் கிறேப்போ (Yvan Craipeau) இன் தலைமையிலிருந்த அந்த வலதுசாரி அணி, எந்தவொரு புரட்சிகர முன்னோக்கையும் ஒதுக்கித் தள்ளி தனது பிரதிபலிப்பை காட்டியது. ஓராண்டுக்குப் பின்னர் அந்த அணி, பிரெஞ்சு மெய்யியலாளர் ஜோன்-போல் சார்த்ர் (Jean-Paul Sartre) [Rassemblement Démocratique Révolutionnaire―RDR] தலைமையிலான பரந்த இடது இயக்கத்திற்குள் PCI ஐ கலைத்துவிடுவதற்கு ஆதரவாக வாதிட்டதும் அது வெளியேற்றப்பட்டது. கிறேப்போ உட்பட, வெளியேற்றப்பட்ட முன்னணி பிரமுகர்களில் பலர், பின்னர் PSU இல் மீள்எழுச்சி கண்டனர்.

அதே ஆண்டில், 1948 இல், கொர்னேலுயிஸ் காஸ்ரோறியாடிஸ் (Cornelius Castoriadis) மற்றும் குளோட் லுஃபோர் (Claude Lefort) தலைமையிலான சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா (Socialisme ou barbarie) எனும் மற்றொரு குழு PCI இல் இருந்து வெளியேறியது. இந்த குழு, சோவியத் ஒன்றியத்தை ஓர் உருக்குலைந்த தொழிலாளர் அரசாக எடுத்துக்காட்டிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை நிராகரித்தும், "அதிகாரத்துவ முதலாளித்துவத்தின்" அமைப்புமுறைக்குள் ஸ்ராலினிச ஆட்சி ஒரு புதிய வர்க்கமென வாதிட்டும், பனிப்போர் ஆரம்பித்ததற்கு தமது பிரதிபலிப்பை காட்டின. இந்த நிலைப்பாட்டின் அடித்தளத்தில் இக்குழு மார்க்சிசத்திற்கு விரோதமான எண்ணிறைந்த நிலைப்பாடுகளை அபிவிருத்தி செய்தது. Socialisme ou barbarie குழுவின் எழுத்துக்கள் மாணவர் இயக்கத்தின் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தி வந்தது, அத்துடன் அதன் அங்கத்தவர்களில் ஒருவரான ஜோன்-பிரான்சுவா லியோத்தார் (Jean François Lyotard) பின்னர் பின்நவீனத்துவத்துடன் தொடர்புபட்ட சித்தாந்தத்தை அபிவிருத்தி செய்வதில் ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்தார்.

எவ்வாறிருப்பினும் பிரான்சில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய அடியாக இருந்தது பப்லோவாதமாகும். சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி (PCI) அரசியல்ரீதியிலும் அமைப்புரீதியிலும் மிஷேல் பப்லோவின் கலைப்புவாத (liquidationist) கொள்கை மற்றும் அதையடுத்து பப்லோவாத சிறுபான்மையினரால் பெரும்பான்மை பிரிவு வெளியேற்றப்பட்டமை ஆகியவற்றால் பலவீனமடைந்தது. பியர் லம்பேர் (Pierre Lambert) தலைமையிலான PCI இன் பெரும்பான்மையினர் குறித்து இக்கட்டுரை தொடரின் இறுதி பாகத்தில் விவரிக்கப்படும். பிளவுபட்ட பின்னர் பியர் பிராங் (Pierre Frank) தலைமையிலான பப்லோவாத சிறுபான்மையினர், அல்ஜீரிய போரில் தேசிய சுதந்திர இயக்கத்திற்கு (FLN) நடைமுறை உதவிகள் மற்றும் தளவாட பரிவர்த்தனை உதவிகளை வழங்குவதன் மீது கவனம் செலுத்தினர். 1960களின் போது அது தொழிற்சாலைகளுக்குள் பெரியளவில் ஏதும் செல்வாக்கு கொண்டிருக்கவில்லை. ஆனால் அது மாணவர் வட்டாரங்களில் ஆதரவைப் பெற்றிருந்ததுடன், 1968 இல் அதுபோன்ற அடுக்குகள் மத்தியில் ஓர் முக்கிய பாத்திரம் வகித்தது. அராஜகவாத டானியல் கோன்-பென்டிற் மற்றும் மாவோயிச அலன் ஜிமார் போன்ற பிரபலங்களோடு மாணவர் எழுச்சியில் நன்கறியப்பட்ட முகங்களில் ஒன்றாக இருந்தவர் அதன் முன்னணி அங்கத்தவரான அலன் கிறிவின் ஆவார்.

