சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பும், சிரியாவுக்கு எதிரான ஏகாதிபத்திய தாக்குதலும்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO), மே 1 இல், சிரியாவில் பஷர் அல்-அசாத் ஆட்சியை நீக்குவதற்கான ஏகாதிபத்தியத்தால் முடுக்கிவிடப்பட்ட சூழ்ச்சிக்கு ஆதரவாக, அரசியல்ரீதியில் பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய "சிரிய, அரபு மற்றும் சர்வதேச நடவடிக்கையாளர்களின்" ஒரு போலிக் குழு கையெழுத்திட்ட "சிரிய புரட்சியுடன் ஐக்கியம்" என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

முற்றிலும் பிற்போக்குத்தனமான மற்றும் அரசியல்ரீதியில் வஞ்சகத் தன்மை கொண்ட இந்த ஆவணம், உண்மையிலேயே சுயஅம்பலப்படுத்தலாக இருக்கின்றது. ISO இன் இந்த அறிக்கை, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் நிதியுதவி மற்றும் ஆயுத உதவி வழங்கப்பட்ட, பிற்போக்குத்தனமான கூலிப்படைகள் தொடுத்து வருகின்ற ஒரு பினாமிப் போருக்கு, எரிச்சலூட்டும் விதத்தில் “மனித உரிமைகள்" என்று கூறிக்கொண்டு, திட்டமிட்ட போலி-இடது மூடிமறைப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. ISO இன் இந்த ஆவணம், அரசியலில் ஒரு பிரச்சாரக் கருவியாக செயல்பட்டு, சிரியாவில் இஸ்லாமியவாத எதிர்ப்பு சக்திகளின் குணாதிசயத்தையும் மத்திய கிழக்கில் அமெரிக்க போர் இலக்குகளையும் அப்பட்டமாக பொய்மைப்படுத்துகிறது.

இந்த அறிக்கை பிரசுரிக்கப்பட்ட காலகட்டம் அரசியல்ரீதியில் முக்கியமானதாகும். இது சிரியாவில் நேரடி இராணுவ தலையீட்டுக்காகவும் மற்றும் டமாஸ்கஸில் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்கும் பொதுமக்கள் கருத்துக்களை தயார் செய்வதற்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களின் பிரச்சார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதற்கு இடையே வருகிறது. இந்த அறிக்கை வெளியான அன்றைய தினம், சிரிய தலைநகர் மீது இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மார்ச் மாதம் உலக சமூக பேரவை (World Social Forum) இன் ஒரு கூட்டத்திலிருந்து உருவான இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டதைச் சுற்றியுள்ள சூழல்களில், நரகத்தின் துர்நாற்றம் வீசுகிறது. உலக சமூக பேரவை என்பது அரசு உளவுத்துறை முகமைகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதும் மற்றும் மிகப் பெரிய பெருநிறுவனங்களிடம் இருந்து நிதியுதவி பெறுகின்ற சிந்தனைக்கூடங்களின் சுற்றுவட்டத்தில் செயல்படும் நூற்றுக் கணக்கான அமைப்புகளின் "இடது" அரசியல் முன்னணியாகும்.

துனிசியாவின் தலைநகரான துனீசில் நடத்தப்பட்ட இந்த உலக சமூக பேரவை, பெரும் எண்ணிக்கையிலான அரசு உளவுத்துறை செயல்பாட்டாளர்கள் மற்றும் ஸ்தாபக முதலாளித்துவ அரசியல்வாதிகளுடன் நடுத்தர வர்க்க போலி-இடது அமைப்புகள் அவற்றின் தோள்களை தடவியபடி, குடிபானங்களைப் பகிர்ந்து கொண்டு, பரஸ்பர நலன்கள் மற்றும் மூலோபாயங்களை விவாதிக்க வாய்ப்பை வழங்கியுள்ளது. அந்த துனீஸ் நிகழ்வில், ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் சிஐஏ செயல்பாடுகளில் முன்னிலை வகிப்பதில் முன்வரலாறு கொண்ட சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகமையும் (US Agency for International Development), மற்றும் ஜேர்மனியின் இரண்டு முன்னணி முதலாளித்துவ கட்சிகளின் சிந்தனைக் குழாம்களும், சமூக ஜனநாயகக் கட்சியின் பிரீட்ரிக் ஏபேர்ட் அமைப்பு மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் கொன்ராட் அடினவர் அமைப்பு ஆகியவையும் கலந்து கொண்டன. 2005 மற்றும் 2009 க்கு இடையே சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் கூட்டணி அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக சேவையாற்றிய ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னணி வலதுசாரி பிரமுகர் பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் அக்கூட்டத்தில் குறிப்பிடத்தக்க முக்கிய பிரமுகராக இருந்தார்.

ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் சிரியாவில் ஒபாமா நிர்வாகத்தினது போர் திட்டங்களைத் தீவிரப்படுத்துவதற்கு, துனீஸ் கூட்டம், "பொதுமக்கள்" ஆதரவை முடுக்கி விடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பார்க்கப்பட்டது என்பதை உணர பெரிய அரசியல் தீர்க்கதரிசனம் எதுவும் தேவையில்லை. ISO அறிக்கை இந்த நோக்கத்திற்கு சேவையாற்றியது.

ISO இன் அந்த ஆவணம், அதன் வரைவுக்கு முந்தைய மற்றும் அதற்கு உதவிய விவாதங்களைக் குறித்த எந்த விபரங்களையும் வழங்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அதை வரைந்தவர்கள் யார் என்பதைக் கூட அது அடையாளப்படுத்தவில்லை. அல்லது அதில் கையெழுத்திட்டவர்கள் எவ்வாறு மும்முரமாக ஒன்றி கூடினார்கள் என்ற தகவலும் வழங்கப்படவில்லை.

எவ்வாறு அது வரையப்பட்டிருந்தாலும், அல்லது யாரால் வரையப்பட்டிருந்தாலும் பிரசுரிக்கப்பட்ட அந்த ஆவணமானது அரசியல் குழப்பம், தட்டிக் கழிப்பு மற்றும் வஞ்சகத்தின் நடைமுறை பிரயோகமாக உள்ளது. அது பின்வருமாறு தொடங்குகிறது: “30 க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த புத்திஜீவிகள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கையெழுத்திட்ட பின்வரும் அறிக்கை, இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அது சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான மக்கள் புரட்சி என்பதை உலகுக்கு நினைவூட்டுகிறது — அதன் காரணமாக, அது எல்லா விதத்திலும் ஆதரிக்கப்பட வேண்டும்.”

உலகிற்கு ஏதாவது "நினைவூட்ட" வேண்டியிருந்து என்றால், அது “சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கானது" என்பதை ஒருபுறம் விட்டுவிட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏகாதிபத்திய-ஆதரவிலான கூலிப்படையால் சிரியாவில் நடத்தப்பட்ட இரத்தக்களரியான படுகொலைக்கும் "மக்களின் புரட்சிக்கும்" எந்த ஒத்தத்தன்மையும் கிடையாது”. என்பது மட்டுமே.

வாஷிங்டனும், அதன் நேட்டோ கூட்டாளிகள், சவூதி மற்றும் கட்டார் கூலிப்படைகளும் அதிவலது சுன்னி இஸ்லாமியவாத போராளிகள் குழுக்களை பினாமிகளாக பயன்படுத்தி ஒரு இரத்தந்தோய்ந்த குறுங்குழுவாதப் போரை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஈராக்கின் அல் கொய்தாவிலிருந்து உதித்த —அந்நாட்டின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது உருவான— அல் கொய்தா தலைவர் Ayman al-Zawahiri க்கு சமீபத்தில் அதன் விசுவாசத்தைச் சூளுரைத்திருந்த ஒரு பயங்கரவாத குழுவான அல் நுஸ்ரா முன்னணியே எதிர்ப்பு இராணுவத்தின் முன்னிலையில் இருப்பதை அமெரிக்க அதிகாரிகளும் ஊடங்களும் ஒப்புக் கொள்கின்றன.

