ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Appendix 2

பிற்சேர்க்கை 2

ரிச்சார்ட் பைப்ஸ் உடனான ஒரு கடித பரிமாற்றம்

ரிச்சார்ட் பைப்ஸூக்கு டேவிட் நோர்த்

மார்ச் 27, 1996

அன்புடன் பேராசிரியர் பைப்ஸ்:

காலஞ்சென்ற தளபதி டிமித்ரி வோல்கொகோனொவினது லியோன் ட்ரொட்ஸ்கியின் சுயசரிதம் குறித்து மார்ச் 24இல் நியூ யோர்க் டைம்ஸ் நூல் மதிப்புரை பகுதியில் இடம் பெற்ற உங்களது மதிப்புரையில், “ட்ரொட்ஸ்கியும், அவரது மகனும் நெருங்கிய உதவியாளருமான லெவ் செடோவ், ஸ்ராலினது ஆட்சி தூக்கிவீசப்பட வேண்டும் என்றும், ஸ்ராலினே படுகொலை செய்யப்பட வேண்டுமென்றும் அடிக்கடி பேசியும் எழுதியும் வந்தார்கள்” என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

இந்த அறிக்கை வெளிப்படையான மற்றும் பாரதூரமான தவறைக் கொண்டுள்ளது. ஒரு அரசியல் புரட்சி மூலமாக ஸ்ராலினிச ஆட்சியைத் தூக்கி வீசுவதை ட்ரொட்ஸ்கி அறிவுறுத்தினார் என்பது உண்மையாய் இருக்கும் அதேவேளை, ஸ்ராலினின் படுகொலைக்கு அவர் பகிரங்கமாகவோ அல்லது தனிப்பட்டரீதியிலோ ஒருபோதும் அறிவுறுத்தி இருக்கவில்லை.

ஒரு வரலாற்றாளர் என்ற விதத்தில், ஸ்ராலினை படுகொலை செய்ய ட்ரொட்ஸ்கி விழைந்தார் என்ற குற்றச்சாட்டு, 1936-38 மாஸ்கோ வழக்குகளுக்கும் சோவியத் ஒன்றியத்தில் நூறு ஆயிரக் கணக்கான சோசலிஸ்டுகள் சரீரரீதியாக துடைத்தழிக்கப்பட்டதற்கும் ஒரு சட்டரீதியான போலிக்காரணமாக பயன்பட்டது என்பதை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். ட்ரொட்ஸ்கிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராக ஸ்ராலினிச ஆட்சியால் குறிவைக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும், GPUஆல் இட்டுக் கட்டப்பட்டவைகளாகவும் மாஸ்கோ வழக்குகளின் போலிப்புனைவுகளாகவும் நீண்டகாலமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ட்ரொட்ஸ்கிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு ஜோன் டுவி தலைமையின் கீழ் 1937இல் ஏற்படுத்தப்பட்ட சுயாதீனமான விசாரணைக் குழுவானது, குறிப்பாக அந்த முன்னாள் போல்ஷிவிக் தலைவர், ஸ்ராலினை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டி இருந்தார் என்ற குற்றச்சாட்டை நிராகரித்தது. அக்குழு குறிப்பிட்டதாவது: “ட்ரொட்ஸ்கி அவரது ஒட்டுமொத்த வாழ்க்கை முழுவதும் தனிநபர் பயங்கரவாதத்திற்கு ஒரு தொடர்ச்சியான எதிர்ப்பாளராக எப்போதும் இருந்திருக்கிறார் என்பதை நாம் காண்கிறோம். அத்துடன் ட்ரொட்ஸ்கி எந்த அரசியல் எதிராளியையும் படுகொலை செய்வதற்கு மாஸ்கோ வழக்கு விசாரணையின் பிரதிவாதிகளையோ அல்லது சாட்சிகளையோ எவரையும் ஒருபோதும் அறிவுறுத்தவில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.”

மிக அண்மையில், 1988 இல், சோவியத் ஒன்றியத்தின் உச்சநீதிமன்றம் மாஸ்கோ விசாரணைகளில் பிரதிவாதிகளாக இருந்த அனைவரும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் குற்றமற்றவர்களாக இருந்ததாக இறுதியில் அறிவித்தது.

உங்களது வரலாற்று எழுத்துக்களில் பரிச்சயப்பட்டவர்கள், 1917 அக்டோபர் புரட்சிக்கும், அத்துடன் குறிப்பாக அந்நிகழ்வில் ட்ரொட்ஸ்கி வகித்த முன்னணிப் பாத்திரம் பற்றிய உங்களது கடும் வெறுப்புக்கும் விரோதமான உங்களது வெளிப்படையான சித்தாந்த நிலைப்பாட்டை அறிவார்கள். உங்கள் கருத்தைக் கூற உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் வரலாற்றுச் சான்றை பொய்மைப்படுத்துவதற்கு உங்களுக்கு உரிமையில்லை. பேராசிரியர் பைப்ஸ் அவர்களே, ட்ரொட்ஸ்கியை இழிவுபடுத்துவதற்கான உங்களது செயல்முனைப்பில், ஸ்ராலின் அவரது சோசலிச அரசியல் எதிராளிகளை பாரியளவில் படுகொலை செய்வதை நியாயப்படுத்துவதில் அவரால் பயன்படுத்தப்பட்ட அதே பொய்களைத்தான் நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்பது விசித்திரமாக உள்ளது.

ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினது படுகொலைக்காக அழைப்பு விடுத்தார் என்ற உங்களது கூற்றில் உறுதியாய் இருக்கவும், அதன் மூலமாக மாஸ்கோ வழக்கு விசாரணைகளுக்கும் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட களையெடுப்புகளுக்கும் காலங்கடந்த நியாய அங்கீகாரத்தை வழங்குவதற்கும் நீங்கள் தயாராக இருக்கிறீர் என்றால், பின் நீங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவான வரலாற்று ஆவணங்களை வெளியிட வேண்டும். எவ்வாறிருந்த போதினும் அத்தகைய ஆவணங்களை உங்களால் வழங்கமுடியவில்லை என்றால், நியூ யோர்க் டைம்ஸில் நீங்கள் எழுதிய பொய் அறிக்கையை பகிரங்கமாக திரும்பப் பெறுவதற்கு, நீங்கள் தொழில்ரீதியாகவும் மற்றும் தார்மீக அடிப்படையிலும் கடமைப்பட்டுள்ளீர்கள்.

உண்மையுள்ள,
டேவிட் நோர்த்
தேசிய செயலாளர்
சோசலிச சமத்துவக் கட்சி

*** *** ***

ரிச்சார்ட் பைப்ஸூக்கு டேவிட் நோர்த்

மே 13, 1996

அன்புடன் பேராசிரியர் பைப்ஸ்:

நியூ யோர்க் டைம்ஸில் காலஞ்சென்ற தளபதி டிமித்ரி வோல்கொகோனொவினது லியோன் ட்ரொட்ஸ்கியின் சுயசரிதம் பற்றிய உங்களது நூல் மதிப்புரையில் காணப்பட்ட உண்மைக்குப் புறம்பான ஒரு பாரதூரமான பிழையை, மார்ச் 27, 1996 தேதியிட்ட கடிதத்தில், உங்களது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன். “ட்ரொட்ஸ்கியும் மற்றும் அவரது மகனும் நெருங்கிய உதவியாளருமான லெவ் செடோவ்வும், ஸ்ராலினின் ஆட்சி தூக்கிவீசப்பட வேண்டும் என்றும், ஸ்ராலினே படுகொலை செய்யப்பட்ட வேண்டும் என்றும் அடிக்கடி பேசியும் எழுதியும் வந்ததாக” நீங்கள் கூறி இருந்தீர்கள்.

எனது கடிதம் விளக்கியவாறு, ட்ரொட்ஸ்கியும் அவரது மகனும் ஸ்ராலின் படுகொலையை வலியுறுத்தினார்கள் மற்றும் ஆதரித்தார்கள் என்ற கூற்று, 1936-38 மாஸ்கோ விசாரணைகளுக்கும் மற்றும் அதனுடன் தொடர்புபட்டதுமான சர்வாதிபத்திய ஆட்சிக்கு எதிரான நூறாயிரக் கணக்கான சோசலிச எதிர்ப்பாளர்கள் படுகொலை செய்யப்படுவதில் போய்முடிந்த பெரும் கொடூரத்திற்கும் இட்டுக்கட்டப்பட்ட போலிக்காரணமாக இருந்தது. 1937இல் டுவி கமிஷனுடன் தொடங்கி, 1980களின் இறுதியில் சோவியத் அரசாங்கத்தால் அந்த விசாரணைகள் உத்தியோகபூர்வமாக மறுதலிக்கப்பட்டதில் உச்சத்தை அடைந்த, அந்த மாஸ்கோ விசாரணைகளில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத படுகொலை சதித்திட்ட குற்றச்சாட்டுக்கள், மிகவும் விளக்கமாகவே குற்றகரமான ஜோடனைகளாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

எனது மார்ச் 27 கடிதத்தை முடிக்கையில், நான் உங்கள் முன் பின்வரும் சவாலை முன்வைத்தேன்: “ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினது படுகொலைக்காக அழைப்பு விடுத்தார் என்ற உங்களது கூற்றில் உறுதியாய் இருக்கவும், அதன் மூலமாக மாஸ்கோ வழக்கு விசாரணைகளுக்கும் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட களையெடுப்புகளுக்கும் காலங்கடந்த நியாய அங்கீகாரத்தை வழங்குவதற்கும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்றால், பின் நீங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவான வரலாற்று ஆவணங்களை வெளியிட வேண்டும். எவ்வாறிருந்த போதினும் அத்தகைய ஆவணங்களை உங்களால் வழங்கமுடியவில்லை என்றால், நியூ யோர்க் டைம்ஸில் நீங்கள் எழுதிய பொய் அறிக்கையை பகிரங்கமாக திரும்பப் பெறுவதற்கு, நீங்கள் தொழில்ரீதியாகவும் மற்றும் தார்மீக அடிப்படையிலும் கடமைப்பட்டுள்ளீர்கள்”.

பதில் ஏதும் இல்லாமல் கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் கழிந்துவிட்டன, இக்காலதாமதம் இவ்விடயத்தை அலட்சியப்படுத்துவதற்கு நீங்கள் நோக்கம் கொண்டுள்ளீர்கள் என்பதை அர்த்தப்படுத்தாது என நான் நம்புகிறேன். வரலாற்று சான்றுகளைச் சரி செய்யுமாறும், தவறுகளை ஒப்புக்கொண்ட ஒரு அறிக்கையை பிரசுரிக்குமாறும் நான் உங்களை மீண்டுமொருமுறை வலியுறுத்துகிறேன்.

