ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

13

The Causes and Consequences of World War II1

இரண்டாம் உலக யுத்தத்திற்கான காரணங்களும், விளைவுகளும்1

இந்த உரையின் பிரதான கவனம் இரண்டாம் உலக போரைத் தூண்டிவிட்ட பிரத்தியேகமான முரண்பாடுகள் மீதோ மற்றும் சம்பவங்களின் மீதோ இருக்காது, மாறாக அந்த போருக்கான மிகப் பொதுவான காரணங்களின் மீதே கவனம்செலுத்தும்.

1939 மற்றும் 1945க்கு இடையே பாரியளவில் பிரளயம் கட்டவிழ்ந்திருந்த நிலையில், போருக்கான காரணங்களை பிரதானமாக, அவற்றின் பரந்த வரலாற்று உள்ளடக்கத்திற்கு அப்பாற்பட்டு டான்சிக் (Danzig) பகுதி பிரச்சினை போன்ற மோதல்களுக்கு இட்டுச்சென்ற இராஜதந்திரரீதியிலான முரண்பாடுகளுக்குள் தேட முனைவது என்பது முற்றிலும் மேலோட்டமானதாகவும், முட்டாள்த்தனமானதாகவுமே இருக்கும்.

இரண்டாம் உலகப் போரின் காரணங்களைக் குறித்த எவ்விதமான கவனத்திற்கெடுப்பும், 1914 மற்றும் 1918க்கு இடையே நிகழ்ந்த முதல் உலகளாவிய இராணுவ மோதல் நடந்து வெறும் இருப்பத்தைந்து ஆண்டுகளில், 1939 மற்றும் 1945க்கு இடையிலான உலகளாவிய இராணுவ மோதலில் இருந்து வெளிப்பட்டு வந்திருந்தது என்ற உண்மையிலிருந்து தொடங்க வேண்டும். முதலாம் உலக போருக்கும் இரண்டாம் உலக போருக்கும் இடையே வெறும் இருப்பத்தியொரு ஆண்டுகள் மட்டுமே கடந்திருந்தன. இதை வேறொரு விதத்தில் பார்ப்பதென்றால், வெறும் முப்பத்தியொரு ஆண்டுகால இடைவெளியில், இரண்டு பேரழிவுகரமான உலகளாவிய போர்கள் நடாத்தப்பட்டிருந்தன.

இதையொரு சமகாலத்திய முன்னோக்கில் நிறுத்தினால், 1914 மற்றும் 1945க்கு இடையிலான காலஇடைவெளியானது, கார்ட்டர் நிர்வாகத்தினது மத்திய பகுதியான 1978க்கும் மற்றும் 2009க்கும் இடையிலான அதே காலஅளவாகும். வரலாற்று கண்ணோட்டத்தின் இந்த அர்த்தத்தில் —வரலாற்று காலகட்டத்திற்கேற்ப அவசியமான மாற்றங்களோடு— 1960இல் பிறந்த ஒருவர் 1978இல் பதினெட்டு வயதில் இருந்திருப்பார், அதாவது, ஒரு போரில் சண்டையிடுவதற்கு இழுக்கப்படக்கூடிய வயதில் இருந்திருப்பார் எனக் கொள்ளலாம். முதலாம் உலக போரில் பதினெட்டு வயதில் சண்டையில் ஈடுபட்ட ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, உயிர் பிழைத்திருந்தால் போர் முடிகையில வெறும் இருபத்தி-இரண்டு வயதில் இருந்திருப்பார். அந்த ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு இரண்டாம் உலக போர் தொடங்கியபோது வெறும் நாற்பத்தி-மூன்று வயதாகி இருக்கும் என்பதுடன், அப்போர் நிறைவடைந்த போது அவர் வெறும் நாற்பத்தி-ஒன்பது வயதில் இருந்திருப்பார்.

மனிதயின வரையறைகளில் ஆகட்டும் அல்லது தனிநபரின் வரையறைகளில் ஆகட்டும் இது எதைக் குறிக்கிறது? அதாவது ஒருவர் அவரது ஐம்பது வயதை அடைவதற்கு உள்ளேயே, அந்த ஆணோ அல்லது பெண்ணோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஒரு மலைப்பூட்டும் அளவிலான வன்முறையை பார்த்திருப்பார் என்பதைத் தானே குறிக்கிறது. அந்த போர்களின் காலப்போக்கில் அனேகமாக அவருக்குத் தெரிந்த பல மனிதர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.

நிச்சயமாக, அந்த இரண்டு போர்களின் போதும் ஒருவர் எந்தளவுக்கு மரணங்களை சந்தித்திருப்பார் என்பது அவர் எங்கே வாழ்ந்தார் என்பதை சார்ந்தது தான். சராசரியாக ஒரு அமெரிக்கர்களின் அனுபவம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, போலாந்து, ரஷ்யா, சீனா அல்லது ஜப்பானில் இருந்த சராசரி நபர்களது அனுபவங்களைப் போன்று இருந்திருக்காது தான்.

உலக போர்களுக்கான மனித விலை

முதலாம் உலக போரில், மொத்த உயிரிழப்புகள் ஒன்பது மில்லியனில் இருந்து பதினாறு மில்லியனுக்கும் அதிகமாக இருந்திருக்குமென மதிப்பிடப்படுகிறது. போரிட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6.8 மில்லியனாக இருந்தது. விபத்துக்கள், நோய் மற்றும் யுத்தக்கைதிகளின் முகாம்களில் (POW) சிறைப்படுத்தல் ஆகியவற்றால் கூடுதலாக இரண்டு மில்லியன் இராணுவ உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன

நாடு உயிரிழப்புகள் கொல்லப்பட்ட மக்களின் சதவீதம்
ஆஸ்திரேலியா 61,928 1.38
பிரிட்டன் 994,134 2.19
பெல்ஜியம் 120,637 1.63
கனடா 66,944 0.93
பிரான்ஸ் 1,697,800 4.29
கிரீஸ் 176,000 3.67
இத்தாலி 1,240,000 3.48
ருமேனியா 680,000 9.07
ரஷ்யா 3,311,000 1.89
சேர்பியா 725,000 16.11
ஐக்கிய அரசுகள் (அமெரிக்கா) 117,465 0.13

புள்ளிவிபரம் 1.  முதலாம் உலக போரில், நேச நாடுகள் தரப்பில் நாடு வாரியாக உயிரிழப்புகள் 

நாடு உயிரிழப்புகள் கொல்லப்பட்ட மக்களின் சதவீதம்
ஆஸ்திரிய-ஹங்கேரி 1,567,000 3.05
பல்கேரியா 187,500 3.41
ஜேர்மனி 2,476,897 3.82
ஒட்டாமன் பேரரசு 2,921,844 13.72

புள்ளிவிபரம் 2. முதலாம் உலக போரில், மத்திய சக்திகள் (Central powers) தரப்பில், நாடுவாரியாக உயிரிழப்புகள்

நாடு உயிரிழப்புகள் கொல்லப்பட்ட மக்களின் சதவீதம்
சீனா 10,000,000-20,000,000 2இல் இருந்து 4
டச்சு கிழக்கு இந்தியா (Dutch East Indies ) 3,000,000-4,000,000 4.3இல் இருந்து 5.76
பிரெஞ்சு இந்தோசீனா 1,000,000-1,5000,000 4இல் இருந்து 6
கிரீஸ் 800,000 11.7
ஜப்பான் 2,700,000 3.78
ஜேர்மனி 5,600,000-6,500,000 7.8இல் இருந்து 9.4
போலந்து 5,800,000 16.5
சோவியத் ஒன்றியம் 24,000,000 14
ஐக்கிய அரசுகள் (அமெரிக்கா) 418,000 0.32

புள்ளிவிபரம் 3. இரண்டாம் உலக போரில் நாடுவாரியாக உயரிழந்தவர்களின் எண்ணிக்கை

அட்டவணை 1 மற்றும் 2, முதலாம் உலக போரில் நாடுவாரியாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கையின் பகுப்பை அளிக்கின்றன. அவை அதிர்ச்சியூட்டும் இழப்புகளாகும். போரால் நேரடியாக தோற்றுவிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மரணங்களுக்கு போரின் உடனடி விளைவே காரணமாக இருந்ததுடன், தற்காலிக போர்நிறுத்தத்திற்கு பின்னர், உடல்ரீதியில் பலவீனமான மக்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய கடுமையான தொற்றுநோய்களால் இன்னும் கூடுதலாக இருபது மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.2

இரண்டாம் உலக போருக்குக் கொடுக்கப்பட்ட மனித விலை, முதலாம் உலக போரை விடவும் பெரிதும் அதிகமாகும். ஐந்து மில்லியன் போர் கைதிகளின் உயிரிழப்புகள் உட்பட மொத்தம் இருபத்திரண்டில் இருந்து இருபத்தைந்து மில்லியன் வரையில் இராணுவ உயிரிழப்புகள் இருந்தன. அந்த பெருஞ்சுழலில் மிகவும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த பல நாடுகள் கண்ட உயிரிழப்பு எண்ணிக்கையை ஆராய்வோம். போலந்து அதன் மக்கள் தொகையில் 16 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை இழந்தது. சோவியத் ஒன்றியம் அண்ணளவாக 14 சதவீதம் இழந்தது. கிரீஸின் மக்கள் தொகையில் பதினொரு சதவீதத்தினர் கொல்லப்பட்டனர். குறைந்தபட்சம் 10 சதவீதத்தினரை இழந்த ஏனைய நாடுகளில், லித்துவேனியா மற்றும் லாத்வியா இருந்தன. மக்களில் குறைந்தபட்சம் 3 சதவீதத்தை இழந்த ஏனைய நாடுகளில், எஸ்தோனியா, ஹங்கேரி, நெதர்லாந்து, ருமேனியா, சிங்கப்பூர் மற்றும் யூகோஸ்லாவியா ஆகியவை இருந்தன.

இந்த உயிரிழப்பினுள் ஐரோப்பிய யூத இனப்படுகொலைகளும் உள்ளடங்கும். 1939 மற்றும் 1945க்கு இடையே ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர். அதில் மூன்று மில்லியன் போலந்து யூதர்களும் மற்றும் ஒரு மில்லியனுக்கு அண்மித்தளவில் உக்ரேனிய யூதர்களும் உள்ளடங்குவர். சதவீத வரையறைகளில் கூறுவதானால், போலந்து, பால்டிக் நாடுகள் மற்றும் ஜேர்மனிய யூதர்களில் 90 சதவீதத்தினர் கொல்லப்பட்டனர். 80 சதவீதத்திற்கும் அதிகமான செக்கோஸ்லோவாகிய யூதர்கள் கொல்லப்பட்டனர். 40 சதவீதத்திற்கும் அதிகமான நோர்வேஜிய யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 20 சதவீதத்திற்கும் அதிகமாக பிரெஞ்சு, பல்கேரிய மற்றும் இத்தாலிய யூதர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த இனப்படுகொலை நடவடிக்கை உள்ளூர் அதிகாரிகளினது கணிசமான ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. அதன் யூத மக்களைக் காப்பாற்றுவதற்கு உள்நாட்டு மக்களின் ஓர் ஒன்றுபட்ட முயற்சியைக் கொண்டிருந்த ஒரே நாஜி ஆக்கிரமிப்பு நாடாக டென்மார்க் மட்டுமே இருந்தது. அந்நாடு ஜேர்மனியை எல்லையாகக் கொண்டிருந்த போதினும், அங்கே போருக்கு முன்னர் இருந்த 8,000 யூதர்களில், வெறும் ஐம்பத்திரண்டு யூதர்கள் மட்டுமே நாஜிகளின் பயங்கரத்திற்கு பலியானார்கள் — அது 1 சதவீதத்திற்கும் குறைவாகும்.

