ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fifty years since the LSSP’s Great Betrayal in Sri Lanka

இலங்கையில் லங்கா சம சமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக்கொடுப்பில் இருந்து ஐம்பது ஆண்டுகள்

Statement of the Socialist Equality Party (Sri Lanka)
11 June 2014

இன்றய தினம், லங்கா சம சமாஜக் கட்சி (LSSP), பிரதமர் சிறிமா பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) ஒரு கூட்டணி அரசாங்கத்தில் இணைந்துகொண்டதன் 50வது ஆண்டை குறிக்கின்றது. முதல் முறையாக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என கூறிக்கொண்ட ஒரு கட்சி, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்துகொண்டது. இது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு நீண்டகால தாக்கங்களைக் கொண்ட ஒரு வரலாற்றுக் காட்டிக் கொடுப்பாகும்.

லங்கா சம சமாஜக் கட்சி உத்தியோகபூர்வமாக பண்டாரநாயக்கா அரசாங்கத்தில் இணைந்து மூன்று அமைச்சரவை பதவிகளை ஏற்றுக்கொண்டது. லங்கா சம சமாஜக் கட்சி தலைவர் என்.எம். பெரேரா, அரசாங்கத்தின் நிதி அமைச்சராக முக்கிய பதவியை எடுத்துக்கொண்டார். இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான், லங்கா சம சமாஜக் கட்சியின் ஒரு விசேட மாநாட்டில், ஆளும் கூட்டணியில் இணைவதற்கு பெரேரா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 501 பிரதிநிதிகள் வாக்களித்தனர். 159 சிறுபான்மை பிரதிநிதிகள் தீர்மானத்தை எதிர்த்ததோடு, உடனடியாக (புரட்சிகர) லங்கா சம சமாஜக் கட்சியை அல்லது லங்கா சம சமாஜக் கட்சி (ஆர்) என்பதை அமைக்க பிரிந்து சென்றனர்.

1963 செப்டம்பரில், வளர்ச்சி காணும் வேலைநிறுத்த இயக்கத்திலும் 21 அம்ச கோரிக்கைகள் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டதிலும் வெளிப்பாட்டைக் கண்ட, தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துவரும் தீவிரமயப்படுதலை ஒடுக்குவதற்கே லங்கா சம சமாஜக் கட்சி, கூட்டணிக்கு அழைக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி, அதே மாதத்தில் பெரேரா உட்பட இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகளை சந்திக்குமளவுக்கு கொழும்பில் அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக சர்வதேச கவனம் திரும்பியிருந்தது.

1964 மார்சில், இலங்கையில் முதலாளித்துவ ஆட்சி எதிர்நோக்கிய ஆபத்தை நன்கு உணர்ந்திருந்த பண்டாரநாயக்கா, சர்வாதிகாரத்தை ஸ்தாபித்து துப்பாக்கி முனையில் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அனுப்புமாறு, அல்லது ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்குமாறு தனக்கு பல்வேறு இடங்களில் இருந்து அழுத்தம் வருவதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார். "எனது முடிவு என்னவெனில், இந்த தீர்வுகள் எதுவும் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல உதவாது....... எனவே, கனவான்களே, நான் தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளேன்," என்று அவர் அறிவித்தார்.

அரசாங்கத்தில் நுழைந்துகொண்ட பின்னர், 21 அம்ச கோரிக்கைகள் இயக்கத்தை நிறுத்திய லங்கா சம சமாஜக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் குழப்பத்தையும் அரசியல் தடம்புரள்வையும் உருவாக்கியது. பப்லோவாதம் என்றழைக்கப்படும் சந்தர்ப்பவாத போக்குக்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டத்தின் படிப்பினைகளை அடிப்படையாக கொண்டு மட்டுமே லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பின் அரசியல் வேர்களை புரிந்து கொள்வது சாத்தியமாகும்.

1964 ஜூலையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, லங்கா சம சமாஜக் கட்சி செய்த துரோகத்தின் சர்வதேச முக்கியத்துவத்தை விளக்கியது: "லங்கா சம சமாஜக் கட்சி உறுப்பினர்கள் பண்டாரநாயக்கவின் கூட்டணிக்குள் நுழைந்துகொண்டமை நான்காம் அகிலத்தின் பரிணாமத்தில் ஒரு முழு சகாப்தம் முடிவுக்கு வந்ததை குறிக்கின்றது. தொழிலாள வர்க்கத்தின் தோல்வியை தயாரிப்பு செய்ததில் அது நேரடியாக ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்ததன் மூலம், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் திருத்தல்வாதம் அதன் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது."

லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் பின்னடிப்புக்கு அத்திவாரமாக இருந்த பப்லோவாத அரசியலுக்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியாக 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (புகக) -சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) முன்னோடி- ஸ்தாபிக்கப்பட்டது.

லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பில் இருந்து தோன்றிய ஏனைய ஒவ்வொரு அரசியல் போக்கும், லங்கா சம சமாஜக் கட்சி (ஆர்) போன்று சிதைந்து போயின, அல்லது கொழும்பு அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. இன்று லங்கா சம சமாஜ கட்சி, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் எதேச்சதிகார அரசாங்கத்தில் ஒரு சிறு பிரிவாக இருக்கின்றது. நவ சம சமாஜக் கட்சி (NSSP) மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) போன்ற போலி இடதுகள் லங்கா சம சமாஜக் கட்சியில் இருந்து பிரிந்தபோதிலும், அதன் வர்க்க ஒத்துழைப்பு அரசியலில் இருந்து பிரியவேயில்லை. இன்று அவை வலதுசாரி எதிர் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உடன் நடைமுறையில் கூட்டணியாக செயற்படுகின்றன.

லங்கா சம சமாஜக் கட்சி, ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளை காட்டிக் கொடுத்தது ஏன் மற்றும் அதன் தாக்கங்கள் என்ன என்பதை இலங்கையில் மட்டுமன்றி ஆசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த அடிப்படையில் மட்டுமே, வளர்ச்சி காணும் போர் ஆபத்துக்கள் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தை உருவாக்க முடியும்.

அனைத்துலகக் குழுவின் சார்பில் இக்காட்டிக்கொடுப்புக்கு எதிராக தலையீடு செய்வதற்காக 1964 ஜூனில் கொழும்பு சென்ற, பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) தலைவர் ஜெர்ரி ஹீலி, "இதற்கான [லங்கா சம சமாஜக் கட்சியின் சீரழிவுக்கான] பதில், இலங்கையில் அன்றி, பப்லோவாத திருத்தல்வாதம் பற்றிய ஒரு சர்வதேச ஆய்விலேயே உள்ளது. இந்த கூட்டணியின் உண்மையான சிற்பிகள் பாரிசிலேயே உள்ளனர்." என விளக்கினார்.

இரண்டாம் உலகப் போர் வெடித்ததை அடுத்தும் மற்றும் போருக்கு பிந்தைய உலக முதலாளித்துவத்தின் மறுஸ்திரமயமாக்கத்தின் அழுத்தத்தின் கீழும், நான்காம் அகிலத்தினுள் மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான சந்தர்ப்பவாத போக்கு தலைநீட்டியது. பனிப்போர் வளர்ச்சியுற்ற நிலையில், “முதலாளித்துவ ஆட்சிகளையும் ஸ்ராலினிச உலகத்தையும் இன்றியமையாமல் உள்ளடக்கிய” ஒரு புதிய "புறநிலை யதார்த்தம்" வழமைக்கு வந்துள்ளது என்று பிரகடனம் செய்த பப்லோ, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சித் தன்மை பற்றிய ட்ரொட்ஸ்கியின் பண்புமயப்படுத்தலை நிராகரித்து, அதற்கு ஒரு வரலாற்றுரீதியான முற்போக்குப் பாத்திரம் உள்ளதாக அங்கீகரித்தார்.

பப்லோவாதம், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தையும், சுயாதீனமான ட்ரொட்ஸ்கிச கட்சிகளை கட்டியெழுப்புவதற்கான அவசியத்தையும் நிராகரித்தது. மாறாக, தொழிலாளர் இயக்கங்களுக்குள் உள்ள ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகக் கட்சி, மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் தீவிரவாத முதலாளித்துவ தேசியவாத போக்குகள் போன்ற பல்வேறு முதலாளித்துவ முகவாண்மைகளுக்குள் நான்காம் அகிலத்தின் பிரிவுகளை கரைத்துவிட முன்மொழிந்தன.

பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உருவாக்கப்பட்டது. அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவர் ஜேம்ஸ் பி. கனன், மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படை கோட்பாடுகளை மீண்டும் வலியுறுத்தி 1953 நவம்பரில் ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டார்.

இந்த சர்வதேச நிகழ்ச்சிப்போக்குகள் குறிப்பாக இலங்கையில் ஒரு கூர்மையான வெளிப்பாட்டை கண்டது. இந்திய துணைக்கண்டம் முழுவதும் நான்காம் அகிலத்தின் பகுதியாக 1942ல் உருவாக்கப்பட்ட இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (BLPI), பப்லோவின் செல்வாக்கின் கீழ், அதன் இலங்கை பகுதியை (Bolshevik Samasamaja Party -BSP) 1950ல் லங்கா சம சமாஜ கட்சிக்குள் கரைத்துவிட்டது. லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்கள் பப்லோவின் ஸ்ராலினிச சார்பு நிலைப்பாட்டை விமர்சித்த போதிலும் கூட, 1953ல் கனன் எழுதிய கடிதத்தை நிராகரித்த அவர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் சேர மறுத்து பப்லோவாத சர்வதேச செயலகத்திலேயே (IS) இருந்தனர்.

லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் பின்னடைவுக்கும் மற்றும் பிற்போக்கு சிங்கள மேலாதிக்கவாதத்துடன் வெற்று சோசலிச மற்றும் ஏகாதிபத்திய வார்த்தை ஜாலங்களை கையாளும் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு (SLFP) அது மேலும் மேலும் அடிபணிந்து போனதற்கும் பப்லோவும் மண்டேலும் நேரடி பொறுப்பாளிகளாவர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு முற்போக்கான மாற்றீட்டை பிரதிநிதித்துவம் செய்வதாக லங்கா சம சமாஜக் கட்சி முன்னிலைப்படுத்தியமை, இலங்கை போன்ற முதலாளித்துவ அபிவிருத்தி தாமதமான நாடுகளில், முதலாளித்துவத்தின் எந்தவொரு பிரிவும் அடிப்படை ஜனநாயக கடமைகளை முன்னெடுப்பதற்கு இலாயக்கற்றது என்று நிறுவிய ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை கைவிடுவதையே பிரதிந்தித்துவப்படுத்தியது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, "சிங்களம் மட்டுமே" நாட்டின் உத்தியோகபூர்வ மொழி என்ற ஒரு கீழ்த்தரமான பிரச்சாரத்தின் அடிப்படையில் 1956 தேர்தலில் வெற்றி பெற்றது. இந்த சிங்களம் மட்டும் என்பது தீவின் தமிழ் சிறுபான்மையினரை இரண்டாம் தர பிரஜைகளாக தரங்குறைக்கும் ஒரு கொள்கையாகும். லங்கா சம சமாஜக் கட்சி சிங்களம் மட்டும் கொள்கையை எதிர்த்த போதிலும், அது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு “போட்டியிடாமை” உடன்பாட்டுக்குச் சென்றதோடு தேர்தலின் பின்னர் புதிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் சம்பந்தமாக "பொறுத்திருந்து ஒத்துழைக்கும்" ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.

பப்லோ மற்றும் மண்டேல் இதில் எதையும் எதிர்க்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, 1953ல் தாங்கள் எடுத்த கொள்கைப் பிடிப்பான நிலைப்பாட்டில் இருந்து கனன் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியும் பின்வாங்கியதன் மூலம், லங்கா சம சமாஜக் கட்சி சீரழிவு மேலும் உந்தப்பட்டது. 1963 ஜூனில், முந்தைய தசாப்தத்தில் மேலும் விரிவடைந்திருந்த அடிப்படை வேறுபாடுகள் பற்றிய எந்த விவாதமும் இன்றியே பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் சோசலிச தொழிலாளர் கட்சி மறு ஐக்கியப்பட்டது. மேலும், கியூபாவின் காஸ்ட்ரோ ஆட்சியை பெருமைப்படுத்திய புதிதாக நிறுவப்பட்ட ஐக்கிய செயலகம், இலங்கையில் அது போன்றதொரு முதலாளித்துவ தேசியவாத உருவகத்தை தழுவிக்கொள்ள லங்கா சம சமாஜக் கட்சியை செயலூக்கத்துடன் ஊக்குவித்தது.

