ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

7

Postmodernism’s Twentieth Century: Political Demoralization and the Flight from Historical Truth1

பின்நவீனத்துவத்தின் இருபதாம் நூற்றாண்டு: அரசியல் விரக்தியும் வரலாற்று உண்மையில் இருந்து பறந்தோடலும்1


இருபதாம் நூற்றாண்டை புரிந்து கொள்ளுதல்

இன்று நாம், “மார்க்சிசம், அக்டோபர் புரட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்று அடித்தளங்கள்” என்ற தலைப்பின் மீதான ஒரு வார கால தொடர் உரைகளை ஆரம்பிக்கிறோம். இந்த உரைகளின் ஊடாக, நாம் நான்காம் அகிலத்தின் தோற்றுவாயாக இருந்த வரலாற்று நிகழ்வுகள், தத்துவார்த்த சர்ச்சைகள் மற்றும் அரசியல் போராட்டங்களை ஆய்வு செய்ய நோக்கம் கொண்டிருக்கிறோம். இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பது ஆண்டுகள் தான் இந்த உரைகளின் மையப் புள்ளியாக இருக்கப் போகிறது. இந்த வரம்பு என்பது பகுதியளவில் நமக்கிருக்கும் கால அளவினால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வார காலத்திற்குள் அவ்வளவு தான் எட்ட முடியும், வெறும் ஏழு நாட்களில் கடந்த நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களை பேசுவதென்பதே கூட ஒரு ஆர்வமிகுதியான ஒரு செயல்தான். இருந்தபோதிலும் 1900க்கும் 1940க்கும் இடையிலான காலகட்டத்தில் நமது முழுக் கவனத்தையும் குவிப்பதில் ஒரு நிச்சயமான வரலாற்று தர்க்கம் இருக்கிறது.

1940 ஆகஸ்டில் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட வேளையிலேயே, இருபதாம் நூற்றாண்டின் அரசியல் பண்புகளை தீர்மானித்த பின்வரும் அத்தனை முக்கிய நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்தேறி விட்டிருந்தன: 1914 ஆகஸ்டில் முதலாம் உலகப் போர் வெடிப்பு; 1917 அக்டோபரில் போல்ஷிவிக் கட்சி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியமை அத்துடன் அதனைத் தொடர்ந்து தொழிலாளர்களது முதலாவது சோசலிச அரசாக சோவியத் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டமை; முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அரசாக அமெரிக்கா மேலெழுந்தமை; 1923 இல் ஜேர்மன் புரட்சி தோல்வி கண்டமை; சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ சீரழிவு; இடது எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டு ட்ரொட்ஸ்கி 1927 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் மூன்றாம் அகிலத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டமை; 1926-27 இல் சீனப் புரட்சியின் காட்டிக் கொடுப்பு; 1929 அக்டோபர் வோல் ஸ்ட்ரீட் பொறிவு அத்துடன் உலக முதலாளித்துவ பொருளாதார பெருமந்தநிலையின் தொடக்கம்; 1933 ஜனவரியில் ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்தமை மற்றும் ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றி; 1936-38 மாஸ்கோ விசாரணைகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் சோசலிச புத்திஜீவி தட்டுக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் எதிரான அரசியல் படுகொலை பிரச்சாரம்; ஸ்ராலினிச தலைமையிலான மக்கள் முன்னணியின் அரவணைப்பின் கீழ் 1937-1939 இல் ஸ்பானிய புரட்சி காட்டிக் கொடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டமை; ஐரோப்பிய யூதர்கள் அழித்தொழிக்கப்படுவதன் தொடக்கம்.

இந்த நான்கு தசாப்தங்களின்போது, இருபதாம் நூற்றாண்டின் அரசியல் பண்புகள் வரையறுக்கப்பட்டு விட்டன. இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய சகாப்தத்தின் முக்கியமான புரட்சிகர மற்றும் எதிர்ப்புரட்சிகர அனுபவங்களது, மூலோபாய படிப்பினைகளது பட்டகத்தின் வழியே ஆராயும்போது மட்டுமே இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் சமயத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்க நேர்ந்த அத்தனை முக்கிய அரசியல் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமூக ஜனநாயகக் கட்சிகளது கொள்கைகளை பகுப்பாய்வு செய்வதற்கு 1914 ஆகஸ்டில் இரண்டாம் அகிலம் சீர்குலைந்ததன் வரலாற்று விளைபயன்களை புரிந்துகொள்வது அவசியமாக இருக்கிறது. அக்டோபர் புரட்சியை கற்பதன் மூலமும், அதன்பின் முதலாவது தொழிலாளர்’ அரசு நெடிதாக சீரழிந்து சென்றதை கற்பதன் மூலமும் மட்டுமே சோவியத் ஒன்றியத்தின் தன்மையையும், இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தில் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த அரசுகளின் தன்மையையும், அத்துடன் 1949 அக்டோபரில் சீனாவில் ஸ்தாபிக்கப்பட்ட மாவோயிச ஆட்சியின் தன்மையையும் புரிந்து கொள்ள இயலும். 1945க்குப் பின்னர் ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் வீசிய காலனித்துவ-எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு புரட்சிகளின் மகத்தான அலை குறித்த பிரச்சினைகளுக்கான விடைகளை, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை -இதனை அவர் முதன்முதலில் 1905 இல் சூத்திரப்படுத்தினார்- சுற்றிய அரசியல் மற்றும் தத்துவார்த்த சர்ச்சைகள் மீதான ஒரு சளைக்காத ஆய்வின் அடிப்படையில் மட்டுமே கண்டறிய முடியும்.

வரலாற்று அறிவு மற்றும் அரசியல் பகுப்பாய்வு மற்றும் நோக்குநிலை இவற்றுக்கு இடையிலான உறவு, தனது மிக ஆழமான வெளிப்பாட்டை சோவியத் ஒன்றியத்தின் இறுதி தசாப்தத்தில் கண்டது. 1985 மார்ச்சில் மிகையில் கோர்ப்பசேவ் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாகவே, ஸ்ராலினிச ஆட்சியானது ஒரு ஆற்றொணா நெருக்கடியில் இருந்தது. எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சி காணத் தொடங்கியபோது -1970களில் இதன் துரித வளர்ச்சியானது ஒரு குறுகியகால அதிர்ஷ்ட மழைக்கு வழிவகை தந்திருந்தது- சோவியத் பொருளாதாரத்தின் படிப்படியான நலிவுறுதலை அதற்கு மேலும் மறைக்க முடியாமற்போனது. இந்த வீழ்ச்சியை மாற்ற கிரெம்ளின் என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கும்? கொள்கை குறித்த விடயங்கள், சோவியத் வரலாறு பற்றி பதிலளிக்கப்படாத கேள்விகளுடன் உடனடியாக சிக்கிக்கொண்டன.

ஸ்ராலினிச ஆட்சியானது, அறுபது வருடங்களுக்கும் மேலாக வரலாற்றுப் பொய்மைப்படுத்தலின் ஒரு சளைக்காத பிரச்சாரத்திலேயே ஈடுபட்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் குடிமக்கள், தமது சொந்தப் புரட்சிகர வரலாற்றின் உண்மைகள் குறித்து பெருமளவில் அறிந்திராத நிலையில் இருந்தனர். ட்ரொட்ஸ்கியினதும் அவருடைய சக-சிந்தனையாளர்களினதும் படைப்புகள் தணிக்கைக்குள்ளாக்கப்பட்டு, பல தசாப்தங்களாக நசுக்கி வைக்கப்பட்டிருந்தன. சோவியத் வரலாறு குறித்த நம்பகத்தன்மை வாய்ந்த படைப்பு ஒன்று கூட இல்லாதிருந்தது. உத்தியோகபூர்வ சோவியத் கலைக் களஞ்சியத்தின் ஒவ்வொரு புதிய பதிப்பும் கிரெம்ளினின் அரசியல் நலன்கள் மற்றும் உத்தரவுகளுக்கேற்ப வரலாற்றை திருத்தியது. மறைந்த நமது தோழர் வாடிம் ரோகோவின் ஒருமுறை குறிப்பிட்டதைப்போல, சோவியத் ஒன்றியத்தில், எதிர்காலத்தை போலவே கடந்தகாலமும் கூட கணிக்க முடியாததாக இருந்தது!

அதிகாரத்துவத்திற்குள்ளும் சலுகை கொண்ட அதிகார வட்டத்திற்குள்ளும் (nomenklatura) இருந்த, தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறையை அகற்றுவதையும், தனிச் சொத்துடைமையை புதுப்பிப்பதையும், முதலாளித்துவத்தை மீட்சி செய்வதையும் ஆதரித்து நின்ற கன்னைகளை பொறுத்தவரையில், சோவியத் பொருளாதார நெருக்கடி என்பது, சோசலிசம் தோல்வியடைந்து விட்டது என்பதற்கும், அக்டோபர் புரட்சி ஒரு பேரழிவான தவறு, அதிலிருந்துதான் சோவியத் துயரங்கள் அனைத்தும் பிறந்தன என்பதற்குமான “நிரூபணம்” ஆகும். இந்த சந்தை-ஆதரவு சக்திகள் முன்மொழிந்த பொருளாதாரப் பரிந்துரைகள் அனைத்தும், ‘ஸ்ராலினிசம் என்பது அக்டோபர் புரட்சியின் தவிர்க்கவியலாத விளைபொருள்’ என்று கூறும் சோவியத் வரலாற்றை பற்றிய விளக்கத்தை அடிப்படையாக கொண்டிருந்தன.

முதலாளித்துவ மீட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கான பதிலை, வெறுமனே பொருளாதார அடித்தளத்தில் மட்டும் வழங்கிவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால் முதலாளித்துவ ஆதரவு வாதங்களை மறுத்தல் சோவியத் வரலாற்றை பற்றிய ஒரு ஆய்வைக் கோரியது. முதலாளித்துவ-ஆதரவு வாதங்களை மறுப்பதற்கு அதனைக் காட்டிலும் அவசியமானதாக இருப்பது, ஸ்ராலினிசம் அக்டோபர் புரட்சியின் அத்தியாவசியமான விளைவுமல்ல, தவிர்க்கவியலாத விளைவும் அல்ல என்பதை நிரூபணம் செய்யும் சோவியத் வரலாற்றின் மீதான ஒரு ஆய்வே ஆகும். ஸ்ராலினிசத்திற்கான ஒரு மாற்று, தத்துவார்த்த அடிப்படையில் சிந்திக்க முடிவது என்பது மட்டுமல்ல, அத்தகையதொரு மாற்று உண்மையில் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான இடது எதிர்ப்பின் வடிவத்தில் இருந்து வந்திருந்தது என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டியிருந்தது.

இன்று கூறுவதைத்தான் ஏறக்குறைய அப்படியே 1989 நவம்பரில் சோவியத் ஒன்றியத்தில் மாஸ்கோ பல்கலைக்கழக வரலாற்று ஆவணக் காப்பகத்தில் (Historical Archival Institute of Moscow University) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நான் கூறினேன். “சோசலிசத்தின் எதிர்காலம்” குறித்த எனது உரையை தொடங்குகையில் நான் குறிப்பிட்டது இதுதான்: “எதிர்காலம் குறித்து விவாதிக்க வேண்டுமானால், கடந்தகாலம் குறித்த கணிசமான விவாதத்தில் இறங்குவது அவசியமாகும். ஏனென்றால் சோசலிச இயக்கத்தை எதிர்கொண்டிருக்கும் பல சர்ச்சைகளுக்கு விடைகாணாமல், இன்று நாம் எப்படி சோசலிசத்தை விவாதிக்க இயலும்? தவிரவும் சோசலிச எதிர்காலத்தை நாம் விவாதிக்கையில், அக்டோபர் புரட்சியின், அதாவது உலக முக்கியத்துவம் கொண்டதும் அத்துடன் ஒவ்வொரு நாட்டின் தொழிலாள வர்க்கத்தின் மீதும் ஒரு ஆழமான விளைவை கொண்டிருப்பதுமான ஒரு நிகழ்வின், தலைவிதி குறித்தும் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த கடந்தகாலத்தின் பெரும்பகுதி, அதிலும் குறிப்பாக சோவியத் ஒன்றியத்தில், மர்மங்களாலும் பொய்மைப்படுத்தலாலும் மூடிமறைக்கப்பட்டதாகவே இன்னும் இருந்து வருகிறது.”2

அச்சமயத்தில் சோவியத் ஒன்றியத்தில் வரலாற்றுப் பிரச்சினைகளில் ஆர்வம் பெருகிவந்த நிலை இருந்தது. என்னுடைய உரையே கூட, வரலாற்று காப்பக நிறுவனத்தின் இயக்குனரது எதேச்சையான அழைப்பை ஏற்று இருபத்தி-நான்கு மணி நேரத்திற்கும் குறைந்த தயாரிப்புடனே ஒழுங்கமைக்கப்பட்டது என்ற நிலையிலும், பல நூறுபேர் கலந்து கொண்டு செவிமடுத்தனர். இந்த கூட்டத்திற்கான விளம்பரம் என்பது முழுக்கவும் வாய்வழித் தகவலளவுக்கு மட்டுப்பட்டதாகவே ஏறக்குறைய இருந்தது. ஆனாலும் ஒரு அமெரிக்க ட்ரொட்ஸ்கிசவாதி கல்விநிறுவனத்தில் பேசவிருக்கிறார் என்ற செய்தி அதிவேகமாகப் பரவி, ஏராளமானோர் அந்தக் கூட்டத்திற்கு வந்தனர்.

குறுகியகால வெளிப்படை யுகத்தில் (glasnost) ஒரு ட்ரொட்ஸ்கிசவாதி பொது அரங்கில் பேசுவது என்பது முழுமையாக ஒரு புதுமையான விடயமாக இருக்கவில்லைத்தான் என்றபோதிலும், ஒரு அமெரிக்க ட்ரொட்ஸ்கிசவாதி வழங்கும் உரை என்ற விதத்தில் அது ஒருவகை பரபரப்பை உண்டுபண்ணியிருந்தது. இத்தகையதொரு உரைக்கான மிகச் சாதகமான புத்திஜீவித சூழல் அங்கு இருந்தது. வரலாற்று உண்மைக்கான வேட்கை அங்கு இருந்தது. வெளிப்படை யுகத்துக்கு முந்தைய காலத்தில் ஒரு சிறு வெளியீடாக இருந்து வந்திருந்த Argumenti i Fakty (Arguments and Facts - வாதங்களும் உண்மைகளும்) என்ற சோவியத் இதழ், அது சோவியத் வரலாறு தொடர்பான கட்டுரைகளையும் நீண்டகாலமாக அமுக்கி வைக்கப்பட்டிருந்த ஆவணங்களையும் பிரசுரித்தது3 என்ற அடிப்படையில், அதன் விற்பனை பிரதிகளின் எண்ணிக்கை அதிவிரைவில் முப்பது மில்லியனை தொடக் கண்டது என்பதை தோழர் ஃபிரெட் வில்லியம்ஸ் சமீபத்தில் ரொபேர்ட் சேர்விஸின் மோசமான படைப்பான ஸ்ராலின் வாழ்க்கைச்சரிதம் குறித்த தனது திறனாய்வில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்.

தொழிலாள வர்க்கமும் வரலாறும்

மார்க்சிசத்திலும் ட்ரொட்ஸ்கிசத்திலும் பரவலான ஆர்வம் பெருகுவதைக் கண்டு அச்சமுற்ற அதிகாரத்துவமானது, வரலாற்றை தெளிவுபடுத்தல் என்ற இந்த புத்திஜீவித நிகழ்ச்சிப்போக்கானது, சோசலிச நனவின் ஒரு மறுஎழுச்சிக்கு ஊக்கமளிக்கச் செல்லும் எனக் கருதி, சோவியத் ஒன்றியத்தின் உடைவை நோக்கிய தனது நகர்வை முடுக்கி விட்டதன் மூலம் அந்த நிகழ்ச்சிபோக்கை முந்திக் கொள்ள முனைந்தது. 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு அதிகாரத்துவம் ஏற்பாடு செய்த விதமானது —அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னதாக ட்ரொட்ஸ்கியால் முன்கணிக்க இயன்றிருந்தவாறு, அக்டோபர் புரட்சி மீதான ஸ்ராலினிச காட்டிக் கொடுப்பின் உச்சம்— அவசியமான விவரங்களுடன் ஆராயப்பட வேண்டிய விடயமாகவே இன்னும் இருக்கிறது. ஆனாலும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கான —இதன் பெருந்துயரகரமான பின்விளைவுகள் மிகவும் தெள்ளத்தெளிவாகி விட்டிருக்கின்றன— மக்கள் எதிர்ப்புக்கு குழிபறித்த ஒரு மிக முக்கியமான காரணியாக இருந்தது, வரலாறு குறித்த அறியாமை என்பது மறுக்கவியலாத ஒன்றாகும். பல தசாப்தகால வரலாற்று பொய்மைப்படுத்தலின் சுமையை தூக்கியெறிந்து விட்டு, அரசியல்ரீதியாக தன்னை சரியாக நோக்குநிலைப்படுத்திக் கொள்வதையும், தனது சுயாதீனமான சமூக நலன்களை உறுதி செய்வதையும், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் முதலாளித்துவ மீட்சி இவற்றை எதிர்ப்பதையும், உரிய காலத்திற்குள் செய்து முடிக்க சோவியத் தொழிலாள வர்க்கத்தால் இயலாமல் போனது.

