இலங்கை தோட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் திருப்புமுனையில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் அரை மில்லியன் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. சாத்தியமானளவு விரைவாக இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நிர்வாகக்திற்கும் அரசாங்கத்திற்கும் உடந்தையாய் இருக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளோடு ஒப்பிடுகையில், தொழிலாளர்களின் உறுதிப்பாடு குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் கொண்டுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தில் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாகிவரும் தீவின் தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளர்கள், 300 ரூபா (3 அமெரிக்க டாலர்களுக்கும் குறைந்த) நாள் சம்பளம் கோரி டிசம்பர் 5 வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். அவர்களது தற்போதைய சம்பளம் வெறும் 135 ரூபா மட்டுமே. இத்துடன் சேர்த்து நிலையற்ற கொடுப்பனவாக 60 ரூபா வரை வழங்கப்படுகிறது. பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம், அடிப்படை சம்பளத்தில் 30 ரூபாவும் கொடுப்பனவில் 25 ரூபாவும் அதிகரிக்க இணங்கியுள்ளது.

தொழிலாளர்கள் 2004 நடுப்பகுதியில் இருந்து எந்தவொரு சம்பள உயர்வையும் பெறாத காரணத்தால் அவர்கள் கொதித்தெழுந்தனர். ஏனைய தொழிலாளர் பிரிவினர் போலவே தோட்டத் தொழிலாளர்களும் விலைவாசி உயர்வால் விரைவாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் வேலை செய்யும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் கிடைத்தது. கொடுப்பனவானது வருகை, உற்பத்தி மற்றும் விலையுடன் இணைக்கப்பட்டிருந்ததால் பெரும்பாலான தொழிலாளர்களால் முழு கொடுப்பனவையும் பெறமுடியவில்லை.

தொழிற்சங்கங்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் கோரிக்கைகளை மட்டுப்படுத்தவும் முயற்சித்தன. அரசியல் கட்சிகளாகவும் இயங்கும் இரு பிரதான தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) ஆகியவை ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இவர்கள் தமது உறுப்பினர்களுக்கு விசுவாசமாக இருப்பதற்குப் பதிலாக, வேலைநிறுத்தம் பரவுவதைத் தடுப்பதில் மூர்க்கமாக உள்ள அரசாங்கத்திற்கே விசுவாசமானவர்களாக உள்ளனர்.

இ.தொ.கா மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் ஆரம்பத்தில் இருந்தே வேலை நிறுத்தத்தை எதிர்த்தபோதிலும் அவர்களது உறுப்பினர்கள் தலைமைத்துவத்தை நிராகரித்தனர். இதன் விளைவாக, போர்க்குணம் கொண்ட தொழிலாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சம்பள உயர்வுக்கான பிரச்சாரத்தை தொடங்கிவைத்த ம.ம.மு மற்றும் ஏனைய பல சிறிய தொழிற்சங்களின் பின்னால் சென்றனர்.

ம.ம.மு. தலைவர் பி. சந்திரசேகரன், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் தலையீட்டில் நம்பிக்கை வைக்குமாறு மீண்டும் மீண்டும் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார். கடந்த வெள்ளிக்கிழமை தான் நின்றுகொண்டிருப்பது எங்கே என்பதை இராஜபக்ஷ வெளிப்படுத்தினார். தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் சம்பந்தமாக அமைச்சரவை கூட்டமொன்றை கூட்டிய அவர், முதலாளிமார் சம்மேளனம் கொடுப்பதை தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ள வைக்குமாறு சந்திரசேகரனிடம் தெரிவித்தார்.

ராக்கட் வேகத்தில் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் வீழ்ச்சியுறும் அந்நிய செலாவனியுடன் ஏற்கனவே பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் தற்போதைய வேலை நிறுத்தத்தை தேசத்தால் தாங்க முடியாது என இராஜபக்ஷ பிரகடனம் செய்தார். ஆயினும், ஜனாதிபதி கடந்த ஆண்டு பூராவும் நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியுள்ளதோடு, பொதுமக்கள் மீது கொட்டித் தீர்க்கப்படும் குண்டுகள் மற்றும் செல்களை வாங்குவதற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 45 வீதத்தை ஒதுக்கியுளார். இது 139 பில்லியன் ரூபா அல்லது நாள் ஒன்றிற்கு 380 மில்லியன் ரூபாவாகும். இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக அரசாங்கம் நாணயங்களை அச்சிடுவதுடன் வெளிநாட்டு நிதிச் சந்தைகளில் கடன் வாங்குவதோடு, தவிர்க்க முடியாத பொருளாதார சுமைகளை தொழிலாள வர்க்கம் தாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் கோருகின்றது.