அல் நுஸ்ரா மட்டுமே அண்மித்து 600 பயங்கரமான குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியிருந்ததையும், அவற்றில் ஆயிரக் கணக்கான சிரிய அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையும் கடந்த டிசம்பர் வாக்கில் அமெரிக்க அரசாங்கமே கூட அறிவித்துள்ளது. அவை அலெப்போவைச் சுற்றியுள்ள மருந்து ஆலைகள் மற்றும் தானிய களஞ்சியங்கள் போன்ற ஆலைகளைக் கொள்ளையடித்து அழித்திருப்பதாக எதிர்ப்பு படைகள் தாமே பிரதான ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன. ஐ.நா. அதிகாரிகளின் தகவல்படி, அவை ஓராண்டுக்கு முன்னர் கூலாவில் (Houla) நடத்தப்பட்ட ஒரு விஷவாயு தாக்குதல் போன்ற குறுங்குழுவாத படுகொலைகளுக்கு பொறுப்பாகின்றன, அத்தாக்குதலில் கான் அல்-அசால் கிராமத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க-ஆதரவிலான எதிர்ப்பு சக்திகளின் வகுப்புவாத அரசியல், அதை வழி நடத்தி வரும் சுன்னி-மதகுரு ஷேக் அட்னன் அல்-அரூரின் இரத்தவெறி ஆரவாரப் பேச்சில் வெளிப்பாட்டைக் காண்கிறது. அசாத் ஆட்சியின் முன்னணி நபர்கள் எதிலிருந்து வந்துள்ளார்களோ அந்த சிறுபான்மை அலாவைட் குறுங்குழுவினருக்கு" கடுமையான மற்றும் வலி நிறைந்த" தண்டனை கோரி வருகின்ற அரூர், அலாவைட் தரப்பினர் எதிர்ப்பு தரப்பினரை எதிர்த்தால், “அல்லாவின் பெயரால், நாங்கள் அவர்களை மாமிச அரவை எந்திரங்களில் நசுக்கி அரைத்து, அவர்களின் மாமிச துண்டங்களை நாய்களுக்கு உணவாக்குவோம்,” என்று சூளுரைத்தார். இதைத்தான் “சுதந்திரம் மற்றும் கண்ணியம்" என்று ISO இன் ஆரவாரம் வரவேற்பளிக்கிறது.

கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் கிழக்கின் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பெரிய ஆழம்காணமுடியாத மர்மம் ஒன்றும் கிடையாது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய அரசியலில் வன்முறையான விதத்தில் ஒரு மறுகட்டுமானத்தை முன்னெடுப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் அதி-பிற்போக்குவாத வளைகுடா ஏவலாளி அரசுகளின் உதவியுடன் செய்யும் முயற்சிகளில் சமீபத்திய அத்தியாயமே சிரியப் போராகும். 2001 இல் ஆப்கானிஸ்தான் மற்றும் 2003 இல் ஈராக் மீது படையெடுத்த பின்னர் அங்கு நவ-காலனித்துவ ஆட்சிகளை வாஷிங்டன் பதவியில் அமர்த்திய நிகழ்வில் மிகத் தெளிவான அடையாளங்களைக் கொண்டிருக்கும் இந்தத் தாக்குதலானது எண்ணமுடியாத நூறாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டிருக்கிறது. இத் தாக்குதலின் பாகமாக, புஷ் நிர்வாக அதிகாரிகளால் தொகுக்கப்பட்டிருந்த “தீய அச்சு” பட்டியலில் இடம்பெற்றிருந்த சிரியா, ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலமாய் வாஷிங்டனின் துப்பாக்கிகளது குறியில் வைக்கப்பட்டுள்ளது.

வாய்கூசாமல் பொய்யுரைக்கும் ISO, மத்திய கிழக்கில் இந்த அமெரிக்க தலையீட்டை முற்போக்கானதாக சித்தரிக்கிறது. அது எழுதுகிறது, “சிரிய சண்டை, பிராந்திய அளவிலும் உலகளவிலும் சுதந்திரத்திற்கான மோதலின் ஒரு நீட்சியாகும். அதை பஹ்ரைனியர்கள், எகிப்தியர்கள், துனிசீயர்கள், லிபியர்கள், யேமனியர்களின் மற்றும், ஒடுக்குமுறை மற்றும் எதேச்சதிகாரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மற்றவர்களின் போராட்டங்களில் இருந்து பிரிக்க முடியாது.”