இந்த வரலாற்று துன்பியலில் ஒரு படிப்பினை இருக்கிறது. தொழிலாள வர்க்கம், தான் கடந்து வந்திருக்கும் வரலாற்று அனுபவங்கள் குறித்த ஒரு முழுமையான அறிவு இல்லாமல் —முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அரசியல்ரீதியாக நனவானதொரு போராட்டத்தை நடத்துவதையெல்லாம் விடுங்கள்— அது தனது மிக அடிப்படையான சமூக நலன்களைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாது.

வரலாற்று நனவானது, வர்க்க நனவின் அத்தியாவசியமான பாகமாகும். ரோசா லுக்சம்பேர்க்கின் வார்த்தைகள் அவை எழுதப்பட்ட 1915 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் போலவே, அதாவது முதலாம் உலகப் போர் வெடித்ததற்கும் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியானது பிரஷ்ய இராணுவவாதத்திடமும் ஏகாதிபத்தியத்திடமும் சரணடைந்ததற்கும் பின், ஒரு வருடத்திற்கும் குறைந்த காலத்தில்போலவே, இன்றும் பொருத்தமானதாய் இருக்கின்றன:

வரலாற்று அனுபவமே [தொழிலாள வர்க்கத்தின்] ஒரே ஆசான். விடுதலையை நோக்கிய அவனது வலி நிரம்பிய பாதை [Via Dolorosa] என்பது சொல்ல முடியாத துயரம் நிரம்பியது மட்டுமல்ல, எண்ணிலடங்கா தவறுகளையும் அடக்கியது. இறுதி விடுதலை என்ற அவனது பயணத்தின் இலக்கானது முழுக்கவும் பாட்டாளி வர்க்கத்தை, அது தனது சொந்த தவறுகளில் இருந்து பாடம் படிக்க புரிந்து கொண்டிருக்கிறதா என்பதைப் பொறுத்தது.

தீங்கின் அடிவேர் வரை செல்லும் சுய விமர்சனம், இரக்கமற்ற, தாட்சண்யம் பார்க்காத விமர்சனம்தான் பாட்டாளி வர்க்கத்தின் வாழ்வும் மூச்சும் ஆகும். உலகம் எத்தகையதொரு பேரழிவுக்குள்ளாக சோசலிச பாட்டாளி வர்க்கத்தை தள்ளியிருக்கிறது என்பது மனிதகுலத்தின் முன்னுதாரணமற்ற துர்பாக்கியமாக இருக்கிறது. ஆனாலும் சர்வதேச பாட்டாளி வர்க்கமானது, இந்த பேரழிவின் ஆழங்களை அளவிட முடியாமல் போனாலோ, அத்துடன் அது கற்பிக்கும் பாடத்தைப் புரிந்து கொள்ள மறுத்தாலோ மட்டுமே சோசலிசம் என்பது இழந்துபோனதாகும்.4

வரலாறு குறித்து நாம் தாங்கிப் பிடிக்கின்ற கருத்தாக்கமானது, —இது மானுட விடுதலைக்கான போராட்டத்தில் வரலாற்று அனுபவம் குறித்த அறிவிற்கும் அதன் தத்துவார்த்த உட்கிரகிப்புக்கும் இன்றியமையாத ஒரு முக்கிய பாத்திரத்தை வழங்குகிறது— நிலவிக் கொண்டிருக்கும் அத்தனை முதலாளித்துவ சிந்தனைகளுக்கும் விரோதமானதாகும். முதலாளித்துவ சமூகத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக சிதைவானது அதன் புத்திஜீவித சீரழிவில் பிரதிபலிக்கிறது. அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஒரு காலகட்டத்தில், அறியாமை தனது பற்களை அகல விரிக்கிறது என்று ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டார்.

முதலாளித்துவ சிந்தனையின் மிகத் திறமைவாய்ந்த மற்றும் சிடுசிடுப்பான ஏட்டறிவுப் பிரதிநிதிகளான பின்நவீனத்துவவாதிகளால் தீவிரமாய் ஆதரிக்கப்படும் அறியாமையின் துல்லியமான வடிவம்தான், வரலாறு பற்றிய அறியாமையும் அவமதிப்பும் ஆகும். வரலாற்றின் செல்தகைமையையும், அனைத்து சமூக சிந்தனையின் உண்மையான முற்போக்கான போக்குகளால் அதற்கு வழங்கப்பட்ட மையமான பாத்திரத்தையும், பின்நவீனத்துவவாதிகள் நிராகரிப்பதானது, அவர்களது தத்துவார்த்த கருத்தாக்கங்களது இன்னுமொரு கூறுடன், அதாவது புறநிலை உண்மையானது, மெய்யியல் விசாரணையின் ஒரு இலக்கு என்பதை மறுப்பது மற்றும் வெளிப்படையாக மறுதலிப்பது என்பதுடன் பிரிக்கவியலாமல் தொடர்புபட்டதாகும்.

வரலாற்றின் மீதான பின்நவீனத்துவ நிராகரிப்பு

அப்படியானால் பின்நவீனத்தியம் (postmodernity) என்பது தான் என்ன? இந்தப் போக்கின் ஒரு ஆய்வாளரான பேராசிரியர் கீத் ஜென்கின்ஸ் விளக்குகிறார்:

"இன்று நாம் பின்நவீனத்தியத்தின் (postmodernity) பொதுச் சூழலில் வாழ்கிறோம். நமக்கு இந்த விஷயத்தில் வேறு தேர்ந்தெடுப்பு கிடையாது. ஏனென்றால் பின்நவீனத்தியம் என்பது நாம் ஏற்பதற்கு தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு நிலைப்பாடோ அல்லது 'கருத்தியலோ' அல்ல; பின்நவீனத்தியம் என்பது துல்லியமாக நம்முடைய சூழ்நிலையாகும்: அது நம்முடைய கதி. இந்த சூழ்நிலைமையானது நவீனத்தியம் என்று நாம் கூறுகின்ற சமூக வாழ்வில் உள்ள பரிசோதனையின் பொதுத் தோல்வியால் விளைந்தது என்று வாதிட முடியும். இருபதாம் நூற்றாண்டு தூசிதட்டிப்போன நிலையில் இந்த பொதுத் தோல்வியை தெளிவாகவே இப்பொழுது தனித்துப்பார்க்க முடியும். அதன் சொந்த வழியிலேயே அளவிடுவதென்றால், ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டை சுற்றிய காலத்திலிருந்து, சமூக உருவாக்கங்களுக்குள்ளே அவற்றின் குடிமகன்களை / குடிமக்களை அதிகரித்தளவில் தாராளமாய் விடுதலை செய்வதை சட்டபூர்வமாக கொண்டிருக்கும் அளவிலான ஒருதனிநபர் மற்றும் சமூக ஆரோக்கிய நிலைமட்டத்தை பகுத்தறிவு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் இவற்றை பிரயோகிப்பதன் மூலம் கொண்டுவர எடுத்த முயற்சியின் பொதுத்தோல்வியாகும் இது. அவர்கள் 'மனிதஉரிமை சமுதாயங்களாக' ஆவதற்கு சிறந்தமுறையில் முயற்சிசெய்தார்கள் என்று நாம் இதனை குணாம்சப்படுத்தலாம்.”

"……….அங்கே நவீனத்தின் பரிசோதனையை தாங்கிநிற்கும் கட்டுமானம் என்று கூறப்படும் வகையில் எந்த 'உண்மையான' அஸ்திவாரங்களும் இப்பொழுதும் இல்லை, இதற்குமுன்னரும் ஒருபோதும் இருந்ததில்லை."…5

இந்த பத்தியை ”கட்டுடைக்க” என்னை அனுமதியுங்கள். இருநூறு ஆண்டுகளுக்கும் அதிகமான காலமாய், அதாவது பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கி, அறிவொளியின் விஞ்ஞானம் மற்றும் மெய்யியலால் கவரப்பட்டவர்கள் இருந்தார்கள். முன்னேற்றத்திலும், மானுட நேர்த்தியாக்கத்தின் சாத்தியத்திலும் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதோடு வரலாற்று நியதிகளுக்குள்ளே காணுகின்ற ஒரு அறிவியல் பார்வையாக அவர்கள் நம்பிய ஒன்றின் அடிப்படையில் சமுதாயத்தை புரட்சிகரரீதியாக உருமாற்றுவதற்கும் முனைந்தனர். வரலாறு என்பது விதி ஆளுமை செய்யும் ஒரு நிகழ்ச்சிப்போக்கு, அது தனிமனிதர்களின் அகநிலை நனவிலிருந்து சுயாதீனமாக நிலவி வருகின்ற சமூகப்பொருளாதார சக்திகளால் தீர்மானிக்கப்படுவது, ஆனாலும் மானுட முன்னேற்றத்தின் நலனில் மனிதன் அவற்றைக் கண்டறிய முடியும், புரிந்து கொள்ள முடியும், அவற்றின் மீது செயல்பட முடியும் என்று நம்பிய மார்க்சிஸ்டுகள் அங்கே இருந்தார்கள்.

ஆனால் இத்தகைய அத்தனை கருத்தாக்கங்களும் அப்பாவித்தனமான பிரமைகளே என்பது எடுத்துக்காட்டப்பட்டு இருப்பதாக பின்நவீனத்துவவாதிகள் அறிவிக்கிறார்கள். இப்பொழுது நாம் நன்கு அறிவோம்: முதலெழுத்து பேரெழுத்து கொண்டதாய் வரலாறு என்ற ஒன்றே இல்லையாம். புறநிலை நிகழ்ச்சிப் போக்கு என்று புரிந்துகொண்ட வகையில் சிறிய முதலெழுத்து கொண்ட வரலாறும் கூட அங்கு இல்லை. அவை அனைத்துமே, அகநிலையாக தீர்மானிக்கப்பட்ட ஒரு காரணத்திற்காக, அந்தக் காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், வார்த்தைகளை மாற்றிப் போட்டு நடத்துகின்ற அகநிலையான “கதையாடல்கள்” அல்லது “சொல்லாடல்கள்” மட்டுமேயாம்.

அப்படிப் பார்க்கும்போது “வரலாற்றில்” இருந்து “படிப்பினைகள்” கற்பது என்ற யோசனையே அர்த்தமற்றதாக ஆகி விடுகிறது அல்லவா. அதாவது ஆய்வு செய்வதற்கும் எதுவுமில்லை, கற்றுக் கொள்வதற்கும் எதுவுமில்லை. ஜென்கின்ஸ் வலியுறுத்துகிறார்:

நமது நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு இறுதியாய் தன்னைத் தானே ஒப்பளவாகக் கொள்ளும் (பகட்டாரவார பேச்சு) உரையாடலின் அந்தஸ்தினைக் கடந்து, எந்த நியாயப்படுத்தக்கூடிய மெய்ப்பொருள் மூலரீதியான அல்லது அறிவு ஆதாரவியல் ரீதியான அல்லது அறரீதியான முகாந்திரங்களும் இல்லை என்ற நிலையிலுள்ள சமூக உருவாக்கங்களுக்கு நடுவில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை நாம் இப்போது புரிந்து கொண்டாக வேண்டியிருக்கிறது... இதன் விளைவாக, ஒருவகையான சாரத்தை வெளிப்படுத்துகின்றதான கடந்தகாலம் என்பதான எதுவொன்றும் இருந்ததும் கிடையாது, இருக்கப் போவதும் கிடையாது என்பதை இன்று நாம் உணர்கிறோம். 6

இதைப் புரியக்கூடிய வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால், ஜென்கின்ஸ் சொல்வது இதுதான்: 1) கடந்த காலத்து அல்லது நிகழ்காலத்து மானுட சமூகங்களின் செயல்பாட்டினை, கண்டுபிடிக்க முடிகின்ற அல்லது கண்டுபிடிக்கப்பட காத்திருக்கின்ற விதிகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடியாது; 2) மனிதர்கள் அவர்கள் வாழும் சமூகம் குறித்து சிந்திக்கின்ற, பேசுகின்ற, அல்லது செய்கின்ற ஒன்றின் கீழமைந்த புறநிலை அடித்தளம் எதுவும் கிடையாது. தங்களை வரலாற்றாசிரியர்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் கடந்த காலம் குறித்த ஏதேனும் ஒரு பொருள்விளக்கத்தை முன்வைக்கலாம், ஆனால் ஒரு பொருள்விளக்கத்தைக் கொண்டு இன்னொரு பொருள்விளக்கத்தை பிரதியீடு செய்வதென்பது முன்பெழுதப்பட்டிருந்ததை விடவும் புறநிலையான உண்மைக்கு சற்று கூடுதலாய் நெருங்கிச் செல்வதன் வெளிப்பாடு கிடையாது —ஏனென்றால் நெருங்கிச் செல்வதற்காய் புறநிலை உண்மை என்ற ஒன்றே கிடையாது. வரலாற்றாசிரியரின் அகநிலையாக-உணரப்படுகின்ற பயன்பாடுகளுக்கு தக்கவாறு கடந்த காலம் குறித்து ஒருவகையாக பேசிக் கொண்டிருந்ததை கடந்த காலம் குறித்து இன்னொரு வகையாய் பேசிக் கொண்டிருப்பதை கொண்டு பிரதியீடு செய்வது மட்டுமே இது.

இந்தக் கண்ணோட்டத்தை முன்வைப்பவர்கள் நவீனத்தியம் மரித்து விட்டதை திட்டவட்டமாய் கூறுகிறார்கள், ஆனால் தமது முடிவுகளுக்கு அடிக்கோளாக அமைந்திருந்த வரலாற்று மற்றும் அரசியல் தீர்ப்புகளுக்கு கீழமைந்திருப்பவை குறித்து ஆய்வு செய்ய மறுக்கிறார்கள். அவர்களுக்கும் அரசியல் நிலைப்பாடுகள் இருக்கவே செய்கின்றன, அவை அவர்களது தத்துவார்த்த பார்வைகளில் வெளிப்பாடு காண்கின்றன. பின்நவீனத்துவத்தின் முன்னணி விளக்கவுரையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஹேய்டன் வைட் எழுதியிருக்கிறார்:

நான் புரட்சிகளுக்கு எதிரானவன், அவை சமூகப் படிநிலையில் “மேலே” இருந்து தொடுக்கப்பட்டிருந்தாலும் அல்லது “கீழே” இருந்து தொடுக்கப்பட்டிருந்தாலும் சரி, சமூக மற்றும் வரலாற்று விஞ்ஞானத்தை கற்றுத் தேர்ந்ததாய் கூறுபவர்களால் வழிநடத்தப்பட்டிருந்தாலும் அல்லது அரசியல் “தன்னெழுச்சியை” கொண்டாடுபவர்களால் வழிநடத்தப்பட்டிருந்தாலும் சரி.7

ஒரு கொடுக்கப்பட்ட மெய்யியல் கருத்தாக்கத்தின் செல்தகைமை என்பது, தனிநபர் முன்னெடுக்கின்ற அரசியலால் தானாக மறுதலிக்கப்பட்டு விடாது. ஆனால் பின்நவீனத்துவத்துவ தத்துவார்த்த கருத்தாக்கங்களை அதன் அரசியல் முன்னோக்கில் இருந்து பிரித்தெடுப்பது சாத்தியமில்லாதது என்ற மட்டத்திற்கு அதன் மார்க்சிச-விரோத மற்றும் சோசலிச-விரோத பயணப்பாதை மிகத் தெளிவாக இருக்கிறது.

