ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

 

 

 

4

1968 பிரான்சின் பொது வேலைநிறுத்தமும் மாணவர் எழுச்சியும்

 

அலன் கிறிவினின் JCR எவ்வாறு ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகளை மூடிமறைத்தது (2)

ஸ்ராலினிசத்திற்கு ஒரு மூடிமறைப்பு

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் CGT தொழிற்சங்கத்தின் ஸ்ராலினிஸ்டுகள் இளைஞர்களின் கிளர்ச்சிகரமான உத்வேகத்தை வெறுத்தொதுக்கியதுடன், gauchistes (இடதுசாரி தீவிர போக்கினர்) என்றும் மற்றும் ஆத்திரமூட்டுபவர்கள் என்றும் அவர்களால் குறிப்பிடப்பட்ட இடதுசாரி மாணவர் குழுக்களால் அவர்கள் வெறுக்கப்பட்ட போதினும் கூட, அரசியல்ரீதியாக ஸ்ராலினிஸ்டுகளால் அவர்களுடன் சாத்தியமான அளவிற்கு கூடி வாழ முடிந்திருந்தது. டானியல் கோன்-பென்டிற் இன் அராஜகவாத நடவடிக்கைகள், தொழிலாள வர்க்கத்திற்குள் ஸ்ராலினிஸ்டுகளின் மேலாதிக்கத்தை அரிதாகவே அச்சுறுத்தியது. அதேபோல சீன கலாச்சாரப் புரட்சிக்கானதும் மற்றும் ஆயுதமேந்திய போராட்டத்திற்கான மாவோவாதிகளின் ஆதரவினாலும் அதேமாதிரி அவர்களது மேலாதிக்கத்தையும் அச்சுறுத்தமுடியாது இருந்தது.

மேலும் பப்லோவாதிகள், மிக கவனமாக ஸ்ராலினிஸ்டுகளுடனான மோதல்களை தவிர்த்துக் கொண்டனர். அவர்கள் தொழிலாள வர்க்கம் மற்றும் ஸ்ராலினிச தலைமைக்கு இடையிலான உறவுகளைக் கொதிப்பாக்கும் அல்லது பின்னர் ஒரு நெருக்கடிக்கு கொண்டு வரும் எந்தவொரு அரசியல் முனைவுகளையும் தவிர்த்தனர். 1968 நெருக்கடியின் உச்சகட்ட சூழலில், தொழிலாளர்கள் கிறெனெல் உடன்படிக்கையை நிராகரித்துடன், அதிகாரத்தைக் கையிலெடுப்பது மீதான பிரச்சினை நிகழ்ச்சி நிரலில் இருந்தபோது, JCR (Jeunesse Communiste Révolutionnaire), ஸ்ராலினிஸ்டுகளுக்கு ஒரு மூடிமறைப்பை வழங்கியது. இந்த சம்பவங்களுக்கு இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், அலன் கிறிவின் மற்றும் டானியல் பென்சாயிட் JCR இன் பங்கினை சிறப்பாக எடுத்துக்காட்டும் முயற்சியாக 1968 இன் சுயபரிசோதனை ஒன்றை எழுதினார்கள். ஆனால் அது அதன் நிஜமான பாத்திரத்தை தெளிவாக அம்பலமாக்கியது. [11]

பாரிய இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளால் அழைப்பு விடுக்கப்பட்ட இரண்டு மிகப்பெரும் ஆர்ப்பாட்டங்களிலும் JCR பங்கெடுத்தது. அவை, மே 27 இல் சார்லெட்டி (Charléty) மைதானத்தில் UNEF (Union Nationale des Étudiants de France) மாணவர் அமைப்பு, CFDT தொழிற்சங்கம் மற்றும் PSU ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பாரிய கூட்டம், மற்றும் மே 29 இல் PCF மற்றும் CGT இன் பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை ஆகும்.

அப்போது PSU இன் ஓர் அங்கத்தவராக இருந்த அனுபவமிக்க முதலாளித்துவ வர்க்க அரசியல்வாதி பியர் மொன்டெஸ்-பிரான்ஸ் இன் கீழ் ஒரு இடைமருவு அரசாங்கத்திற்கு பாதை வகுப்பதே சார்லெட்டி மைதான பொதுக்கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. ஒழுங்கை மீட்டமைக்க மற்றும் புதிய தேர்தல்களுக்கு தயாரிப்பு செய்வதற்காக வேலைநிறுத்தத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே அதுபோன்றவொரு அரசாங்கத்தின் பணியாக இருந்திருக்கும்.

இந்த விடயத்தில் வலதுசாரி பத்திரிகையின் பிரிவுகளே கூட, அதுபோன்றவொரு "இடது" அரசாங்கத்தால் தான் அப்போதைய ஒழுங்கமைப்பை பாதுகாக்க முடியுமென உடன்பட்டிருந்தன. நிதிய பத்திரிகை Les Echos மே 28 இல், சீர்திருத்தமா, புரட்சியா அல்லது "அராஜகவாதமா" என்பதற்கிடையே மட்டுமே விருப்பத்தேர்வு இருப்பதாக எழுதியது. “வெளியே வருவதற்கு ஒரு பாதை கண்டறியப்பட வேண்டும்" என்ற தலைப்பின் கீழ் அது பின்வருமாறு குறிப்பிட்டது:

“யாரும் யாரையும் நம்பவோ அல்லது யார் சொல்வதையும் கேட்கவோ தயாராக இல்லை. ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டுக்கு CGT ஓர் அரணாக இருக்குமென இப்போது வரையில் தென்பட்டது. ஆனால் இப்போதோ அது யாருடைய கிளர்ச்சி எழுச்சிசியை குறைமதிப்பீடு செய்திருந்ததோ, கலகத்தில் ஈடுபட்டுள்ள அந்த பொதுவான நபர்களாலேயே அது நிலைகுலைக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க தலைவர்கள் வேலைநிறுத்தக்காரர்களால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர், அவர்கள் எந்த வாக்குறுதியையும் —அது யாருடையதாக இருந்தாலும்— இனியும் நம்புவதற்குத் தயாராக இல்லை. அரசாங்கத்தைக் குறித்து கூற வேண்டியதே இல்லை.... ஜெனராலின் (டு கோல்) சமீபத்திய ஒரு துரதிருஷ்டவசமான பேச்சில் 'சீர்திருத்தத்திற்கு ஒப்புக் கொள்கிறேன், சீர்குலைவு வேண்டாம்' என்று கூறியிருக்கிறார். சீர்திருத்தமா அராஜகவாதமா எது வெற்றி பெறும் என்பது தெளிவாக இல்லாத நிலைமைகளின் கீழ் இன்று அவ்விரண்டையும் ஒருவர் எதிர்கொள்கிறார்.”

