ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Appendix 1
A Letter to The New York Times Book Review

The New York Times Book Review chose not to publish the following letter addressed to the editor of its Book Review section

பிற்சேர்க்கை 1

நியூ யோர்க் டைம்ஸ் நூல் மதிப்புரைக்கு ஒரு கடிதம்

நியூ யோர்க் டைம்ஸ் நூல் மதிப்புரைப் பகுதி ஆசிரியருக்கு விடுக்கப்பட்ட பின்வரும் கடிதம், அதன் நூல் மதிப்புரைப் பகுதியில் பிரசுரிக்க தேர்ந்தெடுக்கப்படவில்லை

March 26, 1996

Editor
The New York Times Book Review
229 West 43rd Street
New York, N.Y. 10036

அன்புடையீர்:

மறைந்த டிமித்ரி வோல்கொகோனொவினது (Dmitri Volkogonov) லியோன் ட்ரொட்ஸ்கியின் சுயசரிதம் குறித்து மதிப்புரை செய்வதற்கு ரிச்சார்ட் பைப்ஸை தேர்வு செய்தமை, நியூ யோர்க் டைம்ஸின் பக்கங்களில் அந்நூலைக் குறித்த எவ்விதமான விமர்சனரீதியிலான திறனாய்வையும் இல்லாமல் செய்துவிட்டது. ரஷ்ய புரட்சியைக் குறித்த பல்வேறு ஒருதலைபட்சமான படைப்புகளின் ஆசிரியரான பேராசிரியர் பைப்ஸ், அத்தகைய எழுத்துக்களில் நேர்மையான உண்மைகளை அவற்றை அவரது சொந்த வலதுசாரி சித்தாந்த விருப்புவெறுப்புகளுக்கு அடிபணிய செய்துள்ளார் என்ற நிலையில், அவர் ஜெனரல் வோல்கொகோனொவ்வின் எழுத்துக்களில் இருந்த அதேபோன்றவொரு போக்கை ஒரு பிரச்சினையாக எடுத்துக்காட்டுவார் என்று அரிதாகவே எதிர்பார்க்க முடியும். எவ்வாறிருந்த போதினும், வோல்கொகோனொவின் நூலைக் குறித்து மனசாட்சியோடு மீளாய்வு செய்த பல மதிப்புரையாளர்கள் குறிப்பிட்டுள்ள எண்ணிறைந்த உண்மையான பிழைகளை, பைப்ஸ் ஏதோ வெறுமனே கவனியாமல் விட்டுவிட்டார் என்பதல்ல. மாறாக, பைப்ஸ் அவரது மதிப்புரையைக் கொண்டு வோல்கொகோனொவின் பொய்ம்மைகளுக்கு கூடுதலாக வலுசேர்க்கவும் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுப் புகழை இழிவுபடுத்தவும் கருதி இருந்தார் என்பதாக தெரிகிறது. இம்முயற்சியின் வெளிப்பாடுகள் பெருமளவில் அதிர்ச்சியூட்டுகின்றன. பனிப்போர் சோவியத்தியலின் (Sovietology) மிக முக்கிய வலதுசாரி பிரதிநிதியான பைப்ஸ், முதலில் முன்னுக்குப்பின் முரணாக தோன்றக்கூடிய ஒன்றில், ட்ரொட்ஸ்கியின் பிம்பத்தை சோவியத் பாடப் புத்தகத்திலிருந்து களவெடுத்து பிரசுரித்ததை போல சித்தரிக்கிறார்.

