ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Roots of the Ceylon betrayal

இலங்கை காட்டிக்கொடுப்பின் மூலவேர்கள்

‘பகிரங்க கடிதம்’ வெளியானதற்குப் பின்வந்த மாதங்களில், இலங்கைப் பிரிவானது (லங்கா சம சமாஜக் கட்சி) நடுநிலை எடுப்பதற்கு முனைந்தது. LSSPயின் மத்திய குழுவானது, அனைத்துலகக் குழுவினதும் மற்றும் பப்லோவாத சர்வதேச செயலகத்தினதும் எதிரெதிரான நிலைப்பாடுகள் தொடர்பாக எந்த அரசியல் அறிவிப்பையும் மேற்கொள்ளாத போதும், இக்கடிதத்தை பகிரங்கமாகக் கண்டனம் செய்தது. அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பிரச்சினைகள் மீதான எந்த உண்மையான விவாதத்தையும் தவிர்க்கும் பொருட்டு உடைவுக்கு எதிரான பொதுவான எதிர்ப்புகளை எழுப்பியபடி, பல வருடங்களுக்கும் அவர்கள் இதே நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தனர். இந்த அத்தியாயத்தில் காண்கின்ற கடிதங்களில் கனன் சரியான விதத்தில் இது சர்வதேசியவாதமல்ல, மாறாக அதன் நேரெதிரானது என்று வலியுறுத்தினார். உண்மையில், அரசியல் தெளிவுபடுத்தலை விலைகொடுத்து ‘ஐக்கியத்திற்கு’ கொடுக்கப்பட்ட இந்த மோசடியான முக்கியத்துவம்தான், பத்துவருடங்கள் கழித்து பண்டாரநாயகவின் கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்ததன் மூலம் LSSP செய்த குற்றவியல் காட்டிக்கொடுப்பில் பப்லோவாத ‘அகிலம்’ கொண்டிருந்த பொறுப்பில் முக்கிய பங்கு வகித்தது.

கனன், மண்டேல்-பிரேயிட்மன் கடிதப் பரிவர்த்தனை (அத்தியாயம் ஒன்று) தொடர்பாக கருத்திடுகையில், இந்த பொதுவான உடன்பாட்டின் பின்னால் அடிப்படை வித்தியாசங்கள் இருக்க முடியும் என்ற உண்மைக்கு அவரே கவனம் ஈர்த்திருந்தார். ஏனென்றால் அவரும் SWP தலைவர்களும் இதனை வெறுமனே அவதானித்ததுடன் கடந்து செல்லவில்லை, வெகுவிரைவிலேயே அவர்கள் வேறொரு வடிவத்தில் அதே நிகழ்வுப்போக்கிற்கு பலியாவோராயினர்: பப்லோவிற்கான உத்தியோகபூர்வ எதிர்ப்பிற்குப் பின்னால் 1953 இல் உடைவை அவசியமாக்குகின்ற அளவுக்கு அது போதுமான திறம் கொண்டிருந்தது என்றபோதிலும், அந்த வழிமுறை தொடர்பான ஒரு அடிப்படையான உடன்பாடு அங்கு கீழிருந்தது. இந்தக் காரணத்தினால் தான் கனனும் SWPம் 1963-64க்குள்ளாக எல்லாம் அவர்கள் இங்கே கண்டனம் செய்கின்ற அதே கலைப்புவாதத்தின் முன்னணிப் பிரதிநிதிகளாக ஆகியிருந்தனர். அனைத்துலக் குழு LSSP இனை ட்ரொட்ஸ்கிசத்திற்கு வெற்றிகொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது SWP இனால் எதிர்த்திசையில் திருப்பப்பட்டது.

Letter from L. Goonewardene to James P. Cannon, January 26, 1954

லெஸ்லி குணவர்த்தன ஜேம்ஸ் பி. கனனுக்கு எழுதிய கடிதம், ஜனவரி 26, 1954

January 26, 1954

அன்புள்ள தோழர் கனன்,

தங்களது 1953 டிசம்பர் 16 கடிதத்தை அரசியற்குழு மற்றும் கட்சியின் மத்திய குழுவின் முன்னால் வைத்தபின், அவர்களது வழிகாட்டுதலுக்கு இணங்க இந்தக் கடிதம் எழுதப்பெற்றுள்ளது.