சிறந்த மதிப்பீடுகளின்படி, முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களில், எண்பது மற்றும் தொண்னூறு மில்லியன் மக்களுக்கு இடையே மனித உயிர்கள் விலையாக கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு போர்களாலும் ஏதோவிதத்தில் உடல் ஊனமடைந்த அல்லது மனரீதியில் பாதிக்கப்பட்ட நூறு மில்லியன் கணக்கானவர்களையும் —அதாவது பெற்றோர்களை, குழந்தைகளை, உறவினர்களை மற்றும் நண்பர்களை இழந்தவர்கள்; தங்களின் சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர, நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டவர்கள், மற்றும் விலைமதிப்பில்லாத மற்றும் ஈடுசெய்யவியலாத தங்களின் தனிப்பட்ட மற்றும் கலாச்சார பாரம்பரியங்களுடனான தொடர்புகளை இழந்தவர்கள் என இவர்களையும்— ஒருவர் கூடுதலாக இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 1914 மற்றும் 1945க்கு இடையே முப்பத்தியொரு ஆண்டுகளில் நடந்த படுகொடூரமான துயரத்தின் அளவை, புரிய வைப்பது ஒருபுறம் இருக்கட்டும், அதை வெளிப்படுத்திக் காட்டுவதும் கூட மிகவும் சிக்கலானதாகும்.

இந்த பாரிய துயரங்கள் ஒப்பீட்டளவில் ஒரு குறுகிய காலத்திற்கு முன்னர்தான் நடந்திருந்தன என்பதை தயவுடன் நினைவில் கொள்ளுங்கள். இரண்டாம் உலக போரினூடாக வாழ்ந்த பத்து மில்லியன் கணக்கான மக்கள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள். மேலும் எனது தலைமுறை மக்களுக்கு, முதலாம் உலகப் போர் சம்பவங்கள் எங்களது தாத்தாக்கள் வாழ்ந்த காலத்தில் நடந்தவையாகும் — அவர்களில் பலர், அந்த போரில் ஈடுபட்டிருந்தார்கள். முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போர் மிகவும் சமீபத்திய வரலாற்றைச் சார்ந்தவை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் இத்தகைய இரட்டை பேரழிவுகளின் விளைபொருளாகும். அந்த யுத்தங்கள், எந்த அரசியல் மற்றும் பொருளாதார முரண்பாடுகளில் இருந்து வெடித்தனவோ, அவை இன்னமும் தீர்க்கப்படவில்லை. இரண்டாம் உலக போர் வெடித்ததன் எழுபதாவது நினைவாண்டை அதன் தோற்றுவாய்கள், விளைவுகள் மற்றும் படிப்பினைகளை மறுஆய்வு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக பார்க்க, இந்த வரலாற்று உண்மை மட்டுமே கூட போதுமான காரணமாக உள்ளது.

நிச்சயமாக, இந்த தனித்தொரு விரிவுரைக்குள், போருக்கான பிரதான காரணங்களின் ஒரு வருந்தத்தக்க சுருக்கமான விளக்கத்தை மட்டுமே வழங்க முடியும். ஆனால் தெளிவுபடுத்துவதற்காக இந்த சுருக்கமான விளக்கம், தேவையற்ற மிகவும்-எளிமைப்படுத்தல் இல்லாமல், பிரிக்க முடியாதபடிக்கு ஒன்றையொன்று சார்ந்த அத்தியாயங்களாக முதலாம் உலக போரையும் மற்றும் இரண்டாம் உலக போரையும் கையாளும்.

முதலாம் உலகப் போரின் தோற்றுவாய்கள்

1914இன் கோடையில் அந்நெருக்கடி கட்டவிழ்ந்த வேகம் பலரை ஆச்சரியத்தில் கொண்டு சென்றது. ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்ஸ் பேர்டினாண்ட் ஜூன் 28, 1914இல் சரயேவோவில் படுகொலை செய்யப்பட்டமை, வெறும் ஐந்து வாரங்களுக்குள், ஒரு முழு-அளவிலான ஐரோப்பிய போருக்கு இட்டுச் செல்லுமென்பதை வெகுசிலரே அனுமானித்திருந்தனர். ஏப்ரல் 1917இல் அந்த மோதலில் அமெரிக்க நுழைவுடன் சேர்ந்து அது உலகளாவிய பரிணாமத்தை ஏற்குமென்பதை அவர்கள் முன்மதிப்பீடு செய்யவில்லை. ஒரு பேரழிவுகரமான இராணுவ மோதலுக்கான நிலைமைகள் அதற்கு முந்தைய பதினைந்து ஆண்டுகளில் முதிர்ந்து வந்திருந்தன, அந்த நிலைமைகள் உலகப் பொருளாதாரத்தின், மற்றும் அதன் விளைவாக உலக அரசியலின் வேகமான மாற்றங்களுடன் பிணைந்திருந்தன.

1914 வெடிப்புக்கு முன்னர், அங்கே 1815இல் நெப்போலியனிய போர்களின் முடிவுக்குப் பின்னரில் இருந்து ஐரோப்பிய "வல்லரசுகளுக்கு" இடையே பொதுவான போர்கள் இருந்திருக்கவில்லை. வியன்னா மாநாடு, நாடுகளுக்கிடையிலான உறவுகளில் ஒப்பீட்டளவில் ஒரு ஸ்திரமான கட்டமைப்பை உருவாக்கி இருந்ததுடன், அந்த உறவுகள் அந்நூற்றாண்டின் எஞ்சிய காலத்தில் நீடித்திருந்தது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டு சமாதானமாக இருந்தது என்பதை அர்த்தப்படுத்தாது. தேசிய-அரசு அமைப்புமுறை, குறிப்பிடத்தக்க தொடர்ச்சியான இராணுவ மோதல்களிலிருந்துதான் அதன் நவீன வடிவத்திற்கு வந்தது, அதில் மிகவும் இரத்தக்களரியோடு இருந்தது அமெரிக்க உள்நாட்டு போராகும். ஐரோப்பாவில், டென்மார்க் (1864), ஆஸ்திரியா (1866) மற்றும் இறுதியாக பிரான்ஸ் (1870) ஆகியவற்றிற்கு எதிராக திட்டமிட்டு இராணுவ பலத்தை பிரயோகித்ததன் மூலம் பிஸ்மார்க்கின் கீழ் பிரஷ்யாவின் அரசியல் மேலாதிக்கத்தின் கீழ் நவீன ஜேர்மன் அரசின் உறுதிப்படுத்தல் அடையப்பட்டது. 1850களின் தொடக்கத்திலேயே, பிரிட்டனும் பிரெஞ்சும் கிறிமிய (Crimean) மோதலில் ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தின் புவிசார் அரசியல் அபிலாஷைகளை எதிர்த்தன. இருப்பினும் அந்த இராணுவ மோதல்கள் ஒப்பீட்டளவில் மட்டுப்பட்டு இருந்தன என்பதுடன், அது ஐரோப்பிய மற்றும் உலகளாவிய அரசியலின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் உடைவதற்கு இட்டுச் செல்லவில்லை.

ஆனால் 1890களின் அளவில், அதுவும் குறிப்பாக ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவில் முதலாளித்துவ நிதியியல் மற்றும் தொழில்துறையின் பாரிய விரிவாக்கத்தினது தாக்கத்தின் கீழ், ஏற்பட்ட நிலைமைகளின் கீழ், உலக அரசியல் இயல்பு மாறி வந்தது, அத்துடன் தேசிய அரசுகளின் கணக்கீடுகளில் உலகளாவிய பொருளாதார நலன்களின் அதிகரித்துவரும் ஆதிக்கம் மேலோங்கி வந்தன. குறிப்பிட்ட “செல்வாக்கு எல்லைக்குள்" ஆதிக்கம் செலுத்துவதற்காக பிரதான முதலாளித்துவ அரசுகளுக்கு இடையிலான மோதல் — அல்லது இன்னும் துல்லியமாக கூறுவதானால், வெளியுறவு கொள்கையை உருவாக்குவதன் மீது பரந்த செல்வாக்கு செலுத்தி வந்த மிகவும் சக்திவாய்ந்த நிதியியல் மற்றும் தொழில்துறை நலன்களுக்கு இடையிலான மோதல் உலக அரசியலின் உந்துசக்தியாக மாறியிருந்தது. இந்த நிகழ்வுகள் காலனிகளுக்கான போராட்டத்தில் அதன் மிகவும் கொடூரமான வெளிப்பாட்டைக் கண்டது, அந்நாடுகளின் உள்ளூர் மக்கள் ஒரு அரை-அடிமை அந்தஸ்திற்குக் குறைக்கப்பட்டனர்.

ஏகாதிபத்திய சகாப்தத்திற்கான காலம் உதித்தது. அது உலகளவில் நாடுகளுக்கிடையிலான உறவுகளின் சமநிலையை சீர்குலைத்தது. நெப்போலியனிய போர்களின் முடிவுக்கு பிந்தைய தசாப்தங்களில், பிரிட்டன் தோற்றப்பாட்டளவில் சவாலுக்கிடமற்ற மேலாதிக்க நிலைமையை அனுபவித்து கொண்டிருந்தது. அதன் கடற்படை பலம் மற்றும் பரந்த காலனித்துவ உடைமைகளின் அடிப்படையில் இருந்த அதன் சாம்ராஜ்ஜியம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் சர்வதேச அரசியலில் சக்திவாய்ந்த உண்மையாக விளங்கியது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தால் பொதுவாக கூறப்பட்டதைப் போல, சூரியன் அஸ்தமனமாவதே இல்லை, கூலிகளும் உயர்வதே இல்லை! பிரான்ஸூம் ஒரு முன்னைய காலனித்துவ சக்தியாக உலக அமைப்புமுறையில் தனிச்சலுகை கொண்ட அந்தஸ்தை அனுபவித்து வந்தது, ஆனால் கணிசமான அளவுக்கு பிரிட்டனைவிட பின்தங்கியே இருந்தது. புதிய முதலாளித்துவ தேசிய அரசுகளின் மேலெழுச்சி, வேகமாக விரிவடைந்த முதலாளித்துவ தொழில்துறை மற்றும் நிதியத்தோடு சேர்ந்து, அப்போது நிலவிய புவிசார் அரசியல் உறவுகளை அழுத்தத்தின்கீழ் கொண்டு வந்தது. ஜேர்மனியும் அமெரிக்காவும், ஏகாதிபத்திய நலன்கள் மற்றும் வேட்கையை வேகமாக பெற்று வந்து கொண்டிருந்த, இரண்டு மிக முக்கிய "புதிய" முதலாளித்துவ அரசுகளாக இருந்தன.

1898இல் வரையறையற்ற வெறுப்போடு, பாசாங்குத்தனத்தோடு, நேர்மையின்மையோடு மெக்கின்லி நிர்வாகம் ஸ்பெயினுக்கு எதிரான போருக்கு ஒரு போலிக்காரணத்தை இட்டுக்கட்டிய போதுதான், அந்த ஏகாதிபத்திய முகாமுக்குள் அமெரிக்கா நுழைந்தது. ஒருசில மாதங்களுக்குள்ளேயே, அமெரிக்காவின் ஒரு அரைக்காலனியாக கியூபா மாற்றப்பட்டது. அதேநேரத்தில், பிலிப்பைன்ஸை ஆக்கிரமித்ததன் மூலமாக, அமெரிக்கா, பசிபிக்கில் அதன் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான அடித்தளங்களை ஸ்தாபித்தது. பிலிப்பைன்ஸில் வாழும் அமெரிக்கர்களுக்கு சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்ற வாக்குறுதியுடன் அதன் பிலிப்பைன்ஸ் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி, அங்கே அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த 200,000 உள்நாட்டு கிளர்ச்சியாளர்களைப் படுகொலை செய்ததன் மூலமாக தான் செய்தவைக்கு மதிப்பளித்துக்கொண்டது.