மறு ஐக்கியத்தை அடுத்தும் மற்றும் ஐக்கிய செயலகம் கொடுத்த ஊக்கத்தினாலும், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் 1956ல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஒரு சிங்களப் பேரினவாத கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியுடனும் (Mahajana Eksath Peramuna -MEP) ஒரு ஐக்கிய இடது முன்னணியை உருவாக்கும் முயற்சியை லங்கா சம சமாஜக் கட்சி எடுத்தது. இந்த இடது முன்னணியே, 1964ல் பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்குள் லங்கா சம சமாஜக் கட்சி அரசியல் ரீதியாக மூழ்குவதற்கான ஊஞ்சலாக இருந்தது.

லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு, பிராந்தியம் பூராவும் மற்றும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பெரும் அடியாகும். இலங்கையில், சோசலிச சர்வதேசிய வாதத்தை அது கைவிட்டமை, இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு குட்டி முதலாளித்துவ தீவிரவாத அமைப்புகள் உருவாகுவதற்கு கதவை திறந்துவிட்டது. 1966ல் உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) மாவோவாதம், காஸ்ட்ரோவாதம் மற்றும் சிங்கள மக்கள்நலவாதத்தின் கலவையின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தை போதித்ததன் மூலம், வறிய சிங்கள இளைஞர்களை தன்பக்கம் ஈர்த்தது.

1970ல் லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உருவாக்கப்பட்ட இரண்டாவது சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக ஒரு ஆயுதக் கிளர்ச்சியை 1971ல் ஜேவிபீ முன்னெடுத்தது. இதற்கு அரசாங்கத்தின் விடையிறுப்பு இரண்டு மடங்காகும்: இந்த எழுச்சி ஈவிரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்டதில் 15,000 கிராமப்புற இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, ஜேவிபீயை அரசியல்ரீதியில் இல்லாதொழிப்பதற்கான முயற்சியில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு சார்பான ஒரு பக்க சார்பு கொள்கை வெளிப்படையாக திணிக்கப்பட்டது. 1972 அரசியலமைப்பில், சிங்கள மொழி மட்டும் கொள்கை உள்ளடக்கப்பட்டதோடு பௌத்த மதம் அரச மதமாக போற்றிப் பேணப்பட்டது. இந்த தமிழர் விரோத பாரபட்சங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதம் தாங்கிய தமிழ் பிரிவினைவாத அமைப்புகள் உருவாவதற்கு வழிதிறந்து விட்டதோடு 1983ல் வெடித்த இரத்தம் தோய்ந்த மூன்று தசாப்த கால உள்நாட்டு போருக்கும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதற்கும் களம் அமைத்தது.

ஆசியா மற்றும் உலகம் முழுவதும், அதிகமாக மதிப்பிழந்து போன ஸ்ராலினிச மற்றும் மாவோவாத கட்சிகளுக்கு லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு ஒரு அரசியல் ஊக்கத்தை கொடுத்தது. அவை ட்ரொட்ஸ்கிசத்தை இழிவுபடுத்த லங்கா சம சமாஜக் கட்சி முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்துகொண்டதை சுட்டிக்காட்டின. இந்தியாவில், பல்வேறு ஸ்ராலினிச கட்சிகளும் -இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)- சீன சோவியத் பிளவு நெருக்கடியின் போது சவாலை எதிர்கொள்ளாமல் தப்பிக்கொண்டன. ஆயுதம் ஏந்திய நக்சல்பாரி இயக்கம், லங்கா சம சமாஜக் கட்சியை சுட்டிக்காட்டி ட்ரொட்ஸ்கிசத்தை கண்டனம் செய்த போதிலும், அனைத்து ஸ்ராலினிச அமைப்புகள் போல், அதுவும் "முற்போக்கு" முதலாளித்துவத்துடனான தனது சொந்த கூட்டுக்கு வக்காலத்து வாங்கியது. அந்த அடிப்படையில், சிபிஐ, சிபிஎம், அதேபோல் நேபாளம் முதல் பிலிபைன்ஸ் வரையான மாவோவாத ஆயுதக் குழுக்கள் அனைத்தும் தங்களை தேசிய அரசியல் ஸ்தாபகத்தில் நிலை நிறுத்திக்கொண்டன, அல்லது அவ்வாறான பாதையில் பயணிக்கின்றன.