ஜோன்-பிரான்சுவா லியோத்தார்

இந்த தொடர்பு பிரெஞ்சு மெய்யியலாளரான ஜோன்-பிரான்சுவா லியோத்தார் மற்றும் அமெரிக்க மெய்யியலாளரான ரிச்சார்ட் ரோர்ட்டி (Richard Rorty) ஆகியோரது எழுத்துக்களில் வெளிப்பாடு காண்கிறது. முதலாமவருடன் தொடங்குவோம். லியோத்தார், சோசலிச அரசியலில் நேரடியாக ஈடுபட்டிருந்தார். 1954 இல், அவர் Socialisme ou Barbarie இல் இணைந்தார். இந்த அமைப்பு, நான்காம் அகிலத்தின் பிரெஞ்சுப் பிரிவான PCI (Parti Communiste Internationaliste) இல் இருந்தான பிளவில் இருந்து 1949 இல் உருவாகியிருந்த ஒரு அமைப்பாகும். சோவியத் ஒன்றியத்தை ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசு என்று ட்ரொட்ஸ்கி வரையறை செய்ததை, இந்தக் குழு நிராகரித்ததை அடிப்படையாக கொண்டே இந்தப் பிளவு ஏற்பட்டிருந்தது. கோர்னேலியுஸ் கஸ்ரோறியாடிஸ் மற்றும் குளோட் லுஃபோர் ஆகியோரை தலைமை மெய்யியலாளர்களாக கொண்டிருந்த இந்த Socialisme ou Barbarie அபிவிருத்தி செய்த நிலைப்பாடு என்னவென்றால், அதிகாரத்துவம் ஒரு ஒட்டுண்ணித்தனமான சமூக அடுக்காக இருக்கவில்லை, மாறாக புதியதொரு சுரண்டும் சமூக வர்க்கமாக இருந்தது என்பதாகும். லியோத்தார் இந்தக் குழுவில் 1960களின் நடுப்பகுதி வரை இருந்தார், அதற்குள்ளாகவே அவர் மார்க்சிசத்தில் இருந்து முழுமையாக முறித்துக் கொண்டு விட்டிருந்தார்.

மானுட விடுதலை குறித்த “பெருங் கதையாடல்களை” மறுதலிப்பதில் லியோத்தார் பிரதானமாக அடையாளம் காணப்படுகிறார், இவற்றின் ஏற்கத்தக்கதன்மை இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகளால் மறுதலிக்கப்பட்டு விட்டிருக்கின்றன என்கிறார் அவர்.

அவர் பின்வருமாறு வாதிடுகிறார்:

சொல்லப்போனால், விடுதலை குறித்த பெருங் கதையாடல்கள் ஒவ்வொன்றின் வெகு அடிப்படையே, கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் செல்லாக்காசாகி விட்டிருக்கிறது. உண்மையானவை அத்தனையும் பகுத்தறிவானவை, பகுத்தறிவானவை அத்தனையும் உண்மையானவை: இந்த ஊகக் கோட்பாட்டை “அவுஸ்விட்ற்ச்” மறுக்கிறது. குறைந்தபட்சம் அந்த உண்மையான குற்றம், பகுத்தறிவானதல்ல. பாட்டாளி வர்க்கப்பட்டதெல்லாம் கம்யூனிசம், கம்யூனிச வகைப்பட்டதெல்லாம் பாட்டாளி வர்க்க வகை: “1953 பேர்லின், புடாபெஸ்ட் 1956, செக்கோஸ்லாவாக்கியா 1968, போலந்து 1980” (மிக வெளிப்பட்ட ஒரு சில உதாரணங்களை மட்டும் பார்ப்பதானால்) வரலாற்று சடவாத தத்துவத்தை மறுக்கின்றன: தொழிலாளர்கள் கட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுகின்றனர். ஜனநாயக வகைப்பட்ட அத்தனையுமே மக்களின் ஊடாக மக்களுக்காக நிலவுகின்றன, அதன் தலைகீழும் அப்படியே: “1968 மே”, நாடாளுமன்ற தாராளவாதத்தின் கோட்பாட்டை மறுக்கிறது. அதன்போக்கில் விட்டுவிட்டால், விநியோகம் மற்றும் தேவையின் விதிகள் உலகளாவிய செழிப்பில் கொண்டு விளையும், அதன் தலைகீழ் கூற்றும் அப்படியே: “1911 மற்றும் 1929 இன் நெருக்கடிகள்” பொருளாதார தாராளவாதம் என்னும் கோட்பாட்டை மறுக்கின்றன.8

லியோத்தாரின் பின்நவீனத்துவம் என்ற ஒட்டுமொத்த தத்துவார்த்த திட்டநிரலின் கீழமைந்திருக்கும் நோக்குநிலை பிறழ்வு, விரக்தி, அவநம்பிக்கை, மற்றும் குழப்பம் ஆகியவற்றின் மொத்தக் கலவையும் இந்தப் பத்தியில் காணக்கூடியதாய் இருக்கிறது. வரலாற்றை விஞ்ஞானரீதியாக புரிந்து கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் அவுஸ்விட்ற்ச் மறுதலிக்கிறது என்பதான வாதம், எந்த வகையிலும் லியோத்தாருக்கு சொந்தமானதல்ல. ஃபிராங்க்பேர்ட் பள்ளியின் தந்தைகளான அடோர்னோ மற்றும் ஹோர்கைய்மரது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய எழுத்துகளுக்கும் இதேபோன்றதொரு சிந்தனையே அடிப்படையை உருவாக்கித் தந்திருந்தது. அவுஸ்விட்ற்ச் உண்மையானது மற்றும் பகுத்தறிவற்றது என்ற லியோத்தாரின் பிரகடனம், ஹேகலின் இயங்கியல் புரட்சிகர கருத்தாக்கத்தை கொச்சைப்படுத்தி திரிப்பதாகும். லியோத்தாரின் மறுப்பாகக் கூறப்படுவது, ஒரு மெய்யியல் கருத்தாக்கம் என்றவகையில், உண்மையை ஒரு குறிப்பிட்ட கணத்தில் நிலவுகின்ற ஒன்றுடன் அடையாளப்படுத்திக் காட்டுவதை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஆனால் ஏங்கெல்ஸ் விளக்கியவாறு, ஹேகல் புரிந்துகொண்ட விதத்தில், உண்மைநிலை என்பது, “எந்தவகையிலும், தரப்பட்ட சமூக அல்லது அரசியல் நிலையில் அனைத்து சூழ்நிலைகளிலும் அனைத்து சமயங்களிலும் கணிக்கத்தக்கதொரு அம்சம் அன்று.”9 நிலவுகின்ற அது, சமூகரீதியாக மற்றும் வரலாற்றுரீதியாக பகுத்தறிவற்றதாக, ஆகவே உண்மையற்றதாக, உருப்படாததாக மற்றும் கேடானதலைவிதி கொண்டதாக இருக்கின்றவகையில், மனிதசமுதாயத்தின் அபிவிருத்திக்கு மிகமுற்றிலும் முரண்பாடானவிதத்திலும் இருக்கமுடியும். இந்த ஆழமான பொருளில் ஜேர்மன் ஏகாதிபத்தியமானது —இதிலிருந்துதான் நாசிசமும் அவுஸ்விட்ற்ச்சும் எழுந்தன— ஹேகலின் மெய்யியல் மேற்கோளுரையின் உண்மையையே எடுத்துக்காட்டியது.

ஸ்ராலினிசத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சிகள், வரலாற்று சடவாதத்தை மறுக்கவில்லை. மாறாக, லியோத்தார் தழுவிக் கொண்டிருந்த Socialisme ou Barbarie இன் அரசியலையே அவை மறுதலிக்கின்றன. இத்தகைய எழுச்சிகளை ட்ரொட்ஸ்கி முன்கணித்திருந்தார். ஒரு ஒட்டுண்ணித்தனமான சாதியாக ஸ்ராலினிச அதிகாரத்துவங்களிடம் இல்லாதிருந்த அதிகாரம் மற்றும் ஸ்திரத்தன்மையின் ஒரு மட்டத்தை Socialisme ou Barbarie குழு அவற்றுக்கு இருப்பதாக காட்டியது. தவிரவும், ஒரு புரட்சிகர இயக்கமாக கம்யூனிசத்தை, உண்மையில் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களது அரசியல் அமைப்புகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் லியோத்தார் மறைமுகமாக அடையாளப்படுத்துகிறார். பொருளாதார மற்றும் நாடாளுமன்ற தாராளவாதத்தை மறுக்கின்ற விடயங்களைப் பொறுத்தவரை, இதெல்லாம் லியோத்தார் மேற்கோளிடும் நிகழ்வுகளுக்கு வெகுகாலத்திற்கு முன்பே மார்க்சிஸ்டுகளால் நிரூபித்துக் காட்டப்பட்டு விட்டவை. 1968 மே மாதத்தை நாடாளுமன்ற தாராளவாதத்தின் வீழ்ச்சிக்காய் அவர் குறிப்பிட்டுக் காட்டுவது குறிப்பாக விகாரமானதாக இருக்கிறது. ஸ்பெயின் உள்நாட்டுப் போர் குறித்து என்ன சொல்கிறீர்கள்? வைய்மார் குடியரசின் நிலைகுலைவு குறித்து? பிரெஞ்சு ஐக்கிய முன்னணியின் காட்டிக் கொடுப்பு குறித்து? இந்த நிகழ்வுகள் எல்லாம் 1968 மே-ஜூன் காலத்திற்கு முப்பது வருடத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்பே நடந்து விட்டன. மகத்தான மெய்யியல் கண்டுபிடிப்புகளாக லியோத்தார் சித்தரிப்பதெல்லாம் வெறுப்படைந்த முன்னாள்-இடது (அல்லது வலது நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்) ஏட்டறிவு கொண்ட குட்டி முதலாளித்துவத்தின் அவநம்பிக்கை மற்றும் சிடுசிடுப்புத்தனத்தின் வெளிப்பாடு என்பதற்கு மேல் அதிகமாக ஒன்றுமில்லை.

ரிச்சர்ட் ரோர்ட்டி

புறநிலை உண்மை என்ற கருத்தாக்கத்தை தான் நிராகரிப்பதை புரட்சிகர சோசலிச அரசியலை மறுதலிப்பதுடன் சம்பந்தப்படுத்த ரிச்சார்ட் ரோர்ட்டி கொஞ்சமும் கூச்சப்படவில்லை. ரோர்ட்டியை பொறுத்தவரை, கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதும் இடது புத்திஜீவிகளுக்கு, ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கிற்கான எந்த வகையான புத்திஜீவித (அல்லது உணர்வுபூர்வமானதும் கூட) உறுதிப்பாட்டையும் ஒரேயடியாக கைதுறப்பதற்கு அவர்கள் நெடுநாட்களாய் காத்திருந்த வாய்ப்பை வழங்கியதாக அவர் கூறுகிறார். “லெனினிசத்தின் முடிவு, அபத்தம் மற்றும் சமூக நம்பிக்கை” என்ற தனது கட்டுரையில் ரோர்ட்டி அறிவித்தார்:

மனித சமுதாயங்களின் தலைவிதிகளை தீர்மானிக்கின்ற, அதன் கீழுள்ள சக்திகளை பற்றி, ஆழமான எதையோ பற்றி அவர்கள் அறிவர், அல்லது அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற நினைப்பில் இருந்து விடுபடுவதற்கு புத்திஜீவிகள் லெனினிசத்தின் மரணத்தை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

புத்திஜீவிகளாகிய நாம், இத்தகையதான அறிவுக்கு நாம் கடை விரித்த நாள் முதலாகவே உரிமை கோரிக் கொண்டிருக்கிறோம். ஒருசமயம் அரசர்கள் மெய்யியலாளர்கள் ஆகவில்லை என்றாலோ அல்லது மெய்யியலாளர்கள் அரசர்கள் ஆகவில்லை என்றாலோ நீதி கோலோச்ச முடியாது என்பது தெரியும் என்பதாக நாம் கூறி வந்தோம்; மானுட ஆத்மாவிற்குள் தேடும் சோதனையை அடிப்படையாகக் கொண்டு இதைத் தெரிந்து கொண்டதாகவும் நாம் கூறிக் கொண்டோம். மிகச் சமீபத்தில், முதலாளித்துவம் தூக்கியெறியப்படும் வரையிலும் கலாச்சாரம் பண்டமயமாக்கப்படல் அகற்றப்படுகின்ற வரையிலும் அது கோலோச்ச முடியாது என்பது தெரியும் என்பதாய் கூறினோம்; வரலாற்றின் வடிவம் மற்றும் இயக்கத்தை புரிந்து கொண்டதன் அடிப்படையில் இதனைத் தெரிந்து கொண்டதாகவும் நாம் கூறினோம். அநீதியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சிறு பரிசோதனை வழிகளுக்கு எதிராய் பெரும் தத்துவார்த்த வழிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற பிளேட்டோ மற்றும் மார்க்ஸிற்குப் பொதுவான ஒரு திட்டவட்டமான சிந்தனையில் இருந்து நாம் இறுதியாக விடுபடுவதற்கான ஒரு காலத்தை நாம் எட்டியிருக்கிறோம் என்றே நான் நம்புவேன்.

இத்தகையதொரு தத்துவார்த்த கைவிடுதலை தொடர்ந்து வருவதென்ன? ரோர்ட்டி “இடது” அரசியலை மறுநோக்குநிலைப்படுத்துவதற்காக தனது ஆலோசனைகளை வழங்குகிறார்:

இடதுசாரி அரசியல் வார்த்தைக் களஞ்சியத்தில் இருந்து “முதலாளித்துவம்”, “சோசலிசம்” ஆகிய வார்த்தைகளை நீக்குவதற்கான காலம் வந்து விட்டதாகவே நான் கருதுகிறேன். ”முதலாளித்துவ-எதிர்ப்புப் போராட்டம்” குறித்துப் பேசுவதை நிறுத்தி விட்டு, அதற்குப் பதிலாக கொஞ்சம் வழமையான மற்றும் தத்துவார்த்தமற்ற ஒன்றைக் கொண்டு, “தவிர்க்கக்கூடிய மனிதத் துயரத்திற்கு எதிரான போராட்டம்” என்பது போன்ற ஒன்றைக் கொண்டு பிரதியீடு செய்வது என்பது ஒரு நல்ல யோசனை. இன்னும் பொதுவாய், நாம் இடதுசாரி அரசியல் சிந்தனைகளின் ஒட்டுமொத்த வார்த்தைக் களஞ்சியத்தையுமே எளிமைப்படுத்தி விட முடியும் என்றே நான் நம்புகிறேன். என்னுடைய யோசனை என்னவென்றால் முதலாளித்துவ சித்தாந்தம் என்பதைக் காட்டிலும் பேராசை மற்றும் சுயநலம் குறித்து நாம் பேசத் தொடங்கலாம், உழைப்பு பண்டமயமாக்கப்படுவதை பேசுவதைக் காட்டிலும் மோசமான ஊதியங்களையும் ஆட்குறைப்புகளையும் குறித்துப் பேசலாம், சமூகம் வர்க்கங்களாய் பிரிந்து கிடக்கிறது என்று பேசாமல் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ஆகும் செலவு என்பது எப்படி பேதப்படுகிறது என்பது குறித்தும் சுகாதாரப் பரமாரிப்புக்கான அணுகலில் எவ்வாறு பேதம் நிலவுகிறது என்பது குறித்தும் பேசலாம்.11

இதையா அரசியல் மெய்யியலாக கவனத்திற்குரியதாக எடுத்துக் கொள்ள முடியும்? “எளிமைப்படுத்துவது” என்று ரோர்ட்டி கூறுவதை புத்திஜீவித மற்றும் அரசியல் காயடிப்பு என்று வருணிப்பதே இன்னும் சரியாக இருக்கும். 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தத்துவார்த்த சிந்தனைகளது சாதனைகளை விவாதத்தில் இருந்து தடைசெய்வதற்கு அவர் ஆலோசனை சொல்கிறார். சிந்தனையின் அபிவிருத்தி என்பது ஒரு தன்னிச்சையான அகநிலை நிகழ்வுப்போக்கு என்றதான கருத்தோட்டம் தான் இந்த ஆலோசனையின் கீழமைந்திருக்கிறது. வார்த்தைகள், தத்துவார்த்தக் கருத்தாக்கங்கள், காரண காரிய வகைப்பாடுகள் மற்றும் மெய்யியல் முறைமைகள் இவையெல்லாம் வெறும் வாய்ச்சொல் கட்டுமானங்கள் தான், பல்வேறு அகநிலை முடிவுகளது நலன்களுக்கேற்ப இவை நடைமுறைரீதியாக கொண்டுவரப்பட்டவை என்கிறார். தத்துவார்த்த சிந்தனையின் அபிவிருத்தி என்பது, ஒரு புறநிலை நிகழ்வுப்போக்கு, அது இயற்கை மற்றும் சமூகம் குறித்த மனிதனின் பரிணாமமடைந்து செல்கின்ற, ஆழமடைந்து செல்கின்ற, அத்துடன் முன்னெப்போதையும் விட சிக்கலான மற்றும் துல்லியமான புரிதலை வெளிப்படுத்துகின்றது என்பதான கூற்று, ரோர்ட்டியை பொறுத்தவரை, காலத்திற்கு ஒவ்வாத ஹேகலிய-மார்க்சிச கதைப்பேச்சுக்கு மேல் எதுவுமில்லை. இன்னொரு பத்தியில் அவர் குறிப்பிடுகிறவாறு, குறிப்பாகத் திறன்பெற்ற இயற்கை விஞ்ஞானிகள் இருக்கும் மற்றும் கண்டுபிடிக்கக்கூடிய இயற்கையைக் கொண்டிருக்கும் ‘அறிதல்’ என்று அழைக்கப்படும் செயல்பாடே கிடையாது. நம்பிக்கைகளை பார்வையாளர்களுக்கு நியாயப்படுத்துகின்ற நிகழ்ச்சிபோக்கு மட்டுமே இருக்கிறது.”

