புரட்சியின் நுழைவாயில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் 1917 பிப்ரவரியிலிருந்து மார்ச் வரையிலான லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் புதிய மொழிபெயர்ப்புக்களை வெளியிடுகிறது. பல விடயங்களில், இக்கட்டுரைகள் முதல்முறையாக இப்போதுதான் ஆங்கிலத்தில் வருகின்றன.

இக் கட்டுரை நியூயோர்க் நோவி மிர் (புதிய உலகு) எனும் செய்தித்தாளில் மார்ச் 13, 1917 இல் வெளியிடப்பட்டது. M. J. Olgin ஆல் தொகுக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்ட, ட்ரொட்ஸ்கியின் எமது புரட்சி, 1918ம் ஆண்டு பதிப்பில் “புரட்சியின் நுழைவாயில்” என்று ஆங்கில மொழியாக்கம் இடம்பெற்றிருந்தது. கீழே உள்ளது புதிய மொழிபெயர்ப்பு. (மொழிபெயர்ப்பாளர்: ஃபிரெட் வில்லியம்ஸ், பதிப்புரிமை; WSWS)

பெட்ரோகிராட்டின் தெருக்கள் மீண்டும் ஒருமுறை 1905-ன் மொழியை பேசத் தொடங்கியுள்ளன. ரஷ்ய-ஜப்பனிய போரின் பொழுதான அப்போது போலவே, தொழிலாளர்கள் ரொட்டி, சமாதானம், விடுதலையை கோரிக் கொண்டிருக்கின்றனர். அன்றுபோலவே தெருவில் கார் நகரமுடியவில்லை, பத்திரிகைகள் வெளிவரவில்லை, தொழிலாளர்கள் நீராவி எந்திரத்திலிருந்து நீராவி விரைந்து வெளிப்பட்டதுபோல, தங்களின் வேலைத்தளங்களை கைவிட்டுவிட்டு, வீதியில் இறங்கினார்கள். அரசாங்கமோ அதன் கொசாக்குகளை வீதிக்கு அனுப்பியது. 1905ல் போலவே மீண்டும் ஒருமுறை, தலைநகரின் வீதிகளில் இரண்டே இரண்டு படைகள் காணக்கூடியதாக இருந்தன: ஒன்று புரட்சிகரத் தொழிலாளர்கள் மற்றையது ஜாரினது துருப்புக்கள்.

இந்த இயக்கம் ரொட்டி பற்றாக்குறையின் காரணமாக வெடித்தது. இது, எதிர்பாராத காரணம் இல்லைதான். போரிடும் அனைத்து நாடுகளிலும் ஏற்படும் உணவு வழங்கலில் பற்றாக்குறையானது, பரந்த வெகுஜனங்களின் மத்தியில் ஏற்படும் அதிருப்திக்கு கோபத்திற்கு மிக உடனடியான, மிகக் கூர்மையான காரணமாகும். யுத்தத்தின் முழு பைத்தியக்காரத்தனமும் இந்த நிலைப்பாட்டிலிருந்து அவர்களுக்கு மிகத்தெளிவாக ஒன்றை வெளிப்படுத்திக்காட்டியது: வாழ்வதற்கான சாதனங்களை உற்பத்தி செய்வது என்பது இயலாதது ஏனென்றால் சாவுக்கான ஆயுதங்களை உருவாக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

இருப்பினும், எல்லாவற்றையும் தற்காலிக ரொட்டி பற்றாக்குறை எனவும் காற்று குவிக்கும் பனித்திரளே காரணம் எனவும் குறைத்துக் காட்டும் ஆங்கிலோ-ரஷ்ய தந்தி முகவாண்மைகளின் அரை உத்தியோகபூர்வ முயற்சிகள், கண்ணை மூடினால் உலகம் இருளும் என்ற நெருப்புக்கோழி அரசியலின் மிக அபத்தமான பயன்படுத்தங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது, நெருப்புக்கோழி ஆபத்து வந்ததும் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்ளுமாம். உணவு அளிப்புக்களின் வருகையை தற்காலிகமாக காலதாமதமாக ஆக்கும் காற்று குவிக்கும் பனித்திரள்கள், ஏன் தொழிலாளர்கள் ஆலைகளை மூடிவிட்டனர், கார்களை நிறுத்திவிட்டனர் மற்றும் அச்சகங்களை மூடிவிட்டனர் என்பதற்கு சரியான காரணமாகாது; ஏன் தொழிலாளர்கள் கொசாக்குகளுடன் மோத வீதிகளுக்கு செல்கிறார்கள் என்பதை விளக்கவும் இல்லை.