உக்கிரமடையும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ள ஒரு மிகப்பெரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு முகங்கொடுத்துள்ள இராஜபக்ஷ, மீண்டுமொருமுறை ஆட்டத்திற்குள் இனவாத துரும்புச் சீட்டை இறக்குகிறார். வேலைநிறுத்தம் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், தமிழீழ விடுதலைப் புலிகள் "தோட்டப்புறங்களுக்குள் ஊடுருவிவிடுவார்கள்" என அவர் சந்திரசேகரனை எச்சரித்துள்ளார். இராஜபக்ஷ தமிழ் மற்றும் சிங்களத் தோட்டத் தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் மற்றும் தேவை ஏற்படின் ஜனாதிபதியின் கொடூரமான அவசரகால அதிகாரங்களின் கீழ் வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறைக்கு வழியமைக்கவும் வேண்டுமென்றே இனவாத சந்தேகங்களை கிளறுகின்றார்.

ஊடகங்கள் வேலை நிறுத்தம் விரைவில் முடிவடையும் என எதிர்பார்த்தன. ஞாயிற்றுக் கிழமை, சந்திரசேகரனும் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ். சதாசிவமும், பிரதி தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா உரையாற்றுவதற்காக தொழிற்சங்க கிளைத் தலைவர்களின் கூட்டம் ஒன்றை ஹட்டனில் ஏற்பாடு செய்திருந்தனர். விலைபோவது பற்றி சந்தேகம் கொண்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், அமைச்சருக்கு சொல்ல இருப்பது என்ன என்பதை கேட்பதற்காக பெருந்தோட்ட மாவட்டங்கள் பூராவும் இருந்து ஹட்டனுக்கு வந்திருந்தனர்.

ஒரு தொகை சூடான வாய்த்தர்க்கத்தின் மத்தியில், தொழிலாளர்கள் "வளைந்துகொடுத்து" கம்பனிகள் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சில்வா வலியுறுத்திய நிலையில், ஆத்திரமடைந்த தொழிலாளர்களும் பிரதிநிதிகளும் மீண்டும் மீண்டும் சில்வாவை பேசவிடாமல் கூச்சலிட்டனர். முகாமையாளர்களுக்கு மாதம் 150,000 ரூபா சம்பளமும் ஏனைய செலவுகளையும் செய்யும் போது ஏன் கம்பனிகளால் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாது என சக தொழிலாளர்கள் கேட்டனர். அரசாங்கம் யுத்தத்திற்கு பணம் செலவிடும் போது தொழிலாளர்களுக்கு ஒன்றும் கொடுக்க முடியாதது ஏன்? தோட்டத் தொழிலாளர்களின் சிறந்த வாழ்க்கைக்காக 2005 நவம்பரில் ஜனாதிபதி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது?

கூட்டம் கொந்தளிப்பு நிலையை அடைந்தபோது, ஆயுதம் தாங்கிய பொலிசார் மண்டபத்திற்குள் நுழைந்த போதிலும் தொழிலாளர்கள் பயப்படவில்லை. இராஜபக்ஷவை குற்றஞ்சாட்ட வேண்டாம் என சில்வா தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்ட போதிலும், மீண்டும் தொந்தரவுகளுக்கு உள்ளானார். கிளர்ச்சிக்கு முகங்கொடுத்த நிலையில் போக்கைத் தலைகீழாக மாற்றிய சந்திரசேகரன், வேலை நிறுத்தத்தை நிறுத்தவோ அல்லது தொடரவோ தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்க அவர் அங்கு வரவில்லை என பிரகடனம் செய்தார். பிரச்சாரத்திற்கு முடிவுகட்டும் வாக்குக்காக இன்னமும் சூழ்ச்சித் திட்டங்களைக் கையாண்டுகொண்டிருந்த நிலையில், "தொழிலாளர்களே முடிவெடுக்க வேண்டும்" என அவர் பிரகடனம் செய்தார். ஆயினும், தொடர வேண்டும் என்ற உணர்வே மிகப்பெருமளவில் காணப்பட்டது.