1920களில் இருந்து ட்ரொட்ஸ்கியின் ஸ்ராலினிச எதிராளிகளால் அவருக்கு எதிராக கட்டவிழத்து விடப்பட்ட தாக்குதல்களை நினைவூட்டும் வகையில், ட்ரொட்ஸ்கியை "மிதமிஞ்சிய வீண்பெருமை கொண்டவராக, திமிர் பிடித்தவராக, பெரும்பாலும் மூர்க்கமானவராக" மற்றும் "போல்ஷிவிக் கட்சி அதன் அங்கத்தவர்களிடம் கோரிய கட்டுப்பாட்டுடன் பலருடன் இணைந்து பணியாற்றுவது போன்றதற்கு அடிப்படையாகவே தகமையற்றவராக" பைப்ஸ் அவரை வர்ணித்துள்ளார். "போல்ஷிவிக் கட்சி அதன் அங்கத்தவர்களிடம் கோரிய ஒழுங்குமுறைப்பட்ட குழுவேலை மாதிரியான ஒன்றுக்கு அமைப்புரீதியில் தகைமையற்றவராக" பைப்ஸ் அவரை வர்ணித்துள்ளார். அக்டோபர் புரட்சியின் தலைமை ஒருங்கமைப்பாளராக, ஈடிணையற்ற ஒரு வெகுஜனத் தலைவராக, செம்படையின் ஸ்தாபகர் மற்றும் தளபதியாக விளங்கிய ஒரு மனிதரின் அனைத்து பிரசித்திப்பெற்ற நினைவுகளையும் துடைத்தழிக்க தீர்மானகரமாக இருந்த ஓர் ஆட்சியால், எண்ணிலடங்கா சோவியத் வெளியீடுகளில் ட்ரொட்ஸ்கி இவ்விதத்தில்தான் சித்தரிக்கப்பட்டார், கட்டுப்பாடுடன் பலருடன் இணைந்து பணியாற்றுவதற்கு அவருக்கிருந்த மதிப்பு, கட்டுக்கதை ஆக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கியின் தனிமனிதவியல்பு மீதான இத்தகைய ஸ்ராலினிச பாணியிலான தாக்குதல்களை பைப்ஸ் ஏன் மீண்டும்மீண்டும் செய்கிறார் என்றொருவர் கேட்க வேண்டும். அனைத்தினும் மேலாக, ட்ரொட்ஸ்கியின் “வீண்பெருமை” மற்றும் “இணைந்து பணியாற்றுவது” மீதிருந்த விரோதம் குறித்து ஸ்ராலினிஸ்டுகள் குறிப்பிடும்போது அவர்கள் எண்ணத்தில் என்ன இருந்ததென்றால், ஆளும் அதிகாரத்துவத்தின் கோரிக்கைகளுக்கு, அவரது புரட்சிகர கோட்பாடுகளை கீழ்படுத்த அவர் விட்டுக் கொடுக்காமல் எதிர்த்து வந்தார் என்பதுதான். இந்த விதமான வளைந்து கொடுக்காத தன்மையை பைப்ஸ் ஏன் அந்தளவுக்கு வெறுப்போடு காண்கிறார்?

பின்னர் பைப்ஸ் நேரடியாகவே வரலாற்று உண்மைகளை தவறாக பிரதிநிதித்துவம் செய்யச் செல்கிறார். ட்ரொட்ஸ்கியை நோக்கிய லெனின் மனோபாவத்தை குறிப்பிடுகையில், “அவரது அரசியல் மற்றும் நிர்வாக திறமைகள் மீது அவர் [லெனின்] மிகவும் தாழ்ந்த கருத்தைக் கொண்டிருந்ததாக" பைப்ஸ் வலியுறுத்துகிறார். இந்த வாதம், நன்கறியப்பட்ட லெனினின் டிசம்பர் 1922 அரசியல் மரண சாசனத்திற்கு முரண்பட்டுள்ளது, அதில் லெனின் குறிப்பிடுகையில், ட்ரொட்ஸ்கி "தலைசிறந்த திறமைக்காக மட்டும் தனித்துவமானவர் அல்ல. அவர் தனிப்பட்டரீதியாகவும் அனேகமாக தற்போதைய மத்திய குழுவில் —C[entral] C[ommittee]— மிகவும் திறமையான மனிதராவார்,” என்று எழுதினார்.

ஆர்வத்தை தூண்டும் விதத்தில், பைப்ஸ் பெரிதும் ஸ்ராலினுக்கு அனுதாபமாக எழுதுகிறார், ஸ்ராலினை அவர் "லெனினின் உண்மையான வழித்தோன்றல் என்றும், சட்டபூர்வ வாரிசு" என்றும் குறிப்பிடுகிறார். "நமது காலத்தின் லெனின்" என்று அழைக்குமாறு வலியுறுத்திய ஸ்ராலினுக்கு வேண்டுமானால், அந்த விவரிப்பு மகிழ்ச்சியூட்டி இருக்கலாம். இவ்வித பண்பற்ற திருச்சபை வாரிசு உரிமையை லெனினிலிருந்து ஸ்ராலினுக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் அந்த ஹார்வர்ட் வரலாற்றாளரால், மேற்குறிப்பிட்ட அரசியல் மரண சாசனத்தில் ஸ்ராலினை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கு லெனினின் பிரத்யேக முறையீடும் உள்ளடங்கி இருந்தது என்ற நன்கறியப்பட்ட உண்மையையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார். அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்த பக்கவாத நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்னர், லெனினால் எடுக்கப்பட்ட கடைசி நடவடிக்கைகளில், ஸ்ராலினுடன் அவருக்கிருந்த அனைத்து தனிப்பட்ட உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக எச்சரித்த ஒரு கடிதத்தை எழுதக் கூறி இருந்ததும் ஒன்றாக இருந்தது என்பதை, உண்மையில் அந்த வரலாற்று பேராசிரியர் நினைவுகூர்ந்திருக்க வேண்டும்.