ஆக, “முதலாளித்துவம்”, “தொழிலாள வர்க்கம்”, “சோசலிசம்”, “உபரி மதிப்பு”, ”கூலி-உழைப்பு”, “சுரண்டல்” மற்றும் “ஏகாதிபத்தியம்” ஆகிய பதங்கள் எல்லாம் ஒரு புறநிலை யதார்த்தத்தை வெளிப்படுத்துவன அல்ல, குறிப்பனவல்ல என்கிறார். “தவிர்க்கக்கூடிய மானுடத் துயரத்திற்கு எதிரான போராட்டம்” குறித்து நாம் பேசலாம் என்று ரோர்ட்டி ஆலோசனை சொல்கிறார். ஒரு கணம், இந்த அற்புதமான யோசனையை ஏற்றுக் கொண்டு பார்ப்போம். ஆனால் உடனடியாக அடுத்தகணமே ஒரு பிரச்சினை எதிர்கொண்டு நிற்கிறது. துயரம் என்பதை ஒருவர் எப்படி வரையறை செய்வது? மனிதத் துயரத்தின் எந்த வடிவத்தை தவிர்க்கக்கூடியதாக நாம் வரையறை செய்ய வேண்டும்? துயரம் தவிர்க்கத்தக்கது என்பதையோ, அல்லது அது தவிர்க்கப்பட்டாக வேண்டும் என்பதையோ என்ன அடிப்படையில் நாம் கூறப் போகிறோம்? துன்பம் என்பது மனிதன் தெரிந்தெடுத்துக்கொள்வது, அது அருள்பாலிப்பு அற்றுப்போவதால் வருகின்ற பின்விளைவாகும் என்று வாதிடுபவர்களுக்கு என்ன பதில் கொடுப்பது? இறையியல்வாதிகளது வாதங்களை ஓரங்கட்டி விட்டு, துயரத்தை மதச்சார்பற்றதாக, ஒரு சமூகப் பொருளாதார பிரச்சினையாக சிந்திப்பதாக கொண்டாலும், அப்போதும் கூட நமக்கு துயரத்தின் காரணங்களை பகுப்பாய்வு செய்கின்ற பிரச்சினை எதிர்கொண்டு நிற்கத்தானே செய்கிறது.

ஆக, “தவிர்க்கத்தக்க மனித துயரத்தை” ஒழிப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பை பகுப்பாய்வு செய்ய நிர்ப்பந்திக்கப்படும். இத்தகையதொரு விசாரணை எந்த மட்டத்திற்கு நேர்மையுடன் முன்னெடுக்கப்படுகிறதோ அந்த மட்டத்திற்கு “தவிர்க்கக்கூடிய மனிதத் துயர”த்திற்கு எதிரான புனிதப்போராளிகள் “உரிமைத்துவம்”, “சொத்து”, “இலாபம்”, மற்றும் “வர்க்கம்” ஆகியவற்றின் இயல் நிகழ்வையும் உறவுகளையும் எதிர்பாராது சந்திக்க நேருவார்கள். இந்த சமூக இயல்நிகழ்வுகளை விவரிப்பதற்கு அவர்கள் சுற்றி வளைத்துப் பொருள் உணர்த்தும் வார்த்தைகளை வேண்டுமானால் உபயோகிக்கலாம், ஆனால் அவற்றைக் கொண்டு அவற்றின் புறநிலை இருப்பை மறுத்து விட முடியாது.

ரோர்ட்டியின் தத்துவார்த்த கருத்தாக்கங்கள் மிக அப்பட்டமான சீரின்மைகளாலும் முரண்பாடுகளாலும் நிரம்பிக் கிடக்கின்றன. கண்டுபிடிப்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் எந்த “உண்மை”யும் கிடையாது என அவர் திட்டவட்டமாக வலியுறுத்துகிறார். அநேகமாய், உண்மை என்பது இருக்கவில்லை என்ற தனது கண்டுபிடிப்பை “உண்மை” என்று அவர் எடுத்துக் கொள்கிறார் என்றே சொல்ல வேண்டும், ஏனென்றால் அது தான் அவரது மெய்யியலின் அடித்தளத்தை உருவாக்குவதாக இருக்கிறது. ஆனால் இந்த அப்பட்டமான சீரின்மை குறித்து ரோர்ட்டியிடம் கேட்டால், பிளேட்டோ காலத்தில் இருந்தான பாரம்பரிய மெய்யியல் சொல்லாடலில் வேரூன்றியதாக இருக்கும் இந்தக் கேள்வியின் நிபந்தனைகளுக்கு தான் ஆட்படப் போவதில்லை என்று பிரகடனம் செய்து இந்தக் கேள்வியில் இருந்து நழுவுகிறார். உண்மை என்பது இப்போது காலம் கடந்து போன பழைய பிரச்சினைகளில் ஒன்றாகி விட்டது, வெறுமனே அதைக் கொண்டு எல்லாம் ஒருவர் ஒரு சுவாரஸ்யமான மெய்யியல் விவாதத்தை முன்னெடுத்து விட முடியாது என்று ரோர்ட்டி வலியுறுத்துகிறார். அந்தப் பிரச்சினை எழும்போதெல்லாம், ரோர்ட்டி, அவரே சற்று சிடுசிடுப்புடன் குறிப்பிட்டுக் காட்டியிருப்பதைப் போல, “பேச்சுப் பொருளை மாற்றிவிடுவதற்கே விரும்புவார்.”13

ரோர்ட்டியின் மெய்யியல் கருத்தாக்கங்கள் குறித்துப் புரிந்து கொள்வதற்கான திறவுகோல் அவரது அரசியல் நிலைப்பாடுகளில் காணக் கிடைக்கிறது. மெய்யியலுக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பை புறந்தள்ளுவதற்கு ரோர்ட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் முனைந்திருக்கிறார் என்றபோதிலும், தனது தத்துவார்த்த கருத்தாக்கங்களை ஒரு அரசியல் நிலைப்பாட்டுடன் -மார்க்சிச புரட்சிகர அரசியலை நிராகரிப்பது மற்றும் எதிர்ப்பது என்பதே அந்த நிலைப்பாடு- மிக நேரடியாக பிணைத்துக் கொண்ட ஒரு மெய்யியல் அறிஞரை சமகாலத்தில் ரோர்ட்டியைப் போல காண்பது கடினம். மார்க்சிசத்தை முறையாக ஆய்ந்து மறுப்பதற்கு ரோர்ட்டி முயற்சி செய்வதில்லை. சோசலிசத் திட்டம் (இதனை சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியுடன் தான் ரோர்ட்டி பெருமளவுக்கு அடையாளம் காண்கிறார்) தோல்வியடைந்து விட்டது, அத்துடன் அது வருங்காலத்தில் வெற்றி பெறும் என்பதான நம்பிக்கையும் கூட, ரோர்ட்டியை பொறுத்தவரை, அரிதானதாகி விட்டது. பழைய மார்க்சிச இடதின் சிதைவுகளில் இருந்தெல்லாம் தீர்வைக் கண்டெடுக்க எதுவுமில்லை. வரலாறு, கோட்பாடுகள், வேலைத்திட்டங்கள், மற்றும், அனைத்திலும் மோசமாய், புறநிலை உண்மை இவை குறித்த புதிய சித்தாந்த சண்டைகளில் இறங்குவதைக் காட்டிலும், ஆகக் குறைந்தபட்ச பொதுவான அம்சங்களது மிக மத்தியமான அரசியலுக்குப் பின்வாங்குவதே சிறந்தது. இதுதான் ரோர்ட்டியின் மெய்யியல் உண்மையில் அனைத்தையும் பற்றிச் சொல்வது. உண்மையிலேயே அமெரிக்கப் பல்கலைக்கழக கல்விசார் பின்நவீனத்துவ சொல்லாடலின் பெரும் பகுதியும் இதுதான்.

ரோர்ட்டியை பொறுத்தவரை (நாம் பார்க்கப்போகும் இன்னும் பலருக்கும் கூட) ”1989 இன் நிகழ்வுகளானவை மார்க்சிசத்தை இன்னும் தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்க முயற்சித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, முதலாளித்துவம், முதலாளித்துவ வாழ்க்கைமுறை, முதலாளித்துவ சித்தாந்தம், மற்றும் தொழிலாள வர்க்கம் என்பவற்றுக்குக் குறிப்புக் காண்பிப்பதை கைவிட்டு, நமது காலத்தை சிந்தனையில் கொண்டு வருங்காலத்தை நிகழ்காலத்தை விடவும் சிறப்பாக ஆக்குவதற்கு திட்டமிடுவதற்கான ஒரு வழி தேவையாயிருக்கிறது என்பதில் நம்பிக்கைகொள்ளச் செய்திருக்கிறது.”14 அவர் வாதிடுகிறார்,

துயரம் குறைந்து காணப்படுகின்ற நமது கற்பனாவுலகத்தை சுற்றிப் பின்னுவதற்கு வசதியான ஒரு பொருளின் பெயராக “வரலாறு” என்பதைப் பயன்படுத்துவதை நாம் நிறுத்துவதற்கான காலம் வந்திருக்கிறது. ’ஒரு உலக-வரலாற்று அளவிலான தீவிரப்பட்ட பிறருக்காக (Radically Other) மொத்தப் புரட்சிக்காக நீங்கள் இன்னும் ஏங்கிக் கொண்டிருப்பீர்களாயின், உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்பதையே 1989 இன் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன’ என்ற ஃபிரான்சிஸ் ஃபுகுயாமாவின் கருத்தை (வரலாற்றின் முடிவு என்ற அவரது பிரபல கட்டுரையில் இது கூறப்படுகிறது) நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.15

1989 இன் தாக்கம்

இந்த வகையான சிடுமூஞ்சித்தனமான முரண்நகை, ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சியை பின்தொடர்ந்து வந்த அரசியல் பிற்போக்குத்தனத்திற்கு முகம்கொடுத்த நிலையில், இடது கல்வியறிஞர்கள் மற்றும் தீவிரக்கோட்பாட்டு பிரிவினர் வட்டாரத்தில் அலையென வீசிய மண்டியிடுதல் மற்றும் விரக்தியினை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்தப் போக்குகள் எல்லாம் ஸ்ராலினிச ஆட்சிகளது உடைவின் வரலாற்று, அரசியல், பொருளாதார மற்றும் சமூக வேர்களை தீவிரமான பகுப்பாய்வுக்கு உட்படுத்த முனைவதற்கு பதிலாக, நிலவுகின்ற பிற்போக்குத்தனமான, குழப்பமான மற்றும் அவநம்பிக்கையான சூழலுக்கு தக்க வகையில் தங்களை வெகுவேகமாய் தகவமைத்துக் கொண்டன.

1930களின் போது, ஸ்ராலினிச மற்றும் பாசிச பிற்போக்குத்தன அலையின் முன்னால் அரசியல் சரணாகதி நிகழ்ந்ததை விளக்கிய ட்ரொட்ஸ்கி, சக்தியானது வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், நம்பவைத்தும் விடுகிறது. அநேகமான தீவிரபோக்காளர்களுக்கும் இடதுசாரி புத்திஜீவிகளுக்கும் ஒரு முழுமையான அதிர்ச்சியாக அமைந்த ஸ்ராலினிச ஆட்சிகளின் திடீர் உருக்குலைவானது, பேர்லின் சுவர் வீழ்ந்ததை தொடர்ந்து வந்த முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய வெற்றிக்கூச்சலது தாக்குதலுக்கு முன்னால் அவர்களை தத்துவார்த்தரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் இன்னும் தார்மீகரீதியாகவும் கூட நிராயுதபாணிகளாக்கி விட்டது. அதிகாரத்துவ ஆட்சிகள் திடீரென்று மறைந்து போனதில் மிரண்டுபோன குட்டி-முதலாளித்துவ இடது அரசியலின் பலவண்ணப் போக்குகளும் அதனையடுத்து, ஸ்ராலினிச ஆட்சிகளின் மறைவானது மார்க்சிசத்தின் தோல்வியை குறித்ததாகக் கூறின.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பினால் மார்க்சிசம் மதிப்பிழந்து போனதாக அவர்கள் கூறியதில் கோழைத்தனமும் ஒரு பக்கம் இருக்க, கணிசமான அளவுக்கு புத்திஜீவித்தன நேர்மையின்மையும் சம்பந்தப்பட்டிருந்தது. உதாரணமாக, பேராசிரியர் பிரையன் டேர்னர் எழுதினார், “மார்க்சிச தத்துவத்தின் செல்தகைமை கடுமையான சவாலுக்கு ஆளாகியிருக்கிறது என்றால், கிழக்கு ஐரோப்பிய கம்யூனிசம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் முழுமையான வீழ்ச்சியை மார்க்சிசம் முன்னெதிர்பார்க்க தவறியதும் அதற்கு முக்கியமானதொரு காரணமாக அமைந்தது.”16 இத்தகைய கூற்றுகள் அறியாமையுடன் கூறப்பட்டு விட்டதாக சொல்ல முடியாது. இதனையும் இதேபோன்ற கூற்றுகளையும் எழுதிய கல்வியறிஞர் பெருமக்கள் எல்லாம், ஸ்ராலினிச ஆட்சியின் தன்மை குறித்த ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்வானது, ‘அதிகாரத்துவத்தின் கொள்கைகளானவை இறுதியாக சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவுக்கே இட்டுச் செல்லத்தக்கவை’ என்று எச்சரித்தது குறித்து முழுமையாக அறிந்திராதவர்கள் அல்லர்.