இந்நேரத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைய பெரிதும் தயாரிப்பு செய்திருந்தது. அதன் பொதுச் செயலாளர் வால்டெக் றொஷே (Waldeck Rochet) அறிவிக்கையில், “ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மக்களின் ஜனநாயக ஐக்கிய அரசாங்கத்தைக் கொண்டு, கோலிச ஆட்சியைப் பிரதியீடு" செய்வதற்கான நிலைமைகள் குறித்து விவாதிக்க அவரும் பிரான்சுவா மித்திரோனும் உடனடியாக சந்திக்க இருப்பதாக மே 27 இல் முன்மொழிந்தார். ஸ்ராலினிச வார்த்தை பிரயோகங்களில் பரிச்சயமானவர்களுக்கு, “ஜனநாயக ஐக்கியத்திற்கான மக்களின் அரசாங்கம்" என்பது முதலாளித்துவ சொத்துறவுகளைப் பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை அர்த்தப்படுத்துகிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இருந்திருக்காது.

ஆனால் PCF இல்லாமலேயே, மித்திரோனும் மொன்டெஸ்-பிரான்ஸ் உம் கூட்டாக ஓர் அரசாங்கத்தை அமைத்துவிடுவார்களோ என்று அது அஞ்சியது. ஆகவே CGT உடன் இணைந்து, மே 29 இல் "மக்களின் அரசாங்கம்" என்ற முழக்கத்தின் கீழ் அதன் சொந்த பாரிய ஆர்ப்பாட்டத்தை அது ஏற்பாடு செய்தது. முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து ஒரு புரட்சிகரமான வழியில் அதிகாரத்தைப் பிடிப்பது குறித்து பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் கனவிலும் நினைத்ததில்லை என்றபோதினும், மித்திரோன் உடனோ அல்லது ஏனைய சில முதலாளித்துவ அரசியல்வாதிகளுடனோ சேர்ந்து ஒரு கூட்டணிக்காக மட்டுமே அது போராடி இருந்த போதினும், அந்த முழக்கம் பெருந்திரளான மக்களின் புரட்சிகர மனோபாவத்தை ஏற்றது.

“மக்களின் அரசாங்கத்தை ஏற்போம்! மித்திரோன், மொன்டெஸ்-பிரான்ஸ் வேண்டாம்!” என்ற முழக்கத்தின் கீழ் PCF-CGT ஆர்ப்பாட்டத்தில் JCR பங்கெடுத்தது, அவ்விதத்தில் அது நடைமுறையில் PCF இன் உபாயத்திற்கு ஆதரவளித்தது. கிறிவின் மற்றும் பென்சாயிட் அவர்களது சுயபரிசோதனை குறித்த ஆய்வில் JCR இன் முழக்கம் குறித்து பின்வருமாறு எழுதினார்கள்:

“அந்த சூத்திரமாக்கல் தெளிவின்றி கையாளப்பட்டது. வேலைநிறுத்தம் மற்றும் அதன் அங்கங்களின் மிகவும் போர்குணமிக்க வெளிப்பாடாக கூறத்தகுந்த ஒரு மக்களின் அரசாங்கத்தை, அது, அரசியல் பிரமுகர்களின் ஓர் அரசாங்கத்திற்கு எதிர்நிலையில் கொண்டு வந்திருந்தது. இடது கட்சிகளின் ஒரு கூட்டணி அரசாங்கத்தை முற்றிலுமாக நிராகரிக்காமல், அது, தொழிலாள வர்க்கத்துடன் எந்தவொரு தெளிவான தொடர்புமின்றி இருந்த மற்றும் வர்க்க கூட்டுறவின் அடிப்படையில் அப்போதிருந்த அமைப்புக்களில் இருந்த தமது சுயவுரிமையை பயன்படுத்த பின்னடித்த பிரமுகர்களையும் அது தாக்கியது.... ஆழ்ந்து ஆராய்ந்த தெளிவை அது கொண்டிருக்காத நிலையில், “மக்களின் அரசாங்கம்" என்ற சூத்திரமயமாக்கல், இடது கட்சிகளின் ஓர் அரசாங்கத்தைக் குறித்தது என்பதற்கு எவ்வித விபரங்களுக்குள்ளும் செல்ல வேண்டியதே இல்லை.” [12]   

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உள்ளடங்கிய ஒரு இடது முதலாளித்துவ அரசாங்கமே "அந்த வேலைநிறுத்தம் மற்றும் அதன் அங்கங்களின் விளைபொருளாக" இருக்குமென்பதை தொழிலாள வர்க்கத்தின் "மிகவும் போர்குணமிக்க பிரிவுகளை" நம்புமாறு செய்வதே JCR ஆல் பயன்படுத்தப்பட்ட இந்த சூத்திரமாக்கலின் நோக்கமாக இருந்தது. இது வெளிப்படையான ஓர் ஒப்புக்கொள்ளலாகும். புரட்சிகர நெருக்கடி அதன் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நேரத்தில், CGT அதன் அதிகாரத்தை இழந்துவிட்டிருந்த நேரத்தில், செல்வாக்கெல்லையிலிருந்து டு கோல் காணாமல் போயிருந்த அந்த வேளையில், அதாவது பகிரங்கமாக மற்றும் தீர்க்கமாக ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டியிருந்த அந்நேரத்தின் போது, JCR “தெளிவில்லா" பாத்திரம் வகித்ததுடன், வேண்டுமென்றே உறுதியின்றி இருந்தது. யார் நாட்டின் அதிகாரத்தை கொண்டிருந்தார்கள் என்ற தீர்க்கமான கேள்வியை அது தவிர்த்தது.

