ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Foreword to The Russian Revolution and the Unfinished Twentieth Century

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்: முன்னுரை

டேவிட் நோர்த்தின் வெளிவரவிருக்கும் நூல், ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் (416 பக்கங்கள்; ISBN 978-1-893638-40-2), இதன் உங்கள் பிரதிகளுக்கு மெஹ்ரிங் நூலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். நோர்த் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவரும் ஆவார்.

* * *

1914 ஆகஸ்டில் முதலாம் உலகப் போரின் வெடிப்புடன் —அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் ஒரு தனித்துவமான காலகட்டமாக— இருபதாம் நூற்றாண்டு தொடங்கியது என்பதில் வரலாற்றாளர்கள் மத்தியில் ஒரு பரந்த உடன்பாடு உள்ளது. ஆனால் அந்த நூற்றாண்டு எப்போது முடிந்தது —அல்லது ஒரேயடியாய் முடிவுற்றிருக்கிறதா— என்ற கேள்வி ஆழமான விவாதத்திற்குரிய விடயமாகும். இந்த கருத்துமோதலானது, அந்த கொடுக்கப்பட்ட 100 ஆண்டு காலப்பகுதியினை பொதுவாக கால அளவீடு செய்வது பற்றியதல்ல. 1900கள் முடிந்துவிட்டன, நாம் இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பது தெளிவானதே. இந்த புதிய நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் பாதியைக் கடந்து இருந்தாலும் கூட, நமது உலகம் இருபதாம் நூற்றாண்டின் ஈர்ப்பு எல்லைக்குள்ளேயே தான் தொடர்ந்தும் இருக்கிறது. வரலாற்றாளர்கள் இப்போதும் கடந்த நூற்றாண்டினை சினத்துடன் திரும்பிப் பார்க்கிறார்கள் என்றால், அதற்கான காரணம், மனிதகுலமானது அரசியல், பொருளாதாரம், மெய்யியல் மற்றும் கலைத்துறையின் செயற்களங்களில் கூட, அதனது முடிவுசெய்யப்படாத கருத்துமோதல்களில் இன்னமும் போராடிக் கொண்டிருப்பதேயாகும்.

அண்மைக்காலம் வரையில் வரலாற்றாளர்கள், இருபதாம் நூற்றாண்டு வெற்றிகரமாக மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டதென்று ஓரளவுக்கு நம்பிக்கையில் இருந்தனர். 1989இல் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவும், 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் முதலாளித்துவ வெற்றி ஆரவார அலையை இயக்கத்திற்கு கொண்டு வந்ததோடு, அது, பெரும் எதிர்ப்பின்றி, உலகம் முழுவதிலும் உள்ள கல்விசார் அமைப்புகளை சூழ்ந்தது. பேராசிரியர்கள் குழாம் வேகவேகமாக அதன் வரலாறு பற்றிய தத்துவங்களை, அண்மைய செய்தித்தாள்களின் தலைப்புச்செய்திகளுக்கும், ஆசிரியர் தலையங்க கட்டுரைகளுக்கும் பொருந்தும் வகையில் கொண்டு வர முனைந்தது.

கல்விசார் வல்லுநர்களின் பரந்த பெரும்பான்மையினர், 1989-91 இன் நிகழ்வுகளுக்கு முன்னர், கூடவோ அல்லது குறையவோ சோவியத் ஒன்றியத்தை சோசலிசத்துடன் சமன்படுத்திப் பார்த்து, அது என்றென்றைக்கும் நீடித்திருக்குமென அனுமானித்தனர். ஸ்ராலினிசம் குறித்த லியோன் டரொட்ஸ்கியின் விமர்சன ஆய்வுடன் பரிச்சயப்பட்டவர்களே கூட, கிரெம்ளின் அதிகாரத்துவ ஆட்சி சோவியத் தொழிலாள வர்க்கத்தால் தூக்கியெறியப்படாவிட்டால், அது தொழிலாளர் அரசைக் கலைத்து, முதலாளித்துவ மீட்சிக்கு வழிவகுக்கும் என்ற அவரது முன்கணிப்பை, யதார்த்தபூர்வமற்றதாகவும், ஸ்ராலின் வென்றடக்கிய எதிரிகள், தம்மைத்தாமே நியாயப்படுத்திக் கொள்ளும் புலம்பல்களாகவும் கருதினர்.

இருப்பினும் ஸ்ராலினிச ஆட்சிகளே கலைக்கப்பட்டபோது, பேராசிரியர்களும் சிந்தனைக்குழாமின் ஆய்வாளர்களும், அமெரிக்கா அதன் பனிப்போர் விரோதிகள் மீது மாற்றவியலாத வெற்றியை ஈட்டியிருப்பதோடு மட்டுமல்லாமல், முதலாளித்துவமானது அதன் நிரந்தர சோசலிச எதிரியை வரலாற்று சாத்தியக்கூறுகளின் செல்வாக்கெல்லையிலிருந்து துடைத்து அழித்துவிட்டதாக அவசரத்தோடு பிரகடனப்படுத்தினர். அந்தக் கணத்தின் மனோபாவம், National Interest என்ற இதழில் “வரலாற்றின் முடிவு?” என்று தலைப்பிட்டு பிரசுரமான, அமெரிக்க சிந்தனைக் குழாம் RAND இன் ஆய்வாளர், பிரான்சிஸ் புக்குயாமாவினால் எழுதப்பட்ட கட்டுரையில், அதன் முற்றுமுழுதான வெளிப்பாட்டைக் கண்டது. அவர் எழுதினார்:

நாம் பார்த்துக் கொண்டிருப்பது வெறும் பனிப்போர் முடிவையோ, அல்லது போருக்கு-பிந்தைய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி கடந்து செல்வதையோ மட்டுமல்ல, மாறாக வரலாற்றின் முடிவை பார்த்துக் கொண்டிருக்கிறோம், அதாவது: அது, மனிதகுலத்தினது கருத்தியல் பரிணாமத்தின் முடிவுப்புள்ளியும், மனிதனது அரசாங்கத்தின் இறுதிவடிவமாக, மேற்கத்திய தாராளவாத ஜனநாயகத்தின் உலகமயமாக்கலும் ஆகும்.1

புக்குயாமா அவரது வாதங்களில் எதிர்காலம் தொல்லைகள் இல்லாததாகவும், அமைதியானதாகவும் விளங்குமென வாதிடவில்லை. தாராளவாத முதலாளித்துவ ஜனநாயகம், அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் எவ்வளவுதான் முறையற்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், மனிதகுலத்தின் அரசியல் மற்றும் பொருளாதார பரிணாமத்தின் அர்த்தத்தில், அது ஒரு கடந்து செல்ல முடியாத கருத்தியலைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதில் அங்கே இனி எந்த சந்தேகமும் இருக்க முடியாது என்றவர் வாதிட்டார். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தாராளவாத ஜனநாயகத்திற்கு, வேறெந்த நம்பகமான புத்திஜீவித மற்றும் அரசியல் மாற்றீடும் அங்கே இல்லை என்ற அர்த்தத்தில் வரலாறு “முடிந்து” விட்டது என்றார். 1992இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு நூலில், புக்குயாமா அவரது வாதத்தை அபிவிருத்தி செய்து பின்வருமாறு எழுதினார்: 

நமது பாட்டனார்களின் காலத்தில், பல பகுத்தறிவாளர்களால் பிரகாசமான சோசலிச எதிர்காலத்தை முன்னறிய முடிந்தது, அதில் தனிச்சொத்துடைமையும் முதலாளித்துவமும் இல்லாதொழிக்கப்பட்டிருக்கலாம், மேலும் அதில் அரசியலுமே ஏதோ ஒருவகையில் கடந்து வரப்பட்டது. இன்றோ, அதற்கு மாறாக, நமது இந்த சொந்த உலகைவிட பெரிதும் மிகச் சிறந்த ஓர் உலகை, அல்லது ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவம் இன்றியமையாததாக இல்லாத ஓர் எதிர்காலத்தை, கற்பனை செய்வதில் நமக்கு சிரமங்கள் உள்ளன. அன்றைய அந்த கட்டமைப்பிற்குள்ளே, பல விடயங்களை முன்னேற்றக் கூடியதாக இருந்திருக்கலாம்: அதாவது, வீடில்லாதோருக்கு வீடு வழங்குவது, சிறுபான்மையினருக்கும் பெண்களுக்குமான வாய்ப்பை உத்திரவாதப்படுத்துவது, போட்டித்தன்மையை முன்னேற்றுவிப்பது மற்றும் புதிய வேலைகளை உருவாக்குவது போன்றவை. ஆனால் இப்போது நம்மால் நமக்கு தெரிந்த உலகை விட கணிசமான அளவுக்கு மோசமானதொரு எதிர்கால உலகைத்தான் கற்பனை செய்ய முடியும், அதில் தேசிய, இன, அல்லது மத சகிப்புத்தனமின்மை திரும்பி வருவதாக இருக்கலாம் அல்லது நாம் பெரிதும் போரால் சூழப்பட்டிருக்கலாம் அல்லது சுற்றுச்சூழல் சிதைந்து போயிருக்கலாம். ஆனால் இப்போதைய ஒன்றிலிருந்து அடிப்படையில் வேறுபட்டதும், அதேவேளையில் இதைவிட சிறந்த ஒரு உலகை நம்மால் சிந்திக்க முடியாது. ஏனைய காலகட்டங்கள், அதாவது மேலோட்டமாய் சிந்திக்கப் பெற்ற காலங்களும் சிறந்தவையாக கருதப்பட்டன, ஆனால் தாராளவாத ஜனநாயகத்தை விட சிறந்ததாக இருக்கலாமே என நாம் உணர்ந்த மாற்றீடுகளாக இருந்தவற்றை, பின்தொடர்ந்து களைத்துப் போனதால், நாம் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்."2

புக்குயாமாவின் ஆய்வில் முதலாளித்துவ அரசியல் வெற்றி ஆரவாரமும், அதீத மெய்யியல் அவநம்பிக்கைவாதமும் ஒன்று கலந்திருந்தது. புக்குயாமா புத்தகம் ஒவ்வொன்றுடனும் ஒரு புரோசாக் மருந்து குறிப்பையும் (மன அழுத்தத்திற்கான மருந்து) இணைத்துக்கொடுப்பது அப்புத்தக வெளியீட்டாளருக்கு பொருத்தமுடையதாக இருக்கும். இப்போதைய முதலாளித்துவ யதார்த்தம், அதன் அனைத்துவிதமான உள்நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களில், அதிகபட்சம் பெறக்கூடிய நன்மையைப் பெற்றுவிட்டதென்றால், மனிதகுலத்தின் எதிர்காலம் மிக மிக துயரகரமானதாகிவிடும். ஆனால் புக்குயாமாவின் புனைவுகோள் எந்தவிதத்தில் யதார்த்தபூர்வமானது? ஹெகலிடமிருந்து தூண்டுதலைப் பெற்றதாக அவர் கூறிக்கொண்டாலும், அவரது இயங்கியல் கிரகிப்பு மிகவும் மட்டுப்பட்டதாக இருந்தது. முதலாளித்துவமானது, மோதல் மற்றும் நெருக்கடியை உருவாக்கும் உள்ளார்ந்த மற்றும் அமைப்புரீதியிலான முரண்பாடுகளை ஒருவாறு தீர்த்துவிட்டது மற்றும் வெற்றி கொண்டுவிட்டது என்று அது எடுத்துக்காட்டினால் மட்டுந்தான், வரலாறு முடிந்துவிட்டது என்ற கூற்று அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால் அத்தகையதொரு ஆணித்தரமான முடிவை புக்குயாமாவே கூட தவிர்த்து விட்டார். முதலாளித்துவம் சமூக சமத்துவமின்மையாலும், அதுவே உருவாக்கும் குழப்பங்களாலும் பீடிக்கப்படும் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். இடதிலிருந்து முதலாளித்துவத்திற்கும் மற்றும் தாராளவாத ஜனநாயகத்திற்கு ஒரு மாற்றீடை தேடும் எதிர்கால முயற்சிக்கு, நிறைவற்ற எதிரெதிர் உணர்வால் (அதாவது சமூக சமத்துவமின்மை) ஏற்படும் அதிருப்தி ஆதாரமாக அமையுமென்ற"3 சாத்தியக்கூறை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு சென்றார். அப்படியென்றால், வரலாற்றின் முடிவு பற்றிய புக்குயாமாவின் பிரகடனத்தில் பின்னர் என்ன தான் எஞ்சியுள்ளது?