இத்தகைய வார்த்தைகள் மோசடியான வாய்சவடால் ஆகும். இந்த ISO ஆவணம், சிரிய சம்பவங்கள் எவ்வாறு "பிராந்திய அளவிலும் உலகளவிலும் சுதந்திரத்திற்கான மோதலின் ஒரு நீட்சி" என்பதை உறுதியாக விளங்க வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. உண்மையில், அமெரிக்கா வழமையாக டிரோன் தாக்குதல்களை நடத்தி யேமனிய கிளர்ச்சியாளர்களைப் படுகொலை செய்து வருகிறது. சிரியாவுக்கு எதிரான தாக்குதலுக்கு நிதியுதவி வழங்குவதில் முக்கிய பாத்திரம் வகித்து வருகின்ற வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் உள்ள அதே ஆட்சிகளால், பஹ்ரைன் போராட்டங்கள் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்டு வருகின்றன.

சிரியா நிகழ்வுகளை எகிப்திய புரட்சியுடன் ஒப்பிடுவது ஒருவித வெறுப்பூட்டல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. எகிப்தில் கட்டவிழ்ந்த பாரிய மக்கள் இயக்கம் ஓர் உண்மையான புரட்சியின் அனைத்து தன்மைகளையும் தாங்கியிருந்தது. ஆரம்ப பாரிய போராட்டங்கள் ஒரு பொது வேலைநிறுத்தமாக வளர்ந்து, முபாரக்கின் வெளியேற்றம் மற்றும் உழைக்கும் மக்களுக்குச் சிறந்த வாழ்க்கை தரங்களைக் கோரியது. அந்த புரட்சிகர இயக்கம் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் பங்கெடுப்பதில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்களை ஐக்கியப்படுத்தியது. மேலும் அந்த இயக்கத்தின் முக்கியமான மற்றும் முற்போக்கான தன்மையின் மிக நிச்சயமான அறிகுறியாக என்ன இருந்ததோ, அது அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாக இருந்தது. ஒபாமா நிர்வாகம் அந்த போராட்டங்களை நசுக்க முபாரக்கின் முயற்சிகளை ஆதரித்தது. முபாரக்கை இனி காப்பாற்ற முடியாது என்ற ஆனப் பின்னர் தான், அமெரிக்கா அதன் எதிர்-புரட்சிகர தந்திரங்களை மேற்கொண்டு, பழைய சர்வாதிகாரத்திற்கு ஒரு மாற்றீடாக முஸ்லீம் சகோதரத்துவத்தை ஊக்குவித்தது.

ISO குறிப்பிடும் உதாரணங்களில், ஒன்றே ஒன்று மட்டுமே சிரியாவில் நடந்து வரும் மோதலுடன் ஒப்பிடக்கூடியதாக உள்ளது. 2011 லிபியா நடவடிக்கை, இப்போது முற்றிலும் தெளிவாக உள்ளவாறு, சிரியாவில் தலையீடு செய்வதற்கான ஒரு முன்னோட்டமாக இருந்தது. இப்போது போலவே, அப்போதும், அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் கடாபியைத் தூக்கிவீசி படுகொலை செய்ய பல்வேறு இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களை ஆதரித்து ஆயுத உதவி வழங்கின. அந்த சூழ்ச்சியின் விளைவு லிபிய மக்களுக்கான "சுதந்திரம் மற்றும் கண்ணியம்" என்பதாக இருக்கவில்லை, மாறாக நடைமுறையளவில் அந்த சமூகம் நாசமாக்கப்பட்டது.