உண்மையுள்ள,
டேவிட் நோர்த்
தேசிய செயலாளர்
சோசலிச சமத்துவக் கட்சி

*** *** ***

டேவிட் நோர்த்துக்கு ரிச்சார்ட் பைப்ஸ்

மே 20,1996

அன்புடன் திரு. நோர்த்:

உங்களது மார்ச் 27 கடிதத்திற்கு நான் பதிலளிக்கவில்லை, ஏனெனில் அது தாக்குதல் வகைப்பட்ட விதமாக இருப்பதைக் கண்டேன். நான் உங்களது மே 13 கடிதத்திற்குப் பதிலளிப்பேன், ஏனெனில் அது பொதுவான நாகரிக தரத்தைக் கொண்டிருக்கிறது.

ட்ரொட்ஸ்கி தொடர்பான எனது கூற்றுக்களுக்கும் எனக்கும் எதிராக சீற்றம் கொள்வதற்கு பதிலாக, எனது மதிப்புரையின் கருப்பொருளாக உள்ள வோல்கொகோனொவின் சுயசரிதத்தை பார்க்க சிரமம் எடுத்திருப்பீர்களாயின், செடோவ் ஸ்ராலினின் இரகசியப் போலீஸ் ஏஜண்டுகளுள் ஒருவரிடம், ஸ்ராலின் கொல்லப்பட வேண்டும் என்று கூறினார் என்பதைக் கண்டிருப்பீர்கள் (பார்க்க பக்கம் 378-79). ஏஜண்டாக இருப்பாரோ என்ற கேள்விக்குரிய சிப்போரோவ்ஸ்கி (Zborowski) அத்தகைய அச்சுறுத்தலை செய்திருக்க சாத்தியம் இருக்கிறது: ஆனால் முக்கியமான விடயம் என்னவெனில் அத்தகைய உணர்வுகள் மாஸ்கோ விசாரணைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வெளிப்படையாகவே பொய்மதிப்பை பெற்றிருந்தன.

இரண்டாவதாக நீங்களே ஒப்புக் கொண்டபடி, ட்ரொட்ஸ்கியும் அதேபோல செடோவும் திரும்பத் திரும்ப ஸ்ராலினது ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஒரு சர்வாதிபத்திய சர்வாதிகாரத்தின் தலைவரைக் கொல்லாமல், வேறு எந்த வகையிலும் அதைத் தூக்கி எறிவதை இப்போது நீங்கள் உண்மையில் கற்பனை செய்து பார்க்க முடியுமா? தோல்வியை எதிர்கொண்டு, ஸ்ராலின் பெருங்கருணையோடு இராஜினாமா செய்துவிட்டு ஒய்வு பெற்றுச் சென்றிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா? வோல்கொகோனொவின் கருத்துக்களின்படி, "புரட்சிக்கான அழைப்பு என்பது, ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு உடனொப்பான அழைப்பாகும்." (பக்கம் 370) ஒரு சர்வாதிகாரியின் கண்ணோட்டத்திலிருந்து அவரது ஆட்சியை "இல்லாமல் செய்வதற்கான" ஓர் அழைப்பு என்பது, அவரை தனிப்பட்டரீதியில் "அழித்தொழிப்பதற்கு" ஒத்ததாகும்.

சினோவியேவ், காமனேவ் புக்காரின் மற்றும் ஏனையோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அறவே உண்மையல்ல. அவை சுத்தமாக போலியாக புனையப்பட்டவை ஆகும். நான் கூறுவது என்னவெனில் 'ட்ரொட்ஸ்கிசம்' பற்றிய குற்றச்சாட்டுக்கள், ஓரளவுக்கு ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது மகனால் கொண்டு வரப்பட்ட பொறுப்பற்ற அச்சுறுத்தல்களினால் ஊக்குவிக்கப்பட்டன. அவை ஸ்ராலினிச நோக்கங்களுக்கு பயன்பட்டன.

உங்கள் உண்மையுள்ள,
ரிச்சார்ட் பைப்ஸ்

*** *** ***

 

ரிச்சார்ட் பைப்ஸ்க்கு டேவிட் நோர்த்

June 16, 1996

அன்புடன் பேராசிரியர் பைப்ஸ்:

மே 20ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி. எனது மார்ச் 27இன் கடிதம் “தாக்குதல் தன்மையை” கொண்டிருப்பதாக நீங்கள் காண்பதற்கு நான் வருந்துகிறேன். அக்கடிதத்தை மறுமுறை வாசித்தேன், அது "பொதுவான நாகரிக தரத்தை" குறைவாகக் கொண்டிருக்கிறது என்ற உங்களது கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் நாம் இந்த விடயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பதிலாக, நமது கருத்து வேறுபாட்டின் கருப்பொருளாக உள்ள முக்கிய வரலாற்று பிரச்சினையின் மீது — அதாவது, டிமித்ரி வோல்கொகோனொவ் எழுதிய சுயசரிதம் பற்றிய உங்கள் மதிப்புரையில் நீங்கள் கூறியவாறு “ட்ரொட்ஸ்கியும் மற்றும் அவரது மகனும் நெருங்கிய உதவியாளருமான லெவ் செடோவ், ஸ்ராலினது ஆட்சி தூக்கிவீசப்பட வேண்டும் என்றும், ஸ்ராலினே படுகொலை செய்யப்பட வேண்டுமென்றும் அடிக்கடி பேசியும் எழுதியும் வந்தார்களா" என்பதில் கவனத்தைக் குவிப்போம்.