வரலாற்று உண்மையின் இத்தகைய திரித்தல்களையும் விட மோசமானது என்னவென்றால், மாஸ்கோ விசாரணைகளுக்கும் 1930களின் பிற்பகுதியில் அதனுடன் தொடர்புபட்ட பயங்கரங்களுக்கும் அடித்தளத்தில் இருந்த பொய்யை பேராசிரியர் பைப்ஸ் ஆதாரமின்றி அங்கீகரித்ததாகும். “ஸ்ராலினின் ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டுமென்றும், ஸ்ராலினே படுகொலை செய்யப்பட வேண்டுமென்றும் ட்ரொட்ஸ்கியும் அவரது மகன் லெவ் செடோவ்வும் அடிக்கடி பேசியும் எழுதியும் வந்தார்கள்,” என்று பைப்ஸ் எழுதுகிறார்.

சோவியத் ஒன்றியத்தில் ஓர் அரசியல் புரட்சிக்காக ட்ரொட்ஸ்கி பகிரங்கமாக அழைப்பு விடுத்தார் என்பது நிச்சயமாக நன்கு அறிந்ததுதான். ஆனால் ட்ரொட்ஸ்கியும் அவரது மகனும் பகிரங்கமாவோ அல்லது தனிப்பட்டரீதியிலோ ஸ்ராலினின் படுகொலையை அறிவுறுத்தினார்கள் என்பது, தசாப்தங்களுக்கும் அவமதிக்கத்தக்க, ஒரு அப்பட்டமான மற்றும் மோசமான பொய்யாகும். இது ஏதோ சிறிய விடயமல்ல. ட்ரொட்ஸ்கியும் அவரது மகனும் ஸ்ராலினையும் மற்றும் சோவியத் ஒன்றிய தலைவர்களையும் படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு, 1936-38 மாஸ்கோ விசாரணைகளுக்கும் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் நூறு ஆயிரக் கணக்கான சோசலிஸ்டுகள் சரீரரீதியாக அழித்தொழிக்கப்படுவதற்கும் ஒரு சட்டரீதியான போலிக் காரணத்தை வழங்கியது.

1937 செப்டம்பரில், லியோன் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக ஸ்ராலினிச ஆட்சியால் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுக்களை சுயாதீனமாக விசாரணை செய்வதற்கு, மெய்யியலார் ஜோன் டுவி தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்ட விசாரணைக்குழு அதன் விசாரணை முடிவுகளை வெளியிட்டது. ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினுடைய படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டியிருந்தாரா என்ற முக்கிய பிரச்சினை மீது அந்த விசாரணைக் குழு அதன் முடிவை வெளியிட்டது: “ட்ரொட்ஸ்கி அவரது ஒட்டுமொத்த தொழில்வாழ்வு முழுவதும், தனிநபர் பயங்கரவாதத்திற்கு ஓர் உறுதியான எதிர்ப்பாளராக எப்போதும் இருந்துள்ளார் என்பதை நாம் காண்கிறோம். மேலும் ட்ரொட்ஸ்கி எந்த அரசியல் எதிராளியையும் படுகொலை செய்வதற்கு மாஸ்கோ வழக்கு விசாரணையின் எந்தவொரு பிரதிவாதியையோ அல்லது சாட்சிகளையோ ஒருபோதும் அறிவுறுத்தவில்லை என்பதையும் இவ் ஆணைக்குழு காண்கிறது,” என்று குறிப்பிட்டது.