ஒரு விலைமதிப்பற்ற நிலப்பிரதேச அனுகூலத்துடன் அமெரிக்கா ஆசிர்வதிக்கப்பட்டது: அது இரண்டு பெருங்கடல்களால் அன்னிய தலையீடுகளில் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு கண்டமாகும். பெரும்பாலான ஐரோப்பிய சக்திகள், மெக்கின்லியின் நேர்மையற்ற போர்வெறி கொண்ட கொடூரத்தால் அதிர்ச்சி அடைந்தனர், ஆனால் அதுதொடர்பாக அவர்களால் எதுவும் செய்யமுடியாது இருந்தது.

மறுபுறம், ஜேர்மனியின் அதிகரித்து வந்த அபிலாஷைகள், ஐரோப்பாவில் அதன் ஏகாதிபத்திய அண்டைநாடுகளான பிரான்ஸ், ரஷ்யா, மற்றும், அனைத்திற்கும் மேலாக, பிரிட்டனுடன் உடனடியாக மோதலுக்கு வந்தது. அதிகரித்துவந்த ஒருங்கிணைந்த பூகோளமயப்பட்ட பொருளாதாரத்திற்குள் மேலாதிக்கம் கோரிய, சக்திவாய்ந்த தேசிய முதலாளித்துவ அரசுளிடையே விரிவடைந்து வந்த மோதல்கள், புவிசார் அரசியல் பதட்டங்கள் ஒன்றுதிரள்வதற்குரிய நிஜமான அடித்தளத்தை உருவாக்கின, அது இறுதியில் 1914இன் கோடையில் வெடிப்புடன் வெளிப்பட்டது.

முதலாம் உலக போரின் போதும், குறிப்பாக அதற்கு பின்னரும், அங்கே "யார் அந்த போரைத் தொடங்கியது," “யார் முதலில் தாக்குதலைத் தொடங்கியது", “யாரைக் குறைகூறுவது" என்பதன் மீது மிகப்பெரிய விவாதங்கள் இருந்தன. அந்த போரில் ஈடுபட்ட அரசுகளின் ஆளும் குழுக்கள், அவை செய்திருந்த வெறித்தனமான பேரழிவுகர விளைவுகளுக்கான பொறுப்புகளிலிருந்து தங்களைத்தாங்களே விடுவித்துக்கொள்ள கவலை கொண்டிருந்த நிலையில், அத்தகைய கேள்விகள் இந்த பிரச்சாரத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன.

பரந்த வரலாற்று சூழல்களை விலக்கிவைத்து ஆராய்ந்தால், ஆகஸ்ட் 1914இல் யுத்தம் வெடித்ததற்கு ஜேர்மனியும் மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரியுமே பிரதான பொறுப்பாகும் என்பதற்கு அங்கே நிறைய சான்றுகள் உள்ளன. அவற்றின் அரசாங்கங்கள் நீண்டகால புவிசார் அரசியல் நோக்கங்களை எட்டுவதற்காக, நம்பவியலாத அடாவடித்தனத்துடன், ஃபிரன்ஸ் பேர்டினாண்டின் படுகொலையை தமக்கு சாதகமாக பயன்படுத்த தேர்ந்தெடுத்திருந்தன. விரோதங்கள் வெடிப்பதற்கு இட்டுச் சென்ற சங்கிலித்தொடர் போன்ற பேரழிவுகரமான சம்பவங்களை ஆரம்பித்து வைப்பதற்கான முடிவுகளை அவை எடுத்திருந்தன. ஆனால், முற்றுமுதலான பொய்களின் அடிப்படையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் வாஷிங்டன் போர்களை தொடங்கியதை நாம் சமீபத்தில் பார்த்திருப்பதைப் போல, முதலாளித்துவ அரசுகள் எந்தளவிற்கு குற்றம்மிக்க தன்மையானவை என்பதை எடுத்துக்காட்டுவதற்கு அப்பாலும், ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியா மீதான ஆய்வுகள் பற்றிய அந்த முன்னாய்வுகள், போரின் ஆழ்ந்த காரணங்களுக்கு விளக்கமளிப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை.

பிரான்ஸூம் பிரிட்டனும் ஆகஸ்ட் 1914இல் முக்கியமாக போரை நாடவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவை தார்மீகரீதியில் சமாதானத்திற்கு அர்பணித்திருந்தன என்றாகாது. பிரிட்டன், அதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர்தான், தென்னாபிரிக்காவின் போயர்ஸிற்கு (Boers) எதிராக ஒரு படுபயங்கர எதிர்-கிளர்ச்சி போரை நடத்தி இருந்ததென்பதை நினைவுகூர வேண்டும். 1914இல் பிரிட்டனும் பிரான்ஸூம் அவசியமானரீதியில் போரை "நாடவில்லை" தான், அது ஏனென்றால், அவை அவற்றினது உலகளாவிய நலன்களுக்கு அனுகூலமாக அப்போதிருந்த அவர்களின் புவிசார் அரசியல் நிலைமையுடன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ திருப்தியாக இருந்தன. ஆனால், அப்போதிருந்த கட்டமைப்பை மற்றும் அவர்களின் நலன்களை அச்சுறுத்திய ஜேர்மனி மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரியினது நடவடிக்கைகளை அவை எதிர்கொண்டபோது, போரை அவை ஓர் அரசியல் தேவையாக ஏற்க வேண்டியிருந்தது. ஜேர்மனி விரும்பிய வழியில் சக்திகளின் சமநிலை மாற்றமடைந்ததால், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் ஏகாதிபத்திய நலன்களின் நிலைப்பாட்டின்படி, சமாதானத்தைவிட போர் அவர்களுக்கு முன்தேர்வுக்குரிய ஒன்றாக இருந்தது.

ஆய்வின் இறுதியாக, போருக்கான காரணத்தை, தாக்குதலைத் துரிதப்படுத்திய ஏதோவொரு அரசின் நடவடிக்கைகளிலும் காண இயலாது, மாறாக அதிகரித்துவந்த ஒருங்கிணைந்த பூகோளமயப்பட்ட பொருளாதார அமைப்பில், ஒரு மேலாதிக்க இடத்தை தக்கவைக்க அல்லது சூழ்நிலைகளை சார்ந்து அதை அடைவதற்காக சக்திவாய்ந்த முதலாளித்துவ தேசிய அரசுகளின் மோதலைக் கொண்டிருந்த, ஏகாதிபத்திய அமைப்புமுறையின் இயல்பில்தான் அதைக் காண இயலும்.

போருக்கு முந்தைய ஆண்டுகளில், சர்வதேச சோசலிச இயக்கம் தொடர்ச்சியாக பல மாநாடுகளை நடத்தி இருந்தது, அவற்றில் அது ஏகாதிபத்தியம் மற்றும் அது ஊக்குவித்த இராணுவவாதத்தின் மரணகரமான விளைவுகளை எச்சரித்திருந்தது. 1889இல் ஸ்தாபிக்கப்பட்ட இரண்டாம் அகிலம், முதலாளித்துவ இராணுவவாதத்திற்கு அதன் சளைக்காத எதிர்ப்பை மீண்டும் மீண்டும் பிரகடனப்படுத்தியதோடு, போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்ட சூளுரைத்தது. போர் நிறுத்தப்பட முடியாமல் போனால், போரால் உண்டாக்கப்படும் நெருக்கடியை முதலாளித்துவத்தை தூக்கியெறிவதை துரிதப்படுத்துவதற்கு அகிலமானது பயன்படுத்திக்கொள்ளும் என அது ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தை எச்சரித்தது.

ஆனால் ஆகஸ்ட் 1914இல் அந்த சூளுரைகள் எல்லாம் நடைமுறையில் ஐரோப்பிய சோசலிச தலைவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டன. ஆகஸ்ட் 4, 1914இல் உலகின் மிகப்பெரிய சோசலிஸ்ட் கட்சியான ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி, போருக்கு நிதியளிக்க கடன்கள் வழங்குமாறு ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Reichstag) ஆதரவாக வாக்களித்தது. அதே தேசப்பற்றுவாத நிலைப்பாடு பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் பிரிட்டனில் இருந்த சோசலிச தலைவர்களாலும் எடுக்கப்பட்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய பிரதான சோசலிச தலைவர்கள் மட்டுமே போருக்கு எதிரான ஒரு தெளிவான மற்றும் தயவுதாட்சண்யமற்ற நிலைப்பாட்டை எடுத்தனர், அவர்களில் லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் ரோசா லுக்செம்பேர்க் ஆகியோர் மிக முக்கியமானவர்கள் ஆவர்.

முதலாம் உலக போரின் காரணங்கள் குறித்து ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு

போருக்கான காரணங்கள் குறித்து ட்ரொட்ஸ்கியினது பகுப்பாய்வுகள் மீது நான் சுருக்கமாக கவனத்தைக் செலுத்த விரும்புகிறேன். போரை-ஆதரித்த சோசலிச தலைவர்கள், அன்னிய படையெடுப்புக்கு எதிராக தங்களின் நாடுகளைக் காப்பாற்ற அவர்களது முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக வாதிட்ட அவர்களின் வஞ்சகத்தனமான மற்றும் பாசாங்குத்தனமான வாதங்களை ட்ரொட்ஸ்கி புறக்கணித்து நிராகரித்தார். போருக்குச் செல்ல வேண்டுமென்ற அவற்றின் முடிவுகளுக்கு அடியிலிருந்த, நிஜமான அரசியல் மற்றும் பொருளாதார உந்துதல்களை மூடிமறைக்க, போர்நாடும் அரசாங்கங்களது அப்பட்டமான பொய்களை அவர் அம்பலப்படுத்தினார். அவர் வலியுறுத்துகையில், போருக்கான காரணம் இன்னும் ஆழமாக, உலகப் பொருளாதார கட்டமைப்பின் மாற்றங்களிலும் மற்றும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் இயல்பிலேயுமே தங்கியுள்ளது என்றார்.

போர் வெடித்ததும் ஆஸ்திரியாவிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்ட ட்ரொட்ஸ்கி, முதலில் சூரிச்சிற்கு சென்று, அங்கே, 1915இல், போரும் அகிலமும் என்ற ஒரு சிறந்த சிறுஅறிக்கையை எழுதி, அதில் யுத்தத்தின் முக்கியத்துவத்தை அவர் விளங்கப்படுத்தி இருந்தார்.

தற்போதைய போர், தேசங்களினதும் மற்றும் அரசினதும் அரசியல் வடிவத்திற்கு எதிராக, அடிமட்டத்தில் உற்பத்தி சக்திகளின் ஒரு கிளர்ச்சியாகும். இது ஒரு சுதந்திரமான பொருளாதார அலகாக இருந்த தேசிய அரசு பொறிந்து போனதையே அர்த்தப்படுத்துகிறது.