பிரச்சினை இங்கே அர்த்தம் பற்றியதல்ல, மாறாக உண்மைகள் பற்றியதாகும். நான் இக்கூற்றைத் தாக்கினேன், ஏனெனில் அது உண்மையல்ல. ட்ரொட்ஸ்கியும் அவரது மகனும் இரகசியமாக சதி செய்தனர் என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஸ்ராலினது படுகொலைக்காக அழைப்பு விடுத்தனர் என்ற கூற்றுக்கு வரலாற்று ஆதாரம் அங்கே இருக்கவில்லை என்று நான் சுட்டிக் காட்டினேன். இன்னும் சொல்லப்போனால், இழிபுகழ்பெற்ற 1936-38 மாஸ்கோ பொய் வழக்குகளை நியாயப்படுத்தவும் மற்றும் ஸ்ராலினது சர்வாதிபத்திய ஆட்சிக்கு எதிரான சோசலிச எதிர்ப்பை ஸ்தூலமாக இல்லாதொழிக்கவும் “ட்ரொட்ஸ்கிஸ்டுகளின்” (Trotskyite) படுகொலை சதிகள் குறித்து ஸ்ராலின் கதைகளை ஜோடித்தார் என்பது உள்ளவாறே சர்ச்சைக்கு இடமில்லாததாகும்.

எனது விமர்சனத்திற்கான உங்களது பதில், குழப்பம் விளைவிப்பதாகவும், உள்ளார்ந்தரீதியில் ஒன்றுக்கொன்று முரண்பாடானதாகவும் உள்ளது.

முதலில், உங்களது கூற்று வோல்கொகோனொவினால் வழங்கப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டிருப்பதாக என்று நீங்கள் வாதிடுகிறீர்கள். வோல்கொகோனொவின் நூலை நான் போதுமான கவனத்துடன் வாசிக்க தவறிவிட்டதாக கருத்துரைத்து, ஒரு NKVD ஏஜண்டான மார்க் சிப்போரோவ்ஸ்கியால் வழங்கப்பட்ட அறிக்கையை அவர் மேற்கோள் காட்டுவதில் கவனத்தைச் செலுத்துமாறு நீங்கள் கூறுகிறீர்கள், அதில் ஸ்ராலின் கொல்லப்பட வேண்டும் என்று சிப்போரோவ்ஸ்கிக்கு செடோவ் கூறியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வோல்கொகோனொவினது சுயசரிதத்தின் இந்த அத்தியாயத்தை நான் கவனத்துடன் வாசித்திருக்கிறேன் என்பதை உறுதியாய் கூறுவதற்கு என்னை அனுமதிக்கவும், அது ட்ரொட்ஸ்கியும் அவரது மகனும் ஸ்ராலினை படுகொலை செய்வதற்கு ஆதரவாக இருந்தனர் மற்றும் அழைப்பு விடுத்தனர் என்ற உங்களது ஆணித்தரமான வலியுறுத்தலுடன் முரண்படுகிறது. சிப்போரோவ்ஸ்கியின் அறிக்கையின் நம்பகத்தன்மையை ஏற்பதிலிருந்து வெகுதொலைவிற்கு விலகி, வோல்கொகோனொவ் "வரவிருக்கும் விசாரணைகளில் குற்றம்சாட்டிய தரப்பின் வாதங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு ஜோடிப்பாக அந்த அறிக்கை இருந்திருக்கவும்” சாத்தியம் உள்ளது என்பதையும் எண்ணிப் பார்க்கிறார் (பக்கம் 379). மற்றொரு பத்தியில், சிப்போரோவ்ஸ்கியிடமிருந்து அதேமாதிரி அறிக்கையை மேற்கோள்காட்டி வோல்கொகோனொவ் கூறுகிறார்: "அது விசாரணைக்காகவும் ஆட்களை ஒழிக்கவும் ஸ்போரோவ்ஸ்கியை மாஸ்கோவிற்கு மீண்டும் வரவழைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு பயன்படுத்துவதற்கு, NKVD ஆல் ஜோடிக்கப்பட்டிருக்கலாம். சிப்போரோவ்ஸ்கியின் கற்பனையாக இருக்கலாம் என்ற சாத்தியத்தையும் கூட விலக்கிவிட முடியாது.” (பக்கம் 380)

ஸ்ராலின் படுகொலை செய்யப்படுவதற்கு ட்ரொட்ஸ்கி மற்றும்/அல்லது செடோவின் ஒரு திட்டம் பற்றிய ஒரு நம்பத்தகுந்த ஆதாரமாக வோல்கொகோனொவ் தானே அந்த அறிக்கைகளை எண்ணிப் பார்க்கவில்லை என்பது தெளிவாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், உங்களது மதிப்புரையில் நீங்கள் எழுதியுள்ளதற்கு நேரடியாக மாறுபட்ட வகையில், “ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எந்த உயர்மட்ட பயங்கரவாத நடவடிக்கையையும் மேற்கொண்டதாகவோ அல்லது அதற்காக தயாரிப்புச் செய்ததாகவோ ஒரு துண்டு துணுக்கு ஆதாரம் கூட அங்கே கிடையாது” என்று வோல்கொகோனொவ் முடிக்கிறார். (பக்கம் 380)

