WSWS ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் ரஷ்யப் புரட்சி பற்றி நடக்கவுள்ள விரிவுரைகளை கலந்துரையாடுகிறார்.

டேவிட் நோர்த்தின் கலந்துரையாடலின் தமிழாக்கம் பின்வறுமாறு:

மார்ச் 11 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை கொண்டாடும் முகமாக தொடர் விரிவுரைகளை ஆரம்பிக்கின்றது.

நாம் அறிந்த வகையில், ரஷ்ய புரட்சியானது உலகில் தொழிலாள வர்க்கம் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய ஒரு நிகழ்வாக இடம்பெற்றது. 1847 இல் கார்ல் மார்க்சும் பிரெடெரிக் ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளிக்கொண்டு வந்தனர். அந்த அசாதாரணமான ஆவணமானது, ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம்-கம்யூனிசம் என்னும் பூதம், என்ற வாசகத்துடன் தொடங்குகிறது. மனித இனத்தின் வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும் என அவர்கள் விளக்குகின்றனர். 1847 இல் வரையப்பட்ட முன்னோக்கானது 1917ல் போல்ஷிவிக் கட்சி அதிகாரத்துக்கு வருவதன் மூலம் யதார்த்தமாக்கப்பட்டது. உண்மையில், வெறும் 70 ஆண்டு காலத்துக்குள், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கற்பனாவாதம் அல்ல, மாறாக அது வரலாற்றின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சரியான மதிப்பீடு என்பதை நிரூபித்தது.

ரஷ்ய புரட்சியின் தனிச்சிறப்பு என்ன? ரஷ்ய புரட்சியானது தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கம் ஒரு புரட்சிகர மார்க்சிச கட்சியால் கோட்பாட்டு ரீதியில் வழிநடத்தப்பட்டு இயக்கப்பட்ட ஒரே புரட்சியாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒரு சரியான தலைமைத்துவம் வழங்கப்பட்டால், ஒரு புரட்சிகர கட்சி இருந்ததால், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கி வீசி, அதிகாரத்துக்கு வந்து, தொழிலாளர் அரசை ஸ்தாபிப்பது சாத்தியமாகும் என்பதை வெளிப்படுத்தியது.

ரஷ்ய புரட்சி எதைப் பற்றியது, ரஷ்ய புரட்சிக்கு வழி வகுத்த விடயங்கள் என்ன? ஏகாதிபத்திய போர், அரசியல் ஒடுக்குமுறை மற்றும் சமூக சுரண்டலுமாக 1917 புரட்சிகர போராட்டங்களை தூண்டிய அனைத்து பெரும் வரலாற்றுப் பிரச்சினைகளும் இன்று நிலவுகின்றன.

அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு பெரும் அரசியல் நெருக்கடியும் உலக ரீதியில் வாழ்க்கை நிலைமைகளின் சீரழிவும் முதலாளித்துவத்தின் முழுத் தோல்வியை அம்பலப்படுத்துகின்ற ஒரு பின்னணியிலேயே, நாம் ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டை நினைவுகூருகின்றோம்.

அது அபிவிருத்தி செய்கின்ற முன்நோக்கு என்ன? முதலாளித்துவ அமைப்பு முறையிடம் தீர்வு இருப்பதாக அது பாசாங்கு செய்யும், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் பிரச்சினைகளில் ஒன்றுக்கு கூட அதனிடம் தீர்வு கிடையாது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து 25 ஆண்டுகளின் பின்னர், முதலாளித்துவ ஜனநாயகத்தின் மலர்ச்சி இருந்திருக்குமானால் அதைக் காண்பதற்கு எமக்கு 25 ஆண்டு கால வாய்ப்பு இருந்தது. இப்போது என்ன நடக்கின்றது? முடிவில்லாத போர், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளின் தொடர்ச்சியான சீரழிவு மற்றும் மிகவும் மோசமான வடிவிலான பேரினவாதத்தின் வெடிப்பையே நாம் காண்கிறோம். அவை அனைத்தும் டொனால்ட் ட்ரம்பின் ஜனாதிபதி பதவியில் உள்ளடங்கியுள்ளன. அவர் முதலாளித்துவத்தின் பிற்போக்கு பண்பை முழுமையாக தனக்குள் சுருக்கி வைத்துக்கொண்டுள்ளார்.

இந்த ஆரம்ப விரிவுரைகளின் நோக்கம், ரஷ்ய புரட்சியின் அடி நிலையில் உள்ள மைய அரசியல், கோட்பாட்டு மற்றும் மூலோபாய பிரச்சினைகள் பற்றிய ஒரு தெளிவை வழங்குவதாகும். பொது வரலாற்று அறிவு என்ற நிலைப்பாட்டில் இருந்து அது வெறுமனே முக்கியமானது மட்டுமல்ல, என்பதை விரிவுரைகள் நிச்சயமாக மெய்ப்பிக்கும். இந்த நிகழ்வானது காத்திரமான சமகால முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.