உங்களது கடிதம் இங்கு கிடைத்த சமயத்தில், மத்திய குழுவானது நவம்பர் 16 இல் The Militant இல் வெளியாகிய 'அனைத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்குமான கடிதம்’ தொடர்பாக ஒரு தீர்மானத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டு விட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தின் ஒரு நகலை நான் இணைக்கிறேன். இதனை 1953 டிசம்பர் 22 அன்று நாங்கள் சர்வதேச செயலகத்திற்கு (ISக்கு) அனுப்பி வைத்திருக்கிறோம்.

இந்தத் தீர்மானம் நெடிய விவாதத்திற்குப் பின்னரும் மிக ஆழ்ந்த பரிசீலனைகளுக்குப் பின்னருமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன், ஏனென்றால் மிக ஆழ்ந்த பரிசீலனைகள் இன்றி SWP இன் தேசிய குழுவானது இத்தகையதொரு ஆபத்துமிக்க நடவடிக்கையை எடுத்திருக்கும் என்று எங்களால் சந்தேகிக்க முடியவில்லை. இருப்பினும், இது விடயத்தில் நீங்கள் தொடர்புகொண்டிருப்பதின் வெளிச்சத்தில் நாங்கள் இந்த விவகாரத்தில் மேலதிக பரிசீலனைகள் மேற்கொண்டதற்குப் பின்னரும், எங்களது தீர்மானத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கான எந்த முகாந்திரத்தையும் நாங்கள் காணவில்லை.

நான்காம் அகிலத்தின் ஒரு உலக காங்கிரசை கூட்டுவதற்கு ஒரு இடைக்கால குழுவை அமைக்க அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் சுவிஸ் பெரும்பான்மைகளால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையானது ஒட்டுமொத்தமாக நமது இயக்கத்திற்கு பேரழிவு கொண்டதாக ஆகும் என்பதும் எங்களது மிகவும் பரிசீலிக்கப்பட்ட அபிப்ராயமாகும். இந்த இடைக்கால குழு கொடுத்திருக்கும் ஆவணங்கள் அவர்கள் ஒரு தனியான மற்றும் போட்டி உலக காங்கிரசை கூட்டுவதை நோக்கி வேலைசெய்கிறார்கள் என்று அர்த்தமளிப்பதாகவே நாங்கள் புரிந்துகொள்கிறோம். இது நிகழுமாயின், அதன் பின்விளைவுகள் கணக்கிலடங்காதவையாக இருக்கும். ட்ரொட்ஸ்கிசத்தின் உலக சக்திகளை உலக வரலாற்றின் ஒரு தீர்மானகரமான காலகட்டத்தில் மிகவும் இயங்காததாக செய்யக்கூடும்.

ஆயினும், இந்த விடயங்கள் குறித்த எங்களது பரிசீலனைக்குப் பிந்தைய அபிப்பிராயத்தை உங்களிடம் வெறுமனே வெளிப்படுத்துவதுடன் அவற்றை விட்டு விட நாங்கள் விரும்பவில்லை. அப்படி விடமுடியாத அளவுக்கு நிலைமையும் அபாயகரமாய் இருக்கிறது. தவிரவும், நமது நெருக்கமான ஒத்துழைப்புப் பாதையும், உங்களையும் உங்கள் சகாக்களையும் நோக்கி எப்போதும் நாங்கள் கொண்டிருந்து வந்திருக்கின்ற ஆழமான மரியாதையும் மட்டற்ற தோழமையும், அத்துடன் SWP இன் தேசிய குழு மீது நாங்கள் கொண்டிருக்கும் மரியாதையும் முழுமையாக திருப்பிப்பெறப்படவில்லை என்ற உணர்வும், இதுபோல உங்களிடம் நேரடியாக உரைப்பதானது இப்போது எங்கள் முன் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தென்படுகின்ற உலக ட்ரொட்ஸ்கிச சக்திகளிலான ஒரு நிரந்தரப் பிளவை தடுக்கின்ற நோக்கத்திற்கு இப்போதும் சேவையாற்றக் கூடும் என்ற நம்பிக்கைக்கு எங்களை ஊக்குவிக்கிறது.