ஸ்ராலினிஸ்டுகளிடம் இருந்து JCR ஏற்றுக் கொண்ட "மக்களின் அரசாங்கத்திற்கான" கோரிக்கை, மக்களிடையே கணிசமான ஆதரவைப் பெற்றது. ஆனால் அந்த கோரிக்கை பொதுவாகவும், ஒன்றிற்கும் கடமைப்பாடின்றியும் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி இந்த கோரிக்கையை சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிர போக்கினர் உடனான ஒரு கூட்டு அரசாங்கத்திற்கான கோரிக்கையாக புரிந்து கொண்டது, அத்தகையவர்களின் மிக முக்கிய பணி அப்போதிருந்த ஒழுங்கைப் பேணுவதாகவே இருந்திருக்கும். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தனையில் புரட்சிகரமாக அதிகாரத்தைக் கையிலெடுப்பது குறித்து மேலதிகமாக அங்கே ஒன்றும் இருக்கவில்லை. பப்லோவாதிகள் இந்த நிலைப்பாட்டை ஒருபோதும் சவால் செய்யவில்லை என்பதுடன், அவர்களும் ஸ்ராலினிஸ்டுகளின் பின்னால் சென்றனர்.

JCR என்ன செய்திருக்க வேண்டும்?

அதிகாரத்தை பிடிப்பதற்கு அவசியமான ஆதரவு JCR க்கு இருக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் ஒரு சிறுபான்மையினராக இருந்தாலுமே கூட புரட்சிகர மார்க்சிஸ்டுகள் அவர்களின் வேலைத்திட்டத்திற்காக எவ்வாறு போராடி, பெரும்பான்மை தொழிலாளர்களை அவர்கள் தரப்பில் வென்றெடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் எண்ணிறந்த வரலாற்று முன்மாதிரிகள் உள்ளன.

ரஷ்யாவில், 1917 இன் தொடக்கத்தில், மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்களை விட லெனினின் போல்ஷிவிக்குகளுக்கு கணிசமானளவிற்கு வெகு குறைவான ஆதரவே இருந்தது. இருந்தபோதினும் திறமையான மற்றும் கோட்பாட்டுரீதியிலான அரசியலைப் பயன்படுத்தி, போல்ஷிவிக்குகள் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை வென்று, அக்டோபரில் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேலை செய்தனர். ட்ரொட்ஸ்கி 1933 இல் இருந்து 1935 வரை நாடுகடத்தப்பட்டு பிரான்சில் இருந்தபோது, அவர் பிரெஞ்சு பிரிவின் நடவடிக்கைகளில் செயலூக்கத்துடன் ஆர்வங்காட்டினார், மேலும் ஒரு சிறுபான்மையாக இருந்தாலும் அது எவ்வாறு ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்திற்காக போராட முடியும் என்பதைக் குறித்து விரிவான பரிந்துரைகளை முன்வைத்தார். சீர்திருத்தவாத கட்சி எந்திரத்திடமிருந்து (பின்னர் ஸ்ராலினிச கட்சி எந்திரத்திடமிருந்தும் கூட) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் என்பதும் மற்றும் ஒரு சுயாதீனமான புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவதுமே எப்போதும் மத்திய பிரச்சினையாக இருந்தது.

லெனின் 1917 இல் நாடுகடத்தப்பட்ட நிலையிலிருந்து ரஷ்யா திரும்பியபோது, மென்ஷிவிக்குகளும் சமூக புரட்சியாளர்களும் மந்திரி பதவிகள் ஏற்றிருந்த இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை நோக்கிய போல்ஷிவிக்குகளின் அரை-மனதான மனோபாவத்தை அவர் தாக்கினார். அவர் உறுதியான எதிர்ப்பையும், சோவியத்துக்கள் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ஒரு வேலைத்திட்டத்தையும் வலியுறுத்தினார்.

இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போல்ஷிவிக்குகள், தொழிலாளர்களை இறுதியில் அவர்களது சீர்திருத்தவாத தலைவர்களிடமிருந்து முறிப்பதை நோக்கமாக கொண்ட ஒரு தந்திரோபாயத்தைப் பிரயோகித்தனர், அது முந்தையவர்களுக்கும் மற்றும் பிந்தையவர்களுக்கும் இடையிலான இடைவெளியை ஆழப்படுத்தியது. சமூகப் புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து முறித்துக் கொண்டு, அவர்களது சொந்த கரங்களில் அதிகாரத்தை எடுக்க வேண்டுமென போல்ஷிவிக்குகள் கோரினர். சமூகப் புரட்சியாளர்களும் மற்றும் மென்ஷிவிக்குகளும் முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து சுயாதீனப்பட்ட ஓர் அரசாங்கத்தை அமைக்க தகைமையற்று இருந்ததை நிரூபித்த போதினும், “மென்ஷிவிக்குகள் மற்றும் சமூகப் புரட்சியாளர்களுக்கு, போல்ஷிவிக்குகளின் கோரிக்கை:” என்பதில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார், இந்த அனுபவம் குறித்து பின்னர் அவர் இடைமருவு வேலைத்திட்டத்தில் (Transitional Programme) குறிப்பிட்டிருந்தார்: “'முதலாளித்துவ வர்க்கத்துடன் முறித்துக் கொண்டு, அதிகாரத்தை உங்கள் சொந்த கரங்களில் எடுங்கள்!' அது பெருந்திரளான மக்களுக்கு பிரமாண்டமான கல்வியூட்டலின் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும். அதிகாரத்தை எடுக்க மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்களின் பிடிவாதமான விருப்பமின்மை, மிக வேகமாக ஜூலை நாட்களின் போது அம்பலமானது, நிச்சயமாக அது பாரிய மக்களின் கருத்துக்கு முன்னால் அவர்களைப் பலவீனப்படுத்தியதுடன், போல்ஷிவிக்குகளின் வெற்றிக்கு தயாரிப்பு செய்தது.” [13]

1968 இல், பொது வேலைநிறுத்தத்திற்கான அணிதிரட்டலின் அடிப்படையில் PCF ம் CGT ம் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும் எனக் கோருவதை JCR முன்னிறுத்தியிருக்கலாம். முதலாளித்துவ கட்சிகளை நோக்கிய ஸ்ராலினிஸ்டுகளின் சமரச மனோபாவத்திற்கு எதிராக திட்டமிட்ட கிளர்ச்சியுடன் ஒன்றுசேர்ந்து, இந்த கோரிக்கை மிகப் பிரமாண்ட அரசியல் உந்துசக்தியை கொண்டிருந்திருக்கும். அது தொழிலாள வர்க்கத்திற்கும் ஸ்ராலினிச தலைமைக்கும் இடையிலான மோதலை கூர்மையாக்கி இருக்கும் என்பதுடன், அவர்களிடமிருந்து அரசியல்ரீதியில் தொழிலாளர்கள் முறித்துக் கொள்ளவும் உதவியிருக்கும். ஆனால் அதுபோன்ற கோரிக்கைகளுடன் ஸ்ராலினிஸ்டுகளை ஒரு சிக்கலான நிலைக்கு கொண்டு வருவது பப்லோவாதிகளின் சிந்தனைகளுக்கு மிகவும் அப்பாற்பட்டு இருந்தது. புரட்சிகர நெருக்கடி அதன் உச்சநிலையை தொட்டபோது, அவர்கள் தாம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நம்பகரமான முண்டுகோல்கள் என்பதை நிரூபித்தனர்.