நூறாயிரக் கணக்கான மக்களின் படுகொலையை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொய்க்கு, ஒரு பிரபல வரலாற்றாளர் மதிப்பளிக்க வேண்டும் என்பதை, முற்றிலும் அறநெறி அடிப்படையிலும் கூட சொற்களால் விளக்க முடியாது. ஆனால் உண்மைகள் தொடர்பாக ஒரு கவனக்குறைவான மனோபாவம் என்பதை விடவும் அதிகமானவை இங்கே சம்பந்தப்பட்டுள்ளன. பதிலளிக்கப்பட வேண்டிய கேள்வி என்னவென்றால்: ஸ்ராலினிச ஆட்சியின் சோசலிச எதிர்ப்பாளர்களை, குறிப்பாக ட்ரொட்ஸ்கியை கையாள்கையில், பேராசிரியர் பைப்ஸ் ஏன் கிரெம்ளினால் தசாப்தங்களாக பரப்பிவிடப்பட்ட பொய்கள் மற்றும் தவறான தகவல்களை சார்ந்திருந்தார் என்பதுதான். அதற்கான பதில், வரலாறைப் பற்றிய அவரது அணுகுமுறைக்கு உந்துதலாக இருக்கும் வலதுசாரி சித்தாந்த மற்றும் அரசியல் நிகழ்ச்சிநிரலில் காணக்கிடைக்கும் என்று கூறுவதற்கு என்னை அனுமதியுங்கள். ஸ்ராலினிச வகைப்பட்ட சோவியத் வரலாறுக்கும், மேற்கில் இருந்த பனிப்போர் சித்தாந்தவாதிகளால் முன்வைக்கப்பட்டவைகளுக்கும் இடையே ஒரு விசித்திரமான பொருத்தம் இருந்ததை, ஸ்ராலினிசத்தின் சோசலிச எதிர்ப்பாளர்கள் அவ்வப்போது கண்டுள்ளனர். இரண்டுமே மார்க்சிசத்தையும் மற்றும் லெனினுக்குப் பிந்தைய சோவியத் ஆட்சியின் கொள்கைகளையும் ஒன்றாய் அடையாளம் கண்டதிலிருந்து தொடங்கின.

ஸ்ராலினிச்தையும் மார்க்சிசத்தையும் ஒன்றாய் இனம் காண்பதென்பது, சோவியத் வரலாறு பற்றிய பைப்சின் பொருள்விளக்கத்திற்கு வெளிப்படையான அடித்தளமாக உள்ளது. ஸ்ராலினிச ஆட்சியால் இழைக்கப்பட்ட அனைத்துக் குற்றங்களும் முக்கியமாகவும் தவிர்க்கவியலாமலும் அக்டோபர் புரட்சியிலிருந்தே பெருக்கெடுத்தன என்று விளக்குவதற்கு தீர்மானகரமாக நிற்கும் பைப்ஸால், அங்கே ஸ்ராலினிசத்திற்கு ஒரு மார்க்சிச மாற்றீடு இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே லெனினுக்கும் ஸ்ராலினுக்கும் இடையே இன்றியமையாத அரசியல் தொடர்ச்சி இருந்ததாக வலியுறுத்த வேண்டியதும், மற்றும் ஸ்ராலினின் மார்க்சிச எதிர்ப்பாளர்களை, அனைத்திற்கும் மேலாக ட்ரொட்ஸ்கியை, கிரெம்ளின் கொடுங்கோன்மையை விட குறைவில்லாத இரக்கமற்றவர்களாக, கொலைகாரர்களாக சித்தரிக்க வேண்டியதும் அவருக்கு அவசியமாகி விடுகிறது. வரலாறு குறித்த இந்த பொருள்விளக்கம், ஒரு நேர்மையான உண்மைகள் குறித்த விளக்கத்தின் முன்னால் நிலைக்க முடியாது என்பதால், பேராசிரியர் பைப்ஸ் பொய்களை நாடத்தான் வேண்டும். மேலும் அங்கே அவருக்கு புதிய ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான தேவையொன்றும் இருக்கவில்லை. மார்க்சிச-விரோத பொய்ம்மைகளின் மற்றும் ஜோடனைகளின் ஒரு தீராத வளமாக உள்ள ஸ்ராலினிசத்தின் ஆவணக்கிடங்குகளில் இருந்து பைப்ஸ் வெறுமனே அவருக்குத் தேவையானதை எடுத்துக் கொள்கிறார்.

தங்கள் உண்மையுள்ள,

டேவிட் நோர்த்
தேசிய செயலாளர்
சோசலிச சமத்துவக் கட்சி