அமெரிக்க வரலாற்றாளர் மார்ட்டின் மாலியா (1924-2004), புக்குயாமாவின் தத்துவம் ஏற்கத்தக்கதல்ல என்பதைப் புரிந்து கொண்டார். “பாசிசம் மற்றும் கம்யூனிசம் இவை இரண்டினது பிரமைகளையும் வெற்றி கொண்ட பின்னர், வரலாறானது இறுதியில் சந்தை ஜனநாயகமெனும் பாதுகாப்பான துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது என்ற வெற்றி ஆரவாரப் பேச்சு” குறித்து அவர் எச்சரித்தார். மாலியா, "வரலாற்றின் முடிவு குறித்த பிந்தைய-மார்க்சிச (Post-Marxist) கண்ணோட்டத்தின்..."4 செல்தகைமை மீது சந்தேகங்களை வெளிப்படுத்தினார். முதலாளித்துவமானது அதன் வரலாற்று விரோதியின் ஆவேசத்திலிருந்து தன்னைத்தானே ஒருபோதும் விடுவித்துக் கொள்ள முடியாதென அவர் அஞ்சினார். “சோசலிச சிந்தனையானது சமத்துவமின்மை இருக்கும் வரை நிச்சயமாய் நம்மோடு இருக்கும், உண்மையில் அது மிக நீண்டகாலத்திற்கு இருக்கும்.”5 இவ்விதத்தில் மாலியாவோ, சோசலிச அபிலாஷைகளின் திடஉறுதியை எதிர்த்து போரிடுவதற்கு ஒரேவழி, சோவியத் அனுபவத்தின் அடிப்படையில், சோசலிசம் இயங்காது என்பதை வலியுறுத்துவதே ஆகுமென வாதிட்டார். இதுதான் அவரின் சோவியத் துயரம் (The Soviet Tragedy) என்பதன் ஆய்வுப்பொருளாக இருந்தது. 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை, 1917 அக்டோபர் புரட்சியின் தவிர்க்கவியலாத விளைபொருளாக இருந்ததாம். போல்ஷிவிக் கட்சி சாத்தியமில்லாத ஒன்றை: அதாவது முதலாளித்துவம் அல்லாத ஒரு அமைப்புமுறையை உருவாக்குவதற்கு முயற்சி செய்ததாம். அதுதான் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பேராபத்தான வரலாற்றுத் தவறாக இருந்ததாம்.

முழுநிறைவான சோசலிசத்தின் தோல்வி என்பது முதலில் அது தவறான இடத்திலிருந்து, ரஷ்யாவிலிருந்து, முயற்சிக்கப்பட்டது என்பதிலிருந்து எழவில்லை, மாறாக சோசலிச கருத்துக்கு உள்ளிருந்தே எழுகிறது. முற்றிலுமாக முதலாளித்துவம் அல்லாத வகையில் சோசலிசம் உள்ளியல்பிலேயே சாத்தியமற்றது என்பதே அந்த தோல்விக்கான காரணமாகும்.6

இந்த வாதம் போதியளவுக்கு நிரூபிக்கப்படவில்லை, மேலும் மாலியா அவரது புத்தகத்தை வினோதமான வகையில் விருப்புவெறுப்பு கலந்து பிரச்சினைக்குரிய குறிப்புகளுடன் முடித்திருந்தார். சோசலிசத்திற்காக ஒரு பரந்த புரட்சிகர இயக்கத்தின் புதுப்பிக்கப்பட்ட மேலெழுச்சியின் சாத்தியக்கூறை அவர் முன்னுணர்ந்தார்.

முன்னுதாரணமற்ற லெனினிச நிகழ்வுப்போக்கு, முன்னுதாரணமற்ற 1914-1918 உலக நெருக்கடியின் காரணமாக தோன்றியது. இதற்கொத்த எந்த பூகோள நெருக்கடியும் மீண்டுமொருமுறை உறங்கிக் கிடக்கும் சோசலிச வேலைத்திட்டங்களை சமரசத்திற்கிடமில்லா தீவிரத்தை நோக்கி செலுத்தும், அதன்விளைவாக முற்றுமுழுதான முடிவைப் பெறும்பொருட்டு முழு அதிகாரத்தையும் பெறுவதற்கு உத்வேகமூட்டும்.7

புக்குயாமா “வரலாற்றின் முடிவு” சோசலிசத்தின் முடிவைக் குறிக்கும் என்று வாதிட்டார், மாலியாவோ முதலாளித்துவமல்லாத ஒரு சமூகமெனும் இலக்கை அடைவதற்கு சாத்தியமில்லை என்றாலும் கூட, சோசலிசமானது ஆதரவாளர்களை தொடர்ந்து ஈர்க்கும் என்று மௌனமாக ஒப்புக்கொண்டார். அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஸ்ராலினிச பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்திருந்த பிரிட்டிஷ் வரலாற்றாளர் எரிக் ஹோப்ஸ்வாம் (1917-2012), இருபதாம் நூற்றாண்டு வரலாற்று தத்துவத்தை சூத்திரப்படுத்த புக்குயாமா மற்றும் மாலியா இருவரதும் வாதங்களைக் கடன்வாங்கி, மாற்றியமைத்தார், அது பரந்த மிதவாத இடது தட்டின் மத்தியிலும், முன்னாள் இடது கல்வியாளர்கள் மத்தியிலும் ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்கியது. புக்குயாமாவின் மாறாநிலைவாத (Metaphysical) ஊகங்களுடன் உடன்பட்டிருந்த ஹோப்ஸ்வாம், மிகவும் அறிவார்ந்த ஒரு வரலாற்றாளரும், அனுபவவாத வழிமுறையில் அளவுக்கதிகமாக மூழ்கிய ஒருவரும் ஆவார். அவர் புக்குயாமாவின் கருத்துருவை, பெரிதும் கையாளக்கூடிய விதத்தில் ஒழுங்கமைத்து சீர்படுத்தினார். அவர், சோவியத் ஒன்றியத்தின் பொறிவு வரலாற்றின் முடிவு இல்லை என்றாலும், இருபதாம் நூற்றாண்டின் முடிவைக் குறிக்கிறது என்றார். The Age of Extremes (அதிதீவிரங்களின் காலம்) எனும் நூலில், ஹோப்ஸ்வாம் 1914இல் உலக போர் வெடித்ததற்கும், 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கும் இடையிலான ஆண்டுகள் “குறுகிய இருபதாம் நூற்றாண்டை” (Short Twentieth Century) உள்ளடக்கி இருப்பதாக வாதிட்டார்.

நம்மால் இப்போது மறுபடியும் பார்க்கக்கூடிய விதத்தில், இப்போது முடிந்துள்ள வரலாற்று காலகட்டம் அந்த வரலாற்றுக் காலகட்டத்தை ஒத்திருக்கிறது ... 1980களின் இறுதியிலும் 1990களின் தொடக்கத்திலும் இருந்த ஓர் உலக வரலாற்று சகாப்தம் முடிந்துவிட்டது என்பதிலும், மற்றும் புதிய ஒன்று தொடங்கிவிட்டது என்பதிலும் அங்கே எந்த ஆழமான சந்தேகமும் இருக்க முடியாது. அதுதான் இந்த நூற்றாண்டின் வரலாற்றாளர்களுக்கான இன்றியமையாத தகவலாகும் … 8

1914க்கும் மற்றும் 1991க்கும் இடையில் விரியும் ஒரு “குறுகிய” எழுபத்தேழு ஆண்டு காலமாக ஹோப்ஸ்வாமால் காலவகைப்படுத்தப்பட்ட இருபதாம் நூற்றாண்டை, ஒரு சாந்தமான வடிவத்தில், மாலியா போல்ஷிவிக்குகளின் புரட்சிகர செயல்திட்டத்தை நிராகரிப்பதற்கு மறுஒழுங்கு செய்தார். 1991இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புடன் இருபதாம் நூற்றாண்டு நாடகத்திற்கு மூடுதிரையிட்டு, ஹோப்ஸ்வாம், முதலாம் உலக போர் வெடிப்புடன் தொடங்கிய ஒரு புரட்சிகர சகாப்தம் முடிவுற்றதென பறைசாற்றினார். 1914க்கும் 1991க்கும் இடையே சோசலிசம் —ஏதாவதொரு வடிவில்— முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீடாக பார்க்கப்பட்டிருந்தது. அந்த காலம் 1991இல், நிரந்தரமாக, முடிந்து போனது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியிடம் கருக்கொண்டிருந்த புரட்சிகர சோசலிச செயற்திட்டம் தொடக்கம் முதலே ஒரு பிரமையாக இருந்தது என்று ஒரு சிறு சந்தேகத்தையும் ஹோப்ஸ்வாம் ஏற்படுத்தி விட்டுச் செல்கிறார். முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியமை, 1991இன் வெளிச்சத்தில், ஒரு துன்பகரமான பிழையாக மாறியுள்ளதைப் பார்க்கலாம் என்றும், 1917இல் நிலவிய சூழ்நிலைகளில் அடிப்படையில் போல்ஷிவிக் தலைவர்களின் முடிவுகளுக்கு ஒருவர் அரசியல் நியாயப்பாட்டை கண்டாலும் கூட, அக்டோபர் புரட்சி ஒருவகையான, முற்றிலும் தனித்துவமான மற்றும் மீண்டும் நடத்த முடியாத ஒரு நிகழ்வாக இருந்தது — அந்த சூழ்நிலைகளின் விளைவு எந்தவொரு சமகாலத்திய அரசியலுக்கும் பொருந்தாமல் மிகவும் வினோதமானதாக இருந்தது என ஹோப்ஸ்வாம் வலியுறுத்தினார்.

புக்குயாமாவும் ஹோப்ஸ்வாமும், சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியை, வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை பற்றிய அவர்களது காலவகைப்படுத்தலின் மையத்தில் வைத்தனர். புக்குயாமாவை பொறுத்தவரை அந்த கலைப்பு “வரலாற்றின் முடிவைக்" குறித்தது. ஹோப்ஸ்வாமை பொறுத்தவரை, அது “குறுகிய இருபதாம் நூற்றாண்டின்” (Short Twentieth Century) முடிவைக் குறித்தது. அக்டோபர் புரட்சி இருபதாம் நூற்றாண்டின் மைய அரசியல் நிகழ்வாக இருந்தது என்ற ஓரளவுக்கு மறைமுகமாக வழங்கிய ஒப்புதலே, சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு அவர்கள் வழங்கிய பரந்த வரலாற்று முக்கியத்துவமாக இருந்தது. ஆனால், “வரலாற்றின் முடிவு” மற்றும் “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” என்ற இந்த இரண்டு ஆய்வுபொருள்களுமே, அக்டோபர் புரட்சியின் வரலாற்று அடித்தளங்களைக் குறித்தும், 1917இல் போல்ஷிவிக் அரசு அதிகாரத்தை கைப்பற்றியதற்குப் பிந்தைய பத்தாண்டுகளில் பரிணமித்த சோவியத் அரசின் இயல்பைக் குறித்தும், அடிப்படையிலேயே தவறான கருத்துருக்களைக் கொண்டிருந்தன. குறிப்பிட்ட வரலாற்று பிரச்சினைகளின் காரணகாரியங்கள் மீது சிறிதே கவனம் செலுத்தி, புக்குயாமா அவற்றை வார்த்தையளவில் தத்துவமயப்படுத்த ஈடுபட்டிருந்த நிலையில், ஹோப்ஸ்வாமோ, முதலாவது உலகப் போரின் பெரும் பேரழிவு இருந்திராதிருந்தால், சோசலிச புரட்சியே நடந்திருக்காது என்ற பழமையான மற்றும் மேலெழுந்தவாரியான கருத்தை ஏற்றிருந்தார். “பேரழிவு காலத்தில் (Age of Catastrophe) பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலாளித்துவ சமூகம் உடைந்திருக்காவிடில், அங்கே அக்டோபர் புரட்சியோ, சோவியத் ஒன்றியமோ இருந்திருக்காது” 9 என அவர் எழுதினார்.

இது கூறியதையே கூறும் ஒருபொருள் சொல்லடுக்கேயன்றி (Tautology) ஒரு விளக்கம் அல்ல. இறுதியில் உலகப் போராகவும் மற்றும் சமூகப் புரட்சியாகவும் வெடித்த ஒன்றை, பூகோளத்தன்மையுடைய ஆழ்ந்து வேரூன்றிய முரண்பாடுகளை, அடையாளம் காண்பதே நிஜமான புத்திஜீவித சவாலாக இருந்தது, அதை ஹோப்ஸ்வாம் தவிர்த்திருந்தார். அனைத்தினும் மேலாக, முதலாம் உலகப் போரே, பல ஆண்டுகளாக தீவிரமயப்பட்டு வந்த பெரும் வல்லரசுகளின் மோதலில் இருந்து முன்னுக்கு வந்ததாகும். அக்டோபர் புரட்சிக்கு முந்தைய தசாப்தங்களில், சோசலிசம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சர்வதேச இயக்கமாக வெளிப்பட்டது. 1914க்கு முன்னர் சோசலிஸ்டுகள் முதலாளித்துவ சமூக அமைப்பின் உடைவை மட்டும் எதிர்பார்த்திருக்கவில்லை, மாறாக அந்த உடைவானது ஐரோப்பா-தழுவிய மற்றும் உலகம் தழுவிய ஒரு பேரழிவுகரமான போரின் வடிவை எடுக்கக்கூடுமென்றும் எச்சரித்திருந்தனர். அத்தகைய ஒரு போரை சோசலிச புரட்சிக்கான ஒரு இன்றியமையாத முன்நிபந்தனையாக வரவேற்பதற்கு நேர்மாறாக, 1914க்கு முந்தைய கால மாபெரும் மார்க்சிஸ்டுகள், அவர்களது அரசியல் வேலையின் மையத்தில் ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்தைக் கொண்டு வந்து நிறுத்தினர்.