எவ்வாறிருப்பினும் முதலாளித்துவ பத்திரிகைகளில் பகிரங்கமாக எழுதப்பட்டு வந்த நிலைமைகளின் கீழ், பப்லோவாதிகளால் ஸ்ராலினிஸ்டுகளின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை புறக்கணிக்க முடியவில்லை. ஜூன் 1968 இல் பியர் பிராங், “5 மில்லியன் வாக்குகளுக்காக 10 மில்லியன் வேலைநிறுத்தக்காரர்களின் வேட்கையைக் காட்டிக்கொடுத்ததாக" PCF ஐயும் CGT ஐயும் குற்றஞ்சாட்டினார். “PCF தலைமையின் இந்த காட்டிக்கொடுப்பை" அவர் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் வரலாற்று காட்டிக்கொடுப்புடனேயே கூட ஒப்பிட்டார்: “1918-19 ஜேர்மன் புரட்சிக்கு எதிராக Noskes மற்றும் Eberts நடந்து கொண்ட விதத்தின் அளவிற்கு இந்த தலைமை இதுவரை செய்யவில்லை, ஏனென்றால், முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதன் தேவை இருந்திருக்கவில்லை. ஆனால் 'அதிதீவிர இடதுகளை' நோக்கிய அதன் நடத்தை, அவசியம் எழும்போது அது அவ்வாறு செய்ய தயாராகவே உள்ளது என்பதில் எவ்வித சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை.” [14]

ஆனால் இதுவரையில் அதன் ஒட்டுமொத்த அரசியல் ஆற்றலையும் சாகச நடவடிக்கைகள் மீது ஒன்றுதிரட்டிய JCR, மாணவர்களை புரட்சிகர முன்னணிப்-படையாக அறிவித்த நிலையில், பப்லோவாதிகளோ நான்காம் அகிலத்தின் ஒரு பிரிவின் வடிவில் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புதல் என்ற மிகவும் தீர்க்கமான பிரச்சினையை தட்டிக் கழித்தனர். அவர்கள் வேண்டுமென்றே ஸ்ராலினிஸ்டுகளின் மேலாளுமை குறித்த கேள்வியை தவிர்த்தனர். நான்காம் அகிலத்தில் 1953 உடைவுக்கு இட்டுச் சென்ற அதன் அமைப்பை ஸ்ராலினிசத்திற்குள் கரைத்துவிடும் பப்லோவாத முன்னோக்கே 1968 இல் அவர்களது கொள்கைகளின் மையப்புள்ளியாக இருந்தது.

அவர்கள், ஸ்ராலினிசத்துடன் முறித்துக்கொள்ளவும் அழைப்புவிடுக்கவில்லை, நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதற்கும் அவர்கள் போராடவில்லை. அதற்கு மாறாக அவர்களது கொள்கைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களது நடவடிக்கைகள், ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பை தன்னியல்பாக கடந்து சென்று, தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியைத் தீர்க்கும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் இருந்தன. அதன்விளைவாக JCR அதுவே ஒரு நிஜமான புரட்சிகர முன்னணிப்-படையின் அபிவிருத்திக்கு மிக முக்கிய தடையாக மாறியது.

1935 இல் லியோன் ட்ரொட்ஸ்கி, மக்கள் முன்னணியை எதிர்க்கும் வகையில் பிரான்சில் நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்புவதை ஊக்குவித்தார். "Radical Party (தீவிரவாத கட்சி) வடிவில், ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டணியாக" மக்கள் முன்னணியை அவர் குணாம்சப்படுத்தினார்.

"மக்கள் முன்னணிக்காக ஒரு குறிப்பிட்ட நகரம், மாவட்டம், தொழிற்சாலை, படையினர் குடியிருப்பு அல்லது கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு இருநூறு, ஐநூறு அல்லது ஆயிரம் குடியானவர்கள், போராட்ட நடவடிக்கைகளின் போது, உள்ளூர் நடவடிக்கை குழுவிற்கு அவர்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்,” என்றவர் எழுதினார். நடவடிக்கை குழுக்களை தேர்ந்தெடுப்பதில் தொழிலாளர்கள் மட்டுமல்ல, “மாறாக பொதுச்சேவைத்துறை, பணியாளர்கள், உத்தியோகத்தர்கள், முன்னாள் போர் வீரர்கள், கலைஞர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சிறுவிவசாயிகளும் கூட அதில் பங்கெடுக்கலாம். இவ்விதத்தில் நடவடிக்கை குழுக்கள், குட்டி முதலாளித்துவத்தின் மீது பாட்டாளி வர்க்கம் மேலாளுமை கொள்வதற்குரிய போராட்ட பணிகளுடன் நெருக்கமாக இணைந்திருக்கும். ஆனால் அவர்கள் தொழிலாளர்களின் அதிகாரத்துவத்திற்கும் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை மிகவும் சிக்கலாக்குவார்கள்.” அது "அனைத்து மற்றும் ஒவ்வொரு மக்களின் பொதுவான ஜனநாயக பிரதிநிதித்துவமாக இல்லாமல், மாறாக போராடுகின்ற பெருந்திரளான மக்களின் புரட்சிகர பிரதிநிதித்துவமாக இருக்கும். நடவடிக்கை குழு, போராட்டத்திற்குரிய கருவியாக மாறும்,” என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். அதுவே "கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரத்தின் எதிர்-புரட்சிகர எதிர்ப்பை உடைப்பதற்குரிய ஒரே வழிவகையாக" இருக்கும் என்றார். (மூலத்தில் அழுத்தம் சேர்க்கப்பட்டது) [15]