தேசம் என்பது ஒரு கலாச்சார, சித்தாந்த மற்றும் உளவியல்ரீதியான உண்மையாக தொடர்ந்து இருக்கலாம், ஆனால் அதன் பொருளாதார அடித்தளம் அதன் அடியிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுவிட்டது. தற்போதைய இரத்தந்தோய்ந்த மோதல், தேசத்தின் பாதுகாப்புக்கான பணி என்ற அனைத்து பேச்சுக்களும் ஒன்று போலித்தனமாக இருக்கின்றன அல்லது அறியாமையானவையாக இருக்கின்றன. அதற்கு மாறுபட்ட விதத்தில், யுத்தத்தின் நிஜமான புறநிலை முக்கியத்துவம், தற்போதைய தேசிய பொருளாதார மையங்களின் வெடிப்பிலும், மற்றும் அதற்கு பதிலாக ஓர் உலக பொருளாதாரத்தால் மாற்றீடு செய்யப்படுவதிலும் தங்கி உள்ளது. ஆனால் ஏகாதிபத்தியத்தின் இந்த பிரச்சினையை தீர்க்க, அரசாங்கங்கள் எதை பரிந்துரைக்கின்றனவோ, அது ஒரு புத்திசாலித்தனமான முறையிலிருந்தோ, மனிதகுலத்தின் உற்பத்தியாளர்களது ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்து கூட்டுழைப்பிலிருந்தோ வரவில்லை, மாறாக வெற்றிபெறும் நாடுகளின் முதலாளித்துவ வர்க்கம், உலகப் பொருளாதார அமைப்புமுறையை சுரண்டுவதற்காகவும் மற்றும் இந்த போரினூடாக எந்த நாடு ஒரு வல்லரசு என்பதிலிருந்து, ஓர் உலக சக்தியாக மாற்றம் பெறுவது என்பதே அதன் தீர்வாக உள்ளது.

போரானது தேசிய அரசின் வீழ்ச்சியை முன்னறிவிக்கின்றது. அத்துடன் அதே நேரத்தில் அது, முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறையினது வீழ்ச்சியையும் முன்னறிவிக்கின்றது. தேசிய அரசின் மூலமாக, முதலாளித்துவம் உலகின் ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பு முறையையுமே புரட்சிகரமயமாக்கி உள்ளது. அது ஒட்டுமொத்த பூமியையும் வல்லரசுகளின் தன்னலக்குழுக்களிடையே பிரித்து வைத்திருப்பதுடன், அத்தகைய வல்லரசுகளுக்கு இடையிலான போட்டிக்குள் உயிர்வாழத்தள்ளப்பட்டிருந்த சிறிய நாடுகள், துணைக்கோள்களைப் போல அவற்றைச் சுற்றி குழுவாக்கி உள்ளன. முதலாளித்துவ அடித்தளத்தில் உலக பொருளாதாரத்தின் எதிர்கால அபிவிருத்தி என்பது முதலாளித்துவ சுரண்டலுக்காக புதிய மற்றும் முன்பில்லாத புதிய துறைகளுக்கான ஒரு முடிவில்லா போராட்டத்தைக் குறிக்கிறது. இந்த சுரண்டலானது, அதே ஒரேயொரு ஆதாரவளத்திலிருந்து, அதாவது பூமியிலிருந்தே பெறப்பட்டாக வேண்டும். இராணுவவாத பதாகையின்கீழ் பொருளாதாரப் போட்டிகள், கொள்ளை மற்றும் பேரழிவுடன் இணைந்துள்ளன, அவை மனித பொருளாதாரத்தின் அடிப்படை கோட்பாடுகளையே மீறுகின்றன. உலக உற்பத்தியானது, தேசிய மற்றும் அரசு ரீதியான பிளவுகளால் தோற்றுவிக்கப்பட்ட குழப்பங்களுக்கு எதிராக மட்டும் கிளர்ந்தெழவில்லை, மாறாக இப்போது காட்டுமிராண்டுத்தனமான ஒழுங்கமைப்பின்மை மற்றும் பெருங்குழப்பமாக மாறியுள்ள முதலாளித்துவ பொருளாதார அமைப்புகளுக்கு எதிராகவே கூட கிளர்ந்தெழுகிறது.

அதன் சொந்த உள்ளார்ந்த முரண்பாடுகளால் அழிக்கப்பட்ட ஒரு பொருளாதார அமைப்புமுறையின் வரலாறில் ஏற்பட்ட மிக பிரமாண்டமான முறிவே, 1914 யுத்தமாகும். ...

முதலாளித்துவம் ஒரு புதிய சோசலிச பொருளாதார அமைப்புமுறைக்கான சடத்துவ ரீதியிலான நிலைமைகளை உருவாக்கி உள்ளது. ஏகாதிபத்தியம் முதலாளித்துவ நாடுகளை வரலாற்றுரீதியில் குழப்பத்திற்கு இட்டு வந்துள்ளது. 1914 யுத்தம், இந்த குழப்பங்களிலிருந்து வெளியேறும் வழியான பாட்டாளி வர்க்கம் புரட்சியின் பாதையை நோக்கி அவசரமாக திரும்பவேண்டியதை காட்டுகின்றது.3

இந்த பகுப்பாய்வு, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையில், போல்ஷிவிக் கட்சியால் கொண்டு வரப்பட்ட, 1917 அக்டோபரில் அதிகாரத்தை கைப்பற்றிய ரஷ்ய புரட்சியின் வெடிப்பில் நிரூபிக்கப்பட்டது.

நான்காண்டுகால முன்னொருபோதும் இல்லாத அளவிலான மோதல் மற்றும் இரத்தக்களரிக்குப் பின்னால், அந்த போர், நவம்பர் 1918இல் ஏதோவொரு விதத்தில் திடீரென முடித்துக் கொள்ளப்பட்டது. போரை எது முடிவுக்குக் கொண்டு வந்தது என்பது பெரிதும் போர்களத்தின் முடிவுகளை விட, போரில் ஈடுபட்ட நாடுகளுக்குள் மாறி வந்த அரசியல் நிலைமைகளைச் சார்ந்திருந்தது. அக்டோபர் புரட்சி, ரஷ்யாவை போரிலிருந்து வேகமாக பின்வாங்க இட்டுச் சென்றது. 1917இல் சிப்பாய் கலகங்களால் அதிர்ந்து போயிருந்த பிரெஞ்சு இராணுவம், பொறிவுக்கு நெருக்கத்தில் வந்தது. நேசநாடுகளின் படைகளின் தரப்பில் அமெரிக்கர்களும் மற்றும் அவர்களது வளங்களும் உட்புகுத்தப்பட்டமை மட்டுந்தான், இராணுவ தோல்வியைத் தடுத்து குறைந்தபட்சம் ஓரளவுக்கு தார்மீக ஒழுங்கை மீட்டமைத்தது. குறிப்பாக ரஷ்யாவில் போல்ஷிவிக் வெற்றிக்கு பின்னர் ஜேர்மனியில் போருக்கு எதிரான எதிர்ப்பு வேகமாக வளர்ந்தது. அக்டோபர் 1918இல் ஜேர்மனியின் ஒரு கடற்படை கலகம், அரசர் இரண்டாம் வில்ஹெல்மின் பதவித்துறப்புக்கு இட்டுச் சென்ற பரந்த புரட்சிகர போராட்டங்களை தூண்டிவிட்டது. போரைத் தொடர முடியாமல், ஜேர்மனி சமாதானத்திற்கு முன்வந்தது.

ஜேர்மனியின் தோல்வி இருந்தபோதினும் கூட, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் எதிர்பார்த்த நிஜமான விளைவுகளை அந்த போர் உண்டாக்கி இருக்கவில்லை. கிழக்கில் அந்த போர், ரஷ்யாவில் சோசலிசப் புரட்சிக்கும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாக்கலுக்கும் இட்டுச் சென்றிருந்தது. மேற்கில் அப்போர், ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த இழப்புகளால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்கா, மேலாதிக்க முதலாளித்துவ சக்தியாக எழுச்சியடைவதற்கான நிலைமைகளை உருவாக்கி இருந்தது.

1919 வேர்சாய் உடன்படிக்கை புதிய முரண்பாடுகள் வெடிப்பதற்கு களம் அமைத்தது. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் மீது திணிக்கப்பட்ட பழிவாங்கும் நிபந்தனைகள், ஐரோப்பிய கண்டத்தின் ஸ்திரமான உறவுகளுக்கு வெகு குறைவாகவே உத்தரவாதமளிப்பதாக இருந்தது. ஆஸ்திரிய-ஹங்கேரிய சாம்ராஜ்ஜியத்தின் உடைவு, பிளவுசார்ந்த போட்டிகளால் துண்டாடப்பட்ட புதிய நிலையற்ற பல தேசிய அரசுகளின் உருவாக்கத்தில் போய் முடிந்தது. வேர்சாய் உடன்படிக்கை, ஐரோப்பாவின் அரசியல் மற்றும் பொருளாதார சமநிலைமையை மீளமைக்கும் ஓர் அடித்தளத்தை அமைப்பதில் தோல்வி அடைந்தது. அதற்கு மாறாக, உலக முதலாளித்துவ பொருளாதாரம், அந்த போரிலிருந்து வெளிப்பட்டிருந்ததுபோலவே, சமநிலையின்மையால் உந்தப்பட்டு, அக்டோபர் 1929இல் வோல் ஸ்ட்ரீட்டில் தொடங்கிய முன்னுதாரணமற்ற பொறிவுக்கு இட்டுச் சென்றது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சி

1939இல் உலகளாவிய போர் புதுப்பிக்கப்படுவதற்கு இட்டுச் சென்ற சர்வதேச பதட்டங்களின் மீள்-எழுச்சியில் இருந்த மற்றொரு பிரதான காரணி, உலக விவகாரங்களில் அமெரிக்கா வகித்த புதிய பாத்திரமாகும். முதலாம் உலகப் போருக்குள் அமெரிக்காவின் நுழைவு மற்றும் ரஷ்யாவில் சோசலிச புரட்சியின் வெற்றிக்குப் பின்னர், வில்சன் முதலாளித்துவ ஐரோப்பாவின் பாதுகாவலராக போற்றப்பட்டார். ஆனால் அமெரிக்க நலன்கள், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சொந்த நலன்களுடன் மோதுவதாக இருந்தன என்பது விரைவிலேயே ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு தெளிவானது. அமெரிக்க முதலாளித்துவம், உலக விவகாரங்களில் ஐரோப்பிய மேலாதிக்கத்தை ஏற்க விரும்பவில்லை. பிரிட்டன் அந்த கட்டமைப்புக்குள் அனுபவித்து வந்த சிறப்பு-சலுகைகளை, அமெரிக்கா அதன் சொந்த வர்த்தக நலன்களின் விரிவாக்கத்திற்கு இருந்த தடையாக பார்த்தது.

அமெரிக்காவின் பலத்தின் உறுதியான விரிவாக்கம், பிரிட்டிஷ் இராஜாங்க அதிகாரிகளின் தூக்கத்தை கெடுத்திருந்தாலும் கூட, ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மிகவும் மூர்க்கமான பிரதிநிதிகளாலேயே பிரிட்டன் முற்றுமுழுதாக பதட்டமடைந்திருந்தது. இரண்டாம் உலக போரின் தோற்றுவாய்கள் குறித்த ஒரு புதிய ஆய்வான அழிவுக்கான கூலிகள் (Wages of Destruction) என்பதில், மதிப்பார்ந்த அறிஞர் ஆடம் டோஸ் இவ்வாறு எழுதுகிறார்:

... அமெரிக்கா, மூன்றாம் ஜேர்மன் பேரரசு குறித்த எங்களின் புரிதலுக்கு மைய ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பதற்கான ஹிட்லரின் அவசியத்தை வரலாற்றாளர்கள் விளக்க முனைகையில், உலகளாவிய மிகப்பெரிய மேலாதிக்க வல்லரசாக அமெரிக்கா எழுந்ததால் ஏனைய ஐரோப்பிய சக்திகளோடு சேர்ந்து ஜேர்மனிக்கு முன்னிறுத்தப்பட்ட அச்சுறுத்தலை அவர் துல்லியமாக அறிந்திருந்தார் என்பதைக் குறித்து குறைமதிப்பீடு செய்துள்ளனர். அக்கால பொருளாதார போக்குகளின் அடிப்படையில் பார்த்தால், ஹிட்லர் 1920களிலேயே இந்த தவிர்க்கவியலாததன்மைக்கு எதிராக ஐரோப்பிய சக்திகள் தங்களைத்தாங்களே ஒழுங்கமைத்துக் கொள்ள, அவற்றிற்கு வெகுசில ஆண்டுகளே இருந்தன என்பதை முன்கூட்டியே அனுமானித்திருந்தார்.. ...