ஒர் பெரும் ஏகாதிபத்திய போர் நெருங்கி வருகிறது என்பது அதிகளவில் காணக் கூடியதாக ஆனபோதுதான், சோசலிஸ்டுகள் அதுபோன்றவொரு நிகழ்வின் மூலோபாய விளைபயன்களை, புரட்சிகரப் போராட்டத்தின் நிலைப்பாட்டிலிருந்து பரிசீலிக்க தொடங்கினர். 1914க்கு முன்னரே கூட, மார்க்சிச சோசலிஸ்டுகள் போர் மற்றும் புரட்சியின் பொதுவான தோற்றுவாய் முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடியில் இருப்பதை உணர்ந்திருந்தினர் என்பது முக்கிய புள்ளியாகும். 1914க்கு முன்னர் சோசலிச இயக்கத்திற்கு உள்ளிருந்த விவாதங்களை புறக்கணித்துவிட்டு, வரலாற்று பிரச்சினைகளின் காரணகாரியங்களை ஹோப்ஸ்வாம் மேலெழுந்தவாரியாக கையாண்டு, அக்டோபர் புரட்சியை வெறுமனே போரின் தற்செயலான மற்றும் முக்கியத்துவமற்ற ஒரு விளைபொருளாக சித்தரித்தார்.

புக்குயாமா, ஹோப்ஸ்வாம், மற்றும் மாலியாவையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும், இவர்களின் வாதங்களில் உள்ள முக்கிய குறைபாடே, இவர்கள் சோவியத் ஒன்றியத்தையும், அதன் வரலாற்றின் அனைத்துக் கட்டங்களையும், விமர்சனமற்ற வகையில் சோசலிசத்துடன் அடையாளப்படுத்துகிறார்கள் என்பது தான். அக்டோபர் புரட்சியினது நிஜமான கேடுகளின் தவிர்க்க முடியாத விளைபொருளே ஸ்ராலினிச ஆட்சியாகும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. சோவியத் வரலாறு குறித்த இந்த ஊழ்வினைக் கோட்பாட்டு (fatalistic) அதிதீவிர-தீர்மானகரமான (ultra-deterministic) கண்ணோட்டம், ஸ்ராலினிசமல்லாத ஒரு வளர்ச்சிப் போக்கின் சாத்தியக்கூறை பரிசீலிக்க மறுத்தது. ஸ்ராலின் தலைமையில் எழுச்சி பெற்று வந்த அதிகாரத்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ―குறிப்பாக லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில்― நடந்த எதிர்ப்பு போக்குகளின் போராட்டம் குறித்து ஹோப்ஸ்வாம் முற்றிலுமாக பாரபட்சதன்மையை வெளிப்படுத்தினார். ஸ்ராலின் ஆட்சிக்கு இருந்த மாற்றீடுகளைக் குறித்த விவாதத்தை அவர், எதிரிடை உண்மைகளின் வரலாறு (counterfactual history) ஒரு நியாயபூர்வமற்ற முயற்சி என்பதாக நிராகரித்தார். எவ்வாறிருந்தபோதினும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மோதல் தீவிரமடைந்து, இறுதியில் ஸ்ராலினது கன்னை மேலோங்கியது; அந்த புள்ளியிலிருந்து, ஸ்ராலினிசமே ―வரலாற்றாளரின் எரிச்சலூட்டும் சொற்றொடரை மேற்கோளிடுவதாயின்― “ஒரேயொரு சாத்தியக்கூறாக” ஆனது. 1923க்கும் 1927க்கும் இடையே கம்யூனிஸ்ட் கட்சியினுள் நடந்த போராட்டத்தில் ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பாளர்களும் கூறியவை மற்றும் எழுதியவை எல்லாம், கணக்கில் இல்லாமல் போயின. ஹோப்ஸ்வாமை பொறுத்தவரை, அப்பிரச்சினை மிகவும் நேரடியாக இருந்தது. ஸ்ராலின் வென்றார்; ட்ரொட்ஸ்கி தோற்றார். அதில் இருந்தது அவ்வளவுதான். வேறு என்ன நடந்திருக்க சாத்தியக்கூறு இருந்தது என்பது குறித்து வரலாற்றாளர்கள் அக்கறையைக் கொள்ள வேண்டியதில்லை.

ஸ்ராலினிசத்திற்கு இருந்த மாற்றீடுகளை ஹோப்ஸ்வாம் முடிவாக நிராகரித்தமை, அவரது அரசியல் ஆதாரத்தின் நடைமுறை என்பதையும் விட, அந்நிலைப்பாடு சமரசத்திற்கு இடங்கொடாத வரலாற்று புறநிலைவாதத்தின் மிகக் குறைவான வெளிப்பாடாய் இருந்தது. அவர் ஒரு நடுநிலையான பாரபட்சமற்ற விமர்சகராக இருக்கவில்லை. பிரிட்டிஷ் ஸ்ராலினிச இயக்கத்தில் அவர் நீண்டகாலம் உறுப்பினராக இருந்தபோது, ஹோப்ஸ்வாம் ரஷ்ய புரட்சியின் வரலாறு மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி வகித்த பாத்திரம் குறித்த சோவியத் அதிகாரத்துவத்தின் பொய்ம்மைப்படுத்தலை ஒருபோதும் ஆட்சேபித்திருக்கவில்லை. சோவியத் ஒன்றியம் குறித்த பொய்களை அடிப்படையாகக் கொண்டிருந்த உத்தியோகபூர்வ ஸ்ராலினிச வரலாற்றைத்தான் அவர் பேணி வந்தார் என்பதை ஒளிவுமறைவின்றி ஒருபோதும் உறுதிப்படுத்தாமலேயே, அவரது தொன்னூற்றைந்தாவது வயதில், 2012இல் ஹோப்ஸ்வாம் இயற்கை எய்தினார்.

ஹோப்ஸ்வாமின் கருத்துப்படி, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது "தீவிரங்களின் காலகட்டத்தை" (Age of Extremes) ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. 1917க்கு முன்னர் இருந்ததைப் போலவே, முதலாளித்துவம் மீண்டுமொருமுறை "ஒரேயொரு சாத்தியக்கூறாக" மாறியிருந்தது. மேலும் எதிர்காலத்தின் ஏதேனும் தருணத்தில் சமூகம் வன்முறையான பேரெழுச்சிகளை பெறுவதற்கு சாத்தியக்கூறு இல்லாமல் இல்லை என்றபோதினும், பரந்த புரட்சிகர சோசலிச இயக்கம் மீளெழுச்சி பெறுவதற்கு அங்கே எந்த சாத்தியக்கூறும் இருக்கவில்லை என்பதே அவரது கருத்தாக இருந்தது.

மனிதகுலம் ஓர் இக்கட்டான நிலைக்கு வந்துவிட்டது; அதன் நிலைமை நம்பிக்கையற்றதாக உள்ளதென்ற இந்தவொரு தீர்மானத்தை எட்டுவதற்குத்தான், ஹோப்ஸ்வாமின் விளக்கம் ஒரு வாசகரை இட்டுச் செல்கிறது. "நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்று நமக்கே தெரியாது," இது "தீவிரங்களின் காலகட்டம்" நூலின் இறுதியில் அவர் எழுதியதாகும். எதிர்காலத்திற்கு ஒரு நேர்மறையான வழிகாட்டியாக விளங்கக் கூடிய கடந்த காலத்தின் அனுபவத்திலிருந்து, ஹோப்ஸ்வாம் ஒன்றையும் காணவில்லை. ஒரேயொரு விடயத்தில் மட்டும் அவர் நிச்சயமாக இருந்தார்: அதாவது, எதிர்கால போராட்டங்களுக்கு அக்டோபர் 1917 சோசலிசப் புரட்சி ஒரு எடுத்துக்காட்டாகவோ அல்லது வழிகாட்டியாகவோ சேவை செய்ய முடியாது, சேவை செய்துவிடவும் கூடாது என்பதால், ஹோப்ஸ்வாம் அவரது நீண்ட புத்தகத்தின் இறுதி வரியில் பின்வருமாறு எழுதினார், "அதன் அடிப்படையில் நாம் மூன்றாவது ஆயிரமாவது ஆண்டைக் கட்டி எழுப்ப முயன்றால், நாம் தோல்வியுறுவோம்," "அந்த தோல்விக்கான விலை படுமோசமாக இருக்கும்."10

இத்தொகுப்பில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் விரிவுரைகளின் பெரும்பாலான பகுதி, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதோடு உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தம் ஓர் இறுதி முடிவுக்கு வந்துவிட்டது என்ற வாதத்திற்கு எதிராக அபிவிருத்தி செய்யப்பட்டதாகும். புக்குயாமாவின் “வரலாற்றின் முடிவு” என்பதற்கும், ஹோப்ஸ்வாமின் “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” என்பதற்குமான எதிர்ப்பில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது நிச்சயமாக ஒரு மிக முக்கிய சம்பவம்தான் என்றபோதினும், அது சோசலிசத்தின் அதிர்ச்சிகரமான முடிவைக் குறிக்காது என்று நான் வாதிட்டுள்ளேன். வரலாறு தொடரும். இருபதாம் நூற்றாண்டு, போர்களையும் புரட்சிகளையும் எழச்செய்து, ஓர் ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடியின் சகாப்தமாக எந்தளவுக்கு வரைவிலக்கணம் செய்துள்ளதோ, அதேயளவுக்கு மிகப் பொருத்தமாக அது “முடிவுறவில்லை” என்பதையும் குணாம்சப்படுத்துகிறது. அதாவது இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகள், பிரதானமாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எதிர்கொண்ட அதே முரண்பாடுகளாக உள்ளன. அனைத்துவிதமான விஞ்ஞான வளர்ச்சிகள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள், அரசியல் மேலெழுச்சிகள், சமூக மாற்றங்கள் இருந்தாலும் கூட, இருபதாம் நூற்றாண்டு புதிரான வகையில் தெளிவற்ற விபரங்களுடன் முடிவுற்றது. அந்நூற்றாண்டின் போராட்டங்களின் அடியிலிருந்த மாபெரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளில் ஒன்று கூட திட்டவட்டமாக தீர்க்கப்பட்டிருக்கவில்லை. முதலாவது உலக போர், சொல்லப்போனால் பால்கன் அரசுகளின் எல்லை மோதல்களால் தூண்டிவிடப்பட்டு முன்னுக்கு வந்தது. சுமார் எண்பது ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் தூண்டிவிடப்பட்டு, யூகோஸ்லாவியா கலைக்கப்பட்டமை, அரசு இறையாண்மை மற்றும் எல்லை பிரிப்பது தொடர்பாக இரத்தந்தோய்ந்த தசாப்த கால மோதலை முடுக்கிவிட்டது. சேர்பியாவின் தேசியவாத ஆட்சி ஏகாதிபத்திய நலன்களுக்கு தடையாக இருந்ததால், அதை தண்டிப்பதற்காக ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு எடுத்த முடிவுடன் முதலாம் உலக போர் 1914இல் தொடங்கியது. எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இருபதாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், பால்கன்களில் ஏகாதிபத்திய எல்லை மறுஒழுங்கை சேர்பியா ஏற்றுக் கொள்ளும்படி அதை நிர்பந்திக்க, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மீது ஈவிரக்கமின்றி குண்டுகளை வீசியது.