சோசலிச தொழிலாளர் கழகத்தை (SLL) பொறுத்தளவில், லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பானது சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), பப்லோவாதிகளுடன் மறு ஐக்கியம் கொண்டதற்கு எதிரான அதன் அரசியல் போராட்டத்தின் சரியான தன்மையை  உறுதிப்படுத்தியுள்ளது. சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் இருந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் குழுவைப் பொறுத்தளவில், லங்கா சம சமாஜக் கட்சி பண்டாரநாயக்கா அரசாங்கத்தில் நுழைந்துகொண்டமை குறித்த ஒரு உள் கலந்துரையாடலிலான அவர்களது போராட்டம் அவர்களது வெளியேற்றத்தை விளைவாக்கியதோடு, அது 1966ல் (அமெரிக்க) சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தது.

லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பானது, பப்லோவாத திருத்தல்வாதம் ஏகாதிபத்தியத்துக்கு நேரடியாக சேவை செய்ய செல்வதை குறிக்கின்றது என்று அது எடுத்த முடிவு சரியானதாக இருந்த அதேவேளை, சோசலிச தொழிலாளர் கழகம் மற்றும் அதிலிருந்து உருவான தொழிலாளர் புரட்சிக் கட்சியும் (WRP) அதிகரித்தளவில் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான சர்வதேச போராட்டத்தில் இருந்து தூர விலகிச் சென்றதோடு, பிரிட்டனில் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கும், மத்திய கிழக்கில் ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாத அரசுகளுக்கும் அடிபணிந்து போயின.

1985-86ல் அனைத்துலகக் குழுவில் இருந்த உண்மையான ட்ரொட்ஸ்கிசவாதிகள் தொழிலாளர் புரட்சிக் கட்சி சந்தர்ப்பவாதிகளில் இருந்து பிரிந்து, நான்காம் அகிலத்திற்குள் மூன்று தசாப்தங்களாக நடந்த உள்மோதலை ஒரு முடிவிற்கு கொண்டுவந்தனர். இப்பிரிவானது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவினுள் மார்க்சிசத்தின் மலர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கியதுடன், அதனது படிகளில் முன்னொருபோதுமில்லதளவிலான சர்வதேச ஒருங்கிணைப்பை உருவாக்கியதுடன், அதுவே இன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிப்பட்டுள்ளது.

இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும் மற்றும் —பப்லோவாத மற்றும் அரச முதலாளித்துவ— அனைத்து போலி இடது போக்குகளுக்கும் இடையேயான வேறுபாடு பிரமாண்டமானது. ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதற்கான அவர்களது பயணமானது லிபியா மீதான அமெரிக்க தலைமையிலான போர் மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்ற நடவடிக்கைகள், அதேபோல் உக்ரேனில் வாஷிங்டன்-ஆதரவிலான பாசிச-தலைமையிலான ஆட்சி சதி மற்றும் ரஷ்யாவுடனான முரண்பாடுகளுக்கும் அவர்கள் பகிரங்கமாக ஆதரவளிப்பதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் போர் அபாயத்துக்கு எதிராக ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி ஐக்கியப்படுத்த அனைத்துலகக் குழு மட்டுமே பிரச்சாரம் செய்கின்றது. சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் படிப்பினைகள், அத்தகைய ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்கு தீர்க்கமானவையாகும்.

அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சக சிந்தனையாளர்களுடன் இணைந்து, சோசலிச சமத்துவக் கட்சி கட்டுரைகள், விரிவுரைகள் மற்றும் கூட்டங்கள் மூலம் லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, அதன் 50வது ஆண்டை நினைவுறுத்தும். புதிய தலைமுறை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச சிந்தனை கொண்ட புத்திஜீவிகளுக்கு இந்த தீர்க்கமான மூலோபாய அனுபவம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதும் அதன் மூலம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செல்வாக்கை விரிவாக்குவதும் ஆசியாவில் மற்றும் உலகம் முழுவதும் புதிய பகுதிகளை கட்டியெழுப்புவதும் இன்றியமையாததாகும்.