1955 இல் அவரது 14 வயதில் ஸ்ராலினிச இளைஞர் இயக்கத்தில் இணைந்த கிறிவின், 1957 இல் மாஸ்கோவில் இளைஞர் விழாவில் பங்கெடுத்த ஓர் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவின் பாகமாக இருந்தார். அவர் அல்ஜீரிய FLN அங்கத்தவர்களைச் சந்தித்தார் என்பதும், அல்ஜீரியாவை பொறுத்த வரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை நோக்கி ஒரு விமர்சனரீதியிலான மனோபாவத்தை வளர்த்தார் என்பதும் அவரது சுயசரிதையில் உள்ளது. ஓராண்டுக்குப் பின்னர் அவர் அல்ஜீரிய பிரச்சினை மீது பப்லோவாத PCI உடன் ஒத்துழைக்க தொடங்கினார். கிறிவின் ஆரம்பத்தில் அவருக்கு PCI இன் பின்புலம் குறித்து தெரியாது என்று வாதிடுகிறார், ஆனால் அவரது இரண்டு சகோதரர்கள் அவ்வமைப்பின் தலைமையில் இருந்த நிலையில் இது பெரும்பாலும் அவ்வாறிருக்க சாத்தியமில்லை. குறைந்தபட்சம் 1961 இல், எந்தவொரு சம்பவத்திலும் அவர் PCI உடன் இணைந்திருந்தார், அதேவேளையில் ஸ்ராலினிச மாணவர் அமைப்பான UEC க்குள் (Union des étudiants communistes) தொடர்ந்து உத்தியோகபூர்வமாக வேலை செய்து வந்தார்.

கிறிவின் வேகமாக PCI மற்றும் ஐக்கிய செயலகத்தின் தலைமைக்குள் வளர்ந்தார். 1965 இல் 24 வயதிலிருந்த கிறிவின், பியர் பிராங் மற்றும் மிஷேல் லுக்கென் (Michel Lequenne) உடன் சேர்ந்து கட்சியினது அரசியல் குழுவின் உயர்மட்ட தலைமையில் இடம் பெற்றிருந்தார். அதே ஆண்டு அவர் லுக்கென்னுக்கு மாற்றாக ஐக்கிய செயலகத்தின் நிர்வாக குழுவில் நியமிக்கப்பட்டார்.

1966 இல் பாரீஸ் பல்கலைக்கழகத்தில் (La Sorbonne) UEC இன் கிறிவின் பிரிவு, இடதின் பொது ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா மித்திரோனுக்கு ஆதரவு வழங்க மறுத்ததற்காக ஸ்ராலினிச தலைமையால் வெளியேற்றப்பட்டது. ஏனைய UEC இன் கிளர்ச்சி பிரிவுகளுடன் சேர்ந்து அவர் JCR ஐ (Jeunesse Communiste Révolutionnaire) நிறுவ சென்றார், ஏறத்தாழ முழுமையாக மாணவர்களைக் கொண்டிருந்த அது, PCI போலின்றி, வெளிப்படையாக தன்னைத்தானே ட்ரொட்ஸ்கிசத்திற்கு பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை. 1969 ஏப்ரலில் JCR மற்றும் PCI அப்போது Ligue Communiste ஐ (1974 இல் இருந்து, இது Ligue Communiste Révolutionnaire―LCR என்றானது) உருவாக்க உத்தியோகபூர்வமாக இணைந்தன, முன்னதாக பிரெஞ்சு உள்துறை மந்திரி அவ்விரு அமைப்புகளுக்கும் ஓராண்டு தடைவிதித்திருந்தார்.

அதற்கு முன்னரே, 1968 இல் மூர்க்கமான உத்வேகத்துடன் ஆனால் சிறிதளவே அரசியல் அனுபவம் கொண்ட ஓர் இளம் முதிர்ச்சி பெறாத அமைப்பாக இருந்த JCR ஐ முன்னுக்குக் கொண்டு வர கிறிவின் முயற்சித்தார்: “நாம் சில நூறு அங்கத்துவர்கள் கொண்ட ஓர் அமைப்பாக இருக்கலாம், அவர்களின் சராசரி வயது அனேகமாக அந்நேரத்தில் சட்டபூர்வ வயது வந்தோர் வயதான இருப்பத்தி ஒன்றை ஒத்திருந்தது. ஒரு கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் இருந்து மற்றொன்றுக்கு ஒன்று மாற்றி ஒன்றாக அடுத்தடுத்த மிக முக்கிய வேலைகளால் உந்தப்பட்டிருந்த நாம் விடயங்களை முழுமையாக சிந்திக்கக்கூட நேரமில்லாமல் இருந்தோம் என்பதைக் குறிப்பிட வேண்டியதே இல்லை. நமது கட்டுப்பாடான சக்திகளின் கண்ணோட்டத்தில் நாம் பல்கலைக்கழகங்களிலும், வேலை நிறுத்தம் மற்றும் வீதிகளிலும் நமது வீடுகளில் இருப்பதைப் போல உணர்ந்தோம். அரசாங்கத்தினது பிரச்சினைக்குத் தீர்வு மற்றொரு மட்டத்தில் நடந்தது, அதன் மீது நாம் மிகக் குறைவாகவே செல்வாக்கு கொண்டிருந்தோம்”. [2]