இது ஏதோ விடயங்கள் அதிகமாக மாறினால், அவை அதிகமாக ஒரேமாதிரியாக இருக்கும் (plus ça change, plus c’est la même chose) என்பதல்ல. அதற்கு மாறாக, 2014இன் உலகை 1914 உடன் இணைக்கும், மற்றும் இருபதாம் நூற்றாண்டை அதன் "முடிவுறாத" குணாம்சத்திற்கு உரியதாக்கும், அடிப்படை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் நீண்டகாலத்திற்கு நீடித்திருக்கின்றன என்பதற்கு ஒரு சான்றாக உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் விடியலில் புத்தாண்டைக் கொண்டாடியவர்களுக்கு, 1800 இன் உலகம் எப்படி தெரிந்திருக்கும் என்பதை நாம் ஒப்பிடுவதன் மூலமாக பரிசீலிப்போம். 1800கள் முடிவடைய இருந்தபோது, நெப்போலிய போர்கள் தெளிவாக வரலாற்று அரங்கிலிருந்து மறைந்து போயிருந்தன. 1900இல் வாழ்ந்தவர்களுக்கு பிரெஞ்சுப் புரட்சியும், ஒஸ்டர்லிட்ஸ் (Austerlitz) மற்றும் வாட்டர்லூ (Waterloo) போர்களும் ஒரு மிகவும் வேறுபட்ட காலகட்டத்தில் நடந்த புராணகால மோதல்களாக தோன்றின. ரொபேஸ்பியர், டான்ரொன் மற்றும் நெப்போலியன் ஆகியவர்கள் தொடர்ந்தும் அவர்களை ஆட்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் வெகுதூர காலத்தில் 1900 உலகில் வாழ்ந்த, வேறொரு காலத்திய, வேறொரு வரலாற்று இடத்தின் பிரபல்யங்களாக இருந்தனர். நிச்சயமாக, உலக வரலாற்றில் அவர்களது தாக்கம் நிலைத்திருந்ததுதான். ஆனால் அவர்கள் வாழ்ந்த அரசியல் உலகம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் போக்கில் அடிப்படை ரீதியாகவும், வியத்தகு முறையிலும் உருமாற்றப்பட்டிருந்தது. மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நிலவிய அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் புரட்சிகளால் புரட்டிப்போடப்பட்ட முதலாளித்துவ-ஜனநாயக மற்றும் தேசிய-அரசு பலப்படுத்தல்கள் என்பது பெரிதும் நிறைவடைந்திருந்தன. தொழிற்புரட்சியானது முன்னேறிய நாடுகளில் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்புக்களை மாற்றி இருந்தன. நிலப்பிரபுக்களுக்கும், எழுச்சிபெற்று வந்த முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலிருந்த பழைய மோதல், தொழிற்துறை முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சியிலிருந்தும் பாட்டாளி வர்க்கம் உருவானதிலிருந்தும் எழுந்த புதிய வகை வர்க்கப் போராட்டத்தால் உருமாறின. பதினெட்டாம் நாற்றாண்டின் இறுதிப்பகுதியினது மாபெரும் போராட்டங்களை வழிநடத்திய பொதுவான ஜனநாயக கருத்துகள் மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை என்பதை, 1848 புரட்சிகளால் வெளிப்படையாக துன்பியலானரீதியில் எடுத்துக்காட்டப்பட்டது. மனிதனின் உரிமைகள் (The Rights of Man) என்ற நூல் பழைய முதலாளித்துவ-ஜனநாயக புரட்சிகளின் மொழியில் எழுதப்பட்டது. கம்யூனிஸ்ட் அறிக்கை புதிய பாட்டாளி வர்க்க சோசலிச புரட்சியின் மொழியில் எழுதப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில், அரசியல் உயர்ந்தளவில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட உலக பொருளாதார அபிவிருத்தியின் அடிப்படையில், முற்றிலும் பூகோளமயப்பட்ட குணாம்சத்தை ஏற்றிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் போக்கில் உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அரசுகளின் அமைப்புமுறை, கடுமையான நெருக்கடியின் கீழ்வந்ததுடன், அது மிகவும் சக்திவாய்ந்த முதலாளித்துவ அரசுகளிடையே உலக மேலாதிக்கத்திற்காக அதிகளவில் கசப்பான போராட்ட வடிவத்தை எடுத்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் போது, "ஏகாதிபத்தியம்" என்ற சொல் பொதுவான பயன்பாட்டிற்குள் நுழைந்தது. முதலாம் உலக போர் வெடிப்பதற்கு இட்டுச்சென்ற ஆண்டுகளில், அந்த புதிய நிகழ்வுபோக்கின் பொருளாதார அடித்தளங்களும், அதன் சமூக மற்றும் அரசியல் விளைவுகளும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன. 1902 இல் பிரிட்டிஷ் பொருளாதார வல்லுநர் ஜே. ஏ. ஹாப்சன் ஏகாதிபத்தியம் என்று தலைப்பிட்ட ஒரு நூலை எழுதினார். அதில் அவர், "தொழில்துறை மற்றும் நிதியியல் நலன்களுக்கு தேவையான உபரி பண்டங்களுக்காகவும், உபரி மூலதனத்திற்காகவும் பொதுநலன்களை பலியிட்டும், பொதுசக்திகளைக் கொண்டு தனியார் சந்தைகளை பாதுகாக்கவும் மற்றும் அபிவிருத்தி செய்யவும் பலமாக ஒழுங்கமைக்கப்பட்ட வேட்கையே, ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆணிவேராக உள்ளது" என்று வாதிட்டார்.11 1910 இல் ஆஸ்திரிய சமூக ஜனநாயக தத்துவவியலாளர் ருடோல்வ் ஹில்ஃபெர்டிங், அவரது நிதி மூலதனம் எனும் நூலில், ஏகாதிபத்தியத்தின் உள்ளார்ந்த ஜனநாயக-விரோத மற்றும் வன்முறை குணாம்சத்தின் மீது மட்டுமின்றி, அதன் புரட்சிகர தாக்கங்களுக்குள்ளும் கவனம் செலுத்துமாறு அழைப்புவிடுத்தார்:

ஏகாதிபத்திய கொள்கை எடுத்துக்காட்டுவதைப் போல, முதலாளித்துவ வர்க்கத்தின் நடவடிக்கைகளே பாட்டாளி வர்க்கத்தை சுயாதீனமான வர்க்க அரசியல் பாதைக்குள் அத்தியாவசியமாக வழிநடத்துவதுடன், அது முதலாளித்துவம் இறுதியாய் தூக்கிவீசப்படுவதில்தான் போய் முடிகிறது. தலையிடாக்கொள்கையின் (laissez-faire) கோட்பாடுகள் மேலாதிக்கம் செலுத்திய வரையில், மற்றும் பொருளாதார விஷயங்களில் அரசின் தலையீடும், அத்துடன் அரசின் குணாம்சம் வர்க்க மேலாதிக்கத்தின் ஓர் அமைப்பு என்றரீதியில் மூடிமறைக்கப்பட்டிருந்த வரையில், அரசியல் போராட்டத்திற்கான அத்துடன் அனைத்திற்கும் மேலாக இறுதி அரசியல் இலக்குக்கான, அதாவது அரசு அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான, இன்றியமையாமையை மதிப்பிடுவதற்கு ஒப்பீட்டளவில் ஒரு முதிர்ச்சியடைந்த மட்டத்திலான புரிதல் தேவைப்பட்டது. அதனால் தான் தலையிடாக் கொள்கை கொண்ட மரபுவழி நாடான இங்கிலாந்தில், சுயாதீனமான தொழிலாள வர்க்க அரசியல் நடவடிக்கையின் தோற்றம் அந்தளவுக்குக் கடினமாக இருந்தது என்பது தற்செயலானதல்ல. ஆனால் இது தற்போது மாறி வருகிறது. முதலாளித்துவ வர்க்கமானது அரசு எந்திரத்தின் மீதான உரிமையை நேரடியாக, ஒளிவுமறைவின்றியும் வெளிப்படையான வழியிலும் கைப்பற்றி, அதன் சுரண்டும் நலன்களுக்கு ஒரு கருவியாக ஆக்குகிறது, அது ஒவ்வொரு தொழிலாளருக்கும் வெளிப்படையாகத் தெரியும் வகையில் இருப்பதால், அவர் இப்போது பாட்டாளி வர்க்கத்தால் அரசியல் அதிகாரம் வென்றெடுக்கப்படுவதே, அவரது சொந்த மிக உடனடியான தனிப்பட்ட நலன் என்பதை கட்டாயம் அடையாளம் கண்டு கொள்வார். முதலாளித்துவ வர்க்கம் அரசை வெளிப்படையாக கைப்பற்றுவது, ஒவ்வொரு பாட்டாளியையும், தன் மீதான சொந்த சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழிவகையாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக போராடுமாறு நிர்பந்திக்கிறது.12

1916இல், உலக போர் அதன் மூன்றாவது ஆண்டில் நுழைந்த போது, லெனின் மணிச்சுருக்கமாக ஏகாதிபத்தியத்தின் குணாம்சத்தைப் தொகுத்தளித்தார்:

ஏகாதிபத்தியத்தின் முக்கிய சாராம்சமான அடிப்படை பொருளாதார இயல்பே, ஏகபோகத்தைக் கொண்டு தடையில்லா போட்டியை பதிலீடு செய்வதாகும்.

… அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும், பின்னர் ஆசியாவிலும், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமாக, ஏகாதிபத்தியம் 1898-1914 காலகட்டத்தில் அதன் இறுதி வடிவத்தை எடுத்தது. ஸ்பானிஷ்-அமெரிக்க போர் (1898), ஆங்கிலோ-போயர் யுத்தம் (1899-1902), ரஷ்ய-ஜப்பானிய போர் (1904-1905) மற்றும் 1900இல் ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி ஆகியன உலக வரலாற்றின் புதிய சகாப்தத்தில் முக்கிய வரலாற்று அடையாளங்களாகும்.

… முதலாளித்துவத்தின் சிதைவானது குத்தகைதாரர்களின் ஒரு பெரும் அடுக்கை உருவாக்குவதில் வெளிப்பட்டுள்ளது, முதலாளித்துவவாதிகள் “வட்டி வருவாய் சீட்டுக்களை கொண்டு வாழ்கிறார்கள்" … மூலதனத்தை ஏற்றுமதி செய்வதில் ஒட்டுண்ணித்தனம் உயர்ந்தளவுக்கு உறுதிப்பாட்டுடன் எழுகிறது ... அரசியல் பிற்போக்குத்தனம் அனைத்து வழிகளிலும் ஏகாதிபத்தியத்தின் சிறப்பியல்பாகும். அத்துடன் பெரியளவில் ஊழலும் லஞ்சமும் மற்றும் எல்லாவகையான மோசடிகளும் ... விரல்விட்டு எண்ணக்கூடிய “பெரும்” வல்லரசுகளால் ... ஒடுக்கப்பட்ட தேசங்களைச் சுரண்டுதலும் ...”13

1915இல் எழுதப்பட்ட போரும் அகிலமும் என்பதில் ட்ரொட்ஸ்கி இந்த மோதலை, தேசம் மற்றும் அரசின் அரசியல் வடிவத்திற்கு எதிரான உற்பத்தி சக்திகளின் ஒரு கிளர்ச்சியாக அடையாளப்படுத்தினார். என்னவென்றால் ஒரு சுயாதீன பொருளாதார அலகாக விளங்கும் தேசிய அரசின் பொறிவை அது அர்த்தப்படுத்துகிறது.

... போர் தேசிய அரசு வீழ்ச்சியடைந்து விட்டதை பறைசாற்றுகிறது. இருப்பினும் அதேவேளையில், அது முதலாளித்துவ பொருளாதார அமைப்புமுறையின் வீழ்ச்சியையும் பறைசாற்றுகிறது. தேசிய அரசின் மூலமாக, முதலாளித்துவம் ஒட்டுமொத்த உலகப் பொருளாதார அமைப்புமுறையையும் புரட்சிகரமயப்படுத்தி உள்ளது. அது முழு உலகையும் வல்லரசுகளின் தன்னலக்குழுக்களிடையே பங்கு போட்டுள்ளது, அவற்றைச் சுற்றி சிறிய நாடுகள் துணைக்குழுக்களாக மாறி, அவை வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகளுக்கு இடையே வாழ்கின்றன. முதலாளித்துவ அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தின் எதிர்கால அபிவிருத்தி என்பது, முதலாளித்துவ சுரண்டலுக்கு ஒரு புதிய மற்றும் என்றென்றும் புதிய துறைகளுக்கான இடைவிடாத போராட்டம் என்பதை அர்த்தப்படுத்துகிறது, அந்த சுரண்டலும் இந்த ஒரேயொரு அதே மூலவளம், அதாவது பூமியிலிருந்து தான் பெறப்பட்டாக வேண்டும். இராணுவவாதப் பதாகையின் கீழ் பொருளாதார பகைமையென்பது, மனித பொருளாதாரத்தின் அடிப்படை கோட்பாடுகளைக் கூட மீறும் கொள்ளையடித்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. தேசம் மற்றும் அரச பிளவுகளால் உண்டாக்கப்பட்ட குழப்பத்திற்கு எதிராக மட்டுமின்றி, உலகளாவிய உற்பத்தியானது, முதலாளித்துவ பொருளாதார அமைப்புகளுக்கு எதிராகவே கூட கிளர்ந்தெழுகிறது. அம்முதலாளித்துவ பொருளாதார அமைப்புக்கள் தற்போது காட்டுமிராண்டித்தனமான ஒழுங்கீனம் மற்றும் பெருங்குழப்பத்திற்குள் திரும்பியுள்ளன.14

இந்த எழுத்துக்களில் சமகாலத்திய சர்வதேச புவிசார் அரசியலின் சொற்தொகுதிகளையும் மற்றும் சொற்பதங்களையும் நாம் எதிர்கொள்கிறோம். அவற்றுள் விளக்கப்படுகின்ற உலகை தான், நாம் இன்னமும் நம்முடையதாக உணரவேண்டி உள்ளது. இது முதலாளித்துவத்தின், தன்னல மேற்தட்டுக்களின், அவற்றின் உலகளாவிய நலன்களை நாடுகின்ற பெரும் பகாசுர நிறுவனங்களின், அடக்குமுறை ஆட்சிகளின் உலகமாகும். இந்த எழுத்துக்கள் எல்லாம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற —யுத்தங்கள் மற்றும் புரட்சிகளின்— ஒரு சகாப்தத்தின் விடியலில் எழுதப்பட்டவை தான். இருபதாம் நூற்றாண்டின் முரண்பட்ட கருத்துருக்கள், நிகழ்காலத்தின் நமது புரிதல்களிலும், நமது எதிர்கால எதிர்பார்ப்புகளிலும் நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளன. “வரலாற்றின் முடிவு” எனும் ஆய்வுப்பொருள், தவிர்த்துக் கொள்வதையும் மற்றும் சுயதிருப்தி கொள்வதையும் நியாயப்படுத்துகிறது. தவிர்க்கவியலா தோல்வி குறித்தும் மற்றும் சோசலிசத்திற்கான புரட்சிகர போராட்டம் இறுதியில் பயனின்றி போகும் என்ற அதன் விவரிப்புடன் “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” எனும் கருத்து, முதலாளித்துவ உலகில் —அது மனித நாகரிகம் நீடித்திருப்பதையே அச்சுறுத்துகின்ற ஒரு பேரழிவை நோக்கி தவிர்க்கவியலாமல் நகருகின்ற போதினும் கூட— நீடித்திருக்கும் நம்பிக்கையின்மை மனோபாவம், எப்போதுமே அது என்னமாதிரியான பாரிய எதிர்ப்பு எழுந்தாலும் அதை நசுக்க போதிய பலத்தைக் கொண்டிருக்கும் என்பதை ஊக்குவிக்கிறது.

“முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” எனும் கருத்துரு, குட்டிமுதலாளித்துவ புத்திஜீவிகளின் ஒரு வரலாறு-அற்ற அவநம்பிக்கைவாதத்தை நிராகரிக்கிறது. இந்த “முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” என்பது, மனித சமுதாயத்தை ஒரு தொடர்ச்சியான மற்றும் தீர்க்கமுடியாத மோதல்களின் மத்தியில் நிறுத்துகிறது. 1914 ஆகஸ்டில் தொடங்கிய பூகோளமயப்பட்ட நெருக்கடியின் விளைவு, இன்னும் தீர்மானிக்கப்பட வேண்டிதாக உள்ளது. மனிதகுலம் எதிர்கொண்டிருந்த வரலாற்று மாற்றீடுகள், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், முதலாம் உலக போரின் மத்தியில் ரோசா லுக்சம்பேர்க்கால் இனம் காணப்பட்டன: “ஒன்று, ஏகாதிபத்தியத்தின் வெற்றியும் அனைத்துவிதமான கலாச்சாரத்தின் அழிவும், பண்டைய ரோமில் ஏற்பட்டதைப் போல மக்களை அழித்தல், பாழாக்குதல், சீரழித்தல், பாரியளவில் கல்லறைகளைத் தோற்றுவித்தல்; அல்லது, சோசலிசத்தின் வெற்றி, அதாவது, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் நனவான போராட்டம்.”15 மார்க்சிஸ்டுகளை பொறுத்தவரை, வரலாற்று சாத்தியக்கூறுகளைக் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ ஆய்வில் நம்பிக்கையின்மையோடு உயிர்வாழும் வகையறாக்களுக்கு எந்தவொரு இடமும் இல்லை. தற்போது நிலவும் நிலைமைகளை, அதன் அனைத்துவிதமான சிக்கல்களோடு, நாம், விதிக்குட்பட்ட சமூக-பொருளாதார முரண்பாடுகளின் மாறுபடுகின்ற வெளிப்பாடுகளாக புரிந்து கொள்கிறோம், அவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியும் (புரிந்துக் கொள்ள வேண்டும்), அத்துடன் அவற்றின் மீது செயல்படவும் முடியும் (செயல்பட்டாக வேண்டும்). இருபதாம் நூற்றாண்டின் “முடிவுறாத” தன்மையைப் புரிந்து கொள்வதற்கு, அது அதன் வரலாறைக் குறித்த ஆய்வுகளின் மீது அளப்பரிய முக்கியத்துவத்தை முன்வைக்கிறது. கடந்தகாலத்தின் எழுச்சிகளும் போராட்டங்களும் இன்றியமையாத மூலோபாய அனுபவங்களாக பார்க்கப்படுகின்றன, அவற்றின் படிப்பினைகள் சர்வதேச சோசலிச இயக்கத்தால் முற்றிலுமாக உள்ளீர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

சோவியத் ஒன்றியம் பொறிந்து போனதன் முக்கியத்துவம் குறித்த இத்தகைய முரண்பாடான பொருள்விளக்கங்கள் சூத்திரப்படுத்தப்பட்டதற்கு பின்னர், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கடந்துவிட்டன. அவற்றுள் எது காலத்தின் சோதனையில் தாக்குப்பிடித்து நின்றிருக்கிறது? புக்குயாமாவின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, சோவியத் ஒன்றிய கலைப்புக்குப் பிந்தைய காலத்தில், வரலாறானது வலுவிழந்து போனதன் எந்த அடையாளத்தையும் காட்டவில்லை. அவரது முக்கியமான வாதங்களுள் ஒன்று, “வரலாற்றின் முடிவு” போர்களின் எண்ணிக்கை குறைவால் குணாம்சப்படுத்தப்படும் என்பதாகும். ஹியூம், கான்ட், மற்றும் சும்பீட்டர் ஆகியோரிடமிருந்து கிடைத்த அறிவார்ந்த குறிப்புகளுடன், தாராளவாத ஜனநாயகம் சமாதானமாக இருந்தது என்று புக்குயாமா வாதிட்டார். அவர் தீர்க்கதரிசனமாக எடுத்துரைத்தார், “அப்படியானால் தாராளவாத ஜனநாயகமானது பெரிதும் வலுச்சண்டை மற்றும் வன்முறை போன்ற மனிதனின் இயற்கையான உட்தூண்டல்களை கட்டுப்படுத்துகிறது என்பது வாதமல்ல, மாறாக அது உட்தூண்டல்களையே அடிப்படைரீதியாக உருமாற்றி, ஏகாதிபத்தியத்திற்கான நோக்கத்தையே அகற்றிவிடுகிறது.”16

திருவாளர். புக்குயாமா கோளாறான படிகக்கல்லால் ஆன பந்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். RAND அமைப்பின் அந்த மேதை சோவியத் உலகுக்குப் பிந்தைய உலக சமாதானத்தை கற்பனை செய்து கொண்டிருந்த போதே, அமெரிக்கா உலகின் மேலாதிக்க சக்தியாக அதன் இடத்திற்கு ஒரு புதிய போட்டியாளர் தோன்றுவதை அனுமதிக்காது என்று பறைசாற்றியது. இந்த புதிய மூலோபாய கொள்கை, அமெரிக்க புவிசார் அரசியலின் ஒரு அத்தியாவசிய கருவியாக போரை நடைமுறையில் ஸ்தாபனமயப்படுத்த கோரியது. அதற்கிணங்க, 1990கள் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஒரு சீரான வெடிப்பைக் கண்டது. அந்த தசாப்தம் முதலில் ஈராக் படையெடுப்புடன் தொடங்கி, சேர்பியாவிற்கு எதிராக கொடூரமாக குண்டுகளை வீசுவதுடன் முடிந்தது.

செப்டம்பர் 11 இன் (9/11) துயரத்தின் இரகசிய தோற்றுவாய்கள் குறித்தும் மற்றும் செயல்படுத்தப்பட்டமை குறித்தும் ஒருபோதும் போதுமான அளவுக்கு விளக்கப்படாத நிலையில், அது புஷ் நிர்வாகத்தால் முடிவின்றி தொடர்ச்சியாக "பயங்கரவாதத்தின் மீதான போரை" விரிவுபடுத்தி அறிவிப்பதற்கு பற்றிக்கொள்ளப்பட்டது. ஒபாமாவின் கீழ், “பயங்கரவாதிகள்” மீதான வெறித்தனமான வேட்டை, கட்டுப்பாடற்ற புவிசார் அரசியல் வேட்கைகளுடன் ஒன்றிணைந்துள்ளது, அது ஒட்டுமொத்த பூமியையும் — வான்வெளியையும் கூட— அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு சாத்தியமான அரங்காக ஆக்கி உள்ளது. சோவியத்திற்குப் பின்னர் வெடித்தெழுந்த ஏகாதிபத்திய இராணுவவாதத்தால் தோற்றுவிக்கப்பட்ட குழப்பங்களில் கொடுக்கப்பட்ட கொடூரமான மனித விலை, இந்த உண்மையால் சுட்டிக் காட்டப்படுகிறது: அதாவது உலகில் அகதிகளின் எண்ணிக்கை இன்று (ஜூலை 2014) ஐம்பது மில்லியனைத் தாண்டிவிட்டது, இது இரண்டாம் உலக போர் முடிவுற்றதற்கு பின்னர் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.17 வாஷிங்டனின் கொலைவெறி கொண்ட அட்டூழியங்களின் பிரதான இலக்காக இருந்த மத்திய ஆசியாவின் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் அகதிகளின் எண்ணிக்கை, மொத்த அகதிகளின் எண்ணிக்கையில் நான்கு மில்லியனுக்கும் அதிகமாக கொண்டுள்ளன.

புக்குயாமா தாராளவாத ஜனநாயகத்தின் வெற்றியை அறிவித்ததற்கு பின்னர், அது ஒவ்வொரு இடத்திலும் அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவில் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது என்பது மேலும் மேலும் வெளிப்படையாகி உள்ளது. அமெரிக்க அரசு முன்பினும் அதிகமாக ஒரு கட்டுப்பாடில்லாத பூதாகரமான குணாம்சத்தை ஏற்றுள்ளது. உரிமைகள் சாசனம் வெற்றுருவாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசாங்கம் அதன் குடிமக்களின் மீது —அவர்களை உளவுபார்ப்பது மற்றும் அவர்களது வாழ்வின் மிகத்தனிப்பட்ட அம்சங்கள் பற்றிய தகவலைத் திரட்டுவது மட்டுமல்லாமல், மாறாக சட்ட விசாரணையின்றி அவர்களைக் கொல்வதற்கும் கூட— அதிகாரம் இருப்பதாக வலியுறுத்துகிறது, இவை ஒரு தலைமுறைக்கும் குறைவான காலத்தில் தோற்றப்பாட்டளவில் கூட எண்ணிப் பார்க்கவும் முடியாததாக இருந்தது. எரிக் ஹோப்ஸ்வாமின் “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” என்பதைப் பொறுத்தவரை, அதன் புத்திஜீவித ஆயுள்காலம் அனேகமாக அதன் ஆசிரியர் கற்பனை செய்து பார்த்திருக்கக்கூடிய காலத்தை விடவும் குறுகியதென நிரூபிக்கப்பட்டுவிட்டது. புதிய இருபத்தோராம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னரே, அது 1900களின் வரலாற்றுப் பிரச்சினைகளால் முழுவதும் ஆக்கிரமிக்கப்படும் என்பது வெளிப்படையாக இருந்தது. முன்பினும் அதிக தொலைதூர கடந்த காலத்திற்குள் செல்வதிலிருந்து விலகி, இருபதாம் நூற்றாண்டு ஒரு பெரும் கடன்களைக் கொண்ட பண்பைப் பெற்றுள்ளது, இதனை எப்படித் தீர்ப்பது என்பது ஒருவருக்கும் தெரியாது.

* * * * *

இந்த செலுத்தப்படமுடியா கடன், நிகழ்கால அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப தொடர்ச்சியாக வரலாற்றை திருத்தலுக்கான கோரிக்கைகளின் வடிவத்தில் வட்டியை கோருகின்றன. வரலாறு மீதான ஆய்வு, —அல்லது விடயங்களை அவற்றின் சரியான பெயரில் அழைப்பதானால், “போலி வரலாறு”— என்றுமிராத அளவு மிகவும் வெட்கங்கெட்ட வகையில், ஆளும் செல்வந்த மேற்தட்டுக்களின் நிதி மற்றும் அரசியல் நலன்களுக்கு கீழ்ப்பட்டுத்தப்பட்டு வருகிறது. வரலாற்றுக்கும் பிரச்சாரத்துக்கும் இடையிலான வேறுபாடு திட்டமிட்டமுறையில் துடைத்தழிக்கப்பட்டு வருகிறது.

வரலாறு பிரச்சாரமாக தரம் தாழ்த்தப்பட்டதன் விளைபொருளே, இருபதாம் நூற்றாண்டுக்கு இன்னும் ஒரு அணுகுமுறை உருவாக்கமாக இருந்துவருகிறது. “வரலாற்றின் முடிவு” மற்றும் “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” ஆகியவை “புனைந்துருவாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டுக்கு” வழிவிட்டு வருகின்றன. இந்தப் பள்ளியின் படைப்புகளில், வரலாற்று பதிவுகளை நசுக்குதல், திரித்தல் மற்றும் முற்றுமுழுதாக பொய்மைப்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும். இந்த செயற்திட்டத்தின் இலக்கு, இருபதாம் நூற்றாண்டு முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் மிகமோசமான குற்றங்களை மூடிமறைப்பதும், சட்டரீதியானதாக காட்டுவதுடன், மேலும் அதற்கு நேர்மாறாக, சர்வதேச சோசலிச இயக்கத்தின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் குற்றகரமாக மற்றும் தார்மீகரீதியில் நியாயமற்றதாக காட்டுவதாகும்.