வரலாற்று உண்மைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் ஒரு முயற்சியாக காணப்படுவதில், உங்களது கடிதம் ஒரு புதிய வழியிலான வாதத்தை அறிமுகப்படுத்துகிறது. ட்ரொட்ஸ்கியும் செடோவும் ஸ்ராலினைப் படுகொலை செய்வதற்காக அழைப்பு விடுத்தார்களா இல்லையா என்பது தீர்க்கமாக இல்லை. "ஒரு முகவரா என்பதில் கேள்விக்குரியவராக இருந்த சிப்போரோவ்ஸ்கி, அந்த அச்சுறுத்தலைச் செய்திருக்க சாத்தியம் இருந்தது," என்பதில் நீங்கள் உடன்படுகிறீர்கள். ஆனால் பின்னர் நீங்களே, "முக்கியமான விடயம் என்னவெனில் [சிப்போரோவ்ஸ்கி அறிக்கையில் உள்ள] அத்தகைய உணர்வுகள் மாஸ்கோவிற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், வெளிப்படையாகவும் குறிப்பிடத்தக்கமதிப்பைப் பெற்றதாகவும்" குறிப்பிட நகர்கிறீர்கள்.

ஸ்ராலின், ட்ரொட்ஸ்கியின் படுகொலை சதியின் இலக்காக இருந்தார் என்பது தவறாக கொடுக்கப்பட்ட நம்பிக்கையாக இருந்தபோதிலும், அக்கொடூரம், குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது, ஸ்ராலின் நியாயமாக இருந்ததற்காக தூண்டிவிடப்பட்டது என்று நீங்கள் கருத்துரைப்பது போல் தெரிகிறது. உண்மையில் இந்தவாதம் அதன் உள்ளார்ந்த தர்க்கத்தில் இருப்பதுபோல் பலவீனமாக இருக்கிறது. சிப்போரோவ்ஸ்கியால் குறிக்கப்பட்ட சம்பவங்கள் இரகசிய போலீசாரின் ஜோடனைகளாக இருந்தால் —இதை வோல்கொகோனொவ் கூடவோ அல்லது குறையவோ ஒத்துக்கொள்வது போல— ஏன் அவை ஸ்ராலினிடமிருந்து குறிப்பிடத்தக்க மதிப்பைப் பெற்றன? மேலும் சிபோரோவ்ஸ்கியின் அறிக்கை ஒரு கோபமான தருணத்தில் செடோவால் கூறப்பட்ட அரசியல்ரீதியில் முக்கியத்துவமற்ற அச்சுறுத்தலை துல்லியமாகக் மீண்டும் கொண்டு வந்து காட்டியிருந்தாலுமே கூட, அத்தகையவொரு குறிப்புத்தான் மாஸ்கோ வழக்கு விசாரணைகளுக்கும், மற்றும் நாசவேலைகள், படுகொலைகள், உளவுபார்த்தல் பற்றிய அவர்களது விசித்திரமான குற்றச்சாட்டுக்களுக்கும் தூண்டுதலாக இருந்தது என்பதை யாரால் தீவிரமாக நம்ப முடியும்? உண்மையில் வோல்கொகோனொவால் மேற்கோளிடப்பட்ட இரண்டு அறிக்கைகளில் முதலாவது பெப்ரவரி 8, 1937ஆம் தேதியிடப்பட்டதாகும், அது மூன்று மாஸ்கோ விசாரணைகளில் இரண்டாவதில் பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிந்தையதாகும். இரண்டாவது அறிக்கை ஓராண்டுக்குப் பின்னர் மூன்றாவது விசாரணைக்கு முந்தைய நாள் தேதியிட்டதாகும். இந்த அடிப்படையில் மட்டுமே கூட, செடோவ் சிப்போரோவ்ஸ்கிக்கு தெரிவித்த அல்லது தெரிவிக்காத அந்த விடயம், ஸ்ராலினின் கொடூரத்தைப் புரிந்து கொள்வதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாததாகும்.

வோல்கொகோனொவ் எழுதுகின்றவாறு, “ட்ரொட்ஸ்கியை தார்மீகரீதியாக, அரசியல்ரீதியாக மற்றும் உளவியல்ரீதியாக அழிப்பதற்கே அவை அரங்கேற்றப்பட்டன…" (பக்கம் 381) என்று இருந்தபோதினும் கூட, துரதிருஷ்டவசமாக, மாஸ்கோ வழக்கு விசாரணைகளின் குறைந்தபட்சம் ஏதோசில பொறுப்பையாவது ட்ரொட்ஸ்கி மீது சுமத்துவதில் நீங்கள் உறுதியாய் இருப்பதுபோல் தெரிகிறது. இந்த முயற்சியைத் தொடர, ஆழ்ந்த வரலாற்று ஆய்வுகளை கேலிக்கூத்தாக்கும் வாதங்களை எடுத்தாள நீங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளீர்கள்.