1968 இல் பப்லோவாதிகள் நடவடிக்கை குழுக்களுக்கான இந்த கோரிக்கையை ஏற்றனர். சான்றாக, மே 21 அன்று, வேலையிடங்களில் வேலைநிறுத்தக் குழுக்களை ஸ்தாபிப்பதற்கும் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களிலும் புறநகர் பகுதிகளிலும் நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிப்பதற்கும் அழைப்பு விடுத்து JCR ஒரு துண்டறிக்கையை வினியோகித்தது. அந்த துண்டறிக்கை தொழிலாளர்களின் அரசாங்கத்தை அமைக்க அழைப்புவிடுத்ததுடன், பின்வருமாறு வலியுறுத்தியது: “நாம் விரும்பும் அதிகாரம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் வேலைநிறுத்தத்திலிருந்தும், நடவடிக்கை குழுக்களிலிருந்தும் மேலெழ வேண்டும்.” ஆனால் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிர போக்கினரைப் பப்லோவாதிகள் தழுவிக் கொண்டமை, இந்த கோரிக்கையின் எந்தவொரு புரட்சிகர உள்ளடக்கத்தையும் இல்லாதொழித்துவிட்டது. ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதிலிருந்து விலகி, பப்லோவாதிகளால் எழுப்பப்பட்ட அந்த கோரிக்கைகள், வெறுமனே முற்றிலுமான சந்தர்ப்பவாத கொள்கைகளாக இருந்த தீவிர போக்கின் பின்புல குரலை ஒத்திருந்தது.

ட்ரொட்ஸ்கிக்கு எதிராக பியர் பிராங்

பியர் பிராங் அதுபோன்றவொரு அரசியல் பாத்திரம் வகித்தது இதுதான் முதல்முறை அல்ல. அவர் அதேபோன்ற காரணங்களுக்காக 1935 இல் ட்ரொட்ஸ்கியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார், பின்னர் அதையடுத்து ட்ரொட்ஸ்கிச இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதேநேரத்தில் அவர் La Commune இதழைச் சுற்றி றேமோன்ட் மொலினியே (Raymond Molinier) உடன் சேர்ந்து ஒரு குழுவுக்குத் தலைமை ஏற்றிருந்தார். அக்குழு மத்தியவாத இயக்கங்களுடன் —குறிப்பாக மார்சோ பிவேர் (Marceau Pivert) தலைமையிலான புரட்சிகர இடதுடன் (Gauche révolutionnaire)— “புரட்சிகர நடவடிக்கை" என்ற பெயரில் ஐக்கியத்தைக் கோரியது. பிவேர் திருத்தமுடியாத ஒரு மத்தியவாதியாக இருந்தார். சாத்தியமானளவிற்கு புரட்சிகர வார்த்தை பிரயோகங்களில் நாட்டங்கொண்டிருந்த போதினும், நடைமுறையில் அவர் 1936 பொது வேலை நிறுத்தத்தை திணறடித்த லெயோன் புளூம் (Léon Blum) தலைமையிலான மக்கள் முன்னணி அரசாங்கத்தில் இடது கன்னையாக இருந்தார்.

ட்ரொட்ஸ்கி, பிவேர் இன் மத்தியவாதத்தையும், மொலினியே மற்றும் பிராங்கின் உபாயங்களையும் சளைக்காமல் எதிர்த்தார். “பிவேர் போக்கினது சாரம் வெறுமனே இது தான்: புரட்சிகர முழங்கங்களை ஏற்றுக்கொள், ஆனால் [ஒரு வலதுசாரி சமூக ஜனநாயகவாதியான] ஷிரோம்ஸ்கி (Zyromsky) மற்றும் புளூம் இடமிருந்து உடைத்துக்கொள்வது மற்றும் ஒரு புதிய கட்சியையும் புதிய அகிலத்தையும் உருவாக்குவது போன்ற அவசியமான முடிவுகளை எடுப்பதில்லை. 'புரட்சிகரமான' முழக்கங்களிலிருந்து அவசியமான தீர்மானங்களைப் பெறாமல், அவற்றை ஏற்றுக் கொள்வதும், புதிய கட்சி மற்றும் புதிய அகிலத்தை உருவாக்குவதுமாக இருந்தது. அது இல்லையென்றால், அனைத்து 'புரட்சிகர' முழக்கங்களும் பயனற்ற வெற்று முழக்கங்களாக மாறிவிடுகின்றது.” அவர் மொலினியே மற்றும் பிராங்கை, “பின்கதவுப் பேச்சுவார்த்தைகள் ஊடாக, தனிப்பட்ட சூழ்ச்சிகள் மூலமாக, புரட்சிகர இடதின் அனுதாபங்களைப் பெற முயல்வதாகவும் மற்றும் அனைத்திற்கும் மேலாக நமது முழக்கங்களையும் மத்தியவாதிகள் மீதான விமர்சனங்களையும் அவர்கள் கைதுறந்துவிட்டதாகவும்" குற்றஞ்சாட்டினார். [17]

அடுத்தடுத்த கட்டுரையில், ட்ரொட்ஸ்கி, மொலினியே மற்றும் பிராங் இன் நிலைப்பாடுகளை ஓர் அரசியல் குற்றமாக வர்ணித்தார். அவர்கள் தமது வேலைதிட்டத்தை மறைப்பதாகவும் மற்றும் தொழிலாளர்களுக்கு "பிழையான பாதையை காட்டுவதாகவும்" அவர்களை ட்ரொட்ஸ்கி குற்றஞ்சாட்டினார். “அதுவொரு குற்றமாகும்!” ஒருங்கிணைந்த நடைமுறை வேலைகளை விட புரட்சிகர வேலைத்திட்டத்தின் பாதுகாப்பே முன்னுரிமையானது என்றவர் வலியுறுத்தினார். “'பாரிய பத்திரிகையா'? புரட்சிகர நடவடிக்கையா? எங்கிலும் கம்யூன்களா? … மிகவும் அருமை, மிகவும் அருமை தான். … ஆனால் வேலைத்திட்டம் தான் முதலில்!” [18]