வலதுசாரி வரலாற்று திருத்தல்வாதத்தின் இந்த நடைமுறையில், 1917 அக்டோபர் சோசலிசப் புரட்சியானது, இருபதாம் நூற்றாண்டின் பிரதான குற்றமாகவும், அதிலிருந்து தான் அடுத்தடுத்து — குறிப்பாக ஹிட்லரின் நாஜி ஆட்சி மற்றும் இனப்படுகொலைகள் உள்ளடங்கலாக— அனைத்து பயங்கரங்களும் தவிர்க்கவியலாமலும், சட்டபூர்வமாகவும் கூட வந்ததாக காட்டப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு முன்னர், இருபதாம் நூற்றாண்டின் வரலாறு குறித்த அத்தகைய ஒரு பூதாகரமான உருத்திரிப்புக்கள், குறிப்பாக ஜேர்மனியில், புத்திஜீவித வகையில் சட்டபூர்வமற்றதாகவும், இழிவுக்குரியதாகவும் கருதப்பட்டிருக்கலாம்.

1980களின் மத்தியிலும் மற்றும் 1990களின் தொடக்கத்திலும், ஜேர்மனி ஒரு புகழ்பெற்ற “வரலாற்றாளர்களின் விவாத” (Historikerstreit) அரங்காக இருந்தது. அது வரலாற்றாளர் ஏர்ன்ஸ்ட் நோல்ட்டவால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையால் தூண்டிவிடப்பட்டது. அக்டோபர் புரட்சி, 1918-21 இன் ரஷ்ய உள்நாட்டுப் போர் மற்றும் சோவியத் போல்ஷிவிசத்தின் காட்டுமிராண்டித்தனத்திற்கு, நாஜி ஆட்சியின் குற்றங்களை ஒரு புரிந்து கொள்ளத்தக்க பதிலிறுப்பாக பார்க்க வேண்டுமென அவர் வாதிட்டார். மூன்றாம் ஜேர்மன் குடியரசு குறித்து ஓர் அனுதாபத்துடன் கூடிய மறுமதிப்பீட்டிற்கு அழைப்புவிடுத்து, நோல்ட்ட எழுதுகையில், “ரஷ்ய புரட்சியின் போது நடந்த நிர்மூலமாக்கும் நடவடிக்கைகளால் உண்டான அச்சத்தின் பதில் நடவடிக்கையாக” நாஜி நடவடிக்கைகள் இருந்தன என்று எழுதினார். நோல்ட்ட தொடர்ந்தார்: “மூன்றாம் குடியரசை அரக்கத்தனமாக சித்திரிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாம் குடியரசு அனைத்து மனிததன்மையையும் மறுக்கும்போது வேண்டுமானால் நாம் அரக்கத்தனம் பற்றி பேசலாம், அந்த வார்த்தை மனிததன்மை கொண்ட அனைத்தும் பூரணமானதே என்பதை அர்த்தப்படுத்துகிறது, அவ்விதத்தில் அவர்கள் எல்லாருமே நல்லவர்களாகவும் இருக்க முடியாது அல்லது எல்லாருமே கெட்டவர்களாகவும் இருக்க முடியாது, அனைத்துமே வெளிச்சமும் இல்லை அல்லது அனைத்துமே இருளும் இல்லை."18

இரண்டாம் உலக போருக்குப் பின்னர், ஹிட்லரையும் மூன்றாம் குடியரசையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட, ஜேர்மன் கல்வித்துறை ஸ்தாபகத்தின் ஒரு உறுப்பினரது மிகவும் வெளிப்படையான முயற்சியை நோல்ட்டவின் எழுத்துக்கள் பிரதிநிதித்துவம் செய்தன. 1939இல் சியோனிச உலக காங்கிரசின் தலைவர் சைய்ம் வைய்ஸ்மான் (Chaim Weizmann), யூதர்கள் பிரிட்டனுடன் சேர்ந்து ஜேர்மனிக்கு எதிராகப் போராட வேண்டும்19 என்று அறிவித்திருந்ததன் அடிப்படையில், ஐரோப்பிய யூதர்கள் கொடூரமாக நடத்தப்பட்டதை நோல்ட்ட நியாயப்படுத்தவும் கூட செய்தார். 1992இல் மார்ட்டின் ஹெய்டெக்கரைக் குறித்து எழுதிய முற்றிலும் ஒருதலைபட்சமான சுயசரிதையில் நோல்ட்ட, அம்மெய்யியலாரின் யூத எதிர்ப்பையும், நாஜிசத்தை அவர் அரவணைத்துக் கொண்டதையும் நியாயப்படுத்தினார். “[கம்யூனிசத்துடன்] ஒப்பிடுகையில், தேசிய சோசலிசத்தின் ஜேர்மன் புரட்சியானது, அதன் இலக்குகளில் — அதாவது ஜேர்மனின் கௌரவம் மற்றும் சமத்துவத்திற்கான உரிமைகளை மீட்பதில் — கட்டுப்பாடானதும், சொற்ப அளவானதும் ஆகும், மேலும் அதன் வழிமுறைகளில் மிதமானதும் ஆகும்,” என்கிறார்.20

நோல்ட்டவின் எழுத்துக்கள் ஜேர்மன் மற்றும் அமெரிக்க கல்வித்துறை சார்ந்த சமூகத்தில் கோட்பாட்டுரீதியில் எதிர்ப்பைக் கண்டது. நாஜிசத்தின் சார்பில் வரலாற்றுரீதியாக வருத்தம் தெரிவிப்பதில் அவர் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டார், அத்துடன் ஓர் அறிஞர் என்ற வகையில் அவரது புகழ் சிதறுண்டு போனது. ஆனால், இன்று, நோல்ட்டவின் நட்சத்திரம் உதயமாகி உள்ளது. இப்போது அவர் தொன்னூற்றொரு வயதில் இருக்கிறார். அவரது காலம் வந்துவிட்டதாகவும், அவர் ஒரு தீர்க்கதரிசியாகவும் புகழப்படுகிறார். ஜேர்மனியில் மிகவும் பரந்தளவில் விநியோகமாகும் செய்தி இதழான Der Spiegel பிப்ரவரி 14, 2014 இதழில், வெளியிட்ட முகப்பு கட்டுரையில் நோல்ட்டவின் கருத்துக்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டது. ஸ்ராலினின் குற்றங்களுடன் ஒப்பிடுகையில் ஹிட்லரின் குற்றங்களின் அளவு குறைந்தே தோன்றுகிறது என்று Der Spiegel வலியுறுத்தியது. Der Spiegel இதழால் பேட்டி எடுக்கப்பட்ட வரலாற்றாளர்களுள், பேர்லினின் கௌரவமிக்க ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகள் துறையின் தலைவரான பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியும் ஒருவராவார். நோல்ட்டவின் கருத்துகளுடன் எப்போதும் ஒத்துப்போகும் பார்பெரோவ்ஸ்கி, பின்வருமாறு நோல்ட்டவை பாதுகாக்கிறார்: “ஹிட்லர் மனநோயாளியோ, அல்லது வக்கிரமானவரோ அல்ல. அவர் யூதர்களை நிர்மூலமாக்குவது குறித்து அவருடைய மேசையில் யாரும் பேசுவதை விரும்பவில்லை.”21 மூன்றாம் குடியரசின் குற்றங்களின் பிரத்யேக குணாம்சத்தையும் அதன் அளவினையும் குறைத்துக்காட்டும் நோல்ட்டவின் முயற்சிகளை நியாயப்படுத்தி பார்பெரோவ்ஸ்கி, “வரலாற்றுரீதியாக பேசினால், அவர் சரிதான்”22 என்றுரைத்தார்.

எதைக் குறித்து நோல்ட்ட சரியாக இருந்தார்? Der Spiegelஆல் பேட்டி காணப்பட்ட நோல்ட்ட கூறுகையில், பிரிட்டன் மற்றும் போலந்தின் விட்டுக்கொடுக்காத தன்மையால் ஹிட்லர் போருக்குள் தள்ளப்பட்டதாக வாதிட்டார். ஆனால் அது முற்றிலும் அவ்வாறு கிடையாது. “யூதர்கள் ‘"குலாக்கில்" அவர்களது சொந்த பங்கைக்’ ” கொண்டிருந்தார்கள், ஏனென்றால் போல்ஷிவிக்குகளில் சிலர் யூதர்களாக இருந்தார்கள் என்பதைக் குறித்துக் காட்டி நோல்ட்ட வலியுறுத்தியதாக Der Spiegel குறிப்பிட்டது. இந்த தர்க்கத்தின் அடிப்படையில், குறைந்தபட்சம் பகுதி அளவேனும் யூதர்களே அவுஸ்விட்ச்க்கு (நாஜி சித்திரவதைக் கூடங்கள் - Auschwitz) பொறுப்பாகி இருந்தனர் என்றாகிறது. நோல்ட்டவின் பட்டவர்த்தனமான தன்மையால் சிறிது பின்வாங்கிய Der Spiegel, அவரது நிலைப்பாட்டை எதிர்த்து, அது “நீண்டகாலமாக யூத-எதிர்ப்பாளர்களின் வாதமாக இருந்து வருகிறது”23 என ஒப்புக் கொண்டது. ஆனால் Der Spiegel இன் விமர்சனம் அந்த மட்டுக்குத்தான் இருந்தது. மேலும் நோல்ட்ட மற்றும் பார்பெரோவ்ஸ்கியின் கூற்றுக்கள் தோற்றப்பாட்டளவில் எந்த பொது எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லை. நோல்ட்ட மற்றும் பார்பெரோவ்ஸ்கியின் கூற்றுக்கள் பெரும்பாலும் சவால் செய்யப்படவில்லை என்ற உண்மையானது, புத்திஜீவிதத்தினது மட்டுமல்ல, மாறாக அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளினதும் ஒரு வெளிப்பாடாகும். கடந்த ஆண்டின் போது, அங்கே ஜேர்மன் இராணுவவாதத்தை புதுப்பிப்பதற்காக பொதுமக்களிடையே ஆதரவைக் கட்டி எழுப்பும் தீர்மானகரமான அரசியல் பிரச்சாரம் இருந்திருக்கிறது. அந்நாட்டின் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க்கால் முன்னெடுக்கப்பட்டதை, அதாவது, ஜேர்மன் மக்கள் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அவர்களது அமைதிவாதத்தை கடந்து வரவேண்டும் என்றும், ஜேர்மனிக்கு பெரும் வல்லரசு நலன்களைக் கொண்டிருக்க நியாயமுள்ளது என்றும், அவை அதன் எல்லைகளுக்கும் அப்பால் இராணுவ நடவடிக்கைகளை கோருகின்றன என்றும் முன்னணி பத்திரிகைகள் முறையிட்டன.

குறிப்பிடத்தக்க வகையில், ஜேர்மனி மீண்டுமொருமுறை “பூமியில் உரிய இடத்தை” பெற முனைய வேண்டுமென்ற அழைப்புக்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பது, நீண்டகாலத்திற்கு முன்னரே — அதாவது 1961இல் முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியின் நோக்கங்கள் (Griff nach der Weltmacht) எனும் தலைப்பில் வரலாற்றாளர் பிரிட்ஸ் பிஷ்ஷரின் அதிரவைத்த மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆய்வு பிரசுரிக்கப்பட்ட காலத்தின் போதே — ஸ்தாபிக்கப்பட்ட ஒருமித்த வரலாற்று கருத்தை, அதாவது 1914இல் உலக போர் வெடித்ததற்கு இரண்டாம் கெய்சர் வில்ஹெல்மின் முடியாட்சியே பிரதான பொறுப்பாகும் என்பதை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சியோடு பிணைந்துள்ளது. 1999இல் இறந்த பிஷ்ஷருக்கு, ஒரு அறிஞர் என்ற வகையில் அவரது மறைவிற்குப் பிந்தைய புகழை அழிக்கும் நோக்கில், இப்போது அவர் ஒரு சளைக்காத தாக்குதல்களின் இலக்கில் வைக்கப்பட்டுள்ளார்.

உக்ரேனில் நிலவி வரும் நெருக்கடி, சமகாலத்திய புவிசார் அரசியல் நிகழ்ச்சிநிரல்களுக்கு வரலாறு அடிபணிய செய்யப்படுவதை எடுத்துக்காட்டுகிறது. பாசிச அமைப்புக்கள் பிரதான பங்காற்றிய பிப்ரவரி 2014 வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை, வரலாற்றுச் சான்றை படுமோசமாக பொய்ம்மைப்படுத்துவதன் மூலமாக, ஒரு ஜனநாயகப் புரட்சியாக காட்டுவதற்கு அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் உதவி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிப்போக்கு இத்தொகுப்பில் உள்ள கடைசிக்கு முந்தைய கட்டுரையின் கருப்பொருளாகும்.