உண்மையில், அதுபோன்ற வாதங்கள் ஏற்புடையதாக இருக்கவில்லை. 1968 இல் 27 வயதிலிருந்த அலன் கிறிவின் ஒப்பீட்டளவில் அப்போது இளம் வயதில் இருந்தார் என்றாலும் ஏற்கனவே கணிசமானளவிற்கு அரசியல் அனுபவம் பெற்றிருந்தார். அவர் ஸ்ராலினிச அமைப்புகளைக் குறித்த ஆழ்ந்த புரிதலைப் பெற்றிருந்தார், மேலும் ஐக்கிய செயலகத்தின் ஓர் அங்கத்தவராக அவர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் நிலவிய சர்வதேச மோதல்களைக் குறித்து முற்றிலும் பரிச்சயமாக இருந்தார். அந்நேரத்தில் ஏற்கனவே அவர் பல்கலைக்கழகத்தை விட்டிருந்தார் என்றாலும், பின்னர் அவர் JCR இன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அதற்குள் மீண்டும் நுழைந்திருந்தார்.

1968 மே-ஜூனில், JCR இன் அரசியல் நடவடிக்கையை பருவமடையாத சிறார்களின் அனுபவமற்ற நடவடிக்கையாக விட்டுவிட முடியாது, அதற்கு மாறாக அவை மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பப்லோவாதத்தால் அபிவிருத்தி செய்யப்பட்ட அரசியல் போக்கால் வழிநடத்தப்பட்டிருந்தது. ஐக்கிய செயலகம் (United Secretariat), நான்காம் அகிலத்திலிருந்து உடைத்துக் கொண்டு சென்ற பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அது அதன் அரசியலை மட்டும் மாற்றியிருக்கவில்லை மாறாக அதன் சமூக நோக்குநிலையையே மாற்றி இருந்தது. அது ஒரு பாட்டாளி வர்க்க சக்தியாக இருக்கவில்லை, அதற்கு மாறாக அது ஒரு குட்டி முதலாளித்துவ இயக்கமாக இருந்தது. பப்லோவாதிகள் ஒன்றரை தசாப்தங்களுக்கு, ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்தவாத எந்திரங்களின் பிழைப்புவாதிகளுக்கு ஆதரவளிக்க முயற்சித்திருந்தனர் என்பதுடன், தேசிய இயக்கங்களை ஊக்குவித்து வந்தனர். அதுபோன்ற இயக்கங்களின் சமூக நோக்குநிலை பப்லோவாதிகளினது இரண்டாவது இயல்பான தன்மையாக மாறியிருந்தது. மார்க்சிசத்தின் ஒரு தத்துவார்த்த திரித்தல்வாதமாக தொடங்கிய அது, அவர்களது அரசியல் அங்க இலட்சணத்தின் அமைப்புரீதியிலான பாகமாக மாறியிருந்தது―அதற்கு முன்னர் வரையில் அது ஸ்தூலமான ஆட்சியெல்லையிலிருந்து அரசியலுக்கு மாறும் வரையறைகளில் அனுமதிக்கத்தக்க அளவில் இருந்தது.

1848 ஐரோப்பிய புரட்சிகளின் தோல்வியிலிருந்து படிப்பினைகளை வரைகையில், மார்க்ஸ், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னோக்கை தொழிலாள வர்க்க முன்னோக்கிலிருந்து பின்வருமாறு வேறுபடுத்தி காட்டினார்: “ஜனநாயக குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர், ஒட்டுமொத்த சமூகத்தையும் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கேற்ப மாற்றுவதிலிருந்து விலகி, நிலவும் சமூகத்தை சாத்தியமான அளவிற்கு அவர்களுக்கு சௌகரியமாக மற்றும் அவர்களால் சகித்துக் கொள்ளத்தக்க சமூக நிலைமைகளின் ஒரு மாற்றத்தை மட்டுமே விரும்புவர்.”[3] இந்த பண்புமயப்படுத்தல் (characterisation), 1968 இல் சமமான அளவில் பப்லோவாதிகளுக்கு பொருத்தமாக இருந்தது. இது அராஜவாதம் மற்றும் ஏனைய குட்டி-முதலாளித்துவ இயக்கங்களை நோக்கிய அவர்களின் விமர்சனமற்ற மனோபாவத்திலிருந்து தெளிபடுத்தப்பட்டது, அத்தகைய இயக்கங்களுக்கு எதிராக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸால் முந்தைய நாட்களில் சமரசத்திற்கிடமின்றி போராடப்பட்டது. அந்த காலகட்டத்திலும் சரி, இன்றைய காலகட்டத்திலும் சரி அவர்கள் அதுபோன்ற பிரச்சினைகளை இன, ஆண்பால்/பெண்பால் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளோடு இணைத்திருந்தனர், தொடர்ந்து இணைத்து வருகின்றனர் என்பதும் வெளிப்படையாக முக்கியத்துவம் மிக்கதாகும்; மேலும் தொழிலாள வர்க்கத்தை தூற்றும் தேசியவாத இயக்கங்களின் தலைவர்களை அவர்கள் உத்வேகப்படுத்துவதுடன், தங்களைத்தாங்களே கிராமப்புற மத்தியதர வர்க்க அடுக்குகளை நோக்கி சாய்த்துக் கொள்கின்றனர். இந்த விடயம் ரஷ்ய வெகுஜனவாதிகளுக்கு (Populists) எதிராக லெனினால் போராடப்பட்டது.