ஹிட்லர் ஆட்சியின் ஆக்கிரமிப்பை இவ்விதத்தில், இன்றுவரை எம்முடன் உள்ள உலக முதலாளித்துவத்தினது சீரற்ற அபிவிருத்தியால் தூண்டிவிடப்பட்ட பதட்டங்களுக்கு ஒரு பகுத்தறிவற்ற விடையிறுப்பாகவே நியாயப்படுத்த முடியும்.4

முதலாம் உலக போர் முடிந்ததை தொடர்ந்து வந்த ஆண்டுகள், அமைதிவாதம் மேலோங்கி இருந்த காலகட்டமாக இருந்தன. ஜேர்மன் மீதான 1917 போரை, "அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டு வர" அமெரிக்கா நடத்திய போராக வில்சன் பிரகடனப்படுத்தி இருந்தார். அமெரிக்கா சேர மறுத்திருந்த நாடுகளின் சங்கம் (League of Nations) ஐரோப்பிய வெற்றியாளர்களால் அமைக்கப்பட்டது. அப்போரை சட்டவிரோதமானதாக அறிவித்த கெல்லோக்-பிரியண்ட் ஒப்பந்தத்தை (Kellogg-Briand Pact), 1927இல் பிரான்ஸூம் அமெரிக்காவும் பேரம்பேசி முடித்தன. இன்று, உலகளாவிய மந்தநிலைமை தொடங்கியதில் இருந்து, குறிப்பாக வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர், அதன் விளைவாக ஐரோப்பாவின் அரசியல் ஸ்திரமற்றதன்மையுடன், ஜேர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சி ஜனவரி 1933இல் அதிகாரத்திற்கு வந்தமை மிகவும் அச்சுறுத்தலான வெளிப்பாடாக இருந்தது போன்று சர்வதேச பதட்டங்கள் அதிகளவில் கூர்மையாக மாறியிருக்கின்றன.

சிறந்த தொலைநோக்கு பார்வை மற்றும் தெளிவுடன் உலக முதலாளித்துவத்தின் கட்டவிழ்ந்துவந்த நெருக்கடியின் தாக்கங்களை, லியோன் ட்ரொட்ஸ்கியை விட வேறெவரும் உள்ளீர்த்து கொண்டிருக்கவில்லை. ஸ்ராலின் தலைமையிலான பிற்போக்குத்தனமான அதிகாரத்துவ ஆட்சியால் சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், ஜூன் 1934இல், ட்ரொட்ஸ்கி எழுதினார்:

முந்தைய ஏகாதிபத்திய போரைக் கொண்டு வந்திருந்த மற்றும் நவீன முதலாளித்துவத்திலிருந்து பிரிக்கவியலாத, அதே காரணங்கள், 1914இன் மத்தியில் இருந்ததை விடவும் இப்போது முடிவில்லா அதிக பதட்டங்களை எட்டியுள்ளன. ஒரு புதிய போரின் விளைவுகளைக் குறித்த அச்சம் மட்டுமே, ஏகாதிபத்தியத்தின் விருப்பத்திற்கு விலங்கிட்டிருக்கும் ஒரே காரணியாக உள்ளது. ஆனால் இந்த தடையின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உள்முரண்பாடுகளின் அழுத்தம் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டை பாசிசவாத பாதைக்கு தள்ளுகிறது, அதனால் பாசிசம் சர்வதேச வெடிப்புகளுக்குத் தயாரிப்பு செய்யாமல் அதிகாரத்தை தக்கவைக்க முடியாது. அனைத்து அரசாங்கங்களும் யுத்தத்திற்கு அஞ்சுகின்றன. ஆனால் எந்த அரசாங்கத்திற்கும் சுதந்திரமாக எதையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடையாது. ஒரு பாட்டாளி வர்க்க புரட்சி இல்லையென்றால், ஒரு புதிய உலகப் போர் தவிர்க்கவியலாததாகும்.5

1915இல் அவர் விளக்கமளித்ததைப் போன்றே, ட்ரொட்ஸ்கி விவரித்தார், உலகளாவிய பதட்டங்களின் பிரதான ஆதாரம் "உற்பத்தி சக்திகளுக்கும் தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான, பிரதான முரண்பாட்டுடன் இணைந்த விதத்தில் அதாவது, உற்பத்தி சக்திக்கும் மற்றும் உற்பத்தி சாதனங்களின் மீதான தனிச்சொத்து சொத்துடைமைக்கும் இடையிலான..."6 முரண்பாட்டில் தங்கியுள்ளது. தேசிய அரசைப் பாதுகாப்பது அரசியல்ரீதியிலோ அல்லது பொருளாதாரரீதியிலோ முற்போக்கான செயல்பாட்டிற்கு சேவை செய்வதில்லை. “தேசிய அரசு அதன் எல்லைகள், கடவுச்சீட்டுக்கள், நாணய முறை, சுங்கத்தீர்வை கட்டணங்கள் மற்றும் அந்த கட்டணங்களை பாதுகாப்பதற்கான இராணுவம் ஆகியவற்றுடன் மனிதயினத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார அபிவிருத்திக்கு ஓர் அச்சுறுத்தும் தடையாக மாறியுள்ளது."7

ஹிட்லர் அதிகாரத்தில் இருந்த நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் இருந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு ஆதரவான தாராளவாத மற்றும் சீர்திருத்தவாத அனுதாபிகளோ, ஒரு புதிய போரானது சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக இருக்குமென வாதிடத் தொடங்கி இருந்தார்கள். இந்த வாதம் இறுதியாக ஸ்ராலினிச சோவியத் ஆட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ட்ரொட்ஸ்கி உறுதியுடன் இந்த வாதத்தை நிராகரித்தார். அவர் எழுதினார், “வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு நவீன போர், ஜனநாயகத்திற்கும் மற்றும் பாசிசத்திற்கும் இடையிலான ஒரு மோதலைக் குறிக்காது மாறாக உலகை மறுபங்கீடு செய்யும் இரண்டு ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஒரு போராட்டமாகும்."8

இந்த அரசியல் முன்னோக்கின் உள்ளடக்கத்தில், ட்ரொட்ஸ்கி அமெரிக்காவின் உலகளாவிய அபிலாஷைகளை பகுத்தாராய்ந்தார்.

1914இல் போரின் பாதைக்கு ஜேர்மனியை தள்ளிய அதே பிரச்சினைகளையே அமெரிக்க முதலாளித்துவமும் எதிர்நோக்குகின்றது. உலகம் பங்கிடப்பட்டுள்ளதா? அது மறுபங்கீடு செய்யப்பட வேண்டும். ஜேர்மனியை பொறுத்த வரையில், அது “ஐரோப்பாவை ஒழுங்கமைப்பது" குறித்த பிரச்சினையாகும். அமெரிக்கா, அது உலகை "ஒழுங்கமைத்தாக" வேண்டும். வரலாறு மனிதகுலத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்புக்கு முன்னால் நேருக்கு நேராக கொண்டு வந்துகொண்டிருக்கிறது.9

இந்த வார்த்தைகள் அசாதாரணமான தீர்க்கதரிசனமானவை என்பதை நிரூபிக்க இருந்தன. முதலாளித்துவத்தை தூக்கிவீச இட்டுச் செல்லும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டம் மட்டுமே, அதுவும் முன்னதைவிட அதிக இரத்தந்தோய்ந்த ஒரு புதிய உலக போர் வெடிப்பை தடுக்குமென அவர் வலியுறுத்தினார். ஆனால் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் சீர்திருத்தவாத அதிகாரத்துவங்களின் ஒருங்கிணைந்த துரோகத்தின் விளைபொருளாக, ஸ்பெயின் மற்றும் பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் தோல்விகள், போரைத் தவிர்க்கவியலாதபடி செய்துவிட்டன. இறுதியில் அது செப்டம்பர் 1, 1939இல் தொடங்கியது.

1914ஐ போலவே, ஜேர்மன் ஏகாதிபத்தியமே மோதலைப் பிரதானமாக தூண்டிவிட்டிருந்தது. ஆனால் இரண்டாம் உலக போரும், முதலாவதை போலவே, மிக ஆழமான காரணங்களை கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

ஜனநாயக அரசாங்கங்கள், அவற்றின் காலத்தில் ஹிட்லரை போல்ஷிவிசத்திற்கு எதிரான தீமைகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு சிலுவைப் போராளியாக புகழ்ந்து வந்த அவை, இப்போதோ உடன்படிக்கைகள், எல்லைக்கோடுகள், விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளின் புனிதத்தன்மையை மீறுகின்ற, பாதாளத்திலிருந்து எதிர்பாராமல் வெளியில் வந்த ஏதோவொரு வகை பூதமாக அவரை காட்டுக்கின்றன. ஹிட்லர் இல்லையென்றால் முதலாளித்துவ உலகத்தை ஏதோ ஒரு பூத்துக் குலுங்கும் பூந்தோட்டத்தை போலக் காட்டுக்கின்றன. என்னவொரு இழிந்த பொய்! அவரது மூளையில் கணக்கிடும் ஒரு கருவியுடனும், அவரது கரங்களில் எல்லையில்லா அதிகாரத்துடனும் இந்த ஜேர்மன் வலிப்பு நோயாளி, ஏதோ ஆகாயத்திலிருந்து விழவில்லை அல்லது பாதாளத்திலிருந்தும் வரவில்லை: ஹிட்லர் நாசகரமான அனைத்து ஏகாதிபத்திய சக்திகளினது ஆளுருவாக்கம் (personification) என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ... பழைய காலனித்துவ சக்திகளை அவற்றின் அடித்தளத்திலேயே அசைத்துக் கொண்டிருக்கும் ஹிட்லர், அதிகாரத்திற்காக, ஏகாதிபத்திய அபிலாஷைகளுக்கு கூடுதலான பூரண வெளிப்பாட்டை அளிக்கிறார் என்பதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. அதன் சொந்த முட்டுச்சந்தால் விரக்திக்கு உந்தப்பட்டுள்ள உலக முதலாளித்துவம், ஹிட்லர் மூலமாக, அதன் சொந்த குடலையே கூர்மையாக தீட்டப்பட்ட குறுவாளால் கிழிக்கத் தொடங்கியுள்ளது.10