* * * * *

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து செய்யப்பட்ட பொய்மைப்படுத்தல்கள் மற்றும் திரித்தல்களுக்கு எதிராக, வரலாற்று உண்மையை பாதுகாப்பதில் கடந்த இருபது ஆண்டுகளாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் நடத்தப்பட்ட போராட்டத்தினது வரலாற்றுப் பதிவின் ஒரு பகுதியை இத்தொகுதி கொண்டுள்ளது. இந்த போராட்டத்திற்காகத்தான் ட்ரொட்ஸ்கிச இயக்கம் நன்கு தயாரிக்கப்பட்டது. 1923இல் இடது எதிர்ப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் இருந்து, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பொய்களுக்கு எதிராக அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்தையும் வரலாற்று சான்றுகளையும் பாதுகாப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தார்கள். ட்ரொட்ஸ்கியை லெனினது கடும் எதிரியாய் சித்தரிக்கும் நோக்கத்துடன், ரஷ்ய சமூக ஜனநாயக இயக்கத்திற்குள்ளே எழுந்த 1917க்கு முந்தைய கன்னைப் போராட்டங்களை திரித்து, அக்டோபர் புரட்சியின் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்திற்கு எதிரான அதிகாரத்துவ பிற்போக்குத்தனம் 1920களின் ஆரம்பத்தில் தொடங்கியது. பின்னர், ட்ரொட்ஸ்கியின் அரசியல் நிலைப்பாடு, அவரை ரஷ்ய விவசாயிகளின் கொடூரமான எதிரியாக காட்டுவதற்கு தவறாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. 1927இல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ட்ரொட்ஸ்கி வெளியேற்றப்பட்டதன் பின்னரும், 1929இல் சோவியத் ஒன்றியத்திலிருந்து அவர் நாடுகடத்தப்பட்டதன் பின்னரும், சோவியத் வரலாற்றில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் ஸ்ராலினிச ஆட்சியின் அரசியல் நலன்களுக்கேற்ப பொய்மைப்படுத்தப்பட்டது. சேர்ஜி ஐஸன்ஸ்டைன் கூட 1927இல் தயாரிக்கப்பட்ட அவரது சிறந்த திரைப்படைப்பான உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் இல், ட்ரொட்ஸ்கியின் உருவம் எதுவும் இல்லாத அளவுக்கு மீள்வெட்டு செய்ய வேண்டி இருந்தது, சொல்லப்போனால் அந்த மனிதர்தான் பெட்ரோகிராட்டில் 1917 அக்டோபர் எழுச்சியை ஒழுங்கு செய்தவரும் அதற்குத் தலைமை தாங்கியவரும் ஆவார்.

ட்ரொட்ஸ்கியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கும், அக்டோபர் புரட்சி அடிப்படையாகக் கொண்டிருந்த சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தை மறுப்பதற்குமாக, 1920களின் பொய்களும், பொய்மைப்படுத்தல்களும், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை பெறுவதற்கும், கம்யூனிஸ்ட் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கும் மற்றும் சோவியத் ஒன்றியத்தை தோற்றுவிப்பதற்கும் தலைமையேற்றிருந்த மார்க்சிஸ்டுகளின் தலைமுறையை பெரியளவில் களையெடுப்பதற்காக, 1930களில் ஸ்ராலினால் போலியாக-சட்ட மூடுதிரையாக பயன்படுத்தப்பட்ட மாஸ்கோ விசாரணைகளது ஜோடிப்புகளுக்குள் ஆக்கிரமித்திருந்தன. ட்ரொட்ஸ்கி விளக்கியவாறு, வரலாறு பற்றிய பொய்கள், அரசியல் பிற்போக்குத்தனத்தை சித்தாந்தரீதியில் உறுதியாக்குவதில் ஒரு முக்கிய பாத்திரமாக சேவை செய்கின்றன. நீதிமன்ற போலி வழக்குகளாயினும், அரசு மற்றும் செய்தி ஊடக பிரச்சாரமாயினும், கொள்கையற்ற குட்டிமுதலாளித்துவ கல்வியாளர்களால் வரலாற்றுச் சான்றுகள் திரிக்கப்படுவதாயினும், அவற்றின் நோக்கம், ஆளும் செல்வந்த தட்டுக்களின் குற்றங்களை நியாயப்படுத்துவதும், மக்கள் கருத்தை தடம்புரளச் செய்வதும், முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு பலம் வாய்ந்த மற்றும் புரட்சிகர போராட்டத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவைப்படும் அறிவு மற்றும் தகவல்களை கிடைக்கவிடாமல் செய்வதுமாகும். இவ்வாறு வரலாற்று பொய்மைப்படுத்தல்களுக்கு எதிரான போராட்டமானது, அரசியல் வேலையின் விருப்பத்தேர்வோ அல்லது இரண்டாந்தரமானதோ இல்லை. முக்கியமாக அக்டோபர் புரட்சி மற்றும் இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச சோசலிச இயக்கத்தின் அனுபவங்கள் தொடர்பான வரலாற்று உண்மையைப் பாதுகாப்பது, தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச நனவின் மறுமலர்ச்சிக்கு அத்தியாவசியமானதாகும்.

சோவியத் ஒன்றியத்தின் இறுதிக் காலங்களில், ரஷ்ய புரட்சியின் வரலாறு குறித்து நாடு முழுவதும் ஒரு பெரும் ஆர்வம் மேலோங்கி இருந்தது. ஒடுக்குமுறையின் பல தசாப்தங்களுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி பற்றிய கட்டுரைகளும் மற்றும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களும் பரவலாக காணக் கிடைக்கலாயின. இந்த அபிவிருத்தியானது சோவியத் தலைமைக்குள் கவலையை எழுப்பியது. சந்தைப் பொருளாதாரத்திற்கு திரும்புவதுதான் ஒரே முன்னேறும் வழி என்று பொதுமக்களை நம்பவைக்க விழைந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பிடிவாதமான முதலாளித்துவ சார்பு நோக்குநிலைக்கு மாறாக, ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களும், ஸ்ராலினிசத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் போராட்டத்தின் வரலாற்று சான்றுகளும் அதிகாரத்துவ ஆட்சிக்கு ஒரு சோசலிச மாற்றீடு சாத்தியமாக இருந்தது என்பதைத் தெளிவுபடுத்தியது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் மூலமாக நடத்த எத்தனித்த கிரெம்ளினின் முக்கிய நோக்கங்களில், தொழிலாள வர்க்கத்துள் ஒரு சோசலிச முன்னோக்கு மீள்எழுச்சி பெறுவதை முன்கூட்டியே முறியடிப்பதும் ஒன்றாக இருந்தது. இவ்விதத்தில், அந்த கலைப்பானது வரலாற்று பொய்ம்மைப்படுத்தலின் ஒரு புதிய பிரச்சாரத்துடன் சேர்ந்து, சோவியத் ஒன்றியம் ஆரம்பத்திலிருந்தே ஒரு வீண் முயற்சியாக இருந்தது என்ற வாதத்தை மையப்படுத்தி இருந்தது. இந்த புதிய “சோவியத்திற்குப் பிந்தைய வரலாற்றுப் பொய்ம்மைப்படுத்தல் பள்ளியின்” தோற்றம், புக்குயாமா, மாலியா மற்றும் ஹோப்ஸ்வாம் எழுத்துக்களைப் போலவே, அதே வரைகோட்டில் நகர்ந்தது. இவ் அனைத்து படைப்புக்களும், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது தவிர்க்கமுடியாமல் அக்டோபர் புரட்சியிலிருந்தே வந்தது, வேறெந்த விளைவுக்கும் அங்கே சாத்தியம் இருக்கவில்லை என்ற அடிப்படை செய்தியை நம்பவைப்பதாகும். ஸ்ராலினிசம் என்பது அக்டோபர் புரட்சியின் நெறிபிறழ்ந்த ஒன்றல்ல, மாறாக அதன் முக்கியமான விளைவாகும். அங்கே மாற்றீடு எதுவும் இருக்கவில்லை என்பதை அடிப்படை சேதியாக வெளியிட்டன.

“முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” என்ற கருத்துருவின் அபிவிருத்தியினூடாக, அங்கே ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இருந்ததை வரலாற்றுச்சான்று திட்டவட்டமாக நிரூபிக்கிறது என்பதை இந்நூலில் உள்ள விரிவுரைகளும், கட்டுரைகளும் வலியுறுத்துகின்றன. ஸ்ராலினிசத்திற்கு மாற்றீடுகள் இருந்ததாக எவ்விதத்திலும் கருதுவது எதிரிடை உண்மைகளின் வரலாற்றில் அர்த்தமற்றதும், புத்திஜீவிதரீதியில் நியாயமற்ற நடைமுறையாகவும் இருக்கிறதென்ற ஹோப்ஸ்வாமின் வாதத்தை நான் சவால் செய்திருக்கிறேன். “என்ன நடந்தது என்பதிலிருந்து தான் வரலாறை ஆரம்பிக்க வேண்டுமென்றும், ஏனையவை எல்லாம் ஊகங்களே,” என்று அவர் எழுதினார்.24

நான் இந்த குறிப்பட்ட பகுதியில் கவனம் செலுத்துமாறு அழைப்புவிடுக்கிறேன், ஏனெனில் அது பரந்தளவில் வஞ்சகமாக திரிக்கப்பட்டுள்ள சோவியத் ஒன்றிய வரலாற்றுக்கு ஓர் அணுகுமுறையை முன்மாதிரியாக எடுத்துக்காட்டுகிறது. ஹோப்ஸ்வாம் வரலாற்று ஆவணங்களை நேரடியாக பொய்மைப்படுத்துவதில் தங்கியிருக்கவில்லை. ஆனால் முக்கியமான உண்மைகளை மறைத்தும், ஒரு முழுமையற்ற சான்றுகளை முன்வைத்தும் அவர் வரலாற்று உண்மைகளுக்கு எதிராக கேடிழைக்கிறார். ஹோப்ஸ்வாமின் தவிர்த்தல்கள் வரலாற்றைத் திரித்து கூறுவதற்கு பங்களிப்பு செய்கின்றன.

பெரும்பாலான விரிவுரைகள் மற்றும் கட்டுரைகளில், துரதிரஷ்டவசமாக தவிர்த்தல்கள் மட்டுமின்றி, வரலாற்று உண்மைகளின் அப்பட்டமாக திரித்தல்களின் பொருள்பற்றி பேசவேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். ஆனால் தங்களைத்தாங்களே வரலாற்றாளர்கள் என்று அழைத்துக் கொண்டு, கண்ணுக்கு முன்னாலேயே காகிதத்தில் உண்மையின்மையை அறிக்கையாக எழுதி, அவ்விதத்தில் வருங்கால சந்ததியினருக்கு அவர்களின் புத்திஜீவித நேர்மையின்மையின் அடையாளத்தை விட்டுச் செல்லும் சிலரின் ஆணவத்தால் திகைப்பின்றி இருக்க முடியாத தருணங்களும் அங்கே இருந்தன.

பொய்ம்மைப்படுத்தல் நடைமுறைக்கு பல்வேறு பின்நவீனத்துவ பள்ளிகளும் துணைபோயுள்ளன, அவற்றின் வரலாற்று எழுத்துக்கள் மற்றும் ஆய்வுகளின் திரண்ட தாக்கமும் பேரழிவுகர வகைப்பட்டதாக இருந்துள்ளது. மெய்யியலின் இந்த பிற்போக்குத்தன்மைக்கும் வரலாற்று பொய்மைப்படுத்தலுக்கும் இடையிலான தொடர்பு மிகைப்படுத்திக் கூற முடியாதது. மிஷேல் ஃபூக்கோவின் (Michel Foucault) மாணவரான பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி எழுத்துக்களுக்கு மீண்டும் வருவோம், அவர் அவரது எழுத்துகளை வழிநடத்தும் வழிமுறையியலை அவரது வரலாற்றின் அர்த்தம் [Der Sinn der Geschichte] எனும் நூலில் பின்வருமாறு விவரித்திருந்தார்:

யதார்த்தத்தில் வரலாற்றாளருக்கு கடந்தகாலத்துடன் எதுவுமே செய்வதற்கில்லை, மாறாக அதற்கு பொருள்விளக்கம் அளிப்பதுடன்தான் அவர் தொடர்புபடுகின்றார். கடந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் கூற்றுக்களிலிருந்து அவர் எதை யதார்த்தம் என்று அழைக்கிறாரோ, அதிலிருந்து அவரால் பிரிந்துபோக முடியாது. ஆகவே அந்த யதார்த்தம் உருவாக்கும் நனவுக்கு அப்பாற்பட்டு அங்கே எந்த யதார்த்தமும் இருப்பதில்லை. ஆவணங்களின் வழியாக நம்முன் கொண்டுவரப்பட்ட சம்பவங்களை மறுநிர்மாணம் செய்து கொள்வதன் மூலமாக, ரஷ்ய புரட்சி உண்மையில் என்னவாக இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்துருவிலிருந்து நாம் நம்மை கட்டாயம் விடுவித்துக் கொள்ள வேண்டும். அதனது சித்தரிப்பு இல்லாமல் அங்கே யதார்த்தம் என்பது இல்லை. வரலாற்றாளராக இருப்பதென்பதன் அர்த்தம், ரோஜே சார்த்தியேரின் வார்த்தைகளைப் பயன்படுத்துவதெனில், சித்தரிப்புக்களின் உலகை ஆய்வு செய்வதாகும்.25 (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

புறநிலைரீதியாக இருந்த கடந்தகாலத்தின் உண்மையான மறுநிர்மாணமாக விளங்கும் வரலாற்றாய்வியல் (Historiography) மீதான மறுப்பை நியாயப்படுத்த, பார்பெரோவ்ஸ்கி கருத்துவாத ஆன்மீக நித்தியவாதத்தின் (Solipsism) அதிதீவிர கருத்தைக் கொணர்கிறார் — அதாவது சிந்தனைக்கு அப்பாற்பட்டு மற்றும் சிந்தனைக்கு வெளியே யதார்த்தம் என்று ஒன்றும் அங்கே இல்லை என்பதாகும். வரலாறு ஓர் அகநிலைக் கட்டமைப்பாக மட்டுமே நிலவுகிறது என்று அவர் நமக்கு கூறுகிறார். எந்த புறநிலை வரலாற்று உண்மையாலும், ஒருகாலத்தில் நிஜமாக நிலவிய சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளை உள்ளவாறே துல்லியமாக சித்தரிக்க முடியாது. அந்த வகையான வரலாற்று யதார்த்தத்தில் பார்பெரோவ்ஸ்கிக்கு எந்த அக்கறையும் இல்லை. "வரலாற்றாளரால் நிர்மாணிக்கப்படும் மூலக்கூற்றுக்கு வரலாறு சேவை செய்யுமானால், அது உண்மையாகி விடுகிறது.”26 என்று பார்பெரோவ்ஸ்கி அறிவிக்கிறார். வரலாற்றின் அடித்தளத்தைத் தகர்க்கும் இந்த வேலை, அகநிலைரீதியாக தீட்டப்பட்ட நிகழ்ச்சிநிரல்களுக்கு சேவை செய்வதற்காக எழுதப்படும் மோசடியான பொருள்விளக்கங்களை மன்னிக்கிறது — சான்றாக, ஹிட்லரின் குற்றகரமான ஆட்சிக்கு வழங்கும் மறுவாழ்வளிப்பை கூறலாம். ஏர்ன்ஸ்ட் நோல்ட்ட போன்ற சக்திகளுடன் பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி சேர்ந்து கொண்டதொன்றும் தற்செயலானதல்ல.