சிரிய போரில், அதற்கு முந்தைய 2011 லிபிய போரைப் போலவே, என்னென்ன ஆரம்ப போராட்டங்கள் நடந்ததோ அவை, வாஷிங்டன் நீண்டகாலமாக தனது எதிரியாக மதிப்பிட்டிருந்த ஓர் ஆட்சிக்கு எதிராக மிகப்பெரியளவில் இராணுவத் தலையீடு செய்வதற்காக பெரிதும் ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தப்பட்டன. அவ்விரு போர்களிலுமே, அல் கொய்தாவின் மூத்த உறுப்பினர்களைக் கொண்ட லிபியாவில் லிபிய இஸ்லாமிக் போராட்ட குழு மற்றும் சிரியாவில் அல் நுஸ்ரா முன்னணி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட சுன்னி வகுப்புவாத சக்திகள் வாஷிங்டனின் முக்கிய பினாமிகளாக இருந்தன.

சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO), யதார்த்தத்தை விகாரமாக குழப்பும் ஒரு சொல்லாடலை உண்டாக்குகிறது. அது எழுதுகிறது, “இது டேரா (Deraa) குழந்தைகளாலும், நகரங்களில் இளைஞர்களின் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களாலும், கிராமப்புற விவசாயிகளாலும், சிரியாவில் உடைமை பறிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்டவர்களாலும் தூண்டிவிடப்பட்ட ஒரு கிளர்ச்சி. இது, ஆட்சியின் மூர்க்கமான ஒடுக்குமுறைக்கு முன்னதாக, போராட்டங்கள் மற்றும் பாடல்கள் மற்றும் கோஷங்கள் மூலமாக வன்முறையின்றி அணிதிரண்டவர்களுடையது. அப்போதிருந்து, இந்த ஆட்சி சிரிய வன்முறையற்ற இயக்கத்தின் மீது இராணுவமயப்படுத்தலை அழுத்தமளித்துள்ளது. இதன் விளைவாக, முதலாவதாக தற்காப்புக்காக இளைஞர்கள் ஆயுதமேந்தினர்.”

பின்-நவீனத்துவ பிதற்றல்களின் மிகவும் இயல்புக்கு மீறிய பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கும் இதில், ISO, அல் நுஸ்ராவின் பயங்கரவாத குண்டுவீச்சுக்களை வெறுமனே "ஏனையவற்றுக்கான மறுத்தளிப்பு" என்று குறிப்பிட்டு, அதன் மரணகதியிலான நடவடிக்கைகளை வாய்வீச்சில் புகையூட்ட முயற்சிக்கிறது.

போருக்கான காரணங்களை ISO காட்டும் விதமானது முற்றிலும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் பிரச்சாரத்தை ஒத்ததாக உள்ளது. சிரியாவில் எதிர்ப்பு சக்திகளது நடவடிக்கைகளை "இராணுவமயப்படுத்தியமை" அசாத் ஆட்சியின் நடவடிக்கைகளுக்கான அதன் விடையிறுப்பில் இரண்டாந்தர அம்சமல்ல, மாறாக அதன் வெளிநாட்டு ஆதரவாளர்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தீவிரமயப்படுத்துவதற்கான மூலோபாயத்தின் மத்திய கூறுபாடாக இருந்தது.

ஜூன் 2011 தொடக்கத்தில் Jisr al-Shughour மீதான எதிர்ப்பு சக்திகளின் தாக்குதல், துருக்கியின் அன்டால்யாவில் அமெரிக்க ஆதரவிலான எதிர்ப்பு சக்திகளது கவுன்சில் ஸ்தாபிக்கப்பட்ட இரண்டொரு நாட்களுக்குப் பின்னர் நடத்தப்பட்டது. அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் அல் கொய்தா மீது சாட்டிய ஒரு பயங்கரவாத குண்டுவீச்சுடன் பெப்ரவரி 2012 இல் அலெப்பொவில் தொடங்கிய அதன் முதல் பிரதான நடவடிக்கை, அமெரிக்க டிரோன்கள் சிரியா மீது பறக்கின்றன என்ற செய்திகளைப் பின்தொடர்ந்து நடந்தன. கடந்த 2012 இளவேனிலில் டமாஸ்கஸ் மீதான எதிர்ப்பு சக்திகளின் நடவடிக்கைக்குப் பின்னர், இது மே 10 டமாஸ்கஸ் கார் குண்டு வெடிப்பு மற்றும் மே 25 ஹௌலா படுகொலையுடன் தொடங்கிய நிலையில், அமெரிக்க உளவுத்துறை எதிர்ப்பு சக்திகளை ஆயுதமயப்படுத்தி வந்ததை நியூ யோர்க் டைம்ஸ் உறுதிப்படுத்தியது.