ட்ரொட்ஸ்கியும் செடோவும் ஸ்ராலின் தூக்கி வீசப்படுவதை வலியுறுத்தினர் என நீங்கள் வெற்றிக் களிப்புடன் சுட்டிக் காட்டுகிறீர்கள். நன்கு தெரிந்த, ஒருபோதும் யாரும் மறுத்திராத இந்த உண்மையின் அடிப்படையில், நீங்கள் பின்வரும் வனப்புரை வினாக்களை முன்வைத்துள்ளீர்கள்: “ஒரு சர்வாதிபத்திய சர்வாதிகாரத்தின் தலைவரைக் கொல்லாமல் வேறு எந்த வகையிலும் அதைத் தூக்கி எறிவதை இப்போது நீங்கள் உண்மையில் கற்பனை செய்து பார்க்க முடியுமா? தோல்வியை எதிர்கொண்டு, ஸ்ராலின் பெருங்கருணையோடு இராஜினாமா செய்துவிட்டு ஒய்வு பெற்றுச் சென்றிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா?”

மீண்டும் உங்களைத் தாக்கும் ஆபத்துடன், இந்த கேள்விகள் எடுத்துக் கொண்ட பொருளோடு தொடர்பில்லாதவை என்பதைக் கூற என்னை அனுமதிக்கவும். ஸ்ராலின் அவரது போலீஸ்காரர் புத்தியுடன், ஓர் அரசியல் புரட்சியை அவரது சொந்த சரீரதியான அழிப்புடன் அடையாளப்படுத்திக் கொண்டார் என்றே வைத்துக்கொள்வோம். அனைத்தினும் மேலாக, எந்தவொரு சர்வாதிகாரியும் ஒரு புரட்சியிலிருந்து சாதகமான எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஸ்ராலினது அரசியல் கவலைகளும் மற்றும் அகநிலை மதிப்பீடுகளும், பொய் வழக்குகளை நடத்துவதிலும் மற்றும் அவரது எதிராளிகளைப் படுகொலை செய்வதற்கு அவர் எடுத்த முடிவிலும் நிச்சயமாக ஒரு பிரதான காரணியாக இருந்தன. ஆனால் ஸ்ராலின், ட்ரொட்ஸ்கியை இட்டு அஞ்சினார் என்ற வெளிப்படையான உண்மை, வழக்கு விசாரணைகளில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் சட்டரீதியான நம்பகத்தன்மைக்கு முற்றிலும் ஒன்றும் சேர்க்கவில்லை. அதனினும் கூட, அரசியல் புரட்சி பற்றிய ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டம், அது சோவியத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படுமானால், அது முடிவாக ஸ்ராலினின் மரணத்திற்கு வழிவகுக்குமா என்பது மாஸ்கோ வழக்கு விசாரணைகளில் எழுப்பப்பட்ட கேள்வியாய் இருக்கவில்லை. மாறாக ட்ரொட்ஸ்கியும் அவரது சகாக்களும் ஸ்ராலினைப் படுகொலை மூலமாக அதிகாரத்திலிருந்து அகற்ற விழைந்தார்களா என்பதே கேள்வியாக இருந்தது.

இந்த வேறுபாடு சிறியதான ஒன்றல்ல, 1930களில் பின்பகுதியில் அரசியல்ரீதியாக சிந்திக்கக்கூடிய மக்களால் அது நன்கு புரிந்து கொள்ளப்பட்டது. 1937இல் ஜோன் டுவி, விடயத்தை சிறப்பாக எடுத்துக்காட்டியதைப் போல, “சோவியத் ஒன்றியத்தில் இருக்கும் ஆட்சிக்கு, தத்துவார்த்த மற்றும் அரசியல் எதிர்ப்பு என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில், ட்ரொட்ஸ்கி குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை. அவர் சில குறிப்பிட்ட திட்டவட்டமான குற்றச்சாட்டுக்களின் பேரில், அதாவது அதன் உண்மை அல்லது பொய்மைத்தன்மை புறநிலை உண்மையின் ஒரு விவகாரமாக இருக்கும் குற்றச்சாட்டுக்களின் பேரில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.”1

உங்களது சொல்லலங்கார கேள்விகளால் முன்வைக்கப்படும் மற்றொரு வரலாற்று பிரச்சினையும் கவனம் செலுத்துவதற்கு தகுதியுடையதாக உள்ளது. "ஒரு சர்வாதிபத்திய சர்வாதிகாரத்தின் தலைவரைக் கொல்லாமல் வேறு எந்த வகையிலும்" அதைத் தூக்கி எறிவதை கற்பனை செய்யவியலாதென நீங்கள் எழுதுகிறீர்கள். பெரும்பாலான பயங்கரவாதிகள் உங்களோடு உடன்படுவார்கள் எனக் கருதுகிறேன், ஆனால் இந்தப் பார்வையானது வரலாறு பற்றிய ஒரு மட்டுப்பட்ட புரிதலையும் மற்றும் அரசியலின் ஓர் எளிமைப்படுத்தப்பட்ட கருத்துருவையும் மறைமுகமாய் எடுத்துக்காட்டுகிறது.