ட்ரொட்ஸ்கிஸ்டை விட அதிகளவில் குவேராயிஸ்ட்"

அனைத்திற்கும் மேலாக கியூப தலைமைக்கு வழங்கிய முற்றிலும் விமர்சனமற்ற ஆதரவால் கிறிவினின் JCR குணாம்சப்பட்டிருந்தது ― இந்த பிரச்சினை தான் 1963 ஐக்கியத்தின் இதயதானத்தில் இருந்தது. LCR இன் வரலாற்றை எழுதிய ஆசிரியர் ஜோன்-போல் சால் (Jean-Paul Salles), “ஒரு அமைப்பின் அடையாளம், மே 68 க்கு முன்னர் பல விதத்திலும் ட்ரொட்ஸ்கிசவாதிகள் என்பதை விட பெரிதும் குவேராவாதிகளாக தெரிந்ததாக" குறிப்பிடுகிறார். [4]

அக்டோபர் 19, 1967 இல், பொலிவியாவில் சே குவேராவின் படுகொலைக்கு 10 நாட்களுக்குப் பின்னர், பாரீஸ் மூச்சுவாலிற்ரே (Mutualit) மண்டபத்தில் JCR அவருக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. குவேராவின் படங்கள் JCR கூட்டத்தில் எங்கெங்கும் நிறைந்திருந்தது. 2006 இன் அவரது சுயசரிதத்தில் அலன் கிறிவின் எழுதுகையில், “மூன்றாம் உலக நாடுகளின் சுதந்திர போராட்டங்களைக் குறித்த எங்களின் மிகவும் முக்கிய குறிப்புப்புள்ளி ஐயத்திற்கிடமின்றி கியூப புரட்சியாகும், அது 'ட்ரொட்ஸ்கோ-குவேராவாதிகள்' (‘Trotsko-Guevarists’) என்றழைக்கப்படுமளவிற்கு எங்களை இட்டுச் சென்றது … குறிப்பாக சே குவேரா எங்களின் பார்வையில் புரட்சிகர போராளியின் முன்மாதிரியாக உருவாகியிருந்தார்,” என்கிறார். [5]

சே குவேராவை பெருமைப்படுத்தியதுடன், LCR, தொழிலாள வர்க்கத்தின் தலைமையைக் கட்டியெழுப்புவதுடன் பிணைந்திருந்த அதிமுக்கிய பிரச்சினைகளை தட்டிக்கழித்தது. அந்த அல்ஜீரிய-கியூப புரட்சியாளரின் வாழ்க்கை சம்பவங்களில் காணக்கூடிய ஒரேயொரு பொதுவான பகுதி இருக்கிறதென்றால், அது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மீதான அவரது அசைக்கமுடியாத விரோதமாகும். அதற்கு பதிலாக அவர் ஒரு சிறிய ஆயுதமேந்திய சிறுபான்மையை —கிராமப்புற பகுதிகளில் செயல்படும் ஒரு கெரில்லா துருப்பு— தொழிலாள வர்க்கத்திலிருந்து சுயாதீனமாக, சோசலிசப் புரட்சியின் பாதைக்கு இட்டுச் செல்லும் என்ற நிலைப்பாட்டை பிரதிநிதித்துவம் செய்தார். இதற்கு ஒரு தத்துவமோ அல்லது ஓர் அரசியல் முன்னோக்கோ தேவைப்படவில்லை. ஒரு சிறிய குழுவின் நடவடிக்கையும், உத்வேகமும் மட்டும் அவசியமாக இருந்தது. அரசியல் நனவைப் பெறுவதற்கும், அவர்களது சொந்த சுதந்திர போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட பெருந்திரளான மக்களின் இயலுமை மறுக்கப்பட்டது.

ஜனவரி 1968 இல் JCR இன் நாளிதழான Avant-Garde Jeunesse, குவேராவின் கருத்துருக்களைப் பின்வருமாறு பரப்பியது: “நடப்பு சூழல்களைப் பொருட்படுத்தாமல், கெரில்லாக்கள், குறுகிய காலத்திலோ அல்லது நீண்ட காலகட்டம் வரையிலோ, சுரண்டப்படும் ஒட்டுமொத்த மக்களை ஆட்சிக்கு எதிரான ஒரு முன்னணி போராட்டத்திற்குள் அவர்களால் கொண்டு வர முடியும் வரையில், அவர்கள் தங்களைத்தாங்களே அபிவிருத்தி செய்துகொள்ள அழைப்புவிடுவார்கள்”.