அப்போதிருந்து, சிரிய எதிர்ப்பு சக்திகளின் வன்முறை தன்மையும், சிஐஏ மற்றும் அதன் கூட்டாளிகளிடம் இருந்து அது பெறுகின்ற ஆயிரக் கணக்கான டன்களில் அளவிடப்படுகின்ற உதவி பொருட்களும், பொதுவான அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமாக இருந்துள்ளன. இந்த உதவிகள் இருந்த போதினும், எதிர்ப்பு சக்தியால் அசாத்தைப் பதவியிலிருந்து கீழிறக்க முடியவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது—இந்த உண்மை அதன் அதிவலது, ஜிஹாதிஸ்ட் அரசியலுக்கு ஆதரவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.

பஷர் அல்-அசாத் ஓர் ஒடுக்குமுறை முதலாளித்துவ ஆட்சிக்கு தலைமை வகிக்கிறார் என்பதும், அவர் சிரிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கணக்கில்லா குற்றங்களுக்குக் குற்றவாளி என்பதும் கேள்விக்கிடமற்றது. மத்தியக் கிழக்கின் முன்னாள் காலனித்துவ நாடுகள் அனைத்திலும் இது தான் விடயம் என்கின்ற நிலையில், உண்மையான ஜனநாயக மறுசீரமைப்பை நடத்துவதற்கான முதலாளித்துவ திராணியின்மை அரை-போனப்பார்ட்டிச சர்வாதிகார ஆட்சிகள் நிறுவப்படுவதற்கு இட்டுச் சென்றது, இவற்றில் ஜனநாயக உரிமைகள் ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டன. ஆனால் இந்த ஆட்சிகளைத் தூக்கியெறிவது தொழிலாள வர்க்கத்தின் பணி என்பது சோசலிச அரசியலின் அடிப்படை சூத்திரமாகும். ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை எந்த சூழலிலும் ஏகாதிப்பத்திய அதிகாரங்கள் மற்றும் அவற்றின் பினாமிகளிடம் ஒப்படைக்க முடியாது.

சிரியாவில் ஒரு சோசலிச முன்னோக்கானது, வரலாற்றுரீதியில் அதுவொரு ஒடுக்கப்பட்ட, முன்னாள்-காலனித்துவ நாடு என்ற அதன் இயல்பிலிருந்து ஆரம்பிக்கின்றது. அதன் வகுப்புவாத பிளவுகள் மத்திய கிழக்கை ஏகாதிபத்தியத்திற்காக துண்டாடுவதில் வேரூன்றியுள்ளன. அதாவது சிரியாவை பொறுத்தவரை, முதலாம் உலக போருக்குப் பின்னர் ஒட்டோமான் சாம்ராஜ்ஜியம் பிரிட்டன் மற்றும் பிரான்சால் துண்டாடப்பட்டதால் உருவானதாகும். இந்த வகுப்புவாத பதட்டங்களைக் கடந்து வருவது மற்றும் செல்வவளத்தை அனைவருக்கும் உறுதிப்படுத்தி வழங்குவதற்கும் மற்றும் பொருளாதார ஆதாரவளங்களைப் பாதுகாப்பதற்குமான பணி, மத்தியக் கிழக்கின் பெருந்திரளான மக்களின் சோசலிசத்திற்கான ஐக்கியப்பட்ட போராட்டத்தால் மட்டமே தீர்க்கப்பட முடியும். இந்த போராட்டத்தில், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவம் விளங்கப்படுத்துவதைப் போல, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பாத்திரம் தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது.