“புதிய புரட்சிகரக் கட்சி இல்லாமல், பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம் பேரழிவுக்குள் தள்ளப்படுகிறது,” என அவர் தொடர்ந்தார். “பாட்டாளி வர்க்கத்தின் கட்சி அகிலமாக மட்டுமே இருக்க முடியும். இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலம் புரட்சிக்கு மிகப்பெரிய தடையாக மாறிவிட்டன. ஒரு புதிய அகிலத்தை —நான்காம் அகிலத்தை— உருவாக்குவது அவசியாகும். அதன் அவசியத்தை நாம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். குட்டி-முதலாளித்துவ மத்தியவாதிகள், அவர்களின் சொந்த கருத்துக்களது விளைவுகளின் முன்னால் ஒவ்வொரு படியிலும் தடுமாறுகின்றனர். புரட்சிகர தொழிலாளி, இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலத்துடனான அவரது மரபார்ந்த இணைப்பால் முடமாக்கப்படலாம், ஆனால் அந்த உண்மையை அவர் புரிந்து கொள்ளும் போது, அவர் நேரடியாக நான்காம் அகிலத்தின் பதாகைக்குள் வருவார். இதற்காகத்தான் நாம் ஒரு முழுமையான வேலைத்திட்டத்தை பெருந்திரளான மக்களுக்கு முன்வைக்க வேண்டும். தெளிவற்ற சூத்திரங்கள் மூலமாக, நாம் மொலினியேக்கு மட்டுந்தான் சேவை செய்ய முடியும், அவரே கூட பிவேருக்கு சேவை செய்து வருகிறார், அதையொட்டி அவர் லெயோன் புளூமுக்கு மூடிமறைப்பை வழங்குகிறார். மேலும் புளூம் அவரது அனைத்து சக்தியையும் [பாசிசவாதி] de la Rocque க்கு பின்னால் செலவிடுகிறார் ...” (19)

பியர் பிராங் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி உடனான அவரது மோதலில் இருந்து ஒன்றையுமே கற்றுக்கொள்ளவில்லை. ஏதேனும் இருக்கிறதென்றால், அவர் 1935 இல் இருந்ததை விட 1968 இல் இன்னும் அதிகமாக வலதின் தரப்பில் நின்றார் என்பது தான். இம்முறை அவர் மார்சோ பிவேர் போன்ற மத்தியவாதிகளுடன் மட்டுமல்ல, மாறாக அராஜகவாதிகள், மாவோயிஸ்டுகள் மற்றும் ஏனைய தொழிலாள வர்க்க விரோத போக்குகளுடனும் நல்லிணக்கம் பேண முயற்சித்தார். 1935 இல் ஓர் "அரசியல் குற்றம்" குறித்த ட்ரொட்ஸ்கியின் கண்டனம், 1968 இல் இன்னும் அதிகமாகவே நியாயமானதாகியது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் புரட்சிகர மார்க்சிசத்தை நோக்கி திருப்புவதற்கு பப்லோவாதிகள் முக்கிய தடையாக விளங்கினர்.

இறுதியில் அவர்கள், ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக்கொடுப்புக்கான மற்றும் அவர்களது சொந்த இயலாமைக்கான பொறுப்புகளை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்தினர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கிறிவினும் மற்றும் பென்சாயிட்டும் எழுதினார்கள்: “அந்த இயக்கத்தின் ஆரம்பத்தில் ஒழுங்கமைந்திருந்த புரட்சிகர சக்திகளின் பலவீனங்களை, ஸ்ராலினிசம் மற்றும் சமூக-ஜனநாயகத்தின் குற்றங்களாக ஒருவரால் குற்றஞ்சாட்ட முடியும். ஆனால் ஒரு பித்துபிடித்த கருத்துவாதத்திற்குள் மூழ்குவதை ஒருவர் தவிர்க்க விரும்பினால், பின், ஒரு உருத்திரிந்த வகையில், அது தொழிலாள வர்க்கத்தின், அவர்களது போர்குணமிக்க போக்குகளின், தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்த அவர்களின் இயல்பான முன்னணி படையின் அதிக பொதுவான நிலைமையின் ஒரு வெளிப்பாடாகவும் உள்ளது.” அங்கே போராட்டத்தின் இயக்கவியலுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தன என்று அவர்கள் தொடர்கின்றனர்: “எவ்வாறிருந்த போதினும் இவையெல்லாம் இரண்டாம்பட்சமாகவே இருந்தன.... வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பெருந்திரளானோர், ஒரு சமூக மோதலை ஒழுங்கு தீர்த்துக்கொள்ளவும் மற்றும் ஒரு சர்வாதிபத்திய ஆட்சியின் நுகத்தடியை அகற்றவும் விரும்பினர். அவ்விடத்திலிருந்து இருந்து, புரட்சி வரையில் இன்னமும் நிறையத் தூரம் போக வேண்டி இருந்தது.” [20]

அதற்கடுத்த 20 ஆண்டுகள் கழித்து, கிறிவின் இன்னும் கூடுதலாக வெளிப்படையாக எடுத்துரைத்தார்: அவரது சுயசரிதத்தில் அவர் எழுதினார்: “நிச்சயமாக, JCR இன் தலைமையில் அந்த இயக்கம் எவ்வளவு தூரம் போகுமென்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் அது எங்கே போகாது என்பது எங்களுக்கு முற்றிலும் துல்லியமாக தெரிந்தது. அது கடந்து செல்ல முடியாத அளவிலான ஒரு கிளர்ச்சி எழுச்சியாக இருந்தது, ஆனால் அதுவொரு புரட்சியாக இருக்கவில்லை: அங்கே ஒரு வேலைத்திட்டமோ, அல்லது, அதிகாரத்தை கையிலெடுக்க தயாராக இருந்த நம்பகமான அமைப்புகளோ இருக்கவில்லை.” [21]  

இவ்விதமாக வாதிடும் போக்கு பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்குரியதாகும். ஸ்பானிய POUM உடனான அவரது கருத்து விவாதத்தில் ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிடுகையில், அதையொரு "ஆற்றலற்ற மெய்யியல்,” (Impotent philosophy) என்று வர்ணித்தார், அது "மேலோட்டமான தொடர் அபிவிருத்திகளில், தோல்விகளை ஒரு அவசியமான இணைப்பாக இணங்குவிக்க முயல்கிறது, [மேலும்] தோல்விக்கு காரணமான வேலைத்திட்டங்கள், கட்சிகள், தனிமனிதப்பண்புகள் போன்ற உறுதியான காரணிகள் மீது அது கேள்வி எழுப்ப மறுக்கிறது.” [22]

புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR) இன்று

பிரெஞ்சு உள்துறை மந்திரி றேமோன்ட் மார்செலான் (Raymond Marcellin), மொத்தம் 12 இடதுசாரி அமைப்புகளை ஜூன் 12, 1968 இல் அவர் கலைத்த போது, மற்றும் ஜூன் 28, 1973 இல் பாரீஸில் ஒரு பாசிச-விரோத ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் பொலிஸ் உடனான வன்முறை மோதல்களைத் தொடர்ந்து, இரண்டு முறைகளுக்கு குறைவில்லாமல், JCR மற்றும் அதற்கு பின்னர் வந்த கம்யூனிஸ்ட் கழகத்திற்கு (Ligue communiste) தடைவிதித்தார். ஆனால் 1968க்கு பின்னர், ஆளும் மேற்தட்டின் மிகவும் தொலைநோக்கு பார்வை கொண்ட உட்கூறுகள், முதலாளித்துவ ஒழுங்கிற்கு LCR ஓர் அச்சுறுத்தல் அல்ல என்பதிலும், நெருக்கடி சமயங்களில் அவ்வமைப்பைச் சார்ந்திருக்கலாம் என்பதிலும் தெளிவாக இருந்தன.

1968 இன் புரட்சிகர அலை எழுச்சிக்குப் பின்னர், புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும் (LCR) அது இணைந்து வேலைசெய்து வந்த அமைப்புகளும், ஸ்தாபக கட்சிகள், முதலாளித்துவ ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு எந்திரத்திற்கு ஆளணிகளை திரட்டுவதற்கு உகந்த விளைநிலமாகின. முன்னாள் LCR அங்கத்தவர்கள், சோசலிஸ்ட் கட்சியின் முன்னணிப் பதவிகளிலும் (ஹென்றி வேபர், ஜூலியான் ட்ரே, ஜெரார்ட் ஃபிலோச், இன்னும் பலர்), மெய்யியல் தலைவர்களின் இடங்களிலும் (டானியல் பென்சாய்ட்) மற்றும் முன்னணி முதலாளித்துவ நாளிதழ்களின் ஆசிரியர் குழுக்களிலும் ஆக்கிரமித்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) பதவிகளில் இருந்து புகழ்பெற்ற நாளிதழ் Le Monde இன் ஆசிரியர் குழு தலைமைக்கு உயர்ந்த எட்வி பிளெனெல் (Edwy Plenel) அவரது நினைவுக்குறிப்புகளில் இவ்வாறு எழுதுகிறார்: “நான் மட்டும் ஒரே ஆளில்லை: நிச்சயமாக தீவிரஇடதில் பின்னர் செயல்பட்டு வந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அல்லது ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அல்லாதவர்கள் என பத்தாயிரக் கணக்கானவர்கள் எங்களின் ஆரம்பகால கோபத்திற்கு எமது விசுவாசத்தை கொண்டிருந்தாலும் நாங்கள் பெற்ற பயிற்சிகளுக்கு எங்களது நன்றிக்கடனை மூடிமறைக்காமல் போர்குணமிக்க படிப்பினைகளையும் மற்றும் அக்காலகட்டத்திலிருந்த எங்களின் நப்பாசைகளையும் விமர்சனபூர்வமாக திரும்பி பார்ப்பதை நிராகரித்தோம்.” [23]

அராஜகவாத டானியல் கோன்-பென்டிற், 1998 இல் இருந்து 2005 வரையில் ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த ஜோஸ்கா பிஷ்ஷெசரின் நெருக்கமான நண்பராக, அரசியல் ஆலோசகராக ஆகியிருந்தார். கோன்-பென்டிற் இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பசுமை கட்சியினரின் நாடாளுமன்ற குழுவிற்குத் தலைமை வகிக்கிறார் என்பதுடன், இப்போது முற்றிலும் வலதுசாரி கட்சியான ஒன்றில் வலதுசாரியாக இருக்கிறார்.

1990 இல், தேசிய கல்வித்துறையின் தலைமை கண்காணிப்பாளராக பதவியேற்ற மாவோயிச அலன் ஜிமார், சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான பல்வேறு அமைச்சகங்களில் பலமுறை இணை செயலாளர் பதவிகளை நிரப்பச் சென்றார். நாளிதழ் Libération இன் ஸ்தாபிதமும் மாவோயிசத்துடன் அதன் வேர்களைக் கொண்டிருந்தது. உண்மையில் அது ஒரு மாவோயிச பதிப்பாக, மெய்யியலாளர் ஜோன்-போல் சார்த்ர் (Jean-Paul Sartre) ஐ தலைமை ஆசிரியராக கொண்டு, 1973 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

பிரான்சில் தொழில்வாழ்வின் ஏணிகளில் மேலே ஏற முடிந்திருந்த பெரும் எண்ணிக்கையிலான 1968 இன் தீவிரப்போக்கினரை, வெறுமனே “ஊதாரி மகன்களின் மறுவரவு" என்ற அடித்தளத்தில் விவரித்து விடமுடியாது. அதற்கு மாறாக அது பப்லோவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளது முன்னோக்கின் விளைபொருளாகும், அவர்கள்தான், அவர்களது தீவிர வீராவேச பேச்சுக்களுக்கு இடையே, எப்போதும் முற்றிலும் முதலாளித்துவ ஒழுங்கிற்கு பொருத்தமான சந்தர்ப்பவாத கொள்கைகளை பின்தொடர்ந்தனர்.