இதற்கு மாறுபட்ட வகையில், ஸ்ராலினிச சர்வாதிபத்திய ஆட்சி குறித்த ட்ரொட்ஸ்கியினது புரிதலின் ஒரு சுருக்கமான தொகுப்புரையை வழங்குவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். ஒரு மார்க்சிசவாதியாக, ட்ரொட்ஸ்கி அரசியலை மாபெரும் சமூக சக்திகளின் இடைத்தொடர்பு மற்றும் போராட்டத்தின் நிலைப்பாட்டிலிருந்து அணுகினார், மேலும் அவர் புரட்சியை, அரசியல் வாழ்வில் பரந்த வெகுஜன உழைக்கும் மக்களின் நனவுபூர்வமான தலையீடாக கருதினார். சோவியத் ஒன்றியத்தில் இருந்த அதிகாரத்துவ சர்வாதிகாரத்தின் சிக்கலான நிகழ்வுப்போக்கை ட்ரொட்ஸ்கி ஒருபோதும் ஒரு தனிமனிதரின் அபிலாஷைகளுக்குள் மற்றும் குற்றங்களுக்குள் சுருக்கவில்லை. தமது சமகாலத்தவர்களை மிஞ்சிய தெளிவுடன், ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்திலிருந்த புரட்சிக்குப் பிந்தைய அதிகாரத்துவ கொடுங்கோன்மையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வேர்களை விளக்கினார். அவரது வாழ்நாளின் இறுதி வரையில் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினை, “பெரும் அதிகாரம் படைத்த ஒரு சாதாரண நபர்", அவரது தனிநபர் சர்வாதிகாரம், சோவியத் அதிகாரத்துவத்தால் அரசியல் அதிகாரம் ஏகபோகமாக்கப்பட்டதன் திரண்ட வெளிப்பாடு என்பதற்கு அதிகமாக வேறெதுவுமாக கருதி இருக்கவில்லை. ஸ்ராலினிசம் தூக்கியெறியப்படுவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மறுவிழிப்பும் மற்றும் அதிகாரத்துவத்தின் தனிச்சலுகை அந்தஸ்திற்கு எதிராகவும், தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கு எதிராகவும் வழிநடத்தப்படும் ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அணிதிரளல் ஆகியவை அவசியப்படுகிறது. ஸ்ராலினிசத்திற்கான பதிலை, ஒரு கொலையாளியின் துப்பாக்கிக் குண்டில் காணமுடியாது, மாறாக மாபெரும் பரந்த மக்களின் போராட்டத்தில் தான் காணக்கிடைக்கும் என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். இந்தக் காரணத்தினால்தான், ட்ரொட்ஸ்கி (ஸ்ராலின் கூறியவாறு) கொலையாளிகளை நியமிக்கும் பணியில் அவரை ஈடுபடுத்திக் கொண்டிருக்கவில்லை, மாறாக ஒரு புதிய சர்வதேச மார்க்சிச இயக்கத்தைக் கட்டி எழுப்புவதிலும் மற்றும் அதன் காரியாளர்களை அரசியல் மற்றும் தத்துவார்த்தரீதியில் பயிற்றுவிப்பதிலும் ஈடுபட்டிருந்தார்.

ஸ்ராலினின் சொந்த தலைவிதியைப் பொறுத்தமட்டில், இது ட்ரொட்ஸ்கிக்கு பெரும்பாலும் அக்கறையற்றதாக இருந்தது. ஒரு வெற்றிகரமான புரட்சிகர இயக்கம் ஸ்ராலினையும் அவரது அடியாட்களையும் கவனித்துக் கொள்ளும், ஏனெனில் அவர்கள் அதற்கு தகுதி உடையவர்களாக இருந்தார்கள் என்று அவர் எதிர்பார்த்தார் என்று ஊகிப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாது இருக்கின்ற ட்ரொட்ஸ்கியின் தொகுதிக்கணக்கான எழுத்துக்களில், இந்தப் பிரச்சினை மீது ட்ரொட்ஸ்கி தங்கியிருந்தார் என்பதற்கு மனச்சான்றுக்கு கட்டுப்பட்ட ஆராய்ச்சியாளர், ஒருசில வாக்கியங்களுக்கு அதிகமாக காண்பார் என்பதே எனக்கு சந்தேகம்தான். அவர் சாதாரணமாகவே அதனை ஒரு மிக முக்கிய பிரச்சினையாகப் பார்க்கவில்லை.

உங்களது நிறைவான பத்தியில், நீங்கள் இறுதியாய் குறிப்பிட்டீர்கள்: "சினோவியேவ், காமனேவ், புக்காரின் மற்றும் ஏனையோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அறவே உண்மையல்ல. அவை சுத்தமான போலிப்புனைவுகளாகும் ஆகும்.” உண்மையில், பேராசிரியர் பைப்ஸ் அவர்களே, வோல்கொகோனொவினது சுயசரிதம் பற்றிய உங்களது நூல் மதிப்புரை உட்குறிப்பாக மட்டுமல்ல, மாறாக நேரடியாகவே படுகொலை சதித்திட்டங்கள் பற்றிய ஸ்ராலினிச குற்றச்சாட்டுக்களை ஆதரித்தன. இப்போதும் நான் இந்த கருத்தை, உங்களது நூல் மதிப்புரையில் நீங்கள் எழுதியதற்கு ஒரு திருத்தமாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