இத்தகையவொரு போராட்டமானது, பாரசீக வளைகுடாவின் பிற்போக்குத்தனமான ஷேக் ஆட்சிகளைத் தூக்கியெறிய சிரியா, ஈராக், இஸ்ரேல், எகிப்து மற்றும் அரேபிய தீபகற்பம் எங்கிலும் அனைத்து இன மற்றும் மத போக்குகளின் தொழிலாளர்களையும் புரட்சிகரமாக ஐக்கியப்படுத்துவதையும் மற்றும் ஏகாதிபத்திய தலையீடு அச்சுறுத்தலுக்கு எதிராக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்துடன் ஒரு பொதுவான போராட்டத்தை மேற்கொள்வதையும் உள்ளடக்கி இருக்கும்.

சிரியாவில் இஸ்லாமியவாத எதிர்ப்பு சக்திகள் மற்றும் வாஷிங்டனில் உள்ள அதன் ஆதரவாளர்களுடன் தன்னை அணிசேர்த்துக் கொண்டதன் மூலமாக, ISO, இத்தகைய எல்லா போராட்டங்களுக்கும் அதன் எதிர்ப்பை எடுத்துக்காட்டுகிறது. அது, எதிர்ப்பு சக்திகளின் எஜமானர்களது—அதாவது, பாரசீக வளைகுடா முடியாட்சியினர் மற்றும் அவர்களின் அமெரிக்க, ஐரோப்பிய எஜமானர்களின் தனிச்சலுகைகளைப் பாதுகாப்பதிலும் மற்றும் எதிர்ப்பு சக்திகளின் மனிதயினப் படுகொலைகள் மற்றும் வலதுசாரி பிரச்சாரங்களால் தூண்டிவிடப்படுகின்ற அப்பிராந்திய வகுப்புவாத பதட்டங்களை எரியூட்டுவதிலும் பங்களிப்பு செய்து வருகிறது. அவை சேவையாற்றி வரும் நலன்கள் முற்போக்கானவை அல்ல, மாறாக பிற்போக்கானவையாகும்.

போருக்கான அமெரிக்க ஏகாதிபத்திய முனைவுக்குப் பின்னால் உள்ள திட்டநிரல் மே 6 வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலையங்கத்தில் பட்டவர்த்தனமாக காட்டப்பட்டது. அது எழுதியது, “பாரிய பேரழிவு ஆயுதங்களை [WMD] நிர்மூலமாக்குவது உடனடி நோக்கமாக இருக்கலாம், ஆனால் அப்பிராந்தியத்தில் நமது பிரதான எதிரியான ஈரானை தோற்கடிக்கும் மிகவும் முக்கியமான மூலோபாய இலக்கு தொடர்கிறது. டமாஸ்கஸில் ஜிஹாதிஸ்ட்களின் [அதாவது அல் கொய்தா] வெற்றி பற்றிய அபாயங்கள் நிஜமானவை, குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்கு, என்றாலும் அவர்கள் துருக்கி மற்றும் இஸ்ரேலினால் கட்டுப்படுத்தப்படக் கூடியவர்கள்.”

இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜேர்னல் சிரியாவில் ஒரு இஸ்லாமியவாத வெற்றியை, வாஷிங்டனின் முக்கிய மூலோபாய இலக்கை நோக்கிய, அதாவது எண்ணெய் வளம் மிக்க மத்தியக் கிழக்கின் மீது முழு அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பது மற்றும் ஈரானிய ஆட்சியைத் தோற்கடிப்பதை நோக்கிய, ஒரு படியாக பார்க்கிறது. இந்த மேலாதிக்கம், எல்லாவற்றையும் விட முதலாவதாக வாஷிங்டனின் புவிசார் அரசியல் எதிரிகளான அசாத்தை ஆதரிக்கின்ற ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக செயல்படுத்தப்படும். ISO ஒரு புரட்சியை ஆதரித்து வருவதாக கூறப்படும் அதன் கூற்று, சிரிய போருக்கு அடித்தளத்திலுள்ள இத்தகைய சர்வதேச மோதல்களை மறுத்தளிக்கிறது.