ஸ்ராலினிசத்தின் பேரழிவுகரமான பயணப்பாதையை முன்கணித்த பல அறிக்கைகளை அனைத்துலகக் குழு வெளியிட்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்கு முன்னதாக, குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினர் அனைவருமே இந்த எச்சரிக்கைகளை குறுங்குழுவாத கிறுக்குத்தனமென்றே கருதினர். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர், இவர்களெல்லாம், தமது சொந்த அரசியல் கண்ணோட்டத்தை ஒரு தீவிர ஆய்வுக்கு உட்படுத்துவதைக் காட்டிலும், உண்மையாய் “கண்முன் நிலவிய சோசலிச”த்தின் தோல்விக்காக மார்க்சிசத்தின் மீது பழிபோடுவது சுலபமெனக் கண்டனர். கோபத்திலும் ஏமாற்றத்திலும் இருந்த அவர்கள், சோசலிசத்துக்கு தாங்கள் கொண்டிருந்த அரசியல், புத்திஜீவித்தன மற்றும் உணர்வுபூர்வமான உறுதிப்பாடு எல்லாம் ஒரு மோசமான முதலீடு, அது ஆழமாய் வருந்தும் நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிட்டது என்பதாக கருதினார்கள். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்து ஸ்ராலினிசத்திற்கான ஒரு வக்காலத்துவாதியாக பல தசாப்த காலம் சேவை புரிந்தவரான வரலாற்றாசிரியர் எரிக் ஹோப்ஸ்வாம் இவர்களது கண்ணோட்டத்தை சுருங்கக் கூறியிருந்தார். தனது சுயசரிதையில் அவர் எழுதினார்:

கம்யூனிசம் இப்போது இறந்து விட்டது. இந்த மாதிரியைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட சோவியத் ஒன்றியம் மற்றும் அநேக அரசுகள் மற்றும் சமுதாயங்கள், நமக்கெல்லாம் ஆதர்சமாய் விளங்கிய 1917 அக்டோபர் புரட்சியின் பிள்ளைகள், மிக முற்றுமுழுதாய் உருக்குலைந்து பொருட்சிதைவும் அறச்சிதைவும் நிரம்பிய ஒரு காட்சிப்பரப்பை விட்டுச் சென்றிருக்கிறது, தோல்வி என்பது இந்த ஸ்தாபனத்தில் ஆரம்பம் தொட்டே கட்டியெழுப்பப்பட்டிருந்தது என்பது இப்போது வெட்டவெளிச்சமாக புலப்பட்டாக வேண்டும்.17

அக்டோபர் புரட்சியே அவலத் தலைவிதி கொண்டதொரு இடரார்ந்த முயற்சி என்ற ஹோப்ஸ்வாமின் கூற்றானது சோசலிசத்தின் திட்டவட்டமான வலது-சாரி எதிரிகளது வாதங்களுக்கு சரணடைவதாகும். சோசலிசம் என்பது பைத்தியக்காரத்தனமான கற்பனாவாத பார்வை என்பதற்கான மறுக்கவியலாத சான்றே சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியாகும் என்பதையே முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தின் சித்தாந்தவாதிகள் திட்டவட்டமாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

ராபர்ட் கான்குவெஸ்ட், தனது எரிச்சலூட்டும் வகையில் விஷயங்களில் தலையிடுகின்ற Reflections on a Ravaged Century எனும் நூலில் “பூமியில் சொர்க்கபூமி கட்டியெழுப்பப்படமுடியும் என்பதான பழமைபட்டுப்போன யோசனை”யையும் “அத்தனை மனிதப் பிரச்சினைகளுக்கும் ஒரு அமைதி மற்றும் வளமைக்கான சகாப்தத்திலான நம்பிக்கைரீதியில் தீர்வினை வழங்குவதை”யும் கண்டனம் செய்கிறார்.18 போலிஷ்-அமெரிக்க வரலாற்றாசிரியரான Andrzej Walicki பிரகடனம் செய்திருக்கிறார், “உலகெங்கும் கம்யூனிசத்தின் தலைவிதி சுட்டிக்காட்டுவது என்னவென்றால்... எட்டப்பட முடியாதது என்பது உட்பொதிந்ததாகவே இந்த இலட்சியப்பார்வை இருந்துவந்திருக்கிறது. ஆகவே அதனைச் செயலாக்க இடப்பட்ட பிரம்மாண்டமான ஆற்றல் வீணடிக்கப்படும் சாபக்கேட்டை கொண்டதாய் இருந்தது.”19 சமீபத்தில் மறைந்த அமெரிக்க வரலாற்றாசிரியரான மார்ட்டின் மாலியா, இதே கருப்பொருளையே சோவியத் துன்பியல் என்ற தனது 1994 ஆம் ஆண்டு புத்தகத்தில் விரிவாக எழுதியிருந்தார். அதில் அவர் அறிவித்தார்: “….ஒருங்கிணைந்த சோசலிசத்தின் தோல்வி என்பது அது தவறான இடத்தில் -ரஷ்யாவில்– முதலில் முயற்சிக்கப்பட்டதால் எழுந்ததல்ல, மாறாக சோசலிச சிந்தனையிலிருந்தே அது எழுந்திருந்தது. முழுக்க முதலாளித்துவமற்றதாக சோசலிசம் உள்ளியல்பாகவே சாத்தியமற்றது என்பதே இந்த தோல்விக்கான காரணமாகும்.”20

ரிச்சார்ட் பைப்ஸும் சொத்தும்

சோசலிசம் என்பது ஏன் “உள்ளியல்பாய் சாத்தியமில்லாதது” என்பதற்கான விளக்கம் அமெரிக்காவின் மார்க்சிச-விரோத பனிப்போர் வரலாற்றாசிரியர்களில் முன்னிலையானவரான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ரிச்சார்ட் பைப்ஸ் எழுதிய ஒரு புத்தகத்தில் காணக்கிடைக்கிறது. சொத்தும் சுதந்திரமும் (Property and Freedom) என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தில், பைப்ஸ் தனது சொத்து குறித்த தத்துவத்திற்கான விலங்கியல்ரீதியான அடித்தளத்தை நிறுவுகிறார்:

சட்டபூர்வ மற்றும் போதனை வகையிலான சூழ்ச்சிக்கையாளல்கள் ஊடுருவதற்கு இடம் தராத, மாறாத மனித இயல்புகளுள் ஒன்று, அடையவிரும்பும் மனப்பான்மை. அடையும் மனப்பான்மையானது வாழுகின்ற அத்தனை உயிரினங்களுக்கும் பொதுவானது, நாகரிகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் விலங்குகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரிடமும் இது காணத்தக்கதாய் இருந்திருக்கிறது, இந்தக் காரணத்தினால் தான் இது தார்மீகப்படுத்தத்தகாத ஒரு விடயமாக இருக்கிறது. மிக அடிப்படையான மட்டத்தில், இது வாழ்க்கை உள்ளுணர்வின் ஒரு வெளிப்பாடாக இருக்கிறது. ஆயினும் அதனைக் கடந்து, செய்து முடிப்பதையும் அடைவதையும் சுய-திருப்திக்கான வழிமுறைகளாகக் கொண்டிருக்கின்ற மானுட ஆளுமையின் ஒரு அடிப்படைப் பண்பையும் இது உள்ளடக்கியிருக்கிறது. சுயத்தின் திருப்தியே சுதந்திரத்தின் சாரம் என்ற மட்டத்திற்கு, அச்சுதந்திரம் தோன்றச் செய்கின்ற சொத்தும் சமத்துவமின்மையும் பலவந்தமாக அகற்றப்படுகின்றபோது அந்த சுதந்திரம் சிறப்புற முடியாது.21

சொத்து வடிவங்களும் அவற்றின் சட்டபூர்வ கருத்தாக்கமும் வரலாற்றுரீதியாக பரிணாம வளர்ச்சி கண்டவை. சொத்தினை தனிநபர் உரிமையுடன் பிரத்யேகமாக அடையாளம் காண்பதென்பது பதினேழாம் நூற்றாண்டில்தான் தோற்றம் பெற்றதாயிருக்கிறது. ஆரம்ப வரலாற்றுக் காலகட்டங்களில், சொத்து என்பது பொதுவாக இன்னுமொரு பரந்த, இன்னும் சொன்னால் சமுதாய அர்த்தத்தில் தான் பொதுவாக வரையறை செய்யப்பட்டிருந்தது. பொருளாதார வாழ்வில் சந்தை உறவுகள் செல்வாக்கு பெற்றபோது புழக்கத்தில் வந்த ஒரு வரையறையையே சொத்துக்கு பைப்ஸ் பயன்படுத்துகிறார். அந்த சமயத்தில் “ஒன்றை பயன்படுத்துவதில் இருந்து அல்லது ஒன்றை அனுபவிப்பதில் இருந்து மற்றவர்களை விலக்கி வைக்க” ஒரு தனிநபருக்கு இருக்கின்ற உரிமை என்பதாக சொத்து என்பது அடிப்படையாக புரிந்து கொள்ளப்பட்டது.

மனிதகுல வாழ்க்கையில் ஓரளவுக்கு சமீபமான வரலாற்றுக் கட்டத்தில் மட்டுமே மேலாதிக்கமான பாத்திரத்தை பெற்றிருந்திருக்கக் கூடிய இந்த சொத்து வடிவமானது, ஏறக்குறைய விலங்குகள் இராச்சியத்தின் எஞ்சிய உயிரினங்களில் அறியப்படாதது — இதை நிச்சயமாகவே சொல்லலாம் என்றே நினைக்கிறேன்! எப்படியாயினும், உங்களில் யாருக்கேனும் சோசலிசத்தின் கீழ் உங்களது ஐபோட்களுக்கு, வீடுகளுக்கு, கார்களுக்கு மற்றும் தனிநபர் சொத்துடைமையின் மற்ற மதிப்புவாய்ந்த பொருட்களுக்கு என்னவாகுமோ என்ற கவலை தோன்றுமாயின், சோசலிசம் ஒழிக்க விரும்பும் சொத்து வடிவம் உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமையைத்தான் என்பதை உங்களுக்கு என்னால் உறுதியாகக்கூறமுடியும்.

பேராசிரியர் பைப்ஸின் சமீபத்திய படைப்புகளது —சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு பின்னால் எழுதப்பட்டவை— ஒரே உருப்படியான அம்சம் என்னவென்றால், சோவியத் வரலாறு குறித்து அவர் முன்னதாக குறிக்கோள் பரப்பும் வகையில் எழுதிய தொகுதிகளுக்கும் அவரது வலது-சாரி அரசியல் திட்டநிரலுக்கும் இடையிலான தொடர்பு வெட்டவெளிச்சமாக ஆகியிருப்பதுதான். பைப்ஸை பொறுத்தவரை அக்டோபர் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் உருவாக்கம் என்பது உடைமை மற்றும் சொத்துத் தனியுரிமைகள் மீதான ஒரு தாக்குதலைக் குறித்து நிற்பவை. அறிவொளிக்கால இலட்சியங்களெனும் மரத்தில் விளைந்த பயங்கர பழமாகிய சமூக சமத்துவத்திற்கான ஒரு உலகளாவிய மற்றும் பாரிய இயக்கத்தின் உச்சமாக அது இருந்தது. ஆனால் வரலாற்றின் அந்த அத்தியாயம் இப்போது முடிவுக்கு வந்து விட்டிருக்கிறது.

"உடைமைத்துவ உரிமைகள்”, பைப்ஸ் பிரகடனம் செய்கிறார், “சமூக சமத்துவம் மற்றும் அனைவருக்கும் கிடைக்கத்தக்க பொருளாதார பாதுகாப்பு ஆகிய எட்டமுடியாத இலட்சியத்திற்காய் தியாகம் செய்யப்படுவதற்கு பதிலாக மதிப்புகளின் அளவுகோலில் அவற்றின் உரிய இடங்களுக்கு மீட்சி செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.”23 பைப்ஸ் கோரும் சொத்துரிமைகளது மீட்சியை சூழ்ந்திருப்பது என்ன?

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பரிணாமமுற்று வந்திருப்பதான நலன்புரி அரசு என்ற ஒட்டுமொத்த கருத்தாக்கமும் தனிநபர் சுதந்திரத்துடன் இணக்கமற்றதாய் இருக்கிறது. நலன்புரி உதவிகளை அதன் சகல பெயர் குறிப்பிடும் அளவு முக்கியத்துவம் இல்லாத “உரிமை அளிப்புகளுடனும்” மற்றும் போலியான “உரிமைகளுடனுமாய்” சேர்த்து ஒழிப்பதும் சமூக உதவிக்கான பொறுப்புகளை இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னதாக அவற்றுக்கு பொறுப்பேற்றிருந்த குடும்பம் அல்லது தனியார் தொண்டுநிறுவனங்களுக்கே திருப்பியளிப்பதும் இந்தச் சங்கடமான நிலையை தீர்ப்பதை நோக்கிய திசையில் நெடுந்தூரம் செல்லக்கூடியதாகும்.24

ஆளும் உயரடுக்கினை பொறுத்தவரை, சோவியத் ஒன்றியத்தின் முடிவென்பது முதலாளித்துவ பழைய ஆட்சியின் (ancien regime - பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்வந்த ஆட்சிமுறை) ஒரு உலகளாவிய மீட்சியின், அதாவது சொத்து உரிமை, உழைப்புச் சுரண்டல், மற்றும் தனிநபர் செல்வக் குவிப்பு இவற்றின் மீதான அத்தனை தளைகளும் அகற்றப்படுகின்றதான ஒரு சமூக ஒழுங்கினை மறுஸ்தாபகம் செய்வதன் தொடக்கமாகவே பார்க்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை தொடர்ந்த பதினைந்து ஆண்டுகளின் சமயத்தில், சமூக சமத்துவமின்மையிலும் உலக மக்கள் தொகையின் வசதிபடைத்த 1 சதவீதத்திற்குள்ளாக (இன்னும் குறிப்பாய் உச்சியில் இருக்கும் 0.1 சதவீதத்திற்குள்ளாக) செல்வக் குவிப்பின் அளவிலும் ஒரு மலைக்க வைக்கும் அளவுக்கான வளர்ச்சி இருந்து வந்திருக்கிறது என்பது தற்செயலான விடயமல்ல. மார்க்சிசம் மற்றும் சோசலிசத்தின் மீதான உலகளாவிய தாக்குதல் என்பது, சாரத்தில், இந்த பிற்போக்குத்தனமான மற்றும் வரலாற்றுரீதியாய் பின்நோக்கியதான சமூக நிகழ்வுப்போக்கின் சித்தாந்த பிரதிபலிப்பே ஆகும்.

நடுத்தர வர்க்க புத்திஜீவிகளின் விரக்தி

இந்த நிகழ்ச்சிப்போக்கானது வெறுமனே அதிவலதுகளின் மார்க்சிச-விரோத வசைகளில் மட்டும் வெளிப்பாட்டை காணவில்லை. குட்டி-முதலாளித்துவ இடதின் மிச்சங்களும் அதி வலதினது சித்தாந்தத் தாக்குதலின் முன்னால் விரக்தியான சரணாகதி கண்டிருப்பதிலும் முதலாளித்துவ சமூகத்தின் புத்திஜீவித சிதைவு வெளிப்படுவதாய் இருக்கிறது. தங்களது நம்பிக்கைகள் மற்றும் கனவுகளின் கப்பல் ஒரேயடியாக உடைந்துசிதறி விட்டதாக பிரகடனப்படுத்துகின்ற சோகம் ததும்பும் முன்னாள் தீவிரப்போக்கினரால் உருவாக்கப்பட்ட படைப்புத் தொகுதிகள் உலகெங்குமான புத்தகக் கடைகளில் நிரம்பி வழிகின்றன. காது கொடுக்கும் அனைவரிடமும் தமது நிர்க்கதியையும், ஊக்கமிழப்பையும், கையாலாகாத்தனத்தையும் பிரகடனப்படுத்துவதின் மூலம் வக்கிரமான திருப்தியை பெறுவதாய் அவர்கள் காணப்படுகின்றனர். ஆம், அவர்களது தோல்விகளுக்கு அவர்கள் பொறுப்பல்லவாம். அவர்களுக்கு ஒரு சோசலிசப் புரட்சியை வாக்களித்து விட்டு செயலாற்றத் தவறிய மார்க்சிசத்திற்கு அவர்கள் பலியாகி விட்டிருந்தார்களாம்.

அவர்களது ஒப்புதல் வாக்குமூல நினைவுகள் எல்லாம் பரிதாபகரமானவை மட்டுமல்ல, கொஞ்சம் நகைப்புக்கும் கூட உரியதாக இருக்கின்றன. தங்களது தனிநபர் துயரங்களை ஏதோ உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக சித்தரிக்க முனைந்து, இறுதியில் அபத்தமாய் தோற்றமளிப்பதில் முடிகிறார்கள். உதாரணமாக, தோல்வியடைந்த ஒரு மெய்யியலாளரான பேராசிரியர் ரோனால்ட் ஆரோன்சன் தனது மார்க்சிசத்திற்குப் பின்னர் என்ற தொகுதியை பின்வரும் இருத்தலியல் (existential) ஒப்பாரியுடன் தொடங்குகிறார்:

மார்க்சிசம் முடிந்தது, இனி நமக்கு நாமேதான் பார்த்துக் கொள்ள வேண்டும். சமீபம் வரையிலும், இடதின் பக்கமாக இருந்த மிகப் பலருக்கும், நாம் நமது சொந்தக் காலில் தங்கியிருப்பதென்பது சிந்தித்துப் பார்க்க முடியாத துன்புறுத்தலாக இருந்து வந்திருக்கிறது — முழுக்கவும் திசை தொலைந்த நிலை, ஒரு அனாதையின் நிலை... மார்க்சிசத்தின் கடைசித் தலைமுறையாக, அதனை புதைக்கும் ஒரு துயரமான பணியை வரலாறு நமக்கு ஒதுக்கி விட்டிருக்கிறது.25

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது இவர்களது அரசியல் வாழ்வை மட்டுமல்லாது உணர்வுச் சமநிலையையும் உலுக்கி விட்டது என்பதுதான், மரணச்சடங்கு ஏற்பாட்டாளர்களாய் நடந்து கொள்ளும் இவர்களில் பலரும் பொதுவாகக் கூறும் விடயமாக இருக்கிறது. கிரெம்ளின் அதிகாரத்துவத்தை குறித்து அவர்கள் என்னவிதமான அரசியல் விமர்சனங்களை கொண்டிருந்தபோதும்கூட, அதன் கொள்கைகள் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு கொண்டுசெல்லும் என்று அவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்கவில்லை — அதாவது, எதிர்ப்புரட்சிகரமானது என்று ஸ்ராலினிசம் குறித்து ட்ரொட்ஸ்கி அளித்த பகுப்பாய்வை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டது கிடையாது. இவ்வாறாக, ஆரோன்சன் ஒப்புதலளிக்கிறார்:

சோவியத் ஒன்றியத்தின் கொஞ்சமும் அசைக்க முடியாத பெருஞ்சுமை போன்ற தன்மை நமது கூட்டுச் சிந்தனை வெளியில் கொஞ்சம் நேர்மறையான விடயங்களுக்கும் இடமளித்திருந்தது, ஒரு வெற்றிகரமான சோசலிசம் எழுந்து வர இன்னும் கூட முடியும் என்பதான நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க அது நம்மை அனுமதித்தது. மாற்றீடுகள் சிந்திக்கப்படுவதற்கும் விவாதிக்கப்படுவதற்கும் —சிலருக்கு மார்க்சிசத்தின் பிற பதிப்புகள் இன்னும் உருப்படியானதாகத் திகழலாம் என்ற நம்பிக்கை இருந்தது உட்பட— ஏற்ற ஒரு பின்புலத்தை இது வழங்கியது. ஆனால், இப்போதோ, அந்நிலை இனியும் கிடையாது. கம்யூனிசத்தின் மறைவில் இருந்து அதன் தத்துவார்த்த சாத்தியத்தை காப்பாற்ற எத்தனைதான் நாம் முயற்சி செய்தாலும் கூட, காரல் மார்க்ஸ் என்ற பெயருடன் அடையாளம் காணப்படுகின்ற போராட்டம் மற்றும் உருமாற்றத்திற்கான மாபெரும் உலக-வரலாற்றுத் திட்டமானது முடிந்து போய் விட்டதாகவே படுகிறது. மார்க்சிசத்துடன் சேர்ந்து ஒரு ஒட்டுமொத்த உலகப் பார்வை என்பதும் நொருங்கிப் போய்விட்டது என்பதை பின்நவீனத்துவவாதிகள் அறிவோம். மார்க்சிசவாதிகளும் சோசலிஸ்டுகளும் மட்டுமல்லாது, மற்ற தீவிரப்போக்கினர், அத்துடன் தம்மை முற்போக்குவாதிகளாகவும் தாராளவாத சித்தாந்தவாதிகளாகவும் கருதிக் கொள்பவர்கள் ஆகியோரும் கூட தங்கள் திசையை தொலைத்து நிற்கின்றனர்.26

தன்னையும் அறியாமலேயே ஆரோன்சன், போருக்குப் பிந்தைய தீவிரப்போக்கு அரசியலின் பெரும்பகுதியின் பின்னாலிருக்கும் அழுக்கான சிறு இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறார் —அதாவது, அது எந்த அளவு ஆழமாக ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்தவாத தொழிலாளர் அதிகாரத்துவங்களை சார்ந்திருந்தது என்பதை. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் வர்க்க மற்றும் அரசியல் உறவுகளில் இந்தச் சார்புநிலைக்கு ஒரு ஸ்தூலமான சமூக அடிப்படை இருந்தது. குட்டி முதலாளித்துவத்தின் கணிசமான பிரிவுகள், தமது சொந்த வர்க்க வட்டத்தின் அரசியல் மற்றும் சமூகத் துயர்களை துடைக்க முனைகையில், சக்திவாய்ந்த தொழிலாளர் அதிகாரத்துவங்களின் உத்தரவுகளின் கீழிருந்த ஆதாரவளங்களை நம்பியிருந்தன. அதிருப்தி கொண்ட நடுத்தர வர்க்க தீவிரப்போக்கினர், இந்த அதிகாரத்துவங்களின் பகுதியாகவோ, அல்லது அவற்றுடன் கூட்டணி சேர்ந்தோ, ஆளும் வர்க்கத்தை நோக்கி முஷ்டிகளை உயர்த்திக் காட்டி சலுகைகளை கறக்க முடிந்தது. சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவை தொடர்ந்து ஏறக்குறைய உடனடியாக உலகெங்கும் சீர்திருத்தவாத தொழிலாளர் அமைப்புகளது சிதறுநிலை தோன்றியது, அத்துடன் தீவிரப்போக்கினருக்கு அவர்கள் சார்ந்திருந்து வந்த அதிகாரத்துவ அரவணைப்பு இல்லாமல் போனது. ஆகவே தீவிரப்போக்கு அரசியலின் இந்த மகிழ்ச்சியற்ற வில்லி லோமன்கள் (Willy Loman) திடுதிப்பென்று தமது சொந்தக் காலில் நிற்கத் தள்ளப்பட்டார்கள்.

இந்தப் போக்குகளில், ’செவ்வியல் மார்க்சிசம் தொழிலாள வர்க்கத்திற்கு அளித்த வரலாற்றுப் பாத்திரம் ஒரு அபாயகரமான பிழை’ என்ற கருத்து ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்போல் அணுகப்படுகிறது. அதிகபட்சம் போனால், ஒருகாலத்தில், அதாவது மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்த காலத்தில் ஏதோவொரு சமயத்தில், அது நியாயமாக இருந்திருக்கலாம் என்றவரை ஒப்புக் கொள்வதற்கு அவர்கள் தயாரிப்புடன் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக இப்போது கிடையாதாம். ஆரோன்சன் அறிவிக்கிறார்:

உண்மையில், முதலாளித்துவத்திலும் இன்னும் தொழிலாள வர்க்கத்திலேயுமே கூட நடந்தேறியிருக்கின்ற கட்டமைப்புரீதியான உருமாற்றங்களின் காரணத்தால், மார்க்சிச திட்டம் முடிந்துபோன விடயம் என்ற வாதத்திற்கு வலுச் சேர்க்கும் சாட்சிகள் ஏராளமாய் உள்ளன. மார்க்சிசத்தின் இருதயத்தானமான உழைப்பு என்ற வகைப்பிரிவின் மையத்தன்மையே முதலாளித்துவத்தின் சொந்த பரிணாம வளர்ச்சியின் காரணத்தால் கேள்விக்குரியதாகி விட்டிருக்கிறது, அவ்வாறே வர்க்கம் என்பதன் பிரதானமும். 27

மார்க்ஸோ அல்லது ஏங்கெல்ஸோ கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாத மட்டத்துக்கு உலக அளவில் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டல் நடந்தேறிக் கொண்டிருக்கும் ஒரு சமயத்தில் இது எழுதப்பட்டிருக்கிறது. மனித உழைப்பு-சக்தியில் இருந்து உபரி மதிப்பை பிழிந்தெடுக்கும் நிகழ்முறையானது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியினால் பரந்த அளவு தீவிரப்பட்டிருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் உழைப்புத்தான் தொடர்ந்து தீர்மானகரமான பாத்திரத்தை கொண்டிருக்கிறது. கூலிகளைக் குறைக்கவும், சமூக நலஉதவிகளை அகற்றவும் அத்துடன் உற்பத்தியை மேலும் மறுசீரமைப்பதற்குமான இடைவிடாத மற்றும் அதிகரித்துச் செல்லும் மிருகத்தனமான முனைப்பானது ஆவேசமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

கற்பனாவாதக் கட்டுக்கதைகளும் பகுத்தறிவற்றவாதமும்

“பார்க்க மறுப்பவர்களை விடவும் குருடர்கள் கிடையாது”. முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு புரட்சிகர போராட்டத்தை நடத்தும் திறன் எந்த உண்மையான சமூக சக்திக்கும் கிடையாதென்றால், நிலவும் ஒழுங்கிற்கான ஒரு மாற்றீட்டை ஒருவர் எங்ஙனம் கருதிப்பார்க்க முடியும்? இந்தக் குழப்பந்தான் சமகால அரசியல் அவநம்பிக்கைவாதத்தின் இன்னொரு வடிவமான நவ-கற்பனாவாதத்தின் கீழமைந்திருப்பதாகும். சோசலிச சிந்தனையின் மார்க்சிசத்துக்கு-முந்தைய மற்றும் கற்பனாவாதக் கட்டங்களுக்கு மறுமலர்ச்சி கொடுக்க முனைகின்ற விதமாய், இந்த நவ-கற்பனாவாதிகள், சோசலிசத்தை ஒரு விஞ்ஞான அடித்தளத்தில் நிறுத்த, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து புலம்புகிறார்கள், கண்டனம் செய்கிறார்கள்.

நவ-கற்பனாவாதிகளை பொறுத்தவரை, புறநிலை சக்திகளின் கண்டுபிடிப்பு குறித்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்முடிவுகளை அளவுக்கதிகமாய் செவ்வியல் மார்க்சிசம் உள்ளீர்த்துக் கொண்டதாம். தொழிலாள வர்க்கம் மற்றும் அதற்கு அரசியல் கல்வியூட்டல் ஆகிய முன்முடிவுகளை கொண்டு சோசலிச இயக்கம் நிரம்பியிருப்பதன் கீழ் இந்தக் கண்ணோட்டம் தான் அமைந்திருந்ததாம். மார்க்சிஸ்டுகள் முதலாளித்துவ முரண்பாடுகளது புறநிலை சக்தியின் மீது —தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத்திறன் மீது என்பதெல்லாம் சொல்லவும் கூட தேவையில்லை— மிகைப்படுத்தப்பட்டதும் முகாந்திரமற்றதுமான நம்பிக்கையை வைத்தார்களாம். தவிரவும், பகுத்தறியாதோரின் சக்தியையும் ஊக்கமூட்டும் திறனையும் அவர்கள் பாராட்ட தவறி விட்டார்களாம்.

உற்சாகமூட்டக் கூடிய உத்வேகமளிக்கக் கூடிய “கட்டுக்கதை”களை ஏற்றுக்கொள்வதன் மூலமும் பரப்புரை செய்வதன் மூலமும் தான் இந்த சங்கடத்தில் இருந்து வெளிவர முடியும் என்கிறார்கள் நவ-கற்பனாவாதிகள். இத்தகைய கட்டுக்கதைகளுக்கும் ஏதேனும் புறநிலை யதார்த்தத்திற்கும் சம்பந்தமேதும் இருக்கிறதா என்பதெல்லாம் உண்மையில் முக்கியமே இல்லையாம். நவ-கற்பனாவாத கட்டுக்கதைகளின் ஒரு முன்னணி ஆராய்ச்சியாளரான Vincent Geoghegan, மார்க்சும் ஏங்கெல்சும் “ஒரு உளவியலை அபிவிருத்தி செய்ய தவறிவிட்டதாக” விமர்சனம் செய்கிறார். “மனித ஊக்கத்தின் சிக்கல்கள் விடயத்தில் அவர்கள் மிகப் பரிதாபகரமான ஒரு மரபை விட்டுச் சென்றனர், அவர்களுக்கு அடுத்து வந்தவர்களில் அநேகரும் இந்தப் பற்றாக்குறையை வெல்வதற்கான அவசியம் அதிகமிருப்பதாய் கருதாமல் விட்டனர்.”28 சோசலிஸ்டுகள் போலல்லாமல், அதிவலதுகள், குறிப்பாக நாஜிக்கள், கட்டுக்கதைகள் மற்றும் தமது கற்பனாசக்தியின் ஆற்றலைப் புரிந்து கொண்டிருந்தனர் என்று புகார் செய்கிறார் Geoghegan.

டியூட்டானிக் வீரர்கள், சாக்ஸன் அரசர்கள், மற்றும் “இரத்தத்தின்” மர்மமான தூண்டல்கள் ஆகிய புனைவாற்றல்மிக்க கருத்தாக்கங்களை கொண்டு ஆயிரமாண்டு கால நிலப்பிராந்தியம் குறித்த ஒரு மனதரிசனத்தை நாஜிக்களால் தான் உருவாக்க முடிந்தது. இடதுகள் பெரும்பாலும் இந்தக் களத்தை ஒதுக்கி வைத்து விட்டு, பிற்போக்குத்தனத்திற்கு விண்ணப்பித்துக்கொண்டு பிற்போக்குத்தனம் பற்றி முணுமுணுத்தார்கள்.29

சோசலிசப் புரட்சிக்கு எந்த புறநிலை அடிப்படையும் கிடையாது என்றதான பார்வையில் இருந்து ஒரு வக்கிரமான காரண முகாந்திரத்தைக் கொண்டு தான் பகுத்தறிவற்றதன்மைக்கான இந்த விண்ணப்பம், அதன் பிற்போக்கான அரசியல் சம்பந்தங்களுடன் சேர்ந்து, பிறக்கிறது. மார்க்சிசத்தின் தோல்வி குறித்த, சோசலிசத்தின் தோல்வி குறித்த, அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் தோல்வி குறித்த இந்த புலம்பல் புராணங்களில் இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர இயக்கத்தின் வெற்றிகள் அல்லது தோல்விகளுக்கான காரணங்களை, நிகழ்வுகள், கட்சிகள் மற்றும் வேலைத்திட்டங்களது ஒரு துல்லியமான ஆய்வின் ஊடாக வெளிக்கொண்டு வருவதற்கான எந்தவொரு முயற்சியும் காணக் கிடைப்பதில்லை. Socialist Register இதழ் கற்பனாவாதம் என்ற கருப்பொருளுக்காய் அர்ப்பணிக்கப்பட்ட தனது 2000 ஆவது ஆண்டிற்கான பதிப்பில், “முன்னதாக இல்லாதிருந்த அல்லது அபிவிருத்தி செய்யப்படாதிருந்த ஒரு புதிய கருத்தியல் அடுக்கினை மார்க்சிசத்துடன்”30 சேர்ப்பது அவசியமாக இருந்ததாக நம்மிடம் தெரிவித்தது. தேவைப்படும் கடைசி விஷயம் அதுவாகத்தான் இருந்தது. மாறாக, இருபதாம் நூற்றாண்டின் ஆய்வு மற்றும் பகுப்பாய்வில் இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாத வழிமுறையைப் பயன்படுத்துவதே அவசியமானதாகும்.

நான்காம் அகிலத்தின் பதிவுச்சான்று

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மிகப்பெரும் தோல்வியை குறித்தது என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒருபோதும் மறுத்தது கிடையாது. ஆனால் பல தசாப்தகால ஸ்ராலினிச காட்டிக்கொடுப்புகளின் விளைபொருளான அந்த நிகழ்வானது, மார்க்சிச வழிமுறையையோ அல்லது சோசலிச முன்னோக்கையோ செல்தகைமையற்றதாக ஆக்கிவிடவில்லை. சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவில் இந்த இரண்டிற்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை. 1923 இல் இடது எதிர்ப்பாளர்கள் உருவாக்கத்தின் மூலம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கான மார்க்சிச எதிர்ப்பானது எழுந்தது. ’அக்டோபர் புரட்சியின் சமூக வெற்றிகளை பாதுகாப்பதும் ஒரு தொழிலாளர் அரசாக சோவியத் ஒன்றியம் உயிர்தப்பி இருப்பதும் அதிகாரத்துவத்தை பலாத்காரமாய் தூக்கியெறிவதன் மீது தங்கியிருக்கிறது’ என்ற முடிவை அடித்தளமாகக் கொண்டே நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கு ட்ரொட்ஸ்கி எடுத்த முடிவும், அத்துடன் சோவியத் ஒன்றியத்துக்குள்ளாக ஒரு அரசியல் புரட்சிக்கு அவர் விடுத்த அழைப்பும் அமைந்திருந்தன.

நான்காம் அகிலத்திற்குள்ளாக, ’சோவியத் அதிகாரத்துவமானது ஸ்ராலினின் மறைவுக்குப் பின்னர் ஒரு அரசியல் சுய-சீர்திருத்தம், மார்க்சிச மற்றும் போல்ஷிவிச கோட்பாடுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்புதல் என்ற ஒரு நிகழ்வுப்போக்கு நடந்து கொண்டிருக்கிறது, இது அரசியல் புரட்சிக்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்பை செல்லாததாக்குகிறது’ என்பதாய் வாதிட்ட ஏர்னெஸ்ட் மண்டேல் மற்றும் மிஷேல் பப்லோ தலைமையிலான போக்குக்கு எதிரான போராட்டத்தில் இருந்து 1953 இல் அனைத்துலகக் குழு (International Committee) தோன்றியது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறானது ஸ்ராலினிசம் குறித்த பகுப்பாய்வை மார்க்சிச வழிமுறையின் அடிப்படையில் அபிவிருத்தி செய்ய அளிக்கப்பட்ட அரசியல் சிரத்தைக்கு சாட்சியமாக இருக்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்புகளாலும் குற்றங்களாலும் மார்க்சிசம் எவ்வாறு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை ஒருவரும் எங்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கவில்லை. இடதுசார்பு ஏட்டறிவு சகோதரர்களின் ஒரு பிரதிநிதி கூறினார்:

ஒரு அரசியல் சக்தியாக ஒழுங்கமைந்த கம்யூனிசம் உருக்குலைந்து போனதும், ஒரு சமூக வடிவமாக அரசு சோசலிசம் அழிந்து போனதும் மார்க்சிசத்தின் புத்திஜீவித நம்பகத்தன்மை மீது எந்த பாதிப்பையும் கொண்டிருக்கவில்லை என்று வாதிடுவதென்பது, ஒரு இஸ்ரேலிய கல்லறையில் கிறிஸ்துவின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, போப் பதவி துறந்து, கிறிஸ்தவ இராச்சியமே இழுத்து மூடப்படுவதும் கூட கிறிஸ்தவ இறையியலுடன் புத்திஜீவித்தனமாக ஒத்திணக்கப்படுவதுடன் எந்த சம்பந்தமும் கொண்டிராதது என்று வாதிடுவதைப் போன்றது. 31

இந்த ஒப்புமையே பரிதாபகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, ஏனென்றால் ஸ்ராலினிசத்திற்கான மார்க்சிச எதிரிகள், ஸ்ராலினிசத்தின் மார்க்சிச எதிர்ப்பாளர்களை, அதாவது ட்ரொட்ஸ்கிசவாதிகளை பொறுத்தவரை, கிரெம்ளினை சோசலிச இயக்கத்தின் வாத்திக்கானாக பார்த்தது கிடையாது. எனது நினைவுக்குட்பட்ட வரை, ஸ்ராலினின் தவறிழைக்காதன்மை கோட்பாட்டை நான்காம் அகிலம் ஒருபோதும் கடைப்பிடித்தது கிடையாது, என்றபோதிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் குட்டிமுதலாளித்துவ மற்றும் தீவிரப்போக்கு எதிராளிகள் அநேகரது விடயத்தில் இவ்வாறு சொல்லி விட முடியாது.