இங்கே ட்ரொட்ஸ்கி, ஹிட்லரின் போர்கால எதிர்ப்பாளர்களின் தலைவர்களுக்கு வேண்டாதவராக இருக்கிறார் என்றொருவர் கருதுவதற்கு முன்னதாக, வின்ஸ்டன் சேர்ச்சிலின் வார்த்தைகளை நினைவுக்கூர்வது மதிப்புடையதாக இருக்கிறது. ஜனவரி 1927இல், அவர் பிரிட்டிஷ் பிரதம மந்திரியாவதற்கு சிலகாலத்திற்கு முன்னதாக, சேர்ச்சில் ரோமுக்கு விஜயம் செய்து, இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்தார், பின் எழுதினார்: “திரு. முசோலினியின் நேர்த்தியான மற்றும் கனிவான கவனிப்பால் மற்றும் பல்வேறு சுமைகள் மற்றும் அபாயங்களுக்கு இடையிலும் பற்றற்ற சமநிலையோடு, அவரது அமைதியான தன்மையால் நான் வசீகரிக்கப்படாமல் இருக்க முடியவில்லை.” "ரஷ்ய நுண்கிருமிகளுக்கு அவசியமான மாற்றுமருந்தை" இத்தாலிய பாசிசம் வழங்கும்.” சேர்ச்சில், இத்தாலிய பாசிசவாதிகளுக்கு தெரிவித்தார்: “நான் ஒரு இத்தாலியராக இருந்திருந்தால், லெனினிசத்தின் மிருகத்தனமான விருப்புகளுக்கும் மற்றும் உணர்வுகளுக்கும் எதிராக உங்களது வெற்றிகரமான போராட்டத்தில் தொடக்கத்திலிருந்து முடிவு வரையில் நிச்சயமாக நான் முற்றிலுமாக உங்களுடன் தான் இருந்திருப்பேன்.”11

அந்த காலப்பகுதியின் ஒரு வரலாற்றாளர் எழுதுகிறார்:

ஹிட்லரின் ஜேர்மனியும் மற்றும் முசோலினியின் இத்தாலியும் கம்யூனிச பரவலைத் தடுப்பதில் அர்பணித்திருந்த நிறைய பழமைவாதிகளுக்கும், மற்றும் வணிக குழுக்களுக்கும் ஏதோ வியப்புக்குரிய பொருட்களாக இருந்தன. அதன் விளைவாக, பாசிச சக்திகளுக்கு எதிரான நோக்கங்கொண்ட சோவியத் ஒன்றியத்துடனான ஒரு கூட்டணிக்கு அங்கே —குறிப்பாக பிரிட்டனில்— பலமான எதிர்ப்பு இருந்தது.12

இரண்டாம் உலக போரின் வெடிப்பு

செப்டம்பர் 1, 1939இல் ஹிட்லர் போலந்து மீது படையெடுத்தார், அடுத்து பிரிட்டனும் பிரான்ஸூம் அதற்கடுத்த இரண்டு நாளில் மூன்றாம் ஜேர்மன் குடியரசு மீது போர் பிரகடனம் செய்தன. ஹிட்லர் ஒருசில வாரங்களில் போலந்தை வெற்றி கொண்ட பின்னர், 1940 வசந்தகாலம் வரையில் நாஜி ஜேர்மனியால் மேற்கொண்டு எந்த இராணுவ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அப்போது ஜேர்மன் இராணுவங்கள் மேற்கு ஐரோப்பாவெங்கிலும் வியாபித்திருந்தன. நாஜி, பிரான்சை கைப்பற்றிவிடுமா என்ற அபாயத்தையும் விட, பிரான்சின் ஆளும் வர்க்கம், அதன் சொந்த தொழிலாள வர்க்கத்தால் முன்னிறுத்தப்பட்ட புரட்சிகர அச்சுறுத்தல்கள் மீது அதிகமாக கவலைக் கொண்டிருந்த அது, ஜூன் 1940இல் சரணடைந்தது.

ஸ்ராலின், அவரது கோழைத்தனமான மற்றும் துரோகத்தன்மை கொண்ட ஆக்கிரமிப்பு தவிர்ப்பு உடன்படிக்கையை (non-aggression pact) கொண்டு அவரால் போரைத் தவிர்க்க முடியுமென நம்பியிருந்தார். ஆனால் பாசிச ஆட்சி, ஐரோப்பாவை ஆக்கிரமிப்பதற்கான அதன் திட்டங்களில் பிரதான உட்கூறாக எப்போதும் சோவியத் ஒன்றியத்தை அழிப்பதையே பார்த்து வந்தது. ஜூன் 1941இல், சோவியத் ஒன்றியத்தின் (USSR) மீது ஜேர்மன் படையெடுப்பு தொடங்கியது. ஸ்ராலினின் அழிவுகரமான தவறான கணக்கீடுகள் மற்றும் செம்படை சந்தித்த பாரியளவிலான ஆரம்ப தோல்விகளுக்கு இடையிலும், நாஜி படைகள் உறுதியான எதிர்ப்பை எதிர்கொண்டன.

டிசம்பர் 7, 1941இல், பேர்ள் துறைமுகம் மீதான ஜப்பானிய தாக்குதல் அமெரிக்காவை போருக்குள் கொண்டு வந்தது. நான்கு நாட்களுக்குப் பின்னர், டிசம்பர் 11, 1941இல், ஜேர்மனி அமெரிக்கா மீது போர் பிரகடனம் செய்தது, அமெரிக்காவும் உடனடியாக ஜேர்மனி மீது ஓர் போர் பிரகடனத்தை பதிலுக்கு அறிவித்தது. அதற்கடுத்த மூன்றரை ஆண்டுகளில், அந்த போர் சளைக்காமால் மூர்க்கமாக நடத்தப்பட்டது — குறைந்தபட்சம் ஜூன் 1944இல் நேசநாடுகளின் படைகளது படையெடுப்பு வரையில், மேற்கு ஐரோப்பாவில் அப்போர், இராணுவ வரையறைகளில், ஒப்பீட்டளவில் நாஜி ஜேர்மனி மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையிலான மோதலின் கொடூரமான படுகொலைகளோடு ஒப்பிடுகையில் சிறிய துணை விளைவாகத் தான் இருந்தது என்ற கருத்தை வலியுறுத்தியே ஆக வேண்டும். இறுதியில் அப்போர் ஐரோப்பாவில், ஹிட்லரின் தற்கொலைக்கு ஒரு வாரத்திற்கு பின்னர், நாஜி ஜேர்மனியின் நிபந்தனையற்ற சரணடைவுடன், மே 8,1945இல் முடிவுக்கு வந்தது.

ஆசியாவில் அப்போர் கூடுதலாக மூன்று மாதங்கள் தொடர்ந்திருந்தது, இருந்தபோதினும் அதன் விளைவு குறித்து அங்கே எந்தவொரு ஐயமும் இருக்கவில்லை. ஜப்பான், அதன் மிகச் சிறிய மக்கள்தொகையுடன், பின்தங்கிய தொழில்துறை வளர்ச்சி அடித்தளத்துடன், மற்றும் முக்கிய மூலப்பொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவே அணுகக்கூடியதாக இருந்த நிலையில், அது அமெரிக்காவிற்கு எதிராக மேலோங்கும் என்பதற்கான தொலைதூர சாத்தியக்கூறு கூட அங்கே இருக்கவில்லை. அமெரிக்க அரசாங்கத்திற்கு மிக நன்றாக தெரிந்திருந்ததைப் போலவே, ஜப்பானிய அரசாங்கம் 1945 வசந்தகாலத்திலிருந்து ஒரு சரணடைவதற்கு ஏற்புடைய நிபந்தனைகளைக் கோரி வந்தது. ஆனால் அது துயரகரமான இரத்தந்தோய்ந்த முடிவுடன் கொண்டு வரப்பட்டது. ஆகஸ்ட் 1945இல், அமெரிக்கா பாதுகாப்பற்ற மற்றும் இராணுவரீதியில் முக்கியத்துவமற்ற ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது இரண்டு அணுகுண்டுகளை வீசியது. அந்த இரண்டு குண்டுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அண்ணளவாக 150,000 ஆகும். அமெரிக்க வரலாற்றாளர் காப்ரியல் ஜாக்சன் பின்னர் குறிப்பிட்டதைப் போல:

ஆகஸ்ட் 1945இன் குறிப்பிட்ட சூழ்நிலைகளில், அந்த அணுகுண்டு பயன்படுத்தப்பட்டதானது, உளவியல்ரீதியில் சாதாரணமாக இருக்கும் மற்றும் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிர்வாகி ஒருவர், அந்த ஆயுதத்தை நாஜி சர்வாதிகாரி பயன்படுத்துவதைப் போல பயன்படுத்தக்கூடுமென்பதை எடுத்துக்காட்டியது. இவ்விதத்தில், வெவ்வேறு வகையான அரசாங்கங்களின் நடவடிக்கை அறநெறிரீதியில் வேறுபடுமென எவராவது கருதியிருப்பாரானால், பாசிசவாதம் மற்றும் ஜனநாயகத்திற்கு இடையிலான அந்த வேறுபாட்டை அமெரிக்கா தகர்த்தெறிந்தது.13

முதலாம் உலகப் போர் வெடிப்பானது, அப்போது நிலவிய புவிசார் அரசியல் உறவுகளுடன் அதிருப்தியுற்று இருந்த சக்திவாய்ந்த முதலாளித்துவ அரசுகளின் எழுச்சியால் தோற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதங்களில் இருந்து எழுந்ததாகும். பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஓர் உலக காலனித்துவ அமைப்புமுறையில் தாழ்ந்திருப்பதால் சீற்றமுற்றிருந்த, மற்றும் அத்தகைய சக்திவாய்ந்த விரோதிகளால் தனது நலன்களை தொடர்வதை கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தடைகளுக்கு எதிராக ஜேர்மனி கொதித்தெழுந்தது. அதே நேரத்தில், நம்பிக்கை மற்றும் அபிலாஷையில் நிரம்பியிருந்த, மறுத்தளிக்க முடியாத பொருளாதார சக்தியாக விளங்கிய அமெரிக்கா, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாப்புவாத விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்த சந்தைகள் உட்பட அன்னிய சந்தைகளுக்குள் அமெரிக்க மூலதனம் ஊடுருவுவதன் மீது தடைகள் இருப்பதை ஏற்க விரும்பவில்லை.

இரண்டாம் உலகப் போரின் முடிவு, 1890களின் பிற்பகுதியில் ஏகாதிபத்திய சகாப்த விடியலுடன் தொடங்கி இருந்த ஒரு உலகளாவிய மோதலின் ஒரு தனித்துவமான காலகட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. "ஆதாயத்திற்குரிய இடத்தைத் தேடிய" ஜேர்மனியின் முயற்சி படுதோல்வி அடைந்திருந்தது. அதேபோல, மேற்கு பசிபிக், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அதன் மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கும் ஏகாதிபத்திய ஜப்பானின் கனவு இரண்டாம் உலக போரில் அதன் படுதோல்வியால் தகர்ந்து போனது. அரை-நூற்றாண்டுகால மனிதயின படுகொலைகளில் இருந்து உதித்திருந்த பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அவற்றின் பழைய சாம்ராஜ்ஜியங்களைக் காப்பாற்றி வைக்க போதிய நிதியியல் ஆதாரமின்றி, கடுமையாக நொடிந்து போயிருந்தன. பிரதான ஏகாதிபத்திய சக்திகளாக அவற்றின் அந்தஸ்தைக் காப்பாற்றி வைப்பது குறித்து அவை என்ன பிரமைகளைக் கொண்டிருந்தனவோ அவற்றிற்கு, இரண்டாம் உலகப் போர் முடிந்து ஒரு தசாப்தத்திற்கு உள்ளேயே மரணஅடி கொடுக்கப்பட்டது.