எவ்வாறிருந்த போதினும், இந்த திருத்தமானது உங்களது கடிதத்தின் கடைசி இரண்டு வாக்கியங்களால் கறை படிந்ததாகவும், இருபொருள்படவும் அமைந்துள்ளது. தாங்கள் எழுதுகிறீர்கள்: "நான் கூறுவது என்னவெனில் 'ட்ரொட்ஸ்கிசம்' பற்றிய குற்றச்சாட்டுக்கள், ஓரளவுக்கு ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது மகனால் கொண்டு வரப்பட்ட பொறுப்பற்ற அச்சுறுத்தல்களினால் ஊக்குவிக்கப்பட்டன. அவை ஸ்ராலினிச நோக்கங்களுக்குப் பயன்பட்டன.” “ட்ரொட்ஸ்கிசம்” பற்றிய குற்றச்சாட்டுக்கள் என்று நீங்கள் எதனை அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பது எனக்கு முற்றிலும் விளங்கவில்லை. ஆனால் “பொறுப்பற்ற அச்சுறுத்தல்கள்” மற்றும் “ஸ்ராலினிச நோக்கங்களுக்குப் பயன்பட்டன” என்ற குறிப்புக்கள், சோவியத் அதிகாரத்துவத்தால் ட்ரொட்ஸ்கிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு, மீண்டும் ட்ரொட்ஸ்கி மீது பழிபோடும் ஒரு முயற்சியை பிரதிநிதித்துவம் செய்கிறது. ட்ரொட்ஸ்கி சோவியத் ஆட்சியை எதிர்க்காது இருந்திருப்பாராயின், ஸ்ராலின் அவரது அரசியல் எதிராளிகளைப் படுகொலை செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டிருக்க மாட்டார் என்று தாங்கள் கூறுவது போல் தெரிகிறது. ஆனால் இது, கூறியதையே கூறும் ஒருபொருள் சொல்லடுக்கேயன்றி முற்றிலுமாக வேறு எதையும் விளக்கவில்லை.

சோவியத் அதிகாரத்துவத்திற்கு ட்ரொட்ஸ்கியின் எதிர்ப்பானது, அவரது மார்க்சிச மற்றும் சோசலிச உறுதிப்பாடுகளின் ஊக்கமும் உரமும் நிறைந்த அடக்கி ஒடுக்கப்படமுடியா வெளிப்பாடாக இருந்தது. இந்த எதிர்ப்பின் வேலைத்திட்டமானது, தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களை வெளிப்படுத்தியது, அவர்களது உரிமைகள் சலுகை மிக்க அதிகாரத்துவத்தால் மிதித்து நசுக்கப்பட்டன. அதிகாரத்துவ கொடுங்கோன்மைக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் வாழ்வா சாவா போராட்டம், உங்களது எழுத்துக்கள் பலவற்றில் நீங்கள் முயற்சித்துள்ள, மார்க்சிசமும் ஸ்ராலினிசமும் ஒன்றுக்கொன்று எதிரான வகையில் சமரசத்திற்கு இடங்கொடா வகையில் நிற்கிறது என்ற அதே அரசியல் உண்மையை, உண்மையல்ல என்று நிரூபிக்க விழைந்துள்ளதை பிரகாசத்தோடு எடுத்துக்காட்டுகிறது. 1920களிலும் மற்றும் 1930களிலும், ட்ரொட்ஸ்கிக்கு இருந்த அனைத்து மாற்றீடுகளிலும், அவர் ஒருபோதும் சிந்தித்துப் பார்க்காத ஒன்று என்னவென்றால் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துடன் அரசியல் சமரசம் செய்து கொள்வதும், ஒத்துப்போவதும் என்பதுமாகும். டிமித்ரி வோல்கொகோனொவே கூட, அவரது ட்ரொட்ஸ்கியின் சுயசரிதத்தில் பல தவறுகள் இருப்பினும், ஸ்ராலினிசத்திற்கு எதிரான அவரது போராட்டத்தின் விட்டுக்கொடுக்காத தன்மையைக் குறித்து புகழாரம் சூட்டுகிறார். “ஸ்ராலினிசத்தை ஒரு அமைப்புமுறை என்பதிலிருந்தும், ஒரு சித்தாந்தம் என்பதிலிருந்தும், நடவடிக்கைகளின் ஒரு வழிமுறை என்பதிலிருந்தும் மற்றும் சிந்திக்கும் ஒரு வழிமுறை என்பதிலிருந்துமே அதனை அகற்றுவதற்கு தேவையான வெளிப்படையான நிகழ்ச்சிநிரலை வைப்பதில், அனேகமாக ட்ரொட்ஸ்கிதான் முதலாவது நபராக இருந்தார். ட்ரொட்ஸ்கியை பொறுத்தவரை, ஸ்ராலினிசம் என்பது எதேச்சாதிகாரத்தின் படுமோசமான வடிவம், அதை பாசிசத்தோடு மட்டுமே ஒப்புநோக்கக்கூடியது. ஸ்ராலினிச அமைப்புமுறை முதலில் அகற்றப்பட்டால் மட்டுமே உண்மையான ஜனநாயக அபிவிருத்தி நிகழ முடியும். அதன் பின்னர் மட்டுமே சோசலிசத்திற்கு எதிர்காலம் உள்ளது” என்று வோல்கொகோனொவ் எழுதுகிறார். (பக்கம் 370)

உங்கள் உண்மையுள்ள,
டேவிட் நோர்த்
தேசிய செயலாளர்
சோசலிச சமத்துவக் கட்சி

1 Jo Ann Boydston, ed., The Later Works of John Dewey, 1925–1953, Volume 11 (Carbondale: Southern Illinois University Press, 1987), p. 317.

*** *** ***