கூட்டத்தை அடுத்து, இ.தொ.கா. முதலாளிமாருடன் பிரத்தியேகமான பேச்சில் ஈடுபடுவதன் மூலம் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை பிளவுபடுத்தும் தனது முயற்சியை இரட்டிப்பாக்கியது. நேற்று மாலை இ.தொ.கா. அலுவலரான ஆர். யோகராஜன் ஊடகங்களுடன் பேசுகையில், வேலைநிறுத்தம் "வெகு தூரம் சென்றுவிட்டது" எனத் தெரிவித்ததோடு புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளைப் பற்றியும் அறிவித்தார். இ.தொ.கா. தனது சம்பளக் கோரிக்கையை 270 ரூபாவுக்கு ஏற்கனவே குறைத்துக்கொண்டுள்ளதுடன், நாளொன்றுக்கு 300 ரூபா வழங்கினால் கைத்தொழிலை "நடத்தமுடியாது" என கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சம்மேளனம் புலம்பிக்கொண்டிருக்கும் நிலைமையின் கீழ், இந்தத் தொகையை மேலும் குறைக்க இ.தொ.கா. தயாராகும் என்பதில் சந்தேகம் கிடையாது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தொழிலாளர்களின் சார்பாக எனக் கூறிக்கொண்டு நேரடியாகத் தலையிட்டிருப்பது மிக மோசமான அரசியல் ஆபத்தைக் குறிக்கின்றது. நேற்று ஜே.வி.பி. யின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும், ஜே.வி.பி. யுடன் இணைந்த தேசிய தொழிற்சங்க மையத்தின் அலுவலகத்தில் சந்தித்தன. இந்த மையத்தின் தலைவரும் ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினருமான லால் காந்த இந்தக் கூட்டத்தில் தோன்றி, தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்கள் கோரும் முழு சம்பளமும் கிடைக்காவிட்டால் ஜே.வி.பி. நாடு பூராவும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் என பிரகடனம் செய்தார் .

தோட்டப் பிரதேசங்களில் சம்பள உயர்வுக்கும் மற்றும் சிறந்த நிலைமைகளுக்குமான கோரிக்கைகளுக்கு தொழிலாளர்கள் மத்தியில் பரந்த அனுதாபம் இருப்பதில் சந்தேகம் இல்லை. தீவு பூராவும் உள்ள தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தமானது இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் அதன் கொள்கைகளுக்கும் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அதனது பிற்போக்கு இனவாத யுத்தத்திற்கு தொழிலாள வர்க்கம் அர்ப்பணிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிரான அரசியல் போராட்டத்தை தவிர்க்க முடியாமல் உள்ளடக்கியதாகும். ஆயினும், ஜே.வி.பி. புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு சளையாது வக்காலத்து வாங்குவதோடு இத்தகைய பிரச்சாரத்தை கடுமையாக எதிர்க்கின்றது.

தொழிற்சங்கங்கள் திரைக்குப் பின்னால் வேலை நிறுத்தத்திற்கு முடிவுகட்டும் திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கின்ற அதே வேளை, பொது வேலை நிறுத்தத்திற்கான ஜே.வி.பி.யின் அச்சுறுத்தல் தொழிலாளர்களின் கண்களில் மண் தூவுவதை இலக்காகக் கொண்ட நம்பகமான தந்திரமாகும். ஜே.வி.பி. ஏற்கனவே இராஜபக்ஷவிற்கு ஒரு ஆயுள் ரேகையை வழங்கியுள்ளது. லால் காந்த தனது ஊடகவியலாளர் மாநாட்டில், தோட்டப்புறங்களில் மோசடிகளைப் பற்றி விசாரிக்க ஒரு குழுவை நியமிக்க ஜனாதிபதி தலையிட வேண்டும் என அழைப்புவிடுத்தார். வேலை நிறுத்தங்களுக்கு முடிவுகட்டும் வழிமுறையாக தொழிலாளர்களின் துயரங்களைப் பற்றி விசாரிக்க குழுக்களை ஸ்தாபிப்பதில் இலங்கைக்கு நீண்ட வரலாறு உண்டு. எப்பொழுதும் இதன் பெறுபேறு ஒன்றாகவே இருந்து வந்துள்ளது: வேலைநிறுத்தம் முடிவடைந்து அடுத்த நான்கு மாதங்களுக்கு இந்தக் குழு "விசாரணைகளை" நடத்தும். பின்னர் துயரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என முடிவெடுக்கும்.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் இத்தகைய எந்தவொரு தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது. இ.தொ.கா., ம.ம.மு ஆகியவை, நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளிய, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை உக்கிரப்படுத்திய மற்றும் தனியார்மயமாக்கல், சமூகசேவைகளை வெட்டித்தள்ளுதல் போன்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தும் இராஜபக்ஷவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றன. ஜே.வி.பி. அரசாங்கத்தில் அங்கம் வகிக்காததற்கான ஒரே காரணம், அது புலிகள் மீதான ஒட்டு மொத்த யுத்தத்திற்கு வக்காலத்து வாங்குவதாலேயே ஆகும். அத்தகைய யுத்தம் தொழிலாளர் வர்க்கத்தின் மீது மேலும் மோசமான சுமைகளைத் திணிக்கும். இந்த எல்லாக் கட்சிகளும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த ஆதரவளித்துள்ளன. இதற்கு முன்னர் இந்தச் சட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் "புலி சந்தேக நபர்களாக" விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு பல சமயங்களில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.