1954இல், டியன் பியன் ப்ஹூனில் (Dien Bien Phu) வியட்நாம் விடுதலைப் படைகளின் கரங்களில் பிரெஞ்சு ஒரு பேரழிவுகரமான இராணுவ தோல்வியைக் கண்டது, அது பிரெஞ்சை இந்தோசீனாவிலிருந்து பின்வாங்க நிர்பந்தித்தது. 1956இல் பிரிட்டிஷ் அரசாங்கம், எகிப்தில் அதன் படையெடுப்பைக் கைவிட அமெரிக்காவினால் நிர்பந்திக்கப்பட்டது. இந்த பகிரங்கமான அவமதிப்பு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பிரிட்டிஷ் கீழ்ப்படிந்த தன்மையை உறுதிப்படுத்தியது. தசாப்தங்களுக்கு முன்னரே ட்ரொட்ஸ்கியால் முன்கணிக்கப்பட்டதைப் போல, உலகளாவிய மேலாதிக்கத்திற்கு பிரதான ஏகாதிபத்திய சக்திகளிடையே நடந்த போராட்டமும், பத்து மில்லியன் கணக்கான மனிதர்களின் வாழ்வை விலையாக எடுத்த கொடூரமான உலகின் மறுபங்கீடும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.

1945இல், இரண்டு உலக போர்களின் மனித படுகொலைகளில் இருந்து மேலெழுந்த உலகம், 1914இல் இருந்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.  தலைமையான ஏகாதிபத்திய சக்தியாக இருந்த திவாலான பிரிட்டனை, அமெரிக்கா பிரதியீடு செய்திருந்த போதினும், அதனால் பழைய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு இருந்ததை போன்றதை, அதன் சொந்த பிம்பத்தில், மறு-உருவாக்கம் செய்ய முடியவில்லை. காலனித்துவ சாம்ராஜ்ஜியங்களின் காலகட்டம், குறைந்தபட்சம் அவற்றின் முந்தைய வடிவத்திலிருந்து கடந்து போயிருந்தன.

முற்றிலும் எதிரெதிர்விதமாக கருத்தரித்த ஒரு வரலாற்று உண்மையாக, ஏப்ரல் 1917இல், விளாடிமீர் இலியிச் லெனின் புரட்சிகர ரஷ்யாவுக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்த நிலையில், வூட்ரோ வில்சன் அவரது யுத்த சேதியை காங்கிரஸிற்கு வழங்கினார். நிகழ்வுகளின் இரண்டு பிரமாண்ட வரலாற்று பாதைகள் இந்த முக்கிய சந்திப்பில் குறுக்கிட்டன. வில்சனின் உரை, இந்த பூமியில் மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக அமெரிக்கா தீர்க்கமாக மேலெழுந்திருப்பதைக் குறித்தது. ரஷ்யாவில் லெனின் வருகை, உலகெங்கிலும் பாய இருந்த ஒரு பாரிய சோசலிச அலையின் மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு வெகுஜன போராட்டங்களின் தொடக்கத்தை குறித்தது.

1945இல் ஜேர்மனி மற்றும் ஜப்பான் மீது அமெரிக்கா வெற்றியடைந்த அந்த நேரத்தில், நூறு மில்லியன் கணக்கான மக்கள் ஏற்கனவே ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். உலகளாவிய புரட்சிகர போராட்ட காலத்தை தடுப்பதே அமெரிக்கா எதிர்கொண்டிருந்த பணியாக இருந்தது. இந்த ஆய்வின் கட்டமைப்புக்குள், போருக்குப் பிந்தையகால அபிவிருத்திகளின் ஒரு வரைவை அளிப்பது சாத்தியமில்லை. இதற்கு 1945 மற்றும் 1991க்கு இடையிலான சர்வதேச அரசியலை வரையறுத்த "பனிப்போர்" என்றழைக்கப்பட்டதன் அரசியல் இயக்கவியலை குறைந்தபட்சம் சிறிதாவது விளக்குவது அவசியமாகும். எவ்வாறிருந்த போதினும், இந்த உரையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு முன்னதாக, 1991இல் சோவியத் ஒன்றியத்தின் சிதைவை அமெரிக்கா இறுதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சவாலற்ற மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்குரிய ஒரு வாய்ப்பாக கண்டது என்பதை வலியுறுத்துவது அவசியமாகும்.

"முன்கூட்டிய போர்" குறித்த அமெரிக்க கொள்கை

அமெரிக்காவினது உலகாளவிய மேலாதிக்க இடத்திற்கு ஒரு சவாலாக எந்தவொரு நாடும் எழுச்சி பெறுவதை அது அனுமதிக்காது என்று பிரகடனப்படுத்திய ஒரு மூலோபாய கொள்கையை 1992இல், அமெரிக்க இராணுவம் ஏற்றது. 2002இல், இந்த விரிவான இராணுவ கொள்கையில் "முன்கூட்டிய போர்" (“preventive war”) எனும் பிற்சேர்க்கை (promulgation) கோட்பாடு இணைக்கப்பட்டது, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாக நம்புகின்ற எந்தவொரு நாட்டையும் தாக்கும் உரிமை அமெரிக்காவிற்கு இருப்பதாக அது அறிவித்தது. அப்புதிய கொள்கை குறிப்பாக சீனாவிற்கு எதிராக திரும்பி இருந்ததுடன், அந்நாடு அதன் சொந்த இராணுவ படைகளைக் கட்டமைத்து வருவதற்கு எதிராக எச்சரிக்கப்பட்டது.

அப்புதிய அமெரிக்க இராணுவக் கொள்கை சர்வதேச சட்டத்தின் நிலைப்பாட்டிலிருந்து சட்டவிரோதமானது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். நூரெம்பேர்க் போர் குற்றங்களில் ஸ்தாபிக்கப்பட்ட சட்ட முன்தீர்ப்புரைகள், போர் என்பது அரசு கொள்கையின் ஒரு சட்டரீதியிலான கருவியாகாது என்பதைக் கொண்டிருந்தது, ஆகவே அந்த முன்கூட்டிய போர் என்பது சட்டவிரோதமானதாகும். ஒரு நாட்டின் மீது மற்றொரு நாட்டின் ஓர் இராணுவ தாக்குதல், ஒரு தெளிவான மற்றும் உடனடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே சட்டபூர்வமானதாகும். வேறு வார்த்தைகளில், இராணுவ நடவடிக்கை என்பது தேசிய தற்காப்புக்கு ஒரு தவிர்க்கவியலாத அவசர வழிமுறையாக மட்டுமே நியாயப்படுத்தப்படுகின்றது. முன்கூட்டிய போர் குறித்த 2002 பிற்சேர்க்கை கொள்கை கொண்டு வரப்பட்டு வெறும் ஒருசில மாதங்களுக்குப் பின்னர் நடத்தப்பட்ட, ஈராக் மீதான தாக்குதல் ஒரு போர் குற்றமாகும். 1946 நூரெம்பேர்க்கில் ஸ்தாபிக்கப்பட்ட முன்தீர்ப்புரைகளின் கீழ் அமெரிக்கா கொண்டு வரப்பட்டால், புஷ், ஷென்னி, ரம்ஸ்ஃபெல்ட், பௌல் மற்றும் இன்னும் ஏனையவர்கள் பலர் விசாரணைக்குள் கொண்டு வரப்படுவார்கள்.

முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் போன்ற பேரழிவுகள் மீண்டும் எப்போதாவது ஏற்படுமா என்பதே, அவற்றைக் குறித்த எந்தவொரு ஆய்விலிருந்தும் வரும் தவிர்க்கவியலாத முக்கிய கேள்வியாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் அந்த போர்கள் வரலாற்று அபிவிருத்தியின் ஒரு "வழக்கமான" போக்கில் ஏதோவொருவித கொடூர பிறழ்ச்சியாகவா இருந்தன? மூன்றாம் உலகப் போரின் வெடிப்பை சாத்தியமாக்கும் சர்வதேச பிரச்சினைகளின் மற்றும் விரோதங்களின் மீள்ளெழுச்சியைக் கற்பனை செய்ய முடிகிறதா?

இந்த கேள்விக்கான பதிலுக்காக தீவிரமாக ஊகிக்க வேண்டியதொன்றுமில்லை. ஒரு புதிய உலகளாவிய போரின் வெடிப்பு சாத்தியமா? என்பதல்ல நிஜமான கேள்வி, மாறாக அத்தகையவொரு பேரழிவு இன்னும் எவ்வளவு காலத்தில் ஏற்படுமென்பதே நிஜமான கேள்வியாக உள்ளது. மேலும் அந்த இரண்டாவது கேள்வியிலிருந்து வரும், அடுத்த மற்றும் தீர்க்கமான கேள்வி என்னவென்றால் அது நிகழாமல் தடுக்க ஏதாவது செய்ய முடியுமா என்பதே ஆகும்.

போர் அபாயத்தை மதிப்பிட்டு பார்க்கையில், ஈராக்கில் முதலில் படையெடுத்த 1990க்குப் பின்னரில் இருந்து அமெரிக்கா மீண்டும் மீண்டும் பிரதான இராணுவ மோதல்களில் ஈடுபட்டு வந்துள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள். கடந்த தசாப்தத்தின் போது, 1999இல் இருந்து, அது பால்கன் நாடுகளில், பாரசீக வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவில் என பிரதான போர்களை நடத்தி உள்ளது. ஏதோவொரு வழியில், இத்தகைய போர்கள் அனைத்தும் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்க இடத்தைப் பாதுகாக்கும் முயற்சியுடன் சம்பந்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவினால் அதிகளவில் இராணுவ பலம் பிரயோகிக்கப்படுவது, அதன் சீரழிந்துவரும் உலகளாவிய பொருளாதார நிலைமையின் பின்னடைவின் பின்னணியில் நடந்து வருகிறது என்பது பெரிதும் முக்கியமானதாகும். ஒரு பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து பலவீனமாகிவரும் அமெரிக்கா, இராணுவப் படை பிரயோகத்தின் மூலமாக அதன் பலவீனத்தை ஈடுசெய்ய கூடுதலாக சாய்ந்துவருகின்றது. இந்த குறிப்பிட்ட விடயத்தில், 1930களின் இறுதியில் இருந்த நாஜி ஆட்சியின் கொள்கைகளுடன் அங்கே கவலையளிக்கும் சமாந்தரங்கள் இருந்து வருகின்றன.

அனைத்திற்கும் மேலாக, 2002 மூலோபாய கொள்கையை கருத்தில் கொண்டு, எந்த சக்திகளின் பொருளாதார மற்றும் இராணுவ அபிவிருத்திகளை அரசுத்துறையும் மற்றும் பெண்டகன் மூலோபாயவாதிகளும் முக்கிய அச்சுறுத்தல்களாக பார்க்கிறார்களோ, அமெரிக்கா அவற்றினது விரிவடையும் அணியைத்தான் எதிர்கொள்கிறது. 2008இல் வெடித்த ஒரு பொருளாதார நெருக்கடியால் தூண்டிவிடப்பட்டுள்ளதும் மற்றும் தொடர்ந்து கட்டவிழ்ந்து வருவதுமான ஒரு நிகழ்வுபோக்கான பொருளாதார பலத்தின் சமநிலை, அமெரிக்காவிலிருந்து உலகின் பல்வேறு போட்டியாளர்களுக்கு மாறுகின்ற நிலையில், அத்தகைய சாதகமற்ற பொருளாதார போக்கைத் திருப்புவதற்கு, இராணுவ பலத்தை பயன்படுத்துவதற்கு அங்கே முன்பில்லாத அளவில் ஒரு பெரும் தூண்டுதல் உள்ளது.