ஆனால் குவேராவினால் இலத்தீன் அமெரிக்காவில் பின்பற்றப்பட்ட கெரில்லா மூலோபாயம், அந்தளவிற்கு சுலபமாக பிரான்சிற்கு கொண்டு வரமுடியவில்லை. அதற்கு பதிலாக மண்டேல், பிராங் மற்றும் கிறிவின் இந்த முன்னணிப்-படையின் (avant-garde) பாத்திரத்தை மாணவர்களுக்கு வழங்கினர். அவர்கள், மாணவர்களது தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் உடனான அவர்களது வீதிப் போராட்டங்களை பெருமைப்படுத்தினர். குவேராவின் கருத்துருக்கள், எந்தவொரு முக்கிய அரசியல் நிலைநோக்கையும் விலையாக கொடுத்து குருட்டுத்தனமான நடவடிக்கைவாதத்தை (activism) நியாயப்படுத்த சேவை செய்தது. அவ்வாறு செய்ததன் மூலமாக, பப்லோவாதிகள் முற்றிலுமாக புதிய இடதின் மார்க்சிச-விரோத தத்துவங்களை ஏற்றிருந்தனர். மாணவர்களிடையே ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்துவந்த புதிய இடது, அதன்மூலமாக ஒரு உண்மையான மார்க்சிச நோக்குநிலைக்குரிய பாதையைத் தடுத்தது.

அங்கே அராஜவாத டானியல் கோன்-பென்டிற், மாவோயிச அலன் ஜிமார் மற்றும் 1968 சம்பவங்களில் பிரதானமாக இருந்த ஏனைய மாணவர் தலைவர்களுக்கும், "ட்ரொட்ஸ்கிச" அலன் கிறிவினுக்கும் இடையே எந்தவொரு குறிப்பிடத்தக்க அரசியல் வித்தியாசமும் இருக்கவில்லை. அவர்கள் இலத்தீன் வட்டார பகுதியில் நடந்த வீதி போராட்டங்களில் அக்கம்பக்கமாக கலந்துகொண்டிருந்தனர். ஜோன்-போல் சால் எழுதுகிறார்: “மே 6-11 வாரத்தின் போது JCR இன் அங்கத்தவர்கள் முன்னணியில் நின்றிருந்ததுடன், கோன்-பென்டிற் மற்றும் அராஜவாதிகளுடன் உடன் இணைந்து எல்லா ஆர்ப்பாட்டங்களிலும் பங்குபற்றினர் ― இரவு நேர தடையரண்களும் அதில் உள்ளடங்கும்.[6] அப்போது உக்கிரமான வீதிப் போராட்டங்களின் காட்சியைக் கொண்டிருந்த இலத்தீன் வட்டார மூச்சுவாலிற்ரே மண்டபத்தில், மே 9 அன்று, நீண்ட காலத்திற்கு முன்னரே தயாரிப்பு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தை JCR கூட்டியது. 3,000 க்கும் மேற்பட்டவர்கள் அக்கூட்டத்தில் பங்கெடுத்தனர், பிரதான பேச்சாளர்களில் ஒருவராக டானியல் கோன்-பென்டிற் இருந்தார்.

அதே காலகட்டத்தில் இலத்தீன் அமெரிக்காவில் ஐக்கிய செயலகம் நிபந்தனையின்றி சே குவேராவின் கெரில்லா முன்னோக்கை ஆதரித்தது. மே 1969 இல் இத்தாலியில் நடத்தப்பட்ட அதன் 9வது உலக காங்கிரஸில், அமெரிக்க பிரிவு அதன் தென்-அமெரிக்க பிரிவுகளை சே குவேராவின் முன்மாதிரியை பின்பற்றுமாறும், அவரது ஆதரவாளர்களுடன் ஐக்கியப்பட்டிருக்குமாறும் அறிவுறுத்தியது. இது, போராட்டத்தை கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் ஓர் ஆயுதமேந்திய கெரில்லா போராட்டத்திற்கு ஆதரவாக நகர்புறத்தை மையமாக கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்திற்கு புறமுதுகு காட்டுவதை அர்த்தப்படுத்தியது. இந்த மூலோபாயத்தை ஆதரித்த காங்கிரஸில் இருந்த பெரும்பான்மை பிரதிநிதிகளில் ஏர்னெஸ்ட் மண்டேல் மற்றும் பிரெஞ்சு பிரதிநிதிகள் பியர் பிராங் மற்றும் அலன் கிறிவின் ஆகியோரும் உள்ளடங்கி இருந்தனர். கெரில்லா-பாணி போராட்ட முன்னோக்கின் பேரழிவுகரமான விளைவுகள் கண்கூடாக அதிகரித்ததும், அது ஐக்கிய செயலகத்திற்குள் சர்ச்சைக்குரிய ஒரு ஆதாரமாக மாறியிருந்த போதினும், அவர்கள் 10 ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் இந்த மூலோபாயத்தில் உறுதியாக இருந்தனர். இந்த பாதையைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த மற்றும் கெரில்லா போராட்ட பாதையை எடுத்திருந்த ஆயிரக் கணக்கான இளைஞர்கள் அர்த்தமேயில்லாமல் அவர்களது உயிரைத் தியாகம் செய்தனர், அதேவேளையில் கெரில்லா-கடத்தல்கள், பிணைக்கைதிகளைப் பிடித்துவைத்தல் மற்றும் வன்முறை மோதல்கள் போன்ற நடவடிக்கைகள் வெறுமனே தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் நோக்குநிலை பிறழ வைக்க மட்டுமே சேவை செய்தன.