இந்த வேலை நிறுத்தம் ஒரு தீர்க்கமான திருப்புமுனையை அடைந்துள்ளது. இது தொழிற்சங்கத் தலைவர்களின் கைகளில் விடப்பட்டால் காட்டிக்கொடுக்கப்படும். சந்திரசேகரனும் லால்காந்தவும் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதைக் காண காத்திருப்பதற்குப் பதிலாக, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தாமாகவே இந்தத் தொடக்கி வைப்பை பற்றிக்கொள்ள வேண்டும். கூட்டங்களை நடத்துவதற்காக தொழிற்சங்கத் தலைவர்களுக்காக காத்திருப்பதற்குப் பதிலாக, தொழிலாளர்கள் ஒவ்வொரு தோட்டத்திலும் வேலைநிறுத்தக் குழுக்களை தேர்வு செய்து, ஒரு மூலோபாயத்தை ஸ்தாபிப்பதற்காக ஒரு பெரும் கூட்டத்திற்கு தமது சொந்தப் பிரதிநிதிகளை அனுப்பிவைக்க வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையானது தொழிலாளர் வர்க்கம் பூராகவும் மற்றும் கிராமப்புற வெகுஜனங்கள் மத்தியிலும் ஆதரவைப் பெற்றுக்கொண்டிருப்பது தெளிவு. இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை ஆதரிக்க தொழிலாளர் குழுக்களை அமைக்குமாறும் மற்றும் கௌரவமான சம்பளம் மற்றும் நிலைமைகளுக்காக தமது சொந்த கோரிக்கைகளை உருவாக்குமாறும் அனைத்துத் தொழிலாளர்களிடமும் சோசலிச சமத்துவக் கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது. தொழிலாளர்கள் மாயையின் கீழ் இருக்கக் கூடாது. இத்தகைய பிரச்சாரம் அரசாங்கத்துடனான மோதலை உள்ளடக்கும். ஆகையால் அது ஒரு தெளிவான அரசியல் மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்திற்காக போராடுகிறது:

தொழிற்சங்கங்களால் பிரேரிக்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களின் துயரங்கள் மற்றும் சிரமங்களை முடிவுக்குக் கொண்டுவர மிகச் சிறியளவிலேயே உதவும். நாம் நாள் சம்பள முறைக்கு ஒரு முடிவுகட்டி குறைந்த பட்சம் 15,000 ரூபா மாத சம்பளம் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என கோருகின்றோம். அத்துடன் சரியான மேலதிக நேர சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சுகயீன விடுமுறையும் வழங்கப்பட வேண்டும். இவை வாழ்க்கைச் செலவைப் பொறுத்து தானாகவே அதிகரிக்கப்படல் வேண்டும்.

தொழிலாளர்களுக்கு ஒழுக்கமான வீட்டு வசதி, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் தேவை. அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் குழாய் நீர் மற்றும் மின்சாரம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட பொருத்தமான வீட்டுவசதி வழங்கப்பட வேண்டும். கௌரவமான வாழ்க்கைத் தரம் என்பது செல்வமாக அன்றி உரிமையாக்கப்பட வேண்டும். ஒரு சில செல்வந்தர்களின் இலாபத் தேவைகளுக்குப் பதிலாக பெரும்பான்மையான சாதாரண உழைக்கும் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், சமுதாயம் சோசலிச அடிப்படையில் மீள் ஒழுங்கமைப்புச் செய்யப்பட வேண்டும்.

உழைக்கும் மக்கள் "இனத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும்" என்ற அனைத்து கோரிக்கைகளையும் நிராகரிக்க வேண்டும். இந்த இனவாத யுத்தத்திற்கு ஒரு சதமோ ஒரு ஆளோ கொடுக்கப்படக் கூடாது. சோசலிச சமத்துவக் கட்சி வடக்குக் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டப்பட்ட வேண்டுமெனவும் அனைத்து பாதுகாப்புப் படையினரும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கப்பட வேண்டும் எனவும் கோருகிறது.

நாம், ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில் எல்லாவிதமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை நிராகரித்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக அழைப்பு விடுக்கின்றோம். இது தெற்காசியா மற்றும் சர்வதேச ரீதியிலும் சோசலிச அரசுகளின் ஒன்றியங்களை நிறுவும் போராட்டத்தின் பாகமாகும்.

நாம் இந்த வேலைத்திட்டத்தில் மிகவும் அக்கறை செலுத்துமாறும், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலகம் பூராவும் உள்ள அதன் சகோதரக் கட்சிகளாலும் வெளியிடப்படும் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ச்சியாக வாசிக்குமாறும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த முன்நோக்கிற்காக போராடுவதற்குத் தேவையான பரந்த தொழிலாளர் வர்க்கக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப இணையுமாறு நாம் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

Loading