ISO பின்வருமாறு எதிர்முரணாக கருத்துரைக்களை தெரிவிப்பதன் மூலம் ஏகாதிபத்தியத்துடனான அதன் பகிரங்கமான கூட்டணியை குறைத்து மதிப்பிட்டு காட்ட முயற்சிக்கிறது: “சிரியப் புரட்சியின் காரணமாக உலகம் தலைகீழாக நிற்கின்றது, இதில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற அரேபியர்களின் நண்பர்கள் என்று கூறப்படும் நாடுகள் மக்கள் படுகொலையை ஆதரிக்க நிற்கின்றன, அதேவேளையில் ஜனநாயகம் அல்லது சுதந்திரத்தை ஒருபோதும் ஆதரிக்காத நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் வளைகுடா கூட்டாளிகள், புரட்சியாளர்களை ஆதரிக்க தலையிட்டுள்ளன.”

இல்லை, இங்கு உலகம் "தலைகீழாக" இல்லை. மாறாக ISO இன் பகுப்பாய்வு தான் தலைகீழாக உள்ளது. வோல் ஸ்ட்ரீட், பென்டகன், பிரதான எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பாரசீக வளைகுடா ஷேக் ஆட்சிகளின் மகுடமேந்திய தலைவர்கள் ஒரு புரட்சிக்காக சண்டையிடவில்லை என்று விவரிப்பது உண்மையிலேயே அவசியமில்லையா? நடுத்தர வர்க்கத்தின் இன்னும் பல ஏனைய போலி-இடது அமைப்புகளின் பரிமாணங்களுக்கு ஒத்த விதத்தில், சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பும், அமெரிக்க வெளியுறவுத்துறை தீர்மானிக்கின்ற ஓர் அரசியல் போக்கை பின்தொடர்ந்து வருவது மிகவும் சாத்தியமானது என்பது தெரியவில்லையா?

இக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்களின் விடயமும் உள்ளது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, பல்வேறு தரப்பினரைக் கொண்ட இக்குழு எவ்வாறு ஒன்று சேர்ந்தது என்பதையோ, ஏகாதிபத்திய நலன்களில் தங்களை அரசியல்ரீதியில் எவ்வாறு சீரழித்துக்கொள்ள இணங்குவித்தார்கள் என்பதையோ ISO விளங்கப்படுத்தவில்லை.

தாரிக் அலி, கில்பேர்ட் அஷ்கார், ஷெர்ரி வொல்ஃப் மற்றும் மைக்கெல் லொவி போன்ற கையெழுத்திட்டவர்களில் சிலர் வலதுசாரிக்கு நகர்ந்து வரும் போலி-இடது கட்சிகளின் பிற்போக்குத்தனமான அரசியல் சதிகளுடன் நீண்டகாலமாக தொடர்புகளில் உள்ளவர்கள். ஆனால் பலர் ஐயத்திற்கிடமின்றி மனித உரிமைகள் என்ற மோசடி பதாகையின் கீழ் பிணைக்கப்பட்டுள்ளனர் — அனேகமாக அதை வாசிக்காமலேயே கூட, சிரியாவில் என்ன நடந்து வருகிறது என்ற எந்தவித ஆழ்ந்த புரிதலும் இல்லாமலேயே கூட அந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இத்தகையவர்கள் இந்த பிற்போக்குத்தனமான போர்-ஆதரவு பிரச்சார நடைமுறையுடன் அவர்களின் தொடர்பை மீளப் பரிசீலிக்க வேண்டும் என்பதோடு, கையெழுத்திட்டவர்களின் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கிக் கொள்ள வேண்டும்.

ISO ஐ பொறுத்த வரையில், அது சிரியாவுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு ஆதரவைத் தம்பட்டம் அடிப்பதற்காக பொய்களையும், வழக்கு மொழிகளையும் பயன்படுத்தி, அது மாற்றுக் கருத்துக்கு இடமின்றி விளக்கமாக தன்னை ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாக அம்பலப்படுத்தி உள்ளது. சிரிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருகின்ற குற்றங்களுக்கு ஓர் அரசியல் துணைக்கருவியாக உள்ள அது, ஏகாதிபத்தியத்திற்கு ஒரு நேரடியாக உடந்தையாக உள்ளது.

Loading