ஜோன்-பிரான்சுவா லியோத்தார், ரிச்சார்ட் ரோர்ட்டி (Richard Rorty) மற்றும் ஃபூக்கோ போன்ற மெய்யியல்வாத பிற்போக்காளர்களால், “முதலாளித்துவ சிந்தனையின் அடித்தளத்திலிந்து”27 தோண்டியெடுக்கப்பட்ட கருத்துருக்களுடன் வேலை செய்து, இருபதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்களிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்திலும் எவ்வாறு அத்தகைய ஆதாரமற்ற மற்றும் அபாயகரமான செல்வாக்கை அவர்களால் பெற முடிந்தது என்பதைப் புரிந்து கொள்ள எதிர்கால தலைமுறைகள் போராட வேண்டி இருக்கும். மெய்யியல் பிரச்சினைகளை அலசும் இந்த தொகுதியில் உள்ள விரிவுரைகளும் கட்டுரைகளும், பின்நவீனத்துவ கொள்ளை நோயின் அரசியல் மற்றும் சமூக அவலத்தைப் புரிந்து கொள்வதற்கு எதிர்கால அறிஞர்களுக்கு உதவுமானால் நான் மிகவும் மகிழ்வேன்.

இந்நூலில் எடுத்தாளப்படும் விவாதமுறை, நாம் வாழும் காலம், கருப்பொருள் இரண்டுக்கும் பொருத்தமுடையதாக இருக்குமென நான் நம்புகிறேன். வரலாறு ஒரு போர்க்களமாகி உள்ளது. "இறந்துபோன அனைத்து தலைமுறைகளதும் பாரம்பரியம், வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மூளையை அசுரத்தனமாக சிந்திக்க வைக்கிறது”28 என்று மார்க்ஸ் எழுதினார். புதிய நூற்றாண்டின் பதினைந்து ஆண்டுகளில், அரசியல்வாதிகளும் சரி வரலாற்றாளர்களும் சரி, கடைசி ஒன்றின் பேரச்சத்திலிருந்து அவர்களால் தன்னைத்தானே விடுவித்துகொள்ள முடியவில்லை. இருபத்தோராம் நூற்றாண்டின் முன்பினும் கூட அதிகமாகி வரும் மோதல்களும் நெருக்கடிகளும், இருபதாம் நூற்றாண்டின் வரலாறு மீதான சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கின்றன. தற்கால அரசியல் போராட்டங்கள், வரலாற்றுப் பிரச்சினைகளை தூண்டுகின்ற நிலையில், அத்தகைய பிரச்சினைகளை கையாள்வது மேலும் மேலும் அரசியல் பரிசீலனைகளால் வெளிப்படையாக தீர்மானிக்கப்படுகின்றன. நிகழ்காலத்திய அரசியல் பிற்போக்குத்தன நலனுக்காக கடந்தகாலம் பொய்மைப்படுத்தப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டு வரலாற்றின் மிகவும் பளிச்சிடும் பொய்ம்மைப்படுத்தல்களில் குறைந்தபட்சம் சிலவற்றையாவது அம்பலப்படுத்துவதன் மூலம், எதிர்கால புரட்சிகர போராட்டங்களில் இந்த நூல் ஒரு ஆயுதமாக விளங்குமென்பது இதன் ஆசிரியரின் நம்பிக்கையாகும்.

* * * * *

இந்த நூலில் விடயங்கள், சில விதிவிலக்குகளுடன் மட்டும், காலவரிசைப்பட்டியலின் படி முன்வைக்கப்பட்டுள்ளன. இது இரண்டு தசாப்த கால வரலாற்று பிரச்சினைகள் மீது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைகளது பரிணாமத்தைப் பின்பற்றுவதற்கு வாசகரை அனுமதிக்கும். இயல்பாக தொகுக்கும் முறையின் ஒரு பகுதியாக, விரிவுரை கூடங்களில் அவர்கள் செவியுற்ற நீண்ட வாசகங்களை, அச்சு பக்கங்களில் வாசிப்புக்கேற்ப கொண்டு வர உதவியாக மொழிநடையில் மாற்றங்களைச் செய்துள்ளேன்.

இந்த விரிவுரைகளும் கட்டுரைகளும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சர்வதேச அளவிலும் மற்றும் அமெரிக்காவிற்குள்ளும் உள்ள சக-சிந்தனையாளர்கள் மற்றும் தோழர்களிடமிருந்து நான் பெற்ற ஆழ்ந்த ஒத்துழைப்பின் பலன்களைப் பிரதிபலிக்கின்றன. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் [Partei für Soziale Gleichheit] தேசிய செயலாளர் உல்ரிச் ரிப்பேர்ட்டுடன், நாற்பதாண்டுகளுக்கு அண்மித்தளவில், ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தின் துன்பகரமான மற்றும் சித்திரவதைக்குட்பட்ட வரலாறு தொடர்பாக கலந்துரையாடி, வேலைகளை செய்துள்ளேன். பிரெடெரிக் S. சோட் அளித்த உதவியை நான் பெரிதும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். ரஷ்யா மற்றும் சோவியத் வரலாறு பற்றிய அவரது அறிவு, ஒரு புத்திஜீவித வளமாகும், அதை நான் பல ஆண்டுகளாக பெற்றுள்ளேன். மெஹ்ரிங் பதிப்பகத்தின் அயராத ஆசிரியர் குழுவிற்கும், மற்றும் முற்றிலும் வேறுவேறு பகுதிகளிலிருந்து கிடைத்த குறிப்புகளை முறையாக தொகுதியாக ஒன்றிணைத்து பொருத்துவதற்கு உதவிய ஜீனி கூப்பர் மற்றும் ஹெதர் ஜோவ்சே ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொகுதியில் உள்ள பல விரிவுரைகள் மற்றும் கட்டுரைகளை, அவை வரைவுப் படிகளாக இருந்ததிலிருந்து இறுதி வடிவத்திற்கு வரும் வரையில், அவற்றில் கவனம் எடுத்து மீள்பார்வை செய்ததற்காக ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் லின்டா டெனென்பாமிற்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.

இறுதியாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்று வேலையின் அபிவிருத்தியில், மறைந்த சோவியத் வரலாற்றாளரும் சமூகவியலாளருமான வாடிம் ரொகோவின் வகித்த பாத்திரத்தைக் கவனமெடுக்குமாறு நான் அழைத்தாக வேண்டும். 1993 பெப்ரவரியில் கியேவ் நகரில் முதன்முறையாக நாங்கள் சந்தித்தோம். 1923க்கும் 1927க்கும் இடையே ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிராக இடது எதிர்ப்பால் நடத்தப்பட்ட போராட்டத்தை, அங்கே ஒரு மாற்றீடு இருந்ததா? என்று தலைப்பிட்ட ஓர் ஆய்வை அப்போதுதான் அவர் முடித்திருந்தார். அங்கேயும் மற்றும் மாஸ்கோவிலும் அவருடன் நடந்த கலந்துரையாடல்களின் விளைவாக அவர், “சோவியத்திற்குப் பிந்தைய வரலாற்றுப் பொய்மைப்படுத்தலின் பள்ளிக்கு எதிராக சர்வதேச எதிர்த்தாக்குதல்” ஒன்றை அபிவிருத்தி செய்வதில் அனைத்துலகக் குழுவுடன் வேலை செய்வதற்கு தீர்மானித்தார். 1994இல் மரணகரமான புற்றுநோயால் பீடிக்கப்பட்டு இருந்ததற்கு இடையிலும், அனைத்துலக குழுவால் உலகமெங்கும் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் அவர் உரையாற்றினார். ஸ்ராலினிசத்திற்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டம் பற்றிய வாடிமின் ஆய்வு, ஏழு தொகுதிகளாக வளர்ந்தது. 1991க்குப் பிந்தைய சோவியத் ஒன்றியம் பற்றி எழுதப்பட்ட வரலாற்று இலக்கியத்தின் அந்த அற்புத படைப்புக்கு —மொழி நடைக்கும் கருத்தாழத்திற்கும்— தொலை நிகராக இதுவரையில் இன்னொரு நூல் எழுதப்படவில்லை.

1998 ஜனவரியில் நான் இறுதியாக வாடிமுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டேன். சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச பள்ளியில் உரையாற்றுவதற்காக அவர் அவரது துணைவியார் காலியாவுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு வந்திருந்தார். அவரது விரிவுரையின் முடிவில், வாடிம் அவரது வரலாற்றுப் படைப்பின் இறுதித் தொகுதியை அனைத்துலகக் குழுவிற்கு அர்ப்பணிப்பதாக கூறினார். எட்டு மாதங்கள் கழித்து, 1998 செப்டம்பர் 18 அன்று, வாடிம் அவரது அறுபத்தோராம் வயதில் மாஸ்கோவில் காலமானார். வரலாற்று உண்மைக்காக போராடிய அந்த போராளியின் நினைவாக, நான் இந்த தொகுதியை அர்ப்பணிக்கிறேன்.

டேவிட் நோர்த்
ஜூலை 12, 2014

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலைப் பெற, இன்றே மெஹ்ரிங் நூலகத்தைப் பார்வையிடுங்கள்.

பின்குறிப்புகள்:

1 The National Interest 19 (Summer 1989), p. 3.

2 Francis Fukuyama, The End of History and the Last Man (New York: The Free Press, 1992), p. 46.

3 Ibid., p. 299.

4 Martin Malia, The Soviet Tragedy (New York: The Free Press, 1994), p. 514.

5 Ibid.

6 Ibid., p. 225.

7 Ibid., p. 520.

8 Eric Hobsbawm, The Age of Extremes (New York: Pantheon Books, 1994), p. 5.

9 Ibid., p. 8.

10 Ibid., p. 585.

11 J.A. Hobson, Imperialism: A Study (Cambridge: Cambridge University Press, 2010), p. 113.

12 Rudolf Hilferding, Finance Capital (London: Routledge & Kegan Paul, 1981), p. 368.

13 V.I. Lenin, Collected Works, Volume 23 (Moscow: Progress Publishers, 1964), pp. 105–106.

14 Leon Trotsky, The War and the International (Colombo: A Young Socialist Publication, June 1971), pp. vii-viii.

15 Rosa Luxemburg, The Junius Pamphlet (Colombo: Young Socialist Pamphlet, undated), p. 17.

16 The End of History and the Last Man, p. 263.

17 Available: http://www.bbc.com/news/world-27921938.

18 “Between Historical Legend and Revisionism? The Third Reich in the Perspective of 1980,” by Ernst Nolte in Forever In the Shadow of Hitler?, James Knowlton, ed., Truett Cates, tr. (Amherst, NY: Humanity Books, 1993), pp. 14–15.

19 Cited by Geoffrey Eley in “Nazism, Politics and the Image of the Past: Thoughts on the West German Historikerstreit 1986–1987,” Past and Present, No. 121, November, 1988, p. 175.

20 Martin Heidegger: Politik und Geschichte im Leben und Denken by Ernst Nolte, cited in a review by Richard Wolin, The American Historical Review Volume 98, No. 4, Oct. 1993, p. 1278.

21 Available: http://www.spiegel.de/international/world/questions-of-culpability-in-wwi-still-divide-german-historians-a-953173.html

22 Ibid.

23 Ibid.

24 Eric Hobsbawm, On History (London: Weidenfeld & Nicolson, 1997), p. 249.

25 Jörg Baberowski, Der Sinn der Geschichte: Geschichtstheorien von Hegel bis Foucault (Munchen: C.H. Beck, 2005), (translation by D. North), p. 22.

26 Ibid., p. 9.

27 The phrase was coined by G.V. Plekhanov.

28 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 11 (New York: International Publishers, 1979), p. 103.