இறுதியாக, புதிய போட்டியாளர்கள் உருவானதன் விளைவாக, பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த பழைய ஏகாதிபத்திய ஒழுங்கமைப்பின் நிலைகுலைவிலிருந்து எழுந்த முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களை நாம் நினைவுகூர்ந்து பார்த்தால், தற்போதிருக்கும் ஏற்பாடுகளுடன் அதிருப்தி கொண்டுள்ள எழுச்சிபெற்றுவரும் சக்திகளிடமிருந்து (சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை) வரும் அழுத்தத்தின் கீழ், இதில் மேலாதிக்க சக்தியாக விளங்கும் அமெரிக்கா ஏற்கனவே உலகளாவிய மேலாதிக்கத்தை தக்க வைப்பதில் உள்நெருக்கடி மற்றும் கடும்-அழுத்தத்துடன் பிளவுபட்டுள்ள நிலையில் தற்போதைய சர்வதேச ஒழுங்கமைப்பு உடையும் என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல.

அதனுடன், எந்த தருணத்திலும் இராணுவ மோதல்கள் வெடிக்க அச்சுறுத்துகின்ற, அதிகரித்துவரும் பிராந்தியங்களுக்கு இடையிலான பதட்டங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள், அது மேலதிக-பிராந்திய சக்திகளிடமிருந்து தலையீடுகளை தூண்டிவிட்டு, ஓர் உலகளாவிய மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும். இதற்காக ஜோர்ஜியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான மோதலின் விளைவாக 2008 கோடையில் வெடித்தெழுந்த பதட்டமான சூழலை மட்டுமே ஒருவர் நினைவுகூர வேண்டியுள்ளது.

சோசலிசப் புரட்சி மட்டுமே மூன்றாம் உலகப் போரை தடுக்க முடியும்

உலகம் ஒரு வெடிமருந்து கிடங்காக உள்ளது. ஆளும் வர்க்கங்கள் போரை விரும்புகின்றன என்பதல்ல முக்கியமான விடயம். மாறாக முக்கியமாக அவர்களால் அதைத் தடுக்க முடியாது உள்ளது என்பதே ஆகும். இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ட்ரொட்ஸ்கி எழுதியதைப் போல, முதலாளித்துவ ஆட்சிகள் அவற்றின் கண்களை மூடிக்கொண்டு பேரழிவுக்குள் சறுக்கி விழுகின்றன. ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையினது, சந்தைகள், மூலப் பொருட்கள் மற்றும் மலிவு தொழிலாளர்களை அணுகுவதை பாதுகாக்கும் உந்துதலினது, இலாபம் மற்றும் தனிநபர் செழிப்பிற்காக விட்டுக்கொடுப்பின்றி பின்தொடர்வதினது முட்டடாள்தனமான தர்க்கம், தவிர்க்கவியலாமல் போரை நோக்கி இட்டுச் செல்கிறது.

அப்படியானால், அதை எதனால் தான் தடுக்க முடியும்? பெருந்திரளான உலக மக்கள் —அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கம்— ஆக்கபூர்வமாகவும் மற்றும் நனவுபூர்வமாகவும் தலையீடு செய்வதன் மூலமாக மட்டுமே வரலாற்று நிகழ்வுபோக்கில் ஏகாதிபத்தியத்தின் அச்சமூட்டும் இயங்குமுறைகளை நிறுத்த முடியுமென்பதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச சோசலிச புரட்சி மூலமாக அல்லாமல் ஏகாதிபத்திய போரைத் தடுப்பதற்கு அங்கே வேறெந்த வழிவகைகளும் இல்லை.

1914இல், லெனின், இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்பை எதிர்த்து, ஏகாதிபத்திய சகாப்தமானது, போர்களினதும் புரட்சியினதும் சகாப்தமென அறிவித்தார். அதாவது, ஏகாதிபத்திய போரை முன்னுக்குக் கொண்டு வந்த உலகளாவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகள் சர்வதேச சோசலிச புரட்சிக்கான புறநிலை அடித்தளங்களையும் உருவாக்குகிறது. இந்த அர்த்தத்தில், ஏகாதிபத்திய போரும் மற்றும் உலக சோசலிசப் புரட்சியும், முதலாளித்துவ வரலாற்று முட்டுச்சந்துக்கு வெவ்வேறு எதிரெதிர் சமூக வர்க்கங்களின் விடையிறுப்புகளாகும். உலக நிலைமையைக் குறித்த லெனினது மதிப்பீட்டின் சரியானதன்மை, 1917இல் ரஷ்ய புரட்சியின் வெடிப்பில் உறுதி செய்யப்பட்டது.

தொன்னூற்றி ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய முதலாம் உலக போர் தொடங்கியதில் இருந்து மற்றும் எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டாம் உலக போரில் இருந்து ஏற்பட்டுள்ள எல்லா மாற்றங்களுக்குப் பின்னரும், நாம் இன்னமும் ஏகாதிபத்திய சகாப்தத்திற்குள்ளே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்விதத்தில், மனிதயினம் இன்று எதிர்கொண்டிருக்கும் மிகமுக்கிய கேள்விகள்: சர்வதேச தொழிலாள வர்க்கத்தினது அரசியல் நனவின் அபிவிருத்தி, ஏகாதிபத்தியத்தின் திரண்டுவரும் பேரழிவு போக்குகளுக்கு எதிர்வினையாற்றுமா? முதலாளித்துவமும் ஏகாதிபத்திய தேசிய-அரசு அமைப்புமுறையும் மனிதயினத்தை படுபாதாளத்திற்குள் இட்டுச் செல்வதற்கு முன்னதாக, தொழிலாள வர்க்கம் சரியான நேரத்திற்குள் போதிய அரசியல் நனவை அபிவிருத்தி செய்யுமா? என்பவை தான்.

இவை வெறுமனே கல்விசார்ந்த கவனிப்புக்குரிய கேள்விகள் அல்ல. முன்னிறுத்தப்படும் இந்த கேள்விகள் ஒரு ஆக்கபூர்வமான விடையிறுப்பைக் கோருகின்றன. இதற்குரிய பதில்களை ஒரு வகுப்பறையில் வழங்க முடியாது, மாறாக சமூக சக்திகளின் நிஜமான மோதலில்தான் கிடைக்கும். போராட்டமே விடயத்தை தீர்மானிக்கும். மேலும் அந்த போராட்டத்தின் விளைபொருள் ஒரு தீர்க்கமான கோணத்தில், புரட்சிகர அபிவிருத்தியால், அதாவது, சோசலிச நனவால், செல்வாக்கு செலுத்தப்படும். ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் தலைமையை அபிவிருத்தி செய்யும் போராட்டத்தில் அதன் உயர்ந்தமட்டத்திலான வெளிப்பாட்டைக் காண்கிறது.

பிற்போக்குத்தனமான ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் சீர்திருத்த தொழிலாளர் அதிகாரத்துவங்களினது காட்டிக்கொடுப்புகளால் சாத்தியமாக்கப்பட்ட ஒரு பேரழிவான, இரண்டாம் உலகப் போர் வெடித்து வெறும் ஒரு சில மாதங்களுக்கு பின்னர், தலைச்சிறந்த அரசியல் யதார்த்தவாதி ட்ரொட்ஸ்கி எழுதினார்:

முதலாளித்துவ உலகம், ஒரு நீண்டகால மரணஓலம் எனப்படுவதை வெளிப்படுத்த இயலுமே அன்றி, அதிலிருந்து வெளியேறுவதற்கு வழியை அல்ல. எழுச்சிகள், குறுகியகால சமரச இடைநிகழ்ச்சிகள், புதிய போர்கள் மற்றும் புதிய மேலெழுச்சிகளை பல தசாப்தங்களுக்கு இல்லையென்றாலும், சில ஆண்டுகளுக்கு தயாரிப்பு செய்ய வேண்டியது அதற்கு அவசியப்படுகிறது. ஒரு இளம் புரட்சிகர கட்சி இந்த முன்னோக்கின் மீது தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அது தன்னைத்தானே பரிசோதித்துப் பார்க்க, அனுபவங்களை ஒன்றுதிரட்ட, முதிர்ச்சி அடைய வரலாறு அதற்கு போதிய வாய்ப்புகளையும், சாத்தியக்கூறுகளையும் வழங்கும். முன்னணிப்படையில் உள்ளோர் விரைவாக ஒன்றிணைகையில், அதிக இரத்தம் தோய்ந்த கொந்தளிப்புகளின் காலகட்டம் குறைக்கப்படலாம், மற்றும் நமது பூமி மீதான பாதிப்பும் குறைக்கப்படலாம். ஆனால் ஒரு புரட்சிகரக் கட்சி, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நிற்காத வரையில், பிரமாண்டமான வரலாற்று பிரச்சினை தீர்க்கப்படப் போவதில்லை. இப்பிரச்சினையில் வேகம் மற்றும் அவற்றிற்கு இடையிலான கால இடைவெளிகள் குறித்த கேள்வியும் பெரும் முக்கியத்துவம் உடையதே; ஆனால் அது பொதுவான வரலாற்று முன்னோக்கையோ அல்லது நமது கொள்கையின் திசையையோ மாற்றுவதில்லை. இறுதி முடிவு மிகவும் சுலபமானது: அதாவது, பாட்டாளி வர்க்க முன்னணிப் படையை பத்துமடங்கு சக்தியுடன் கல்வியூட்டும் மற்றும் ஒழுங்கமைக்கும் பணியை மேற்கொள்வது அவசியமாகும். துல்லியமாக இதில் தான் நான்காம் அகிலத்தின் பணி தங்கியுள்ளது.14

உலகளாவிய ஏகாதிபத்திய நெருக்கடியின் ஆரம்ப கட்டத்தில் எழுதப்பட்ட இந்த பகுப்பாய்வு, இப்போதைய நிலைமைக்கும் பொருந்துகிறது. மனிதகுல நாகரீகம் பிழைத்திருப்பதே பணயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக, போர் முனைவை நிறுத்த மற்றும் மனிதயினத்தின் எதிர்காலத்தை காப்பாற்றுவது இளைஞர்களின் கடமைப்பாடாகும். இதனால், உங்களிடம் நான், சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும், சோசலிச புரட்சியின் உலக கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறும் அழைப்புவிட்டு இந்த உரையை முடிக்கிறேன்.

1 Lecture delivered at San Diego State University on October 5, 2009.

2 Exact casualty figures are not available. The totals differ slightly from source to source. The numbers in the tables are drawn from Wikipedia [http://en.wikipedia.org/wiki/World_War_I_casualties] and other books and web sites.

3 Leon Trotsky, The War and the International 1915, (Colombo: A Young Socialist Publication, 1971), pp. vii–viii.

4 Adam Tooze, The Wages of Destruction: The Making and Breaking of the Nazi Economy (London: Penguin Books, 2006), pp. xxiv–xxv.

5 Writings of Leon Trotsky 1933–34 (New York: Pathfinder Press, 1975), p. 300.

6 Ibid., p. 304.

7 Ibid.

8 Ibid., p. 307.

9 Ibid., p. 302.

10 Writings of Leon Trotsky 1939–40 (New York: Pathfinder Press, 1973), p. 233.

11 Cited in Nicholson Baker, Human Smoke: The Beginnings of World War II, the End of Civilization (New York: Simon and Schuster, 2008), p. 16.

12 Frank McDonough, Hitler, Chamberlain and Appeasement (Cambridge: Cambridge University Press, 2002), p. 33.

13 Gabriel Jackson, Civilization and Barbarity in Twentieth Century Europe (New York: Prometheus Books, 1999), pp. 176–177.

14 Writings of Leon Trotsky 1939–40, pp. 260–261.