மக்களுக்கு ஞாபக மறதி இருக்கிறது மற்றும் பலர் ‒எங்களது சொந்த அணிகளிலும் கூட‒ தற்போதைய யுத்தமானது ரஷ்யாவை சக்திமிக்க புரட்சிகர நொதித்தல் நிலையில் கண்டு விட்டது என்பதை மறப்பதற்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். பயங்கரமான 1908-1911 எதிர்ப்புரட்சிகர மந்த தன்மைக்கு பின்னர், இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரையிலான தொழிற்துறை எழுச்சியின் பொழுது ரஷ்ய பாட்டாளி வர்க்கமானது அதன் காயங்களை எவ்வாறு ஆற்றுவது என்பதை கையாளத் தெரிந்துகொண்டு விட்டது; பின்னர் 1912ல் லேனா நதியோரம் வேலைநிறுத்தம் செய்த சுரங்கத் தொழிலாளர்களின் மீதாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மீண்டும் ஒருமுறை ரஷ்ய தொழிலாள வர்க்க வெகுஜனங்களின் புரட்சிர சக்தியை விழித்தெழச் செய்துவிட்டது. வேலைநிறுத்த அலை கட்டவிழ்ந்தது. யுத்தத்திற்கு முந்தைய கடைசி ஆண்டில், பொருளாதார மற்றும் அரசியல் வேலைநிறுத்தங்களின் அலை உச்சத்தை அடைந்தது, அது 1905ல் மட்டுமே பார்க்கப்பட்டிருந்தது. 1914 கோடையில், பிரெஞ்சு ஜனாதிபதி புவான்கரே (Poincaré) பீட்டர்ஸ்பேர்க் வந்தபொழுது (சிறிய மற்றும் பலவீனமான நாடுகளை எப்படிப் பாதுகாப்பது என்று ஜாருடன் பேசுவதற்காக என்பது ஊகமாக இருந்தது), ரஷ்ய பாட்டாளி வர்க்கமானது உச்ச பட்ச புரட்சிகர பதட்ட நிலையில் இருந்தது, மற்றும் பிரெஞ்சு நான்காம் குடியரசின் ஜனாதிபதி தமது நண்பர் ஜாரின் தலைநகரில், இரண்டாவது ரஷ்ய புரட்சியின் தடை அரண்களின் முதலாவதை தனது சொந்தக் கண்களாலேயே பார்த்திருக்க முடியும்.

யுத்தமானது புரட்சிர எழுச்சியை முதலில் கருதப்பட்டதைவிட குறுகியதாக்கி விட்டது பத்து ஆண்டுகளுக்கு முன்னர், ரஷ்ய-ஜப்பானிய போரின்பொழுது இதேநிலை ஏற்பட்டது. 1903ன் ஆவேசமிக்க வேலைநிறுத்த இயக்கங்களுக்கு பின்னர், யுத்தத்தின் முதலாவது ஆண்டின் பொழுது (1904) கிட்டத்தட்ட முழு அரசியல் இடை அமைதி காணப்பட்டது: பீட்டர்ஸ்பேர்க் தொழிலாளர்கள் யுத்தத்தில் தங்களது திறன்களை பெறுவதற்கு மற்றும் தங்களது சொந்தக் கோரிக்கைகளுடன் வீதிகளில் இறங்குவதற்கும் எதிர்ப்புக்களில் பங்கேற்கவும் அந்த நேரத்தில் அவர்களுக்கு பன்னிரண்டு மாதங்கள் தேவைப்பட்டன. இது 1905ல் ஜனவரி ஒன்பதாம் தேதி நிகழ்ந்தது, எமது முதலாவது புரட்சி உத்தியோகபூர்வமாய் தொடங்கியது என அப்பொழுது, ஒருவர் கூற முடியும்.

தற்போதைய யுத்தமானது அளவிடமுடியாத வகையில் ரஷ்ய-ஜப்பனிய யுத்தத்தை விடவும் மிகப் பெரியதாக இருந்தது. “தாயகம் காக்க” என மில்லியன் கணக்கான படையினர்களை அணிதிரட்டும், ஜார் அரசாங்கம் பாட்டாளி வர்க்க அணிகளை தொந்திரவு மட்டும் செய்யவில்லை, அதன் முன்னேறிய தட்டுக்களின் எண்ணங்களில் பின்வரும் மிக முக்கியத்துவமுடைய புதிய கேள்விகளையும் முன்வைத்தது. யுத்தத்திற்கான காரணம் என்ன? பாட்டாளி வர்க்கம் “தாயகத்தை பாதுகாக்க” தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டுமா? யுத்த வேளையில் தொழிலாள வர்க்கத்தின் தந்திரோபாயமாக என்ன இருக்க வேண்டும்?