புரட்சிகர முன்னணிப்-படையாக" மாணவர்கள்

மாணவர்கள் வகித்த பாத்திரத்தில், பப்லோவாதிகள் எடுத்த முற்றிலும் விமர்சனமற்ற நிலைப்பாடானது, ஜூன் 1968 இன் தொடக்கத்தில், JCRக்கு தடைவிதிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக, பியர் பிராங்கால் எழுதப்பட்ட மே மாத சம்பவங்கள் குறித்த ஒரு நீண்ட கட்டுரையில் வெளிப்படையாக உள்ளது.

“மே மாத புரட்சிகர முன்னணிப் படை இளைஞர்களைக் கொண்டிருந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது,” என்று எழுதிய பிராங் தொடர்ந்து இதையும் சேர்த்துக் கொண்டார்: “அரசியல்ரீதியில் பன்முகமாக இருந்த முன்னணி படைக்குள் சிறுபான்மையினர் மட்டுமே ஒழுங்கமைந்திருந்த நிலையிலும், அது மொத்தத்தில் ஓர் உயர்ந்த அரசியல் மட்டத்தை கொண்டிருந்தது. முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, சோசலிசத்தைக் கட்டமைக்கும் ஒரு சமூகத்தை நிறுவுவதே, அந்த இயக்கத்தின் நோக்கமென்பதை அது உணர்ந்திருந்தது. 'சோசலிசத்திற்கான சமாதான மற்றும் நாடாளுமன்ற பாதைகளின்' கொள்கை மற்றும் 'சமாதான சகவாழ்வு' கொள்கை என்பது சோசலிசத்தைக் காட்டிகொடுப்பதாகும் என்பதையும் அது உணர்ந்திருந்தது. அது எல்லாவிதமான குட்டி முதலாளித்துவ வர்க்க தேசியவாதத்தை நிராகரித்ததுடன், மிகவும் குறிப்பிடத்தக்க பாணியில் அதன் சர்வதேசியவாதத்தை வெளிப்படுத்தியது. அது பலமாக அதிகாரத்துவ-எதிர்ப்பு நனவைக் கொண்டிருந்ததுடன், அதன் படிநிலைகளில் ஜனநாயகத்திற்கு உத்தரவாதமளிக்க மூர்க்கத்துடன் தீர்மானகரமாக இருந்தது.” [7]

பிராங், சோர்போன் பல்கலைக்கழகத்தை “'இரட்டை அதிகாரத்தின்' மிகவும் அபிவிருத்தி அடைந்த வடிவமாக” மற்றும் “பிரெஞ்சு சோசலிச குடியரசின் முதல் சுதந்திர பிராந்தியமாக” வர்ணிக்குமளவிற்கு கூட சென்றார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்: “நவ-முதலாளித்துவ பாவனையாளர் சமூகத்திற்கு மாணவர் எதிர்ப்புக்கு தூண்டுபொருளான சித்தாந்தம், அவர்களது போராட்டத்தில் அவர்கள் பயன்படுத்திய அணுகுமுறைகள், சமூகத்தில் அவர்கள் கொண்டிருந்த மற்றும் கொண்டிருக்க போகின்ற இடம் (இது அவர்களில் பெரும்பான்மையினரை உயர்மட்ட அரசு தொழில் வழங்குனர்களாக அல்லது முதலாளித்துவவாதிகளாக ஆக்கும்) இந்த போராட்டத்திற்குக் குறிப்பிடத்தக்களவிற்கு ஒரு சோசலிச, புரட்சிகர, மற்றும் சர்வதேசிய குணாம்சத்தை வழங்கியது”. மாணவர்களது போராட்டம், "ஒரு புரட்சிகர மார்க்சிச அர்த்தத்தில் ஒரு மிக உயர்ந்த அரசியல் மட்டத்தை" எடுத்துக்காட்டியது.[8]

யதார்த்தத்தில் அங்கே மாணவர்களின் மத்தியில் மார்க்சிச அர்த்தத்திலான எந்த புரட்சிகர நனவின் சுவடும் இருக்கவில்லை. மாணவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்த அரசியல் கருத்துருக்கள், “புதிய இடது” என்றழைக்கப்பட்டதன் தத்துவார்த்த கிடங்கிற்குள் அவர்களது தோற்றுவாயைக் கொண்டிருந்ததுடன், அவை மார்க்சிசத்திற்கு எதிராக பல ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தன.