ஐயுறவுவாதிகளை திருப்தி செய்வது கடினம். ஸ்ராலினிசத்தின் குற்றங்களுக்கு மார்க்சிசம் பொறுப்பில்லை என்றால் கூட, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது புரட்சிகர சோசலிசம் என்ற செயற்திட்டத்தின் தோல்விக்கு சாட்சியில்லையா? என்று அவர்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்வி வெளிப்படுத்துவது யாதெனில் இல்லாமை பற்றியதாகும், அதாவது 1) ஒரு விரிந்த வரலாற்று முன்னோக்கு இல்லை, 2) சோவியத் சமூகத்தின் முரண்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த அறிவு இல்லை, 3) ரஷ்ய புரட்சி கட்டவிழ்ந்த சர்வதேச அரசியல் உள்ளடக்கம் குறித்த ஒரு தத்துவார்த்த-விபரங்களுடனான புரிதல் இல்லை.

ரஷ்ய புரட்சியே கூட முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கான உருமாற்றத்தில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே. இத்தகையதான பரந்த ஒரு வரலாற்று நிகழ்வுப்போக்கு பூர்த்தியடைவதற்கு பொருத்தமான கால அளவு இவ்வளவு பிடிக்கும் என்பதாகச் சுட்டிக்காட்ட பெறுவதற்கு நமக்கு அதற்கு முன்னர் என்ன முன்னுதாரணச் சம்பவங்கள் இருந்தன? விவசாய-நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பு வடிவத்தில் இருந்து ஒரு தொழிற்துறை-முதலாளித்துவ சமூகத்திற்கு உருமாறுவதுடன் கைகோர்த்து நிகழ்ந்த சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் பல நூற்றாண்டுகள் நீடித்தன. முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு உருமாறுவதற்கு அத்தகையதானதொரு நெடிய கால அளவை நவீன உலகத்தின் இயக்கமுறை —அதன் சிக்கலான பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சமூக உட்பிணைப்புகளுடன் சேர்ந்து— அனுமதிப்பதில்லை. என்றாலும் மிக அடிப்படையான, சிக்கலான மற்றும் தொலைதூரம் பயணிக்கின்ற சமூக மற்றும் பொருளாதார உருமாற்றங்கள் சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்வுப்போக்குகளது பகுப்பாய்வானது மிக வழக்கமான நிகழ்வுகளை ஆய்வதற்கு பயன்படக்கூடிய கால அளவைக் காட்டிலும் கணிசமாய் கூடுதல் அளவைக் கோருகிறது.

என்றபோதும், சோவியத் ஒன்றியத்தின் வாழ்க்கைக்காலமே சாதாரணமான அளவல்ல. போல்ஷிவிக்குகள் 1917 இல் ஆட்சியைக் கைப்பற்றியபோது, ரஷ்யாவுக்கு வெளியிலிருந்த பார்வையாளர்களில் சிலர் புதிய ஆட்சியானது ஒரு மாதத்திற்குத்தான் தாக்குப் பிடிக்கும் என எதிர்பார்த்தனர். அக்டோபர் புரட்சியிலிருந்து எழுந்த அரசானது எழுபத்து-நான்கு ஆண்டுகள், முக்கால் நூற்றாண்டு காலம் நிலைத்துநின்றது. அந்த நெடிய காலத்தில், ஆட்சியானது ஒரு படுபயங்கரமான அரசியல் சீரழிவுக்கு உள்ளானது. ஆனால், 1991 டிசம்பரில் கோர்பச்சேவாலும் ஜெல்ட்சினாலும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் உச்சமடைந்த இந்த சீரழிவின் அர்த்தம் 1917 அக்டோபரில் லெனின், ட்ரொட்ஸ்கி தலைமையில் அதிகாரத்தைக் கைப்பற்றியதே ஒரு பயனற்ற உருப்படாத செயற்திட்டம் என்பதல்ல. இடையிலான நிகழ்வுப்போக்குகள் எதனையும் அத்தியாவசியமாக கணக்கில் கொள்ளாமல் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து சோவியத் வரலாற்றின் இறுதி அத்தியாயத்தை நேரடியாகத் தேற்றம் செய்வது வரலாற்றுச் சமன்பாட்டு விதியை மீறுவதாகும். சோவியத் ஒன்றியத்தின் வரலாறு குறித்த ஒரு அர்த்தமுள்ள ஆய்வு, நிகழ்வுகளை இதுபோல் எளிதாக ஒன்றுகலப்பதை அனுமதிப்பதில்லை. சோவியத் வரலாற்றின் பயன்விளைவு தோற்றத்தின்போதே பெற்ற தலைவிதி கிடையாது. சோவியத் ஒன்றியத்தின் அபிவிருத்தி இன்னொரு திசையை எடுத்திருக்க முடியும். ஒட்டுண்ணித்தனமான அதிகாரத்துவ சாதியின் நலன்களைப் பாதுகாப்பதில் முழுக்கவனமும் குவித்த அதன் அரசியல் தலைமையின் தவறுகளும் குற்றங்களும் தான் சோவியத் ஒன்றியத்தை இறுதியாக சின்னாபின்னமாக்குவதில் தீர்மானகரமான பாத்திரத்தை ஆற்றியது.

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதானது, ரஷ்ய புரட்சி மற்றும் அதன் பின்வந்தவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை செல்லாததாக்கி விடவில்லை. இது, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வு என்பதோடு, உலக வரலாற்றின் மிக மகத்தான நிகழ்வுகளிலும் ஒன்றாகும். அமெரிக்க தொழிலாள வர்க்கம் உட்பட பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் அதன் தாக்கமானது மிகச்செறிவான முற்போக்கான குணாம்சம் கொண்டதாகும். சோவியத் ஒன்றியத்தின் மிகப்பிரம்மாண்டமான சமூக சாதனைகளை ஒப்புக் கொள்வதன் மூலம், ஸ்ராலினிசத்திற்கான எங்களது எதிர்ப்பு குறைந்து விடாது. புரட்சியின் ஒரு விளைவாக அந்நாடு மனித வரலாற்றில் முன்கண்டிராத ஒரு பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உருமாற்றத்திற்கு உட்சென்றது. அத்துடன், உலகெங்கிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நனவில் அக்டோபர் புரட்சி ஏற்படுத்திய தாக்கமென்பது மிகையற்றது. இருபதாம் நூற்றாண்டின் அத்தனை புரட்சிகர இயக்கங்களையும் இதுவே இயங்கச் செய்தது.

அழுத்திக் கூறுகிறோம், சோவியத் ஒன்றியம் ஒரு சோசலிச சமூகமாக இருக்கவில்லை. திட்டமிடல் மட்டம், ஆரம்பகட்டத்தில் தான் இருந்தது. 1924 இல் ஸ்ராலின் மற்றும் புகாரின் மூலமாக தொடக்கி வைக்கப்பட்ட தனியொரு நாட்டில் சோசலிசம் கட்டுதல் என்ற வேலைத்திட்டமானது —இது மார்க்சிச தத்துவத்தின் எந்த அடிப்படையும் இல்லாத ஒரு திட்டம்— அக்டோபர் புரட்சி தூண்டுதலளித்த சர்வதேச முன்னோக்கினை மறுதலிப்பதாக இருந்தது. ஆனபோதும் கூட, ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சியின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு புதிய சமூக வடிவாக்கத்தின் தோற்றத்தை சோவியத் ஒன்றியம் பிரதிநிதித்துவப்படுத்தியது. தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறைக்கான சாத்தியவளம் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது. சோவியத் ஒன்றியம் ரஷ்யாவின் பின்தங்கிய தன்மை —அதன் மத்திய ஆசியக் குடியரசுகள் குறித்து சொல்லவும் தேவையில்லை— பாரம்பரியத்தில் இருந்து தப்பித்துவிட முடியவில்லை, ஆனால் விஞ்ஞானம், கல்வி, சமூக நலம் மற்றும் கலை ஆகிய வட்டங்களில் அதன் முன்னேற்றங்கள் உண்மையானவையாகவும் கணிசமானவையாகவும் இருந்தன. ஸ்ராலினிசத்தின் பேரழிவு தரக்கூடிய தாக்கங்கள் குறித்த மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச எச்சரிக்கைகள் அனைத்தும் ஸ்ராலினிச ஆட்சி குறித்து விமர்சனப் பார்வையுடன் இருந்த இடதுகளுக்கும் கூட கருதிப்பார்க்கவும் முடியாததாக இருந்தது என்றால் அதன் காரணம் அந்த அளவுக்கு சோவியத் சமூகத்தின் சாதனைகள் மிகக் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.

உலக வரலாற்றில் அக்டோபர் புரட்சியின் இடம்

அக்டோபர் புரட்சி எழுந்த உலகளாவிய அரசியல் சூழலுக்குள்ளாக அது பொருத்திப் பார்க்கப்படுகின்ற போதுதான் அதன் தன்மையும் முக்கியத்துவமும் புரிந்து கொள்ளப்பட முடியும். அக்டோபர் புரட்சி வெறுமனே ஒரு வரலாற்று தடம்புரள்வு என்றால், ஒட்டுமொத்த இருபதாம் நூற்றாண்டையுமே அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கும். போல்ஷிவிக் அதிகாரத்தை கைப்பற்றியமைக்கு இருபதாம் நூற்றாண்டு கால ஆரம்பத்து ஐரோப்பிய மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தின் ஆழமான நீரோட்டங்கள் மற்றும் முரண்பாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க அடித்தளம் இருந்திருக்கவில்லை என்று புரியும்படி நிறுவ முடியுமானால் மட்டுமே அக்டோபர் புரட்சிக்கான அங்கீகாரம் மறுக்கப்பட முடியும்.

ஆனால் முதலாம் உலகப் போர்தான், ரஷ்ய புரட்சிக்கும் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றியமைக்குமான வரலாற்றுச் சூழலமைவாக இருந்தது என்ற உண்மையால் இக்கூற்று மறுக்கப்பட்டு விடுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் பிரிக்கவியலாமல் பிணைந்தவையாக இருந்தன என்றால், அது வெறுமனே போர் சாரிச ஆட்சியை பலவீனப்படுத்தி புரட்சிக்கான நிலைமைகளை உருவாக்கித் தந்தது என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. எந்த சர்வதேச முதலாளித்துவ ஒழுங்கின் நெருக்கடியில் இருந்து போர் எழுந்திருந்ததோ அதே நெருக்கடியின் வேறுவகையான வெளிப்பாடுதான் அக்டோபர் புரட்சியும். உலக ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள் சர்வதேச பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான மோதலை 1914 ஆகஸ்டில் வெடிப்பின் புள்ளிக்குக் கொண்டுவந்திருந்தது. அதே முரண்பாடுகள் தான் ரஷ்ய புரட்சியின் வெடிப்புக்கும் கீழமைந்திருந்தன. முதலாளித்துவ ஐரோப்பாவின் தலைவர்கள் உலக முதலாளித்துவத்தின் குழப்பத்தை ஒரு வழியில் தீர்க்க முனைந்தனர் என்றால், புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களான போல்ஷிவிக்குகள் அதே குழப்பத்திற்கு வேறொரு வழியில் தீர்வு காண முனைந்தனர்.

உலகப் போருக்கும் ரஷ்ய புரட்சிக்கும் இடையிலான இந்த ஆழமான தொடர்பின் வரலாற்று மற்றும் அரசியல் சம்பந்தங்களில் நழுவும் பொருட்டு, ஏட்டுக்கல்வியினர் முதலாம் உலகப் போரின் தற்செயலானதும் அவசரகாலத்தினதுமான அம்சங்களின் மீது அழுத்தம் காட்ட முனைகின்றனர். 1914 ஆகஸ்டில் போர் வெடித்திருக்க அவசியமிருக்கவில்லை என்றும், மன்னர் ஃபிரேன்ஸ் ஃபெர்டினாண்ட் சரஜீவோவில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கட்டவிழ்ந்த நெருக்கடி அமைதியான முறையில் தீர்க்கப்பட்டிருக்க முடியும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். இந்த வாதங்கள் தொடர்பாக இரண்டு குறிப்புக்களை பதிலாகக் கொடுக்க வேண்டியுள்ளது.

முதலாவது: மற்ற தீர்வுகள் எல்லாம் சிந்திக்கக் கூடியவையாக இருந்தவேளையில், போர் என்பது தான் ஆஸ்திரியா-ஹங்கேரி, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ், மற்றும் இறுதியாக, பெரிய பிரிட்டன் ஆகியவை நனவுடனும் திட்டமிட்டும் தேர்ந்தெடுத்த தீர்வுமுறையாக இருந்தது. இந்த அத்தனை சக்திகளுமே போரை விரும்பின என்பதாக இருக்க அவசியமில்லை, ஆனால் ஏதோவொரு மூலோபாய நலனை ஒப்படைப்பதை அவசியமாக்குகின்ற ஒரு பேச்சுவார்த்தை உடன்பாட்டைக் காட்டிலும் போரே உசிதம் என்று தான் இந்த நாடுகள் அத்தனையும் இறுதியில் முடிவெடுத்தன. மனித வாழ்க்கை மில்லியன் கணக்கில் காவு கொடுக்கப்பட்ட பின்னரும் கூட முதலாளித்துவ ஐரோப்பாவின் தலைவர்கள் போரைத் தொடர்ந்து கொண்டுதானிருந்தனர். முதலில் ரஷ்யாவிலும் பின் ஜேர்மனியிலும் சமூகப் புரட்சி வெடித்து, அது போரை முடிவுக்குக் கொண்டு வர நிர்ப்பந்திக்கின்ற வகையில் வர்க்க உறவுகளில் ஒரு மாற்றத்தை உருவாக்கிய வரையிலும், அந்த முரட்டு சக்திகளிடையே அமைதியை மீட்சி செய்வதற்கான எந்த உருப்படியான பேச்சுவார்த்தைகளும் நடக்கவேயில்லை.