இதற்கிடையில், ஜாரிசம், மற்றும் பிரபுக்களின் மேல்தட்டுப் பிரிவுகள் அதனோடு தொடர்பு வைத்திருக்கும் முதலாளித்துவவாதிகள், யுத்தத்தின்பொழுது தங்களின் சுய இயல்பை முற்றிலும் வெளிக்காட்டினர்: குற்றகரமான கொள்ளைக்காரர்களின் இயல்பு, எல்லையற்ற பேராசையால் குருட்டுத்தனமானது மற்றும் அவர்களது சொந்த திறமையின்மையால் செயலிழந்தும் போயிருந்தது. ஆளும் கும்பலின் சூறையாடும் வேட்கையானது இருந்த அதே அளவுக்கு வெகுஜனங்களும் யுத்தத்தின் முக்கியமான பணிகளை, தொழில்துறைப் பணிகள் மற்றும் யுத்தத்தின் காரணமாகத் தோன்றிய உணவு வழங்கல் பணிகளைத் தீர்க்க அதன் இயலாத தன்மையையும் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில், வெகுஜனங்களின் துன்பங்கள் குவிந்தன, வளர்ந்தன மற்றும் கூர்மை அடைந்தன ‒ யுத்தத்தின் தவிர்க்க முடியாத துன்பம், ஜாரிச “ரஸ்புட்டின்” குற்றகரமான அராஜகத்தால் மேலும் பன்மடங்காகின.

பரந்த தொழிலாளர் அடுக்கினர் மத்தியில், ஒருவேளை புரட்சிகர கிளர்ச்சியின் ஒரு வார்த்தையைக்கூட இதற்குமுன்னர் ஒருபோதும் அறிந்திராதவர்களிடத்தில் யுத்தத்தின் நிகழ்வுகளால் ஏற்பட்ட அவற்றின் பாதிப்பின் கீழ் ஆளுபவர்களுக்கு எதிரான ஆழ்ந்த வெறுப்பே குவிந்திருந்தது. இதற்கிடையே, தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய தட்டில், புதிய நிகழ்வுகளை நன்றாய் ஆய்ந்து மீள் வேலை செய்யும் நிகழ்முறை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. தேசியவாத வீழ்ச்சியால் விழுந்த அடிக்குப் பின்னர், சர்வதேசியவாதத்தின் மிக செல்வாக்கான பகுதிகளில், ரஷ்ய சோசலிசப் பாட்டாளி வர்க்கமானது தன்னைதானே குறிதவறாததாக ஆக்கிக் கொண்டது, மற்றும் புதிய சகாப்தமானது புரட்சிகர போராட்டத்தை மென்மைப்படுத்த அல்லாமல் கூர்மைப்படுத்துவதற்கே தமக்கு அழைப்பாணை விடுக்கிறது என அதனைப் புரிந்துகொள்ள வைத்திருந்தது. பெட்ரோகிராட்டிலும் மாஸ்கோவிலும் நடக்கும் தற்போதைய நிகழ்வுகள், இந்தவிதமான அனைத்து உட்தயாரிப்பு வேலையின் விளைவுகளாகும்.

ஒழுங்கற்ற, சமரசம் கொண்ட, ஒத்திசைவற்ற அரசாங்கம் உச்சியில். அப்பட்டமாக சிதறுண்டுபோன இராணுவம். அதிருப்தி, உறுதியின்மை மற்றும் அச்சம் சொத்துடைய வர்க்கங்களின் மத்தியில். மக்களின் கீழ்மட்ட வர்க்கங்களில் ஆழமான வெறுப்பு. எண்ணிக்கையில் வளர்ந்திருக்கின்ற மற்றும் நிகழ்வுகளின் நெருப்பால் புடம்போடப்பட்ட ஒரு பாட்டாளி வர்க்கம். இவை அனைத்தும் நாம் இரண்டாவது ரஷ்ய புரட்சியின் தொடக்கத்தை கண்முன் சாட்சியாக கண்டுகொண்டிருக்கிறோம் என்று கூறுவதற்கு எமக்கு உரிமை அளிக்கின்றன. நம்மில் பெரும்பாலோர் அதன் பங்காளர்களாக இருப்போம் என்று நாம் நம்புவோம்.

Novy mir, 13 March 1917.

Loading