பிரான்சில் '68 இயக்கம் குறித்து வரலாற்றாளர் இங்கிரிட் கில்ஷ்செர்-ஹோல்ட்ரை (Ingrid Gilcher-Holtey) பின்வருமாறு எழுதுகிறார்: “அந்த நிகழ்ச்சிப்போக்கை முன்னுக்குக் கொண்டு சென்ற அந்த மாணவர் குழுக்கள், வெளிப்படையாக தங்களைத்தாங்களே புதிய இடதின் புத்திஜீவித ஆலோசகர்களின் மீது அமைத்துக் கொண்டிருந்தன அல்லது அவர்களது கருத்துருக்கள் மற்றும் விமர்சனங்களால், குறிப்பாக ‘Socialisme ou barbarie’ மற்றும் ‘Arguments’ அமைப்புகளைச் சுற்றியிருந்த குழுவான 'Situationist International' இன் எழுத்துக்களால் மேலாளுமை பெற்றிருந்தன. அவர்களது மூலோபாய நடவடிக்கை (நேரடியாக ஆத்திரமூட்டுவது) மற்றும் அவர்களது சொந்த சுய-கருத்துரு (வறட்டுவாத-எதிர்ப்பு, அதிகாரத்துவ-எதிர்ப்பு, அமைப்புரீதியிலான-எதிர்ப்பு, சர்வாதிபத்திய-எதிர்ப்பு ஆகியவை) இரண்டுமே புதிய இடதின் ஒருங்கிணைக்கும் வடிவங்களுக்கு சரியாக பொருந்தி இருந்தன”. [9]

தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர வர்க்கமாக கருத்துவதற்கு பதிலாக, புதிய இடது, தொழிலாளர்களை நுகர்வு மற்றும் ஊடங்களினூடாக முதலாளித்துவ வர்க்க சமூகத்திற்குள் முற்றிலுமாக ஒருங்கிணைந்திருந்த ஒரு பின்தங்கிய மக்களாக பார்த்தது. புதிய இடது, அதன் சமூக பகுப்பாய்வில், முதலாளித்துவ சுரண்டல் என்ற இடத்தில் உடைமை மாற்றத்தின் பாத்திரத்தை ―உடைமை மாற்றம் என்பதை முற்றிலும் உளவியல்ரீதியான அல்லது வாழ்வியல்வாத அர்த்தத்தில்― வலியுறுத்தியது. “புரட்சி” தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட முடியாது, மாறாக புத்திஜீவித மற்றும் சமூகத்தின் விளிம்பிலிருந்த குழுக்களால் முன்னெடுக்கப்படுமென அது வலியுறுத்தியது. புதிய இடதைப் பொறுத்த வரையில், உந்துசக்திகளாக இருப்பவை முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க முரண்பாடுகள் அல்ல, மாறாக "விமர்சனபூர்வ சிந்தனையும்" மற்றும் ஓர் அறிவொளிபெற்ற மேற்தட்டின் நடவடிக்கைகளாகும். புரட்சியின் இலக்கு இனியும் அதிகார மாற்றம் மற்றும் உடைமை சார்ந்த மாற்றமாக இருக்கவில்லை, மாறாக பாலியல் உறவுகளின் மாற்றங்கள் போன்ற சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களாகும் என்று அது கருதியது. புதிய இடதின் பிரதிநிதிகளது கருத்துப்படி அதுபோன்ற கலாச்சார மாற்றங்கள் ஒரு சமூக புரட்சிக்கான முன்நிபந்தனைகளாக இருந்தன.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் இருந்த நன்கறியப்பட்ட இரண்டு மாணவர் தலைவர்கள், டானியல் கோன்-பென்டிற் மற்றும் ரூடி டுட்ஷ்க (Rudi Dutschke) இருவரும் “Situationist International” ஆல் ஈர்க்கப்பட்டிருந்தனர். அது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைக் கொண்டு நனவில் மாற்றத்தைக் கொண்டு வர பிரச்சாரம் செய்தது. நிஜத்தில் டாடாவினதும் (Dada- 20ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய நவீன-படைப்பியக்கம்) மற்றும் மிகையதார்த்தவாத பாரம்பரியத்தில் வேரூன்றிய கலைஞர்களின் ஒரு குழுவால் உருவாக்கப்பட்ட Situationists அமைப்பு, நடைமுறை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. Situationists இன் ஒரு சமீபத்திய கட்டுரை அதை இவ்வாறு குறிப்பிடுகிறது: “செயல்வீரர்களின் இடையூறு, தீவிரப்பாடு, துஷ்பிரயோகம், மறுமதிப்பீடு மற்றும் உறுதியான அன்றாட நிலைமைகளை விளையாட்டுத்தனமாக மறுஉருவாக்கம் செய்வது ஆகியவையே அனைத்து விதத்திலும் ஊடுருவி பரவிய சலிப்பிலிருந்து எழும் ஆழ்ந்த உறக்கத்தின் சர்வ வல்லமை பிடியில் சிக்கியுள்ள அனைவரது நனவையும் நிரந்தரமாக புரட்சிகரமயப்படுத்த மற்றும் உயர்த்த வழிவகைகளாக உள்ளன”. [10]