எழுந்திருக்கக் கூடிய அரசியல் பிரச்சினைகளில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை இன்னும் எடுத்திருக்கவில்லை என்ற நிலையிலேயே உங்களிடம் நாங்கள் பேசுகிறோம். இது விடயத்தில் போதுமான விபரங்களுக்காக நாங்கள் காத்திருந்து வந்திருக்கிறோம், அத்துடன் இந்த பிரச்சினைகளில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் முன்பாக ஒரு முழுமையான விவாதத்தையும் நாங்கள் நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆயினும் இப்போதிருக்கின்ற அரசியல் பேதங்கள், அவை எத்தனை ஆழ்ந்து செல்கின்றவையாக இருக்கின்ற போதிலும், முதலில் நமது இயக்கத்திற்குள்ளாக முழுவீச்சில் கலந்துரையாடப்படுவதற்கும் வருகின்ற உலக காங்கிரசில் போராடப்படவும் அவசியமாக்குகிறது.

இந்தக் கட்டத்திலும் கூட, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலத்தின் உத்தியோகபூர்வ உலக மையத்தின் அடிப்படை உத்வேகத்தை பகிரங்கமாகத் தாக்குகின்ற பாதையை நிறுத்தி வைப்பதற்கு உங்களிடம் நாங்கள் விண்ணப்பிக்கலாமா. சம்பந்தப்பட்டவர்கள் விடயத்தில் உங்களது அத்தனை முயற்சியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, உத்தியோகபூர்வமாக திட்டமிடப்பட்ட காங்கிரசுக்கு போட்டியாகவும் குரோதமாகவும் ஒரு தனியான காங்கிரசை நடத்துவதை நோக்கி அவர்கள் செல்வதில் இருந்து தடுப்பதற்கும் உங்களிடம் நாங்கள் விண்ணப்பம் செய்யலாமா. மேலும், உத்தியோகபூர்வமாக திட்டமிடப்பட்டிருக்கும் காங்கிரசை முடிந்த அளவுக்கு நமது இயக்கத்தில் உள்ள பல்வேறு போக்குகளுக்குமான முழுமையான பிரதிநிதியாக ஆக்குவதிலும், அதன்மூலமாக இந்த அத்தனை போக்குகளும் ஒரு முழுக்க பரிசீலிக்கப்பட்ட மற்றும் ஜனநாயகப்பட்ட முடிவின் கண்ணோட்டத்தில் இணைந்து விவாதிக்க இயலுவதிலும் ஒத்துழைப்பதற்கும் உங்களிடம் நாங்கள் விண்ணப்பம் செய்யலாமா. குறிப்பாக, அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் சுவிஸ் பெரும்பான்மைகளையும் இடைக்கால குழுவின் வேலைகளில் அவர்களுடன் பிற இடங்களிலும் தொடர்புபட்டவர்களையும் உத்தியோகபூர்வமாக திட்டமிடப்பட்ட காங்கிரசில் பங்கெடுப்பதற்கும், போராடுவதற்கும், அதன்மூலமாக உத்தியோகபூர்வ உலக காங்கிரசில் இந்த பிரச்சினைகளில் அத்தனை தரப்புகளும் சாத்தியமான முழு வீரியத்துடனும் அணிவரிசைகளுடனும் ஒரு முழுமூச்சான யுத்தத்தை நடத்துவதற்கும், ஊக்குவிக்க மிகவும் வேண்டிவிரும்பி உங்களை நாங்கள் கேட்டுக் கொள்ளலாமா. உலக ட்ரொட்ஸ்கிசத்தின் ஒட்டுமொத்தமான சக்திகளும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற ஒரு ஒற்றை உலக காங்கிரசாக நடப்பதை உறுதிசெய்வதில் எங்களால் எந்த வகையிலேனும் உதவ முடியும் என்றால், எங்கள் தரப்பில் அதற்கு முன்நிற்பதில் எங்களுக்கு முழு மகிழ்ச்சியே என்பதையும் நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம். ஒற்றை உலக காங்கிரசில் விவாதத்திற்கும் ஜனநாயக முடிவுக்குமாய் ஒன்றுசேர்வது மட்டுமே, நீண்ட நெடுங்காலமாகவும் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும் தோளோடு தோளாய் நடைபோட்டிருந்தவர்கள் உலக அளவில் ட்ரொட்ஸ்கிசத்திற்கும், அதன் வேலைத்திட்டத்திற்கும், அதன் சிந்தனைகள் மற்றும் அதன் அமைப்புகளுக்கும் புதிய மற்றும் முன்கண்டிராத வாய்ப்புகள் திறந்து கொண்டிருப்பதை முழு அனுகூலமாக்கிக் கொள்வதற்கு தொடர்ந்தும் தோளோடு தோளாய் நடைபோடுவதை உறுதிசெய்வதற்கான ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம். காங்கிரசில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்றுக்கொள்வதற்கான விருப்பத்தின் அடிப்படையில் வரத் தயாராக இருக்கின்ற அத்தனை ட்ரொட்ஸ்கிசப் போக்குகளுக்கும் காங்கிரசில் பிரதிநிதித்துவமளிக்க ஏற்பாடு செய்வது சாத்தியமாக இருந்தாக வேண்டும் என்பதாகவே IEC இன் சமீபத்திய தகவல் பரிவர்த்தனைகளில் இருந்து எங்களுக்கு தெரிய வருகிறது. ஆகவே நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதையும், இயக்கம் நீண்டநெடுங்காலமாக மிக உயரிய தோழமை மரியாதை கொண்டிருந்து வந்திருக்கிறதும், இயக்கம் மிக ஆழமான விதத்தில் கடன்பட்டிருக்கிறதும், அத்துடன் நான்காம் அகிலம் இழக்கத் தகாததுமான தோழர்கள் மற்றும் அமைப்புகளை உலக காங்கிரசுக்கு அழைத்து வருவதில் எந்த விதத்திலேனும் நாங்கள் உதவ இயலுமா என்பதையும் உங்களிடம் நாங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா.