1968 ஐ விட மிக மிக தீவிரமாக உள்ள ஒரு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் வெளிச்சத்தில், புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) சேவைகள் இப்போது முன்பினும் அதிகமாக தேவைப்படுகிறது. பூகோளமயப்பட்ட உற்பத்தி, சர்வதேச நிதியியல் நெருக்கடி மற்றும் அதிகரித்துவரும் எண்ணெய் விலைகள் என இவை ஒவ்வொரு நாட்டையும் போலவே பிரான்சிலும் சமூக சமரசங்களுக்கான அடித்தளத்தை இல்லாதொழித்துள்ளது. இதற்கிடையே PCF மற்றும் CGT ஆகியவை அவை முன்னிருந்த நிலையிலிருந்து வெறுமனே பலமிழந்துபோயிருப்பதுடன், தொழிலாளர் சக்தியில் வெறும் 7 சதவீதம் மட்டுமே தொழிற்சங்கத்துடன் ஒழுங்கமைந்திருக்கின்றனர். 1968 சம்பவங்களின் பிற்போக்குத்தனத்திலிருந்து நிறுவப்பட்டதும் மற்றும் கடந்த மூன்று தசாப்தங்களில் முதலாளித்துவ ஆட்சியின் மிக முக்கிய முண்டுகோல் என்பதாக நிரூபித்துள்ளதுமான சோசலிஸ்ட் கட்சி, பிளவுபட்டுள்ளதுடன், வேகமாக ஆதரவை இழந்து வருகிறது. சமூக பதட்டங்கள் உடையும் புள்ளியில் உள்ளன, கடந்த 12 ஆண்டுகளாக அந்நாடு வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஒரு அலை மாற்றி ஒரு அலையால் அதிர்ந்து போயுள்ளது.

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், சமூக நெருக்கடிக்கு ஒரு சீர்திருத்தவாத தீர்வில் எந்த நம்பிக்கையும் கொண்டிராத பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நோக்குநிலையை பிறழச் செய்ய, மற்றும் அவ்விதத்தில் ஒரு புரட்சிகர மாற்றீட்டை எடுப்பதிலிருந்து அவர்களை தடுக்க தகைமை கொண்ட ஒரு புதிய இடது முண்டுகோல் ஆளும் உயரடுக்கு தேவைப்படுகிறது. இதுதான் தவறுக்கிடமின்றி புதிய "முதலாளித்து-எதிர்ப்பு கட்சிக்கு" (NPA) ஒப்படைக்கப்பட்டுள்ள பாத்திரம் ஆகும். இந்த ஆண்டின் இறுதியில் அக்கட்சியை நிறுவ LCR திட்டமிட்டு வருகிறது. அதன் செய்தி தொடர்பாளரும் அலன் கிறிவினின் செல்லப்பிள்ளையுமான ஒலிவியே பெசன்ஸநோ (Olivier Besancenot), கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், அதில் அவர் 1.5 மில்லியன் வாக்குகளை வென்றிருந்த நிலையில், ஊடகங்களால் ஆர்வத்துடன் அரவணைக்கப்பட்டுள்ளார்.

1968 இன் JCR க்கும் இன்றைய LCR இன் "முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சிக்கும்" இடையிலான சமாந்தரங்கள் ஒரேமாதிரி மிகவும் வெளிப்படையாக உள்ளன. பெசன்ஸநோவால் ஒரு முக்கிய முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் சே குவேராவைப் பெருமைப்படுத்துவதுடன் அவர்கள் தொடங்குகிறார்கள். அவர் சே குவேரா குறித்து கடந்த ஆண்டு ஒரு புத்தகம் கூட எழுதினார். பல்வேறு குட்டி முதலாளித்துவ தீவிர போக்குகளை LCR விமர்சனபூர்வமின்றி ஏற்றுக்கொள்வதும் இவ்வாறான மேலதிக சமாந்தரங்களில் உள்ளடங்கும். அவரது புதிய கட்சி "அரசியல் கட்சிகளின் முன்னாள் அங்கத்தவர்கள், தொழிற்சங்க இயக்கத்தின் நடவடிக்கையாளர்கள், பெண்ணியல்வாதிகள், தாராளவாதத்தினை எதிர்ப்பவர்கள், அராஜகவாதிகள், கம்யூனிஸ்ட்டுக்கள் அல்லது புதிய தாராளவாத எதிர்ப்பாளர்கள்" ஆகியோருக்கு திறந்திருப்பதாக பெசன்ஸநோ கூறுகிறார். இதற்கும் கூடுதலாக அவர் மிகத் தெளிவாக ட்ரொட்ஸ்கிசத்துடனான எந்தவொரு வரலாற்று இணைப்பையும் நிராகரிக்கிறார். எந்தவொரு தெளிவான வேலைத்திட்டமும் இல்லாத, அதுபோன்றவொரு கோட்பாடற்ற அல்லது பலகோட்பாடு கொண்ட கட்சியை, ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்விக்க மிக சுலபமாக கையாளவும், ஒழுங்கமைக்கவும் முடியும்.

ஆகவே 1968 இன் படிப்பினைகள் வெறுமனே வரலாற்று ஆர்வம் சார்ந்ததல்ல. அந்த நேரத்தில் ஆளும் வர்க்கம், புரட்சிகர நெருக்கடியின் ஒரு காலகட்டத்தில் அதன் ஆட்சியை ஸ்திரப்படுத்தி, அதன் கட்டுப்பாட்டை, ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் பப்லோவாதிகளின் உதவியுடன், மீட்டமைத்துக் கொள்ள முடிந்தது. தொழிலாள வர்க்கம் இரண்டாவது சுற்றில் ஏமாற்றப்படுவதற்கு தன்னைத்தானே அனுமதிக்க போவதில்லை.

குறிப்புகள்:
11. Alain Krivine, Daniel Bensaid, “Mai si! 1968-1988: Rebelles et repentis,” Montreuil : 1988
12. ibid., pp. 39-40
13. Leon Trotsky, The Transitional Program, Labour Publications, New York: 1981, p. 24
14. Pierre Frank, “Mai 68 : première phase de la révolution socialiste française”
15. Leon Trotsky, “Committees of Action—Not People’s Front,” November 26, 1935, in Whither France?
16. Jeunesse Communiste Revolutionnaire, “Workers, Students,” May 21, 1968
17. Leon Trotsky, “What is a ‘Mass Paper’?” in “The Crisis of the French section (1935-36),” New York: 1977, pp. 98, 101
18. Leon Trotsky, “Against False Passports in Politics,” ibid, pp. 115, 119
19. ibid, pp. 119-120
20. Krivine, Bensaid, ibid, p. 43
21. Alain Krivine, “Ça te passera avec l’âge,” Flammarion : 2006, pp. 103-104
22. Leon Trotsky, “Class, Party and Leadership”
23. Edwy Plenel, “Secrets de jeunesse”, Editions Stock: 2001, pp. 21-22