அதுபோன்ற நிலைப்பாடுகள் மார்க்சிசத்திற்கு எவ்விதமான தொடர்புமற்ற விடயங்களாகும். தீர்க்க முடியாத வர்க்க மோதல்களால் குணாம்சப்பட்ட ஒரு சமூகத்திற்குள் இருக்கும் அதன் நிலைமையில் வேரூன்றி இருந்த தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை அவர்கள் மறுத்தனர். புறநிலைரீதியில் அமைந்திருந்த வர்க்க போராட்டமே புரட்சிக்கு உந்துசக்தியாக உள்ளது. அதன் விளைவாக மார்க்சிச புரட்சியாளர்களது பணி ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை தூண்டிவிடுவதல்ல அதற்கு மாறாக அதன் அரசியல் நனவை உயர்த்துவதும் மற்றும் அதன் சொந்த விதிக்கு அதுவே பொறுப்பேற்க உதவும் வகையில் ஒரு புரட்சிகர தலைமையை வழங்குவதும் ஆகும்.

இலத்தீன் வட்டாரப் பகுதியில் முன்னணிப் பாத்திரம் வகித்த அராஜகவாதிகள், மாவோயிஸ்டுகள் மற்றும் ஏனைய குட்டி முதலாளித்துவ வர்க்க குழுக்கள் "ஒரு புரட்சிகர மார்க்சிச அர்த்தத்தில் மிகவும் உயர்ந்த அரசியல் மட்டத்தை" (பியர் பிராங்) எடுத்துக்காட்டினார்கள் என்று மட்டும் பப்லோவாதிகள் அறிவிக்கவில்லை, அவர்கள் அவர்களது சாகச நடவடிக்கையில் உத்வேகத்துடன் பங்குபற்றிய அதுபோன்ற அரசியல் கண்ணோட்டங்களையும் முன் கொண்டு வந்தனர்.

இலத்தீன் வட்டாரப் பகுதியில் அராஜகவாதத்தால் ஈர்க்கப்பட்ட வீதிப் போராட்டங்கள் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களது அரசியல் கல்வியூட்டலில் எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்பதோடு, அது ஒருபோதும் பிரெஞ்சு அரசிற்கு ஓர் ஆழ்ந்த அச்சுறுத்தலை முன்னிறுத்தவில்லை. 1968 இல் அந்த அரசு ஒரு நவீன பொலிஸ் அமைப்பையும் மற்றும் இரண்டு காலனித்துவ போர்களின் போக்கில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மற்றும் நேட்டோவின் ஆதரவில் சார்ந்திருக்கக்கூடிய இராணுவத்தையும் கொண்டிருந்தது. அதை 19ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட புரட்சிகர தந்திரோபாய வழிமுறைகளான தலைநகர வீதிகளில் தடையரண்களைக் கட்டமைப்பது போன்றவற்றால் கவிழ்க்க முடியாது. இலத்தீன் வட்டாரத்தின் வீதிப் போராட்டங்களில் காணப்பட்ட பெரியளவிலான வன்முறைகளுக்கு பிரதான பொறுப்பாக பாதுகாப்பு படைகளே இருந்த போதினும், அங்கே மாணவர்கள் ஆர்வத்துடன் தடையரண்களை அமைத்து, பொலிஸூடன் ஆடு புலி ஆட்டம் விளையாடி கொண்டிருந்ததில் இருந்த அவர்களது குழந்தைத்தனமான புரட்சிகர கவர்ச்சிவாதமும் அதற்கு ஒரு ஐயுறவுக்கிடமில்லாத காரணியாக இருந்தது.

குறிப்புகள்:
1. Michelle Zancarini-Fournel, “1962-1968: Le champ des possibles” in 68: Une histoire collective, Paris: 2008
2. Daniel Bensaid, Alain Krivine, Mai si! 1968-1988: Rebelles et repentis, Montreuil: 1988, p. 39
3. Karl Marx and Friedrich Engels, “Speech to the Central Authority of the Communist League”
4. Jean-Paul Salles, La Ligue communiste révolutionnaire , Rennes: 2005, p. 49
5. Alain Krivine, Ça te passera avec l’âge, Flammarion: 2006, pp. 93-94
6. Jean-Paul Salles, ibid., p. 52
7. Pierre Frank, “Mai 68: première phase de la révolution socialiste française”
8. Pierre Frank, ibid.
9. Ingrid Gilcher-Holtey, “Mai 68 in Frankreich” in 1968: Vom Ereignis zum Mythos, Frankfurt am Main: 2008, p. 25
10. archplus 183, Zeitschrift für Architektur und Städtebau, May 2007