இலங்கை கட்சி தொடர்பான உங்கள் கேள்வியைப் பொறுத்தவரை, உடைந்த குழுவுக்கும் IS க்கும் இடையிலான உறவுகள் குறித்து உங்களுக்கு தவறான தகவல்கள் அளிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் அஞ்சுகிறோம். இது விடயத்தில் நாங்கள் விடுத்திருந்த ஒரு அறிக்கையை இத்துடன் இணைக்கிறோம், அது La Verite இல் வந்த சில அறிக்கைகளுக்கான ஒரு பதிலின் வடிவத்தில் இருக்கிறது.

நாங்களறிந்த வரையில், ஸ்ராலினிச-ஆதரவு கன்னையானது கட்சியில் இருந்து முழுமையாகப் போய்விட்டது. கட்சி சித்தாந்தரீதியிலும் அமைப்புரீதியிலும் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒற்றுமையாக இருக்கிறது; மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறது; கஷ்டப்பட்டுக் கற்கிறது கடுமையாக உழைக்கிறது; அத்துடன் அதன் சாமானியக் காரியாளர்களில் வெளிப்படையாகவோ அல்லது இரகசியமாகவோ ஸ்ராலினிச-ஆதரவான எதுவொன்றையும் சகித்துக் கொள்கின்ற மனோநிலை அறவே அற்றதாக இருக்கிறது. உள்ளூர் ஸ்ராலினிசத்தின் இரண்டு சாரிகளிலுமான எதிர்ப்புகளின் மூலமும், சமீபத்தில் பகிரங்கமாக வெடித்திருக்கின்ற எதிர்ப்புகளின் மூலமுமான கன்னைச் சண்டை மற்றும் உடைவில் இருந்து மீள்வதில் நாங்கள் உதவியளிக்கப் பெற்று வருகிறோம். ஸ்ராலினிசத்துக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்கிறபோதும், இலங்கையில் வெகுஜன இயக்கத்திற்கான நமது தொடர்ச்சியான தலைமைக்கான போராட்டத்தில் அவர்களுக்கு எதிராக வெற்றிபெறும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று எங்களால் கூற முடியும் என்றே நான் கருதுகிறேன்.

சகோதரத்துவடன்,
லெஸ்லி குணவர்த்தன
செயலர்