இரண்டாவது: ஒரு நாசகரமான உலகப் போர் வெடிப்பதென்பது தொழிலாள வர்க்கத்தின் சோசலிசத் தலைவர்களால் நீண்ட காலத்திற்கு முன்பே கணிக்கப்பட்டதாய் இருந்தது. தொழிற்துறைமயமாக்கப்பட்ட முதலாளித்துவ சக்திகளது மோதலில் ஐரோப்பாவின் பெரும்பகுதி குப்பைக்கூளமாக்கப்படுவதான ஒரு போரைக் குறித்து 1880களிலேயே ஏங்கெல்ஸ் எச்சரித்திருந்தார். 1888 ஜனவரியில் அடோல்ஃப் ஸோர்ஜ்க்கு ஏங்கெல்ஸ் எழுதினார்: ஒரு போர் என்பதன் அர்த்தம் ”முப்பது ஆண்டுப் போரை ஒத்த பேரழிவு என்பதாகும். மிகப்பெரும் இராணுவப் படைகள் ஈடுபடுத்தப்படும் போதும் கூட அது அத்தனை விரைவில் முடிவுக்கு வந்து விடாது.…உள்முக ஒழுங்கு சீர்குலையாமல் போர் இறுதிவரை நடத்தப் பெறுமானால், வீழ்ச்சியின் நிலையானது கடந்த 200 ஆண்டுகளில் ஐரோப்பா அனுபவத்தில் பார்த்திராதவொரு மட்டத்திற்கு இருக்கும்.”32

ஒரு வருடத்திற்குப் பின்னர், 1889 மார்ச்சில், ஏங்கெல்ஸ் Lafargue க்கு எழுதும்போது கூறினார்: போர்தான் மிகப் படுபயங்கரமான பின்வரு நிலையாக அமையும் … 10 முதல் 15 மில்லியன் வரை யுத்தப்படையினர் இருப்பார்கள், அவர்களுக்குத் தீனி போடுவதற்காகவே ஒப்புக்கூற முடியாத அழிவு நிகழும், நமது இயக்கம் உலகளாவிய அளவிலும் பலவந்தமாகவும் ஒடுக்கப்படும், பேரினவாதம் அத்தனை நாடுகளிலும் புத்தெழுச்சி காணும், இறுதியாக, 1815ஐ (அனைத்தும் பறிக்கப்பட்டிருந்த மக்களனைவரும் பட்டினியால் சுரத்தின்றி இருந்ததை அடிப்படையாகக் கொண்டிருந்த ஒரு பிற்போக்குக் காலகட்டம்) காட்டிலும் பத்து மடங்கு மோசமாய் நலிவடைந்து தோன்றும் —இத்தனையையும் தாண்டி கடுமையான போர், புரட்சியில் விளையக் கூடும் என்பதான ஒரு மெல்லிய நம்பிக்கைக் கீற்று மட்டும் இருக்கும்— இது என்னை நடுக்கத்தால் நிரப்புகிறது.33

அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு, ஐரோப்பிய சோசலிச இயக்கமானது முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தனது அரசியல் கிளர்ச்சியின் மையத்தானமாக கொண்டது. சோசலிச இயக்கத்தின் மிகச்சிறந்த தத்துவாசிரியர்கள் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்த பகுப்பாய்வை செய்து வைத்திருந்தனர் என்பதும், ஒரு ஏகாதிபத்தியப் போர் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும் என்று எண்ணிலடங்கா எச்சரிக்கைகளை அவர்கள் விடுத்திருந்தனர் என்பதும், 1914 ஆகஸ்டின் நிகழ்வுகள் தற்செயலானவை, முன்னெதிர்பாராதவை அத்துடன் உலக முதலாளித்துவ ஒழுங்கின் தவிர்க்கவியலா முரண்பாடுகளுக்கு தொடர்பில்லாதவை என்பதான கூற்றிற்கு மறுப்பாக அமைந்திருக்கிறது.

1913 மார்ச்சில், அதாவது உலகப் போர் வெடிப்பதற்கும் பதினெட்டு மாதங்களுக்கும் குறைவானதொரு சமயத்தில், பால்கன்களில் நெருக்கடியின் தாக்கங்கள் குறித்து பின்வரும் பகுப்பாய்வு செய்யப்பட்டது:

பால்கன் போரானது பால்கன்களில் பழைய எல்லைகளை அழித்திருப்பது மட்டுமல்ல, பால்கன் அரசுகளுக்கு இடையிலான பரஸ்பர வன்மம் மற்றும் பொறாமையின் நெருப்பை உச்சகட்டத்திற்கு விசிறி விட்டிருப்பது மட்டுமல்ல, ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளுக்கு இடையிலான சமனிலையையும் இது நீண்டகாலத்திற்காய் குலைத்துப் போட்டு விட்டிருக்கிறது.

…ஏற்கனவே பெருமளவில் ஸ்திரமற்றதாய் இருந்து வந்திருந்த ஐரோப்பிய சமநிலையானது இப்போது முற்றுமுழுதாய் ஆட்டம் கண்டிருக்கிறது. ஐரோப்பிய தலைவிதிக்கு, பொறுப்பிலிருப்பவர்கள் இந்த முறை விடயங்களை அவற்றின் விளிம்பு வரை கொண்டு சென்று ஒரு ஐரோப்பிய அளவிலான போரை தொடங்கத் தீர்மானிப்பார்களா என்பதை முன்கணிப்பது சிரமம்.34

இந்த வரிகளை எழுதியவர் லியோன் ட்ரொட்ஸ்கி.

இருபதாம் நூற்றாண்டின் முதலாளித்துவ வரலாற்றின் ஏனைய ஒவ்வொரு விரும்பத்தகாத அத்தியாயத்தின், பெருமந்தநிலை, பாசிசத்தின் எழுச்சி, மற்றும் இரண்டாம் உலகப் போரின் வெடிப்பு என இவற்றின் உடன்நிகழ்வான தன்மையை, முதலாளித்துவத்தின் ஏட்டறிவு வக்காலத்துவாதிகள் முதலாம் உலகப் போரின் எதேச்சையான மற்றும் தற்செயலான தன்மை என்று கூறப்படுவதிலிருந்து தேற்றம் செய்கிறார்கள். இது அனைத்துமே தவறான கணிப்புகள், எதிர்பாராத விபத்துகள் மற்றும் பல்வேறு மோசமான மனிதர்களால் ஆனதாம். பிரெஞ்சு வரலாற்றாசிரியரான மறைந்த பிரான்சுவா ஃபூரே (François Furet) நமக்குச் சொல்கிறார்:

அத்தியாவசியத்தின் பிரமையில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்கின்றபோதுதான் நமது காலத்தை குறித்த ஒரு உண்மையான புரிதல் சாத்தியப்படும்: ஒரு விளக்கம் என்பது, சாத்தியமான மட்டத்திற்கு, இருபதாம் நூற்றாண்டை விளக்குவதற்கு இருக்கக் கூடிய ஒரே வழி, அதன் கணிக்கவியலாத தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துவதாகும்…

“இருபதாம் நூற்றாண்டின் வரலாறானது, பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் போலவே ஒரு மாறுபட்ட பாதையை எடுத்திருக்க முடியும்: அதற்கு நமக்கு தேவைப்படுவதெல்லாம் லெனின், ஹிட்லர், அல்லது ஸ்ராலின் இல்லாமல் கற்பனை செய்து பார்ப்பதே”35 என்று ஃபூரே பிரகடனப்படுத்துகிறார்.

இதே தொனியில், யேல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹென்றி ஆஸ்பி, ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்ததென்பது பெரும்பாலும் விபத்துகளின் ஒரு விளைபொருளாகவே இருந்தது என்பதை நிறுவ ஒரு முழுப் புத்தகத்தை அர்ப்பணித்திருந்தார். உண்மைதான், ஜேர்மன் வரலாற்றில் நீண்ட காலம் சில குறிப்பிட்ட பிரச்சினைகள் இருக்கவே செய்தன; உலகப் போர், வேர்சாய் அமைதி உடன்படிக்கை மற்றும் உலகப் பெருமந்தநிலை போன்ற ஒரு சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் பற்றி சொல்லவும் வேண்டியதில்லை. ஆனாலும், எல்லாவற்றினும் மிக முக்கியமாய் “அதிர்ஷ்டம் -எதிர்பார்க்கவியலாதவற்றில் மிகவும் ஏறுமாறாகக் கூடியது- தெளிவுபட ஹிட்லரின் பக்கமாய் இருந்தது.”36 அத்துடன் “தனிநபர் சாய்வுகள் மற்றும் வெறுப்புகள், காயப்பட்ட உணர்வுகள், சூடுபட்ட நட்புகள், மற்றும் பழிவாங்கலுக்கான விருப்பம்” இவையும் இருந்தன, அனைத்தும் ஒன்றுகூடி ஜேர்மன் அரசியலின் மீது முன்னெதிர்பாராத வழிகளில் செல்வாக்கு செலுத்தின. ஆம், அத்துடன் “கனவான்கள் கூடுமிடத்தில் பாப்பென் (Papen) மற்றும் பாறோன் ஃவொன் ஷ்ரோடர் (Baron von Schröder) இடையே தற்செயலான சந்திப்பும் நிகழ்ந்தேற” அது இறுதியில் ஹிட்லருக்கு அனுகூலமாக வேலைசெய்தது.37

ஒருவர் வியப்பார்: ஃவொன் பாப்பெனுக்கு அன்று சளி பிடித்து அவர் படுக்கையை விட்டு நகராமல் கனவான்களின் கூடுமிடத்திற்கு செல்லாமல் விட்டிருந்தால், இருபதாம் நூற்றாண்டின் பாதையே மாறியிருக்கக் கூடும்! அதேபோல நவீன இயற்பியலின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்காகவும் நியூட்டன் தலையில் விழ நேர்ந்த அந்த அற்புதமான ஆப்பிளுக்கும் நன்றிக்கடன் செலுத்துவது அதேஅளவுக்கு சாத்தியமே.

வரலாறு என்பது, “ஆவேசமும் சத்தமும் நிரம்ப ஒரு முட்டாளால் சொல்லப்படும் கதை, அது குறித்துக்காட்டுவது எதுவுமில்லை” என்றால் அதை ஏன் படிக்க வேண்டும்? நாம் வாழுகின்ற உலகத்தின் பிரச்சினைகளுக்கான —இப்பிரச்சினைகள் மனிதகுலத்தை பேரழிவைக் கொண்டு அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன— தீர்வுகளுக்கு அவசியமாக இருப்பது இருபதாம் நூற்றாண்டின் வரலாறு குறித்த அலுப்பூட்டும் உண்மைகளது அறிவு மட்டுமல்ல, கடந்த 100 ஆண்டுகளின் சமயத்தில் தொழிலாள வர்க்கம் கடந்து வந்திருக்கக் கூடிய பல துயரகரமான நிகழ்வுகளது படிப்பினைகளை சிந்தனாபூர்வமாக உட்கிரகித்துக் கொள்வதும் கூட அவசியமாக இருக்கிறது.

2000ம் ஆண்டு நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், அகலும் நூற்றாண்டின் மீதான ஒரு ஆய்வுக்காய் அர்ப்பணித்துக் கொண்ட ஏராளமான நூல் தொகுதிகள் புத்தகச் சந்தையில் வெளியிடப்பட்டன. இவற்றில் இந்த காலகட்டத்தை குணாம்சப்படுத்த பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களில் கணிசமாகப் பிரபலம் பெற்ற ஒன்று “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” என்பதாகும். இது குறிப்பாக எரிக் ஹோப்ஸ்வாமினால் பிரபலம் அடைந்தது. நூற்றாண்டை வரையறை செய்த குணாம்சங்கள், 1914 இல் உலகப் போரின் வெடிப்புடன் தொடங்கி 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் மறைவுடன் முடிந்து போயின என்று அவர் வாதிட்டார். ஹோப்ஸ்வாமின் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், இந்த அணுகுமுறையானது, இருபதாம் நூற்றாண்டின் தீர்மானகரமான நிகழ்வுகளானவை முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட புறநிலை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளின் விளைபொருட்களாக இருந்ததைக் காட்டிலும், இயல்பான வரலாற்றில் இருந்து மிகையதார்த்த புறப்பாட்டை குறித்ததாகவே இருந்தது என்பதான வாதத்திற்கு ஆதரவான தொனியையே கொண்டிருந்தது.

இந்த வரையறையை நிராகரித்து, இந்த சகாப்தத்தை முடிவுறாத நூற்றாண்டு  என்று குணாம்சப்படுத்துவதே மேம்பட்டதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இருபதாம் நூற்றாண்டு முடிந்து விட்டது என்று நாள்காட்டி நமக்குச் சொல்வதென்னவோ உண்மைதான். ஆனால் சென்ற நூற்றாண்டின் சமயத்தில் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்ட அத்தனை பயங்கரங்களும் –போர், பாசிசம், ஒட்டுமொத்த மனித நாகரிகமே அழிந்துபோகக் கூடிய சாத்தியமும் கூட- இன்று நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இருத்தலியல்வாதிகளின் பாணியில், மனிதநிலையின் தப்பவியலாத நம்பிக்கையற்றதனத்தில் உட்பொதிந்து இருக்கக்கூடிய அபாயங்களையும் சங்கடங்களையும் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை. நாம் கையாள்வது முதலாளித்துவ உற்பத்திமுறையின் முரண்பாடுகளைப்பற்றியாகும். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகர மார்க்சிஸ்டுகளான லெனின், லுக்சம்பேர்க், ட்ரொட்ஸ்கி ஆகியோர் இதனை அவற்றின் அபிவிருத்தியின் வெகுஆரம்ப கட்டத்திலேயே பற்றிக்கொண்டு விட்டனர். சென்ற நூற்றாண்டில் தீர்க்கப்படமுடியாதவை இந்த நூற்றாண்டில் தீர்க்கப்பட்டாக வேண்டும். இல்லாதுபோனால் இந்த நூற்றாண்டே மனிதகுலத்தின் இறுதியாகிப்போகும் ஒரு உண்மையான அபாயம் முன்நிற்கிறது. ஆகவேதான் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை கற்பதும் அதன் படிப்பினைகளை உள்ளீர்த்துக்கொள்வதும் வாழ்வா சாவா என்ற பிரச்சினையாக இருக்கிறது.

 

1 Lecture delivered August 14, 2005, at the summer school of the Socialist Equality Party (US) in Ann Arbor, Michigan.

2 The USSR and Socialism: The Trotskyist Perspective (Detroit: Labor Publications, 1990), pp. 1–2.

3 Available: http://www.wsws.org/en/articles/2005/06/stal-j02.html and http://www.wsws.org/en/articles/2005/06/stal-j03.html  

4 Rosa Luxemburg, The Junius Pamphlet (Colombo: Young Socialist Publication, undated), p. 7.

5 Keith Jenkins, On “What Is History?”: From Carr and Elton to Rorty and White (London and New York: Routledge, 1995), pp. 6–7.

6 Ibid, pp. 7–9.

7 Hayden V. White, The Content of the Form: Narrative Discourse and Historical Representation (Baltimore: Johns Hopkins University Press, 1990), p. 63.

8 Quoted in Simon Malpas, Jean-François Lyotard (London and New York: Routledge, 2003), pp. 75–76.

9 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 26 (Moscow: Progress Publishers, 1990), p. 358.

10 Richard Rorty, Truth and Progress (Cambridge: Cambridge University Press, 1998) p. 228.

11 Ibid, p. 229.

12 Richard Rorty, Philosophy and Social Hope (London and New York: Penguin, 1999), p. 36.

13 Cited in Jenkins, p. 105.

14 Truth and Progress, p. 233.

15 Ibid., p. 229.

16 Bryan S. Turner, Preface, Max Weber and Karl Marx, by Karl Löwith (New York and London: Routledge, 1993), p. 5.

17 E.J. Hobsbawm, Interesting Times: A Twentieth-Century Life (New York: Pantheon Books, 2002), p. 127.

18 Robert Conquest, Reflections on a Ravaged Century (New York: Norton, 2000), p. 3.

19 Andrzej Walicki, Marxism and the Leap to the Kingdom of Freedom: The Rise and Fall of the Communist Utopia (Stanford, California: Stanford University Press, 1995), p. 278.

20 Martin E. Malia, The Soviet Tragedy: A History of Socialism in Russia, 1917–1991 (New York: Free Press, 1994), p. 225.

21 Richard Pipes, Property and Freedom (New York: Alfred A. Knopf, 1999), p. 286.

22 C.B. Macpherson, The Rise and Fall of Economic Justice and Other Essays (Oxford: Oxford University Press, 1987), p. 77.

23 Property and Freedom, p. 287.

24 Ibid. p. 284

25 Ronald Aronson, After Marxism (New York: Guilford Press, 1995), p. 1.

26 Ibid., pp. vii–viii.

27 Ibid., p. 56.

28 Vincent Geoghegan, Utopianism and Marxism (London, New York: Methuen, 1987), p. 68.

29 Ibid., p. 72.

30 Leo Panitch and Sam Gindin, “Transcending Pessimism: Rekindling Socialist Imagination,” Necessary and Unnecessary Utopias: Socialist Register 2000 (Suffolk: Merlin Press, 1999), p. 22.

31 Turner, in Max Weber and Karl Marx, p. 5. Since Mr. Turner wrote this passage, a sitting Pope — Benedict XVI — has abdicated, with little noticable effect, positive or negative, on the “intellectual coherence of Christian theology.”

32 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 48 (London: Lawrence and Wishart, 2001), p. 139.

33 Ibid., p. 283.

34 Leon Trotsky, The Balkan Wars, 1912–13 (New York: Monad Press, 1980), pp. 382–383.

35 François Furet, The Passing of an Illusion: The Idea of Communism in the Twentieth Century (Chicago: University of Chicago Press, 1999), p. 2.

36 Henry Ashby Turner, Hitler’s Thirty Days to Power: January 1933 (Reading, Mass.: Addison-Wesley, 1996), p. 168.

37 Ibid.